சிறுமழை

Archive for ஜூன் 24th, 2009

இறகுகளும் கொஞ்சம் காதலும்

with 2 comments

featherநதியினில்
தன்னுருவத்தை
கண்டபடி
அமர்ந்திருக்கும்
மரத்தின் பறவை

தன் பிம்பத்தை
கலைக்கிறது
இறகொன்றை
உதிர்த்து

——-

இறகுகளை
புத்தகத்தினுள்
மிகப்பத்திரமாக
பாதுகாப்பவர்கள்
அறிந்தேயிருக்கிறார்கள்
பறவையின்
ஏதோவொரு
ரகசியத்தை

—————

வீட்டுக்குள்ளே
அடைந்து கிடப்பவர்களின்
ஜன்னலில்
நனைந்த பறவை
உதிர்த்துவிட்டுச் செல்கிறது
மழையிறகை

——-

பறந்து பறந்து
தீருவதில்லை
பறவைகளுக்கு

வானில்
அலையும்
சிறகுகள்

பூமியில்
அலையும்
இறகுகள்

—————-

தலை நிமிர்ந்து
பார்க்கையில்
உதிர்த்துவிட்டாய்
ஒரு புன்னகையை

அசைந்தசைந்து
இதமாய் விழுந்தது
மனதின் ரகசியப் படியில்

பின் காற்றடிக்கும்
போதெல்லாம்
படபடக்கிறது
மனது

——————————————————————————————————-

புகைப்படம்: http://www.jeffschneiderman.com

Written by sirumazai

ஜூன் 24, 2009 at 4:18 பிப

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

இசையலைகள் #2

with 7 comments

2005050415040401எனக்கு பத்து வயதிருக்கையில் பெரிய அக்காவை கடுப்பேற்ற ஒரு எளிய வழி இருந்தது. எஸ்.ஜானகியைப் பற்றி எதாவது குறை சொல்வது! அக்கா உடனடியாக சரணடைந்து விடுவாள். ஒரு நாள் தொடர்ந்து கடுப்பேற்றி, கிட்டதட்ட அழவைத்திருக்கிறேன். அவளை வென்றுவிட்டாலும், ‘இப்படி அபரிதமான ஒரு ரசிப்பாஎன்று ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னர் கல்லூரியில் ஒரு நாள் தோழியொருத்தி, ‘உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத பாடகி ஒருவர் உண்டென்றால், அது எஸ்.ஜானகி தான்!’ என்று சொல்ல, ‘என்னது?’ என்று வியப்பிலும் அதிர்ச்சியிலும் எழுந்து நின்றுவிட்டேன். பழைய நிலையிலிருந்து இந்தப் புதிய நிலையை நான் வந்தடைந்த  வழியில் பல நூறு எஸ்.ஜானகியின் பாடல்கள்!

ஜும்பா லாஹிரியின் புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இந்தப் புத்தகத்தை படிக்கையில், பக்கத்திலிருப்பவரை பிடித்து இழுத்துஇதைக் கொஞ்சம் படியேன்என்று சொல்லத் தோன்றும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். முதல் மரியாதை திரைப்படத்தில் வருகிற ராசாவே உன்ன நம்பி பாடலை கேட்கையிலெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும்! ஜானகி ஒரு குயிலின் கச்சிதத்துடன் அந்தப் பாடலின் ஹம்மிங்கை துவங்குவார். உச்சரிப்பில் மணமணக்கும் கிராமியம், பாட்டை சிதைக்காத பாவங்கள் என பிரமாதப்படுத்துகிறவர், ஏற்கனவே அழகான பாடலை ஒரு சுகமான சோகத்தில் முற்றிலுமாக தோய்த்தெடுப்பார். தமிழ் திரையுலகின் பாடகிகளை, இந்த ஒரு பாடலிலேயே மற்றவர்களை அபாரமாக வென்று முன்னேறுவதாக எனக்குத் தோன்றும்.

தாயழுதாளே நீ வர, நீ அழுதாயே தாய் வர என்று பாடுகிற போது அதில் உள்ள சோகமோ, ஆடை கூட பாரமாகும், பாரிஜாதம் ஈரமாகும் என்பதில் உள்ள மெல்லிய மோகமோ, பறவை போல பறந்து பறந்து, படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து என்பதில் தெறிக்கும் பரவசமோ (அந்த வரியை முடிக்கையில் ஒரு சிரிப்பு), சிரிக்கிறான், , ஓஹோ, ரசிக்கிறான் ராஜா என்பதில் உள்ள வெட்கமோ பாவங்களை மிக எளிதாக பாட்டில் நுழைத்தவர் (வெட்கபடத் தெரியாமல் பாரதிராஜாவிடம் அறை வாங்கிய நாயகிகள், ஜானகி குரலில் செய்ததை பாதி செய்தால் போதுமாயிருந்திருக்கும்).

9124சில பாடல்கள் ஜானகிக்கு என்றே விதிக்கப்பட்டவை. நாதம் என் ஜீவனே, காற்றில் எந்தன் கீதம், பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, பாடவா என் பாடலை, ஒரு பூங்காவனம் புதுமணம் எத்தனை பாடல்கள்! ஏற்கனவே மிகச்சிறப்பான பாடலை ஒரு பாடகர் அப்படியே வழிநடத்தி செல்ல முடியும் என்று தேவதை படத்தில் வருகிற ஒரு நாள், அந்த ஒரு நாள் பாடலைக் கேட்கையில் தோன்றும். எண்பதுகளின் நாயகிகளை இவரின் குரல் இன்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

வரிகள் இல்லாமலே உங்களை கட்டிப்போடும் வித்தையும் அவருக்குத் தெரியும். ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி பாடலின் துவக்க ஹம்மிங் நினைவில்லாமல் இருக்குமா? மெட்டி  ஒலி காற்றோடு  என் நெஞ்சை தாலாட்ட  பாடலில் ஜானகி துவக்கத்தில், பல்லவிக்குப் பிறகு, சரணத்திற்குப் பிறகு என வெறும் ஹம்மிங்காகவே ஒலிப்பார். வெள்ளைப் புறா ஒன்று பாடலை அவர் துவக்கும் விதத்திற்காகவே பல முறை கேட்பேன். இதயக்கோயில் படத்தில் பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் என்று ஒரு பாடல் உண்டு (இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்று என்று இதை சொல்வேன் ). அதில் பாதி ஜாமம்ம்ம்ம்ம்ம், காயும் போதும்ம்ம்ம்ம் என்று இழுப்பதெல்லாம் தேன்.

ஜானகியின் குரலில் எளிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரின் குரலில் உயர்ந்த தரமில்லை என்று நினைத்ததுண்டு. தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலைக் கேட்கையிலோ, எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா பாடலைக் கேட்கையிலோ, ஜேசுதாஸின் குரல் க்ளாஸ் என்றும் ஜானகியின் குரல் இதற்கு ஈடாகவே முடியாது என்றும் நினைத்த காலமுண்டு. இப்போது கேட்கையில், நிலைமை தலைகீழ்!

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கிடையில், குரல் மாறும் பச்சோந்தி ஜானகி. (அவரைத் தாழ்த்தி பேசவில்லை! ) சில்க் ஸ்மிதாவுக்குப் பாடும்போது, பேபி ஷாலினிக்கு பாடும் போது அவர் எத்தனை எளிதாக பாடுகிறார் என்பது வியப்பானது. மகளிர் மட்டும் படத்தில் வரும் காள மாடு ஒண்ணு பாடலில் மூன்று விதமான பாத்திரங்களுக்கு அவர் பாடியிருப்பார்.  ஆண் குரலில் பாடியிருப்பதாகக் கூட படித்ததுண்டு! இத்தனை பாவங்களுடன் ஒரு பாடகி இனி வரவியலாது.

இளையராஜாவிடம் ஜானகிக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடிய சித்ராவும், சில பாடல்களே பாடினாலும் ஜென்ஸி, உமா ரமணன், ஷைலஜா எனப் பலர் மனதில் நின்றாலும், எண்ணற்ற பாடல்களில் ராஜா இசைத்த வயலினைப் போல கச்சிதமாக கலந்து போனவர் எஸ்.ஜானகி. (எஸ்.பி.பியைப் போல!) அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

Written by sirumazai

ஜூன் 24, 2009 at 4:14 பிப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with

பிம்பங்கள் #2

leave a comment »

toshiro_mifune_in_rashomon_2அகிரா குரோசாவாவைப் பற்றி என்னிடம் பேசாத உலக சினிமா ஆர்வலர் இல்லை. ‘, நீங்க உலக சினிமா பாப்பீங்களா?’ என்ற கேள்வி வந்த பின் மூன்றாவது கேள்வி இவரைப் பற்றியே இருக்கும். போர் வீரர்கள் பெரிய கொண்டை இட்டுக்கொண்டு அதில் ஒரு பெரிய ஊசி போன்ற ஒன்றை சொருகி வைத்து, ஆக்ரோஷமாக முகம் காட்டும் ஸ்டில்களோ, ‘யோஜிம்போபோன்ற படத்தின் பெயர்களோஎதுவோ ஒன்று அவர் படங்களைப் பார்க்கும் ஆவலைத் தூண்டாமல் இருந்தது. பின் மனதை திடப்படுத்திக்கொண்டு போன வெள்ளிக்கிழமை இரவைரஷோமானுக்கு தாரை வார்த்தேன். 😉

அகிராவின் மிகப்பெரிய பெருமை, காலம் கடந்து திரைப்படங்களில் தொடர்ந்து வரும் க்ளீஷேக்களை உருவாக்கியது. உதாரணமாக, நாயகன் காட்டில் செல்லும் காட்சியை கற்பனை செய்யலாம். இரவில் காட்சி நடக்கிறது. இதை சினிமாவில் காண்பிக்கும் போது, காமிரா வானம் பார்த்தபடி நகர, மரங்களின் இலைகளினூடே நிலா நகர்வது போன்ற ஒரு காட்சி மனதுக்கு வருகிறதா? இது போன்ற சின்னச்சின்ன விஷயங்களை முதன் முதலில் செய்தவர் அகிரா! சண்டைக்காட்சிகளில் ஒரு கத்தி தரையில் விழுவதும் அதை நாயகன் எடுக்க முயல்வதும், வில்லன் நாயகனின் காலைப் பிடித்து இழுப்பதும் – எத்தனை முறை பார்த்திருப்போம்? திரைப்படங்களுக்கு அந்தக் காட்சியை உபயம் செய்தது இவரே! (முன்பெல்லாம் காமிரா வழியே அண்ணாந்து சூரியனை பார்க்க மாட்டார்களாம்! லென்ஸ் வெந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ! அதை முதலில் செய்தவர் அகிரா என்று சொல்லுகிறார்கள்!)

ரஷோமான்மிகவும் எளிமையான ஒரு படம். மழைக்கு ஒருவன் ஒரு மண்டபத்தில் ஒதுங்குகிறான். அங்கே இருவர் பேயறைந்தது போல அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் துறவி. மழைக்கு ஒதுங்கியவன் பேச்சு கொடுக்கிறான். இருவரும்இது போன்ற ஒரு விசித்திர கதையை கேட்டதேயில்லைஎன்பதை பயங்கர முஸ்தீபுடன் சொல்கிறார்கள். மழை நிற்கிற பாடு இல்லை. மழைக்கு ஒதுங்கியவனுக்கு பொழுது போக வேண்டும். ‘சரி, என்ன சொல்லு கேட்போம்!’

நாயகன்நாயகி. காட்டு வழியில் ஒற்றைக் குதிரையில் போகிறார்கள். machiko_kyo_in_rashomon(பெண் அமர்ந்து வர, ஆண் நடத்தி வருகிறான்). வழியில் ஒரு திருடனை சந்திக்கிறார்கள். திருடன் அந்தப் பகுதியில் மிகப்பிரபலம். லேசுபட்டவன் அல்ல. நாயகியின் பேரழகு திருடனை என்னவோ செய்கிறது. (‘She was like a goddess’) நாயகனை தந்திரமாக ஏமாற்றி கட்டிப் போட்டு விட்டு, நாயகியை கற்பழித்து விடுகிறான். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நாயகன் செத்துக் கிடக்கிறான். நாயகி ஒரு கோயிலில் ஒளிந்துகொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்படுகிறாள். திருடன் விஷச்செடி வளர்ந்த மலையின் அருவி நீரை குடித்து மயக்கமாகி காவல்துறையிடம் சிக்குகிறான். இந்த மண்டபத்தில் துறவியோடு இருந்தவன் தான் முதலில் நாயகனின் பிணத்தை பார்க்கிறான். அவனே காவல்துறைக்கு தகவலும் தந்தது.

விதமான வாக்குமூலங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று திருடனுடையது. மற்றொன்று நாயகியினுடையது. மூன்றாவது? சஸ்பென்ஸ் 😉 காவல்துறை படத்தில் காட்டப்படவேயில்லை. மக்கள் தான் காவல்துறை என்பது போல, சாட்சி சொல்பவர்கள் காமிராவைப் பார்த்தே வாக்கு தருகிறார்கள்.

கேட்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கிற கதை, அகிராவின் இயக்கத்தில் எடுக்கிற ஒளி வடிவம் அபாரமானது. எழுத்திலும் சரி, காமிராவிலும் சரிபடத்தின் தரம் பரவசப்படுத்துகிற ஒன்று. மேக இடைவெளியில் மின்னலென சூரியன் உடைந்து கொண்டிருக்க, திருடன் குதிரையில் விரைகிற 2 நொடிக் காட்சியோ; மூன்று கதாபாத்திரங்களின் இடையே ஏற்படுகிற tension- அதை சடசடவென வெட்டுகிற கோணங்களில் காட்டுகிற விதமோஎல்லாமே பரவசம்! படத்தின் மிகச்சிறப்பான அம்சங்கள்காட்சியமைப்புகளும், படம் தட்டி எழுப்புகிற உணர்வுகளும்.

தமிழில் இதே போன்ற வந்த படங்களை நீங்கள் ஊகிக்க முடியும் – அந்த நாள், விருமாண்டி.

எது உண்மை? எது பொய்? என்ற சுவாரசியமான கேள்வியையும் மீறி மூன்று கதாபாத்திரங்கள் எடுக்கக் கூடிய வெவ்வேறு நிலையை ஒரே படத்தில் ரசிக்கும் வாய்ப்பு கிட்டும்!

(Rashomon / Japan / 1950 )

******

poster-pursuithappynessகனவுகளை துரத்துவது மிகவும் கடினம். ஒரு குதிரையேறி துரத்தலாம். உங்கள் ஆர்வத்தை குதிரையின் கடிவாளமாக மாற்றி குதிரையை இலக்கு நோக்கி செலுத்தலாம். ஆனால், நிதர்சனத்தின் கடிவாளம் உங்களையே கட்டுப்படுத்தினால்?

க்ரிஸ் ஒரு சேல்ஸ்மேன். உப்புப் பட்டாணிக்கு உதவாத ஒரு மருத்துவ சாதனம் ஒன்றை வீதியாக வீதியாக ஆஸ்பத்தரி ஆஸ்பத்திரியாக சென்று விற்க வேண்டும். மருத்தவர்களிடம் பல்லிளிக்க வேண்டும். ஒரு சாதனம் விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். வீடு நிறைய விற்கப்பட வேண்டிய சாதனங்கள் . வருமானம் போதவில்லை. மனைவிக்கு வேலையும் செய்து வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். மகனுக்கு ஆறு வயது. அவனது எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் மீறி க்ரிஸ்ஸுக்கு ஒரு கனவு உண்டு. பங்குச்சந்தைக் கனவு. கண்களில் எண்கள் மிதக்க, நாளெல்லாம் ஒரு பரவசமான வணிக விளையாட்டு. எப்படியாவது பங்குச்சந்தையில் தரகராக சேரவேண்டும். அதற்கும் ட்ரெயினிங் உண்டு! தற்போதைய நிர்பந்தங்களையும் மீறி அதை சாத்தியப்படுத்த அபாரமான முயற்சிகள் தேவை! முடியுமா?

முடியும் என்பதே படம் தருகிற உற்சாகமான பதில்!

வீட்டுக்கு வெள்ளை அடித்த கையோடு ஓடுவது, கிடைத்த ஐந்து நிமிடங்களில் மேலாளரை இம்ப்ரெஸ் செய்ய படபடப்பாக Rubik’s Cubeஐ பொருத்துவது, வீடிழந்த இரவில் தவிப்பது என பல அற்புதமான கணங்கள் படமெங்கும்.

படத்தின் அப்பா-மகன் உறவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! படத்தில் வில் ஸ்மித்தும் அவரது மகனுமே நடித்திருக்கிறார்கள்.  இருவருமே உண்மையாக அந்த பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியே இன்னொரு தகவல் – இது ஒரு உண்மைக் கதை!

தடைகளைத் தாண்டி வெற்றி பெறுதல் வழமையான திரைப்படக்கதை என்றாலும்,  பிரகாசமான சூரியப் பேரொளியை கண்டது போன்ற உற்சாகத்தை படம் தரும்!

(Pursuit of Happyness / Hollywood / 2006)

Written by sirumazai

ஜூன் 24, 2009 at 4:08 பிப

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,