சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

இளையராஜா ஆயிரம்

with 11 comments

முன்குறிப்புக்கு முன்னே : பதிவு நீளமென்பதான குற்றச்சாட்டுகள் பதிவை முழுதாகப் படித்தவர்களிடமிருந்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நாலாயிரத்து ஐம்பது வார்த்தைகள், படிக்க ஏற்படும் நேரம் உங்களின் ADHDயைப் பொறுத்து.

முன்குறிப்பு : சுமாரான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மட்ட மதியான நேரத்தில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் சலிக்கத்துவங்கும் நேரத்தில் கீழே தெருவிலிருந்து கைப்பேசியின் தாழ்ந்த ஒலியிலும் துல்லியமாக ராஜாவின் புல்லாங்குழல் திடீரென துவங்கும் போது, அவசர அவசரமாக ஜன்னலுக்குச் சென்று, செல்கிற நேரத்திலேயே அந்தப் பாடலை ஊகித்து, பாடலை ஒலிக்க விடுபவர் யார் (ஒரு தள்ளுவண்டி தையல்காரர்), பாடலை எதற்காக ஒலிக்கவிடுகிறார், (ரிங் டோனல்ல, பொழுதுபோக்கவென), பாடலை எங்கணம் உள்வாங்குகிறார் (மிஷினின் மேல் தொட்டும் தொடாமலும் விரல் தாளம், வார்த்தைகள் உதட்டிலும் கொஞ்சம் புருவத்திலும் உட்கார்ந்தும் உட்காராமலும் ஒரு முணுமுணுப்பு) என கவனிக்கையில், அனிச்சையாக அவர் மேலே என்னை நோக்கி பார்க்கவும், சங்கோஜமாக இருவரும் புன்னகைத்து விலகியபின், பூரிப்புடன் சக ரசிகரை நினைத்துக்கொண்டும் பொய்யான சினிமா சோகத்துடன் ‘கல்லிலடிச்சா அது காயம் காயம் சொல்லிலடிச்சா அது ஆறாது’ என நாளெல்லாம் அந்தப் பாடலை பாடித் திரியும் நான், அந்த இசைக்கும் இது போன்ற கணங்களுக்கும் வெறும் ரசிகன். கூடவே, இப்படி முடிவே இல்லாத வரிகளை அவ்வப்போது எழுதுவது வழக்கம். முன்குறிப்பில் பின்குறிப்பு : இந்த விளக்கம் ஒரு வேளை நீங்கள் என்னை மறந்திருந்தால்.

#) டிக்கெட்டை பெற்றுக் கொள்ளவும் உபரியாக இருந்த ஒரு டிக்கெட்டை விற்கவும் திடலுக்குக் காலையில் சென்ற போது, அங்கே ப்ளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த திறமையான பேச்சாளி ஒருவர் அடுக்கிய விஷயங்கள் – டிக்கெட் அத்தனை பிரமாதமாக விற்கவில்லை (ப்ளாக், வொயிட் ரெண்டுமே), டிக்கெட் விலை மிக அதிகம், பாகிஸ்தான் இந்தியா மேட்ச் உள்ளது, நிறைய காம்ப்பிளிமெண்ட்டரி டிக்கெட்டுகளை வாரி இறைத்துள்ளனர், அதெல்லாம் இப்போது ப்ளாக் டிக்கெட்டுகளாக உருமாறி சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவர் உட்பட மற்ற சில ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர்களை வீம்பாக மறுத்து விட்டு தேடித் தேடி எந்த சூட்சுமமும் அறியாமல் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெண்மணியிடமும் ஆண்மணியிடமும் சென்று டிக்கெட் வேண்டுமா என அப்பாவியாகவே மாறி கேட்டேன். ஆண்மணி என்னை முறைத்துவிட்டு நகர்ந்து  சிறிது தூரம் சென்றவர், மீண்டும் வேக வேகமாக திரும்ப வந்து சத்தமாக யாரைக் கேட்டு சார் டிக்கெட் விக்கிறீங்க என்று கேட்டு மிரள வைத்தார். அவர்களும் இருவரும் விஜய் டிவியின் flying squad என்றும் அவரின் பெயர் உண்மையிலேயே மணி என்றும் பின்பு அறிந்தேன்.

#) விஜய் தொலைகாட்சி ஒருங்கிணைக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை சென்றதில்லை என்பதாலும் இதற்கு மேலும் செல்வதில்லை என்பதாலும் நிகழ்ச்சிக்குப் புறப்படும் முன்னே எனக்கு நானே சொல்லிக்கொண்டவை – நிகழ்ச்சியின் போது விஜய் தொலைகாட்சியைத் தப்பித் தவறி பிடித்துவிட்டாலும், நிகழ்ச்சி முடிந்ததும் அதை மறந்து விடுவது, எத்தனை முறை ‘தருணம்’ என்று சொல்லப்படுகிறது என எண்ணக் கூடாது, ராஜா என்றால் சும்மாவே அழுகை வரும், இவர்களும் அழ வைக்காமல் விட மாட்டார்கள் என்பதால், நிம்மதியாக சந்தோஷமாக முடிந்த இடங்களில் அழுதுக் கொள்வது. (நிகழ்ச்சி முடியும் போது நிலவரம் – தப்பித் தவறி கூட விஜய் டிவியை பிடிக்காத அளவிற்கு மோசமான நிகழ்ச்சி அமைப்பும் ஒருங்கிணைப்பு, தருணம் என்று ஒரே ஒரு முறை மட்டுமே சொல்லப்பட்டது, அழுத சமயங்கள் – ஆங், அது அப்புறம்).

#) திடலில் சுமார் 15000 பேர் இருந்ததாக நிகழ்ச்சியின் நடுவே கார்த்திக் சொன்னார்.  அது உண்மையா என்று தெரியவில்லை. தோராயமாக கணக்கிடும் அளவிற்கு சாமர்த்தியமும் அத்தனை நீளமான கழுத்தும் அடியேனுக்கு இல்லை. 3000 ரூபாய் டிக்கெட் வரை இருக்கை எண்கள் கிடையாது என்பதால், நாலரை மணிக்கே திடலுக்குச் சென்றிருக்க, அங்கே எனக்கு முன்னால் ஏராளமானோர் வெயிலில் ஏற்கனவே அமர்ந்திருந்தனர். சுமார் ஆறு மணி வாக்காக தோனி இசை விளையாட்டு விழாவில் நாசர் சொன்னது போல டிங்டிங்டொய்டொய்டங் சத்தங்கள் கேட்கத் துவங்கி ஏராளமான முதுகளை நிமிர்த்தின. நிதின் சேட்டா எனப்படுபவரை மைக்கில் ஒவ்வொருவராக வந்து அழைத்தனர். ராஜாவின் தற்போதைய ஆஸ்தான பாடகிகளான சுர்முகி, ரம்யா, அனிதா, பிரியதர்ஷினி, புதுவரவு ப்ரியா ஹிமேஷ் ஆகியார் ஆளுக்கொரு மைக்கை எடுத்து சரி பார்த்தனர். (கம்பன் வீட்டு கட்டுத்தறி போல எங்கள் ராஜாங்கத்தில் மைக் டெஸ்ட்டிற்க்குக் கூட என்னுள்ளே என்னுள்ளே கோரஸ் தான்). மேடையில் முதலில் தென்பட்ட பிரபலம் உஷா உதூப். நடுநாயகி மைக்கை சரி பார்க்க தண்ணி தொட்டி தேடி வந்த, ரம்பம்பம் ஆகியற்றை செந்திலுடன் இணைந்து பாடினார். (’எல்லா சரியா இருக்கானு பாத்துக்கோங்க ப்ளீஸ், I am already very scared). பின் ஒரு மணி நேரத்திற்கு மீண்டும் மீண்டும் இளையராஜா ஆயிரம் ப்ரோமோக்களும், உருப்படவே உருப்படாத சீரியல் ப்ரோமோக்களும், சம்மந்தி சாப்பிடவே சாப்பிடாத அபத்தமான விளம்பரங்களும்.

#) கூட்டத்தைப் பற்றி கொஞ்சம் – வகை தொகையில்லாமல் குடும்பம் குடும்பமாக மக்கள். இளைஞர்களும் குழுக்களாக வந்திருந்தனர். 500, 1000 பகுதிகளில் நிகழ்ச்சி துவங்கி முதல் அரை நேரம் முழுக்க கூச்சலும் ஆக்ரோஷமான ஆரவாரமும் – அங்கே வீடியோ வேலை செய்யவில்லை என்பது என் அனுமானம். திடீரென அவர்கள் எல்லோரும் தடையை மீறி முன்னேறி வர முயல, காவலர்கள் விரைய என கொஞ்சம் கலவரமாகவே இருந்தது. (ராஜா, பக்கத்திலிருந்தவர்களிடம் என்னமோ சத்தம் போடறாங்க கவனிங்க என்பதாகச் சொன்னார்). அனைவரும் நிறைய பாப்கார்னும் பிட்சாவும் சாப்பிட்டனர். ’உங்கள எங்கேயோ பாத்திருக்கேனே’ பிரபலங்களைத் தாண்டி நான் முதலில் கண்டுகொண்டது C12ஐத் தேடிக்கொண்டிருந்த சாரதா நம்பி ஆரூரன். எஸ்.பி.பி.சரண் இன்னமும் பத்து கிலோ இளைத்து தலை நரைத்தது போல ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார், சமீபத்திய எடை நிலவரம் தெரியாததால் அவர் சரணாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில சூப்பர் சிங்கர் போட்டியாளர்களும் கூட்டத்தில் தென்பட்டார்கள். (கூட்டத்தில் மட்டும் என்பது மகிழ்ச்சி).  கூட்டத்திலேயே மிக அதிகமாக இசையை ரசித்தவர் பிரகாஷ் ராஜ். (உடன் தில், தூள் தரணியும்). ஒரு கட்டத்தில் கமல் ‘அங்க எங்காளு ஒருத்தர் இருக்கார், கை தட்ட சொன்னா ஜோரா தட்டுவார்’ என்று ப்ரகாஷைச் சொன்னார். எங்கள் ஏரியாவின் கலாய்த்தல் தலைவனாக தன்னைத் தானே நியமித்துக்கொண்ட ஒருவர் மிதப்பது போல தெரிந்தது ராஜ போதையில் என்று நம்புவோமாக. ராஜா உள்ளே வரும் பொழுது ஓடிச்சென்று காலில் அவர் விழப்போக யாரோ தடுத்து நிறுத்திவிட்டார்களாம். ச்சே! ‘ப்ரோக்ரோம் ஸ்டார்ட் ஆனதும் யாராச்சும் குறுக்க நெடுக்க நடக்கட்டுமே பாத்துக்குறேன்’ என்று அவர் கத்தியதும் நாங்களெல்லாம் பாதுகாப்பாக உணர்ந்தோம். நிகழ்ச்சி துவங்கியதும் இசைக்கு கட்டுபட்டவர் போல ஒரு சத்தமும் இல்லை. நிகழ்ச்சி ஏழரைக்கே துவங்க, கூட்டத்தினர் அரசியலும் முந்தைய இசை நிகழ்ச்சிகளும் என அரட்டை அடித்தும் பலருக்கு வழி சொல்லியும் தடுப்புகளை தாண்ட முயற்சித்த பட்டுப் புடவை பெண்மணிகளுக்கு தைரியமும் உற்சாகமும் தந்து பொழுதை போக்கினர். கூட்டத்தில் அதிகம் கேட்ட தமிழல்லாத மொழி – சௌராஷ்ட்ரம்! கூட்டத்தில் கேட்ட ரிங் டோன்கள் – டயானா டயானா பாடலின் துவக்கத்தில் வரும் ப்யானோ, வானுயர்ந்த சோலையிலே ஜானகி பாடித் திரியும் ஹம்மிங், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம். (எ.ஏ.கலாய்த்தல்.தலை – ‘ஏய், என்ன ஷங்கர் கணேஷ் பாட்டு வெச்சுட்டு வந்துருக்கே?). கூட்டத்தில் அனைவரும் குடித்தது – உள்ளே நுழையும் போதே எங்களின் கைகளில் திணிக்கப்பட்ட டாட்டா தண்ணீர். ராஜா இன்னும் ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க வாழ்த்துகளுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. அதை நாங்களும் கொஞ்சம் குடித்து பயனைடைந்தோம்.

#) ‘ராம் ராம்’  பாடலின் துவக்க இசை முழங்க ராஜாவின் காரின் முன்னே சில பைக் வீரர்களுடன் உள்ளே நுழைந்தது. நேரே மேடைக்குச் சென்று அனைவரின் முன்னே வணங்கி கால் தொட்டு பின் மேடைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த வெள்ளை சிம்மாசனத்தில் சென்றமர்ந்தார்.  அந்தப்பக்கம் உத்தம் சிங், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே சும்மாவே அமர்ந்திருந்தார். இந்தப்பக்கம் ஒரு இருக்கை காலி – அங்கே யார் என விஜய் தொலைகாட்சி சுவாரசியத்தைக் கூட்டிக்கொண்டே இருக்கவும் நாங்களும் ஊகிக்க முடியாமலேவும் மிகவும் சிரமப்ப்ட்டோம். ஒரு இருக்கை தள்ளி, தெலுங்கு உலகிலிருந்து ஒரு token presence வெங்கடேஷ்.

#) அனிதா, சுர்முகி, செந்தில் உள்ளிட்டோர் ‘குரு பிரம்மா’வென தொடங்கிப், பிரதானமாக செந்தில் ஜனனி ஜனனியென முன்னெடுக்க பாடி முடித்தனர். இடைவிடாமல் தொடர்ச்சியாக – மௌன ராகம் கார்த்திக் காட்சிகளின் இசை – பியானோ மற்றும் வயலினில், தென்பாண்டிச் சீமையிலே வாத்தியங்களில், அருண்மொழி என்கிற நெப்போலியன் (நிற்க, இவர் மீது அபரிமிதமான அன்பிருக்கிறதே, அதற்கு மாறாக என்ன செய்ய?) மாங்குயிலே பூங்குயிலேவின் இரண்டே இரண்டு வரிகளை வைத்து அழகாக் துவங்க(நிற்க, மிகப்பொருத்தமாக, அவர் அணிந்திருந்த வெள்ளை ஜிப்பாவில் மணிக்கட்டில் மட்டும் தங்கக் காப்பு போல ஜரிகை வளையம்), அங்கிருந்து சொப்பனசுந்தரி கார் இசை, காட்டுக்குயிலு மனசுக்குள்ளே துவக்க இசை, ஆண்பாவம் பெண் பார்க்கும் படலம் என நீண்டு அபூர்வ சகோதரர்களை வயிற்றில் சுமந்தபடி ஸ்ரீவித்யா தோணியில் தனித்து மிதந்ததுடன் முடிந்தது. பாடகர்கள் அங்கிருந்து துவங்கி இசையில்லாமல் வெறும் ஹார்மனிகளால் – தென்றல் வந்து தீண்டும்போது (சுவை), ராஜா ராஜாதி ராஜானிந்த ராஜா (சுமார்), எந்தப் பூவிலும் (சிறப்பு) என நீண்டு எதிர்பார்த்தபடி நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்திலே என்று முடித்தனர்.

#) கமலின் சுருக்கமான வீடியோ வாழ்த்து ஒன்று திரையிடப்பட்டது. (’என்ன மச்சி, பயங்கர குண்டாயிட்டாப்ல?’ ‘ச்சீச்சீ, அடுத்த பட கெட்டப்பா இருக்கும்’). அவசர அவசரமாக எங்கிருந்தோ ஜெயராம் ராஜாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.  விக்கு வினாயக்ராமும் டி.வி.ஜியும் முதலில் நாங்கள் தான் மேடையில் வருவோம் என்று செல்லமாக பிடிவாதம் பிடித்ததாக டி.டி சொன்னார். இருவரும் மேடையின் இருபுறமும் எதிரெதிராக பக்க வாத்தியங்களுடன் அமர்ந்துகொண்டார்கள். முதலில் விக்கு வினாயக்ராமும் செல்வ கணேஷும் துவங்கினர். போற்றிப் பாடடி பொன்னே போலத் தோன்றவே, கொஞ்சம் கவனமேற்பட்டது. பின் வேறெங்கோ சென்று விட்டனர். டி.வி.ஜியும் கர்னாடக சங்கீதத்தில் கொஞ்சம் கடினப்பட்டே பாடினார். முடிக்கும் பொழுது கொஞ்சமாக இது ஒரு நிலாக் காலம் ஆலாபனை. இருவரும் கொஞ்சம் ராஜாவின் இசையை தொட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வினாய்க்ராம் ராஜா மகாப்பெரியவரின் மணிமண்டபம் கட்டுவதற்காக (?) ஒரு கச்சேரி செய்து தந்ததையும் பவதாரிணியின் திருமணத்தில் வாசித்ததையும் நினைவு கூர்ந்தார். டி.வி.ஜி தனக்கு ராஜா சிஷ்யனாக கிடைத்தது வரம் என்று சொல்லப்போக, ராஜா இடைமறித்து நான் எப்படி கத்துகிட்டேன்னு கொஞ்சம் சொல்லுங்க என்றார்.  இரவு பதினோரு மணி வரை ரெகார்டிங்க் முடித்துவிட்டு காலை நாலு மணிக்கு எழுந்து நாலரைக்கு குளித்து பல சமயங்களில் தலையில் நீர் சொட்ட சொட்ட வந்த நிற்பார் என்றும் தான் தலை துவட்டச் சொல்ல நேரிடுமென்றார். கோயமுத்தூரில் இருந்து சென்னை வரும் நேரத்திலே எவ்வளவு கற்றுக்கொள்வாரென்றும் எத்தனை கடினமான விஷயமாக இருந்தாலும் ஒரு இரவிலே அதை கிரகித்து அடுத்த நாள் ‘கூந்தலிலே..’ என்று பாட்டு போட்டு விடுவார் என்றும் சொன்னார். என்ன கற்றுக்கொடுத்து என்ன ‘என் மண்டையிலே ஏறவே இல்லையே?’ என்று ராஜா கேட்க, டி.வி.ஜி ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார். ‘இப்படி சொன்னா என்ன சொல்றதுன்னு தெரியலயே எனக்கு?’ என்று இருவரும் கொஞ்சம் நேரம் அதைச் சுற்றி பேசவும் மறுக்கவுமாக தொடர்ந்தது.

#) என்னைப் பொறுத்தவரையில் நிகழ்ச்சியின் முதல் சுவாரசியம் – கிட்டார் பிரசன்னா. அவர் மேடையேறியதுமே டி.டி ‘நீங்க கிட்டார் கத்துக்க காரணமே ராஜா சாரோட ஒரு பாட்டு தானாமெ? ’ என்று கொக்கி போட, எப்படி இல்லை என்று சொல்வது என கொஞ்சம் சங்கடப்பட்ட பிரசன்னா, ‘நாலு வயசுலேர்ந்தே கிட்டார் கத்துக்க ஆரம்ப்பிச்சாச்சு இருந்தாலும் பதினோரு வயசுல இளைய நிலா வந்தப்போ தான் இன்னும் சீரியசா கத்துக்க ஆரம்பிச்சேன்’ என்றார். வெளிநாட்டிலிருந்த வந்த பாஸ் கிட்டாரிஸ்ட், ட்ரம்மர்கள் துணையுடன் முதலில் முழுமையாக அமர்க்களமாகவும் ‘ஏய் உன்னைத் தானே’. பின் கொஞ்சம் நேரம் கிட்டாரில் எங்கெங்கோ சுற்றித் திரிந்திவிட்டு சரியாக ‘அந்தி மழை பொழிகிறதே’ துவக்கத்திலிருந்து பிரமாதமாக துவங்கி அப்படியே ‘தூங்காத விழிகள்’ சரணத்திற்குச் சென்று பின் அந்தி மழையில் மீண்டும் சுபம். கடைசியில் சின்னக் கண்ணை அழைக்கிறானை கொஞ்சமாக அழைப்பதாகச் சொல்லி அதைத் தான் நீண்ட நேரம் வாசித்து முடித்தார். (கூட்டத்தில் எதையோ மறைக்க தொப்பியுடன் கார்த்தி திரையில் அப்பா தோன்றிய பாடல் என்பதை மீறி உடலெல்லாம் சிலிர்க்க ரசித்தார்).  புஸுபுஸுவென தலையும் பிரதானமான மூக்கும் எப்போதும் புன்னகையுடன் கொஞ்சம் வளைந்து நின்று கிட்டாரை இறுகப் பற்றி பிரசன்னா வாசிக்கையில் உடலியக்கத்தில் இசைக்கேற்ப லேசான நடனம் போல ஒரு பாவனை. அதுவும், உதட்டிற்குக் கீழே கம்பளிப்பூச்சி தாடியுடன் ட்ரம்ஸ் வாசித்தவர் முகத்தில் தாவிக்கொண்டேயிருந்த உற்சாகமும், ‘அசையும் அசைவுகள் இசையின் நிழல்’ என்ற பிரமாதமான வரியை நினைவுபடுத்தின.

#) பின் மேடையேறிய பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசினார் என்பதைத் தவிர எதுவும் நினைவில்லை. சமீபத்தில் ராஜாவிடம் ஒரு அபத்தமான கேள்வி கேட்டதைக் குறிப்பிட்டு, தன்னை கேட்டிருந்தால் மழுப்பியிருப்பேன், நான் ஒரு க்ரிமினல். ராஜா அப்படிச் செய்ய அவசியமில்லை என்றார். கடல்கள் கொந்தளிக்கவே செய்யும், அதை கொந்தளிக்க விடாமல் பார்த்துக்கொள்ளவது நமது கடமை என்றார். (நன்றி சார்) . ‘ஏ ஆர் ரஹ்மானின் காரில் போகும் போது கேட்பது யாருடைய பாடல்களை?’ என்றொரு ட்வீட்டை ஞாபகமாகக் குறிப்பிட்டார். பாலாவையும் பஞ்சு அருணாச்சலத்தையும் மேடைக்கு அழைக்கும் பொழுது இசையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திவர் என்றும் ஆயிரமாவது படம் என்ற பெருமையை தன் படத்திற்கு (சாமர்த்தியமாக என்பது நான் தருகிற அழுத்தம்) பயன்படுத்திக்கொண்டார் என்றும் சொல்லப்போக பாலா கடும் கடுப்பில் மேடை ஏறினார். மைக் வந்ததும் ‘ரொம்ப விவரமாக அப்படி பயன்படுத்திட்டதா சொன்னீங்க, அப்படியெல்லாம் இல்ல’ என்று வெடித்தார். ராஜாவிடம் பிடிக்காதது என்னவென்று கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு உண்மையான கோபம் என்று இரண்டே வார்த்தைகளில் பதில். ப.அ., அன்னக்கிளியையும் அதற்கு ஒரு வருடத்திற்குப் பின் நிகழ்ந்த கச்சேரியில் ராஜா மழையில் நகராமல் நின்ற மக்களுக்குக்காக மூன்று மணிநேரம் வாசித்ததையும் சொன்னார். ராஜாவிடம் பிடிக்காத விஷயம் – தமிழ் டிவிட்டர் சில பல காதுகளையும் அதிர்ச்சியில் பிளக்கும் வாய்களையும் அழுந்த மூடிக்கொள்ளவும் – தேவையில்லாத தன்னடக்கம் என்றார். அடுத்து மேடையேறிய குழுவில் பிரகாஷ்ராஜும் பால்கியும் இரண்டே வரிகள் தான் பேசவேண்டும் என்று சொன்னதால் இரண்டே வரிகள் பேசினர். பி.வாசு ஏற்கனவே விஜய் தொலைகாட்சியில் தோன்றி சின்னத் தம்பி படத்தில் தாலி கட்டியிருப்பது தெரியவரும் காட்சியில் ராஜா ஏன் உரக்க இசையமைக்கவில்லை என்பதை உலகுக்கே சொன்னதை மீண்டும் விஜய் தொலைகாட்சியிலேயே தோன்றி உலகுக்கே மீண்டும் அதே உற்சாகத்தோடு சொன்னார். பாக்யராஜ் ‘வேற ஆங்கிள்’ல சொல்லப் போறேன் என்று துவங்கி எங்கோ பட டிஷ்கஷனில் தங்கியிருக்கும் போது சீட்டு விளையாடும் குழுவினர் வற்புறுத்தலால் ஈடுபட்டதையும் அதில் மாணிக்கம்பாளையத்தைச் சேர்த்த தியாகராயாஜ செட்டியாரோ தியாகராஜ முதலியாரோ யாரோ ஒரே ஒரு முறை பதிமூன்று சீட்டுக்களையும் பார்த்துவிட்டு சரியாக விளையாடி ஜெயிப்பார் என்றும் அதை வியந்த பாக்யராஜ்…. நிற்க, இதோ வந்துவிடுகிறோம்.. அதே போல வெகு நாட்களாக வியந்தது ராஜா எப்படி ஒரே ஒரு முறை காட்சியைப் பார்த்து விட்டு இப்படி இசையமைக்கிறார் என்பதை. இப்படியாக இளையராஜா ஆயிரம் என்ற சரித்திர நிகழ்ச்சியில் வெற்றிகரமாக மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த தியாகராஜ செட்டியாரோ தியாகராஜ முதலியாரோ யாரோ இடம்பெற்றதும் அதை உங்களுக்கு நான் விளக்கிச் சொல்ல நேர்வதும் நம் தலையெழுத்து. மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருப்பதாகச் சொன்ன மிஷ்கின் (கண்ணாடி போட்டிருப்பதால் தெரியவில்லை), 25 வருடங்களுக்கு முன், இன்னும் சில நாட்களே உயிருடன் இருப்பான் என டாக்டர்களால் கைவிடப்பட்ட ஒரு வட இந்திய இளைஞன் அவரை ஒரு பாடலின் அர்த்தத்தைக் கேட்டு வந்தததாகவும் உடைந்த ஆங்கிலத்தில் இருவரும் பேசிக்கொண்டதாகவும் சொன்னார். அந்த இளைஞன் அடுத்த அறுபது நாட்கள் திரையரங்கில் அந்தப் பாடலுக்காக படத்தை தினமும் பார்த்ததாகவும் சொன்னார். அவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. இதைச் சொல்லும் பொழுது தன் உடலெல்லாம் நடுங்குவதாகச் சொன்னார். அந்தப் பாடல் – போவோமா ஊர்கோலம். கதாநாயகி அறிமுகப்பாடல் என்பது ஒரு தனி genre அதில் ராஜா செய்த ஜாலங்கள் ஏராளமாம் என்று சொல்லி சில நடிகைகளை மேடையேற்றினர். பூர்ணிமா பாக்யராஜ் பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தை சுந்தர்ராஜனின் ஓவர் எமோஷனல்  நரேஷனையும் மீறி ஒப்புக்கொள்ள காரணமே அது ராஜாவின் இசையில் அவருக்கு முதல் படமாக அமையுமென்பதால். பின்னர் வரிசையாக நிறைய படங்களின் பெயர்களைச் சொன்னார். ராதாவும் தன் அறிமுகப்படம் எத்தனை சிறப்பு என்று சொல்லி அவர் ரெகார்ட்டிங்குக்குச் சென்ற பொழுது ‘ஓ இது தான் கப்பங்கிழங்கா’ என்று கேட்டது எதனால் என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அந்தப் பாடல் ஏற்கனவே இசையமைக்கப் பட்டதாலா அல்லது ராதா அப்படி இருந்ததாலா. (அழுத்திக் கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டாம், எனக்கு வலித்தது). ராஜா உடனே ‘ச்சிச்சீ, அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை’ என்றார். தொலைகாட்சியில் அந்த அழுத்தமான ச்சீச்சீ வராமல் போகலாம். மீனா, ராசாவின் மனசிலே, எஜமான், வீரா என்றெல்லாம் அடுக்கி விட்டு, அவர் என்னாளும் குழந்தை நட்சத்திரம் என்பதால் அன்புள்ள ரஜினிகாந்த் படப்பாடலில் ‘ஹலோ, நான் இருக்கேன், இங்க’ என்று ரெகார்டிங்கில் பேசிய போது அது எத்தனை பெரிய விஷயம் என்று தெரியவில்லை என்று வியந்தார். இப்போதும் தெரிந்ததாக தெரியவில்லை. அடையாளம் காணமுடியாமல் இருந்த பானுப்ப்ரியா சுருக்கமாக மெல்லப்பேசுங்கள், சித்தாராவை குறிப்பிட்டார். கொள்ளை அழகாக இருந்த கௌதமி கொள்ளை அழகாகப் பேசி 80களின் மானத்தை கொஞ்சம் காப்பாற்றினார். மக்களே – இது தான் ஒட்டுமொத்தமாக தமிழ்த்திரையுலகம் ராஜாவிற்கு செய்த மரியாதை. ப்ரோமாக்களில் கொடுத்த ஒரு நிமிடத்தில் பாதி நேரம் கேள்வியையே பதிலாக எழுதி நிரப்புவுது போல ஆயிரம் படமென்பது எத்தனை பெரிய விஷயம் என்று உளறுகிறவர்களிடம்  ‘சூப்பர் ஹிட் சாங்க்ஸ்’ என்ற விஷயத்தை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க? (இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஹாலில் இருந்து ஏதோ பிண்ணனி இசை இழுக்கிறது – மெட்டி). நன்றி, நீங்கள் எல்லோரும் போகலாம். கமல் அரங்கத்தில் அப்போது வந்திருக்க அவரை அப்படியே மேடையில் வரவழைத்து நாயகிகளுடன் அவரை கீழே இருக்கைக்கு அனுப்பினார்கள். அவர் காதல் மன்னன் என்பதை தொடர்ந்து நிறுவ வேண்டுமல்லவா? (கமல் ‘இது பாடற ப்ரோகிராம், என்னத்துக்கு பேசிகிட்டு’ என்று வேகமாகச் சென்றார்).

#) அடுத்து மனதை கொஞ்சம் சாந்தப்படுத்தியது பாடகிகள். சுசீலா, ஜென்சி, உமா ரமணன், சைலஜா, சித்ரா. சுசீலா ‘ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான்’ பாடிவிட்டு சம்மந்தமேயில்லாமல் புதுப்பாடகர்களுக்கு நிறைய வாய்ப்புக்கொடுக்க வேண்டுமென்று சொன்னார். (இது எப்படி இருக்கு?) ராஜாவின் முகபாவங்களில் எந்த வரிக்கு என்ன கண்டாரா ‘எதானா தப்பா சொன்னா மன்னிச்சுக்கோங்கோ சார்’ என்றார். ஜென்சிக்கு உணர்ச்சிப்பெருக்கில் பேசவே முடியவில்லை. அழுது விடுவாரெனப் பட்டது. ‘ஆர்டினரி சிங்கர் நான்’ (டிவிட்டரில் சில ஆமோதிக்கும் குரல்கள் கேட்கின்றன) ‘.. எனக்கு என்ன பாட்டெல்லாம் கொடுத்திருக்கு’ என்றார். சில வரிகள் தெய்வீக ராகம் சிறப்பாகவே பாடினார். (ஆமாம்.. ஜென்சியை வைத்து ஒரு சுவாரசியமான கதை சொல்வார்களே.. சரி விடுங்கள்). உமா ‘சுசீலாவைத் தவிர இங்க நிக்கிற எல்லாரும் இங்க நிக்க காரணமே நீங்க தான் என்றார்’. அமெச்சூர் பாடகர்களுக்கு எத்தனை கடினமான பாடல்களைக் கொடுத்து தேற்றினார் என்று குறிப்பிட்டார். இதையும் சுசீலாவின் கோரிக்கையையும் எடுத்து முடிச்சு போடலாமாவென இரு முனைகளை உற்று உற்றுப் பார்க்கிறேன். சித்ராவின் மைக் போனதும் கூட்டத்தில் ஏகமான ஆர்பரிப்பு. ‘ஹையையோ ராஜா சார் முன்னாலயெ இருக்கார் பேச பயமாருக்கு’ என்றதோடு முடித்துக்கொண்டார். ஒவ்வொரு பாடல் பாடுவதும் யுனிவர்சிட்டி எக்ஸாம் போல என்று சொன்னார். மற்றவரெல்லாம் விடை பெற அவர் மட்டும் தங்கி நின்று முதலில் ‘கண்ணன் வந்து பாடுகின்றான்’ பாடலை ஜானகியின் துள்ளலும் குறும்பும் இன்றி மெலடியாகவே பாடினார். அதன் பின்னர் எடுத்துக் கொண்டது சுவர்ணலதாவின் என்னுள்ளே என்னுள்ளே. பாடலின் ஒவ்வொரு ஏற்றத்தையும் இறக்கத்தையும் திருப்பத்தையும் அழந்தக் கோடிட்டு அமர்க்களமாக பாடி நிகழ்ச்சியின் முதல் சிறப்பை நிகழ்த்தினார். தொடர்ந்து சித்ரா ஜானகியின் பாடல்களையே நிகழ்ச்சிகளில் பாடுவது அத்தனை வியப்பு. அவருக்கு ராஜா மீது இருக்கும் அன்பும் ஜானகி மீதிருக்கும் காதலும் அவரின் பாடலை விட சற்றே சற்று கூடுதல் இனிமை.

#) ‘காலத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு’ என மனோ முழுக்குரலில் உற்சாகமாகப் பாடியபொழுது தான் கூட்டம் ஓஹோ இந்நிகழ்ச்சியில் பாட்டும் வருமோ என்று கவனிக்க ஆரம்பித்தது. (கூடச் சிறப்பாகப் பாடியது, சுர்முகி என்று நினைவு). தொடர்ந்து, எதிர்பார்க்காத விதமாக, மனோ ‘இளமையெனும் பூங்காற்று’ பாடினார்.  அடுத்து மேடையேறிய கௌதம் மேனன், கௌதம்ஸ் ப்ளேலிஸ்ட் என்று ஒன்று இருப்பதாகவும் அதை கார்த்திக்கிடம் கொண்டு சென்றதாகவும், அவரிடம் அதே ப்ளேலிஸ்ட் இருந்ததாகவும், அதை பிரசன்னாவிடம் கொண்டு சென்றதாகவும், அவரிடமும் அதே இருந்ததகவும், ஏன் இன்று பாடவதாக இருந்தவர்களின் லிஸ்ட்டிலும் இதே பாடல்கள் இருந்ததாகவும், கெஞ்சிக் கூத்தாடி இதை தங்களுக்கென வாங்கியதாகவும் சொன்னார். பேசாமல் இளையராஜா பத்து எனப் பெயர் வைத்திருக்கலாம். ஆர்க்கெஸ்ட்ராவிடம் வயலினையெல்லாம் படுக்க வைக்கச் சொல்லி விட்டு கார்த்திக்கின் குரலும் பிரசன்னாவின் கிட்டாருமாகத் துவங்கினார்கள். ஆங்கிலத்தில் புத்தியில் உதித்து தமிழாக கௌதமின் உதட்டில் வந்த எத்தனையோ வரிகளில் மிகச்சிறப்பானதாக அமைந்தது அன்று சொன்ன ‘என்னுடைய இசைச் சிந்தனைக்குக் காரணம் ராஜா சார் தான்’ என்றது தான். கௌதமிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற பாடல்களே தொடர்ச்சியாக வந்தன – 80கள், popular. கார்த்திக் பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்வதில்லை. வந்தோமா, உட்கார்ந்தோமா, Shall we go என்றோமா, அவ்வப்போது Are you ok, Hello Chennai என்றோமா, சிறப்பாகப் பாடினோமா, அவ்வளவு தான். கார்த்திக்கிற்காக ஒரு இளம்பெண் கத்திய கத்தலில் இரண்டு வாரங்கள் வெறும் காற்று தான் வரப்போகிறது. கோடைக் காலக் காற்றே பாடலின் இடையிசையில் ஆட்டுக்குட்டிப் போல துள்ளுகிற வயலினைப் பிரமாதமாகப் பாடினார். தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தத்தில் அங்கங்கே கொஞ்சம் சங்கதிகள். ‘தள்ளித் தள்ளிப் போனாலும்..’ என்ற தொடங்கும் இரண்டும் வரிகளுக்காகவே ‘காற்றை கொஞ்சம் நிற்கச்சொன்னேன்’  பாடல் உயிர் பெற்றது என பரவலாக (நானும் இன்னொரு டிவட்டர் நண்பரும்) கருதுவதை ஊர்ஜிதப்படுத்துவதைப் போல, அந்த இரண்டு வரிகளின் போது பிரசன்னாவின் கிட்டார் மணலில் ஓடும் நண்டைப் போல மனதில் அடியில் புகுந்து கிடுகிடுவென ஓடியது. சாக்ஸஃபோனுக்குப் பதிலாக கௌதம் தரரரார தாரரா எனப் பேசினார். தொடர்ந்து ராசாவே உன்ன நம்பி, போட்டு வைத்தக் காதல் திட்டம் எனச் சிறப்பாகப் பாடி விஜய் டிவியின் மானத்தைக் கொஞ்சம் காப்பாற்றினார்கள்.  ஒரே ஒரு விஷயம் – பிரசன்னாவின் கிட்டாரில் எல்லா சத்தமும் எப்படியோ வருகிறது. திடீரென தடித்தும், இளைத்தும், ஆழம் தொட்டும், மேலேற்றி ஒற்றைக்காலில் தாவித் தாவியும், நடந்தும், வழிந்தும், பெருகியும் – பிரமாதம்!

#)  கூட்டத்தின் ஒட்டுமொத்தக் காதலையும் அலுங்காமல் அப்படியே அடுத்து வந்து பெற்றவர் எஸ்.பி.பி. பேசுவதற்கு என்ன இருக்கு, எல்லாம் தான் நமக்குத் தெரியுமே என்றார். I am born for him, He is born for me. I love him, that’s all. அவ்வளவே என்று சொல்லிவிட்டு, நேரே என்ன சத்தம் இந்த நேரம். சத்தமெல்லாம் வேறெதுவுமில்ல, கூட்டத்தின் ஆரவாரம் மட்டுமே. எஸ்.பி.பியின் முதல் அடடாவிற்கும், அத்தனை இசையும் நின்றப் பிறகு துவங்கும் நெப்போலியனின் குழலுக்கும், இரண்டாம் இடையிசையில் வரும் சாக்ஸிற்கும் அத்தனை ரசிப்பும் வரவேற்பும். யாரோ சொன்னது போல, ஹிட் பாடல்கள் ஹிட்டாக ஆனதிற்கும் ரசிக்கப்படுவதிற்கும் காரணங்கள் உண்டல்லவா? உண்மையில் நிகழ்ச்சி நிகழத் துவங்கியது பெரும்பாலான மக்களுக்கு இங்கே தான்.  அப்போதே மணி பத்தரை பதினொன்று.  ராஜா, கமல், எஸ்.பி.பியில் யார் நிஜமான காதல் மன்னன் என்று டி.டி. கேட்க தன் முதல் காதலுக்கு எஸ்.பி.பியின் பாடலே உதவிய என்றும் மூவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்று கமல் முடித்தார். அடுத்து ப்ரியதர்ஷினியுடன் ஒ ப்ரியா ப்ரியா. சரியாகப் பொருந்தி வராமல் கொஞ்சம் பிசுபிசுப்பாகவே இருந்தது. மனோ ஏன் தமிழில் பாடநேரிட்டத்து என்று விளக்கி மனோ சிறப்பாக பாடியதாக பாராட்டினார். (இங்கே என்னுடைய பலமான மறுப்பு திரையில் வந்திருக்க வேண்டியது). கிட்டார் பிரசன்னாவை மேடைக்கு அழைத்து அவருடன் ‘இளைய நிலா பொழிகிறது’.  ஏராளமான improvisationsகள் ரெக்கை கட்டி பறந்தன. ராஜா முன்னிலையில் எஸ்.பி.பியுடன் இணைந்து கிட்டார் பிரசன்னாவிற்கு உண்மையாகவே அது மறக்க முடியாத நிகழ்வெனப் பட்டது. எஸ்.பி.பி, இந்தி வெர்ஷனைப் குறைத்து பேச விருப்பமில்லையென்றாலும் உண்மையை சொல்ல வேண்டியிருந்தது. பின்னர் சித்ராவுடன் சுந்தரி கண்ணால் ஒரு சேதி.  ராணுவ ஒழுங்குடன் பாடுகிற சித்ராவிடம் சென்றும் எஸ்.பி.பி என்னென்னவோ மாற்றி மாற்றிப் பாடிப்பார்க்கிறார் – ம்ஹூம், சித்ரா அசருவதாக இல்லை. ஆயிரம் முறை கேட்டிருந்தாலும், ஓரிரு முறை நேரிலேயே கேட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை அந்த பிரம்மாண்ட இசையில் எங்கோ ஒரு மனம் விக்கித்து தொலைந்து நிற்கிறது.  ஒரு காதல் பாடலுக்கான சூழலில் இருந்து இதை எப்படி உருவாக்கி இருக்க முடியும்? (அழுத்தத்திற்காக மீண்டும் ஒரு முறை – உண்மையிலேயே எப்படி?). பின்னர், கர்நாடகாவில் பாடாமல் போனால் கல்லடி விழும் ஜோதேயலி, முழுக்க முழுக்க கன்னடத்தில், ப்ரியா ஹிமேஷுடன். (ஜானகி சிரிப்பதைப் போலவே நன்றாகச் சிரித்தார்).

#) பிறகு ஜெயராம், குஷ்பூவை மேடையேற்றினர். கார்த்தியை இரண்டு மூன்று முறை அழைத்தும் அவர கௌரவமாகவும் புத்திசாலித்தனமாகவும் மறுத்துவிட்டார். ஜெயராமின் மகனின் முதல் படத்திற்கு ராஜா தான் இசை என்று சொன்னார். (அது எப்போதோ வந்த கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்று பிறகே புரிந்தது). குஷ்புவிற்கும் பேச வரவில்லை. கமல் வேறு இருப்பதால் ஏதோ சிற்சில வார்த்தைகளைச் சொன்னார். வெங்கடேஷை ஈநாடே ஏதோ அயிந்தி பாடலுடன் மேடைக்கு அழைத்தனர். எத்தனையோ ஆவரேஜ் ப்ராடெக்டுகளை, தன்படங்கள் உட்பட, சிறப்பாக்கினார் என்று சொன்னார். ரமண ரிஷி மூலமாக ராஜாவுடன் spiritualஆகவும் connect செய்தவாகவும் சொன்னார். அதன் பின்னர் மேடையேறியது எல்.சுப்பிரமணியம்.  காமிரா உற்றுப் பார்க்காத கோணத்தில் கமல் போல யாரோ நடந்து backstageபோவது போலத் தெரிந்தது. LS என்ன வாசித்தார் என்றுத் தெரிகிற அளவிற்கு அறிவில்லை. இருந்தாலும், வியந்து போய் அமைதியுடன் கவனிக்க வைக்கும் அளவிற்கு மிகப் பிரமாதமாக இருந்தது. தி.மோகனாம்பாளில் மனோரமா சொல்வது போல நிஜமாகவே வயலின் சத்தம் வித்தியாசமாகவே இருந்தது. (ராஜா மிகக் கவனமாக இசையை கவனித்தார். திடீரென யாரோ அருகில் வந்து நிற்க, என்னவெனக் கேட்கிறார். ஆள் தபாலென காலில் விழ, சரிசரி என்று சொல்லிவிட்டு மீண்டும் இசையிலும் கவனம். நிற்க, கமலை நிஜமாகவே காணோம்). LS ஒரு வார்தையும் பேசாமல் வாசித்து முடித்ததும் மேடையைக் காலி செய்தார். தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஒரு பத்து பேர் மேடையேறினார். எல்லோரும் பேசுவார்களோ என்று வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்க, ஒருவர் தலைவர் மட்டும் பேசுவார் என்று புளியை பாலாக்கினார். தலைவராகப்பட்டவர் தானு. (கமல், டபுள் எஸ்கேப்). தானு ‘பன்னிசையும் நல்லிசையும் சேர்ந்தக் கலவை’ என்றெல்லாம் என்னவோ பின்னியெடுத்தார். யாராவது செய்வார்கள் என்றெதிர்பார்த்த ஆயிரம் பூமாலையை ராஜாவுக்கு அணிவித்தார்கள். விஜய் தொலைகாட்சியும் தயாரிப்பாளர்கள் சங்கமும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை நெருப்பில்லாமல் வதந்தி புகைவதில்லை என்பதாகக் கொஞ்சிக் கொண்டனர். நாசர் தானாக முன்வந்து டிடியிடம் நடிகர்கள் சங்கத்தை நினைவுபடுத்தி ராஜாவிற்கு கௌரவம் செய்தனர்.

#) ‘Hello everybody, this is DSP’ DSP எத்தனை பெரிய ராஜா ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். (உங்களுக்குத் தெரியாதென்றால் உங்களைப் பற்றி நான் பேசவில்லை). சிறுவயதில் ஒரு தகர டப்பாவில் ராஜாவின் பாடலை வாசித்து பல பரிசுகள் பெற்றவர், அதே பாடலை இன்று பாட உற்சாகமாக வந்தவர், ராஜாவின் படத்தை சிறு வயதில் வரைந்து வைத்து இன்றும் அதை கொடுக்க முடியாமல் சங்கோஜப்படுபவர், தன் ஸ்டூடியோவில் ராஜா புகைப்படத்தை பெரிதாக வைத்திருப்பவர் (இதை அவர் சொல்லவில்லை, நானே சேர்த்தது), மேடையேறி ராஜாவின் முன் பாடலாம் என்று வந்தால் அந்த நேரம் ராஜாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர். மனிதரால் தாங்கிக்கவே முடியவில்லை. அழுது விடுவாரெனத் தோன்றியது. (டிடியைக் கூப்பிட்டு கேட்கிறார். டிடி ‘ஓ ராஜா சார் இல்லையா’ என்று முழித்து விட்டு ‘அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். He is listening to you’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார்). இரண்டே நிமிடங்கள் – ஏமாற்றத்தை எல்லாயும் கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு ஜோராக ‘உள் மனசுல ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடும் தூரம்’ என ஒரு சரணம் பாடி விடைபெற்றார்.  Thaikkudam Bridge ஒரு முறை மேடையேறிவிட்டு ஏதோ சரியில்லை என்று காணாமல் போயினர். ராஜா இல்லாததால் சென்று விட்டனர் என்பது என் கணிப்பு. ஃபின்லாந்திலிருந்து ஒரு ரசிகரை மேடையேற்றினர். என்னக் கொடுமை இதெல்லாம் என்று புரியவில்லை. தன் இந்திய நண்பனுடன் காரில் செல்கையிலெல்லாம் ராஜாவின் பாடல்களைக் கேட்டு மயங்கி இங்கேயே வந்துவிட்டாராம். ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ பாடலை வாத்தியங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘சொரியோடு லயம் போலவே’ என்று ஏகப்பட்ட சிரிப்புக்கும் வரவேற்புக்கும் இடையே பாடினார்.

#) நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த தித்திப்பும் அதிகரிக்க காரணம் உஷா உதூப். ராஜா மீண்டும் வந்துவிட்டிருந்தார். மற்றவர்களைப் போல தனக்கு ஆயிரம் பாடல்கள் ராஜாவிடம் இல்லையென்றாலும் கடந்த 45 வருடங்களாக பாடிக்கொண்டிருக்கக் காரணம் அவரிடம் பாடிய நான்கைந்து பாடல்கள் தாம். தன்னைப் போல எத்தனையோ பேர் அவரின் பாடல்களை எப்போதோ திரையில் பாடியதால் தான் தங்களின் தினசரி சோற்றுக்கு வழி கிடைப்பதாகச் சொன்னார். The King, The King, The King என்று ஏராளமான முறையும், The God Himself என்றும் அப்பழுக்கில்லாத அழகான அன்பு. மிகவும் நடுக்கத்துடன் பாடப்போவதாகவும் ராஜாவின் முன்னால் மீண்டும் பாடும் வாய்ப்பிற்காக எத்தனையோ வருடங்கள் காத்திருந்ததாகவும் சொன்னார். முன்னெப்போதும் பாடாத அளவிற்கு வேகம் வேகம் போகும் பாடலை இன்று பாடப்போவதாகச் சொன்னதெல்லாம் நிஜமாகவே சிலிர்ப்பு. மூன்றைரை மணியிலிருந்து காத்திருந்தவர் நடுவில் ராஜா எங்கோ எழுந்து சென்றதும் தன் வாய்ப்பு போய்விட்டதாக அழுததாகவும் சொன்னார். ஆனால் என்ன – மறுபடி அந்த வாய்ப்பு கை வர அதை அவர் விடுவதாயில்லை. ஜிவ்வென துவங்கிய பாடலின் மூன்றாவது வரியில் திடுமென நிறுத்திவிட்டார். மானிட்டர் சரியில்லை சாரி சாரி சாரி என்று சொன்னவர் அதை சரிசெய்யும் நேரத்தில் ‘இந்தப் புடவ நன்னாருக்கா? இன்னைக்கு பாடறதுக்குன்னே புதுசா வாங்கினேன்’ என்றெல்லாம் சொன்னார். So sweet! ராஜாவுக்கு தாங்கமாட்டாத சிரிப்பு. மறுபடி பாடல் துவங்கி, ஆர்கெஸ்ட்ட்ராவும் அவரும் ஒரிஜினிலுக்கு ஒரு படி மேலேயே சென்று அமர்க்களமாக இசைத்தார்கள். அத்தனை நடுக்கம் இருந்தால் அத்தனை நன்றாகத் தானே வருமென அவரே சொன்னார். தொடர்ந்து செந்திலுடன் தண்ணி தொட்டியைத் துவங்க (ஷூரியன் வழுக்கி ஷேத்தில் விழுந்தது மாமி!) என்ன ஸ்ருதி Dயா Dயா என்று கேட்டுக்கொண்டேயிருக்க கமல் உள்ளே புகுந்து ஆமாடி என்றார். அதற்கு பதிலாக இவர் ஒரு ஐ லவ் யூடா! தொடர்ந்து ரம்பம்பம். DSPயை தேடிப்பிடித்து மேலே கொண்டு வந்து உடன் பாட வைத்தார் உஷா. ராஜா எங்கோ போனதும் இருவருமாக backstageஇல் ஓரமாக சோகமாக அமர்ந்திருந்திருப்பார்கள் போல (குஷ்பூவை உஷா அழைத்து ஆட வைத்தது சற்றே ரம்பம்). இருந்தும் ரொம்ப நேரமாக காய்ந்து போய்க்கிடந்தவர்களுக்கு பெரும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தந்தவர் உஷாவே. இதற்கு முன்னால் நழுவிய வாய்ப்பு மீண்டும் வர  ராஜாவிடம் நேராக பவ்யமாகப் பேசிய DSP ராஜா கைய வெச்சா பாடலை அங்கங்கே ராஜா சார் ராஜா பாட்டு என்றெல்லாம் இட்டு கட்டிப் பாடினார்.

#) LS ராஜாவிற்கு தன் அப்பாவின் பெயரால் வழங்கும் விருதை ராஜாவின் இடத்திற்கே சென்று வழங்கினார். ராஜா அவரிடம் ஒரு மைக்கைத் தந்து என்னன்னு சொல்லுங்க என்றார். கமல் திரும்பி வந்துவிட்டிருந்தார் – அவரும் LSம் இரண்டு முறை வணக்கம் சொல்லிக்கொண்டனர். ராஜா LSவீட்டிலேயே தங்கி வளர்ந்து இசை கற்றத்தை குறிப்பிட்டார்.

#) கறுப்பு சட்டையும் சிகப்பு வேஷ்டியுமாக மேடையேறினர் Thaikkudam Bridge. மெமோ கிடைக்காத சிலர் கை வைக்காத சிகப்பு பனியனில் வந்திருந்தனர். சுருக்கமாகப் பேசிவிட்டு மலையாளத் தமிழுக்கு மன்னிக்கச் சொல்லி விட்டு,  புன்னகை மன்னன் தீமில் துவங்கி, ராஜ ராஜ சோழன் சரணத்திற்குத் தாவி, நீ பார்த்த பார்வைக்கு, நாயகனில் போலீஸ் தீம், சரண்யா-கமல் தீம், தளபதியிலிருந்து இரண்டு துவக்க இசைகள் என்று தொடர்ந்து கடைசியில் சற்றும் எதிர்பார்க்காத கணத்தில் ஓம் சிவோஹத்தை துவக்கி அராஜப்படுத்தினார்கள். ஒட்டு மொத்த நிகழ்ச்சியில் ஓம் சிஹோம் தொடங்கி நீண்ட அந்த இரண்டு நிமிடங்களைப் போல வேறெந்த நிமிடங்களில் ஆச்சரியமும் ஒரு வகையான அதிர்வும் சிலிர்ப்பும் ஏற்படவில்லை.

#) யுவன் ஷங்கர் ராஜா பள்ளி மாணவன் போல துள்ளிக்குதித்து ஓடிவந்தார். (மூன்று பிள்ளைகளும் தத்தம் துணைகளுடன் வெவ்வேறு இடங்களில் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்). பள்ளி மாணவன் போலவே பேசிய அவர் சொன்ன விஷயம் சிறப்பு – இங்கு யாரும் குறிப்பிடாத சிலரை குறிப்பிட்டே தீரவேண்டுமென்றும் அப்பாவிற்கு மிகப்பிடித்தவர்களைக் குறிப்பிடவில்லை எனில் நிகழ்ச்சி நிறைவேறாதென்றும் சொல்லி , வாலி, எம்.எஸ்.வி, தக்.. தக்‌ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் தானே? என்பதாகச் சந்தேகம், ஜீவா அனைவரையும் குறிப்பிட்டார். அம்மா இல்லையெனில் இதெல்லாம் நிகழ்ந்திருக்காது என்று சொன்னார்.(ராஜா ஒற்றை விரலால் மணி அடிப்பதைப் போல சரியாகச் சொன்னாதாகச் சொன்னர். கொஞ்சம் கலங்கியதைப் போலவும் இருந்தது). விடைபெற்றுச் சென்ற யுவனை கூட்டம் மீண்டும் மேலேற்றியது. போட்டு வைத்த காதல் திட்டம் பாட முயற்சித்தார். சரணத்திலெல்லாம் ராஜாவிற்கு என்ன இது என்பதாகச் கமலிடம் சிரிப்பு. ஓரிடத்தில் out of body experience போல சுருதி முற்றிலும் விலகி நிற்க கூட்டத்தில் பவதா முகத்தை மூடிக்கொண்டு அதிர்ச்சியில் ஹையோவானார். (ஒரு சுருதி சேராதவரின் மனசு இன்னொரு..)

#) ஒரு வழியாக நிகழ்ச்சி நிறைவு – கமலை முதலில் மேடையில் ஏற்றினார்கள். வந்ததிலிருந்து முதல் ஒரு மணி நேரம் கமல் விழித்திருக்கிறாரா தூங்குகிறாரா என்றே விளங்கிக்கொள்ள முடியவில்லை. கமல்50ல் ஊர்வசி சொன்னது போல பொம்மையை பிடுங்கிய பின் குழந்தை கொள்ளும் முகபாவம். பின்னர் ஒரு மாதிரி சகஜமாகி இருந்தார். அவர் ராஜாவையும் அழைத்து, அடுத்து என்ன போடப்போறீங்க என்றார். ராஜா இன்னும் தெரியல என்று சொல்ல, அது உங்களுக்கு நிறைய இருக்கும் ஆனா எனக்கு தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு இருக்கு என்றார். புதுப்பட அறிவிப்போ என ஆர்வமேற்படுத்தினார்.  நம் எல்லோருக்காகவும் ஒரு தனிப்பரிசு கொண்டுவந்திருப்பதாகச் சொன்னார். மருதநாயகம் படத்தை மீண்டும் துவக்குவதாக அறிவிப்பார் என்று தோன்றியது. கையில் பாடல் வரிகளை ராஜாவிடம் கொடுத்து அவரின் காதில் சென்று இது என்னவென கிசுகிசுக்கிறார். ‘ஐயோ இது எப்பவோ பண்ணதாச்சே’ என்று ராஜா அழகாக அதிர்ச்சியடைந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ‘ராணி வந்து எப்பவோ பூஜை போட்டுட்டு போயிட்டாங்க’ என்றார். கமல் விடாமல் ‘இப்போ ராஜாவ வெச்சு மறுபடி ஆரம்பிக்க சொல்றேன்’ என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பை கூட்டினார். அங்கேயே கமல் ராஜாவிற்கு கொஞ்சம் மெட்டை நினைவுபடுத்திக் கற்றுகொடுக்க, ராஜா ‘எங்க கூடப்பாடறவங்க எல்லாம் வாங்க’ என்று அவர்களையும் அழைத்துச் சொல்லிக்கொடுக்க, கமல் சென்று வீடியோவை தயார் செய்ய, முதல் முறை மருதநாயகம் படக்காட்சிகளும் ராஜாவும் பாடிய பாடல் அத்தனை சரியாகப் பொருந்தவில்லை. ராஜாவிற்கு திருப்தியில்லை என்று சொல்லி மீண்டும் ஒரு முறை துவக்கி கச்சிதமாக ‘பொறந்தது..’ பாடலை அரங்கேற்றினார்கள். கொஞ்சம் பிரமிப்பு ஏற்பட்டது.  ‘படம் வெளியாகும் போது நல்லா கேட்டுக்குங்க’ என்று அம்போவென எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

#)  ராஜா ரத்தினச் சுருக்கமாகப் பேசினார். மணி அப்போது 1:15. துளியும் அயற்சியோ சலிப்போ இல்லை. இது எனக்கான பாராட்டு விழா மட்டும் அல்ல, எனக்கு முன்னாலான அத்தனை இசையமைப்பாளர்களுக்குமான விழா என்றார். அவர்கள் அனைவரும் ஷாஷ்டாங்க நமஸ்காரம் என்றார். வட இந்தியாவில் சிலரை குறிப்பிட்டு அவர்களுக்கும் ஷாஷ்டாங்க நமஸ்காரம் என்றார். ஒரு முறை திருத்தி அழுத்தமாக எனக்கு முன்னால் வந்த இசையமைப்பாளர்கள் என்று சொன்னார். அதைத் தவிர ஆயிரமென்பதோ பாராட்டு என்பதோ சற்றும் உணர்ந்தவராக இல்லை. அவர் எப்போதும் சாதாரணமாகவே இருக்கிறார்.  இந்தப் பாராட்டு விழாவிற்கு இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள், அதற்கு நன்றி எப்படி சொல்வது, அதற்குப் பதிலாக ஒரு இசை விருந்து விரைவில் காத்திருக்கிறது என்று இரு முறை வாக்கு கொடுத்தார்.  உடனே சுபம்.

#) ஆக – விஜய் தொலைகாட்சியின் இளையராஜா ஆயிரம் கொஞ்சமாகவேனும் கரையேறக் காரணம் – எஸ்.பி.பி, சித்ரா, மனோ, விக்கு வினாய்க்ராம், டிவிஜி, கிட்டார் பிரசன்னா, கார்த்திக், உஷா உதூப், Thaikkudam Bridge ஆகியோரால் மட்டுமே. அவர்கள் ராஜா மீது வைத்திருக்கும் அன்பினாலும், தங்கள் திறமையாலும் மட்டுமே. அவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பணியைச் சுலபமாக்கி நிகழ்ச்சியை மேம்படுத்தியிருக்க வேண்டிய விஜய் தொலைகாட்சி அதை எங்கும் எள்ளளவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்பட்டமாக பலமுறை ப்ரோக்ராமர் மைக்கில் அடுத்து என்ன பண்ணறது எனக்கேட்பதும், சித்ராவை வரவழைப்பதும் போகச் சொல்வதும் அவர் தானாக முன்வந்து நான் வேணா ஷார்ட் பண்ணிக்கிறேன் என்றதும், எஸ்.பி.பி மேடையிலேயே பலமுறை  – அடுத்து என்ன? நான் தனியா பாடப்பேறேனா? இப்ப பாடணும்னா பாடறேன் இல்ல அப்புறமா வரணும்னா வறேன்? இல்ல வரலேன்னாலும் பரவால்ல. ஆனா ப்ளீஸ் இதுக்கப்புறம் என்னன்னு மட்டும் சொல்லிடுங்க என்றெல்லாம் கேட்கவிட்டு – ஒரே கலவரமாக இருந்தது. கும்பல் கும்பலாக மேடையேறியவர்களில் பெரும்பாலோனோர் எதையோ பிதற்றிச் சென்றனர். ராஜா சார் மேல் இருக்கிற அன்பினால எல்லாரும் எங்களையும் கூப்பிடுங்கனு கேட்டுகிட்டே இருக்காங்க என மறுபடி மறுபடி ஜாமீன் மனு போட்டாலும் அந்த அன்பை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. இளையராஜா 1000 என்ற தலைப்பிற்கான ஆழமும் ஆராய்ச்சியும் எங்கும் துளியும் தென்படவில்லை. டிடியை நினைத்துக் கொஞ்சம் பாவமாக இருந்தது – முன்னால் நின்று முகம் காட்டி அத்தனை எரிச்சலையும் எதிர்கொண்டார். அவ்வப்போதும் மன்னிப்பும் கேட்டார். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலே பின்னால் மக்கள் கூச்சல்கள் ஏற்படுத்தியும் நிர்வாகித்தினர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மேடையேறிய ஐந்து பாடகிகளை அப்படியே அமர வைத்து சில வரிகள் பாட வைத்திருக்க எத்தனை யோசிக்க வேண்டியிருக்கும்? இல்லை வராமல் போன முக்கியமான நபர்களிடம் சில அனுபவப்பூர்வமான வார்த்தைகளை வாங்கிப் போட எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கும்? பலரின் வருகையும் இருப்புமே இந்நிகழ்ச்சியின் சிறப்பு என விஜய் தொலைகாட்சி தப்புக் கணக்கு போட்டிருந்தது, அவர்களில் கமல் மட்டுமே வந்தும் இருந்தும் நிகழ்ச்சியைல் காப்பாற்றினார். தூரமாக இருந்தாலும் பரவாயில்ல நேரமானாலும் பரவாயில்ல ராஜாவை பாக்கலாம்னு வந்தோம் என பல புலம்பல்கள் கேட்டன. பதினோரு மணி வாக்கில் மக்கள் சாரை சாரையாக வெளியேறத் துவங்கிய பின்னரே நிகழ்ச்சி ஓரளவும் சிறப்படையவும் செய்தது. ராஜாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லது என்று ஒரு கட்டத்தில் தோன்ற ஆரம்பித்தது. ராஜா நகர்கிற வரையில் எங்கும் நகர்வதில்லை என்பதாலேயே இறுதி வரையில் அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. ராஜா அறிவித்திருக்கும் இசை நிகழ்ச்சி இவர்கள் கையில் சிக்காமல் இருக்க நம்மால் ஆன முயற்சி ஏதேனும் இருந்தால் செய்யலாம்.

#) ராஜா பெரும்பாலும் உற்சாகமாக இருந்தார்.  மேடையில் பேசுபவர்களுக்கு பல சமயங்களில் உடனடி ரியாக்‌ஷன்களை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி. DSP தான் முதலில் பாடும் போது நீங்க இல்ல என்று வருந்திய போது உடனே சாப்பிடப் போனதாக சைகை செய்கிறார், ஒவ்வொருவருக்கும் விடாமல் கை தட்டுகிறார், சலிக்காமல் புன்னகைக்கிறார், அத்தனை புகழ்ச்சிக்கும் சற்றே தள்ளி நின்றே பார்த்துக்கொண்டிருக்கிறார், யார் பாடினாலும் யார் இசைத்தாலும் ஒரே பாவம், ஒரே கூர்மையான பார்வை – அது மட்டும் சற்றும் மாறுவதேயில்லை. ஒருவேளை தெரிவதெல்லாம் இசையாக மட்டுமே இருக்கலாம். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைத் தாண்டி இது ராஜாவுக்கான நிகழ்ச்சி என்று எங்குமே தோன்றவில்லை. என்ன பெரிசாக அழுது விடப்போகிறோம் என்று திடமாக அமர்ந்திருக்க பத்து முறை ஓட்டிய ப்ரோமோவில் ராஜா ‘எனது பிறப்பு இசைக்கான ஒரு நிகழ்வு’ என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் மனம் கலங்குகிறது. அரங்கின் உள்ளே ராஜா நுழைந்ததும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக திடல் முழுக்க காவலர்கள் புடை சூழ விறுவிறுவென புன்னகையுடன் கையசைத்துக்கொண்டே நடக்கத்துவங்கிவிட்டார். (நியுஜெர்ஸிக்கு வந்த பொழுது ஒவ்வொருவர் மனதிலும் விளக்கடித்துப் பார்த்தவர் என்பதால், இது அவரின் யோசனையாக இருக்கலாம்).  என்ன நிகழ்கிறதென விளங்கிக்கொள்ள சற்று நேரம் பிடித்தது. எம்பிக் குதித்து விளக்கொளிகள் நகர்கிறதையும் கரவொலிகள் எழுவதையும் வைத்து எங்கே நடக்கிறார் என்பதைக் கணித்து எங்கே எவ்வளவு வேகமாகச் சென்றால் அருகில் காணமுடியுமென்று கணக்கிட்டு ஹே ராம் நின்றி திடுமென வெடிக்கிற தாரை தப்பட்டை இசைக்கு செக்யூரிட்டியின் கண்ணில் இல்லையென்றாலும் ஓடுகிற ஓட்டத்தில் முட்டி வரை மண்ணைத் தூவி விட்டு குனிந்தும் மரக்கட்டை தடுப்புகளைத் தாவிக் குதித்தும் ஓடிச் சென்று அவர் நடந்து செல்கிற வழியில் அருகே மிக அருகே பக்கத்துக்கு பக்கத்திலே ஒரே ஒரு ஒரு ஆள் தொலைவில் நின்று பட்டும் படாமலே போகிற் பார்வையில் விழுந்து, அபத்தமாக ராஜா ஐ லவ் யூ என்று உங்களுக்குமாகச் சேர்த்து கத்திவிட்டு வந்தேன். இசை நிகழ்ச்சி அடுத்து எப்போது வருகிறதோ அங்கேயும் சென்றும் இதையே செய்வேனாக.

பின்குறிப்பு : இங்கே முதல் பதிவிட்டு இன்றுடன் சரியாக பத்து வருடங்கள் ஆகின்றன. ஆச்சரியக்குறி. தயவு செய்து அதையெல்லாம் சென்று படித்துவிடாதீர்கள்.

Written by Aravindan

பிப்ரவரி 28, 2016 at 2:29 பிப

இசை இல் பதிவிடப்பட்டது

யார் எழுதியதோ

with one comment

 

நீர்க்கரைகளிலே
தனிமையிலே திரிந்திருந்தேன்

மீன் வருமளவும்
முழுவதுமாய்ச் சலித்திருந்தேன்

நதிமேல் விழும் வானிலே
மிதந்தே வரும் தாரகை
அடையா உளவை உணர்ந்தேன் உணர்ந்தேன்

வான் தரையிறங்கும்
இரவுகளில்
உனை தொடர்வேன்

நான்
நடைபழகும் கவிதைகளின்
பொருள் பெறுவேன்

நிலவே விளக்கானவன்
அடியேன் தெருவாசகன்
மெதுவாய் நடந்தேன் தொடர்ந்தேன் தொடர்ந்தேன்

எதிரில் இருந்தும் கதவைத் திறவேன்
விடையை துறந்தேன் புதிரில் சுழன்றேன்

ஆண்
அறையினிலே
விடிவதில்லை சில பகல்கள்

பெண்
வரும் வரையில்
திறப்பதில்லை அதன் திரைகள்

விழியோ ஒரு சாளரம்
மனமோ சிறு தாவரம்
ஒளியாய் வளர்ந்தாய் கடந்தாய் கடந்தாய்

பின் குறிப்பு  #1 –  இதை எழுதிக் கொண்டிருக்கையில் தோன்றியது – சாதாரணமாகவே தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வேலை spying தானோ?

பின் குறிப்பு #2 – பதிவின் தலைப்பை கேள்வியாகவே பாவித்தால் – பதில் – நானே தான்.

Written by Aravindan

ஜூன் 29, 2014 at 4:28 முப

இசை, பாடல் வரிகள் இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

Steinbeck

with 4 comments

தினசரி அலுவலகத்திற்கு சுமார் இருபது மைல்கள் சென்றும் திரும்பவும் துவங்கி நான்கு மாதங்கள் ஆகி விட்டன. மூன்று வருடங்களாக கார் ஓட்டிக்கொண்டிருந்தாலும் – அளவுக்கு அதிகமான கார்களை விழுங்கியபடி நகரத்தினுள்ளே புகுந்து செல்லும் மலைப்பாம்பை போல நீளும் நெடுஞ்சாலையில் ஊரே ஊர்கோலமாக போகிற காலை மாலை வேளைகளில் தனியாக தினமும் எல்லோருடனும் போட்டி போட்டுக் கொண்டு விரைவது எனக்கு பழக்கமில்லை. இரு புறத்திலும் மேம்பாலக் கட்டுமானப் பணிகள், புழுதி பறக்கும் சாலைகள், முக்கிய நெடுஞ்சாலையில வெறும் 55 மைல் வேக வரம்பை எண்ணி எரிச்சலில் 75ல் பறக்கும் கார்கள், சதா வளைந்து கொண்டே இருக்கிற பாதை, ஆங்காங்கே விபத்தில் சிக்கி ஒன்றை ஒன்று பார்த்துக் கண்ணடித்தபடி நிற்கும் ஜோடி கார்கள் என ஒரு நொடி கூட அசராமல் ஓட்டியபடி முதல் மாதம் கழிந்தது. வழி கொஞ்சம் பழகிய பின்னர் ரோல்லர் கோஸ்ட்டரின் உச்சியில் லேசாக உடல் நம்மை விட்டு நழுவுவது போல எழுமே, அது போல கவனம் சாலையிலிருந்து எழு முயற்சித்தது. மறு கணமே அதிர்ந்து, ஸ்டியரிங்கிலிருந்து கைகளை எடுக்காமலே கன்னத்தில் அறைந்து கொண்டு நானும் என்னுடைய கவனும் இறுக்கக் கட்டிக்கொள்வதாக இரண்டாவது மாதம் கழிந்தது. பின்னர் கண்களை சாலைக்கும், கைகளை ஸ்டியரிங்கிற்கும், காதுகளை அவ்வப்போது குரலை பாடலுக்கும், கால்களை மாறும் வேகங்களுக்கும் கொடுத்து விட்டால் நினைவு ஒரு சிறிய பறவையாகி சிறகை வேறு விரிக்கத் துடிக்கும். (ராஜா ரசிகர்களே..) மோசமான திரைக்கதை போல 75, 55, 25 என நொடிக்கு நொடி மாறும் வேகத்தில் விரைகையில் திரைப்படத்தின் கடைசி காட்சியில் வெடிகுண்டை செயலிழக்க வைப்பது போல மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இருக்கிற இணைப்பை நடுங்கும் கைகளுடன் கத்தரிக்கத்துக் கொண்டிருந்த நான் – இப்பொழுதெல்லாம் திரைப்படத்தின் முதல் காட்சியை வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நாயகன் போல சரக்கென கத்திரிக்கிறேன். சரியான வேகத்தில் சரியாக இங்கிருந்தும் அங்கும் அங்கிருந்தும் இங்கும் அணிகள் மாறியபடி தவறுகள் இன்றி விரையும் பொழுது சுலபமாக மனதில் குழப்பங்களுமில்லாத ஒரு இடத்தை அடைய முடிகிறது. நினைத்த இடத்திற்கும் காலத்திற்கும் கொக்கி ஒன்றை வீசி ஏறிச் செல்ல முடிகிறது. ஒரு காட்சியை அடைந்து விட்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த கற்பனை கதாபாத்திரங்கள் திடீரென பக்கம் பக்கமாக படபடப்பாக வசனம் பேசுகிறார்கள். கை மறதியாக வைத்த பொருளின் இடம் நினைவுக்கு வருகிறது. செய்த முட்டாள்தனங்கள், திடீர் உத்வேக முடிவுகள், சோர்வாக சில சுய பரிசோதனைகள் என முடிவில்லாத பிரமாதமான மனவெளி விரிகிறது. இதைப் பற்றி இந்த வருடம் முழுக்க ஏழுட்டு பத்திகளாக எழுதி எழுதி உங்களையெல்லாம் படிக்க வைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..

..ஆனால் John Steinbeck அறுபது வயதுக்குப் பின்னர் ஒரு ட்ரக்கில் ஏறி தன்னுடைய நாயுடன் அமெரிக்கா முழுக்க பயணித்ததை விவரிக்கும் Travels with Charley – In Search of America புத்தகத்தில் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரிக்கு படித்து பேரானந்தம் அடைந்தாலும், நிறைய வருத்தமாகவும் இருக்கிறது. 1962லேயே இவையெல்லாம் எழுதப்பட்டுவிட்டன. எழுதி யாருக்கும் தெரியாமலும் வைக்கவில்லை – ஒரு நோபல் பரிசை வேறு வாங்கியிருக்கிறார்.

”If one has driven a car over many years, as I have, nearly all reactions have become automatic. One does not think about what to do. Nearly all the driving technique is deeply buried in a machine-like unconscious. This being so, a large of the conscious mind is left free for thinking. And what do people think of when they drive? On short trips perhaps of arrival at a destination or memory of events at the place of departure. But there is left, particularly on very long trips, a large area for day-reaming or even, God help us, for thought. No one can know what another does in that area. I myself have planned houses I will never build, have made gardens I will never plant, have designed a method for pumping the soft silt and decaying shells from the bottom of my bay up to my point of land at Sag Harbor, of leeching out the salt, thus making a rich and productive soil. I don’t know whether or not I will do this, but driving along I have planned it in detail even to the kind of pump, the leeching bins, the tests to dertermine disappearnce of salinity. Driving, I have created turtle traps in my mind, have written long, detailed letters never to be put to paper, much less sent. When the radio was on, music has stimulated memory of times and places, complete with characters and stage sets, memories so exact that every word of dialogue is recreated. And I have projected future scenes, just as complete and convincing – scenes that will never take place. I have written short stories in my mind, chuckling at my own humour, saddened or stimulated by structure or content.

I can only suspect that the lonely man peoples his driving dreams with friends, that the loveless man surrounds himself with lovely loving women, and that children climb through the dreaming of childless driver. And how about the areas of regrets? If only I had done so-and-so, or had not said such-and-such-my God, the damn thing might not have happened. Finding this potential in my own mind, I can suspect it in others, but I will never know, for no one tells. And this is why, on my own journey which was designed for observation, I stayed as much as possible on secondary roads where there was much to see and hear and smell, and avoided the great wide traffic slashes which promote the self by fostering daydreams.”

(Travels with Charley – In search of America, John Steinbeck, 1962).

பின்குறிப்பு : புத்தகத்தை எங்காவது பார்க்க நேர்ந்தால் உடனே எடுத்து படிக்கவும். பார்க்க நேராவிட்டால் எங்கு பார்க்கக் கூடுமோ அங்கே சென்று நிற்கவும்.

பின்குறிப்பு 2: அதற்காக நான் இதைப் பற்றியெல்லாம் எழுதாமல் விடுவேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

Written by Aravindan

ஏப்ரல் 22, 2014 at 11:54 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

ராஜா – 2013

with 12 comments

ராஜாவிற்கு கீழே நின்று எப்போதும் அவரின் துதிபாடுவோர், ராஜாவின் தலைமேல் ஏறிக்கொண்டு அவரை குறை சொல்வோர், ராஜாவுக்கு இணையாக நின்று அவ்வப்போது தட்டி கொடுப்போர், ராஜாவை பிடிக்காதோர், அதற்கும் மேலே ராஜாவின் ரசிகர்களை பிடிக்காதோர், ராஜாவைப் விரும்பாத யாரையும் விரும்பாதோர் என ராஜா இணையத்தில் இருக்கும் எல்லோரையும் வெவ்வேறு விதமாக தினசரி அளந்துகொண்டிருக்கிறார். இவர்களுக்கு மத்தியிலான இரைச்சலில் பல்கலைக்கழக நூலகத்தில் தேடித்தேடி புத்தகங்களை எடுத்து வந்து அமர்ந்து படித்து அவ்வப்போது நிமிர்ந்து சுற்றிப் பார்த்து சக ராஜா ரசிகர்களிடம் ‘என்னம்மா பாட்டு போட்டுருக்கார்’ என்று புளங்காகிதம் அடைவது அடியேனுடைய தினசரி வழக்கம். அப்படி 2013ல் தேடிக் கண்டிபிடித்த, பிறர் சொல்லிக் கேட்ட, ஏற்கனவே கேட்டிருந்தும் புதிதாக காதல் கொண்ட பாடல்களில் மிகப்பிடித்த பத்து பாடல்களை பட்டியிலிடுகிறேன் என்ற சாக்கில் மறுபடி இங்கு வந்துவிட்டேன்.

இந்தப் பாடல்களை நீங்கள் பிறக்கும் போதே கேட்டுக்கொண்டு பிறந்திருக்கலாம். இந்தப் பதிவை படித்த பிறகும் கேட்காமல் போகலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்பதும் நான் இவைகளை சென்ற வருடம் கண்டறிந்தேன் என்பதுமே உண்மை.

எங்கெங்கோ செல்லும் எண்ணங்கள் (பட்டாக்கத்தி பைரவன்):

மொத்தம் நாற்பத்தி சொச்சம் வார்த்தைகளே – அதற்குள்ளே நீந்தியும் பறந்தும் மடங்கியும் விரிந்தும் விரைகிறது பாடல். பொதுவாக 80களுக்கு முன்னான ராஜாவின் பாடல்களை தூக்கிய ஒற்றைப் புருவத்துடனும் அதனுடனே ஒரு பக்கம் சாய்ந்த முகத்துடனும் அலட்சியப்படுத்திய எனக்கு இதுவே முதல் இன்ப அதிர்ச்சி. கேட்டவுடனே ஊரைக் கூட்டி ஒலிபெருக்கியில் ஒலிக்க விட்டு ஆடத் தோன்றும் என்று சொல்வார்களே, அது போல. (அப்படியெல்லாம் யாரும் சொன்னதேயில்லை). ராஜாவிற்கு முன்னான இசை அங்கங்கே அடையாளமாகத் தெறித்தாலும் கிட்டார், வயலின், ட்ரம்ஸ், புல்லாங்குழல் என அனைத்திலும் ராஜா வந்து ஏற்றிய புது மொழி. குறிப்பாக இரண்டாவது இசையில் வயலின்கள் ராஜாவின் காலம் தொடக்கமும் (ஜெயசுதா மூச்சிரைக்க மாடிப்படிகளில் ஓடி வந்து), அதை முடித்து வைக்கும் காற்புள்ளிகள் போன்ற ஓசைகள் அதற்கு முந்தைய காலம் (ஒரு அரைவட்டம் இடுகிறார்). சரணங்களில் ராஜா கையசத்ததும் ஒருவருக்குப் பின் ஒருவராக எஸ்.பி.பியும் ஜானகியும் தனித்தனி தனிநபர் விமானங்களில் ஜிவ்வென புறப்பட்டு வானில் பறந்தும் புரண்டும் சாகசம் காட்டுகிறார்கள். சிவாஜியும் ஜெயசுதாவும் பொம்மை விமானங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்து தத்தளிக்கிறார்கள்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே (அமைதிப்படை):

எங்கு எப்போது தனிப் புல்லாங்குழல் ஓசையை கேட்க நேர்ந்தாலும் மேகங்களுக்குப் பின் மறைந்தும் வெளிவந்தும் நினைவில் நகரும் நிலவினை பின் தொடரத் துவங்கிவிடுவது வழக்கம். அறுக்க முடியாத அரை நொடிச் சங்கிலி அது. முதல் முறை ஒரு இரவில் இந்தப் பாடலை கேட்ட பொழுது பாடலை துவக்கி வைக்கிற விநோத synth இசை திடுமென காட்டுப் பாதையை திறந்து விட்டது. கூழாங்கற்களை வழிக்கு அடையாளமாக விரல்களுக்கிடையே பாதையில் விட்டபடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எந்த உலகம் திறக்கும் என்ற வியப்பில் நடப்பதும் அங்கங்கே நிலவு தென்படுவதுமாக பல இரவுகள் கழிந்திருக்கின்றன. ராஜாவின் எண்ணம் தெள்ளத்தெளிவாகத் திருத்தங்களின்றி தாளில் எழுதப்பட்டிருக்க ஸ்வர்ணலதா தன் கூர்மையான குரலால் அதன் புள்ளிகளை இன்னமும் அழுத்தமாகக் குறிக்கிறார்.

வெற்றி வெற்றி (கட்டுமரக்காரன்):

ஒரே சொல்லின் வெவ்வேறு அர்த்தங்கள் போல மிக நெருக்கமாகவும் இறுக்கமாகவும் பின்னப்பட்டிருக்கும் சரணம் பல்லவி இசைத் துண்டுகள் என்றிருக்கும் பெரும்பாலான ராஜாவின் பாடல்களுக்கிடையே முற்றிலும் தொடர்பில்லாமல் துவங்குவதே முதலில் ஈர்த்தது. 90களில் ராஜா கண்ட தனி வகை அமைதி பாடலில் நிரம்பித் தளும்பும். சரணத்தின் கடைசி இரண்டு வரிகளில் பாடல் தனக்குள்ளாகவே சிலிர்த்தெழுந்து மயங்கிக் கலைவது மிகப் பிடிக்கும். கூடுதலாக – எஸ்.பி.பி துவக்கி முன்னெடுத்துச் செல்லும் பாடலின் பாதி வரை தென்படாமல் இருந்து விட்டு, கூட்டத்திலிருந்து யாரோ முன்னுக்கு லேசாகத் தள்ளியதைப் போல, ஒரு தபேலாவின் இடறலில் முன்னே வந்து தனக்கே உரிய கதாநாயகி-கொள்ளும்-நாணத்துடன் சித்ரா துவங்குவது இன்னமும் பிடிக்கும்.

சொல்லாயோ வாய் திறந்து (ஜானகி – மோகமுள்):

இது மாலைப் பொழுதில் அமைந்த பாடலாகவே இருக்க வேண்டும் – துவங்கும் புல்லாங்குழல் இசை முடிந்ததும் சில வினாடிகளில் சட்டென இருளத் துவங்குகிற வானத்தைப் போல வயலினில் பரவுகிற விரகத்திற்கு வேறெதுவும் காரணமிருக்க முடியாது. வானிலையை மிகச் சரியாகப் அமைத்த பின் துவங்கும் பாடலில் இருக்கிற இசைச் சங்கதிகளையும் மற்ற சங்கதிகளையும் வைத்துப் பார்த்தால் ஜானகியைத் தவிர வேறாரும் பாடியிருக்க முடியாது, பாடியிருக்கவும் கூடாது. மெட்டுக்குப் மேலே பாவங்களைத் தூவுவதை விட்டு விட்டு பாவங்களுக்கு உள்ளே மெட்டை சரியான அளவில் அனுமதிக்கிறார். மெட்டையே லேசாக உடைத்து வெளிவர முயல்கிற உணர்வுகள். ‘வெள்ளி நிற’ என்ற இடத்தில் வரி மெட்டை சடாரென மலையுச்சியில் முடிந்து விடுகிற சாலையைப் போல கைவிட்டாலும் ஜானகி ஒரு இடத்திலும் கைவிடார். ஒலிப்பதிவுக் கூடத்தில் எப்போதோ ஒரே ஒரு முறை ‘ஏழையை விடலாமோ இது போல வாட’ என்று கேட்டது கேட்கிற ஒவ்வொரு முறையும் தொண்டை முடிச்சில் கனக்கிறது.

சிட்டு சிட்டுக்கு (மௌனம் சம்மதம்):

புருவங்களை கொஞ்சம் கீழிறக்கவும். (ரொம்ப கீழிறக்கினால் மீசையாகி விடுமென பாடலாசிரியர் கபிலன் சொல்லியிருக்கிறார்). தமிழ் திரையிசைத் திருவிழாவிலேயே அரதப்பழசான கதாநாயகி அறிமுகச் சடங்கு என்றாலும் – ராஜாவின் assembly line பாடல்களில் ஒன்று தான் என்றாலும் – வெகு நாட்களுக்குப் பின் தற்செயலாக கேட்ட பொழுது இரு விழிகளை அகலத் திறந்து கவனிக்க வைத்த விஷயம் – சரணத்தின் முதலிரண்டு வரிகளில் அதன் வளைவுகளில் இருக்கிற ஏதோவொரு மர்மம் – மெட்டு, வயலின், bass guitar எல்லாம். திரைப்படத்தின் கதையைப் போல கொலையுதிரும் மர்மம் இல்லாமல் ‘மூக்கின் நுனி மர்மம் சேர்க்கும்’ வகை. அழகில் இருக்கிற கர்வம், அதன் மூலமாக எடுக்க முயல்கிற அதிகாரம் ஆகியவற்றை அடிக்கோடிடுவது போல. ஆனால் அமலாவிற்கோ நடன இயக்குனரோ இக்கருத்தில் ஒப்புதலில்லை. அமலா என்பதால் நான் கொஞ்சம் அதிகமாகவே யோசித்திருக்கலாம். (ராஜா என்பதால் இந்தப் பதிவையே அதிகம் யோசித்திருப்பதைப் போல). மேலும் – பல்லவியை லேசாகக் தலை கோதுவது போல அங்குமிங்கும் திருத்தி சரணத்தில் உபயோகித்தால் எனக்கு எப்போதுமே ’தோ இங்கயே தான் ஒளிஞ்சிருக்கேன்’ என்று கண்ணாமூச்சி விளையாட்டை முடிப்பதால் குழந்தைக்கு கிடைக்கிற அதீத ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியும் கிடைத்துவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக சிவகார்த்திகேயனுக்கு தியேட்டரில் விசில் பறக்கிற வினோதத் திரைத் திருவிழாவில் திருதிருவென விழித்தபடி இருட்டில் அமர்ந்திருந்த எனக்கு மான் கராத்தேவின் பிண்ணனி இசையில் இந்தப் பாடலின் மெட்டை கண்டுகொண்ட பொழுதுகளில் மட்டும் அடைந்த பெருமகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் ஈடு இணை இல்லவேயில்லை.

எண்ணத்தில் ஏதோ சில்லென்றது (கல்லுக்குள் ஈரம்):

அநேகமாக இந்தப் பட்டியலில் மிகப் பிடித்த பாடல். எழுதி மெட்டமைக்கப் பட்டதா மெட்டுக்குப் பின்னர் எழுதப்பட்டதா என்று முதல் வரியிலேயே ஒரு சவால் – மெட்டின் அர்த்தமும் வார்த்தைகளின் இசையும் ஒன்றுடன் ஒன்று சாலப் பொருத்தம். எண்ணத்தில் நண்டுகள் குறுகுறுவென ஊர்வதாக தொடங்கும் இசை; வயலின்கள் இட்டு நிரப்பிய அணை சட்டென உடைந்து தாரைத் தாரையாக இசை வெளியேறும் இரண்டாம் இடையிசை. (நண்டுகள் ஊர்ந்தால் சில்லென இருக்குமா என்று அனுபவமில்லை). தேங்கித் தேங்கி நகரும் மெட்டின் ஒவ்வொரு வார்த்தையிலும் கூச்சம் நாணம் காதல் நம்பிக்கை என ஒவ்வொன்றையும் அரை நிலவாக தேங்கவிடுகிறார் ஜானகி. பாரதிராஜா திரையில் வடிக்க முயன்ற கிராமத்து பெண்கள் எல்லாம் ஜானகி வந்து நின்ற ஒலிக்கூடங்களில் மட்டுமே நிஜத்தில் சிரித்தும் அழுதும் சூரியகாந்திப் பூக்களுக்கு நடுவே ஓடித் திரிந்திருக்கிறார்கள். வெட்கம் பயம் சிரிப்பு அழுகை இனமும் இடமும் புரியாத வலி எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் ஒன்றாகப் பொங்க வைத்தது போலிருக்கும் பாரதிராஜா-நாயகிகளின் முகங்களுக்கு மத்தியில் அருணா கொஞ்சம் ஆச்சரியமான மாறுதலாகவே இருக்கிறார்.

கானம் தென்காற்றோடு (கண்ணுக்கொரு வண்ணக்கிளி):

தேடிக் கண்டெடுக்கும் பாடல்களில் ராஜாவே பாடி ராஜாவே கண்மூடி ரசித்துக் கேட்கும் படத்துடன் ஒரு பாடலை இருக்கப் பெற்றால் இயற்பியல் கூடங்களில் கண்ணாடிச் சட்டத்தை உடைக்க துடிக்கும் வோல்ட்மீட்டரின் கைகாட்டிகள் போல மனம் படபடக்குமா படபடக்காதா? பெயரெல்லாம் சரி, இந்தப் படத்தை யாரும் கண்டு கொண்டாரில்லை. காதலை தொலைபேசியில் தூதுவிடுகிற பாடல் – நினைவில் மது, என் கனவில் மது, ஹலோ ஹலோ.. மது..எனக் குழையும் ராஜா – யார் அந்த மது? (கதாநாயகியின் பெயராக இருக்காது. எந்தப் பாடலாசிரியர் நாயகியை அவரின் சொந்தப் பெயர் சொல்லி அழைக்கிறார்?). தொலைபேசி இணைப்பு கிடைத்ததும் படபடவென காதலைச் சொல்லி விட்டு பின்னர் உணர்வின் ஆழம் கண்டது போல சரணங்களில் நடை தளர்ந்தும் நின்றும் அமர்ந்தும் வளரும் விதம் சுவாரசியம். சிறுவயதிலிருந்தே விளம்பரங்களின் கடைசியில் தொக்கி நிற்கும் கேள்வியை வெச்சவனே செய்து வரும் நீங்கள், ராஜாவைப் போல இந்தப் பாடலை கண் மூடி ரசித்துக் கேட்கலாமே?

அன்பே வா அருகிலே (ஜேசுதாஸ் – கிளி பேச்சு கேட்க வா):

கதைக்குப் பின்புலமான ஆவி, அதனுடன் காதல், ஆவிக்கும் நாயகிக்கும் அந்த எரிச்சலூட்டும் பிண்ணனி குரல் என்பதையெல்லாம் தாண்டி வெகு நாட்களுக்குப் பின்னர் கேட்ட பொழுது அவை எல்லாம் மறந்து வெறும் இந்தப் பாடலலிருந்தே அந்த அமானுஷ்யதையும் ஜேசுதாஸின் குரலில் அமிழும் துக்கத்தையும் கண்டெடுக்க முடிந்தது. bone-chillingly melancholic என்று Baradwaj Rangan ஒரு முறை சொன்னதைப் போல. (நான் பாடும் மௌன ராகம் பாடலை குறிப்பிடுகையில்). ஊஞ்சலெனக் காற்றில் கிழியும் வயலின்கள், அதிர அதிர அடிக்கும் பின்புல இசை என பாடலின் துல்லியமான உணர்வுகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி – வாய் வார்த்தையாகச் சொல்லிக் கேட்ட ஒரு கதைக்கு இந்தப் பாடலை வேகமாக இசையமைத்துவிட்டதையும் அதை ஒரு நாள் அவசரமாக வந்து பாடிக் கொடுத்துச் சென்று விட்டதையும் எண்ணி எண்ணி அடையும் வியப்பில் கரைந்தே விடுகிறது.

பூ பூ பூ (புது நெல்லு புது நாத்து):

இந்தப் பாடலை எப்படி இத்தனை நாள் அறியாமலிருந்தேன் என்ற அதிர்ச்சியில் மீண்டும் ஒரு முறை எழுந்து நின்று நாலாப்பக்கமும் திரும்பிப் பார்க்கிறேன். (சுற்றி யாருமேயில்லை). துவக்கம் முதல் இறுதி வரை பாடல் ஒரு நொடி கூட அயராமல் தனக்குள்ளே எடுக்கிற வேகமும் கொடுக்கிற பரவசமும் – சென்று வருடம் வேறெந்த கண்டுபிடிப்பும் நாலைந்து ஏணி வைத்து ஏறினாலும் எட்டித் தர இயலவில்லை என்பதை உயரத்தில் இருந்து சொல்லிக் கொள்கிறேன். பூ பூ பூ என ஒன்று போல் துவங்குகிற பல்லவின் ஒவ்வொரு வரியும் ஒரே இடத்தில் இருந்து விடப்பட்ட வாணங்கள் போல வெவ்வேறு உயரத்தையும் வெவ்வெறு தூரத்தையும் வெவ்வேறு வண்ணத்தையும் அடைந்து முடியும் விதம் – 80களின் திரைப்பாடல் வரிகளில் எழுதும் பாணியில் சொன்னால் – ராஜ வேடிக்கை! பூ பூ பூ புல்லாங்குழல் என்று பாடலிலேயே சொல்லிவிடுவது போல புல்லாங்குழலில் பாடல் பட்டாம்பூச்சியாக துவங்கி எழுந்துப் பறந்தும் நீரென ஓடியும் பட்டெமென பறக்கிறது. பல்லவிக்கே பத்தி முடிந்த விட்ட நிலையில் சரணங்களை ரயிலேற்றி தடதடவைக்கிறார். (கலகலத்து ஓடுது காதல் அலை). பொருத்தமாக வந்த அமர்கிற வார்த்தைகளுடன் மேலே மேலே நேர்க்கோட்டில் ஏறிக்கொண்டே செல்கிற பாடல் ’முழுவதும் கீதமென ’ என்கையில் மட்டும் லேசாகச் சரியும் பொழுது பெரும் மயக்கம். சுருக்கமாக @mayilSK சொல்வதைப் போலச் சொன்னால் – பட்டாசு.

வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு (புயல் பாடும் பாட்டு):

மிருதங்கமும் ஜதிகளுமாக வண்டியைக் கிளப்பும் பரதநாட்டிய பெண்ணை உள்ளே துரத்திவிட்டு bass guitarஐ முறுக்கிக்கொண்டே அடிக்கிற u-turn, இந்தப் பட்டியலில் இருக்கும் பாடல்களுக்கு மத்தியிலே சிறப்பான தொடக்கம். 90களில் ஏதோவொரு பட்ஜெட் தயாரிப்பாளரின் கல்லூரித் திருவிழா தான் என்றாலும் ராஜா அமர்க்களமாக மேடை போடுகிறார். மலேசியா வாசுதேவன் ஒவ்வொரு முறை ‘வேல்’ என்கிற தனி வார்த்தையை வீசுகையிலும் நீர்பரப்பை இரண்டு முறை தொட்டுப் பறக்கும் கல்லைப் போல அந்த வார்த்தைக்குள்ளேயே எதையோ styleஆகத் தாண்டுகிறார். என்னவெனப் புரியாவிட்டாலும் கூடவெ மனமும் தாண்டுகிறது. லண்டனில் இருந்தபடி தேடித் தேடி இசைத் தட்டு விற்கும் புண்ணியவான் மூலம் கண்டெறிந்ததால் அவனுக்குத் தான் மொட்டை அடிக்கணும். காரில் செல்கையில் எப்போது இந்தப் பாடல் தலைகாட்டினாலும் பாடலோடு சேர்ந்துகொண்டு வரிசையாக கார்களை முன்னேறிக் கொண்டு சென்று விட்டு பாடல் சடாரென சட்டையை முழங்கைக்கு மேலே மடக்கிக்கொண்டு ’மச்சி உன் தங்கச்சி’ என எகிறும் போது என்ன செய்வதென காருக்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை.

கொசுறு – பட்டியலில் இடம்பெற முயன்ற மற்ற சில பாடல்கள் – சக ரசிகரான இசையமைப்பாளர் மரகதமணி ஆற்றைப் போல ஓடும் என்று அழகாகவும் மிகச் சரியாகவும் வர்ணித்த ‘பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்’ (நினைவே ஒரு சங்கீதம்); மகிழ்ச்சியை முழுக்க முழுக்க அறுவடை செய்கிற ‘காட்டுல தலையாட்டுற சிறு ஆவரம் பூவே (சொல்ல மறந்த கதை –  பாடல் அறிமுகம் – நன்றி @equanimus); நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு காதல் பாடலும் காதலர்களின் பாடலில் நகைச்சுவையும் ‘கடலோரக் கவிதையே’ (சின்னவர்); பிரிந்திருக்கும் அப்பா-மகள், காசைத் தேடி விரையும் கோமாளிகள், வில்லனிகளின் கூடாம் என பாடலில் நம்மை கடத்திச் செல்லும் தாயறியாத- அரங்கேற்ற வேளை), ஒரு சிறுகதையை எழுத வைத்த ‘என்ன மறந்தாலும்’ (காதல் சாதி), மற்றுமொரு கடிதம், மற்றுமொரு சோகம் (சின்னச் சின்ன – ராஜகுமாரன்).

Written by Aravindan

ஏப்ரல் 22, 2014 at 4:08 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

பயணிகளின் கவனத்திற்கு

with 10 comments

முன்னறிவிப்புகள் ஏதுமின்றி திடீரென்று வரிசையாக வெள்ளிக்கிழமைகளின் மாலைகளில் விமானப் பயணங்கள் அமைந்து விட்டிருந்தன. காலையில் கண் விழித்துக் குளித்து முடித்து அவசரமாக அலமாரியில் முன்னும் பின்னுமாக தேடும் கையில் கிடைக்கும் சட்டை போல ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு நிறம், விதம். அழுத்தமான சிறுகதையை ஒவ்வொரு வாரமும் தனியே தேடிச் செல்வதைப் போல. மிகச்சிறிய வட்டத்தினுள் இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் தொடர்ச்சியாக சந்திக்க நேர்ந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை இலக்கில்லாத உரையாடல்களினால் எங்களது வார இறுதியின் நேரங்களை ஒன்றாக நிரப்பிக்கொண்டிருந்தோம். ஒரு திருமணமோ, பிரிவோ, தோல்வியோ, மரணமோ, மாற்றமோ – வரிசையான நிகழ்வுகளின் மூலம் எல்லோருமாக அடுத்த கட்டத்திற்கு ஒரே சமயத்தில் நகர்கிறோம் – ஒரு இருக்கை காலியானதும் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அனைவரும் எழுந்து மற்றொரு இருக்கை நகர்ந்து அமர்ந்து காத்திருப்பதைப் போல. வெள்ளிக்கிழமைகளில் ததும்பும் உற்சாகத்தை பத்திரமாகவும் அவசரமாகவும் உள்ளங்கைகளில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு என்ன செய்வது என்று விழிப்பதே எனக்குப் பழகியிருந்தது. இந்த மாற்றத்தினுள் அடங்காத என் வெள்ளிக்கிழமைகளை வியாழன் இரவுகளிலேயே பெட்டியினுள் பெரும் பிரயத்தனத்துடன் திணிக்கத் துவங்கியிருந்தேன். புதன்கிழமைகளிலேயே சலவை. கழுவாமல் மாலை அவசரமாக எறியப்படும் மதிவு உணவுப் பாத்திரத்தை திங்கட்கிழமை காலை திறக்க பயந்து வெள்ளிக்கிழமை மதிய உணவு உணவகங்களில். எந்த தாமதத்தையும் அனுமதிக்கக் கூடாதென சீக்கிரமே எழுந்து வீட்டைவிட்டு வெளியேறி வெட்ட வெட்ட எழத்துடிக்கும் அலுவலை எதிர்கொள்ளுதல். பொதுவாக மூன்று மணியிலிருந்தே இருப்பு கொள்ளாமல் தவிப்பது. தவறியும் ஏதும் அலுவலக சந்திப்பிற்கு வார்த்தையையும் தலையையும் தராமல் இருப்பது. வார்த்தைகளை எடுத்து கொடுத்தும் முடிக்க உதவியும் விரைவாக உரையாடல்களை கடக்க நினைப்பது. விமானம் புறப்படும் நேரம், நிலையம் சென்று அடையும் பயண நேரம், அதற்கு டாக்ஸி, அதற்கு முன்பாக அத்தனை அலுவலக சந்திப்புகளையும் மாற்றுதல், போகும் வழியில் மழை, அல்லது பனி, சில நாட்களில் எதற்கெனத் தெரியாமல் வெயில்.

இத்தனை பரபரப்புடன் நிலையத்தை அடைந்து இன்னும் இன்னும் ஏராளமானோருடன் கூட்டத்தில் சேர்கையில் என்னுடைய அவசரம் மட்டும் லேசாக துருத்திக்கொண்டிருக்கிறது. நீல நிறச் சுவரில் ஓரிடத்தில் மட்டும் இரண்டு முறை இழுத்ததால் சற்றே அடர்ந்த நீலம் போல. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில் பயணித்து பழகிய மக்களின் இடையே என்னுடைய பெட்டியின் கால் சக்கரங்களின் அவசரம், காலணிகளை பாதுகாப்புச் சோதைனைகளுக்குக் கழற்றி பின் மாற்றும் தீவிரம், விமான அறிவிப்புகளை எதிர்நோக்குதல், தாமதத்தை எதிர்கொள்ளுதல் என அனைத்தும் தனித்து தெரிகிறது. நேரே நிமிர்ந்து அனைவரும் விமானத்தில் ஏற வரிசையாக நிற்கையில் நான் மட்டும் தலையை சாய்த்து முன்னே பார்ப்பது போல. தாமதங்கள், வானிலை, பயணத்தின் மறுமுனையில் காத்திருக்கும் காதல், வரவிருக்கும் திங்கட்கிழமை என்பதைச் சுற்றிய சம்பிரதாய உரையாடல்களின் ஊடே மிதமான அவசரத்துடன் அனைவரும் கடந்து செல்கின்றனர். நான் மட்டும் கொஞ்சம் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கிறேன் – நிச்சயமாக அந்தப் பக்கம் எனக்காக காத்திருப்பது காதலியே என்று சில முதியவர்கள் அடிக்கோடிடுவதோ, சிறிய குடும்பத்தினர் ஒன்றாக என்னைப் பார்த்து பளீரென்று புன்னகைப்பதோ. விடுமுறை பயணங்களுக்கென எப்போதேனும் விமானத்தில் பிரமிப்புடனும் கவனத்துடனும் பயணம் செய்து பழகியிருந்த எனக்கு அந்த மூன்று மாதங்களில் வரிசையாக பயணங்கள் மேற்கொள்ளத் துவங்கி மெல்ல மெல்ல ஊஞ்சலின் வேகத்தை மற்றவர்களின் வேகத்திற்கு இணையாக குறைப்பதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சம் முன்சென்றும் பின்தங்கியும் அலைகிறேன். பயணத்திற்கான காரணம் மட்டும் ஒரு ரகசியம் போல மனதில் படபடவென துடிக்க சரியான இடத்தில் சரியான அளவில் பாவனைகள் புன்னகைகள் உரையாடல்கள் என பயில்கிறேன். கூட்டங்களில் தனித்திருப்பதை எப்போதும் நாடிக்கொண்டிருப்பவனுக்கு மற்றுமொரு அபாரமான வழி.

ஒரு நாள் விமானம் தாமதமானதாக அறிவிப்பு. அலைபேசி இன்னும் சில நிமிடங்களில் அணைந்துவிடக்கூடும். மின் இணைப்புடன் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. எல்லோரும் கன்னத்தில் ஒரு கையும் அலைபேசியில் ஒரு கையும் கவிழ்ந்த தலையுமாக அமர்ந்திருக்கிறார்கள். சிலர் தலை குப்புற தூங்குகிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பப் போகும் விமானங்களின் தளங்கள் வரிசையாக இருக்க, எங்கும் மக்கள் மக்கள். அவர்களை விட்டு விலகி நடக்க நடக்க பின்னரவில் கிளம்பும் விமானங்களின் தளங்கள் மிகச் சொற்ப மக்களுடன் இன்னும் பரபரப்பு தொற்றிக்கொள்ளாமல் திறந்திருக்கின்றன. மின் இணைப்புடன் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை ஒன்றில் ஓரமாக ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கிறாள். அதனுடனான மேஜையில் கவிழ்த்து வைக்கப்பட்ட அவளின் அலைபேசி. என்னுடைய அலைபேசியையும் இணைத்து விட்டு மேஜையில் அதை தலைகுப்புற கிடத்தி விட்டு இருக்கையின் இந்தக் கோடியில் அமர்கிறேன். இருவருக்கும் இருக்கும் அலுப்பு எந்த வார்தையினாலும் தாண்டி விடமுடியாதபடி எங்களுக்கிடையே இருக்கும் இருக்கையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் பொது பாவனைகளை கடந்து அந்த அலுப்பில் அவளுடன் இணைந்ததைப் போல உணர்கிறேன். அவ்வப்போது ஒரு யோசனை மங்கிவிடாமல் தூண்ட வேண்டி ஒரு மிடறு தேநீரை அருந்துகிறாள். எங்களுக்கு எதிரே விமான ஓடுதளம் மெல்ல ஊர்ந்து அரை வட்டம் இட்டுத் திரும்பி வேகம் பிடித்து ஓடுகிறது. வரிசையாக ஒன்றன்பின் விமானங்கள் காத்திருக்கின்றன. பலமாக மழை. அலைபேசி அமைதியாக அதிர்ந்து திரும்பும் ஒலி கேட்டு குனிந்து என்னுடைய அலைபேசியை பார்த்தவன், என்னுடையதல்ல என்பதை உணர்ந்து சட்டென திரும்பி அவளுடைய அலைபேசியை பார்க்கிறேன். பார்த்திருக்கக் கூடாதென்று உணர்ந்து அதை சரிபடுத்தி விடலாம் என்பதைப் போல எதிர்பக்கம் முழுதாக தலையை திருப்பிக்கொள்கிறேன். விடாமல் சொட்டும் மழைத்துளி போல அவளுடைய அலைபேசி சரியான இடைவேளைகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. அவள் அதை திருப்பி எடுத்து பார்ப்பதாகத் தெரியவில்லை. பள்ளி மாணவர்கள் வரிசையில் காத்திருந்து நீளம் தாண்டுவது போல எதிரே விமானங்கள் சத்தமின்றி ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து எழுந்து பறக்கின்றன. ஒவ்வொன்றின் சிறிய ஜன்னல்களிலும் யாரோ. அவர்களின் வெள்ளிக்கிழமை மாலைகள். திரும்பும் திங்கட்கிழமையின் காலைகள். அவ்வப்போது என்னுடைய அலைபேசியும் மேஜையில் அதிர்கிறது. அதிரும் பொழுது அதைச் சுற்றி மெல்லிய செவ்வகமாக ஒளி. அவளைப் போல நானும் அதை புறக்கணிக்கிறேன். சில நேரத்திற்கு தகவல்களும் மழையும் தரையிறங்க விமானங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நீண்ட பயணங்களில் முதல் விமானம் எப்போதும் கொஞ்சம் அலுப்பிலும் களைப்பிலுமே கழிந்துவிடுகிறது. மீண்டும் காத்திருந்து இரண்டாவது விமானத்தில் புறப்பட்ட பின்னரே உண்மையில் அந்த வாரத்திற்கும் வார இறுதிக்கும் இடையேயான காலத்திலும் வெளியிலும் பயணிக்க முடிகிறது. விமானம் தரையை விட்டெழும் நொடியில் உண்மையில் உடலும் மனதும் லேசாவதை உணர முடிகிறது. அதற்கு ஏதுவாக விமானத்தின் உள்ளே மட்டுப்படுத்தப்பட்ட ஒளி. இன்னும் கனிவான புன்னகைகள். ரகசியமாக புத்தகங்கள். முழுமையான தூக்கம். வழக்கம் போல நான் ஜன்னலுக்கு அருகே அமர்ந்து அரை நிலவின் வெளிச்சத்தில் நதிகளையும் ஏரிகளையும் வெறும் காடுகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உடனே எழுத வேண்டும் போலத் தோன்றுகிறது. அத்தனை உயரத்தில் அத்தனை ஆழத்தில் எந்தக் காட்சியையும் எந்த நினைவையும் அதற்கு வெளியே இருந்து கவனித்து எழுதி விட முடியும் என்பதைப் போல. எனக்குப் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் வைன் அருந்துகிறார். அவருக்கே முன்னே அமர்ந்திருக்கும் அவரின் துணை அவ்வப்போது ஏதேனும் திரும்பி சன்னமாக கேட்கிறாள். ஒரு கட்டத்தில் ஏதும் சொல்லாமல் திடீரென அவளின் வலது கை தலைக்கு மேலே இருக்கையை தாண்டி நீள, ஒரு நொடி தாமதிக்காமல் இவர் அதை தன் கையில் எடுத்து அலுப்புக்கு இதமாக அழுத்தத் துவங்குகிறார். பின் கையை இறுகப் பற்றுகிறார். கைகளை விலகிக் கொள்ளும் போது சில நொடிகளுக்கு முத்தத்தை விட மிக மெல்லிய ஸ்பரிசம். அவர்களின் காதலை தனித்து விடுவது போல ஏனோ என் தலைக்கு மேல் இருக்கும் விளக்கை அணைத்து விடுகிறேன். விமானம் எங்கோ ஒரு இடத்தில் மழைக்கு அருகே நெருங்குகிறது. தொலைவில் தொடர்ச்சியாக மின்னல்கள். கிளை போல் பிரிந்து படராமல் மேகங்களுக்கு மேலே வானில் வெறும் வெளிச்சமாக ஒரு குறைந்த ஒளி தரும் விளக்கைப் போல எரிந்து அணைகிறது. பளீரென வெள்ளையாக இல்லாமல் லேசாக செந்நிறம். ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்குமாக, எதற்குப் பின்னோ மறைந்துகொண்டு பூடகமாக. அடுத்து எப்பொழுது எங்கே ஒளிரும் என்று தெரியாமல் பார்த்தபடி இருக்கையில் அவரும் ஜன்னலின் வழியே பார்க்கத் துவங்குவதை உணர்கிறேன். நான் கொஞ்சம் பின்னகர்ந்து அவரின் பார்வைக்கு வழி விடுகிறேன். விசித்திரமான திரைக் காட்சி போல விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல்கள். ஒரே ஒரு இடத்தில் அவர் அதை ரசித்து ஒற்றை வார்த்தையில் ஏதோ சொல்ல அவரைப் பார்த்து புன்னகைக்கிறேன். என்ன வார்தையை சொன்னார் என்பது தேவைப்படவில்லை. தரையிறங்கும் வரை பேசிக்கொள்ளாமல் இருவரும் மின்னல்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சில மாதங்களுக்குப் பிறகு அனைத்து வெள்ளிக்கிழமை பயணங்களும் பனிக்காலமும் முடிந்த பிறகு அடர்ந்த மரம் ஒன்றின் கீழே கண்ணுக்குத் தெரியாத விழுதுகளின் அடியில் ஒரு துளி தீப்பிடித்தது போல அங்குமிங்குமாக மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம். தரையிலிருந்து ஒரே உயரத்தில் ஏராளமாக சிதறியிருந்தன. மாடியிலிருந்து பார்க்கும் தூரத்தில் என்னவென்று புலப்படவில்லை. மாலை மங்க மங்க வெளிச்சம் பிரகாசமாகத் துவங்கியிருந்தது. இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று அறை நண்பனிடம் சொல்லிவிட்டு கீழே சென்று மரத்திற்கு அடியில் கொஞ்சம் யோசனையுடன் நடக்கிறேன். எதையேனும் அறுத்து மின்மினிப் பூச்சிகள் கொட்டிவிடுமோ என்பதைப் போல. நெருங்கிப் பார்த்ததும் தரையில் வளர்ந்திருக்கும் புற்களின் நுனியில் வீற்றிருக்கின்றன பூச்சிகள் என்றறிகிறேன். ரகசியம் அறிந்த நிம்மதியுடன் வீடு திரும்பி மாடியிருலிருந்து இன்னும் ஒரே ஒரு முறை மின்மினிப்பூச்சிகளை கூர்ந்து கவனிக்க அவை மேஜையில் ஒளிர்ந்து அதிர்ந்த தகவல்களையும் தூரத்தில் கண்ட மின்னல்களையும் நினைவிலிருந்து எடுத்து கண்ணுக்கு தெரியாத இணைப்பில் ஒரு நொடியில் இணைக்கிறது.

[..]

தோன்றிய எண்ணத்தை தோன்றிய கணத்தில் ஏதேனுமொரு குளத்தில் எறிந்து சலனத்தை ஏற்படுத்த விழையும் பழக்கத்தை விட முயற்சிக்கிறேன். சில சமயங்களில் அலைபேசியை எடுத்த பின்பு ஒரு கணம் யோசித்து அதை மீண்டும் கீழே வைக்கிறேன். சில சமயங்களில் சமூக தளங்களில் அல்லது அரட்டைப் பெட்டியில் எழுதிய பின் அழிக்கிறேன். எறியாத கற்கள் ஒவ்வொன்றும் எனக்குள்ளே உள்ளே மெதுவாக எரிகல்லைப் போல விழுவதை பார்க்கவும் உணரவும் மிகப்பிடிக்கிறது. நால்வர் இருக்கும் அரட்டைக் குழுவில் அன்று கை மீறி கோபத்தில் சில கற்கள் விழுந்து விட்டன. எறிந்த கையுடன் அலைபேசியை அணைக்குமாறு விமானத்தின் அறிவிப்பைக் கேட்டு அலைபேசியை அணைத்தும் ஆயிற்று. அடுத்த நொடியில் ஜன்னலில் முழு மாலை நிலா உதிப்பதை காண்கிறேன். அத்தனை தொடர்புகளையும் உலகோடு கீழே விட்டு விமானம் மேகங்களுக்கு அப்பால் விரைகிறது. அசையாத கடலுக்கடியே கிடக்கும் உலகினுள் முழுக முடியாமல் திடுமென ததும்பி மேலேறியது போல நிலா. வெவ்வேறு வானங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கியது போல அடர் நீலம் அதற்கு மேல் இளஞ்சிவப்பு அதற்கு மேல் வெளிர் நீலமுமாய் வானமும் அதனூடே நகரும் நிலவும். ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுப்பதுடன் அதை புறக்கணிக்க முயல்கிறேன். இன்னமும் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதது, கோபம் வெளிக்கொண்டு வந்துவிடுகிற நெருக்கமும் அதன் இருப்பை உணர்ந்து ஏதோ அச்சமும் எல்லாமுமாக குழப்பமும். எதிர்புறத்தில் எல்லோரும் ஜன்னலை இழுத்து மூடியிருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரமும் விடாமல் உடன் வரப்போகிற நிலா கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை ஈர்க்கிறது. எதனுடனும் தொடர்பில்லாமல் கையில் அலைபேசி லேசாக இருக்கிறது. கண்கள் அதுவரை அறிந்த அளவுகளில் பொருந்தாமல் கீழே கட்டிடங்கள், வயல்கள், ஏரிகள். ஒரு கல்லை எறிந்தால் கீழே சென்றடைய வெகு நேரமாகும். தொடர்ச்சியான பயணங்களில் ஒவ்வொரு முறை அந்த உயரத்தை அடைந்ததும் உணர்கிற ஆழத்தை மற்ற நாட்களிலும் அடைய முயன்று கொண்டிருக்கிறேன் – இணையமில்லாமல் இரு வாரங்கள், அலைபேசியில்லாமல் ஒரு நடை, புத்தகங்களுடன் மட்டுமே ஒரு வார இறுதி. அந்த கணங்களின் துல்லியத்தை இந்த விமானப் பயணங்களிலேயே கண்டறிந்து பெற்றதை உணர்கிறேன். அதற்குப் பின் நிலவு மிக எளிதாக என்னை ஆட்கொள்கிறது.

இருபது நிமிடங்களில் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு. எல்லோரும் அசைய முடியுமா என்று பரிசோதிப்பது போல ஒரு முறை அசைந்து அடங்குகிறார்கள். விமானம் அது வரை பயணித்த திசைக்கு நேரெதிரே மெல்லத் திரும்பியபடி கீழிறங்குகிறது. ஜன்னலை விட்டு கரை ஒதுங்கும் நிலவை தலை திருப்பி பார்த்திருக்கையில் ஒரு நொடி வெறுமைக்குப் பின் மிகப் பிரகாசமாக சூரிய அஸ்தமனம். சில நொடிகளுக்கு ஏதும் புரியவில்லை. விமானம் நேராகி கீழிறங்க இறங்க காட்சி தெளிவாகிறது. வீட்டிலே மாடியிலிருந்து கட்டிடங்களுக்கு அப்பால் காண முயன்ற சூரிய அஸ்தமனத்திற்கும் முழு நிலவிற்கும் இடையே அது வரையில் ஒரு நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறேன் என்பது அடங்காத ஆச்சரியமாக விழிகளில் விரிகிறது. அத்தனை உயரம், அந்த திசைகள், அந்த உதயமும் அஸ்தமனமும் அதன் பின்னான எளிய உண்மையும் தரையிறங்கும் வரை மூச்சை கொஞ்சம் நிறுத்தியே வைக்கிறது. அலைபேசியை மீண்டும் உயிர்பித்து அந்த பிரமிப்பை கல்லெறிய நினைத்து உடனே கைவிடுகிறேன். அரட்டைக் குழுவில் ஏராளமான குறுந்தகவல்கள் – அங்கும் வானிலை சட்டென மாறியிருக்கிறது. அங்கும் இந்த பிரமிப்பை கல்லெறியாமல் ஒரு வருடத்திற்குப் பின்னர் இங்கே இந்த குளத்தில் எறிகிறேன்.

[..]

மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக குடி புகுந்த பொழுது நினைத்தால் இரண்டு மணி நேரத்தில் காரிலோ பேருந்திலோ நியுயார்க்கை வார இறுதிகளில் அடைய முடிந்தது. அடைந்ததும் ஒவ்வொரு முறையும் கால்கள் கொள்ளும் உற்சாகத்தை உணர வேண்டியே மீண்டும் மீண்டும் பயணித்திருக்கிறேன். தனியே ஊர்சுற்றுதல், நண்பர்களை சந்தித்தல், அந்நியர்களை சந்தித்தல் என நியுயார்க்குடன் நெருங்கிப் பழகியிருந்தும் கணங்களையும் காலத்தையும் உற்று கவனிப்பவனுக்கு மூன்று வருடங்களில் மூன்று சந்திப்புகள் மட்டும் அழுத்தந்திருத்தமாக மனதில் பதிந்திருக்கிறது. மூன்று சந்திப்புகளிலும் நீண்ட இரவுகள், நடந்தே கடந்த சாலைகள், இசையும் புகையும் கசியும் விடுதிகள், அதிகாலையைத் தொடத் தொட உரையாடல்களில் ஏற்படும் நீண்ட மௌனங்கள், மழுங்கும் வார்தைகளின் முனைகள், கண்களில் ஏராளமான தூக்கம் என கழிந்தன. முதல் சந்திப்பில் நாங்கள் மூவரும் அறிமுகமாகி அதன் பின்னர் வெறும் மின்னஞ்சல்களில் குறுந்தகவல்களில் மின்னரட்டைகளில் மிகவும் நெருங்கியிருந்தோம். நேரில் சந்திக்காமலே இரவெல்லாம் நீளும் அரட்டையில் பயங்கள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் என மிக எளிதாக ஒவ்வொருவரின் அந்தரங்கத்தினுள் நிழல்களாக அனுமதிக்கப்பட்டோம். விருப்பம் போல நடந்து செல்லும் மலைப்பாதைகளில் சில சமயங்களில் பாதி தூரம் வந்தபிறகு வந்த பாதையை கவனிப்பது போல மூவரும் அவ்விடத்தை அடைந்து விட்டிருந்தோம். வெகு அரிதாக தொலைபேசியில் உரையாடி விரல்களில் விரைவாக வளரும் வார்த்தைகளால் மட்டுமே கொண்டு நட்பு பலமாகியிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நியுயார்க்கில் சந்தித்த பொழுது இரண்டாம் முறை நேரில் சந்திக்கும் நண்பர்களும் ஒன்றரை வருடத்தில் அடைந்த நெருக்கமும் ஒன்றில் ஒன்று அடங்காமலும் ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொள்ளாமல் வேடிக்கையாக சங்கோஜப்பட்டோம். மிகத் துல்லியமாக உணர்ந்த கணம் அது – மூவரும் அத்தனை நேரம் நீருக்குள்ளே அமிழ்ந்தபடி மங்கலான ஒளியிலும் அலையிலும் வினோதமாகக் கலையும் ஒவ்வொருவரின் பிம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென நீருக்கு மேலே தலையை தூக்கிச் சிலுப்பிக்கொண்டு பிடித்திருந்த மூச்சை பலமாக விட்டு ஒருவரை ஒருவர் பார்ப்பது போல. சம்பிரதாயமான உரையாடல்களின் ஊடே கண்களைப் பார்த்தோ குரல்களை செருமிக்கொண்டோ ஒரு கேலியாகக் கூடவோ அந்த நெருக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கொண்டாட்டத்திற்காக சேர்ந்திருந்தால் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கலாம் – இன்னமும் குழப்பங்களுடனும் கவலைகளுடனுமே இருக்கிற மூவரும் நெருக்கத்தை வெளிப்படுத்திக்கொள்வது இன்னும் அவசியமாகவும் இன்னும் கடினமாகவும் இருந்தது. நியுயார்க் நகரின் பிரமாண்ட இருப்பே எங்களின் கவனங்களை கொஞ்சம் கலைத்தது. அதன் பெரும் கட்டிடங்களை ஆயிரமாயிரம் விளக்குகளை அண்ணாந்து பார்த்தபடி நீரில் விழுந்து அசையும் அதன் பிம்பங்களை அவ்வப்போது கவனிப்பது போல அந்த நெருக்கத்தை அவ்வப்போது கவனிப்பதோடு விட்டுவைத்தோம். மீண்டும் ஒரு நீண்ட இரவுக்குப் பின் அதிகாலை தூங்கச் சென்று மதியம் எழுந்து நியுயார்க்கை விட்டு ஒவ்வொருவராகக் கிளம்பத் துவங்கினோம்.

மூன்றாவது சந்திப்பு எனக்கும் நகரத்திற்கும் மட்டுமானது. பணி நிமித்தமாக இடம் மாறுவதால் அதுவே நியுயார்க்குடன் கடைசி சந்திப்பாக இருக்கலாம். அதிகாலையில் இந்தியாவிலிருந்து வரும் விமானத்திற்காக காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் வார நாளில் ஆள் அரவமில்லாத நியுயார்க்கில் தனியாக சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். அந்த இரண்டு சந்திப்புகளில் சென்ற இடங்களை தனியே நடந்து கடக்கும் பொழுது அந்த சந்திப்புகளின் நினைவுகளை ஆழமாக பதித்துக்கொள்ளவே வந்தது போல நின்றும் அமர்ந்தும் நடந்தும் நேரத்தை கடந்தேன். ஒரே ஒரு புத்தகம் எழுத நேர்ந்தால், ஒரே ஒன்று மட்டும் எனில், அது நிச்சயம் இதைப் பற்றி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் ஒரு முறை விமானத்தில் நியுயார்க்கை கடந்து செல்லுதல் மிக மிக அவசியம்.

[..]

பின்குறிப்பு #1 – பதிவின் இடையே படத்தை வைக்க ஏனோ விருப்பமில்லை. விமானத்திலிருந்து எடுத்த படம் இங்கே.

பின்குறிப்பு #2 – இந்தப் பதிவு லாஹிரியின் இந்தப் புத்தகத்திற்கும், ராஜாவின் இந்தப் பாடலுக்கும்.

Written by Aravindan

ஏப்ரல் 13, 2014 at 10:55 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

என்னமோ ஏதோ

with 7 comments

ஓராயிரம் பிரச்சினைகள் விடாமல் அலாரமடிக்க கண் விழித்து அவசர அவசரமாக ஆர்வமேயில்லாமல் தயாராகி கூச்சமேயில்லாமல் கொட்டோ கொட்டென கொட்டிக்கிடக்கும் இலைகளுக்குள்ளே கால்கள் புதைய புதைய நடந்தோ ஓடியோ டாக்ஸி பிடித்தோ கார் ஓட்டிச்சென்றோ மெட்ரோ ஸ்டேஷனை அடைந்து ரயிலேறும் எங்களை (ரயில் கொஞ்சம் பெருமூச்சு விடுகிறது) தீவிர யோசனைகளுடன் இழுத்துச் சென்று கடைசி ரயில் நிலையத்தில் தினசரி தள்ளி விடுகிறது ரயில். தத்தமது விதிகளை நொந்தபடி தத்தமது மொழியறிவுக்கு எட்டிய வசவுகளை குறிப்பிட்ட ஒருவரின் மீதோ பொதுவாக சமூகத்தின் மீதோ அல்லது சற்று முன்னமே ரயிலில் கண்ட யாரோ ஒருவரின் மீதோ வீசியபடி படிகளில் இறங்கி ரயில் நிலையத்தின் வாசலை அடைந்து அடுத்த பேருந்துக்கோ டாக்ஸிக்கோ நண்பரின் காருக்கோ ஆஃபீஸ் வேனுக்கோ காத்திருக்கையில் “அடுத்தது என்ன?” என்ற அருட்பெரும் கேள்வி எல்லோர் மனதையும் அறைவது மிகவும் சாதாரண விஷயமே. (இங்கே நீங்கள் கொஞ்சம் மூச்சு விடலாம்). இருந்தும் எங்களில் சிலர் மட்டும் தங்களின் சஞ்சலத்தை ஊரறிய உலகறிய பளிச்செனத் தெரியப்படுத்துகிறார்கள். எதிர் வரும் பிசாசிடம் தங்களது குழந்தையை வழங்கும் மூர்க்கத்துடன் strollerஐ தள்ளிச் செல்லும் சில இளம் தாய்மார்களோ, காப்பி கலர் கோட்டின் காலரில் பூத்திருக்கும் தலை மட்டும் வாடித் தொங்கியபடி வதங்கி நிற்கும் வயசாளிகளோ, இம்மி விலகினாலும் விம்மத் துவங்கும் சாத்தியங்கள் தெரியும் காதல் ஜோடியினரோ இல்லை வளர்ந்ததும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அத்தனை சாத்தியங்களும் கொண்ட சில சிறுவர் சிறுமியரோ – என்ன காரணத்தாலோ சூட்சுமத்தாலோ  விறுவிறுவென நடந்து வந்து ரயில் நிலைய வாயிலைத் தாண்டி தானியங்கி கதவுகளின் சென்சார் கண்கள் எட்டும் எல்லையில் மிகச்சரியாக நின்றுகொள்கிறார்கள்.  இரண்டாகப் பிரிந்திருக்கும் வாயிலை மூடி மூடி விளையாடி மகிழ்ந்த ஜோடிக் கதவுகளில் ஒன்று மட்டும் கதவை முழுதாக மூட இத்தனை தூரமே இருக்கும் நொடியில் அதிர்ந்து யாரென்றும் என்னதென்றும் அறியாமல் உறுமியபடி பின் விலகினாலும் மூளையின்றி மீண்டும் மீண்டும் முயலத் துவங்கும்.  குளிரினால் வாயிலுக்குள்ளேயே தங்கியபடி காத்திருப்போரும்  வெயில் வேண்டி வாயிலுக்கு வெளியே உலவியபடி காத்திருப்போரும் அவ்வப்போது திரும்பிப் பார்த்து பார்வையாலே  சுட்டெரித்தாலும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வெறித்துப் பார்த்தபடி அசையாது நின்று சுற்றுவட்டாரத்தின் சூழ்நிலையில் ஒரு வினோத சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது வாரம் ஒரு முறையாவது நிகழ்ந்துவிடுகிறது. உள்ளே நின்றபடி எனக்கு முன்னே நொடிக்கு ஒரு முறை துடிக்கும் கதவையும் அதற்கு அப்பால் நிற்பவரையும் பார்த்தபடி நின்றுகொண்டேயிருப்பது ஒரு பறவையின் வியூகக் காட்சியாக யோசித்து பார்ப்பதனாலோ என்னவோ எனக்கு வித்தியாசமான ஆனால் ஆழமான காட்சியாக இருக்கிறது. அமரர் வாலி கூட ஒரு வாசலை மூட விட்டால் தானே மறுவாசல் வைப்பான் இறைவன் என்றார்? யாரேனும் அவர்களை நெருங்கி நிலைமையை விளக்கிச் சொல்லி அவர்களை கொஞ்சம் நகர்த்தி இருவருமாக சிரித்து ஓ எத்தனை பிரகாசமான சூரிய ஒளி வீசுகிறது இன்று என எல்லோரும் புன்னகைக்கும் தருணமோ மலிந்த வன்முறையை தங்களின் கோட்டு பாக்கெட்டிலும் கைப்பையிலும் மறைத்து வைத்து திரியும் இந்த மாநகரிலே யாரேனும் அவர்களை இழுத்துச் சென்று அடிவயிற்றில் குத்தும் தருணமோ வரும் வருமென நான் காத்திருந்தும் ஏதும் நிகழ்வதேயில்லை. காதில் இயர்ஃபோன்களுடன் லேசாக கைகால்களை உதறியபடி பாடிக்கொண்டிருப்பவராக இருந்தாலும் (நிற்க – இவர்களுக்கு பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் பொருத்தமாக இருக்கும் என்பது என் மேன்மையான அபிப்ராயம்) எந்த திசையிலும் எந்த வண்டியின் ஒலி கேட்டாலும் தம்முடைய பேருந்தா என்று உடம்பே காதாக திருகி பார்ப்பவராக இருந்தாலும் தமக்கு பின்னால் கதறிக்கொண்டிருக்கும் ஒற்றைக் கதவை ஏனோ சட்டை செய்வதேயில்லை. நாங்களும் எங்களின் கவலைகளை தற்காலிகமாக மறந்து வியப்பும் அலுப்பும் ஆழ்ந்த சிந்தனையும் அதற்கும் விசித்திர பிண்ணனி இசையாக அந்தக் கதவின் அதிர்வுகளைச் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து நின்று கொண்டிருந்தோம். வீறுகொண்டு முயன்றுகொண்டேயிருந்த கதவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வேகமிழுந்து மேடையிலே நடித்துக்கொண்டேயிருக்கும் போதே உயிரை விட நினைக்கும் நடிகர்களைப் போல ஒரு நாள் பாதியிலேயே திடீரென நின்றுவிட்டது. அடுத்த சில நாட்களில் அந்தப் பாதிக் கதவை பார்க்கையிலெல்லாம் மாநகராட்சியைப் பற்றியும் அது வசூலிக்கும் வரியைப் பற்றியும் முணுமுணுக்கத் துவங்கியிருந்தோம்.

[..]

தலைவலியும் திருகுவலியும் நமக்கு வந்தாலே தெரிந்துவிடுகிற தன்னிறைவு கொண்ட பிரச்சினைகள் என்றாலும் குறட்டை ஒலி என்பது நமது அறை நண்பருக்கு வந்தால் தான் நமக்குத் தெரியும். ஏதோ நமது குடும்ப உறுப்பினர்களுக்கு வந்தால் கூட நாம் ஆடவில்லையென்றாலும் நம் தசையாடி ஒரு விதமாக பொறுத்துக்கொள்ளலாம். உங்களின் அறையில் படுத்துத் தூங்கியோ அடுத்த அறையில் படுத்துத் தூங்கியோ பலத்த குறட்டை ஒலியால்  உங்களுக்கு அவர் ஏற்படுத்தும் உபத்திரங்களை பதற்றப்படாமல் மிக எளிமையாகவே கையாளலாம். முதலில் குறட்டை வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருளும் உருவமில்லாத ஒரு உருளை என்பதையறிக. சில கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்து உருவாக்கும் பிரச்சினைகளைப் போல தூங்கும் போது வயிறும் வாயும் மூக்கும் ஒரு பொருத்தமான அமைப்பில் அமைய நேர்ந்தாலே குறட்டை சாத்தியம் என்பதையுமறிக. சிலருக்கு இந்த அமைப்பு தலை குப்புற படுத்து உறங்குகையில் ஏற்படலாம், சிலருக்கு விண் பார்த்து உறங்குகையில், சிலருக்கு உட்கார்ந்து தூங்கும் போது. நமது முதல் கவனம் அந்த அமைப்பை கலைப்பதில் இருக்க வேண்டும். எப்படி? உங்களில் சிலர் விளக்கை போட்டோ ஐஃபோன்/லேப்டாப்பை ஒளிர விட்டு அதை அவரின் முகம் நோக்கி திருப்பியோ என்று எண்ணலாம். தவறு. ஒளி ஒலியை விட வேகமானது என்றாலும் கூட, ஒலியை ஒலியால் தான் வெல்ல முடியும், அது தான் தர்மமும் கூட. இருட்டிலே கூர்ந்து கவனித்தபடி இருந்து அந்த உருளை மெல்ல உருளத் துவங்கி மூக்கும் வாயும் பிரியத் துவங்கும் தொண்டையின் சிக்கலான பிரதேசத்தை அடையும் பொழுது குறுகிய ஆனால் கூர்மையான ஒலியை எழுப்புங்கள் – பலமான உச்சுக்கொட்டுதலோ, கைதட்டலோ, புத்தகத்தை சுவற்றை நோக்கி எறிவதோ, அஹோய் என்ற சொல்லோ எதுவோ.  (அவர் அடுத்த அறையில் இருந்தால் உங்களால் அவரை கவனிக்க முடியாதென்றால் அறை வாசலில் நின்று குத்துமதிப்பாக அவ்வப்போது ஒலி எழுப்பலாம்). எதுவோ சரியில்லை என்ற மெல்லிய அதிர்ச்சியில் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர் திரும்பிப் படுக்கையில் வயிறு-தொண்டை-மூக்கு-வாய் அமைப்பு கலைந்து விடும். (அப்படி திரும்பிப் படுக்கையில் அதிருப்தியில் அவர் உச்சுக்கொட்டினால் உங்கள் காதில் அது தேனாக ஒலிக்கும்). சரியான பலன் கிடைக்க கண்களை இருட்டிற்கு நன்கு பழக்கி குறட்டை ஜனிக்கிற சரியான நொடியில் சிறப்பான ஒலி ஏற்படுத்தி அதை அடித்து வீழ்த்துங்கள். அப்படி வீழ்த்திய மகிழ்ச்சியிலும் பெருமையிலும் உங்களுக்கு தூக்கமே வராது.

[..]

நானும் அம்மாவும் மூத்த சகோதரியும் காரில் நள்ளிரவைத் தாண்டி எங்கோ சென்றுகொண்டிருந்தோம்.  திசை, வழி எதுவும் புரியவில்லை. வண்டியின் விளக்கொலியின் எல்லை வரையே எதுவும் புலப்படுகிறது. எங்கெங்கோ திரும்பித் திரும்பி 2007ல் விட்டு வெளியேறிய சொந்த ஊரை அடைகிறோம் அல்லது சொந்த ஊரைப் போலத் தோன்றும் இடத்தை அடைகிறோம். நினைவில் எப்படியோ எங்கேயோ தங்கிவிட்ட ஒரு தெருவைப் போலிருக்கும் தெருவினுள் திரும்புகிறோம். நாய்கள் கூட எங்கும் தென்படவில்லை. எங்கும் மின்சாரம் இருப்பதாகத் தெரியவில்லை. குறுகிய தெருவின் பாதித் தொலைவில் ஒரே ஒரு கார். அதுனுள்ளே கொஞ்சம் மங்கலான ஒளி.  இரைச்சலை குறைக்க வேண்டியும் அந்தக் காரை கடக்க வேண்டியும் வேகத்தை குறைத்து மெல்ல மெல்ல அதை நெருங்கி கடக்கையில் ஆர்வத்துடன் அந்த காரினுள் பார்க்கிறோம் – கூகிள் தேடல்களில் தென்படுவதை தவிர்க்கவும் முகங்களைப் பார்க்காததாலும் பெயர்கள் வேண்டாம் – பச்சை ராணுவ உடையில் கம்பீரமாக முன்னே ஆளில்லாத ஓட்டுனர் இருக்கைக்கு அருகே ஒருவரும், பின்னால் பளிச்சென்ற மேலங்கியுடன் தமிழக அரசியல் புள்ளி ஒருவரும் – ஏனோ எனக்கு உடல் சில்லிடுகிறது. காலையில் விழித்ததும் என்னவென்று புரியாமல் மீண்டும் மீண்டும் காரை ஓட்டிச்சென்று கனவை அடைந்து அந்தக் காரை கடக்கையிலெல்லாம் உடல் சில்லிடுகிறது, கனவும் அதற்கு மேலே நினைவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு பல முறை நினைத்து நினைத்து அதே உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தாலும் என்னவென்று சுற்றி இருப்பவர்களுக்கு விளக்குவது என்று புரியவேயில்லை. ஒரு புத்தகமோ திரைப்படமோ பாடலோ நினைவைச் சுற்றிக்கொண்டிருந்தால் கூட அதைக் காட்டியோ அதைப் பற்றிச் சொல்லியோ அதைக் கொடுத்தோ கொஞ்சம் விளக்கிச் சொல்லி வியப்பைத் தீர்த்துக்கொள்ளலாம். முற்றிலும் தொடர்பில்லாமல் எங்கிருந்தோ முளைத்திருக்கும் காட்சியை ரகசியமாக வைத்துக்கொண்டு வெறும் வியப்பில் ஆழ்ந்தபடி அழுத்தமான புன்னகையுடன் பேருந்திலோ ரயிலோ மதிய உணவு மேஜையிலோ அமர்ந்துகொண்டிருந்தேன். தொடர்ந்து கொண்டேயிருக்கிற இத்தகைய வியப்புகள் கனவுகளாகத் தொடர்ந்து கொண்டே இருப்பதால், அமெரிக்கர்களே, நாளெல்லாம் உங்களின் பைசா பெறாத பிரச்சினைகளை கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு இன்னும் அலுப்பு ஏற்படவில்லை.

[..]

பேருந்துகளில் ரயில்களில் என்னைச் சுற்றி இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு சுவாரசிய சம்பாஷணையை வழங்க வேண்டிய கட்டாயம் எனக்கிருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன். இருந்தும் – ஒரு சுவாரசிய சம்பாஷணைக்கு இரண்டு வாய்கள் வேண்டும் அல்லவா? குறைந்தபட்சம் இரண்டு உபயோகமான தகவல்களை – ஒரு salesஓ dealஓ அவர்களின் செயலுக்கு நல்லதொரு மாற்றோ எதுவோ – தராத பட்சத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ஒரே நிமிடத்தில் என்னை நிராகரித்து நகர்கிறார்கள். அப்போதே அறிமுகமான ஒருவர் பேசிப் பழக எத்தனிக்கையிலே ரயில் நிலையத்தில் ஐம்பது காசிற்கு ஆறு நிமிடம் பேசும் பொதுத் தொலைபேசி இருப்பதை கண்டுபிடித்து நான் அதை அறிந்திராததால் அந்த நகரில் என்னுடைய ஆறு மாத இருப்பை சுக்கு நூறாக கிழித்துப் போட்டுவிடுகிறார். பல சமயங்களில் என் கையில் புத்தகம் இருப்பதால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறேன். (அதை மீறி வருபவர்கள் அது சீஸ் அல்லது சிக்கன் சூப் அல்லது ஃபெர்ராரி கார் கொண்டு வாழ்கையை மாற்றும் புத்தமில்லாதது கண்டு புறக்கணித்து விடுகிறார்கள்). இது தவிர எஞ்சிய சிலர் கூச்சத்தின் எல்லையிலே நின்று வெறும் புன்னகைக் கொடி காட்டுகிறார்கள். அல்லது கடைசி ரயில் நிலையத்திற்குள்ளே நுழைந்து எங்களை ஏற்றிக்கொண்டு எதிர் திசையில் புறப்பட வேண்டிய ரயிலை உற்றுப் பார்த்தபடி இருந்து விட்டு ‘இது எப்படி இப்போ யு-டர்ன் போடும்?” என்று கேட்டு அதிர வைக்கிறார்கள்.  முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டு ஆட்டு மந்தையில் கடைசி ஆடாக சுவாரசியமற்று அலுவலகம் நோக்கி நடக்கும் நான் அன்று காலையில் அலுவலக வாசலில் ஒரு சிறிய கூட்டத்தைக் கண்டு சுவாரசியமடைந்தேன். பதற்றமும் குழப்பமும் பெரும்பாலும் தெலுங்கிலும் கொஞ்சம் மற்ற இந்திய மொழிகளிலும் வெளிப்பட்டிக்கொண்டிருந்தது – காரணம், இந்திய காண்டாராக்டர்களின் access cardகள் திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டது. மற்ற அனைவரும் சல்லென நுழைந்து தலை திருப்பி ஒரு சிறிய ஆச்சர்யப் பார்வையாகத் தேய்ந்து போனார்கள். எங்களின் கூட்டம் விடாமல் ஒவ்வொருவாராக முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். நானும் முன்னே சென்று முயல்கையில் சிகப்பு ஒளி கீச் கீச் என்றது. அங்கே ஒரு குதிரை வால் பெண்ணுடன் நின்றுகொண்டிருந்த ஆஜானுபாகுவான ஒரு செக்யூரிட்டி இறுக்கமான முகத்துடன் எங்கோ பார்த்தபடி எந்திரத்தனமாக “Your time has expired” என்று அறிவித்தார். எனக்குப் பின்னால் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கும் அதே அறிவிப்பு. பளீரென புன்னகைத்து நான் கூட்டத்தை நோக்கி திரும்பினால் அனைவரும் தங்களது மானேஜரையும் நண்பர்களையும் அழைக்கத் துவங்கியிருந்தார்கள். எதற்கு? ஏன் இந்த பதற்றமும் குழப்பமும்? Your time has expired என்பதை விட தெளிவான சுருக்கமான காரணம் வேறேதேனும் வேறெதற்கும் இருக்குமா? அடக்க முடியாத புன்னகையுடன் அந்தக் கூட்டத்தை நான் சுற்றிச் சுற்றி வருகிறேன் – மக்களே, மக்களே, ஒரு கணம் இந்தக் காட்சியின் வினோதத்தை உணர்ந்து இதில் சிறப்பாக பங்கு பெறுங்களேன், ப்ளீஸ்? கூட்டத்தை இரண்டு முறை சுற்றி வந்து விட்டு சோர்வாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். அவசர அழைப்புகள், தகவல் பறிமாற்றங்கள், அனுமதிகளுக்குப் பிறகு எல்லோருக்கும் வாயில் திறந்தது. கட்டக் கடைசியாக உள்ளே நுழைந்த நான் திரும்பி அந்த ஆஜானுபாகுவிடமும் குதிரைவாலிடமும் ஒரு சோதனை புன்னகையை வழங்க அவர்கள் கச்சிதமாக அதே இறுக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

[..]

ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருக்கையில் சன் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சியில் ஒரு காமெடி கோஷ்டி நீள நீள காமெடி வசனங்களை உயிரைக் கொடுத்து பேசிக்கொண்டிருந்தபடி இருந்துவிட்டு பாடல் போடும் நேரம் வந்ததும் எப்படியாவது பாடலின் வரியையோ படத்தின் பெயரையோ வசனத்தில் புகுத்திவிடுவார்கள். தனியாக உங்களுக்கு விளக்கத் தேவையில்லை – ஏனோ என்னை அது வெகுவாக ஈர்த்துவிட்டது. வீட்டில் விருந்தாளிகள் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு சமயம் யாரோ தற்செயலாக எதையோ சொல்லப் போல அக்காவின் காதில் நான் ‘இப்போ அந்தப் பாட்ட போடலாம்’ என்று சொல்லி அதிர வைத்தாலும் முதலில் சிரிக்கவே வைத்தேன். பின் அது தொடர்ந்து கொண்டே இருந்ததால் அம்மா சங்கடமடைந்தார். ஆறு வயதில் ஒரு திருமணத்திலிருந்து நடு ராத்திரில் ஒரு மினி வேனில் திரும்பிக்கொண்டிருந்த கும்பலுக்கிடையே நான் அமர்ந்து கொண்டு வரிசையாக கடி ஜோக் சொல்லிக்கொண்டிருந்த அன்று முதன் முதலாக என்னை சான்றோன் எனக் கேட்ட அம்மா அதன் பிறகு கேட்டதெல்லாம் அத்தனை சுவையானதாக கேட்கவில்லை. செய்தித்தாளை எடுத்துக்கொண்டு சிலோன் வானொலி அல்லது சென்னை வானொலி நியூஸ் வாசிப்பது, துப்பறியும் கதைகளுக்கான ட்விஸ்ட்டுகளை  யோசித்து சொல்வது, டிவி நிகழ்ச்சிகளுக்கு ஐடியா வழங்குவது என தொடர்ந்து கொண்டிருந்த விசித்திரங்களில் புதிதாக இது – அம்மாவுடன் பணிபுரிந்து கொண்டிருந்த மிகவும் மதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது இடை மறித்து ‘இப்போ நேருக்கு நேர் படத்திலேர்ந்து பாட்டு போடலாம்’ என்று சொல்லப் போக வீட்டின் ஒட்டு மொத்த கண்டனத்திற்கு ஆளானேன். அதன் பிறகு சில வாரங்களுக்கு உரையாடல்களில் சிற்சில கணங்களில் திடீரென ஒரு உற்சாகத்துடன் நான் நிமிர்ந்து அம்மாவையோ அக்காக்களையோ திரும்பிப் பார்ப்பதும் அவர்கள் என்னை முறைப்பதுமாக ஒரு முளை கிள்ளி எரியப்பட்டது. அப்போது உள்ளே விழுந்த விதை ஒன்றே வளர்ந்து இன்று பாடல் வரிகளில் மீது தீராத ஆர்வத்தை – சதா ட்வீட்டிக்கொண்டே இருக்கிற பழக்கம், தொடர்பில்லாத சம்பவங்களோடு வரிகளை தொடர்புபடுத்திக் கொள்ளும், வர்ணனைகளிலும் தலைப்புகளிலும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்படக் காரணம் என்பது என் யூகம். சரி – இது வரை இந்தப் பதிவில் எத்தனை பாடல் வரிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன? – மேலே ஸ்க்ராலாமல் சொல்பவர்கள் இன்று இந்த தளத்தில் பழைய பதிவுகளை படித்து மகிழலாம்.

[..]

சமீபத்தில் இந்தப் பக்கங்களை படிக்கத் துவங்கியிருக்கும் சிலரின் பொறாமையைக் கிளறும் விதமாக தொடர்ந்து இந்தப் பக்கங்களை படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு – சென்ற மே மாதம் நண்பர்களுடன் சென்ற ஒரு மலைப்பிரதேச பயணத்தில் ஒரு வழியாக புதருக்குப் பின்னால் சலசலத்துக்கொண்டிருந்த கரடி வெளியே வந்துவிட்டது; மேலும் ஒரு மணல் கடிகையைத் திருப்பி வைத்தாயிற்று.

[..]

சில சனிக்கிழமை இரவுகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளின் அதிகாலையில் தூங்கி வழியும் அல்லது போதையில் துவண்டிருக்கும் மூன்று அல்லது நான்கு தலைகளுடன்  தொன்னூறில் காரில் ஆளில்லாத சாலைகளில் பறக்கையில் துணைக்கு விழித்திருப்பவருடன் பேசும் உடைந்த உரையாடல்களின் போதோ அதிர அதிர ஒலிக்கும் பாடல்களின் போதோ அவற்றின் இடையே உறுத்தும் அமைதியின் போதோ விழியோரமாக உரசிக்கொண்டே தொடரும் நிலவைக் காணும் போதோ, காலடியில் கட்டுப்பட்டிருக்கும் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் துவங்குதாக ஒரு பிரமை ஏற்படும் போதோ, குறைந்த வெளிச்சத்தில் அவசர நிழலென குறுக்கே ஓடி வந்து ஒரு சின்னஞ்சிறு உயிரினம் அடிபட்டு மறையும் போதோ – இன்னும் பல #foreverAlone தருணங்களின் பொழுது சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உங்களிடம் அதைச் சொல்வேன் என்பதை அந்தக் கணத்தில் இருக்கும் பொழுதே நன்கு உணர்கிறேன். ஆகவே, காரை ஓட்டிக் கொண்டு நான் வந்து சேரும் வரை நல்ல விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு எனக்காக காத்திருப்பீர்களாக.

Written by Aravindan

நவம்பர் 11, 2013 at 2:11 முப

தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with

ஒரு துளி பரிச்சயம்

with 18 comments

ஒரு தேர்விற்கு தயாராவதற்கு கையெழுத்தை மட்டும் கொஞ்சம் சரிபார்த்து தயாரானால் போதுமென்பது விசித்திரமாக இருந்தது. காலை எழுந்தவுடன் சில காகிதங்களில் வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழில் கொஞ்சம் எழுதிப் பார்த்துவிட்டு தேர்வு துவங்க பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக கிளம்பி வீட்டிலிருந்து இரண்டு நிமிட நடையில் இருக்கும் கல்லூரிக்குள் நுழைகிறேன். அது பெண்கள் கல்லூரியென்று அப்போதே உறைக்கிறது – கிளம்பும் முன் சவரம் செய்திருக்கலாம் என்ன உடை அணிகிறோம் என்று யோசித்திருக்கலாம் என்று இன்னமும் தோன்றுகிற வயது – ஒரு நொடி யோசித்து அதைத் தாண்டி எங்களுக்கென தனியே ஒதுக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு செல்கிறேன். தேர்வு அறை கிட்டதட்ட முழுக்க நிரம்பியிருந்தது – சுமார் இருபது மேஜைகள், ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு நாற்காலிகள், ஒரு கண்காணிப்பாளர், எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த ஒரு மின்விசிறி. கண்காணிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவர் என்னை ஒரு மேஜைக்கு அழைத்துச் செல்கிறார். முன்னமே வந்து தயாராக அங்கு அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையங்கியால் முக வியர்வையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் நாற்காலியை நகர்த்தி அமர்கிற ஒலி கேட்டு அவள் நானிருந்த திசையில் நிமிர்ந்தாள் – அவளால் பார்க்க முடியாது. தேர்வு துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அவள் சொல்லச் சொல்ல நான் அந்த விடைகளை சரியாக எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையை அவளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கூடவே என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லவும் எத்தனித்தவன் தேர்வு அறையில் அத்தனை விடைகளையும் ஒரே நொடியில் மறந்தவன் போல அதிர்கிறேன். அவளால் என்னை பார்க்க முடியாது என்பதை புதிதாக உணர்ந்தவன் போல என் குரலை என்னுடைய மொத்த அடையாளமாக மாற்ற முயல்கையில் ஏனோ தடுமாறுகிறேன். பரிதாபமோ ஆர்பாட்டமோ அலட்சியமோ சலிப்போ அவசரமோ தெரியாத ஒரு குரலை என்னுள் இருந்து எடுக்க முயற்சிக்கிறேன். எளிய மளிகைக்கடையில் இருக்கும் எடைகாட்டியின் மேல் காணாத பாரத்தை வைத்தால் அதன் முள் தடதடவென அதிர்வது போல தன் எடை தெரியாமல் திணறுகிறது குரல்.

பாதியில் துவங்குபவன் போல என்னுடைய பெயரை மட்டும் சொல்லி வைக்கிறேன். அவள் தன்னுடைய பெயரைச் சொல்லிவிட்டு தேர்வெழுத உதவி செய்வதற்கு நன்றி செல்கிறாள். அதிக கவனத்துடன் தேர்தெடுக்காமல் மிகவும் சாதாரண வார்தைகளையே சொல்கிறாள். பதிலுக்கு எதையும் சொல்லத் தெரியாத தவிப்பை கூட அவளிடம் கொண்டு சேர்க்கத் தெரியாமல் கேள்வித்தாளுக்கு காத்திருக்கிறேன். தேர்வு துவங்கியதும் ஒரு முறை கேள்வித்தாளை சுருக்கமாக படித்துக்காட்டுகிறேன். முதல் கேள்வியைச் சொன்னதும் சிறிது யோசித்து விடை தெரியுமென்று சொல்கிறாள். இரண்டு நிமிடங்கள் விடையை மனதிற்குள் தயாரித்துவிட்டு சொல்லத் துவங்குகிறாள். நிறைய யோசனை இடைவெளிகள் கொண்ட வார்த்தைகளை அவள் மனதிலும் நான் காகிதத்திலும் சேகரிக்க சேகரிக்க எங்கோ சட்டென வார்த்தைச் சரம் அறுந்து அனைத்தும் கொட்டுகிறது. தயங்கித்தயங்கி எழுதியதை ஒரு முறை படித்துக்காட்டச் சொல்கிறாள். சில வாக்கியங்கள் எங்கோ துவக்கி எங்கோ முடிகின்றன. இலக்கண பிழைகள். விடையை யோசிக்க நிறைய தாமதம். ஒவ்வொன்றையும் உறுத்தாமல் சுட்டிக்காட்டும் சரியான குரல் தெரியாமல் முதல் பத்து நிமிடங்களிலேயே துவண்டு போகிறேன். வெப்பமும் குழப்பமுமாக கவனம் சிதறுகிறது. வீணடிப்பதற்கு இது என்னுடைய தேர்வல்ல என்பதை எனக்கே ஒரு முறை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன். அவள் நினைப்பதை எழுதுவது தான் சரி – பிழைகள் இருந்தாலும் இல்லையென்றாலும். முதல் முறை இந்தப் பணியை செய்ய முயன்ற என் மேல் எனக்கே கோபம் வருகிறது. அவள் சொல்வதில் இருக்கும் பிழைகளை புறக்கணித்து வெறும் சொற்களை மட்டும் கேட்டு கேட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் நிறையும் வரை எதையும் யோசிக்க மறுக்கிறேன். அடுத்த பக்கம் தொடங்குகிற சமயத்தில் அவள் வார்தைகளின் கயிறை எப்படியோ தேடி இறுக்கப் பிடித்துவிடுகிறாள். சன்னமான குரல் வழியே அவள் விடுவிக்கிற ஒவ்வொரு சொல்லையும் நான் காகிதத்தில் எழுதும் முன் அதை எனக்கு நானே சொல்லிக்கொள்கிற என் குரல் நீருக்குள்ளிருந்து மேலெழும்பி ஒலிப்பதைப் போல ஒரு கட்டத்தில் எனக்கு கேட்கிறது. மின்விசிறியின் சத்தத்தையும அவளின் குரலையும் மீறி ஆழ்ந்து அதை கவனிக்கிறேன் – எந்த பாவங்களும் அற்ற அந்த வார்தையின் குரலாக மட்டும் அது இருக்கிறது. இருளில் பின் தொடர்பவன் போல கவனித்து தொடர்ந்து ஒரு கட்டத்தில் அமைதியை அடைகிறேன். சொற்கள் அவளின் குரலில் என்னுடைய குரலில் என்னுடைய எழுத்தில் என நெருக்கமாக பயணிக்கத் துவங்குகின்றன. இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு ஒரு முறை இன்னும் மறக்காத அவளின் முகத்தையும் அவளின் விழிகளையும் பார்க்கிறேன். அடுத்த வார்தையை யோசித்துக்கொண்டிருக்கும் அவளை கொஞ்சம் துரிதப்படுத்தவோ, சொல்வதில் பிழைகள் இருக்கக்கூடிய சாத்தியங்களை சுட்டிக்காட்டவோ, உறுத்தாமல் உபத்திரமில்லாமல் ஒரு திருத்தமோ உதவியோ இனி செய்ய முடியும் என்று தோன்றுகிறது. அவளை பார்த்தபடி காத்திருந்து விட்டு அவள் உச்சரிப்பு பிழையுடன் சொன்ன ஒரு சொல்லை எழுதும் பொழுது உச்சரிப்பு பிழைகளில்லாத என்னுடைய குரல் அதன் கீழே ஒரு புன்னகையை அடிகோடிடுகிறது.

[..]

எத்தனை நீண்ட பயணமாக இருந்தாலும் இரவு உறங்குவதற்கு வீட்டிற்கு திரும்பிவிட அம்மா எப்போதுமே முயல்வார். அது இயலாத நாட்களில் உறவினர்களின் வீட்டிலோ நண்பர்களின் இல்லத்திலோ விடுதியிலோ உண்டும் தங்கவும் நேரிடும் இரவுகளில் அவர் உடல் மொழியில் ஏற்படும் கூச்சமும் தயக்கமும் பதினான்கு வயதில் எனக்கு சலிப்பைத் தந்தது. என்ன ஏதென்று தெரியாமல் நம்மையும் மீறி நிகழ்ந்துவிடக்கூடிய புரிதல் ஒன்றினால் அந்த சலிப்பு ஒரு கட்டத்தில் ஒரு துளி அதிக கவனமாக மாறியது. அவருக்கு சரியான உணவு, பேச்சுத் துணை, தலையனை கிடைக்கிறதாவென சரிபார்க்கிற கவனம். சரிபார்த்துவிட்டு உறங்கச் சென்று இருவரும் அரைகுறையாகத் தூங்கி எழுந்து வீட்டை நோக்கி புறப்படுவோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு நாள் பயணமாக ஒரு மலைப்பிரதேசத்திற்கு நானும் அவருமாக செல்லத் திட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு காணப்போகும் இடங்கள், கோவில்களைப் பற்றிய உரையாடல்களில் நாங்கள் தங்கப் போகும் இடத்தைப் பற்றிய குறிப்புகளை கவனமாக நழுவவிட்டுக்கொண்டிருந்தேன். மலையின் மேலே ஆங்காங்கே இருக்கும் பங்களாக்களை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்களுடன் தங்கி விருந்தோம்பல் பெற்று காசு கொடுத்து திரும்புவதே உசிதமும் திட்டமும். அதை முழுதும் புரிந்துகொண்ட பின்னர் சரியென அவர் சம்மதித்தாலும் ஓய்வு பெற்ற பிறகிலிருந்து எனக்கு எப்போதும் எதற்கும் கிடைக்கும் சம்மதங்களுக்கு இடையே அது கொஞ்சம் சந்தேகத்தையே தந்தது. நாள் முழுக்க பயணித்து இரவில் வெகு தாமதமாக அங்கு சென்று சேர்ந்ததால் முதல் நாள் அந்த வீட்டிலிருந்தவர்களின் அறிமுகம் சரியாக கிடைக்கவில்லை. ஒரு நடுத்தர வயது பெண்மணி கீழே தனியே தங்கியிருந்து மேலே மூன்று அறைகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அதிகாலையிலேயே கிளம்பி தாமதமாக வந்து சேர்ந்ததால் சில காபிகள் மட்டும் மேலே அறைக்கு வந்தன. மூன்றாம் நாள் மாலையே நாங்கள் வீடு திரும்பியதால் இரவு உண்பதற்கு கீழே வருமாறு கட்டாய அழைப்பு. எங்கள் மொத்த பயணத்தின் வரைபடத்தில் ஒரு முக்கிய புள்ளியை குறிப்பவன் போல உணர்கிறேன். பளிச்சென தயாராகி அம்மா புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார், தண்ணீரில் ஒரு துளி எண்ணெய் விழுந்து கலங்குவதைப் போல ஒரு தயக்கத்துடன்.

அழைப்பு வந்ததும் இருவரும் ஹாலின் வெளிச்சமும் நிசப்தமும் ஒரு துண்டென விழுந்து கிடக்கும் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்கிறோம். முழுக்க முழுக்க பூச்சிகளின் சத்தங்கள் நிறைகிற இரவு. உள்ளே நுழைந்ததும் முதன் முறையாக அந்த வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு விருந்தினரை பார்க்கிறோம் – நடுவயது ஆண் – தோற்றம் முழுக்க பணத்தின் பொலிவு, உடன் ஒரு இளம் அமெரிக்கப் பெண் – இருவரும் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். காட்சியின் விசித்திரம் அழுத்தமாக என் மனதில் பதிகிறது. அடுத்த நகரில் தங்கி வங்கியில் பணிபுரியும் வீட்டின் மருமகள் வந்திருந்து பரபரவென இயங்கிக்கொண்டிருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை கவனிக்குமாறு சொல்லிவிட்டு நானும் அம்மாவும் அங்கிருந்த பிரம்பு நாற்காலிகளில் அமர்கிறோம். வீட்டின் உரிமையாளர் உடைந்த ஆங்கிலத்தில் வரவேற்று தாமதத்திற்கு வருந்தி சூழ்நிலையின் சங்கடத்தை கூட்டியும் குறைத்தும் கலைக்கிறார். பத்து நிமிடங்களில் உண்டு முடித்தவர்கள் எழு நாங்களும் அவர்களும் இடம் மாறுகிறோம். அவர் எதையோ சொன்னதும் ஹாலின் வேறொரு விளக்கு ஏற்றப்பட்டு அறையின் வெளிச்சம் மாறி மங்குகிறது. அவர் அந்த அமெரிக்கப் பெண்ணை பார்த்தபடி சன்னமான குரலில் ஏதோ ஒரு கதையை சொல்லத் துவங்குகிறார். எனக்கு நேராக அமர்ந்திருக்கும் அம்மாவையும் அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அவர்களையும் பார்த்தும் பார்க்காமலுமாக பிரமாதமான உணவை உண்ணத் துவங்குகிறேன். வார்தைகள் புரியாமல் ஒரு துளி பரிச்சயமும் ஒரு துளி காதலும் ஒரு துளி மோகமும் கொண்ட குரல் மட்டும் ரகசியம் போல கேட்கிறது. பாத்திரங்களின் ஒலிகள், ஆள் நடமாடும் சத்தங்கள், சாப்பிடுவதால் ஏற்படும் சின்னஞ்சிறு ஓசைகள் எல்லாம் மெல்ல அந்த குரலுக்குப் பின்னால் பதுங்கி ஒளிகின்றன. அந்தக் குரலில் தெரியும் நெருக்கத்தினால் அவர்கள் இருவரும் கைகோர்த்துக்கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருளில் திரையரங்கில் பார்க்கிற காட்சியைப் போல இருக்கிறது. அம்மா எதற்கோ பிரகாசமாக என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அது அந்தக் குரலுக்கும் காட்சிக்குமாக இருக்கும் என்று அனுமானம். அம்மா மெல்லிய குரலில் அந்த மருமகளிடம் உணவு பிரமாதமாக இருப்பதாகச் சொன்னதும் எனக்கு ஏனோ கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. உள்ளிருந்து இன்னொரு பீங்கான் பாத்திரம் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அதிலிருந்து எழும் மணம் தூண்ட அதன் மூடியை திறந்து ஒரு சிறிய தேக்கரண்டியினால் அதைக் கொஞ்சம் கிளறுகிறேன். உள்ளே அந்தக் காட்சியின் நிறத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு சிறிய கரப்பான்பூச்சியைக் கண்டு அதிர்கிறேன்.

அறையின் அமைதி பேரிரைச்சலைப் போல கேட்க அதன் ஒற்றைக் கயிற்றின் மேலேறி நடப்பவன் போல ஒன்றும் புரியாமல் திகைக்கிறேன். கை தானாக அந்த பாத்திரத்தை மூடி கொண்டு அப்படியே மூடிவைக்கிறது. அந்த இரு பெண்களும் அடுப்படி வாசலில் நின்று சம்பிரதாய கேள்விகளை கேட்க முயற்சிக்க அம்மா உற்சாகமாக பதில்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். எனக்கு அந்த உரையாடலில் இருக்கும் சிற்சில மௌனங்கள் ஓவெனக் கேட்கிறது. நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதை கவனித்து அம்மா என்னவென்று கேட்கிறார். அந்த வீட்டின் மருமகள் அவசரமாக வந்து என்னவென்று கவனிக்கிறார். முகத்தில் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கிறேன் என்று உணர்ந்தவனாய் சுதாரித்து ஏதுமில்லை என்று சொல்லி நம்பவைக்கிறேன். கொஞ்சம் பிசகினால் எல்லாம் உடைந்து தூள் தூளாகி விடும் என்கிற பயம் உணர்ந்து மெல்ல மெல்ல அமைதியடைகிறேன். கொஞ்சமும் மாறாமல் அவரின் குரல் மீண்டும் கேட்கத் துவங்குகிறது – அது வரை அவர் பேச்சை நிறுத்தியிருந்தாரா இல்லை எனக்கு கேட்கவில்லையா என்று தெரியவில்லை. முடியாத கதை போல நீண்டுக்கொண்டே இருக்கிற பேச்சின் பிண்ணனியில் எல்லோரும் தத்தமது பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தப் பெண்ணை அழைத்து உருளைக்கிழங்கு வேண்டாம் என்றும் அம்மாவிற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் சொல்ல அவள் உடனே பதற்றமும் கலக்கமும் கொண்டு குழும்புகிறாள். மீண்டும் அதைச் சொல்லி அம்மாவும் கொஞ்சம் வியப்புடன் ஆமோதிக்க அவள் சந்தேகத்துடனே சரியென தலையசைத்து அதை உள்ளே எடுத்துச் செல்கிறாள். எனக்கு போதுமென மிச்ச உணவை அப்படியே வைக்கிறேன். என்னையும் தட்டையும் ஒரு முறை பார்த்துவிட்டு அம்மா ஏதும் சொல்லாமல் சில நொடிகளுக்குப் பின்னர் தயிர் மட்டும் சாப்பிடறேன் என்று ஏனோ என்னிடம் சொல்கிறார். விளையாட்டாக யோசிப்பதைப் போல கொஞ்சம் யோசித்து விட்டு சரி என்று மெல்ல தலை அசைக்கிறேன்.

[..]

துணைக்கும் அறிமுகத்திற்கும் யாருமில்லாத நகரில் துவங்கிய முதல் மாலைப்பொழுதில் என்னுடைய கோப்புகள், உடைகள் மற்றும் புத்தகங்கள் இருந்த விடுதி அறையை இழுத்துப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். விடுதியின் வரவேற்பறையில் இருந்தவளுக்கும் வீதியில் எதிர்பட்டவர்களும் வழங்கிய புன்னகை ஒன்று மட்டுமே அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த நகரில் என்னுடைய அடையாளம். நாட்டின் எல்லையை தாண்டி வந்தமையால் அலைபேசியால் எந்த இடையூறும் இல்லை. . இங்கிங்கு செல்ல வேண்டுமென்றோ அதை புகைப்படம் எடுக்கவென ஒரு நல்ல இடம் தேடவேண்டுமென்றோ அதன் பெயர்களை நினைவில் வைக்கவோ அவசியமில்லை. கைவசம் அலைபேசி இல்லாததால் திசை காட்ட யாருமில்லை திசை தவறவும் வாய்ப்பில்லை. என்னை எனக்கே நினைவுபடுத்தும் விருப்பமான பாடல்கள் என் காதுகளுக்கு மட்டும் ஒலிக்க அதன் மெல்லிய திரைக்கு அப்பால் நிகந்துகொண்டிருந்த நகரத்தின் இரைச்சலின் ஊடே நடக்கத் துவங்குகிறேன். என்ன செய்யலாம் – ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு தீவிர வாசக அடையாளத்தைப் பெற்று அவ்வப்போது தலை நிமிர்ந்து உலகை ஒரு பார்வையில் அளக்கலாம். ஒரு குறிப்பேட்டில் (இதை) எழுத வேண்டி ஒரு தேநீர் கோப்பையுடன் சாலையோர ஜன்னல் இருக்கையில் அமர்ந்து யோசிக்கலாம். வெறும் காற்றை வேண்டுபவனாக பூங்காவில் அமரலாம். நேரம் பார்க்க வேண்டாம். பேருந்து டாக்ஸி வேண்டாம். சில சமயங்களில் வெறும் சாத்தியங்கள் மட்டுமே போதும், செயல்கள் தேவை அல்ல. ஒரு விரல் கொண்டு தொட்டுப் பார்க்கிற, ஒரு துளி மட்டும் சுவைத்துப் பார்க்கிற சாத்தியங்கள். அவற்றை அசை போட்டபடி பாடல்களுக்கு ஏற்ப நின்று நடந்து திரும்பி இசையே திசையாகிறது. பழங்கட்டிடங்கள், நினைவிடங்கள், சிலைகள் என திரும்பிய பக்கமெங்கும் காண்பவைகளை என்ன ஏதென்று வினவாமல் என்னைப் போலவே பெயரற்றவைகளாக இருக்க விட்டு கடந்து செல்கிறேன். ஒரு கட்டத்தில் ஒரு நீண்ட சாலையும் உடனோடும் ஆறும் அதற்கு அப்பால் சரிந்து கொண்டிருக்கும் சூரியனும் என்பதாக முடியும் நகரின் மேற்கு எல்லையை அடைகிறேன். அதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நகரின் மீது விழும் பிரம்மாண்ட மாலைப்பொழுது நீள நீள நிழல்களாக விழுந்து ஊர்ந்துத் தேய்ந்து மறையும் வரை நடக்கிறேன். காட்சிகள், காட்சிகள், காட்சிகள் – ஏதும் அற்ற வெற்றுக் காட்சிகள் – இசையும் எண்ணங்களும் நிறைந்ததும் வடிவம் பெறும் காட்சிகளை குறித்துக்கொண்டு உடனுக்குடன் மறக்கிறேன். மிக மிகத் தாமதமாக சூரியன் மறைந்து மாலைக் காட்சி நிறைவடைந்ததும் விடுதியை நோக்கிச் செல்லும் வழியை கண்டறியத் தொடங்குகிறேன். மதிய உணவிற்கு அடங்கிய பசி இன்னும் எழுவில்லை என்பதால் உண்ண வேண்டிய கட்டாயமில்லை. அறைக்குச் சென்று அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கி வேறு யாரோவாகக் கூட எழுந்து விடலாம்.

நடக்கத் துவங்கியவன் ஏனோ தென்படும் முதல் இந்திய உணவகத்தினுள்ளே நுழைந்து விடுகிறேன். மிகவும் சோம்பலாகவும் எளிமையாகவும் இருந்தது அந்த உணவு விடுதி. என்னைத் தவிர யாருமில்லை. கிட்டத்தட்ட இணைந்தேவிட்ட இரு புருவங்களால் என்னை வரவேற்ற இளம்பெண்ணிடம் ஏதோ ஒரு உணவை தேர்ந்தெடுத்து சொல்கிறேன். . எனக்கென ஒரே ஒரு மேஜையினருகே ஒரு விளக்கு எரியவிடப்படுகிறது. பசியில்லாமல் எதற்கு இங்கு வந்தேன் என்பதைப் பற்றி யோசிக்காமல் அங்கிருந்த அறிவிப்புகளை பார்க்கிறேன். அந்த நகரில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக முஸ்லிம்களை இணைக்கிற தொழுகைகள், நிகழ்ச்சிகள் ஆகியற்றின் அறிவிப்புகள். சுவற்றில் ஆங்காங்கே சில அவசர ஓவியங்கள். வேறெங்கும் பார்த்திராத வகையில் வெளியே எல்லார் பார்வைக்குமாய் அணைத்துவைக்கப்பட்டிருக்கும் அகண்ட அடுப்பு. ஐந்தே நிமிடங்களில் தயாராகிவிடுமென மன்னிப்பைக் கோருபவள் போல சொல்கிறாள். இருக்கைக்கு வந்து அமர்ந்த பின் கவனத்தை கொஞ்சம் கலைக்க முற்பட்டு தோற்று பெருமூச்சுடன் உணர்கிறேன் – எதுவாக இருந்தாலும் இரவு உணவை உண்பது கைவிட முடியாத பழக்கம். எங்கிருந்தாலும் தேடித் தேடி கேட்டு உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்துகிற அம்மாவினால் வந்த பழக்கம். விசித்திரமாக, வந்தும் மறைந்தும் போன நெருக்கமான பலரும் அதையே செய்திருக்கிறார்கள். பல சமயங்களில் அந்த கட்டாயத்திற்காகவே உள்ளுக்குள் ரகசியமாக காத்திருந்திருக்கிறேன் என்பதை முதல் முறை கொஞ்சம் சந்தேகத்துடனே உணர்கிறேன். தொடர்பேயின்றி பலப்பல காட்சிகள் நினைவிற்கு வருகின்றன. எனக்குள் இல்லாத பசி மிகச்சுலபமாக என்னுடைய அடையாளத்தை உருவி எடுத்ததை தோற்றவன் போல ஒப்புக்கொள்வதில் சலிப்பேற்பட்டு அவ்வளவு நேரம் நடந்ததின் அலுப்பு தெரிகிறது.

ஆறேழு நிமிடங்களில் விடுதிக்குள் சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் வருகிறான். அந்தப் பெண்ணும் அவனும் சலாம் சொல்லிக்கொண்ட விதத்தில் முன்பே பரிச்சயமானவர்கள் என்று தோன்றுகிறது. விடுவிடுவென நடந்து எனக்கு குறுக்காக இருக்கும் மேஜையில் அவன் மூச்சை இழுத்துப் பிடித்தவன் போல மிக நேராக தன்னுடைய முதுகைக் காட்டியபடி அமர்கிறான். சில நொடிகளை மனதில் எண்ணிக் காத்திருந்தது போல சட்டென கணீரென்ற குரலில் தன்னுடைய தொழுகையை சொல்லத் துவங்குகிறான். என் விழிகள் தானாக சற்று சாய்ந்து வானோக்கிய அவனுடைய கைகளை பார்க்கிறது. அவன் சொல்லாமலே அந்தப் பெண் ஒரு சிறிய தட்டில் சில பழத்துண்டுகளை கொண்டு வந்து அவனுடைய மேஜையில் வைக்கிறாள். விடுதியின் அத்தனை விளக்குகளையும் எரிய விடுகிறாள். சன்னமாக முனகிக்கொண்டிருந்த இசையை நிறுத்துகிறாள். உள்ளிருந்து இன்னும் சிலர் விடுதியின் முகப்பிற்கு வந்து அடுப்பை மூட்டுகிறார்கள். சரசரவென சமையலறை சத்தங்கள். சூரியனின் நீண்ட அஸ்தமனம் முடியும் வரை பசியுடன் காத்திருந்த விரதத்தை முடிக்கிற பேரமைதி அவனுடைய குரலில் கூர்மையாக அங்கு அமர்ந்திருக்கும் எனக்கு மட்டுமாக எல்லா சத்தங்களையும் மீறி கேட்கிறது. அந்தப் பெண் என் உணவை என் மேஜையில் வைத்து விட்டு நகர்கிறாள். துளியும் பசியின்றி அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி கடவுளுக்கு அவன் சொல்லும் நீண்ட நன்றியை உன்னிப்பாக கேட்கிறேன். எங்கோ ஒரு கணத்தில் எதற்கோ என் கையெங்கும் சிலிர்க்கிறது. அதை மறைக்க வேண்டி அரைக்கை சட்டையை அனிச்சையாக கொஞ்சம் கீழிழுத்துக் கொள்கிறேன். அதற்கு மேல் உண்ண முடியாமல் உணவை வைத்து விட்டு அவனுடைய குரலை கேட்டபடி அமர்ந்திருக்கிறேன். வெளியே இருந்து இன்னும் மூவர் உள்ளே வந்து சலாம் வைத்துவிட்டு அந்தக் காட்சியில் அந்நியமாகத் தெரியும் எனக்கு ஒரு அழுத்தந்திருத்தமான புன்னகையைத் தருகிறார்கள். இன்னும் பலர் விரதத்தை முடிக்க உள்ளே வரத் துவங்குகிறார்கள். அவர்களுக்கு இடம் விட வேண்டி என்னுடைய உணவை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்று அதை வீட்டுக்கு எடுத்தச் செல்ல ஏதுவாகத் பெட்டியிலிட்டு தரச் சொல்கிறேன். முன்னதை விட பிரகாசமான புன்னகையுடன் அவசரமாகச் செய்து தருகிறாள். அதை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறும் முன் தற்செயலாக திரும்பி அங்கு அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரின் விழிகளைச் சந்திக்க அவர் எனக்கு மெல்ல தலையசைத்து விடை தருகிறார்.

[..]

இது – வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தளங்களில் சந்தித்து வெவ்வேறு வகைகளில் எனக்கு நெருக்கமான அவர்கள், வெவ்வேறு கணங்களில் ஏதோ நினைத்து காரணங்கள் இருந்தும் இல்லாமலும் தங்களின் குரலில் ஒவ்வொரு பாடலை பாடிப் பதிவு செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஒவ்வொரு முறை அதை கேட்கையிலும் ஏற்படுகிற வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும், அவர்களுக்கும் அவர்களின் குரல்களுக்கும்.

Written by Aravindan

ஓகஸ்ட் 6, 2013 at 4:58 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

Follow

Get every new post delivered to your Inbox.

Join 40 other followers