சிறுமழை

கடற்கரைக் குறிப்புகள்

leave a comment »


சூழலில் கவனம் இழந்து அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டு நிற்கும் குறி சொல்லும் பெண் ஒருவர், நிமிர்ந்து என்னைக் கண்டதும் நொடிப்பொழுதில் முகம் மலர்ந்து எனக்கான முக்கிய தகவல் அவரிடம் இருப்பதாகச் சொல்கிறார். விற்பனையாகாத சலிப்பில் நின்றிருப்பவன் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் ஊத, அவசர அவசரமாக அலைபேசிகளை எடுத்து படம் எடுக்க முனைவோரின் தொடர் புகைப்படச் சட்டங்கங்களின் வழியே பறந்து நகர்கின்றன சோப்பு நீர்க் குமிழிகள். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் கால்சட்டைகளை மடித்துக்கொண்டு மூன்று நண்பர்கள் கடலுக்குள் இறங்க, அவர்களை நோக்கி வருகிற அலையின் உயரம் மிகச்சரியாக நடுவே நிற்பவரின் கால்சட்டையில் மடித்த நான்கு மடிப்புகள், மற்ற இருவரும் ஆடை நனைந்து ஆச்சரியக் கூச்சலிடுகிறார்கள். கோபத்திற்கும் பயத்திற்கும் இடையே அசைந்து கொண்டேயிருக்கிற பலகையில் தடுமாறி நின்றவாறு, கடலுக்குள் இன்னும் இரண்டடிகள் நகர்கிற கணவனையும் சிறு மகளையும் எச்சரிக்கிற மனைவியையும் சேர்த்து ஒரேயடியாக மகிழ்ச்சியின் பக்கமாகத் தள்ளுகிறது அலை. பல முறை பல இடங்களிலிருந்து திரும்பித் திரும்பி கடற்கரை முழுக்கத் தேடிப் பார்த்த பின், ஏதோ ஒரு தள்ளுவண்டி நகர, பறவை வானில் ஏற, மேகம் நகர, காட்சி கலைந்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு காதல் சந்திப்பின் இடம் துல்லிய அட்ச ரேகை தீர்க்க ரேகையுடன் எனக்குப் புலப்படுகிறது. கடைகள் வைத்திருக்கும் ஆண்களும் பெண்களும் கலவையாகப் பிரிந்து இருபுறமாக நின்று வார்த்தைகளையும் சிறு கற்களையும் எறிந்து சண்டையிட்டு ஓய்ந்த அலுப்பின் கடைசி அலை சத்தமின்றி அவர்களை விட்டும் நீங்கும் போது, யாரோ ஒருவர் ஏதோ ஒரு அவச்சொல்லை முணுமுணுக்க, அத்தனை பேருமாக வெகுண்டு எழுந்து மீண்டும் கூச்சலிடத் துவங்குகிறார்கள். தரையில் நின்றபடி கடலோசையை எதிர்த்து எதையோ கத்திக்கொண்டேயிருந்த இரண்டு காகங்கள், அலை வந்ததும் ஒய்யாரமாக எழுந்து பறந்து, அலை நீங்கியபின் மீண்டும் அதே இடத்தில் நின்று கத்தத் துவங்குகின்றன. உயர்ந்த கொம்பின் உச்சியில் நிற்கும் ஒரு கூடையில் , புல்லாங்குழல்களைப் பூக்களைப் போலச் சுற்றி அடுக்கிக் கொண்டு நகர்கிறவன் ஒரு நொடி நின்று வாசிக்க, அவன் நிழலில் தலைக்கு மேல் ஒரு இசைக் கிரீடம். முதல் வரிசையில் கடலுக்கு மிக அருகே நிற்க விழைந்தவர்கள், தொலைவில் அமர்ந்தபடி நோட்டம் விடுபவர்கள், இடையே நின்றும் ஓடியும் மகிழ்கிறவர்கள் எனப் பல அடுக்குகளில் பல தூரத்திற்கு மக்கள் கலைந்திருக்க, ஒவ்வொருவரின் தனித் தனி கடற்கரைகளை இணைத்துப் பின்னியதைப் போல விரிகிறது நிலம். அத்தனை களேபரங்களும் இடையே, உவமைகளுக்கும் உருவகங்களுக்கும் வெகு தொலைவிருந்து நடந்து வருகிற பெண் ஒருவர், நின்று, காத்திருந்து, அலை அவர் காலைத் தொட்டதும், ஒரு வாளியில் கடல் நீரை அள்ளிக்கொண்டு சர்வசாதாரணமாக தன் கடைக்குத் திரும்புகிறார். வீடு வரை என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, அத்தனை கவனமாக இருந்தும் காலை நனைத்து விட்ட அந்த ஒரே ஒரு அலை.

Written by sirumazai

மார்ச் 31, 2023 இல் 10:02 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக