சிறுமழை

சூரியன் தோன்றுது சாமத்திலே

with 2 comments

வெள்ளிக்கிழமை காலை எழுந்ததும், அனைத்துப் பாடல்களும் வெளியான செய்தி கேட்டு, அவசர அவசரமாகப் பாடல்களைத் தரவிறக்கி, shuffleல் ஓட விட்டு, முதல் முறையாகப் பாடல்களைக் கேட்டபடி காலை நடைப்பயிற்சியில் நடந்து கொண்டிருக்க, மெதுவாகத் துவங்கி ஒரே குறிக்கோளுடன் படிப்படியாக வேகமெடுக்கிற இசை, இதயத்துடிப்பை அதிகரித்துக்கொண்டே நீள, இதுவே உச்சம் என்றெண்ணுகையில் எல்லாம் விடாமல் அடுத்த தளத்திற்கு உயர்ந்துகொண்டிருக்கிற இந்த இசைக் குறிப்புக்கு என்ன பெயர் என ஒரு கணம் அப்படியே நின்று, கால்சட்டையிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து, அது ‘காமத்துப்பால்’ என்று அறிந்து, ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் வாய்பிளந்து ‘அடப்பாவிகளா’ என்று நிற்பேன் என்று, தெருமுனையைத் தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன் என சக-அதிரடி-ராஜா-ரசிகரும் இசையமைப்பாளருமான தேவிஸ்ரீ பிரசாத் சொன்னது போல, அன்றைய ராசிபலனில் கூட – நிற்க, 2023 ஆண்டுப்பலனில் கூட – கணித்திராதது. இது இளையராஜாவின் ஆண்டு என்று அறியாமலே ஐந்தாம் மாதத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் அனைவரும், வருக, வருக.

[**]

எத்தனையோ தமிழ்த் திரைப்பாடல்களில் எத்தனை முறையோ எழுதப்பட்ட வார்த்தை தான் ‘ஆனால்’, ஆனால், ‘ஆனால்’ என்பதின் காரணமாக இரு முறை தொக்கி நிற்கவென வளர்கிற அந்த மெட்டை எழுதிக்கொண்டே செல்கையில், தன் மண்டைக்குள் இசைத்துக்கொண்டிருக்கிற இசைக்குழுவினரை ஒரு கணம் கைகாட்டி நிற்கச்சொல்லிவிட்டு, அதை வெறும் வார்த்தைக் குறிப்பாக மட்டுமே ராஜா எழுதிச் சென்ற அந்த ஆனால், அல்லது எழுதப்பட்ட வரிகளுக்குள்ளே நுழைந்து நெளிகிற மெட்டு சட்டெனக் கால் படாமல் தாவிவிடுகிற அந்த ஆனால், அனன்யாவின் குரல் தன் இரு காலணிகளையும் உதறிவிட்டு காலைச் சுற்றிச் சுழலும் தன் ஆடையை இரு கைகளால் இரு கொத்துகளெனப் பிடித்தபடி அறையைச் சுற்றி அனாயாசமாக ஆடி வருகையில் நின்று, திரும்பி, உங்களுக்கென மட்டும் சொல்கிற அந்த ஆனால், முதல் நான்கு வரிகளில் வழியும் காதலும், அடுத்த நான்கு வரிகளில் நீள்கிற ஏக்கமும், முழுக்குரல் கொண்டு மறைத்துப் பாடுகையில் மறந்துவிடக்கூடாதென அந்த உணர்வுகளை ஒரு வார்த்தைப் பாலமென மெல்ல இணைக்கிற அந்த ஆனால், அறுபதுகளில் கேட்ட அதே மெட்டு தானே என்று எண்ணிப் பாட முயன்று பார்த்தால் உங்களுக்குச் சந்தேகத்தைத் தருகிற அந்த ஆனால், எண்பதைத் தொடுகையில் தனக்கென ஒரு புது ஒலிக்கூடத்தை அமைத்துக்கொண்டு தன் தினசரிப் பணியில் வழக்கம் போல் ஆழ்ந்துவிட்ட ராஜா, ஒரு காலைப் பொழுதை மேலும் சுவையாக்க தனக்காகவும் பிறர்க்காகவும் சேர்த்து எழுதிய ஒரு ஆனால்.

[**]

வெள்ளைச் சீருடையில் வீடு திரும்பும் பிள்ளைகள் சாலையில் தேங்கிய மழைநீரைத் தாண்ட விழைகிற குதூகலம், யாரோ எட்டித் தொட்டு விட்டு நகர்ந்தபின்னும் தொடரும் பூங்கிளையின் அசைவு, கேட்க வேண்டிய அவசியம் இன்மைக்கும் தருவ தறியாமல் தானாகத் தரப்படும் தன்மைக்கும் இடையில் கரையும் ஒரு நெற்றி முத்தம், படிகளைக் கண்டவுடனே தானியக்கத்திலே உற்சாகமாகச் சில படிகளைத் தாண்டி ஏறுகிற கால்கள், ஒற்றைக் கற்களாக நீள்கிற ஆற்றுப்பாதையில் ஒவ்வொரு காலாக வைத்து நடக்கையில் முன்னிருந்து யாரோ நீட்டிய ஒரு உதவிக் கை, நிலைக்கண்ணாடியில் தன்னையே கண்டு நகர்ந்தபின் ஏனோ வருகிற புன்னகை, இவை அனைத்திலும் இருக்கிற இயல்பான இயக்கம், அசைவு, மயக்கம், மகிழ்வு – சுருக்கமாகச் சொன்னால் ஒரு இளையராஜாப் பாடலைப் போல் நகர்கிறது, நெஞ்சில் ஒரு மின்னல். பல கிட்டார் தந்திகளில் சேர்த்து இறுக்கக் கட்டிய பாட்டில், ’நாளோடு நாளும் வளரும் அன்பு’ என்பதாக மலர்கிற அந்த குரல். சென்ற வருடம், கடற்கரையில் அர்த்த ராத்திரியில் வாத்தியக்குழுவோடு இசைத்தபடி ஒரு மாய உலகின் கதவைத் திறந்த போது ராஜா காட்டிய ஆச்சரியத்தை விட, ‘நீயா? அது நீயா?’ என ஒவ்வொரு முறையும் கதைப் பாத்திரத்திற்காக ராஜா கொள்ளும் ஆச்சரியம், இன்னும் அழகு. பாழும் இந்த உலகைக் கூட சில நிமிடங்கள் ரசிக்கும்படியாகக் காட்டிவிடும் இந்தப் பாடல்களைக் கேட்டபின், மீண்டும் காதலில் விழப்போவதாகச் சிலர் இணையத்தில் பேசிக்கொண்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அப்படி நீங்கள் விழுவதாயின், அதற்குப் பின்னான சம்பவங்கள் எதற்கும் ராஜா ரசிகர்கள் சங்கம் பொறுப்பேற்காது என்பதைப் பூரிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

[**]

அடி மேல் அடி மெதுவாக எடுத்து வைத்தபடி இப்படியும் அப்படியுமாக அசைந்து வருகிற, எந்நேரமும் மதம் கொள்ளக்கூடிய காமத்தை, மிரட்சியுடன் மெல்ல அணுகுகிற ‘பாவி நெஞ்சே’, காமத்திற்குச் சற்று முன் – காமம் – காமத்திற்குப் பின் என்பதான காலமயக்கத்தின் இன்பத்தில் திளைக்கிற இசைத்தொகை. பாதையற்ற யானை தன் இயல்பு மாறிப் போனதாக ராஜா பாடினாலும், முற்றிலும் புதிய களத்தில் வழக்கமான கட்டுப்பாடுகளைக் களைந்த பாடலில், ’உன் கை விரல் தொட்டு எட்டுத் திக்கும் மின்னல், என் மேனியில் ஓர் கணத்தில் கோடிப் பூக்கள் கொட்ட’ என வார்த்தைக்கு வார்த்தை தன் பாணியில் விவரித்துவிட்டு. ‘இன்பங்களே..’ என ராஜாவின் குரல் சாய்வது, உள்ளங்கை கொண்டு பாதி முகத்தை மூடி கொஞ்சம் வெட்கப்பட வைக்கிறது. இத்தனை வருட இசை அனுபவத்தில் பழுத்த ராஜாவின் கைகள், வெறும் காற்றிலிருந்து ஒரு பெரும் நீர்க்குமிழியை மெல்ல உருவாக்கி நம் கைப்பற்றி கை மாற்றுவது, திக் திக் என்ற பேரானந்தம்.

[**]

ஒரு முறை திரும்பி உங்களுடன் ஏறப்போகிறவர்களின் முகங்களைப் பார்த்துக்கொள்வதற்கும், ஏறி அமர்வதற்கும், இருக்கையிலிருந்து தூக்கியெறியப்படாமல் இருக்க அணியவேண்டிய தற்காப்பு வார்களைச் சரிபார்த்து இழுத்துப் பூட்டிக்கொள்வதற்கும் ஒரு பெருமூச்சைக் கூட்டி இழுத்து தயார்ப்படுத்திக்கொள்வதற்கும் உங்களுக்கு அளிக்கப்படுவது பன்னிரண்டு நொடிகள் மட்டுமே. எடுத்த எடுப்பில் எண்பதைத் தொட்டு, எதிர்த் திசையில் விடாமல் நம்மை நோக்கி விரைகிற நூற்றுக்கணக்கான பியானோ தந்திகளில் சிக்காமல் விரைகிற ராஜா – உங்கள் சாகச உணர்விற்கேற்ப அந்தரத்தில் என்றோ, இல்லை முடிவின்றி நீள்கிற தார்ச்சாலையில் என்றோ கற்பனை செய்து கொள்க – விரைவாகச் சென்றுகொண்டிருக்கையில் ஜம்மென ஒரு அரைவட்டம் அடிப்பது சாமத்தில் தோன்றும் சூரியனின் தரிசனத்திற்காக.

[**]

கிறிஸ்டஃபர் ஸ்டான்லி, அங்கங்கே Tom Waitsஐ நினைவுபடுத்துகிற (அவரின் ரசிகர்கள் மன்னிக்க) தன் குரல் வீச்சில், முதல் வரியிலேயே, புத்தம் புது மெட்டை ஒரு baseball பந்தைப் போல நம் கைக்கு அகப்படாமல் எறிந்துவிட, பாடலைத் துரத்துவது சுவாரசியமாகிறது. இரண்டாம் முறை ’கற்றாழையில் தேன் கசிந்ததே’ வரி வருகையில் மட்டும் ராஜா சேர்க்கிற வயலின், அதற்குள் ஒளிந்திருக்கும் ’இதயம்’ திரைப்படப் பாடலின் ‘பாட்டெடுக்க.. தாமதிக்க’ வரி உணர்வை விளக்கெரிவதைப் போலச் சுட்டிக்காட்டுவது சிலிர்ப்பு. மழைக்காட்சியில் காதலியின் ஜன்னல் வெளியே நின்று மனக்குமுறல்களைப் பாடிய காலங்கள் மறைந்து, முன்னோக்கி ஓடும் காலத்திற்குப் போட்ட ஆங்கார மெட்டை இழுத்துக்கொண்டு ஓடியும், தூக்கிப்பிடித்தும், அடர்ந்த நிழல் எனத் தொடர்வதுமாக நிகழ்கிற வயலின் ஜாலங்கள் – இத்தொகுப்பின் சிறந்த பாடலாக இதை முன்னிறுத்த முயல்கின்றன.

’The Good Bye’ன் மெலடியை துவக்கத்திலும் இறுதியிலும் பியானோ-sax-மீண்டும் பியானோ-sax என மாற்றி மாற்றி பிரியாவிடை தந்துகொண்டிருக்க, இடையில் ஏதேதோ பழைய நினைவுகளுக்குக் கிளை விடுகிற சர்க்கரை வயலின்களில் இரண்டு சிட்டிகை சோகம். Jazz, Blues, Soul, Waltz என்றெல்லாம் டிவிட்டரில் மக்கள் வகை பிரித்துச் சொல்லிக்கொண்டிருக்க, அவை எதுவும் அறியாத எனக்கு, 1976ல் துவங்கி தினசரித் தேடலில் எண்பதுகளின் துவக்கத்தில் ராஜா செழுமைப்படுத்திக்கொண்ட Ilaiyaraaja Genreஇல் ஒரு பாடல் இல்லாமல் இந்த அனுபவம் பூர்த்தியில்லை – ‘பூங்காற்று புதிதானது’ பாடலை மிக்ஸ்யில் போட்டு அரைத்துக் கொட்டியதைப் போல நகரும் ‘தென்றல் புதிது’ பாடலில், அதன் இரண்டாம் இசை, ரயில், புல்லாங்குழல், bass guitar மட்டுமில்லாமல், பொன் வண்டு, கடலைத் தேடும் நதி, புதிய தென்றல் என்ற காட்சிகளும் புதுப்பாடலில் சுவையாகச் சேர்த்துவிட்டதில் – அக்குறையுமில்லை. முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்கிற காலத்தைப் பற்றிப் பேச, தற்போது புழக்கத்தில் இருக்கும் குரல் வடிவம், மெட்டு, இசை என 2023ல் துவங்குகிற ’கால விசை’, நாற்பது விநாடிகளுக்குப் பின் இலகுவாக 1960க்கு நிறம் மாறுவது வியப்பு.

[**]

Shuffleஇல் வரிசை கலைந்து நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிற பாடல் தொடரில், எந்தப் பாடலின் வழியே வந்தாலும், அந்தப் பாடலின் ஆர்ப்பரிப்பை, உணர்வை, சுவையை ஒரே நொடியில் மறக்கடித்து, திகைக்கும் ஆழத்திற்கு இழுக்கிற ‘தேன் மழையோ’வில் எந்த இசைக்கருவியுமில்லை; எங்கிருந்து பெறப்பட்டிருக்கும் என்று ஆராயப் பழைய மெட்டின் சாயலுமில்லை; தேன் என்றாலும், கண்ணீர் அருவியென்றாலும் அதில் இன்பமுமில்லை, துன்பமுமில்லை; யார் யாருக்காக எந்த உணர்வில் பாடுகிறார்கள் என்ற வரைமுறைகளுமில்லை. அமானுஷ்யம் என்று சொல்வது அதிகம், உக்கிரம் என்று சொல்வதும் அதிகம், நெருக்கம் என்று சொல்வது அதிகம், பிரிவு என்று சொல்வதும் அதிகம், கோபம் என்று சொல்வது அதிகம், இணக்கம் என்று சொல்வதும் அதிகம் என உணர்வுகளுக்குப் பொதுவான முதல் படியில் நின்றபடி, மூச்சொலியில் மூழ்கிய குரலில் ஒலிக்கிற அந்த எழுபத்து ஏழு விநாடிகள் ஒவ்வொரு முறையும் திகைப்பூட்டுகிறது. முழுக்கக் காய்ந்த சருகின் ஓரத்தில் கொஞ்சம் பசுமையைப் போல் பாடலின் உணர்வு கலையும் அந்த ’நீ உள்ளம் கெஞ்சிக் கொஞ்சுகிற..’ ஒரு வரியை ஒவ்வொரு முறையும் கைவசப்படுத்த மனம் முயல்கிறது.

இசை வாத்தியங்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் பன்னிரண்டு இசைக்குறிப்புகள் கூடி நின்று ஒரு ரகசியத்தைப் போல அடைகாக்கிற இந்தப் பாடல், முழு ஓவியங்களெனச் சுற்றிச் சுற்றி வருகிற பாடல்களுக்கிடையில் திடுமெனத் தோன்றி காட்சியைத் தலைகீழாக்குகிறது. ரகளையான வண்ணங்களை வாரி இறைத்து அலங்கரித்த இந்தப் பாடல்களை, இதே மே மாதம் பதினான்காம் தேதியில் நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்னர் சுற்றத் துவங்கிய தன் இசை ராட்டினத்தில் இன்னொரு பெட்டகமாகச் சேர்த்துவிட்டிருக்கிற ராஜா, அதற்கு அச்சாரமாக ஏதோ ஒரு அறையில் வெறும் மேஜை மீது தாளம் போட்டுக்காட்டிப் பாடி நின்ற பின், படைத்த எத்தனை ஆயிரம் ஓவியங்களில் எத்தனை எத்தனை கீற்றுகள், ஒரு கீற்றென நின்றுவிட்ட இந்தப் பாடலின் அடியில் புதைந்திருப்பது எத்தனை எத்தனை ஓவியங்கள்.

Written by sirumazai

மே 14, 2023 at 10:01 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

கடற்கரைக் குறிப்புகள்

leave a comment »

சூழலில் கவனம் இழந்து அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டு நிற்கும் குறி சொல்லும் பெண் ஒருவர், நிமிர்ந்து என்னைக் கண்டதும் நொடிப்பொழுதில் முகம் மலர்ந்து எனக்கான முக்கிய தகவல் அவரிடம் இருப்பதாகச் சொல்கிறார். விற்பனையாகாத சலிப்பில் நின்றிருப்பவன் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் ஊத, அவசர அவசரமாக அலைபேசிகளை எடுத்து படம் எடுக்க முனைவோரின் தொடர் புகைப்படச் சட்டங்கங்களின் வழியே பறந்து நகர்கின்றன சோப்பு நீர்க் குமிழிகள். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் கால்சட்டைகளை மடித்துக்கொண்டு மூன்று நண்பர்கள் கடலுக்குள் இறங்க, அவர்களை நோக்கி வருகிற அலையின் உயரம் மிகச்சரியாக நடுவே நிற்பவரின் கால்சட்டையில் மடித்த நான்கு மடிப்புகள், மற்ற இருவரும் ஆடை நனைந்து ஆச்சரியக் கூச்சலிடுகிறார்கள். கோபத்திற்கும் பயத்திற்கும் இடையே அசைந்து கொண்டேயிருக்கிற பலகையில் தடுமாறி நின்றவாறு, கடலுக்குள் இன்னும் இரண்டடிகள் நகர்கிற கணவனையும் சிறு மகளையும் எச்சரிக்கிற மனைவியையும் சேர்த்து ஒரேயடியாக மகிழ்ச்சியின் பக்கமாகத் தள்ளுகிறது அலை. பல முறை பல இடங்களிலிருந்து திரும்பித் திரும்பி கடற்கரை முழுக்கத் தேடிப் பார்த்த பின், ஏதோ ஒரு தள்ளுவண்டி நகர, பறவை வானில் ஏற, மேகம் நகர, காட்சி கலைந்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு காதல் சந்திப்பின் இடம் துல்லிய அட்ச ரேகை தீர்க்க ரேகையுடன் எனக்குப் புலப்படுகிறது. கடைகள் வைத்திருக்கும் ஆண்களும் பெண்களும் கலவையாகப் பிரிந்து இருபுறமாக நின்று வார்த்தைகளையும் சிறு கற்களையும் எறிந்து சண்டையிட்டு ஓய்ந்த அலுப்பின் கடைசி அலை சத்தமின்றி அவர்களை விட்டும் நீங்கும் போது, யாரோ ஒருவர் ஏதோ ஒரு அவச்சொல்லை முணுமுணுக்க, அத்தனை பேருமாக வெகுண்டு எழுந்து மீண்டும் கூச்சலிடத் துவங்குகிறார்கள். தரையில் நின்றபடி கடலோசையை எதிர்த்து எதையோ கத்திக்கொண்டேயிருந்த இரண்டு காகங்கள், அலை வந்ததும் ஒய்யாரமாக எழுந்து பறந்து, அலை நீங்கியபின் மீண்டும் அதே இடத்தில் நின்று கத்தத் துவங்குகின்றன. உயர்ந்த கொம்பின் உச்சியில் நிற்கும் ஒரு கூடையில் , புல்லாங்குழல்களைப் பூக்களைப் போலச் சுற்றி அடுக்கிக் கொண்டு நகர்கிறவன் ஒரு நொடி நின்று வாசிக்க, அவன் நிழலில் தலைக்கு மேல் ஒரு இசைக் கிரீடம். முதல் வரிசையில் கடலுக்கு மிக அருகே நிற்க விழைந்தவர்கள், தொலைவில் அமர்ந்தபடி நோட்டம் விடுபவர்கள், இடையே நின்றும் ஓடியும் மகிழ்கிறவர்கள் எனப் பல அடுக்குகளில் பல தூரத்திற்கு மக்கள் கலைந்திருக்க, ஒவ்வொருவரின் தனித் தனி கடற்கரைகளை இணைத்துப் பின்னியதைப் போல விரிகிறது நிலம். அத்தனை களேபரங்களும் இடையே, உவமைகளுக்கும் உருவகங்களுக்கும் வெகு தொலைவிருந்து நடந்து வருகிற பெண் ஒருவர், நின்று, காத்திருந்து, அலை அவர் காலைத் தொட்டதும், ஒரு வாளியில் கடல் நீரை அள்ளிக்கொண்டு சர்வசாதாரணமாக தன் கடைக்குத் திரும்புகிறார். வீடு வரை என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, அத்தனை கவனமாக இருந்தும் காலை நனைத்து விட்ட அந்த ஒரே ஒரு அலை.

Written by sirumazai

மார்ச் 31, 2023 at 10:02 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

புன்னகை தென்படும் தொலைவுகள்

with 2 comments

சிறுமிக்கு எட்டு வயதிருக்கும். மேல்வரிசையில் முன்னே இரண்டு பற்களில்லை, அதற்குப் பதிலாக பளீர் புன்னகைகளை அதிலே இட்டு நிரப்பிக்கொண்டே இருக்கிறாள். மூக்கின் மேல் கண்ணாடியையும் அது தந்த அசௌகரியத்தையும் முகத்தில் கண்டதாக நினைவு. இரட்டை ஜடை. துவக்கமும் முடிவுமின்றி சிறிய வட்டப் பூங்காவைச் சுற்றிச் சுற்றி வளைகிற சாலையிலே மிதிவண்டி ஓட்டப் பழகிக்கொண்டிருக்கிறாள். மிதிவண்டியைச் சமநிலையில் செலுத்தவும் வேகம் குறையாமல் மிதிக்கவும் தெரிகிறது. இருந்தும் சில சமயங்களில் அவளின் மனம் ஏனோ அவளை லேசாய் சாய்க்கப் பார்க்கிறது. இன்னொரு மிதிவண்டியின் இருக்கையில் அமராமலே நின்றேறி மிதித்துக்கொண்டு அதிவேகமாக அவளை திடீர் திடீரெனக் கடந்து செல்கிறான் அவளின் தம்பி. இருவருக்கும் மூத்தவளாக இன்னொரு சிறுமி இவர்களைக் கண்காணித்தபடி நிற்பதும் நடப்பதும் ஓடுவதுமாகத் திரிகிறாள். இந்த மூவருக்குமிடையே நெற்றியில் வியர்வை படர்ந்தபடி நடுவயது அப்பா, அன்று அலுவலகத்திற்கு அணிந்து சென்ற உடையில், கையில் ஒரு பையுடன். மூவருக்கும் எதிர்த்திசையில் நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்.

வட்டப்பாதையிலிருந்து மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கிற குறுஞ்சாலைகள் பெரும் போக்குவரத்தைக் காணும் சாலைகளிலே கலக்கின்றன. அந்தக் குறுஞ்சாலைகளின் வழியே தடம்மாறி வட்டப்பாதைக்குள் நுழைந்துவிடத் தலைகாட்டும் பெரு வாகனங்கள், மக்காச்சோளம் வாங்க வேண்டி கையை உதறிவிட்டு ஓடுகிற பிள்ளைகள், ஒரு கணம் கூட கோர்த்த விரல்களை விட மறுக்கும் இளம் காதலர்கள், பள்ளியிலிருந்து விரைவாக வீடு திரும்புகிற பெற்றோர்கள், துவங்குகிறார்களா திரும்புகிறார்களா எனக் கணிக்க முடியாதபடி எங்கெங்கோ செல்கிற யார்யாரோ என இந்தக் காட்சியில் ஏராளமான சிக்கல்கள். அப்பாவின் முகத்தில் நீங்காமல் படர்ந்திருக்கும் பணிவின் கீழே லேசான கலக்கம் தென்படுகிறது. அக்காவையோ அப்பாவையோ பார்க்கிற நொடியில் சிறுமிக்குத் தாங்கமாட்டாத புன்னகை. தம்பி பின்னாலிருந்து விர்ரென கடக்கையில் புன்னகையுடன் புருவங்கள் உயர்ந்து, கருவிழிகள் இவ்வோரத்திலிருந்து அவ்வோரத்திற்கு உருள்கிறது. அவர்கள் காட்சியிலிருந்து மறைந்ததும் புன்னகை மெல்ல வடியத்துவங்குகிறது. சில நொடிகளில் அது முற்றிலும் மறைந்து, லேசான பதற்றம். சதா வளைந்து கொண்டேயிருக்கிற பாதையில் அவர்களை எதிர்பார்த்து விழிகளுடன் சேர்த்து வண்டியையும் சாய்க்க எத்தனித்து, அவர்களைக் கண்டதும் மீண்டும் மீண்டும் சுதாரிக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் சிறுமியின் அக்கா அயர்ந்து வழியில் அங்கங்கே தேங்கிவிடுகிறாள், அப்பா ஓரிடத்தில் நின்றுவிடுகிறார். அவர்கள் தென்படாத இடைவெளி நீண்டுகொண்டே இருக்கிறது. ஐந்தாறு சுற்றுகள் இந்தக் காட்சியைக் கண்டபின், சிறுமி கலக்கத்துடன் அவர்களைத் தேடுகிற ஒரு நொடியில். என்னையும் மீறி, அவளைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டி புன்னகைத்துவிட்டேன். ஒரு நொடி குழம்பித் திகைத்தவள், அடுத்த நொடியில் ஒரு பெரும் புன்னகையில் அதை மறந்தாள்.

அடுத்த முறை அவளைக் காண்கையில் என்ன செய்வதென நான் யோசிக்கும் முன்னரே, வளைவிலிருந்து புன்னகையுடன் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு வருபவளை எவ்விதத்திலும் கைவிடத் தோன்றவில்லை. எங்கள் மூவரின் பார்வைகளையும் புன்னகைகளையும் சேர்த்து இறுகப் பின்னிய கயிற்றின் மேலே சீராக விரைந்துகொண்டே இருக்கிறாள். ஓரிடத்தில் நின்றுவிட்ட அவளின் அப்பாவும், சில சமயம் நடந்தும் சில சமயம் நின்றும் காத்திருக்கும் அக்காவும், ஒரே வேகத்தில் சுற்றி நடந்து வருகிற நானும் சில சமயங்களில் மிக நெருக்கமாக ஒன்றாக வழியில் தோன்றிவிட்டால், யாரைப் பார்ப்பதென்ற குழப்பங்கள் இன்றி, நேரே பார்த்தவாறு புன்னகைக் கொடி காற்றில் சரசரக்க நகர்கிறாள். ஒரு இருபது சுற்றுகளுக்குப் பின், மிதிவண்டிகள் ஓரமாக நிறுத்தப்படுகின்றன. மூன்று பிள்ளைகளும் அப்பாவைச் சுற்றி ஓடி விளையாடுகிறார்கள். கடைசியாக அவளைப் பார்த்த பொழுது, அவர்களைக் கடந்து செல்கிற யாரோ தெரிந்தவர் ஒருவருக்காக நால்வரும் வரிசையாக ஒரு நொடி நின்று பேசுகையில், குடும்பப் புகைப்படத்திலிருந்து வெளியே பார்ப்பதைப் போல என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

[**]

வட்டப்பாதையிலிருந்து கிளைத்துப் பிரியும் ஒரு குறுஞ்சாலையில் தினமும் ஒரு நடுத்தர வயதுப் பெண் இரு சக்கர வாகனப் பயிற்சி வகுப்பெடுக்கிறார். கல்லூரிப் பெண்கள் துவங்கி வயதான பெண்கள் வரை தினமும் எட்டு போட்டுப் பழகுகிறார்கள். அரிதாக ஒரு ஆணும் அந்தக் கூட்டத்தில் தென்படுவார், அவருக்குத் துணையாக ஒரு ஆண் நண்பர் நின்றபடி. பேசிப் பேசி அவர்களைத் தினமும் தயார் செய்து, தேர்ந்தெடுத்த நன்னாட்களில் கிளைச்சாலையைத் தாண்டி வட்டப்பாதைக்கு ஒவ்வொருவரையாகக் கொடியசைத்து அனுப்பி வைப்பார். இந்த சாலையோரப்பள்ளியைச் சேராத சில பெண்களும் வீட்டுவேலையை முடித்து விட்டு நண்பகல் வெயிலில் அங்கு வந்தடைவர். தேவையற்ற பயத்தையும் சங்கடத்தையும் போக்க வேண்டி, அவர்களும் சரி நானும் சரி, முகம் பார்த்துக்கொள்வதோ விழிகளைச் சந்திப்பதோ இல்லை. சிலர் பயத்தில் சாலைக்குக் குறுக்காக ஓட்டிவிடுவதுண்டு. சில இளம்பெண்கள் முதல் சுற்றிலேயே சீறிப் பாய்வதுண்டு. சிலர் சத்தமாக யாருக்குமில்லாமல் தமக்காகவே தங்களைக் கடிந்துகொள்வதும் கேலிசெய்து கொள்வதும் உண்டு. சிலரின் பின்னால் பொடியன் ஒருவன் அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டே ஓடுவதுண்டு. சில நடுத்தர வயதுப் பெண்களும் அவர்களின் கணவன்மார்களும் அரிய காதல் கணங்களைக் கண்டெடுக்கையில் நான் நடந்து செல்வதைக் கண்டு அவர்கள் வெட்கம் கொள்வதுண்டு. சிலர் சில வாரங்கள் தொடர்ந்து வருவதுண்டு, நினைவில் தங்குவதுண்டு. சிலர் ஓரிரு நாட்களில் விடைபெறுவதுண்டு.

ஒரு காட்சிக்கென யோசித்து எழுதி, இடம் தேர்ந்தெடுத்து, ஒளியை நிர்ணயித்து, ஆட்களைச் சேர்த்தபின், அரங்கேற்றத்திற்குச் சற்று முன்னர் நிறுத்தப்படுகிற காட்சியைப் போலவோ, காட்சியின் முழு வடிவத்திற்குள் நிறையாமல் பட்டும் படாமல் அனைவரும் ஒத்திகை செய்வதைப் போலவோ, அவர்களும் நானும் பரஸ்பரம் எங்களின் இருப்பை கவனித்தும் கவனிக்காமல் தினம் இயங்கிக்கொண்டே இருக்கிறோம். அதையும் மீறி முகம் பார்த்துக்கொண்டு விட்டால், பொதுவாகப் புன்னகைத்து விலகிக் கொள்கிறோம். வட்டப்பாதையில் அசந்தர்ப்பமாக அவ்வப்போது எதிரே நடந்து நான் நடந்து சென்றது, சில நாட்கள் நிகழ்ந்த அவர்களின் காட்சிகளின் அடிக்குறிப்பு. ஆயிரமாயிரம் முறை நான் பூங்காவைச் சுற்றி நடக்கையில், பல வயதுகளில், பல முகங்களில் இவர்கள் ஏறி எதிர்வரும் காட்சிகள், காலத்தின் குறுகிய பெட்டியினுள் சரம் சரமாக அடர்ந்து அடங்குகையில், அந்தச் சிறுமி சிறுவயதில் மிதிவண்டியில் துவங்கி, பல வருடங்கள் தொடர்ந்து பல பிராயங்களில் பல வாகனங்களில் வருவதாக ஒரு நாள் தோன்றிய பிரமிப்பு, என்னுடைய தொடர்காட்சிக்கான நன்னிறைவு.

[**]

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகான தன் வாழ்க்கையை ஆவலாக எதிர்பார்த்திருந்த அம்மாவை, முடிவில்லாத சலிப்பான என்னுடைய காலத்தைப் பகிரச்சொல்லிப் பணித்ததில் அவருக்கு இருந்த ஏமாற்றங்களும் வருத்தங்களும் சில வருடங்களில் கொஞ்சம் கரைந்திருக்கிறது. அந்த வருத்தங்களை என்னிடம் அவர் நேரடியாக வெளிப்படுத்தியதில்லை. மழை நின்ற காலைகளிலோ, வீட்டுவேலை எனக்கு அதிகம் இருந்த காலைகளிலோ, சில தாமதங்களினால் காலம் கடந்து வெயில் ஏறிவிட்ட நண்பகல்களிலோ நான் நடைபழகக் கிளம்பினால், இன்றைக்கும் போக வேண்டுமா என்று சில சமயங்களில் அவர் என்னைக் கேட்பதுண்டு. ஆம் என்று சொல்லிவிட்டு, உயரத்தில் உச்சிக்கிளையிருந்து உதிரத் துவங்கிச் சிறு சிறு வட்டங்களாகச் சுழன்றபடி மரத்தின் அடி வரை இறங்கும் வெளிர் ஊதா நிறப்பூக்கள் கொட்டிக்கொண்டே இருக்கிற வட்டப்பாதையில், திரைப்பட நடிகர்களின் பெயர் எழுதப்பட்ட சிறு பொம்மைக் குதிரைகளில் சவாரி ஏறிக்கொள்ளப் பிள்ளைகளை அழைக்கும் மணிச் சத்தத்துடன் சுற்றிக்கொண்டே இருக்கிற சிறு ராட்டினத்தை ஒவ்வொரு சுற்றிலும் தாண்டியபடி நான் நடக்கவே செல்கிறேன்.

[**]

இந்தப் பதிவிற்கு வாழ்க்கைச் சக்கரம் என்று தலைப்பிடாததை எண்ணி நீங்களும் நானும் ஆறுதல் அடைவோமாக.

Written by sirumazai

மார்ச் 25, 2023 at 9:31 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

காட்டுல வீசிடும் காத்தறியும்

with 4 comments

ஒரு புதிய ராஜா பாடலை முதல் முறை கேட்கையிலே, முதல் சரணத்தின் முடிவை நெருங்குகையிலே, பல்லவியைத் தொட்டு விடும் தூரத்தை அடைகையிலே, காலம் ஒரு நொடி உறைகிறது என்பதை அறிக. ஒரு எதிர்பார்ப்பு, சிறு பரிதவிப்பு. ஆயிரம் முறை கேட்டாலும் ராஜாவின் ஆயிரமாயிரம் சரணங்களின் கடைசி வரிகள், காலடி கடற்கரை மணலை சரசரவென இழுத்துக்கொண்டு பல்லவிக்குத் திரும்புவது ஒவ்வொரு முறையும் இதம் என்பதையும் அறிக. இந்த முறையும் அது நிகழ்ந்து விடவேண்டுமென்ற தேவையில்லாத கலக்கத்துடன் தொடர்கையில், ’காத்திருப்பேன் நான் திரும்பி வர / காட்டுமல்லியில அரும்பெடுக்க’ என மூன்று ஆச்சரிய புல்லாங்குழல் முடிச்சுகளை ராஜா அவிழ்க்கையில் ஏற்படும் ஆனந்தம் சொல்லில் அடங்காது என்ற தவிப்பையும் அறிக. கேட்கும் வரை அந்த வரிகள் எப்படி நகரும் என்று அறியாததும், கேட்டபின் இப்படித் தானே நகரும் என்று முன்னரே புரிந்திருந்ததாக உணர்வதிற்கும் இடையே ஒரு மெல்லிய இசைக் கோடு மட்டுமே என்று அறிக.

அடுத்த சரணத்தின் கடைசி வரிகள் இன்னும் ஒரு படி மேலே சென்று ‘சாட்சி சொல்லும் இந்த காடறியும் / காட்டுல வீசிடும் காத்தறியும்’ என்று முடிப்பது, இசையின் அர்த்தத்தை வார்த்தைகளிலும் வரிகளின் அர்த்தத்தை இசைக்குறிப்புகளிலும் இடம் மாற்றி எழுதுகிற வித்தை என்றறிக. அந்த வித்தையினாலே ஒரு காற்புள்ளியைக் கூட தொனிக்க வைப்பது சுலபம் என்றறிக.

ஒரு வரி மெட்டு அமைத்த பின் அதில் மிக்கச்சிறு தேக்கங்கள், ஏக்கங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் மட்டுமே சேர்த்தாலும் அடுத்த வரியில் அடைகிற தொலைவும் நிறையும் ஏராளம் என்பதை நாமறிந்த செய்தி எனக் கொள்க. ‘கனவெனக்கு வந்ததில்ல / இது நெசமா கனவு இல்ல / கனவாப் போனது வாழ்க்கையில்ல / வாழ்க்கைய நெனச்சு வாழ்ந்ததில்ல’ என வார்த்தைகளைப் பெரிதாகப் புரட்டிப் போடாமலே பெரும் அர்த்தங்களைப் புரிய வைப்பது அதே வித்தையின் தொடர்ச்சி என்பதை எண்ணிப் புன்னகைக்க. காட்டில் கிடக்கிற நறுமணப்பூ ஊதுபத்தியாகி அறையின் மூலையில் சிறு வெண்கோட்டு புகையாகக் கசிவதைப்போல, ராஜாவே மெட்டமைத்து வரிகளும் எழுதிப் பாடுவதென்பது பலநிலைகளில் உருமாறும் தொடர்மயக்கம் என்பதை உணர்க.

தாளகதி சற்றே தளர்ந்தால் குளிர்மலைகளில் தவழ்ந்த ‘கண்ணே கலைமானே’, சற்றே துரிதப்படுத்தினால் மோகத்தில் இறங்குகிற ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன’. உணர்வுகளில் சற்றும் தொடர்பில்லாத இப்பாடல்கள் எழுதப்பட்ட தாள்களில் இருக்கிற இசைக்குறிப்புகளில் ஏதும் இல்லை என்பதையும், அந்த ரகசியம் ராஜா மட்டுமே அறிந்தது என்பதையும் உணர்க.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் சற்றே அதிகப்படியாகத் தோன்றினால் – சில நாட்களுக்கு முன்னர், பன்னிரண்டு மணி வெயில் சாலையில் ’சொல்லிவிடு வெள்ளிநிலவே’ புல்லாங்குழலை இறைத்தபடி ஒரு வாகனம் விரைந்த சென்றபின், சூழல் ஒரு நொடி மயங்கி தலையை நிமிர்த்தி அடர்ந்த மரங்களுக்கிடையே நிலவைத் தேடுகிற எனக்கு, இவையெல்லாம் தினசரி நிகழ்வென்று கொள்க.

இசை இலக்கணங்களின் நேர்த்தி தவறக்கூடாது, கதைச் சூழல் பிசகக்கூடாது, கேட்ட மாத்திரம் காதேற மறுக்கக் கூடாது, உயிர் தொட மறக்கக் கூடாதென்ற கூறுகளுக்கு உள்ளாக ஒரு ஐந்து நிமிட பாடலை ஆர்மோனியப் பெட்டியுடன் ஒரே அமர்வில் எண்பது வயதிலும் எழுதிக் கொடுக்கிற ராஜா, யார் மறுத்தாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிற அற்புதம் என்றறிக.

Written by sirumazai

மார்ச் 11, 2023 at 10:50 முப

இசை இல் பதிவிடப்பட்டது

மரூஉ

leave a comment »

முதலில் யாரோ கவனித்துச் சொன்னார்கள்

நீ உச்சரிப்பதைப் போலவே

அந்த வார்த்தையை

நானும் உச்சரிக்கத் துவங்கிவிட்டேன் என்பதை.

நான்கெழுத்து கட்டத்திற்குள்

ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி

அடங்க மறுக்கும் பிள்ளையின் எழுத்துக்களைப் போல

அதன் நீள அகலங்களை நீ சுருக்கிப் பெருக்குவாய்.

சொல்கையிலேயே அதைச் சுவைப்பதைப் போலொரு பாவனை.

அதன் பொருளை உன் தொனியால் மெல்லத் தீண்டி உயிர்ப்பிப்பதைப் போல.



நிற்கையில் அமர்கையில் கிடக்கையில்

அவசரத்தில் அமைதியில்

எல்லா நிலைகளிலும்

ஒரு அரவணைப்பின் கோட்டுருவத்தினுள்

நம் உடல்கள் ஒரு நொடியில் பொருந்தப் பழகிவிட்டிருந்தன.

என் கன்னத்தின் மேல்விளிம்பில்

சற்றே கூடுதல் மென்மை

உன் விரல்கள் எப்போதும் அதைத் தேடின.

முத்தங்களைக் கேட்கவோ பெறவோ வார்த்தைகள் அவசியமில்லை.

அந்தக் காதலை நான் நுணுக்கமாக எப்போதும் கவனித்துக்கொண்டேயிருந்தேன்.

இருந்தும் அந்த வார்த்தை

எப்போதும் என்னிடம் மாறியது என்று விளங்கவில்லை.



உன் உச்சரிப்பை பெரும்பாலும் கைப்பற்றிய உற்சாகம்

சில துளி வித்தியாசங்களைத் தொட்டு விட முடியாத பதற்றம்

என் அகராதியில் அச்சொல்லிற்குத் தினம் ஒரு மறைபொருள்.

மற்றவர்களுடனான உரையாடல்களில்

அந்த வார்த்தையை கை இறக்கி விட

நேரம் பார்த்துக் காத்திருந்தேன்.

நமது உரையாடல்களில்

அதற்கு ஒரு கத்தியின் உறையை அணிவித்தேன்.

என்னுடைய எல்லாக் காதல்களும்

எனக்கு பாரமே என்பதை நீ அறிந்திருக்கவில்லை.

எப்போதும் போல அந்த வார்த்தையை நீ சொல்கையில் எல்லாம்

நானும் என் காதலும் மட்டும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டோம்

தொடர் ஓட்டத்தில் அடுத்த நிலைக்கு

அந்த வார்த்தையை இருவரும் கைமாற்றிக்கொள்வதைப் போல.



அக்காதலோ நீயோ

அவ்வார்த்தையின் உச்சரிப்பு முழுதும் உன்னுடையது என்பதோ

இன்று பெரும்பாலும் நினைவில் இல்லை.

அதைச் சொல்கையில் பதற்றங்கள் இல்லை

அதன் அடி ஆழத்தில் ஏதும் அசைவுகள் இல்லை

காதலை கற்று மறந்த துக்கங்களில்லை.

சில சமயங்களில் நினைவுகூர முயல்வதுண்டு

நீ வருவதற்கு முன்பாக

அந்த வார்த்தையை நான் எப்படி உச்சரித்துக்கொண்டிருந்தேன் என்று.

Written by sirumazai

ஜூன் 23, 2022 at 12:16 பிப

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,