சிறுமழை

சூரியன் தோன்றுது சாமத்திலே

with 2 comments


வெள்ளிக்கிழமை காலை எழுந்ததும், அனைத்துப் பாடல்களும் வெளியான செய்தி கேட்டு, அவசர அவசரமாகப் பாடல்களைத் தரவிறக்கி, shuffleல் ஓட விட்டு, முதல் முறையாகப் பாடல்களைக் கேட்டபடி காலை நடைப்பயிற்சியில் நடந்து கொண்டிருக்க, மெதுவாகத் துவங்கி ஒரே குறிக்கோளுடன் படிப்படியாக வேகமெடுக்கிற இசை, இதயத்துடிப்பை அதிகரித்துக்கொண்டே நீள, இதுவே உச்சம் என்றெண்ணுகையில் எல்லாம் விடாமல் அடுத்த தளத்திற்கு உயர்ந்துகொண்டிருக்கிற இந்த இசைக் குறிப்புக்கு என்ன பெயர் என ஒரு கணம் அப்படியே நின்று, கால்சட்டையிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து, அது ‘காமத்துப்பால்’ என்று அறிந்து, ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் வாய்பிளந்து ‘அடப்பாவிகளா’ என்று நிற்பேன் என்று, தெருமுனையைத் தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன் என சக-அதிரடி-ராஜா-ரசிகரும் இசையமைப்பாளருமான தேவிஸ்ரீ பிரசாத் சொன்னது போல, அன்றைய ராசிபலனில் கூட – நிற்க, 2023 ஆண்டுப்பலனில் கூட – கணித்திராதது. இது இளையராஜாவின் ஆண்டு என்று அறியாமலே ஐந்தாம் மாதத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் அனைவரும், வருக, வருக.

[**]

எத்தனையோ தமிழ்த் திரைப்பாடல்களில் எத்தனை முறையோ எழுதப்பட்ட வார்த்தை தான் ‘ஆனால்’, ஆனால், ‘ஆனால்’ என்பதின் காரணமாக இரு முறை தொக்கி நிற்கவென வளர்கிற அந்த மெட்டை எழுதிக்கொண்டே செல்கையில், தன் மண்டைக்குள் இசைத்துக்கொண்டிருக்கிற இசைக்குழுவினரை ஒரு கணம் கைகாட்டி நிற்கச்சொல்லிவிட்டு, அதை வெறும் வார்த்தைக் குறிப்பாக மட்டுமே ராஜா எழுதிச் சென்ற அந்த ஆனால், அல்லது எழுதப்பட்ட வரிகளுக்குள்ளே நுழைந்து நெளிகிற மெட்டு சட்டெனக் கால் படாமல் தாவிவிடுகிற அந்த ஆனால், அனன்யாவின் குரல் தன் இரு காலணிகளையும் உதறிவிட்டு காலைச் சுற்றிச் சுழலும் தன் ஆடையை இரு கைகளால் இரு கொத்துகளெனப் பிடித்தபடி அறையைச் சுற்றி அனாயாசமாக ஆடி வருகையில் நின்று, திரும்பி, உங்களுக்கென மட்டும் சொல்கிற அந்த ஆனால், முதல் நான்கு வரிகளில் வழியும் காதலும், அடுத்த நான்கு வரிகளில் நீள்கிற ஏக்கமும், முழுக்குரல் கொண்டு மறைத்துப் பாடுகையில் மறந்துவிடக்கூடாதென அந்த உணர்வுகளை ஒரு வார்த்தைப் பாலமென மெல்ல இணைக்கிற அந்த ஆனால், அறுபதுகளில் கேட்ட அதே மெட்டு தானே என்று எண்ணிப் பாட முயன்று பார்த்தால் உங்களுக்குச் சந்தேகத்தைத் தருகிற அந்த ஆனால், எண்பதைத் தொடுகையில் தனக்கென ஒரு புது ஒலிக்கூடத்தை அமைத்துக்கொண்டு தன் தினசரிப் பணியில் வழக்கம் போல் ஆழ்ந்துவிட்ட ராஜா, ஒரு காலைப் பொழுதை மேலும் சுவையாக்க தனக்காகவும் பிறர்க்காகவும் சேர்த்து எழுதிய ஒரு ஆனால்.

[**]

வெள்ளைச் சீருடையில் வீடு திரும்பும் பிள்ளைகள் சாலையில் தேங்கிய மழைநீரைத் தாண்ட விழைகிற குதூகலம், யாரோ எட்டித் தொட்டு விட்டு நகர்ந்தபின்னும் தொடரும் பூங்கிளையின் அசைவு, கேட்க வேண்டிய அவசியம் இன்மைக்கும் தருவ தறியாமல் தானாகத் தரப்படும் தன்மைக்கும் இடையில் கரையும் ஒரு நெற்றி முத்தம், படிகளைக் கண்டவுடனே தானியக்கத்திலே உற்சாகமாகச் சில படிகளைத் தாண்டி ஏறுகிற கால்கள், ஒற்றைக் கற்களாக நீள்கிற ஆற்றுப்பாதையில் ஒவ்வொரு காலாக வைத்து நடக்கையில் முன்னிருந்து யாரோ நீட்டிய ஒரு உதவிக் கை, நிலைக்கண்ணாடியில் தன்னையே கண்டு நகர்ந்தபின் ஏனோ வருகிற புன்னகை, இவை அனைத்திலும் இருக்கிற இயல்பான இயக்கம், அசைவு, மயக்கம், மகிழ்வு – சுருக்கமாகச் சொன்னால் ஒரு இளையராஜாப் பாடலைப் போல் நகர்கிறது, நெஞ்சில் ஒரு மின்னல். பல கிட்டார் தந்திகளில் சேர்த்து இறுக்கக் கட்டிய பாட்டில், ’நாளோடு நாளும் வளரும் அன்பு’ என்பதாக மலர்கிற அந்த குரல். சென்ற வருடம், கடற்கரையில் அர்த்த ராத்திரியில் வாத்தியக்குழுவோடு இசைத்தபடி ஒரு மாய உலகின் கதவைத் திறந்த போது ராஜா காட்டிய ஆச்சரியத்தை விட, ‘நீயா? அது நீயா?’ என ஒவ்வொரு முறையும் கதைப் பாத்திரத்திற்காக ராஜா கொள்ளும் ஆச்சரியம், இன்னும் அழகு. பாழும் இந்த உலகைக் கூட சில நிமிடங்கள் ரசிக்கும்படியாகக் காட்டிவிடும் இந்தப் பாடல்களைக் கேட்டபின், மீண்டும் காதலில் விழப்போவதாகச் சிலர் இணையத்தில் பேசிக்கொண்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அப்படி நீங்கள் விழுவதாயின், அதற்குப் பின்னான சம்பவங்கள் எதற்கும் ராஜா ரசிகர்கள் சங்கம் பொறுப்பேற்காது என்பதைப் பூரிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

[**]

அடி மேல் அடி மெதுவாக எடுத்து வைத்தபடி இப்படியும் அப்படியுமாக அசைந்து வருகிற, எந்நேரமும் மதம் கொள்ளக்கூடிய காமத்தை, மிரட்சியுடன் மெல்ல அணுகுகிற ‘பாவி நெஞ்சே’, காமத்திற்குச் சற்று முன் – காமம் – காமத்திற்குப் பின் என்பதான காலமயக்கத்தின் இன்பத்தில் திளைக்கிற இசைத்தொகை. பாதையற்ற யானை தன் இயல்பு மாறிப் போனதாக ராஜா பாடினாலும், முற்றிலும் புதிய களத்தில் வழக்கமான கட்டுப்பாடுகளைக் களைந்த பாடலில், ’உன் கை விரல் தொட்டு எட்டுத் திக்கும் மின்னல், என் மேனியில் ஓர் கணத்தில் கோடிப் பூக்கள் கொட்ட’ என வார்த்தைக்கு வார்த்தை தன் பாணியில் விவரித்துவிட்டு. ‘இன்பங்களே..’ என ராஜாவின் குரல் சாய்வது, உள்ளங்கை கொண்டு பாதி முகத்தை மூடி கொஞ்சம் வெட்கப்பட வைக்கிறது. இத்தனை வருட இசை அனுபவத்தில் பழுத்த ராஜாவின் கைகள், வெறும் காற்றிலிருந்து ஒரு பெரும் நீர்க்குமிழியை மெல்ல உருவாக்கி நம் கைப்பற்றி கை மாற்றுவது, திக் திக் என்ற பேரானந்தம்.

[**]

ஒரு முறை திரும்பி உங்களுடன் ஏறப்போகிறவர்களின் முகங்களைப் பார்த்துக்கொள்வதற்கும், ஏறி அமர்வதற்கும், இருக்கையிலிருந்து தூக்கியெறியப்படாமல் இருக்க அணியவேண்டிய தற்காப்பு வார்களைச் சரிபார்த்து இழுத்துப் பூட்டிக்கொள்வதற்கும் ஒரு பெருமூச்சைக் கூட்டி இழுத்து தயார்ப்படுத்திக்கொள்வதற்கும் உங்களுக்கு அளிக்கப்படுவது பன்னிரண்டு நொடிகள் மட்டுமே. எடுத்த எடுப்பில் எண்பதைத் தொட்டு, எதிர்த் திசையில் விடாமல் நம்மை நோக்கி விரைகிற நூற்றுக்கணக்கான பியானோ தந்திகளில் சிக்காமல் விரைகிற ராஜா – உங்கள் சாகச உணர்விற்கேற்ப அந்தரத்தில் என்றோ, இல்லை முடிவின்றி நீள்கிற தார்ச்சாலையில் என்றோ கற்பனை செய்து கொள்க – விரைவாகச் சென்றுகொண்டிருக்கையில் ஜம்மென ஒரு அரைவட்டம் அடிப்பது சாமத்தில் தோன்றும் சூரியனின் தரிசனத்திற்காக.

[**]

கிறிஸ்டஃபர் ஸ்டான்லி, அங்கங்கே Tom Waitsஐ நினைவுபடுத்துகிற (அவரின் ரசிகர்கள் மன்னிக்க) தன் குரல் வீச்சில், முதல் வரியிலேயே, புத்தம் புது மெட்டை ஒரு baseball பந்தைப் போல நம் கைக்கு அகப்படாமல் எறிந்துவிட, பாடலைத் துரத்துவது சுவாரசியமாகிறது. இரண்டாம் முறை ’கற்றாழையில் தேன் கசிந்ததே’ வரி வருகையில் மட்டும் ராஜா சேர்க்கிற வயலின், அதற்குள் ஒளிந்திருக்கும் ’இதயம்’ திரைப்படப் பாடலின் ‘பாட்டெடுக்க.. தாமதிக்க’ வரி உணர்வை விளக்கெரிவதைப் போலச் சுட்டிக்காட்டுவது சிலிர்ப்பு. மழைக்காட்சியில் காதலியின் ஜன்னல் வெளியே நின்று மனக்குமுறல்களைப் பாடிய காலங்கள் மறைந்து, முன்னோக்கி ஓடும் காலத்திற்குப் போட்ட ஆங்கார மெட்டை இழுத்துக்கொண்டு ஓடியும், தூக்கிப்பிடித்தும், அடர்ந்த நிழல் எனத் தொடர்வதுமாக நிகழ்கிற வயலின் ஜாலங்கள் – இத்தொகுப்பின் சிறந்த பாடலாக இதை முன்னிறுத்த முயல்கின்றன.

’The Good Bye’ன் மெலடியை துவக்கத்திலும் இறுதியிலும் பியானோ-sax-மீண்டும் பியானோ-sax என மாற்றி மாற்றி பிரியாவிடை தந்துகொண்டிருக்க, இடையில் ஏதேதோ பழைய நினைவுகளுக்குக் கிளை விடுகிற சர்க்கரை வயலின்களில் இரண்டு சிட்டிகை சோகம். Jazz, Blues, Soul, Waltz என்றெல்லாம் டிவிட்டரில் மக்கள் வகை பிரித்துச் சொல்லிக்கொண்டிருக்க, அவை எதுவும் அறியாத எனக்கு, 1976ல் துவங்கி தினசரித் தேடலில் எண்பதுகளின் துவக்கத்தில் ராஜா செழுமைப்படுத்திக்கொண்ட Ilaiyaraaja Genreஇல் ஒரு பாடல் இல்லாமல் இந்த அனுபவம் பூர்த்தியில்லை – ‘பூங்காற்று புதிதானது’ பாடலை மிக்ஸ்யில் போட்டு அரைத்துக் கொட்டியதைப் போல நகரும் ‘தென்றல் புதிது’ பாடலில், அதன் இரண்டாம் இசை, ரயில், புல்லாங்குழல், bass guitar மட்டுமில்லாமல், பொன் வண்டு, கடலைத் தேடும் நதி, புதிய தென்றல் என்ற காட்சிகளும் புதுப்பாடலில் சுவையாகச் சேர்த்துவிட்டதில் – அக்குறையுமில்லை. முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்கிற காலத்தைப் பற்றிப் பேச, தற்போது புழக்கத்தில் இருக்கும் குரல் வடிவம், மெட்டு, இசை என 2023ல் துவங்குகிற ’கால விசை’, நாற்பது விநாடிகளுக்குப் பின் இலகுவாக 1960க்கு நிறம் மாறுவது வியப்பு.

[**]

Shuffleஇல் வரிசை கலைந்து நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிற பாடல் தொடரில், எந்தப் பாடலின் வழியே வந்தாலும், அந்தப் பாடலின் ஆர்ப்பரிப்பை, உணர்வை, சுவையை ஒரே நொடியில் மறக்கடித்து, திகைக்கும் ஆழத்திற்கு இழுக்கிற ‘தேன் மழையோ’வில் எந்த இசைக்கருவியுமில்லை; எங்கிருந்து பெறப்பட்டிருக்கும் என்று ஆராயப் பழைய மெட்டின் சாயலுமில்லை; தேன் என்றாலும், கண்ணீர் அருவியென்றாலும் அதில் இன்பமுமில்லை, துன்பமுமில்லை; யார் யாருக்காக எந்த உணர்வில் பாடுகிறார்கள் என்ற வரைமுறைகளுமில்லை. அமானுஷ்யம் என்று சொல்வது அதிகம், உக்கிரம் என்று சொல்வதும் அதிகம், நெருக்கம் என்று சொல்வது அதிகம், பிரிவு என்று சொல்வதும் அதிகம், கோபம் என்று சொல்வது அதிகம், இணக்கம் என்று சொல்வதும் அதிகம் என உணர்வுகளுக்குப் பொதுவான முதல் படியில் நின்றபடி, மூச்சொலியில் மூழ்கிய குரலில் ஒலிக்கிற அந்த எழுபத்து ஏழு விநாடிகள் ஒவ்வொரு முறையும் திகைப்பூட்டுகிறது. முழுக்கக் காய்ந்த சருகின் ஓரத்தில் கொஞ்சம் பசுமையைப் போல் பாடலின் உணர்வு கலையும் அந்த ’நீ உள்ளம் கெஞ்சிக் கொஞ்சுகிற..’ ஒரு வரியை ஒவ்வொரு முறையும் கைவசப்படுத்த மனம் முயல்கிறது.

இசை வாத்தியங்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் பன்னிரண்டு இசைக்குறிப்புகள் கூடி நின்று ஒரு ரகசியத்தைப் போல அடைகாக்கிற இந்தப் பாடல், முழு ஓவியங்களெனச் சுற்றிச் சுற்றி வருகிற பாடல்களுக்கிடையில் திடுமெனத் தோன்றி காட்சியைத் தலைகீழாக்குகிறது. ரகளையான வண்ணங்களை வாரி இறைத்து அலங்கரித்த இந்தப் பாடல்களை, இதே மே மாதம் பதினான்காம் தேதியில் நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்னர் சுற்றத் துவங்கிய தன் இசை ராட்டினத்தில் இன்னொரு பெட்டகமாகச் சேர்த்துவிட்டிருக்கிற ராஜா, அதற்கு அச்சாரமாக ஏதோ ஒரு அறையில் வெறும் மேஜை மீது தாளம் போட்டுக்காட்டிப் பாடி நின்ற பின், படைத்த எத்தனை ஆயிரம் ஓவியங்களில் எத்தனை எத்தனை கீற்றுகள், ஒரு கீற்றென நின்றுவிட்ட இந்தப் பாடலின் அடியில் புதைந்திருப்பது எத்தனை எத்தனை ஓவியங்கள்.

Written by sirumazai

மே 14, 2023 இல் 10:01 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. நல்லா ஏழுதிருக்கீங்க தம்பி

    வந்தியத்தெவன்

    மே 14, 2023 at 1:31 பிப


பின்னூட்டமொன்றை இடுக