சிறுமழை

Posts Tagged ‘இசையலைகள்

இசையலைகள் #6

with 11 comments

 ’இந்தியன்’ திரைப்பட பாடல்கள் தாம் முதன் முதலில் நாங்கள் வீட்டில் டேப் ரிகார்டர் வாங்கிய துவக்கத்தில் அதிகம் கேட்டது. அறியாத வயதில் நான் அப்போது இருந்ததால் (இப்பவும் தான்), ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா’ பாடலை ஸ்வர்ணலதா நிச்சயம் மைக் முன்னர் அதி உற்சாகமான உடல்மொழியுடன் பாடியிருப்பார் என்றே நம்பிக்கொண்டிருந்தேன். கவர்மெண்ட்டுக்கே தடா போடுகிற நாயகியின் அலட்சியத்தை வெறும் குரலை மூலதனமாக வைத்து மட்டுமே கொண்டு வர முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு குறுஞ்சிரிப்புடன் தான் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றியது. நான்கு பாடகர்கள் சேர்ந்து பாடியிருந்தாலும், ‘கண்ணைக் கொஞ்சம் திறந்தேன் / கண்களுக்குள் விழுந்தாய்’ என்ற ரகசிய காதல் வலை விரிப்பின் கிறக்கத்தை பாடுகையில் ஸ்வர்ணலதா மட்டுமே அதை அநாயசமாக கொண்டு வந்திருந்தார். (உன்னிமேனனுக்கு சாதாரணமாகவே கடினம். இதில் ஸ்வர்ணலதாவுடன் இணைந்து வேறு!). எஸ்.பி.பி நடித்த வேடத்திற்கு உதித்தும், நாகார்ஜுனுக்கு எஸ்.பி.பியும் பாடி மிச்சம் வைத்தது சில வரிகளிலே என்றாலும், ‘உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம்’ என துவங்கும் போதே பாடல் ஸ்வர்ணலதாவின் கைவசம். (தொடர்ச்சியான அடுத்த வரிகள் ஒவ்வொன்றிலும் அதகளம்). இப்பொழுது பார்த்தாலும் மனதை அள்ளுகிற சிம்ரன் இடை வெட்டும் நடனத்தை மீறி, கூர்மையான குரலால் ‘ஒவ்வொரு காலையின் போது உன் மார்பில் நான் தூங்க வேண்டும்’ என்று வெட்டுவது சுகம். சந்தோஷப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் தெறிக்கும் உற்சாகமும், கேலியும், உச்சரிப்பின் செழுமையும் முழுநிலவாக பிரகாசித்த பாடல், கன்னத்தில் முத்தமிட்டாலின் pick-of-the-album பாடலான signore signore பாடலில். பாடல் முழுக்க பிண்ணனியில் ஊஞ்சலாடும் ‘ம்..ம்’ குரலும், இடையிசையில் குரல்ச்சறுக்கு விளையாட்டும்,  புருஷனக் கூட்டிட்டு வாரேன் என்கிற செல்ல மிரட்டலும், கட்டக் கடைசியில் நிராகரித்துச் சிரிக்கும் வரை, பார்த்து பார்த்து இல்லை இல்லை பாடிப் பாடி பிரமாதப்படுத்திய பாடல். இத்தனை சந்தோஷம் தெறிக்க பாடுபவர் நேரடி ஒளிபரப்பில் பாடுகையில் அத்தனை அதிர்ச்சி – தனிக்குரல் காற்றிலிருந்து மாயமாக அத்தனை குதூகலத்தையும் எங்கிருந்தோ கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் பகலெனில் இந்தியாவில் இரவு போல, இப்பாடல்களை தவிர்த்து பார்த்தால், தனித்து தவிக்கும் பெண்களின் குரலாகவும் அவர் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறார். வைரமுத்துவும் ரஹ்மானும் படைத்த சிறப்பான சோக இசைச் சிறுகதைகளின் நாயகி – எவனோ ஒருவன் வாசிக்கிறான் மற்றும் போறாளே பொன்னுத்தாயி. கதையின் இடையே வந்து மறையும் அழகிய வர்ணனை போல ‘கண்ணில் ஒரு வலி இருந்தால் / கனவுகள் வருவதில்லை’ என்றும் வந்து போனார்.  அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த தனிமையும் துயரும் இப்பாடல்களில் அவரின் குரல் மூலம் வெளிப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

‘கொடுத்த சம்பளமோ ஐந்து ரூபாய், நடிப்போ ஆனால் பத்து ரூபாய்’ என்று ஜோதிகா கவனத்தை ஆக்ரமிக்க முயற்சிக்கும் ‘திருமண மலர்கள் தருவாயா’ பாடல் அவரின் மற்றொரு பவுண்டரி. (’மாடி கொண்ட ஊஞ்சல்’ என்று ஏறும் போது கொஞ்சம் இடித்தாலும்). ரஹ்மான், வித்யாசாகருக்குப் பிறகு வந்த இசையமைப்பாளர்கள் யாரும் அவரை சரியான பாடல்களில் பயன்படுத்தவில்லை.

எம்.எஸ்.வி அறிமுகப்படுத்தியிருந்தாலும் இளையராஜாவால் பிரபலம் ஆனவர். இளையராஜா – ஸ்வர்ணலதா என்று பேசத்துவங்கினால், முதலில், ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட’ பாடலைப் பற்றி பேசியே துவங்க வேண்டும். அதிலும் அந்த துவக்க ஆலாபனை பற்றிப் பேசியே துவங்க வேண்டும். அதை அவர் பாடி முடித்த உடனே, ‘ஆங் போட்டி முடிஞ்சது எல்லோரும் வீட்டுக்கு போங்க’ என்று எஸ்.பி.பியிடம் சொல்லத் தோன்றும். (No offense meant). அதே போல கிறக்கமும் இனிப்புமாய் ஜேஸுதாஸையே மறைத்த பாடல் ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’. முதல் சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் ஆலாபனையை அவர் பாடி முடித்ததும் அதிலிருந்த கூடுதல் தேன் கீற்றை கேட்டு அடுத்த ஆலாபனையும் அவருக்கே தரப்பட்டது என்று தாரளமாக வாதிடலாம். இசையின் ராஜாதி ராஜரின் தந்திரங்களில், அவர் குரல் நிற்காமல் பம்பரமாய் கூத்தாடிய பாடலும் மிகச்சிறப்பானது.

தொண்ணூறுகளில் இளையாராஜா இசையமைப்பில் auto-tune modeக்கு சென்ற பின் வந்த இனிமையான செழுமையான மெலடிகளில் ஸ்வர்ணலதாவிற்கு அழகான பாடல்கள் அமைந்தன. மதன் எப்போதும் சொல்லும் ‘நீ தானே நாள் தோறும் நான் பாடக் காரணம்’ (ரெண்டு தடவ தானே சொன்னேன் என்கிறார்), ’காலையில் கேட்டது கோயில்மணி’, ‘நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திச பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல’ (எத்தனை அழகான பாடல்!), கேட்டதும் இழுக்கும் தாளகதியும் இதமான இசையுமாய் எப்போதும் ஈர்க்கும் ‘அந்தியில வானம்’ பாடல், ‘மலைக்கோயில் வாசலில்’ என சுருக்கமான ஆனால் சுவையான பட்டியல். அயிட்டம் நம்பர் பாடுவதென்பது வெறும் குரல் விளையாட்டாக இருந்த காலத்தில் (இப்போது அடித்தொண்டை, மூக்கு எல்லாம் சேர்த்தி) வந்த ‘ஆட்டமா தேரோட்டமா’ அது ஒரு கனாக்காலமாக இருக்கிறது.

நீருக்குள் மெதுவாக அசையும் தாவரம் போல நகரும் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாடலிலிருந்து அவரின் குரலை பிரித்தெடுத்து தனியே கற்பனை செய்ய ஏலாது. (பின்னர் ஒரு முறை அவர் அதை தொலைகாட்சியில் அதை பாடும் பொழுது அவருக்கு இருந்த உடல் வாதைகளினால் ஏற்பட்ட வலி குரலில் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்து வருத்தியது.)  மிகச்சமீபமாக கண்டெடுத்த ’உன்னை எதிர்பார்த்தேன் / தென்றலிடம் கேட்டேன்’ பாடலை அவருக்காக கேட்டு கேட்டே இரவில் தூக்கத்தில் ஆழ்வது பழக்கமாகி இரண்டு வாரங்கள் ஓடிப்போக, மறு நாள் காலை அவரின் மரணச் செய்தி வெளியாகி, அப்பாடலை மறக்க முடியாததாக்கி விட்டது.

ஆகச்சிறந்த பாடல் என்பது வாதங்களின்றி ’வள்ளி’யில் வந்த ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலாக இருக்கும். காலமென்னும் தேரை ஆடிடாமல் நிறுத்தி வைக்கும் மெட்டும், ராஜா அந்தப்பக்கமாக இசைத்துக்கொண்டிருந்த சிம்பொனியின் வயலின் சிதறல்களும் சேர்ந்து மிக அற்புதமான கணமொன்றில் நிகழ்ந்த அப்பாடல் அவருகென அமைந்தது மிகப்பொருத்தமே.

திரையுலக ஆதர்ஸ கலைஞர்களின் மரணம் நம்முள் ஏற்படுத்துகிற சலனங்கள் வியப்பானவை. யாரோ ஒரு ரசிகர் மிகச் சகஜமான சூழலில் அவர் பாடுவதை படமெடுத்ததை பார்த்த பொழுது, இவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக தொலைகாட்சிகளில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றியது. இல்லை ஒரு வேளை அதுவும் நல்லதே. வெறும் இந்த இசை கொண்டு மட்டுமே அவரை நினைவில் கொண்டு வரலாம் எப்போதும்.

———-

பி.சுசீலா தன் வெண்கலக் குரலில் பாடும் பொழுதெல்லாமே ஞாபங்களை கிளறிவிடக் கூடிய சாத்தியங்கள் உண்டு.  அதிலும்
குறிப்பாக நினைவுகளை தட்டி எழுப்பெவென பாட முடிவு செய்து விட்டு துவங்கும் ஹம்மிங், தமிழ் திரையின் எக்காலத்திலும் வந்த துவக்கங்களிலும் சிறப்பானவற்றுள் இடம்பெறும். திரைக்கதைப்படி இறந்தவள் உயிர் கொண்டு மீண்டு வருவதை ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற கவிஞர் அடிக்கோடிட்டு இப்பொழுதே நாயகியை பாட வைக்க, விஸ்வனாதன் – ராமமூர்த்தி அமைத்த மெட்டு காலத்தை அநாயசமாக வெல்லும். மெல்லிசை சுரங்கத்தை அப்போது தான் கண்டெடுத்த சமயம், அதை இவ்விசைமபைப்பாளர்கள் மிகக்கச்சிதமாகவே பயன்படுத்தினார்கள். ’அந்த நீல நதிக்கரையோரம்’ என்று துவங்கி மிகச்செழுமையாக வளையும் மெட்டு அதிக ஆபரணங்களின்றி எளிமையாக இருப்பதே வியப்பு. பக்க வாத்தியங்கள் உறுத்தாமல் ஒத்திசைக்க, மெட்டில் எத்தனை தேனெடுக்க முடியுமோ அத்தனை தேனெடுக்கும் விஸ்வனாதன் – ராமமூர்த்தி ஜோடியின் பாணியில் இன்றும் மயக்கும் பாடல்.

தென்றல் மெல்ல ஒரு பெரிய அறையின் உள்ளே பெருகும் உணர்வை தருகிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்த ‘பூவே செம்பூவே’வின் துவக்க இசை தாண்டி வரும் மெட்டு முன்னோர்களுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. அது நமக்கு மிகச் சுலபமாக வருகிற விஷயம் தானே என்று ராஜாவே உணர்ந்தது போல, பாடல்களின் இசையிலும் இடையிசைத் துணுக்குகளிலும் புகுத்தப்பட்டிருக்கும் நுணுக்கங்களே அவர் காலத்து முத்திரை. இறந்து போனதாக நினைத்த திருமதி கண்ணெதிரே மேடையில் நடனமாடும் சூழ்நிலைக்கு, மேடை மெல்லிசைப் பாடலுக்கான தேவைகளை மெட்டில் பூர்த்தி செய்துவிட்டு, சூழ்நிலை அதிர்ச்சியை முதல் இடையிசையில் ஹிந்துஸ்தானி பாணியிலும் அடுத்த இடையிசையில் மேற்கத்திய பாணியிலும் தருகிற அசாத்திய உழைப்பும் மேதமையும் என்னைப் போன்ற பக்தர்களை எப்போதும் ராஜா ராஜா என்றே முணுமுணுக்க வைக்கும்.

எண்பதுகளின் லைவ் ரிகார்டிங் மெல்ல மறைந்து அதிகத் தரமில்லாத சின்த்தசைஸர்கள் வைத்துக்கொண்டு புது இசையமைப்பாளர்கள் தவித்துகொண்டு இருந்த சமயத்தில் ரஹ்மான் கொண்டு வந்த ஒலியின் தரம், ‘மலர்களே மலர்களே இது என்ன கனவா’ பாடலின் துவக்கத்தில் திரைப்படக் காட்சியின் ஆயிரம் மலர்கள் கண்ட புத்துணர்ச்சியை எளிதாக தருகிறது. அதுவரை காலம் காலமாக தொடர்ந்த வந்த மெட்டமைக்கும் பாணி, இடையிசைக் கோர்ப்பு பாணியும் காலத்துக்கேற்ற மாற்றங்கள் பெற்று மெருகேறி, இறந்த காதலன் உயிருடன் இருக்கிறான் என்று காதலி நம்புகிற சூழலுக்கு வந்த அருமையான பாடல். கடைசியாக ”புத்தம் புது இசை” என்று விளம்பரங்கள் பெருமையாகச் சொல்லிக்கொண்டது மிகப்பொருத்தமாக இருந்தது புதுக்குரல்கள், புது ஒலிகள் என்று ரஹ்மான் காலத்தை தன் வசப்படுத்திய பொழுது தான்.

இந்திய திரையிசையில் தொடர்ச்சியாக இத்தனை செழுமையான இசை வேறெங்கும் கிடைத்ததாவென்பது சந்தேகமே. தமிழ் திரையிசை ரசிகர்கள் எல்லோரும் மூன்று முறை காலரை உயர்த்திக் கொள்ளலாம்.

Written by sirumazai

ஏப்ரல் 21, 2011 at 3:13 முப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

இசையலைகள் #2

with 7 comments

2005050415040401எனக்கு பத்து வயதிருக்கையில் பெரிய அக்காவை கடுப்பேற்ற ஒரு எளிய வழி இருந்தது. எஸ்.ஜானகியைப் பற்றி எதாவது குறை சொல்வது! அக்கா உடனடியாக சரணடைந்து விடுவாள். ஒரு நாள் தொடர்ந்து கடுப்பேற்றி, கிட்டதட்ட அழவைத்திருக்கிறேன். அவளை வென்றுவிட்டாலும், ‘இப்படி அபரிதமான ஒரு ரசிப்பாஎன்று ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னர் கல்லூரியில் ஒரு நாள் தோழியொருத்தி, ‘உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத பாடகி ஒருவர் உண்டென்றால், அது எஸ்.ஜானகி தான்!’ என்று சொல்ல, ‘என்னது?’ என்று வியப்பிலும் அதிர்ச்சியிலும் எழுந்து நின்றுவிட்டேன். பழைய நிலையிலிருந்து இந்தப் புதிய நிலையை நான் வந்தடைந்த  வழியில் பல நூறு எஸ்.ஜானகியின் பாடல்கள்!

ஜும்பா லாஹிரியின் புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இந்தப் புத்தகத்தை படிக்கையில், பக்கத்திலிருப்பவரை பிடித்து இழுத்துஇதைக் கொஞ்சம் படியேன்என்று சொல்லத் தோன்றும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். முதல் மரியாதை திரைப்படத்தில் வருகிற ராசாவே உன்ன நம்பி பாடலை கேட்கையிலெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும்! ஜானகி ஒரு குயிலின் கச்சிதத்துடன் அந்தப் பாடலின் ஹம்மிங்கை துவங்குவார். உச்சரிப்பில் மணமணக்கும் கிராமியம், பாட்டை சிதைக்காத பாவங்கள் என பிரமாதப்படுத்துகிறவர், ஏற்கனவே அழகான பாடலை ஒரு சுகமான சோகத்தில் முற்றிலுமாக தோய்த்தெடுப்பார். தமிழ் திரையுலகின் பாடகிகளை, இந்த ஒரு பாடலிலேயே மற்றவர்களை அபாரமாக வென்று முன்னேறுவதாக எனக்குத் தோன்றும்.

தாயழுதாளே நீ வர, நீ அழுதாயே தாய் வர என்று பாடுகிற போது அதில் உள்ள சோகமோ, ஆடை கூட பாரமாகும், பாரிஜாதம் ஈரமாகும் என்பதில் உள்ள மெல்லிய மோகமோ, பறவை போல பறந்து பறந்து, படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து என்பதில் தெறிக்கும் பரவசமோ (அந்த வரியை முடிக்கையில் ஒரு சிரிப்பு), சிரிக்கிறான், , ஓஹோ, ரசிக்கிறான் ராஜா என்பதில் உள்ள வெட்கமோ பாவங்களை மிக எளிதாக பாட்டில் நுழைத்தவர் (வெட்கபடத் தெரியாமல் பாரதிராஜாவிடம் அறை வாங்கிய நாயகிகள், ஜானகி குரலில் செய்ததை பாதி செய்தால் போதுமாயிருந்திருக்கும்).

9124சில பாடல்கள் ஜானகிக்கு என்றே விதிக்கப்பட்டவை. நாதம் என் ஜீவனே, காற்றில் எந்தன் கீதம், பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, பாடவா என் பாடலை, ஒரு பூங்காவனம் புதுமணம் எத்தனை பாடல்கள்! ஏற்கனவே மிகச்சிறப்பான பாடலை ஒரு பாடகர் அப்படியே வழிநடத்தி செல்ல முடியும் என்று தேவதை படத்தில் வருகிற ஒரு நாள், அந்த ஒரு நாள் பாடலைக் கேட்கையில் தோன்றும். எண்பதுகளின் நாயகிகளை இவரின் குரல் இன்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

வரிகள் இல்லாமலே உங்களை கட்டிப்போடும் வித்தையும் அவருக்குத் தெரியும். ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி பாடலின் துவக்க ஹம்மிங் நினைவில்லாமல் இருக்குமா? மெட்டி  ஒலி காற்றோடு  என் நெஞ்சை தாலாட்ட  பாடலில் ஜானகி துவக்கத்தில், பல்லவிக்குப் பிறகு, சரணத்திற்குப் பிறகு என வெறும் ஹம்மிங்காகவே ஒலிப்பார். வெள்ளைப் புறா ஒன்று பாடலை அவர் துவக்கும் விதத்திற்காகவே பல முறை கேட்பேன். இதயக்கோயில் படத்தில் பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் என்று ஒரு பாடல் உண்டு (இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்று என்று இதை சொல்வேன் ). அதில் பாதி ஜாமம்ம்ம்ம்ம்ம், காயும் போதும்ம்ம்ம்ம் என்று இழுப்பதெல்லாம் தேன்.

ஜானகியின் குரலில் எளிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரின் குரலில் உயர்ந்த தரமில்லை என்று நினைத்ததுண்டு. தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலைக் கேட்கையிலோ, எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா பாடலைக் கேட்கையிலோ, ஜேசுதாஸின் குரல் க்ளாஸ் என்றும் ஜானகியின் குரல் இதற்கு ஈடாகவே முடியாது என்றும் நினைத்த காலமுண்டு. இப்போது கேட்கையில், நிலைமை தலைகீழ்!

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கிடையில், குரல் மாறும் பச்சோந்தி ஜானகி. (அவரைத் தாழ்த்தி பேசவில்லை! ) சில்க் ஸ்மிதாவுக்குப் பாடும்போது, பேபி ஷாலினிக்கு பாடும் போது அவர் எத்தனை எளிதாக பாடுகிறார் என்பது வியப்பானது. மகளிர் மட்டும் படத்தில் வரும் காள மாடு ஒண்ணு பாடலில் மூன்று விதமான பாத்திரங்களுக்கு அவர் பாடியிருப்பார்.  ஆண் குரலில் பாடியிருப்பதாகக் கூட படித்ததுண்டு! இத்தனை பாவங்களுடன் ஒரு பாடகி இனி வரவியலாது.

இளையராஜாவிடம் ஜானகிக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடிய சித்ராவும், சில பாடல்களே பாடினாலும் ஜென்ஸி, உமா ரமணன், ஷைலஜா எனப் பலர் மனதில் நின்றாலும், எண்ணற்ற பாடல்களில் ராஜா இசைத்த வயலினைப் போல கச்சிதமாக கலந்து போனவர் எஸ்.ஜானகி. (எஸ்.பி.பியைப் போல!) அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

Written by sirumazai

ஜூன் 24, 2009 at 4:14 பிப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with