சிறுமழை

Archive for மார்ச் 23rd, 2006

என்றும் இளைய(ராஜா) இசை – 1

with 6 comments

இந்த வலைப்பூவில் (blog) நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. அதில் முக்கியமானவை தமிழும் இளையராஜா அவர்களின் இசையும் தான். தலைமுறைகளைத் தாண்டும் இசையைத் தரக்கூடிய இசையமைப்பாளர்களில் இசைஞானி முதன்மையானவர். இசைக்கருவிகளை உயிர்ப்பித்தல் அவருக்கு மட்டுமே சாத்தியம். இந்த வலைப்பூவில் அவரின் இசையைப்பற்றியும் அதனால் எனக்குள் உண்டான பாதிப்புகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்பது என் ஆசை.

எனக்கு இளையராஜாவின் அறிமுகம் சிறு வயதிலேயே கிடைத்துவிட்டது. ஒரு பத்து வயது என்று வைத்துக்கொள்ளலாம்.(இப்பொது எனக்கு வயது 21). என் அக்கா இசைஞானியின் விசிறி. அவள் சதா முணுமுணுக்கும் பாடல்களும் வானொலியும் விரும்பிக் கேட்கும் பாடல்களும் அவரின் பாடல்களாக இருந்தன. அப்போது அவரின் இசை என்னைக் கவரவில்லை. அதில் எனக்கு வருத்தமே.இப்பொது நான் அவரின் மிகப்பெரிய விசிறி. இந்த மாற்றம் நடைபெற்ற விதத்தையும் இங்கே தொடர்ந்து பதிவு செய்யப் போகிறேன். நான் இசை பயிலவில்லை. அதனால் நிச்சயம் இசை அறியாத பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கலாம் என நினைக்கிறேன்.

என் பத்து வயதிலே அவரின் இசை என்னை கவராத போதிலும் அவரின் சில பாடல்களை நான் ரசித்தேன்.அவற்றில் முதன்மையானது மௌன ராகம் படத்தில் வரும் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடல். அந்த பாடலை ஆயிரம் முறை கேட்ட பின்பும் என்னை அது கிறங்கடிப்பது தான் ஆச்சரியமே. அந்த ஆச்சரியமே இளையராஜாவை எனக்கு அடையாளம் காட்டியது.

நடிகர் மோகனுக்கும் இளையராஜாவுக்கும் எதோ ஒரு ராசி…. எத்தனை பாடல்கள்…. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. அதே போல் மணிரத்னத்திற்கும் இசைஞானி அற்புதமான பாடல்களை தந்துள்ளார். அதில் என்னுடைய அபிமான பாடல் இது தான்.
இந்த பாடல் திரைப்படத்தில் பாதிப்பாதியாக முன்று முறை ஒலிக்கும். தம்பதிகள் விவகாரத்துக்கு விண்ணப்பம் செய்துவிட்டு திரும்பும் போது…. மனைவியின் அன்பு சிறிதாய் வெளிப்படும் போது…. பின்னர் இருவரும் நன்பர்களை போல தங்களை மறந்து வெளியே செல்லும் போது….. இம்மூன்று முறையும் இப்பாடல் மிகச்சரியாக அந்த உணர்வைத் தரும்.

இந்த பாடலின் தொடக்கத்தில் எஸ்.பி.பி தன்னையே மறந்து பாடுவார்…. முதல் முறை கணவனின் நெஞ்சமும் பின்னர் மனைவியின் நெஞ்சமும் புண்படும் போது அதை ராஜா இசையாக மொழிப்பெயர்த்த விதமும் அதை எஸ்.பி.பி தந்த விதமும் அபாரம்.

இந்த பாடலின் இடையில் ஒலிக்கும் இசையில்(BGM) ட்ரம்பெட்டும் (trumpet) புல்லாங்குழலும் சேர்ந்து விளையாடும். மேற்கத்திய இசையை நம் ரசனைக்கு எற்ற வண்ணம் தருவதில் ராஜா ராஜா தான் என்பதை நிருபிக்க இது ஒரு சிறந்த பாடல். இந்த பாடல் திரைப்படத்தில் மலரும் இடம் இருவருக்கும் இடையே உள்ள வெற்றிடம் மெதுவாய் நிரம்பும் நேரம். இந்த மெட்டும் அதற்க்கேற்றார் போல் சுகத்திற்கும் சோகத்திற்க்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியில் உலவும். ஒரு உறவை தொடங்க தேவைப்படும் ஒரு ஆர்வம் இந்த பாடல் முழுவதும் வெளிப்படும்.

இத்தனை அழகான மெட்டை கொஞ்சமும் சிதைக்காமல் வாலி வார்த்தைகளை செதுக்கியிருப்பார். ஆரம்ப வரியே அத்தனை கவித்துவம். திருமணம் ஆனபின்னும் வாழ்க்கையைத் துவக்க மறுக்கும் பெண்ணைப் பார்த்து —- ‘ பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்’ என்று கேட்பது வாலியால் மட்டுமே முடியும். மேலும் இந்த பாடலை அழகாய் திரையில் கொண்டு வந்து எளிமையான காட்சிகளால் நம் நினைவில் நிற்கும்படி செய்திருப்பார்கள்.

ஏதோ ஒரு அழகான நொடியில் அமர்ந்து தன் ஆர்மோனியத்தில் ஒரு கணவன் மனைவியின் உண்ர்வுகளை ராஜா இசைத்தது பதினைந்து வருடங்கள் கழித்து என்னை எழுத வைத்திருக்கிறது. இன்றும் ஒவ்வொரு முறை காதிகளில் வழியும் போதும் அதே இனிய உணர்வுகளைத் தருகிறது. காற்றலையில் ஒளிந்திருக்கிற இந்த இசை போல இந்த இசையினுள் எங்கும் ஒளிந்திருக்கிறார் ராஜா என்கிற அந்த மகாகலைஞன்.

Written by sirumazai

மார்ச் 23, 2006 at 8:52 பிப

இசை இல் பதிவிடப்பட்டது