சிறுமழை

Archive for the ‘இசை’ Category

Rock With Raaja – சில குறிப்புகள்

with one comment

# மார்ச் 18ஆம் தேதி, சென்னை தீவுத் திடலில், சுமார் ஐந்தரை மணி வாக்கிலே, மேடையில் உள்ள இசைக்கருவிகளை, ஒலிபெருக்கிகளைச் சரி செய்பவர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். “வயலின்ஸ் மைக்ல ஏதோ ப்ரச்சின” என்று ஒருவர் சொல்கிறார். இரண்டு பேர் மைக்கின் கழுத்தை ஒடித்து எடுத்துச் சரி செய்து திரும்ப வைத்து எதிர்ப்பார்ப்புடன் பார்க்கிறார்கள். “ஒரு டெஸ்ட் பாக்கலாமா?” என்று யாரோ கேட்கிறார்கள். அமைதி. ஒன்று, இரண்டு, மூன்று என்று விரல் சொடுக்குகள். ”வள்ளி”யின் ”என்னுள்ளே என்னுள்ளே” பாடலின் முதல் இடையிசையை இரண்டு வயலின்கள் வாசிக்கின்றன. உரையாடலில் கலைந்திருந்த கூட்டத்தின் மொத்த கவனமும் அந்த இரு வயலின்களின் இழுப்பில் இழுக்கப்பட்டு, எல்லோரும் ஆனந்தச் சத்தமிடுகிறார்கள். சும்மா ஒலிபெருக்கியை சோதனை செய்யக் கூட சிம்பனி இசையைச் சிதறவிடுவதும், அதை மொத்தமாக உடனே, அப்படியே அள்ளிக்கொள்வதும் பண்ணைபுரத்து இசையரசருக்கும் அவரின் ராஜ்ஜியத்துக்கும் மட்டும் உரித்தான பெருமையும் அதுப்பும். அனைவருக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள். (சிம்பனி இசையமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் “வள்ளி” திரைப்படத்திற்கு இசையமைத்ததாகச் சொல்லப்படுகிறது என, எனக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் இங்கு எழுதியிருக்கிறார்). தொடர்ந்து இசைக்கருவிகளின் பரிசோதனையில் கேட்டவை : கால காலமாக, தென்றல் வரும் வழியே, ஜிவ்வென்று நரம்புகளில் ஏறிய ஆசையக் காத்துல தூதுவிட்ட புல்லாங்குழல் துவக்க இசை. இன்னும் நிலவு உதிக்க நேரம் இருந்தாலும் கொஞ்சம் “நிலா அது வானத்து மேல” – அது வரை அனைத்திற்கும் மிகக்குஷியாகத் தலையாட்டிக்கொண்டிருந்த தாய்க்குலம் ஒருவர், தன் சிறிய மகனாரைப் பிடித்து நிறுத்தி, “என்ன பாட்டு தெரியுதா?” என்று அன்பாகத் தலைமுட்டி கேட்க, இருவருமாகச் சேர்ந்து ஆடினர். வாழ்க! “நிலா அது வானத்து மேல” அந்த ஓரத்தில் சிதறலாகத் தொடர, இந்தப்பக்கம் “செந்தாழம் பூவில்” சோதனை முயற்சி. எல்லாம் கலைந்து, கலந்து, இன்பம், பேரின்பம்.

# ஆயிரம் ரூபாய் டிக்கெட்டில் ஏராளமான கூட்டம். மூன்றாயிரத்தில் பெரிதாக இல்லை. ஐயாயிரத்திலும் அதற்கு மேலும் நல்ல கூட்டம். இது ஆறு மணி நேர நிலவரம். இதில் ஏதேனும் பொருளாதார நுட்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐயாயிரம் ரூபாய் நாற்காலிகளுக்கு மட்டும் வெள்ளைத் துணி அலங்காரம். அதற்கு மேலே சென்றால் இன்னும் தடபுடல். நேரம் ஆக ஆக, செம்புலப் பெயல் நீர் போல மக்கள் இந்த பிரிவினை ஏதுமின்றி, நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு தடுப்பேறி குதித்து வெண்கல டிக்கெட் பிரிவிலும் அதற்கும் முன்னேயும், குறுநில மன்னர்களைப் போல இடம் பிடித்தனர். சென்ற முறை EVP Filmcityயில் நடந்த அளவிற்கு, “ஹோ” என்ற சத்தத்துடன் நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு படையெடுத்து ஓடிய மினி பாகுபலி காட்சிகள், அத்தனை இந்த முறை இல்லை.

# அரங்கத்தை அடையும் பொழுது, Google Mapsம் Uberம் என்னை வேறெங்கோ அழைத்துச் சென்றுவிட்டது. அதே இடத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கிய இன்னொருவரும் நின்று கொண்டிருந்தார். என்னை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரிடம் “ராஜா கான்ஸ்ர்ட் ராஜா கான்ஸ்ர்ட்” என்று நான் பதறியதும், “அந்த பக்கம் ஒரு ஸ்டேஜ் போட்ருக்காங்க” என்று என்னை appல் இடத்தை மாற்றச் சொன்னார். ரோட்டோரம் நின்றுக்கொண்டு குழம்பிக்கொண்டிருந்த இளைஞரையும் நான் ஏறிக்கொள்ளச் சொன்னதும் அவர் என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு ஏறினார். இது தான் சாக்கு என ஆட்டோ ஓட்டுநர், “நீங்க தனியா அம்பது ரூபா கொடுக்கணும்” என்றார். சரியான இடத்தில் இறங்கியதும் அவர் அமைதியாக அம்பது ரூபாயை நீட்ட, நான் அவரைத் தடுத்துவிட்டு “அவரும் என்னோட தான் வந்தார், எல்லாரும் ஒண்ணு தான் விடுங்க” என்று பரிந்து பேசி சரி கட்டினேன். என்ன இருந்தாலும் நாம் எல்லாரும்* ராஜா ரசிகர்கள் தானே? (அம்பது ரூபாய்க்கு உட்பட்டது*).

# இசையைத் தவிரப் பிரச்சினைகளால் மட்டுமே நிரம்பியிருக்கும் இந்திய திறந்த வெளி இசைக்கச்சேரிகளில் ஒரு பிரச்சினை : மக்கள் மூன்று நான்கு நீல்கமல் ப்ளாஸ்டிக் சேர்களை சேர்த்துப் போட்டு அமர்ந்து கொண்டு கழுத்து நோகாமல் பார்ப்பது. எங்கள் பக்கத்தில் காலியாக இருந்த இடத்திற்கு விரைந்து வந்த ஒருவர், ”இங்கே உக்காரலாமா” என்று பய்வமாகக் கேட்டுவிட்டு இரண்டு நாற்காலிகளைச் சேர்த்துப் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்தார். “இப்டி பண்ணா, பின்னால நாங்கலாம் என்ன பண்றது” என்று ஒருவர் பின்னாலிருந்து கேட்க, அதில் கோபத்தை விட வருத்தமும் ஆதங்கமும் அதிகம் தொனிக்க, இரட்டை நாற்காலியாளர் ஆறுதல் புன்னகையை வழங்கிவிட்டு ஷோக்காகத் திரும்பிவிட்டார். சில பயந்தசுபாவிகள் கூக்குரல் கேட்டதும் பதற்றத்துடன் நாற்காலிகளைப் பிரித்து எடுத்து வைத்து ஒற்றை நாற்காலியிலே சோகத்துடன் அமர்ந்தனர். சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு தாயார் ஏழெட்டு நாற்காலிகளைச் சேர்த்துப் போட்டு, அந்த அரியணையில் தனது செல்ல மகளை ஏற்றி அமர்த்தி வைத்து அழகு பார்த்தார். வாழ்க.

# இரண்டு கைகளாலும் தூக்கப்பட வேண்டிய கைக்குழந்தைகள், ஒரு கையால் தோளில் சாய்த்துக் கொள்ளக்கூடிய கைக்குழந்தைகள், பெற்றோர்களின் கையை சளைக்காமல் தட்டிக்கொண்டே இருக்கிற வளர்ந்த குழந்தைகள் என ஏராளமான குழந்தைகள். கூட்டத்தில் இளைஞர்கள் பலர். நல்ல ஆட்டமும் போட்டார்கள், நன்கு ரசிக்கவும் செய்தார்கள்.

# ராஜாவின் ஹார்மோனியம் ஆறு மணிக்கு முன்னரே நடுநாயகமாக வைக்கப்பட்டது. இரண்டு மைக்குகள். பாடல் வரிப் புத்தகத்தைப் பிடித்து நிற்கு ஒரு ஸ்டாண்டு. மேடையில் அவற்றை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துச் சென்றார் ஒருவர். ஒளியலங்காரங்களை சோதனை செய்யும் வரிசையில், ராஜாவுக்கும் அவரது ஹார்மோனியத்திற்கும் வீசப்பட வேண்டிய ஒளியைச் சரிபார்க்க ஒருவர். ஹார்மோனியத்திற்கு அருகே வந்து அவர் நின்று மேலே பார்த்து கட்டை விரலை உயர்த்தியதும், ஒளி பாய்கிறது. அவர் இரண்டு கைகளை அகல விரித்து, ராஜா ஆக்கிரமிக்கப் போகும் அகலத்தை அளந்து மேலே பார்க்க, ஒளிக்கற்றை அகலமாகிறது. அவர் முன்னே நகர, பின்னே நகர, ஒளி செப்பனிடப்பட்டு முடிவாகிறது- இதில் ஒரு பக்கக் கதை ஒன்று தேறும். ராஜாவின் மைக்கை சோதனை செய்ய ஒருவர் அதை முத்தமிட்டும் தொலைவில் வந்து நின்று என்னையும் சேர்த்துச் சோதிக்க, அந்த முதியவரைத் தள்ளிவிட்டு ஒரு இளைஞர் அதே ஒன்று, இரண்டு, மூன்றை american accentஇல் சொல்ல – இருவரும் முகக்கவசம் அணியாமல் இருந்தது பகீரென்றது. நமது வருத்தத்தை இசைக்கடவுள் அறிந்தது போல, உடனே ஒருவர் வந்து ஒரு துணியைக்கொண்டு மைக்கைத் துடைத்து விட்டார்.

# என்னுடைய அத்தை ஒருவர், ரயில்களில், பேருந்துகளில், பொது நிகழ்ச்சிகளில் கொஞ்சம் நோட்டம் விட்டு, சரியான ஆளைப் பிடித்து ஒரு விளையாட்டைத் துவங்குவார். விளம்பரங்களில் மைக் நீட்டப்பட்டு உப்பைப் பற்றிக் கேட்பது போல – “நீங்க இந்த கோயிலுக்கு போயிருக்கீங்களா?”. உடன் போட்டியிடுபவர் பதிலுக்கு இன்னொரு கோயிலைப் பற்றி பெருமையாகப் பேசுவார். அபத்தமாகத் திருப்பதி, தஞ்சைக் கோயில் என்றெல்லாம் ஆட மாட்டார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து நாற்பது தொலைவில் உள்ள குக்கிராமத்தின் முக்கிய கோயில், கும்பகோணத்திலிருந்து பேருந்து கூட செல்லாத ஊரிலே, அடுத்த ஊரிலிருந்து பூசாரியை வரவழைத்துத் திறக்க வைத்த கோயில் என அதிகமறியப்படாத உன்னத கோயில்களைச் சுற்றி போட்டி நடக்கும். அதைப் போல, நானும் இசைக்கச்சேரிகளில் என்னிடம் சிக்கும் சகரசிகரிடம், நான் சென்ற ராஜ இசைக்கச்சேரிகளைப் பற்றி சத்தம் அதிகம் கேட்காமல் தம்பட்டம் அடிப்பது வழக்கம் – கொஞ்சம் அசிரத்தையாக நான் அமெரிக்காவிலிருந்த பொழுது சென்ற ராஜாவின் இசைக்கச்சேரியைக் கடைசி அம்பாக எய்வதும் வழக்கம், அன்றும் எனக்கே வெற்றி. வானத்திலிருந்த அத்தை பெருமிதம் கொண்டிருப்பார் – அவரவர்க்கு அவரவர் தெய்வங்களும், அவரவர் கோயில்களும் என்பது அவர் அறிந்ததே.

# சுமாராக ஒன்றரை மணி நேரத் தாமதம் – மிகக் கொடுமை. எத்தனை நேரம் ஆட வேண்டியிருக்கும் என்று கணிக்கத் தெரியாத பிள்ளைகளும், எத்தனை தாமதம் இன்னும் பாக்கியிருக்கும் என்று கணிக்கத் தெரிந்த வளர்ந்தவர்களும் ஒன்று போல நாற்காலியில் சரிந்து சாய்ந்து ஓய்ந்துவிட்டனர். ஒரு வயசாளி மாலைமலரை இரண்டு முறை படித்தார். வீட்டுப் பிரச்சினைகள் சிலரின் பேச்சிலே கத்தியின் சிறு முனைபோல தலை காட்டத் துவங்கியது. எனக்குப் பின்னால் இருந்த மூவர் குழுவில், ஒருவர் க்ரூப்புல டூப்பு. மற்ற இரு ராஜா ரசிகர்களும் ராஜான்னா யார் தெரியுமா, இசைன்னா என்னன்னு தெரியுமா என்று அவரைச் சுற்றிச் சுற்றி அடித்துக்கொண்டிருந்தார்கள். பொழுது போகாமல் நான் சில நேரம் வியந்துகொண்டிருந்தது – எத்தனை விதமான மனித முகங்கள்? அதிலே எத்தனை வகையில் பிறரின் சாயல்கள்? எப்படி இது சாத்தியமாகிறது? வழக்கமாகக் கூட்டத்தில் தென்படும் Page 3 பிரபலங்களை இந்த முறை காணமுடியவில்லை, அவர்களின் சாயலில் சிலர் சுற்றித் திரிந்தார்கள். சிலரைப் பார்த்தவுடன் இவர் நிச்சயம் ஏதோ ட்விட்டர் ஆசாமிதான், இது ட்விட்டர் குழாம்தான் என்று உடனே சொல்லிவிட முடிகிறது. அது எப்படிச் சொல்ல முடிகிறது என்பதை அடுத்த கச்சேரிக் கட்டுரையில் சொல்கிறேன். ஆறு ஆறரையாகி, ஆறரை ஏழாகி, நிகழ்ச்சியின் விளம்பரத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள். திடீரென ஏழு பதினைந்து வாக்கில் தாரைப் தப்பட்டைகளுடன், நிகழ்ச்சி மைதானத்தை ஒட்டிய சாலையில் ஏதோ வாகன ஊர்கோலம் வருவதாகக் கேட்க, அப்போது தான் ராஜா உள்ளே வரவே செய்கிறார் என்று ஒரு திகில் புரளி பரவியது. ஒரு வழியாக ஏழு இருபதுக்கு நிகழ்ச்சி துவங்கியது.

# சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வர முடியாத காரணத்தினால் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார். தமிழ் ஆர்வலர்களே – காணொலி என்று பிரமாதமாகப் பேர் வைத்தாயிற்று, ஆனால் அதில் ஆள் தோன்றாமல், ஏதோ ஒரு புகைப்படத்துடன் ஒலிச் செய்தி மட்டும் வரும் பட்சத்தில், அதற்கு என்னப் பெயர்? சிந்திப்பீர். (உலகத்திலேயே கரண்ட் இல்லனாக் கூட வெறும் ஹார்மோனியத்த மட்டும் வெச்சு கம்போஸ் பண்ண, “என் சாமி” ராஜாவால தான் முடியும் என்று ரஜினி சொன்னார். இதை ஏற்கனவே அவர் சொன்னதாக நினைவு).

# இனிப்பைக் கண்டவுடன் சட்டென அதை அடைந்துவிடுகிற எறும்புகளைப் போல, எங்கிருந்தார்களோ, ஒரு நொடியில் அத்தனை பாடகர்களும், இசைக்கலைஞர்களும் தத்தம் இடங்களில் வந்து அமர்ந்து கொண்டனர். முதலில் “குரு பிரம்மா”. அது முடிந்ததும் ராஜாவின் “ஜனனி ஜனனி”. துவங்குகையில் அதே நடுக்கம், அதே பணிவு, குரலில் அதே பிசிறு, அதே ஜீவன், (என்) கண்களில் ஆயிரம் முறை தோன்றிய அதே நீர்ப்படலம். அடுத்த வருடம் எண்பது வயதைத் தொடவிருக்கும் ராஜா, சமீப சில கச்சேரிகளை விட அங்குப் பாடிய ஜனனி ஜனனி, அதிகத் துல்லியம், அசாத்தியம். அது வரை இருந்த அத்தனை சலிப்பும் வெளிச்சத்தைக் கண்டதும் ஓடும் கரப்பான்பூச்சிகளைப் போல ஓடிப் போக, பாடல் வளர, வளர, ஒரு மாணவனைப் போன்ற கவனத்துடன் அந்தக் கலைக்கான மரியாதையுடன் ஒவ்வொரு வரியிலும் பரிபூரணத்தைத் தேட முயல்கிற அவரைக் காணக் காண, சுற்றி இருப்பவர்களைச் சங்கடப் படவைக்கிற வகையில் அழுதுவிடுவோமோ என்ற பயம் எனக்கு. பாடகர்களைப் பற்றிய ராஜாவின் தத்துவத்தைத் தொட்டுச் சென்றால், இவ்வுலகில் எனக்கு மிகப் பிடித்த இசைக்கருவி, ராஜாவின் குரலாக இருக்கலாம். கைகளை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, கழுத்தை இன்னும் மேல்நோக்கி பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. 2000த்தின் துவக்கத்தில் சென்னையில் நடந்த கச்சேரியின் போது, இதே பாடலை ராஜா பாடியபொழுது தேம்பித் தேம்பி அழுத (பர்தா அணிந்த) பெண் ஒருவர் – அவர் தான் நாம் எல்லோரும், நாம் தான் அவர்.

# ரோல்லர் கோஸ்ட்டர் போல, உடனே “இளமை இதோ இதோ”. பின்னணி பாடும் சங்கதியில் எஸ்.பி.பியை நகலெடுத்த மனோவும், சந்ததியில் அவரை நகலெடுத்த எஸ்.பி.சரணும் இணைந்தாலும் எஸ்.பி.பியின் இடத்தை நிரப்ப முடியவில்லை. அது மனோ-சரணின் குறையல்ல, பாலசுப்ரமணியத்தின் அளவில்லாத திறமை. உரக்கப் பாட மனோ, மெல்லிய கொஞ்சல்களுக்கு சரண் என அன்னப்பறவை போலப் பிரித்து எடுத்தும் அடையமுடியவில்லை, ஆனாலும் குறைவில்லை. ராஜாவின் பொன்வானத்தில் நொடிப்பொழுதில் வேண்டிய வண்ணம் உருமாறும் மேகமெனச் சுற்றி வந்த எஸ்.பி.பிக்கும், லதா மங்கேஷ்கர்க்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்படி ராஜா கேட்டுக்கொண்டார். (பொதுவாகவே நினைவேந்தலுக்குச் சரியான வார்த்தைகள் ராஜாவிற்குச் சிக்குவதில்லை என்று ஒரு சந்தேகம். “இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள..” “குறிப்பிட நினைத்தேன்” என்பதாக முடிந்து விடுகிறது).

# எஸ்.பி.சரண் ”மன்றம் வந்த தென்றலுக்கு” எனத் தொடங்கியது பாதி தான் கேட்டது, மைக்கில் பிரச்சினை. (எனக்கு பின்னால் இருந்த Raaja for dummies குழுவினர் “அப்பா மாதிரி சத்தம் வரல” என்று உடனே அவரை நிராகரித்தனர்).முதல் சரணத்திற்கு முன் அவருடைய மைக் சரிசெய்யப்பட, நீ வந்தால் என்ன.. வா! உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்! என்று உச்சத்தில் நிறுத்துவதெல்லாம் அப்படியே அப்பா. அடுத்து எஜமானிலிருந்து “ராக்கு முத்து ராக்கு” பாடல் புதுப் பாடல் வரிகளுடன் ஒரு சரணம் வரை அரங்கேறியது. தமிழ் ட்விட்டரின் தேசியச் சொல்லை கடன் வாங்குவதென்றால் – கொஞ்சம் cringe. மெட்டில் சரியாக அமராத வார்த்தைகள், ஆஸ்பத்திரி போனவர்கள், திரும்பி வந்தவர்கள் என்றெல்லாம்.. தேவையில்லாத முயற்சி. ஒரிஜினலும் அதன் இசையமைப்புமே இன்னமும் அதிகமாகக் கவனிக்கப்பட வேண்டிய பாடலே – அதை அப்படியே பாடியிருந்தாலே தகும். இருந்தும் துல்லிய ஒலியில் கேட்க முடிந்த முதல் இடையிசையும், கடைசிப் பல்லவியில் மாறுகிற டெம்போவும், சுகம். தொடர்ந்து “மேகம் கொட்டட்டும்” (கார்த்திக்) – பாடலின் முடிவில் நடக்கும் மினிகச்சேரியில் சற்றேறக்குறைய சில சிராய்ப்புகளுடன் சிறப்பான கிட்டார்கள், சிறப்பான ட்ரம்ஸ்கள். ஜனனி ஜனனிக்கு அடுத்தபடியாக ராஜாவின் கச்சேரிகளில் தவறாமல் இடம்பெறுவது “மாயா பஜார்” – ”நான் பொறந்து வந்தது ராஜவம்சத்திலே”. சூப்பர் சிங்கர் பங்கேற்பாளர்கள் தொண்ணூறு சதவீதம் இடம் பிடித்திருக்கும் கோரஸ் என்றாலும், நல்ல பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பெண் குழுவின் முதல் வரிசையில் நின்றிருந்த அனிதா, சுர்முகி, ப்ரியா ஹிமேஷ் மூவரும், ஆனந்தமாக, ரசித்து ருசித்து பாடும் அதே வேளையில், எதிர் முனையில் நிற்கும் ஆண்கள் குழுவில் அதிகப் பயிற்சி பெறாதவர்களே அதிகம் என்பதால், எங்கே நிறுத்த, எங்கே மீண்டும் ஒரு முறை அதையே பாட, எங்கே தொடங்க எனச் சைகைகளாலேயே அவர்களை வழிநடத்திச் சென்ற விதம் சிறப்பும், மகிழ்ச்சியும்.

# மராத்தி பாடகி விபாவரியின் மீது எனக்கு எப்போதும் சில விமர்சனங்கள் உண்டு. (அவருடைய ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வரவில்லையென்றால் இரண்டே வரிகளில் சொல்கிறேன் – இன்னும் கொஞ்சம் விலாவரியாக பாடலாம், வரிக்கு வரி வித்தியாசங்கள் காட்டலாம்). சித்ரா சில நாட்களாகக் கச்சேரிகளில் தென்படாததால், முக்கியமான பாடல்கள் அடுத்த சீனியர் விபாவரிக்கு. என்னுள்ளே என்னுள்ளே பாடலை அவர் பாடியதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ராஜாவின் கச்சேரிகளின் சிறு உயிர்நாடி, கோரஸ் குழுவினர். இந்தப் பாடல் முதற்கொண்டு செம்மையான பணி. (பாடல் முடிந்ததும் கூட்டத்தில் அமர்ந்திருந்த தனுஷிடம் “இந்தப் பாட்டு பிடிச்சிருக்கா?” என்று ராஜா கேட்டார். தனுஷ் என்ன சொன்னாரெனக் கேட்கவில்லை. “பிடிக்கலையா? எங்க, எழுந்திரு.” என்று கலாய்த்த ராஜா, “உங்க மாமனார்னால இந்தப் பாட்டு இவ்ளோ நல்லாச்சு” என்று சொன்னார், நல்லது. தொடர்ந்து வள்ளி திரைப்படத்தின் கதையின் சிறப்பாகச் சொன்னதாகவும், (”என்ன இன்னும் நின்னுட்டே இருக்க, சாரி, உக்காரு”) ரஜினிக்குள்ளே நல்ல கதையம்சம் கொண்ட ரசிகர் இருப்பதாகவும் சொன்னவர், ஏனோ ரஜினி இது போன்ற படங்களை விட்டுவிட்டதாகவும் ”வெளியே” படம் செய்ய ஆரம்பித்ததாகவும் சொன்னார். அதில் ராஜா முதற்கொண்டு யாருக்கும் வருத்தங்கள் இருப்பதாகத் தெரியவில்லை). முக்கிய உபகுறிப்பு – இந்தப் பாடலை இசை அமைத்தது, ராஜாவே, ராஜாவே ராஜாவே, மூத்த மகனார் அல்ல.

# பிரபல ராஜா இசை-ரசிகர்கள் மத்தியில், தனுஷை விட எனக்குப் பிடித்தது DSP எனப்படும் தேவிஸ்ரீபிரசாத். அவர், அனிதா, ராஜா மூவரும் எழுதி பயிற்சி செய்யப்பட்ட ஒரு கேள்வி-பதில் அரங்கேற்றினர். (”எப்படி ஆர்கெஸ்ட்ரேஷன் அமைக்கிறீங்க?” “ஒரே பாட்டுக்கு வேற வேற மாதிரி பண்ணிக்காட்டவா?” என “ஏ ஆத்தா, ஆத்தோரமா வாரியா” பாடலுக்கு இரண்டு வித இசை நிகழ்த்திக் காட்டப்பட்டது). பின்னர் முழுப்பாடலையும் எஸ்.பி.சரணும், DSPயும் பாடினார்கள். சமீபக் கச்சேரிகளில் அதிகம் ஆச்சரியப்படுத்தியது சரண் – இத்தனை முழுமையும், தேர்ச்சியும் பெற்ற பாடகர் என்பதை நான் இது நாள் அறியவில்லை. கனகச்சிதமாக அப்பாவின் பாடல்களை அரங்கேற்றுகிறார் – அவருக்கு எல்லாக் கச்சேரிகளிலும் நிரந்த இடம், ப்ளீஸ்.

# கச்சேரியின் முதல் ஆச்சரியப் பாடல் – “எல்லாம் இன்பமயம்” படத்திலிருந்து “மாமன் வூடு மச்சு வூடு”. (இது வரை கேட்காதவர்கள் நிச்சயம் கேட்கவும். இன்னும் சில வாரங்களில் “who came from Raaja chennai concert video” படையினர் கமெண்ட் செக்‌ஷனை குத்தகைக்கு எடுத்து விடுவார்கள், இப்போதே செல்லுதல் நலம்). ராஜாவின் இசைச் சித்தாந்தத்தைச் சிறப்பாகச் சொல்கிற மற்றுமொரு பாடல். முகேஷும், அனிதாவும் துவக்கத்தில் ஏற்படும் உரையாடல்களை அடித்துத் துவைக்க, பாடலை பாடிய விதத்தில் அதையும் தாண்டி மகிழ்வித்தார்கள். முதல் சூப்பர் சிங்கரின் கடைசிக் கட்டம் வரை வந்த அனிதா, அதன் பிறகு ராஜாவின் குழுவிலிருந்து பெற்ற அத்தனை கல்வியும் அவரை இன்னமும் செழுமைப் படுத்தியிருக்கிறது. எப்போதும் இன்முகம், பாட்டில் பரவசம், துல்லியம் என வலம் வரும் முகேஷுக்கு குறிப்பான சில வகைப்பாடல்கள் என்றில்லாமல் இன்னும் வருங்காலக் கச்சேரிகளில் மேலும் பல பாடல்கள் கிடைக்க வேண்டுதல்கள், வாழ்த்துகள். உடனடியாக, அடுத்தபடியாகவே இன்னொரு ஆச்சரியம் – “பூந்தோட்டம்”லிருந்து “வானத்துத் தாரகையோ”. “மீட்டாத வீணை”யை விட நான் அதிகம் ரசிக்கிற, நான் வாரம் ஒரு முறை பாடிப்பார்க்கிற பாடலை, “வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்” எனத் துவங்கி ராஜா ஹார்மோனியம் வாசித்தபடி ராஜா பாடியது ஜென்ப சாபல்யம்.

# Friends திரைப்படத்தின் “தென்றல் வரும் வழியை” பாடல் மற்றுமொரு ரசிக்கத்தக்கக் கச்சேரி வரவு – தொடரும் என விரும்புவோம். சூப்பர் சிங்கர் புகழ் சரத் சந்தோஷ், ஹரிஹரன் குரல்வகைக் குடும்பத்திலிருந்து வருபவர் என்பதால் மட்டுமல்ல, திறமையான பாடகர் என்பதால் மட்டுமல்ல, உடன் பாடுவது பவதாரிணி என்பதாலும் கூட, அவருக்கு பொறுப்பு அதிகம். தனியாளாகப் பாடலை இழுத்துச் சென்றார். தோற்றத்தில் இன்னமும் மாறுதல்களின்றி அதிசயப்பட வைக்கிற பவதாரிணி, கச்சேரிகளில் இன்னும் அதே நடுக்கம், அதே பதற்றம் என வருத்தமும் படவைக்கிறார். விபாவரி “மச்சானப் பாத்தீங்களா” பாடப்போகிறார் என்றதும் நெஞ்சுக்குக் கீழே லேசான வலி. ராஜா அன்னக்கிளியில் அந்தப் பாடலை லதா மங்கேஷ்கரை பாட வைக்க முயன்றார் என்று கேட்டதும் ஏற்பட்டதே அதே வலி. இருந்தாலும், விபாவரி அட்டகாசமாகப் பாடி என்னைத் தீவுத் திடல் மண்ணை கவ்வ வைத்தார். “ஊர்கோல மேகங்களே” என்ற பொழுது உடன் வரும் கல்யாண மேளங்கள் எல்லாம் மிகப் பரவசம். அத்தனை சங்கடங்களும் மறந்து கூட்டம் மொத்தமாக ஆடத் துவங்கிவிட்டிருந்த பொழுது – பெரியாரோ தாய்மாரே, கச்சேரி உண்மையிலே களைகட்டிவிட்டது. இது ராஜாவின் முதல் பாடல் என்பதும் மிகப் பொருத்தம் – அன்று துவங்கிய ஆனந்தக் கச்சேரி இன்றும் தொடர்கிறது. தீபாவளியின் பொழுது ஒரு சுறுசுறுவத்தி அணையும் முன்னே அதை வைத்தே மற்றொன்றைக் பற்றவைப்பதைப் போல, இந்தக் களிப்பு அடங்கும் முன்னர், தளபதியின் “காடுக்குயிலு”. எந்த முன்னறிவிப்பும் இன்றி, (இந்தப்) பாடலின் துவக்க இசையைக் கேட்ட மாத்திரமே மக்கள் வெறி கொண்டு ஆனந்த கூக்குரல் இடும் வழக்கம், எந்த அரசரின் எந்த ராஜ்ஜியத்தில் நிகழும் என்பதை முதல் பத்தியைப் படித்து மீண்டும் நினைவு கொள்க. அப்பாவின் குழைவின் அதிர்வையும் அசலெடுக்கிற சரணும், ஜேசுதாஸின் மூக்கை கடன் வாங்கி வந்து பாடுகிறாரோ என்று திகைக்க வைக்கிற மது பாலகிருஷ்ணனும், ஒரு வரி விடாமல், ஒரு தாளம் விடாமல் பிரித்துப் பிரித்து அசரடித்தார்கள். இசைக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் – இங்கே மக்களின் முகங்களைப் பாருங்கள், கொடுத்த காசிற்கு இப்போதே திரும்பப் பெற்றுவிட்ட களிப்பு.

# அடுத்து (மலேசியா வாசுதேவனின் மகன்) யுகேந்திரனின் “ஆசை நூறு வகை”. ராஜாவே ஆட அழைத்துவிட்டதால், டிக்டாக் வினாடிகளுக்காக இசையமைக்கப்பெற்று, நடன வடிவமைக்கப்பட்டு இப்போது வெளிவரும் பாடல்களைக் கேட்டு வளரும் இளைஞர்கள் கூட, ஆசை நூறு வகையின் முதல் நான்கு வரிகளுக்குக் கனகச்சிதமாக ஆடினார்கள். (அடுத்த கச்சேரியில் ஆடுவதற்கு முன் எதற்கும் கேட்டுக்கொண்ட பிறகு ஆடுங்கள்). பாடியது யுகேந்திரன், மகிழ்ச்சி, ஏனோ எனக்கும் கொஞ்சம் நெகிழ்ச்சி. நெப்போலியனின் புல்லாங்குழல் துளை புகும் காற்றெல்லாம் வெளியேறுகையில் பூங்காற்று, அதன் மொழிகளில் மோனம், மௌனம், மோகம் – ”ஆசையக் காத்துல தூதுவிட்டு” என அவர் துவங்கியதும் அரங்கம் அதிர்கிறது. ப்ரியா ஹிமேஷிற்கு திரையிலும் இன்னும் நிறையப் பாடல்கள் கிடைக்க வேண்டும், பாடலின் ஏக்கம், மெட்டின் தேக்கம் என எல்லாமே சிறப்பு. இசையமைப்பு, மெட்டு, இசைச் சித்தாந்தம், ஹார்மனி என எல்லாமே தடையின்றி கைவரும் ராஜாவின் கைவண்ணங்கள் ஏராளம் என்றாலும், “காதல் ஓவியம் பாடும் காவியம்” உண்மையிலேயே தென்றலிலே மிதந்து வரும் தனித்துவமான தேன்மலர். கார்த்திக் ராஜாவைவிட இப்பாடலை முன்பின் கேட்டறியாத விபாவரி சிறப்பாகப் பாடினார். (முதல் முறை பாடுகையில் ஒரு மைக் கொய்ன் கொய்ன் என்று சத்தமிட, ராஜா கோபம் இன்றி நிறுத்தி விட்டு, மக்கள் இவங்க பாடறத கேப்பாங்களா இல்ல mike feedback கேப்பாங்களா என்று கேட்க, அதற்கே நமக்குப் பயந்து வருகிறது. பின்னணி குரல் குழுவினர்க்குக் கோடானுகோடி வந்தனங்கள். இந்தப் பாடலின் காணொளி கிடைக்குமென விரும்புவோமாக – அதன் இசையரங்கேற்றம், ஒரு சோற்றுப் பதம்.

# அடுத்து ப்ரேம்ஜி மேடைக்கு வர, “நீ என்ன பாடறன்னு நீயே முடிவு பண்ணு” என்றார் ராஜா. (”என்ன ரொம்ப ஓவரா பவ்யமா நடிக்கிறே? ஷூட்டிங்க்னு நினச்சு வண்ட்டியா?” கங்கை அமரனைப் பார்த்து, “எம் பையன வந்து பாடுன்னா உடனே வந்து பாடறான், உம்பையனப் பாருடா!”). (சமீபத்தில் ராஜாவை அமரன் சந்தித்தது செய்தியானது. கச்சேரிக்கு தயார்செய்யும் நிகழ்ச்சிப் படங்களில் கவனத்தை ஈர்த்த ஒரு படம் – அமரன், பவதாரிணி, ராஜா என வரிசையாக நிற்க, ராஜாவின் தோள்மேல் அமரனின் ஒரு கை. எஸ்.பி.பியைத் தவிர யாரும் ராஜாவிற்கு இத்தனை நெருக்கமாக, இத்தனை உரிமையுடன் நின்றதாக நினைவதில்லை. அப்படி ஒருவர் அருகே இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது) ப்ரேம்ஜி தேர்ந்தெடுத்தது “ஊரு விட்டு ஊரு வந்து”. சரணத்தின் கடைசிக் கட்டங்களில் “என்னால முடியாது” என்று பின்னணி குரல் குழுவினரைப் பார்த்து ஐயையோ என்று கையசைத்ததெல்லாம் ராஜாவிற்கு ஏகச் சிரிப்பு. பாடலின் அறிவுரைகளை அவருக்கே பொருந்தும் என்று யாரும் அபத்தமாகச் சொல்லவில்லை, அப்படிச் சொல்லுவார்களோ என்று நான் பயந்ததை எதில் சேர்க்க? புல்லாங்குழலைக் கீழே வைத்து விட்டு, நெப்போலியன் அருண்மொழியாகப் பாடியது மஸ்தானா மஸ்தானா, உடன் பாடியது பவதாரிணி. இரண்டாவது இடையிசையில் புரியாத மொழியில் பாடிய சாய் விக்னேஷ் இருவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். தொடர்ந்து, கோவை கமலாவின் கணீர் காந்தக் குரல் பாவத்தை அசால்ட்டாக நகலெடுத்து அனைவரையும் ஆர்ப்பரிக்கவைத்த அனிதா. (அங்கங்கே தலைதூக்கும் சில செயற்கை பாவங்களை மட்டும் சரி செய்யலாம்). ஒரு கல்யாணம் நிகழ்ந்து முடிந்ததைப் போன்ற கோலாகலம். 1995க்கு பிறகான பாடல்கள் அதிகம் இடம்பெறுவதும் மகிழ்ச்சி – நேர் இசைக்குழுவினர் எப்படி அவற்றை வாசிக்கிறார்கள் என்ற ஆர்வம்.

# இளைய தலைமுறையினரிடம் “பேர் வெச்சாலும்” பாடலை கொண்டு சென்ற யுவன்ஷங்கர்ராஜாவை, ராஜா “கச்சேரிக்கு வர்றியா வர்றியா” என்றழைக்க, மேடையேறி ஸ்வேதா மோகனுடன் அப்பாடலைப் பாடினார். குரலில் ஒரு shrug, ஒரு detachment, என தன்னுடைய பாணியில் யுவன் பாடினார், (யுவன் என்ன செய்தாலும் எனக்கு அது அழகே), ஒரிஜினலுக்கான வேலை செவ்வனே செய்தது ஸ்வேதா. துவண்டிருந்த ஏராளமான குழந்தைகள், இந்தப் பாடல் வந்ததும் நிமிர்ந்து, அமர்ந்து, ஆடியது நிஜம், நிதர்சனம். யுவன் அடுத்த பாடலை யோசிக்கலாம். மீண்டும் மேடையேறிய DSP “ராஜா ராஜாதிராஜா” பாடலை ஒவ்வொரு முறையும் தவறாது நீ ராஜா, நீயே ராஜா என்று ராஜாவை விரல் காட்டிப் பாடப் பாட ராஜாவிற்கு வியப்பும் ஆனந்தமும். விடைபெறும் முன், இறைவனிடம் ராஜாவிற்கு நீண்ட ஆயுளைக் கேட்பதாகவும், அந்தக் கடவுளே ராஜா தான் என்பதால் அதை அவரிடமே கேட்பதாகவும் சிக்ஸர் அடித்தது, எனக்குப் பொறாமையாக இருந்தாலும், ராஜாவின் மனதில் இடம் பெற வேண்டிய ரசிகரே DSP, வாழ்க. எஸ்.பி.பியை miss செய்கிற ராஜாவிற்கும் மற்றவர்க்கும் ஆறுதலாக, பாடும் நிலா எங்கும் செல்லவில்லை, வானில் அப்போதே உதித்திருந்த பௌர்ணமி நிலவைக் காண்பித்து எப்போதும் நம்முடனே இருப்பார் என்றார். முன்னமே நான் உங்களிடம் சென்ற முறை சொன்ன ”வனிதாமணி”யின் இரண்டாவது இடையிசை இம்முறையும் கச்சிதம் – ஆக, இந்த முறை முதல் இடையிசையைச் சொல்வோம் – குறி பார்த்து வில்லன் சுட முயல்வதும், தோட்டா குறி தப்புவதும் கிட்டார்-வயலின் இசைக்காட்சி ஒரிஜினலிலும் இங்கும் பிரமாதம். “உயிர் வரை இனித்தவள்.. இதயம் ததீம் ததீம் போடாதோ” வரிகளின் பின்னே இரு சிறு ரயில் ஓடுவதை முதன் முறையாக கவனித்தேன். ஒரு வேளை ரயில் என வரிகள் எழுதி கடைசியில் மாற்றியிருப்பார்களோ? (பாடியவர்கள் மனோ, ப்ரியா ஹிமேஷ். துவக்கத்தில் ”கண்ணே..” என்று பேச மனோவிற்கு பதிலாக ஒருவர், ஏனோ?)

# அடுத்த இரண்டு பாடல்களுக்கு நான் கொஞ்சம் வேலையாக எழுந்து செல்ல வேண்டியிருந்தது. இருந்தும் காதுகள் வேலையின்றி சும்மா இருந்து கேட்டதில் – பிரபாகர் முதல் முறை வாசித்துச் சரியாக வராததால் மீண்டும் ஒரு முறை துவங்கியது ”காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்”. (கார்த்திக், ஸ்வேதா). தொடர்ந்து மனோவும் சுர்முகியும் பாடிய ”மாங்குயிலே பூங்குயிலே”. மனோவிற்கு இப்போதெல்லாம் அதிகம் களைப்பு தென்படுவது வருத்தத்தைத் தருகிறது. உடன் பாடிய சுர்முகி, எங்கிருந்து மூச்சைப் பிடித்தார், எங்கிருந்து ஸ்வரத்தைப் பிடித்தார், துல்லியமான பாவத்தை எப்படி வரவழைத்தார் என்றெல்லாம் எதுவும் வெளியே தெரியாத வித்தையில் எப்போதுமே பாடுகிறவர், அன்றும் அப்படியே. ஜானகிக்கும் ஸ்வர்ணலதாவிற்கும் மரியாதை செலுத்த வேண்டி அவர்களின் பாடல்களை சித்ரா ராஜா கச்சேரிகளில் பாடினாலும், சுர்முகி ஜானகியின் பாடலை பாடுவதும் மிகப்பொருத்தமே. குறிப்பிட வேண்டிய தனிச்சங்கதி – முன்பிருந்ததை விட இந்த முறை இருந்த amenities பரவாயில்லை. விற்றுக்கொண்டு சென்றது BurgerKing burger என்று அடித்துச் சொல்ல முடியாது என்றாலும், பாப் கார்ன் விலை அதிகமென்றாலும், தண்ணீர் விலை கொள்ளை நிலா பகலென அடிக்கும் பொழுதில் நிகழ்ந்த பகல்கொள்ளை என்றாலும் கூட. (ரெஸ்ட்ரூம் உள்ளே விளக்கு மங்கல் என்பதால் அலைப்பேசியில் இருந்த டார்ச்சை பலரும் உபயோகித்துக்கொண்டிருந்தனர். நான் வெளியே வருகையில் அதை அணைக்க மறந்து அலைபேசியை என்னுடைய கால்சட்டைப் பையில் போட்டுக்கொள்ள, கதவைத் திறந்து வெளியே வந்த என் நிழுலருவத்தின் தொடையிலிருந்து பாயும் ஒளி கண்டு திகைத்து நின்றுவிட்டார் ஒருவர்).

# நிகழ்ச்சியில் என்னை அதிகம் கவனிக்க வைத்த பாடல் – ”ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்”. என் அலைப்பேசியில் இருக்கும் பிரதி கொஞ்சம் தட்டையாக இருப்பதாலோ என்னவோ, பாடலின் மேல் அத்தனை எப்போதும் ஈர்த்ததில்லை. நேர் அலையில் கேட்க பெரும் வியப்பாக இருந்தது. துவக்க இசையில் மண் சார்ந்த ஒரு குறுங்கதை, அங்கும் பாடலின் பின்பகுதியிலும் மீண்டும் வந்த ஒரு இசை – ஷெனாய் + சாரங்கி (?) – அதன் உக்கிரம், அதில் விஷம் போல ஏறியிருந்த தீங்கு, ஒரு நிமிடம் திகைக்க வைத்து உடல் சிலிர்த்தது. பாடிய நாராயணன் – இனி அவர் ராஜாவின் கச்சேரியில் இடம்பெறவில்லை என்றால் தான் எனக்கு ஆச்சரியம் ஏற்படும்.

# உஷா உதுப்பிற்கு ராஜாவின் மீது ஏராளமான காதல். யாரும் சொல்ல மறுத்த மற்றொரு ஊரறிந்த ரகசியத்தையும் அவர் சொன்னார் – எல்லாப் பாடகர்களுக்கும் அவரென்றால் பயம். ராஜா பாடிய “நிலா அது வானத்து மேல” பாடலை அவர் பாடப்போகிறார் என்பதால் அவருக்கு இன்னும் பயம். பாடத் தொடங்கும் நொடி வரை அவர் முகக் கவசத்தைக் கழட்டவில்லை. (”We all are not safe until each of us are safe” என்றார், நன்று). ராஜா யுவனையும் தனுஷையும் மேடையேற்றி பாடவைத்தார். தனுஷ் அந்த மெட்டுக்கு தன் மகன்களை மனதில் வைத்து எழுதிய ஒரு தாலாட்டை ராஜாவிடம் அடக்கமாக அனுமதி பெற்று அடக்கமாகப் பாடினார். (ராஜாவின் இசையில் வெளிவர இருக்கும் விடுதலை திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்று நமக்குத் தெரியும். அது என்ன ராகம் தெரியுமா என்று தனுஷை ராஜா கேட்டார். அவருக்குக் கண்டிப்பாகத் தெரியவில்லை. விடை : தேனுகா). குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் – ரஜினி மீது ராஜாவிற்கு இருக்கிற பிரியம். மாமனார், தாத்தா என தனுஷ், அவரின் பிள்ளைகள் மூலமாக அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார். அடுத்து எஸ்.பி.சரண் புலிக்குப் பிறந்தது புலியே என “அண்ணாத்தே ஆடுறார்” பாடினார். கர்ஜனைகள், குழைவுகள் என எல்லாமே சிறப்பு. நான் அரங்கத்தை விட்டுக் கிளம்புகையில் “ஆட்டமா தேரோட்டமா” அதிர்ந்து கொண்டிருந்தது. பாடியது ஸ்ரீநிஷா. சூப்பர் சிங்கர் பிள்ளைகள் பாட அத்தனை பயப்படுவதில்லை என்பது ஆறுதல், பாட்டில் அது தெரிகிறது.

# அடுத்துப் பாடப்பட்ட பாடல்கள் – ட்விட்டரில் காணக்கிடைத்தது – . அட மச்சமுள்ள மச்சான் (சின்ன வீடு), தண்ணி தொட்டி (சிந்து பைரவி), வாடி என் கப்பக்கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை), நம்ம சிங்காரி சரக்கு (காக்கி சட்டை), சொர்க்கம் மதுவிலே (சட்டம் என் கையில்), தென்றல் வந்து (அவதாரம்), என் ஜோடி மஞ்சக்குருவி (விக்ரம்), பொன்மேனி உருகுதே (மூன்றாம் பிறை), ஓரம்போ ஓரம்போ (பொண்ணு ஊருக்கு புதுசு), ஒரு ஜீவன் அழைத்தது (கீதாஞ்சலி), பொதுவாக என் மனசு தங்கம் (முரட்டுக் காளை), என் இனிய (மூடுபனி), இளைய நிலா (பயணங்கள் முடிவதில்லை), நிலாவே வா (மௌன ராகம்), ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதரர்கள்).

# Rock With Raaja என்று பெயர் வைத்தது மிகப்பொருத்தம் – சுமார் எண்பது பாடல்களுக்குள்ளேயே சுற்றி வந்து கொண்டிருந்த ராஜாவின் இசைக் கச்சேரிகளுக்கு இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றுவழி. இந்த வழியிலேயே சில நூறு பாடல்கள் இருப்பதால் இது தொடரும் என்று நம்புவோமாக. மக்களும் ஜோதியில் ஐக்கியமாக இது நல்ல வழி. (அவர்களை அப்படி ஐக்கியமாக்கிட முயற்சி செய்தவர்கள் இரண்டே பாடகர்கள் – உஷா உதுப், DSP. இருந்தும் மக்களுக்கு அழைப்பு தேவைப்படவில்லை, சகஜமாக ஆடிக்கொண்டே இருந்தார்கள்). பாடல் வரிசையில் இடம்பெற்றிருக்கலாம் என எனக்குத் தோன்றிய – அதாவது கச்சேரி நடவடிக்கைகளில் எந்த தொடர்பும் இல்லாத எனக்குத் தோன்றிய இரண்டு பாடல்கள் – Swing Swing (மூடுபனி), ஆச அதிகம் வெச்சு (மறுபடியும்).

# Noise & Grains என்று தைரியமாகச் சென்ற நான் – எனக்கு மிகப் பிடித்த வார்த்தை – பேஸ்தடித்த முகத்துடன் திரும்பி வந்தேன். ஒலிக்கலவையில் ஏதோ சரியில்லை. இசையாக இல்லாமல் சில நேரங்களில் இரைச்சலாக இருந்தது. பிரித்துப் பிரித்து ஒவ்வொரு கருவியாகக் கேட்காமல் கொஞ்சம் மொண்ணையாகவே கேட்டது. ஒரு வேளை நான் ஸ்பீக்கர்களுக்கு மிக அருகில் இருந்ததனாலோ என்னவோ. அரங்கத்தில் இருக்கிற ஆறு screenளை நோட்டம் விட மூவர் இருந்தால் கூட சமாளித்திருக்கலாம், சதா மக்கர் செய்து கொண்டிருந்த அதை கவனிக்கச் சொல்லும்படி, கத்திக் கூச்சலிட்டு மக்கள் ஓய்ந்துவிட்டார்கள். மற்றபடி, Youtube uploadகளில் என் மனதை அவர்கள் வெல்லும் வரை தீர்ப்பு ஒத்திவைக்கப் படுகிறது.

# இறுதியாக இறை வாழ்த்து. கச்சேரியில் முதலில், கட்டுரையில் கடைசியில். ஏழரைக்கு மேடையேறிய ராஜா நான் கிளம்பும் வரை, பதினொன்று வரை மேடையை விட்டு கொஞ்சமும் அகலவில்லை. பத்து மணி அளவில் ஒரு வெள்ளைக் கோப்பையில் எதையோ குடித்ததோடு சரி. மொத்த கவனமும் எப்போதும் அரங்கேறுகிற இசை மேல் மட்டுமே. அரங்கேறுகிற இசைக்கோலங்களில் அவர் சில சமயம் எதையோ காண்கிறார், எதையோ நினைக்கிறார். தேகமெல்லாம் ராகம், நாளமெல்லாம் தாளம் என்று தொடங்கி நீ இசைஞானி அல்ல இசைமேனி என்று ஒரு முறை வாலி சொன்னார். இப்படி ஆறு மணி நேரம் நின்று நடத்த வேண்டிய அவசியங்கள் (நமக்கு) இல்லை – ஞானியையும் மேனியையும் பாதுகாக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்வோம். இப்படி நின்று கச்சேரியை நடத்துவது கடமை என்று அவர் உணர்கிறார் எனில் – நிகழ்ச்சித் தொகுப்பாளர் இன்றி, இசைக்குழுவினர்களிடையே மேடையில் ஏதும் சம்பாஷனைகள் இன்றி இக்கச்சேரிகள் auto-pilot செல்வதற்கான அத்தனை உழைப்பையும், அடுத்த தலைமுறை பாடகர்களை வளர்த்தெடுத்தும் நல்ல கட்டத்தை வந்தடைந்த பின்னர் சற்று ஓய்வெடுக்கலாம் – கச்சேரியிலேயே. பாடுவதற்கு சில சமயங்களில் சிரமப்பட்டதாகத் தெரிகிறது (உதாரணம், மச்சி மன்னாரு). நிலா அது வானத்து மேலே, ”once more” கதைகளைக் கைவிட்டு மற்ற கதைக்குச் செல்லும் நேரமும் வந்துவிட்டது. மற்றபடி நேரே உங்களிடத்தில் நெருங்கி உரிமையுடன் பேசுவது, குரலில் இன்னும் அதே காந்தம், சிரிப்பில் அதே மின்னல், அதே சதாய்ப்பு என எந்தக் குறையும் இல்லை.

# கச்சேரியை Twitter Spaceல் நேரடியாக ஒலிபரப்புகிற காலத்தில், ஆயிரம் அலைபேசிகள் ஆயிரம் கோணங்களில் படமெடுக்கும் காலத்தில், Youtube பாகம் பாகமாய் வரப்போகிற காலத்தில், அடுத்த முறை ’வார்த்தை’ என்று வரப்போகும் இடம் வரை கணக்கிட்டால், மொத்தம் மூவாயிரத்து அறுபத்து நான்கு வார்த்தைகளைத் தாண்டி எழுத வேண்டிய அவசியம் என்ற கேள்வி எனக்கும் உண்டு. காரணங்கள் அ) இது எழுத்துப் பயிற்சி. காட்சிகளை/இசையை எப்படி விளக்கிச் சொல்ல என, அதே வயலின்களை அதே புல்லாங்குழலைப் பல விதங்களில் சொல்வது எப்படி என, ஆ) நினைவுப் பயிற்சி – என்னவெல்லாம் நினைவில் இரண்டு நாட்கள் தங்கும் என, எடுத்த வைத்த குறிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை நினைவு கூற முயலும் சுவாரசியமான பயிற்சி (உ.தா – ”saayal of makkaL” என்று எழுதி வைத்த குறிப்பு எதற்கு என விளங்க பத்து நிமிடங்கள் ஆனது). இ) இதை பதிவு செய்வதை ஒரு விதத்தில் கடமை. ஈ) மிக முக்கியமான காரணம் – ராஜாவைப் பற்றிப் பேச, எழுத மற்றுமொரு வாய்ப்பு. ஒரு கட்டத்தில் உஷா உதுப் பார்வையாளர்கள் அனைவரையும் தத்தம் அலைபேசிகளின் ஒளிர்முகத்தை உயிர்ப்பித்து, கை உயர்த்தி ராஜாவிற்காகக் காண்பிக்கும் படி கேட்டுக்கொள்ள, அரங்கின் விளக்குகளை அணைக்கப்பட, ராஜாவைப் புன்னகைக்க வைத்த ஆயிரமாயிரம் அலைபேசி மின்மினிகளில் அடியேன் ஒருவன். ஆபத்துகள் நிறைந்து தொடர் இரவுகளில், எதேச்சையாக ஒளிர்ந்த இசை மின்மினியை பிடித்துத் தேறி வந்து பதினெட்டு வருடங்களுக்கு ஆனபின்னரும், இன்றும் ஒவ்வொரு நாளும் ராஜாவிற்கும் எனக்குமாக உறவு தினமும் புதுப்பித்துக்கொள்கிறது, வியப்பைத் தருகிறது, ஆறுதலைத் தருகிறது, ஒவ்வொரு முறை அவரை நேரில் காண்கையிலும் மனம் அதிர்கிறது. அது ஓய்வதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ஒவ்வொரு கச்சேரிக்கும் இந்த மின்மினி ஒளிரும்.

Written by sirumazai

மார்ச் 19, 2022 at 10:52 பிப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with

இளையராஜா 75

with 4 comments

தமிழ்த்திரையுலகம் ராஜாவிற்கு விழா எடுத்தால் எப்படியிருக்கும் என்று நன்கு அறிந்திருந்தும் அங்கு சென்று தலையைக் காட்ட வேண்டியது, பாதி நமது தலையெழுத்து, மீது நமது தலையாயக் கடமை. ”ராஜா சாரப் பத்தி சொல்லணும்னுனா என்ன சொல்றது..” என்றே பெரும்பாலானோர் துவங்குவார்களெனில் அதற்கெதற்கு ஒரு மேடையும் முன்னேற்பாடுகளும் என்று புரியவில்லை. ராஜா இசையமைக்கிற வேகம், பிண்ணனி இசையை அளந்து சேர்க்கிற நேர்த்தி, வரிசைகட்டி நின்ற இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என வழக்கமாகச் சொல்லப்படும் துணுக்குகளுக்குள்ளேயே சுற்றித் திரிவது அசட்டுத்தனம். ராஜாவுடன் பயணித்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், இயக்குனர்கள் என சிலரை மேடையேற்றி சில உருப்படியான வார்த்தைகளை பேச வைக்க முடியம், ஆனால் அதில் மனமோ வணிகமோ இல்லை. முதல் நாள் ராஜாவைக் கொண்டாடி பாராட்டுகிறோம் என்றெடுத்த விழாவின் முதல் இரண்டு மணி நேரம் வெறும் அலுப்பை மட்டுமே தந்தது. இரண்டாம் நாள் இசைக் கச்சேரிக்கு இடை இடையே வந்தாரெல்லாம் மேடையேறலாம் மேடையேறியவரெல்லாம் பேசலாம் என்று இழுத்த இழுவையிலும் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்களோ, உயிர்ப்பான அனுபவங்களோ பெரும்பாலும் இல்லை. திறமை, உழைப்பு, தொழில்முறை, வணிக வெற்றி என அத்தனை அளவைகளிலும் ராஜாவை அண்ணாந்து மட்டுமே அளக்க முடிகிற நிலையில், பாராட்டத் தெரியாமல் விக்கித்து நிற்பது வேறு, ஒரு நல்ல விழாவை எடுக்க இம்மியும் முயலாமல் இருப்பது வேறு. எது எப்படி நிகழ்ந்தாலும் அதை முழுக்க அமர்ந்து பார்க்கவே ராஜாவிற்கு வாய்த்திருக்கிறது. இந்தச் சலிப்புகளுக்கிடையே, “இங்க இத்தன பேர் நின்னு வாசிக்கிறாங்களே, யார்னாச்சும் எங்கயாச்சும் சின்னதா மாத்தி வாசிச்சா கூட இவனுக்கு சரியாக் கேட்டுடும்என்று TVG சொன்னதும், ராஜாவின் இசையை வைத்தே முதல் அடி எடுத்து வைத்ததை விஜய் ஆண்டனி/தேவிஸ்ரீ/மணி ஷர்மா பகிர்ந்து கொண்டதும், எதிர்பார்த்ததை விட சற்று உணர்வுப்பூர்வமாகவே பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதும், கால் தொட்டு வணங்கி அடுத்த நொடி எழுந்து ராஜாவைக் கட்டி முத்தம் வைத்து இருவருக்குமிடையே உள்ள உறவின் மொத்த நீள அகலத்தையும் கமல் அடைந்ததும் மட்டுமே மனதில் நின்றது.

விழாவை தனி ஆளாக சுமந்து நின்றதாக அனைவராலும் பாராட்டப்பட்ட விஷால், முதல் நாள் வழங்கிய வரவேற்புரை, அரங்கின் பெரிய திரைகள், உலகெங்கும் இருக்கிற சிறிய திரைகளின் வழியே கண்ணுக்கு தெரியாத எதிரிக்காக வழங்கப்படும் செய்தியைப் போல கதாநாயகத் தன்மையுடன் இருந்தது. மேதகு ஆளுநருக்கு அன்று இருந்த ஒரே வேலை, “இளையராஜா” என்பதை ஒழங்காகச் சொல்வது. முதல் முறை சரியாகச் சொன்னவர், ராஜாவின் பிண்ணனி இசை காட்சிக் காட்சி வேறு வடிவமெடுத்துச் செல்வதைப் போல வெவ்வேறு விதமாகச் சொல்லிக் கொண்டே சென்றார். ”நீங்களே ஹீரோவா நடிக்கலாமே” என்று பலரும் நிச்சயமாகக் கேட்டிருக்கக்கூடிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் அடுத்த திரைப்படத்திற்கு யாம் பரிந்துரைக்கும் தலைப்பு – “லகரம், ழகரம், ளகரம்”. விஷால், ஆளநர் என தொடங்கி பேச்சு பேச்சு பேச்சென தொடர்ந்து போய்க்கொண்டே இருந்த போது, ஒரு காணொளியை ஒளிபரப்ப -அதன் துவக்கத்திலேயே, ஒரு ஜீவன்.. அழைத்தது என ராஜாவின் குரல் கேட்டதும், மொத்தக் கூட்டமும் விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் கூக்குரல் இட்டது, முதல் கரகோஷம்.

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய நற்செய்தியை ஒவ்வொரு நாளும் கேட்கக் தவம் கிடந்திருந்தாலும், அதை உங்களுக்கு தெரிவிக்கும் போது சலிப்பையும் அலுப்பையுமே ஏற்படுத்தக் கூடிய திறமை படைத்தவர் சுஹாசினி. சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ராஜாவின் கச்சேரியை அவர் தொகுத்து வழங்குவார் என்று அறிவித்த பின்னர், அதை எண்ணி எண்ணி, கடல் கடந்து வந்தும் நம்மை தேடி வரும் சங்கடங்களை எண்ணி எண்ணி, மனதை திடப்படுத்திக்கொண்டு சென்ற பின்னர், அந்நாளில் அவர் வராமல் போன போது நான் மனம் மலர்ந்து சிரித்த close-up காட்சி உங்களுக்கு நினைவிருக்கலாம். முதல் நாள் அரங்கத்தை நோக்கி நடக்கையிலேயே தொலைவிலிருந்து அவரின் குரல் கேட்டதும், அதே மனம், என் ஒரே மனம், வர மறுத்து முரண்டு பிடிக்க, அதை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ராஜா ரஜினியை சாமி என்றழைக்க, ரஜினி ராஜாவை சாமி என்றழைக்க, நடுவில் புகுந்து சாமி square என்பதும், coffee table book என்பதும் காபி குடிப்பதை விடவும் சிறந்த புத்தகம் என்பதும், எப்பவோ நீங்க limelightக்கு வந்துட்டீங்க இப்ப இந்த light கீழயும் வாங்க என்பதும், எங்க வீட்டுல வேல பாக்குறவங்க சொன்னாங்க என்று ஞாபகமாகச் சேர்த்ததும், ரஹ்மானையும் ராஜாவையும் மேடையேற்றி சரித்திரத்தில் இடம் பெறப்போகும் நிகழ்வை நிகழ்த்திவிட்ட பூரிப்பில் தொணதொணத்துக் கொண்டே இருந்ததெல்லாம் – we are trying to have a moment, ma’m.

நடிகை பூர்ணாவிற்கு பிறகு தமிழ்த் திரையுலக நிகழ்ச்சியில் “traditional dance” ஆடப்போவது யார்? பவதாரிணிக்கு வயது ஏறுவதே இல்லையா? மேடையில் ஏறி நிற்கும் கூட்டத்தை மரியாதையோடு கீழே இறுங்குங்கள் என்று சரியாக சொல்வது எப்படி, ஏன் அதற்கு எல்லோரும் திணறுகிறார்கள்? வீணைக் கலைஞர் வீணையின் எலும்புக்கூட்டைப் போல ஒன்றை வைத்துக் கொண்டு வாசித்தாரே, இப்போதெல்லாம் இப்படித்தானா? ராஜாவிற்கு பாராட்டு விழா என்பது இப்படித் தானிருக்க வேண்டும் என்று யார் மண்டையில் உதித்தது… என்பன பொதுவான சில சந்தேகங்கள்.

குறுங்கதை #1 – கடவுள் இருக்கிறார் குமார் : “எங்கெங்கிருந்தோ ராஜாவை பார்க்க வந்திருக்கும் நீங்கள்..” என்று மேடையில் யாரோ முழுங்கிய போது, “அதெல்லாம் ஒண்ணும்ல, நான் வேதிகாவ பாக்கலாம்னு வந்தேன்” என்று ஒருவர் சொல்ல, சற்றேறக்குறைய பத்து பதினைந்து நிமிடங்களில் வேதிகா மேடையில் தோன்றி “கண்ணத் தொறக்கணும் சாமி” என்று ஆடினார். குறுங்கதை #2 – எனக்கு சற்று முன்னால் அமர்ந்திருந்த கணவன் – மனைவி, சுதந்திரமாக நான்கு கைகளையும் நீட்டி “மாலை… அந்தி மாலை இந்த வேளை மோகமோ” என்ற ராகத்திற்கு காற்றை அளந்து ரசிக்கையிலே, திரையில் சட்டென யுவன் குடும்பத்துடன் தோன்ற, மனைவி கணவைப் பார்த்து இரண்டு கைவிரல்களைக் காட்டி “ரெண்டாவது.. ரெண்டாவது” என்று உரக்கச் சொல்ல, கணவன் அப்படியா என்று சொல்ல, மனைவி ஆமாம் என்று சலிப்புடன் தலையில் அடித்துக் கொள்ள, அடுத்த நொடியே “மேக மழை நீராட..” என்று பாடலை ரசிக்க நான்கு கைகளுடன் தாவிச் சென்றனர்.

ரஹ்மான் மேடையேறி ஆயிரத்து முன்னூறாவது முறையாக ராஜாவிடம் தனக்குப் பிடித்தது மது அருந்தாமை, புகை பிடிக்காமை, போக்குவரத்து விதி மீறாமை என்றெல்லாம் சொன்னார். மூன்றாம் பிறை திரைப்படத்தின் பொழுது ராஜாவிடம் வாசிக்க சென்றதாகவும், இன்னும் பயிற்சி எடுத்துக்கொண்டு வா என்று அவர் அனுப்பிவிட்டதாகவும் சொன்னார். பின்னர் புன்னகை மன்னன் திரைப்படத்தின் பொழுது இருவருமே சந்தையில் புதிதாக வந்திருந்த கணிணியை வைத்திருந்ததாகவும், அதை இயக்க தனக்கும் தெரியும் என்பதால் ராஜாவிடம் சென்று வேலை கேட்டதாகவும் சொன்னார். இருவரையும்  சந்திக்க வைத்தது கணிணியென்றால்.. பகவானின் லீலையை பார்த்தீர்களா? (புன்னகை மன்னன் பாடல்களை கணிணியில் feed செய்தது மட்டுமே நான் என்றும் சொல்லிவிட்டார் – கவனிக்க : யாரோ, யார் யாரோ). தனக்கும் ராஜாவுக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை என்று ரஹ்மான் சொல்ல, அது உனக்கு பழக்கம், எனக்கு வாழ்க்க, பழக்கம் வாழ்க்க ரெண்டும் ஒண்ணு தானே.. இல்ல பழக்கம் வேற வாழ்க்க வேற என்று நீண்டது.. பேச்சு. ரஹ்மான் அவருடைய தந்தையுடன் இருந்ததை விட தன்னுடன் ஸ்டூடியோவில் இருந்ததே அதிகம் என்றும், ஐநூறு படங்கள் வரை ரஹ்மான் தன்னுடன் பணிபுரிந்ததையும்  குறிப்பிட்டு, இதையெல்லாம் நீ தான் எல்லோருக்கும் சொல்லணும், என்ன சொல்ல வெக்கக் கூடாது என்று சொல்லி, அதை இன்னொரு முறை நினைவூட்டவும் செய்தார். எங்கிருந்தோ திடீரென மேடையேறிய கஸ்தூரி, ரஹ்மான் வாசிக்க நீங்க பாடணும், அது தான் என் வாழ்க்கையின் ஒரே ஆசை என்று சொல்ல, மன்றம் வந்த தென்றலுக்கு சில வரிகள் நிகழ்ந்தன. அந்த “historical moment” நிகழ்கையில், நம் கண்ணுக்கு தெரியாத துணியொன்றை நம் கண்ணுக்குத் தெரியாத வாளித் தண்ணீரில் நனைத்து வலமும் இடமும் காற்றில் அசைத்து மேலும் கீழும் உலர்த்தி சுஹாசினி ஆடிக்கொண்டிருந்தது அவரின் வாழ்க்கையில் ஒரு historical moment.

முதல் நாள் நான் பார்த்ததில் உருப்படியான ஒரே விஷயம், விஜய் யேசுதாஸ் பாட, நிவாஸ் பிரசன்னா கீபோர்ட் வாசிக்க, மணி கிட்டார் வாசிக்க அரங்கேறிய – எனக்குப் பிடித்த பாடல், ஒரு நாள் ஒரு கனவு, பூபாளம் இசைக்கும், என் இனிய பொன் நிலாவே, பூங்காற்று புதிதானது, நடிகர் நரேனுடன் சேர்ந்து காட்டுக் குயிலு மனசுக்குள்ள. விஜய்யின் முகத்தில் லேசான கடுமையும் கசப்பும். வாசிப்பதில் என்னவோ அவருக்கு சரிவரவில்லை. கோட்டும் சூட்டும் பாட்டும் நன்றாகவே இருந்தன. எனக்கு அவரிடம் கேட்கத் தோன்றியது, அந்த லாயல்டி விஷயத்துல..

முதல் நாள் வந்திருந்த பிரபலங்களில் கவனம் ஈர்த்தவர்கள், “முதல் மரியாதை” ரஞ்சனியும், “அவுகள மாதிரி இருப்பாங்களா?” லலிதகுமாரியும்.

இனி இரண்டாம் நாள் கச்சேரியின் சங்கதிகள் மட்டுமே. ராஜா வருவதற்கு முன்னர் மேடையேறிய கார்த்திக் ராஜா, அரங்கில் அமர்ந்திருந்த மணிரத்னத்திடம் “இன்னும் எவ்வளவு நாள் ரசிகர்கள காய வெக்கப் போறீங்க” என்று கேட்ட போது, ராஜா இருந்திருந்தால் இதற்கு சரியான பதிலை அவரே சொல்லியிருப்பார் எனத் தோன்றியது. (அவர் அரங்கிற்கு இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை). கச்சேரிக்கு நடுவே இயக்குனர் ஷங்கரை மேடையேற்றிய ரோஹிணி அவரிடம் “எப்போ சார் ராஜாவோட படம் பண்ணப் போறீங்க” என்று கேட்டதும், “எனக்காக நீ சான்ஸ் கேக்குறியா.. I don’t like this..அவருக்கு comfortableஆனவங்களோட அவர் workபண்றாரு, சும்மா ஏன்” என்று சொன்னதும் கேட்ட கைதட்டல்களில் என்னுடையதும் உண்டு.

நுழைவுச் சீட்டு விற்பனைக்கு துணையாக காட்டப்பட்ட வரைபடத்தில், ஏறுமுகமாக விலை ஏறிக்கொண்டிருந்த executive, bronze, silver என மூன்றில், கடைசி இரண்டும் அகலமாகவும், வெள்ளி குறைவான வரிசைகளுடனும் காட்டப்பட்டிருந்தன. களத்தில் அப்படியே உல்டா. சொச்சம் பேரே நிரம்பியிருந்த வெள்ளிப் பகுதியை executive மக்களும் bronze மக்களும் கோபத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, எந்நேரத்திலும் மக்கள் அங்கே ஓடிச் செல்லக் கூடும் என் என்னுடன் வந்திருந்தவரிடம் – அவர் தன் பெயர் வெளிவருவதை விரும்பவில்லை – எடுத்துச் சொல்லியும் நம்பவில்லை. படைக் களத்தில் அணிவகுத்து அமைதிகாத்து நின்று கொண்டிருக்கையில் திடீரென ஹோவென்ற சத்தத்துடன் ஒரு சாரார் ஓடிவருவதை போல மக்கள் வீறுகொண்டு காலி நாற்காலிகளை நோக்கி ஓடத்துவங்கினர். எதிர்வரும் வாள் வீச்சிற்கு கீழே குனிந்து முன் செல்வதைப் போல, ஆண்களும், பெண்களும், வயசாளிகளும், மரத்தடுப்பிற்கு கீழே குனிந்து தாண்டி ஓடினர். ஒன்றும் செய்யமுடியாமல் விழித்த bouncers, பார்வையினால் அளந்து தடுக்க முடியும் என்ற நம்பிக்கை தரும் சிலரை மட்டும் நிறுத்த முயல, தடுக்கப்பட்டோரின் அறச்சீற்றம் பலே. பொன்.ராதாகிருஷ்ணன் ராஜாவிற்கு பத்மபூஷண் தரப்பட்டதை நினைவு கூறும் பொழுது மோடியின் பெயரைச் சொன்ன நொடியில் தூண்டுவாரின்றி அரங்கமே ஒன்றாக ஊளையிட்டதற்காக அனைவரையும் பாராட்டுவோமாக.

அரங்கில் நல்ல பொழுதுபோக்குபேச்சையும், பாவனையும், சத்தத்தையும் மட்டும் வைத்து யாரெல்லாம் ட்விட்டர் ஆசாமிகளாக இருக்கக் கூடுமென்று கணிப்பது. மூன்று நான்கு நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்று போட்டுக்கொண்டு, உயர்ந்த இசையை மக்கள் பலரும் உயர அமர்ந்தே கேட்க அமர்ந்து தயாராகிவிட்ட பின்னர், காவலாளிகளின் உதவியுடன் ஒவ்வொருவரையும் கை காட்டி, கை தட்டி அழைத்து எழுப்ப, ஒவ்வொரு உபரி நாற்காலியும் ஜெயலலிதா அரசின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிக்கொண்டே இருக்கிற நாற்காலிகளைப் போல தலைக்கு மேலே இப்படியும் அப்படியும் பயணித்துக்கொண்டே இருந்தன. அந்தச் செயலில் கண்ணும் கருத்துமாய் காவலாளிகளுடன் செயல்பட்ட திருவாளர் பொதுஜனம் ஒருவர் நிச்சயம் ட்விட்டர் ஆசாமியாகத் தான் இருக்க வேண்டும், இல்லையெனில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமே.

கோரஸ் பாடகர்களின் “குரு பிரம்மா” முடிந்ததும் ராஜாவின் “ஜனனி ஜனனி”. இதுவரை எத்தனை லட்சம் முறை சுருதி பிடித்துப் பார்த்துவிட்டாலும் எத்தனையோ வரிகளை பாடித் தீர்த்துவிட்டாலும், இன்றும் ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் பாடுகிற பொழுது, அதில் அவர் கண்டடைய முயல்கிற ஒரு துளி உண்மை, அந்த முயற்சியில் அவருடைய மொத்த மனமும் முகமும் குவிகிற கவனம், பார்க்க அலாதியானது. மாரியின் ஆனந்தி பாடலைக் கேட்டு சற்றுக் குழம்பியிருந்தாலும், அவரின் குரலுக்கு வயதில்லை என்பதே மீண்டும் உறைத்தது. ஹரிசரண் நல்ல பாடகர் என்றாலும் ”ஓம் சிவோஹ”த்தை அவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. விஜய் பிரகாஷ் வந்திருக்கலாம், ஆனால் வழக்கமாக இதைப் பாடும் கார்த்திக் வராதது மகிழ்ச்சி. மனோவிற்கும் எனக்கும் ஆகாது. (அது அவருக்கு இன்னமும் தெரியாது. அதை அவருக்குத் தெரிவிக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது, அதைப் பற்றி வேறொரு நாள்). மனாவின் வலது கரம் நாளை திடீரென பாடத்துவங்கினால் கூட நான் அவர் மனோகரமாகப் பாடினார் என்று சொல்ல மாட்டேன். அவர் நன்றாகப் பாடிவிட்டால் கூட கோபத்துடன் அமைதியாகவும் முறைத்துப் பார்க்கவே இயலும். இருந்தும் – ”இளமை இதோ இதோ”, ஏதோ ஏதோவாகத்தான் இருந்தது. மனோவை ராஜா வம்பிழுப்பார் எனக் காத்திருந்த எனக்கு அன்று ஏமாற்றமே. சமீப காலமாக சித்ராவின் மேடைப் பாடல்கள் கொஞ்சம் சங்கடத்தை தந்துகொண்டிருந்தாலும், அன்று கச்சிதமாக பாடினார். ”நின்னுக்கோரி” முடிகிற வரையில் மொத்தக் குழுவின் சப்தங்களில் ஏதோ சங்கடம் இருந்ததால், அவரை அந்தப் பாடலில் சரியாகக் கவனிக்க இயலவில்லை.

பூவே செம்பூவேவை துவக்கிய கிட்டார் இசைக்குத் தோதாக வெண்ணாரைக் கூட்டமொன்று வானில் மிதந்து சென்றதை உங்களிடம் சொல்ல வேண்டுமென தனியாகக் குறித்து வைத்துக் கொண்டேன். யேசுதாஸின் ஒலியைக் கடத்தி வரும் ஒரு ரப்பர் குழாயில் தோராயமாக எங்காவது இறுக்கிப் பிடித்துக் கட்டினால் சற்றே மாறிக் கேட்பதைப் போல இருக்கிறது மது பாலகிருஷ்ணனின் ஒலி. பாடகரின் ஒலி, ஒவ்வொரு இசைக்கருவியின் ஓசை என எல்லாம் தெளிவாக கேட்கத் துவங்கியது இந்தப் பாடலின் பொழுது தான்.  நெப்போலியன் என்கிற அருண்மொழியின் புல்லாங்குழல் தீண்டும் போதெல்லாம், அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் மக்கள் ஆனந்தம் கூக்குரலிடுவது பரவசம். எல்லாம் மேடைகளிலும் the king என்று தவறாமல் முழங்கும் உஷா உதுப்பின் குரல் ஒரு நொடியில் உயர நீளம் தாண்டி அடைகிற வீச்சு கணீரென அதிர வைக்கிறது. ”வேகம் வேகம்பாடலின் இடையிசைகளில் காற்றுச் சுழலில் சிக்கிக்கொண்டு சுழன்ற இசைக்கருவிகளின் சத்தங்கள் மிகத் துல்லியம்.

கச்சேரியின் முதல் ஆச்சரியம்பாடகி விபாவரி. அடிமனதில் இன்னும் கொஞ்சம் சோம்பல் தங்கியிருப்பதைப் போலவே பாடும் உமா ரமணினில் துவங்கி ஒவ்வொரு வார்த்தையையும் கொஞ்சிக் கொல்லும் சுஜாதா வரை நீளும் உற்சாகத்தின் அளவுகோலில், நடுத்தர மகிழ்ச்சிக்கு சற்றே கீழே திரைப்பாடல்களில் பாடுபவர், ஆனால் அன்று அக்குறை தெரியவில்லைஒருவேளை அவருக்கு அமைந்த பாடல்கள் சரியாக பெருந்தியிருக்கக் கூடும். ”ஆனந்த ராகத்தின் வரிகளையும், இசையையும் உள்வாங்கிக் கொண்டு மட்டுமல்லாமல் சுலபமாக பாடியபடி அமைதியாக அவரே ரசித்துக்கொண்டே இருப்பதை பார்க்கச் சுவையாக இருந்தது. ராஜாவிடம் பாடுகிற இளையவர்களில் மிகத் திறமையானவர்களில் ஒருவர் சுர்முகி. ”இதயம் ஒரு கோயிலில் அவருக்கு இருந்த பங்கை சிறப்பாக செய்தார். கரகரத்துக் கரைகிற குரலில், மீண்டும் பாடலுக்கும் அவருக்கும் நமக்கும் இருக்கிற இணைப்பை விரல்கொண்டு விளக்கிக்கொண்டே பாடுகிறார்.  ராஜாவின் குரல், நாயனம், வீணை, வயலின் என வழித்துணைகளுடன் எத்தனை முறை இந்தப் பாடல் வழி சென்றாலும், மீதித் தூரம் பாதையில் இருந்து கொண்டே இருக்கிறது. நீயும் நானும் ஒன்று தான் என்பதையெல்லாம் முகம் பார்த்துக் கண் பார்த்து விளக்கும் பொழுது, கடற்கரை மணலில் சட்டென ஆழமாக புதைகிற காலடியைப் போல மனம் ஒரு அடி இன்னும் ஆழமாகச் சரிகிறது. (பாடலுக்கு முதலில் எழுதப்பட்ட பல்லவியை மீண்டும் விளக்கிச் சொன்னார்). கடைசி வரிகளை அடைவதற்குள் ராஜாவின் தொண்டையில் சற்று பிரச்சினை ஏற்பட்டுவிடதொண்டை சரியில்லைஎன்பதாக சைகை செய்தவாறே சற்று நிறுத்திவிட்டு பாடல் முடிந்ததும் தண்ணீர் குடித்தார். இந்த இடைப்பட்டக் காலத்தில்என்ன ஆச்சு என்ன அச்சுஎன்று எனக்குப் பின்னால் ஒரு ரசிகர் பதற்றமடைய, “அழுதுட்டாரா?” என்று மற்றுமொருவர் வினவ.. சில நொடிகளிலே அதுவேஅழுதுட்டாருப்பாஎன்று மூன்றாமவர்க்குச் சொல்லப்பட, “வொய்ஃப் ஞாபகம் வந்திருக்கும்என மூவரும் விசனப்பட்டுப் பேசஇல்லை சக ரசிகர்ளே, இல்லைவே இல்லை, தொண்டை, தொண்டை, தொண்டை மட்டுமே. (அவர்கள் இதைப் படித்துக்கொண்டிருப்பார்களினெல்நேரில் சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும்இப்படிக்கு, கூச்ச சுபாவம்).

பாடகர் பிரசன்னாஒளியிலே..” என்ற ஒற்றை வரி சங்கீத விளிப்பைச் சரியாகச் செய்ய அவரின் குரல், புருவங்கள், தோள்கள், உடல்மொழி என அத்தனையையும் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் கவனத்துடன் பாடினார். (பாடுவதற்கு எதற்கைய்யா எல்லாருக்கும் sherwani?). பவதாரிணி சற்றுக் கலவர நிலையிலேயே இருந்தார். “ஒளியிலே..” என்று பாடிவிட்டு யாரைப் பார்த்து எல்லாம் சரியா என ஆறுதல் கொள்வதென்றும் தெரியாமல் பொத்தம் பொதுவாக விழித்தார். இருவரும் மேடை இறங்கியதும் நன்றாகப் பாடிவிட்டதற்கு யாரேனும் ஆசுவாசப்படுத்தி இருப்பார்கள் என்று நம்புவோமாக. கச்சேரியில் முதல் சிக்ஸர் அடித்தது முகேஷ், “பூவே இளைய பூவே”. பூவே என்ற முதல் வார்த்தையில் வைத்த இசைப்பேனா கடைசி வரை முடிகிற வரையில் காகிதம் விட்டு விலகாததைப் போல வழிந்தோடுகிற பாடலைப் பிரமாதமாகப் பாடுவதில் அவருக்கு பெருமையும், மகிழ்ச்சியும் மட்டுமல்ல, ஒரு துளியும் சந்தேகமில்லை என்பதை அவர் முகத்திலேயே தெரிந்தது. அவரை வைத்து மலேசியா வாசுதேவன் பாடல்கள் கச்சேரி நிகழ்ந்தால் செல்வதற்கு நான் தயார். (உடன் ஜானகியின் வரிகளுக்கு, சுர்முகி).

மடை திறந்து.. என மனோ வந்ததும், சரி காலாற மனதாற கொஞ்சம் நடக்கலாம், அப்பளம் கிப்பளம் வாங்கலாம் என்று சென்றிருந்தேன். யாரோ பிரபலம் அரங்கினுள் வந்ததற்கு மக்கள் ஆர்பரித்ததை கவனிக்காமல் கடைகளை நோட்டம் விட்டபடி இடம் பார்த்து, வரிசையில் சிலரை இலகுவாக பின்னுக்குத் தள்ளி, யாரும் முன்னேறிச் சென்று விடாமல் மண்ணில் ஒரு காலும் கீழே கிடந்த மரப்பலகையில் ஒரு காலுமாய் நிற்கையில், திடீரென எதற்கு மரப்பலகை இப்படி அதிர்கிறது என்று கீழே அதை உற்றுப் பார்த்தும் ஒரு கணம் எதுவும் புரியவில்லை. கமல் பாடுவதாகக் கத்திக் கொண்டே இருவர் பின்னே திரும்பி ஓடிய பொழுதும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த திரையைத் தேடி ஓடிச் சென்று பார்த்த பொழுது, அரங்கத்தில் அமர்ந்தபடி பாடிக்கொண்டிருந்த கமல், ”ராம் ராம் ஹேஹேராம்என்று பாடியபடி மேடையேறி முழுப்பாடலையும் ஸ்ருதி ஹாசனுடன் பாடியதை வாயைப் பிளந்தபடி மட்டுமே பார்க்க முடிந்தது. தேசத்துக்கெல்லாம் ராஜனை வரவேற்பதைப் போல துவங்கி நெஞ்சை மிதித்துக் கொண்டு ஏறிச் சென்று கொண்டே இருக்கிற பாடல் அரங்கேறிய விதம் பிரமிப்பு. (வயதும் தொண்டையும் கமலுக்குக் கொஞ்சம் கை கொடுக்கவில்லையென்றாலும். தவறைக் கொஞ்சம் திருத்தி மீண்டும் ராஜா கமலை பாடவைத்தார்). தொடர்ந்து கமலும் ஸ்ருதியும்நினைவோ ஒரு பறவையையும் பாடினர்அடுத்த நாள் முழுக்க பாடலின் வரிச்சிதறல்களும் இசை வடிவங்களும் மனதில் தானே தோன்றி சிறகடித்து மறைந்து கொண்டே இருந்தன.

பாடலின் ஒவ்வொரு நுணுக்கத்தின் பூரணத்தை சித்ரா அடைய முயல்வதும், அதை அடைவதும், அதற்கு நேரெதிர்க் கோடியிலே உச்சரிப்பின் தெளிவிருந்தாலும் அதையும் முழுமையாக அடைவதும், இவை எதுவும் பாடலையோ அதன் இனிமையையோ கொஞ்சமும் காயப்படுத்தாமல் இருப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். “உன்ன விடவில் உடன் பாடிய கமலும் ஆடிய காளைகளின் கழுத்தும் மணிகளும் சரியாக இருந்தன. ராஜ ராஜ சோழன் நான் என மது பாலகிருஷ்ணன் பாட வந்ததும், மேடையேறிய கல்லூரி மாணவிகள் அந்தப் பாடலை தொடர்ந்து பாடியது புதிதாக இருந்தது. அப்படியேஎன் இனிய பொன் நிலாஎன்றெடுக்கத் துவங்கியதும், ராஜாவிற்கு என்ன தோன்றியதோ, மதுவிடம் கை காண்பித்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரே சில வரிகளைப் பாடினார்பாக்கியம், நினைவிலே புது சுகம்ராஜா தரரராத்தரா எனப் பாடிக்கேட்டது. அதே கல்லூரி மாணவிகள் வாத்தியங்களின்றிநான் பொறந்து வந்தது..” பாடிச் சென்றனர். கச்சேரியில் ஏதேனும் ஒரு உச்சிப் பொழுதில் உடலும் மனதும் அடங்கி பெரும் நிசப்தத்தில் அதிசயத்துப் பார்க்க நேர்வது வழக்கமேஅன்று அந்த நொடியை விபாவரியும், கோரஸ் பெண்களும், வாத்தியக் கலைஞர்களும் சேர்ந்து தந்தனர் ( – என்னுள்ளே என்னுள்ளே). ஒன்றின் மேல் ஒன்றாக மேலேறி அலையடித்த வயலின்கள், காலுக்கடியில் கடற்கரை மணலை அரித்துக்கொண்டு கடல் அலை பின்வாங்குவதைப் போல மனதை அசைத்துக்கொண்டே சென்றன.

தொண்டை சரியில்லை என்று கமல் சொல்லிக்கொண்டே இருந்தாலும் ராஜா அவரை மீண்டும் மேடையேற்றிகண்மணி அன்போடுஒரு தலை உரையாடலைப் பேச வைத்தார். மனிதர் துளியும் மாறாமல், அவ்வரிகளை துளியும் மாற்றாமல், அதே நிறுத்தங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், மனிதக் காதலில்லை என்ற அறிவிப்புகள் என கொஞ்சம் அதிர வைத்தார். மறுமுனையில் உரையாலை பாடலாக்கிக் கொண்டிருந்த சுர்முகிதற்போதைய ராஜா பாட்டுகோஷ்டியில் ஜானகியிடன் பாடல்களை பாட இவரே சரியான ஆள். வயலின்துப்பாக்கி தேடிக் குறிபார்த்து சுட்ட பின்னர், தொடர்ந்து கமலேகண்ணே, தொட்டுக்கவா, கட்டிக்கவாஎன்று பேச, பாடலை பாடியது மனோவும் ப்ரியா ஹிமேஷும், அங்கங்கே கொஞ்சம் கமலும். பாடல் துவங்கிய நொடியிலிருந்தேமுன்னமே சொன்னது போல – slow-moவில் திரையை கடக்கிற குதிரைகள், நம்மை நோக்கி ஓடிவருகிற கமல்அம்பிகா, ஆதவனைப் போல மேலே மெல்ல எழும்பிக் கொண்டிருக்கிற காமிராஇவையனைத்தையும் கட்டி இழுக்கிற வயலின்களை மீண்டும் காணக் காத்திருந்து, கண்டும் கேட்டும் பாக்கியம் பெற்றவனானேன். ஹரிசரணும் ப்ரியா ஹிமேஷும்ராக்கம்மா” பாடியது பெரிதாக ஈர்க்கவில்லை, இசை மட்டும் அதே தரம். மறுபடியும் விபாவரிகண்மணியே காதல் என்பது கற்பனையோ..”வில் கவர்ந்தார். (உடன் மனோ). கோரஸ் பாடுகிறவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். ”சம்பா சம்பா..” என ஹரிசரணால் குறும்பைக் கொப்பளித்து கொக்கரிக்க இயலவில்லை. (மாருகோ மாருகோ, சித்ராவுடன்).

அரங்கத்தில் நேரடியாக பாடல்கள் பார்த்துக் கேட்கிற அனுபவத்திற்கு மனம் கொஞ்சம் பழகி, ஆற அமர உட்கார நேர்கையில், அதை தட்டி எழுப்பி இங்கே என்ன நடக்கிறதென புரிகிறதா எனக் கேட்டு, கொஞ்சம் சிலிர்க்க வைத்ததுகாதல் ஓவியம்..”. ஏதோ தொலைகாட்சி நிகழ்ச்சியில் ராஜாவின் பாடல் பாடப் பட்ட பின்னர், பாடல் உருவாக்கப்பட்ட விதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த உமா ரமணன் – “கேக்கறப்ப அப்படியே heart stoppage மாதிரி ஆயிடுதுஎன்றார். அங்கு இந்தப் பாடலின் harmonyயைக் கேட்கையிலும் அப்படித் தான் ஆனது. (தனிக் குரல்கள், கார்த்திக் ராஜா, விபாவரி). ஹங்கேரி இசைக்குழுவில் வயலின் வாசித்துக்கொண்டிருந்த இரண்டு யுவதிகளிடம் விபாவரி கடைசி பல்லவிக்கு மைக்கை நீட்ட, அவர்களே பாடி முடித்தார்கள். வதவதவென மேடையேறிய திரையுலகினர்களில் விக்ரம் அன்னியன் ரெமோவைப் போல பட்டர்ஃப்ளைசில வரிகள் பாடிவிட்டு கீழிறங்கியதும் அதே பாடல் முழுமையாக அரங்கேறியது. (மனோ, ஸ்ரீநிஷா(?)). யுவன்ஹேய் உன்னைத் தானேபாடலை எதிர்பார்த்ததை விட கொஞ்சம் மேலே பாடினார். உடன் பாடிய அனிதா கடைசியில் ரொம்பவே மேலே பாடிவிட்டார். பின்னர் வைபவ், ஜெயம் ராஜா, சத்யன் அந்திக்காட், சித்திக் என ஒவ்வொருவராக மேடையேறவும் மணி பதினொன்றரையைத் தொடவும் மனமில்லாமல் வெளியேறி வேண்டியதாயிற்று. நீண்ட வழி நடந்து சாலையை அடையும் பொழுது மனோவும் சித்ராவும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடத் துவங்கினர். சிலர் நின்றும், சிலர் அமர்ந்தும் கேட்டுவிட்டு நகர்ந்தோம்.

பேசியவர்களில் – நாசர்இத விட பெட்டரான பாடல்களும் நல்ல பாடல்களும் இருந்தும் கூட என்னோட ஐடெண்டிட்டி மாதிரி ஆயிடுச்சுஎன்று தென்றல் வந்து தீண்டும் போது பாடலைப் பற்றிக் குறிப்பிட்டார். ராஜா பாடல்களின் பொன்னியின் செல்வனைப் போல அந்தப் பாடல் ஆகிவிட்டதில் எனக்கும் கொஞ்சம் அலுப்பே. கார்த்தி “14, 15 வயசில ஒரு பொண்ணப் பாக்கையில என்னவெல்லாம் தோணுமோ அதெல்லாம் இப்பவும் தோணறதுக்கு ராஜா ம்யூஸிக் தான் காரணம்என்றார். இது தெரியாமல் சிவக்குமார் வீட்டில்  தினசரி ராஜா பாடல்களாக ஒலிக்கவிட்டிருக்கிறார். வள்ளி படம்பண்ணியதுகார்த்திக் ராஜா என்று ரஜினி சொன்னார். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு இதே போல தென்றல் வந்து தீண்டும் போது நீ தான பண்ணே? என்று கேட்கையில் கார்த்திக் ஆம் என்றார். (வெங்கட் மீண்டும் டிவிட்டரில் அதை இந்த வாரம் நினைவுகூர்ந்திருக்கார்). என்ன பண்ணினார்.. orchestration, arrangement, programming – எதை என்பதை யாரும் சொல்வாரில்லை. “அப்படி பாக்குறதுன்னாபாடலுக்கு orchestration கார்த்திக் என (முன்னரே இணையத்தில் பேசப்பட்டதை) பார்த்திபன் இப்போது சொல்லியிருக்கிறார். சில வருடங்களுக்கு  முன் டிவிட்டரில் கார்த்திக்கிடமே யாரே ”பா” திரைப்படப்பாடல் ஒன்று உங்களுடையதா எனக்கேட்டு அவர் ஆமோதித்தாக நினைவு. ”இசை இளையராஜாஎன்ற பெயருடன் கல்யாண்ஜிஆனந்த்ஜியின் மெட்டு வந்திருந்தாலும், அதற்குப் பின்னால் இருந்த பரஸ்பர மரியாதையையும் மெட்டுகளை பரிமாறிக் கொண்டதையும் நாமறிவோம். கார்த்திக் ராஜாவினுடைய முதல் மூன்று பாடல்கள் எனப் பரவலாக அறியப்பட்டவை ராஜாவின் பெயரில் வெளி வந்ததற்கு அவர் ராஜாவின் மகன் என்பதைத் தவிற வேறு காரணம் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு படம், ஒரு பாடல், ஒரு காலவரையறை இன்றி, ட்யூனை மட்டும் அப்பா தந்துவிட்டு வெளியே சென்றுவிடுவார், மீதி அனைத்தும் தன்னுடைய வேலை என்று கார்த்திக்கே பொத்தாம் பொதுவாக பதிவு செய்வாரெனில், வெங்கட்டையோ, ரஜினியையோ, பார்த்திபனையையோ நொந்து புண்ணியமில்லை. ஒவ்வொரு பாடலிலும் யாருக்கு என்ன பங்கு என்பதற்கு இசையை மட்டுமே சாட்சியாக விட்டு வைப்பது சரியில்லை என மனம் கசக்கவே செய்கிறது.

கச்சேரிக்கு செல்வது எதனால் – என்று கேட்டால் இசைக்கென என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். நூறு முறை கேட்ட பாடல்கள் எனினும், தொடர் ஓட்டத்தில் இசைக்குறிப்புகளை கை மாற்றியபடி இசைக்கருவிகள் ஓடும் விதத்தை பல முறை கேட்டிருந்தும், எங்கே புல்லாங்குழல், எங்கே கிட்டார், எங்கே ஷெனாய் என்பதெல்லாம் அத்துப்படி என்றாலும், பாடகர் மூச்சைப் பிடித்து கடந்து அடைந்த தூர உயரங்களின் கடுமைகளையும் இனிமைகளையும் அறிந்திருந்தாலும், நேரிலே அமர்ந்து இந்த ஓசைகளுக்குப் பின்னால் இருக்கிற மனித உழைப்பை, விரல் கைஅசைவுகளை, மூச்சுக்காற்றை காண்பது பரவசமாக இருக்கிறது. ராஜாவின் மனதில் ஒற்றைப் புள்ளியில் துவங்கி ஒரே நேர்க்கோட்டில் பயணித்து எனது புத்தியிலும் மனதிலும் ஒரு புள்ளியென குவிந்த விட்ட ஒரு பாடல், கடந்து வந்திருக்கிற தொலைவை பக்கவாட்டில் நடந்து சென்று நின்று பார்ப்பதைப் போன்ற உணர்வு. சிற்சமயங்களில் இந்த ஒலியை ஏற்படுத்த இதைத் தான் வாத்தியக்கலைஞர் செய்கிறார் என்பதை காண்கையில் சில தட்டையான புரிதல்கள் கொஞ்சம் ஆழமாகின்றன. ஆற்றைக் கட்டவிழுத்துவிட்டு அதன் வெள்ளத்தின் முன் ராஜா நின்று கொண்டு கைகளால் எந்த இடத்தில் சுழிக்கிறார், எங்கே இழுக்கிறார் எங்கே தடுக்கிறார் என்று பார்த்துக்கொண்டே இருக்க ஆர்வமாக இருக்கிறது. அவரை ஐந்தாறு மணி நேரம் தொடர்ந்து காணக் கிடைக்கிறது. அதையெல்லாம் மீறி ராஜாவையும் இசையையும் பிணைத்தும், அந்த இசையையும் நம்மையும் பிணைத்தும், ராஜாவையும் நம்மையும் பிணைத்தும் வைக்கிற ஏதோ ஒன்று – இசையை மீறிய அந்தப் புதிருக்கான விடையை அவர் முன்னரே, அவரை சாட்சியாக வைத்துக் கொண்டே, அவரின் முகத்தைக் கொண்டே அறிந்துவிட மனம் முயல்வதே காரணம். தனக்குப் பின்னால் இருக்கிற ஆயிரக்கணக்கான பாடல்களின் பாரம் சிற்சமயங்களில் அவரின் முகத்தில் தெரிவதைப் போல தெரிகிறது. ஆனாலும் பல சமயங்களில் – “Nature is a slave for Raja” என்று மோகன் பாபு சொன்ன போது பல்லைக் கடித்துக் கொண்டு என்ன எழவிது என்பதாக முகம் சுளிக்கையிலும், “நான் நடிக்க வந்ததுக்குக் கூட நீங்க தான் காரணம்” என விஜய் ஆண்டனி சொன்ன போது, இதையெல்லாம் என் தலையில எழுதக்கூடாது மேலே மேலே என கைகாட்டுகையிலும், “நினைவோ ஒரு பறவை” என்றதற்கு பின் கமலால் “பாபபப்பாபா” என்ற பாட இயலாமல் போகும் போது பக்கத்தில் நின்று உரக்க அதைப் பாடிக்காட்டி பாடு பாடு என்று சொல்கையிலும், ”காதல் ஓவிய..”த்தின் இசையலைக்கு அவர் உடலே அசைவதும் என இறகைப் போல மிதக்கிற அவரின் முகத்தைப் பார்த்துப் பார்த்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது. ராஜாவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர்களின் புகைப்படங்கள் – மனைவி, அம்மா, அப்பா, அண்ணன்மார்கள், தன்ராஜ் மாஸ்டர் என ஒவ்வொருவரையும் காண்பித்து அவரை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொல்கையில், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் புகைப்படம் தோன்றியதும் ஒரு கணம் – ராஜாவின் மனதில் உள்ள அத்தனை விளக்குகளும் ஒன்றாக அணைந்ததைப் போலவோ, இல்லை அவை எல்லாம் உயிர்த்ததைப் போலவோ, இல்லை இரண்டையும் போலவோ இருந்த அந்த ஒரு விசித்திர கணம் – அவர் ஏதும் பேசாமல் கண்கள் பளபளக்க புன்னகைத்து நம்மை அமைதியாக பார்த்துவிட்டு அடுத்த புகைப்படத்திற்கு போகச் சொன்ன அந்த கணத்தில் எதற்கு தொண்டையில் விக்கித்து மனம் இடறி நின்றது எனத் தெரியவில்லை. இந்த பிணைப்பிற்குப் பின் நிற்கும் புதிரை உடைத்து அறியும் வரையில் மீண்டும் மீண்டும் காணச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

Written by sirumazai

பிப்ரவரி 8, 2019 at 3:23 முப

இசை இல் பதிவிடப்பட்டது

இளையராஜா ஆயிரம்

with 12 comments

முன்குறிப்புக்கு முன்னே : பதிவு நீளமென்பதான குற்றச்சாட்டுகள் பதிவை முழுதாகப் படித்தவர்களிடமிருந்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நாலாயிரத்து ஐம்பது வார்த்தைகள், படிக்க ஏற்படும் நேரம் உங்களின் ADHDயைப் பொறுத்து.

முன்குறிப்பு : சுமாரான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மட்ட மதியான நேரத்தில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் சலிக்கத்துவங்கும் நேரத்தில் கீழே தெருவிலிருந்து கைப்பேசியின் தாழ்ந்த ஒலியிலும் துல்லியமாக ராஜாவின் புல்லாங்குழல் திடீரென துவங்கும் போது, அவசர அவசரமாக ஜன்னலுக்குச் சென்று, செல்கிற நேரத்திலேயே அந்தப் பாடலை ஊகித்து, பாடலை ஒலிக்க விடுபவர் யார் (ஒரு தள்ளுவண்டி தையல்காரர்), பாடலை எதற்காக ஒலிக்கவிடுகிறார், (ரிங் டோனல்ல, பொழுதுபோக்கவென), பாடலை எங்கணம் உள்வாங்குகிறார் (மிஷினின் மேல் தொட்டும் தொடாமலும் விரல் தாளம், வார்த்தைகள் உதட்டிலும் கொஞ்சம் புருவத்திலும் உட்கார்ந்தும் உட்காராமலும் ஒரு முணுமுணுப்பு) என கவனிக்கையில், அனிச்சையாக அவர் மேலே என்னை நோக்கி பார்க்கவும், சங்கோஜமாக இருவரும் புன்னகைத்து விலகியபின், பூரிப்புடன் சக ரசிகரை நினைத்துக்கொண்டும் பொய்யான சினிமா சோகத்துடன் ‘கல்லிலடிச்சா அது காயம் காயம் சொல்லிலடிச்சா அது ஆறாது’ என நாளெல்லாம் அந்தப் பாடலை பாடித் திரியும் நான், அந்த இசைக்கும் இது போன்ற கணங்களுக்கும் வெறும் ரசிகன். கூடவே, இப்படி முடிவே இல்லாத வரிகளை அவ்வப்போது எழுதுவது வழக்கம். முன்குறிப்பில் பின்குறிப்பு : இந்த விளக்கம் ஒரு வேளை நீங்கள் என்னை மறந்திருந்தால்.

#) டிக்கெட்டை பெற்றுக் கொள்ளவும் உபரியாக இருந்த ஒரு டிக்கெட்டை விற்கவும் திடலுக்குக் காலையில் சென்ற போது, அங்கே ப்ளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த திறமையான பேச்சாளி ஒருவர் அடுக்கிய விஷயங்கள் – டிக்கெட் அத்தனை பிரமாதமாக விற்கவில்லை (ப்ளாக், வொயிட் ரெண்டுமே), டிக்கெட் விலை மிக அதிகம், பாகிஸ்தான் இந்தியா மேட்ச் உள்ளது, நிறைய காம்ப்பிளிமெண்ட்டரி டிக்கெட்டுகளை வாரி இறைத்துள்ளனர், அதெல்லாம் இப்போது ப்ளாக் டிக்கெட்டுகளாக உருமாறி சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவர் உட்பட மற்ற சில ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர்களை வீம்பாக மறுத்து விட்டு தேடித் தேடி எந்த சூட்சுமமும் அறியாமல் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெண்மணியிடமும் ஆண்மணியிடமும் சென்று டிக்கெட் வேண்டுமா என அப்பாவியாகவே மாறி கேட்டேன். ஆண்மணி என்னை முறைத்துவிட்டு நகர்ந்து  சிறிது தூரம் சென்றவர், மீண்டும் வேக வேகமாக திரும்ப வந்து சத்தமாக யாரைக் கேட்டு சார் டிக்கெட் விக்கிறீங்க என்று கேட்டு மிரள வைத்தார். அவர்களும் இருவரும் விஜய் டிவியின் flying squad என்றும் அவரின் பெயர் உண்மையிலேயே மணி என்றும் பின்பு அறிந்தேன்.

#) விஜய் தொலைகாட்சி ஒருங்கிணைக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை சென்றதில்லை என்பதாலும் இதற்கு மேலும் செல்வதில்லை என்பதாலும் நிகழ்ச்சிக்குப் புறப்படும் முன்னே எனக்கு நானே சொல்லிக்கொண்டவை – நிகழ்ச்சியின் போது விஜய் தொலைகாட்சியைத் தப்பித் தவறி பிடித்துவிட்டாலும், நிகழ்ச்சி முடிந்ததும் அதை மறந்து விடுவது, எத்தனை முறை ‘தருணம்’ என்று சொல்லப்படுகிறது என எண்ணக் கூடாது, ராஜா என்றால் சும்மாவே அழுகை வரும், இவர்களும் அழ வைக்காமல் விட மாட்டார்கள் என்பதால், நிம்மதியாக சந்தோஷமாக முடிந்த இடங்களில் அழுதுக் கொள்வது. (நிகழ்ச்சி முடியும் போது நிலவரம் – தப்பித் தவறி கூட விஜய் டிவியை பிடிக்காத அளவிற்கு மோசமான நிகழ்ச்சி அமைப்பும் ஒருங்கிணைப்பு, தருணம் என்று ஒரே ஒரு முறை மட்டுமே சொல்லப்பட்டது, அழுத சமயங்கள் – ஆங், அது அப்புறம்).

#) திடலில் சுமார் 15000 பேர் இருந்ததாக நிகழ்ச்சியின் நடுவே கார்த்திக் சொன்னார்.  அது உண்மையா என்று தெரியவில்லை. தோராயமாக கணக்கிடும் அளவிற்கு சாமர்த்தியமும் அத்தனை நீளமான கழுத்தும் அடியேனுக்கு இல்லை. 3000 ரூபாய் டிக்கெட் வரை இருக்கை எண்கள் கிடையாது என்பதால், நாலரை மணிக்கே திடலுக்குச் சென்றிருக்க, அங்கே எனக்கு முன்னால் ஏராளமானோர் வெயிலில் ஏற்கனவே அமர்ந்திருந்தனர். சுமார் ஆறு மணி வாக்காக தோனி இசை விளையாட்டு விழாவில் நாசர் சொன்னது போல டிங்டிங்டொய்டொய்டங் சத்தங்கள் கேட்கத் துவங்கி ஏராளமான முதுகளை நிமிர்த்தின. நிதின் சேட்டா எனப்படுபவரை மைக்கில் ஒவ்வொருவராக வந்து அழைத்தனர். ராஜாவின் தற்போதைய ஆஸ்தான பாடகிகளான சுர்முகி, ரம்யா, அனிதா, பிரியதர்ஷினி, புதுவரவு ப்ரியா ஹிமேஷ் ஆகியார் ஆளுக்கொரு மைக்கை எடுத்து சரி பார்த்தனர். (கம்பன் வீட்டு கட்டுத்தறி போல எங்கள் ராஜாங்கத்தில் மைக் டெஸ்ட்டிற்க்குக் கூட என்னுள்ளே என்னுள்ளே கோரஸ் தான்). மேடையில் முதலில் தென்பட்ட பிரபலம் உஷா உதூப். நடுநாயகி மைக்கை சரி பார்க்க தண்ணி தொட்டி தேடி வந்த, ரம்பம்பம் ஆகியற்றை செந்திலுடன் இணைந்து பாடினார். (’எல்லா சரியா இருக்கானு பாத்துக்கோங்க ப்ளீஸ், I am already very scared). பின் ஒரு மணி நேரத்திற்கு மீண்டும் மீண்டும் இளையராஜா ஆயிரம் ப்ரோமோக்களும், உருப்படவே உருப்படாத சீரியல் ப்ரோமோக்களும், சம்மந்தி சாப்பிடவே சாப்பிடாத அபத்தமான விளம்பரங்களும்.

#) கூட்டத்தைப் பற்றி கொஞ்சம் – வகை தொகையில்லாமல் குடும்பம் குடும்பமாக மக்கள். இளைஞர்களும் குழுக்களாக வந்திருந்தனர். 500, 1000 பகுதிகளில் நிகழ்ச்சி துவங்கி முதல் அரை நேரம் முழுக்க கூச்சலும் ஆக்ரோஷமான ஆரவாரமும் – அங்கே வீடியோ வேலை செய்யவில்லை என்பது என் அனுமானம். திடீரென அவர்கள் எல்லோரும் தடையை மீறி முன்னேறி வர முயல, காவலர்கள் விரைய என கொஞ்சம் கலவரமாகவே இருந்தது. (ராஜா, பக்கத்திலிருந்தவர்களிடம் என்னமோ சத்தம் போடறாங்க கவனிங்க என்பதாகச் சொன்னார்). அனைவரும் நிறைய பாப்கார்னும் பிட்சாவும் சாப்பிட்டனர். ’உங்கள எங்கேயோ பாத்திருக்கேனே’ பிரபலங்களைத் தாண்டி நான் முதலில் கண்டுகொண்டது C12ஐத் தேடிக்கொண்டிருந்த சாரதா நம்பி ஆரூரன். எஸ்.பி.பி.சரண் இன்னமும் பத்து கிலோ இளைத்து தலை நரைத்தது போல ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார், சமீபத்திய எடை நிலவரம் தெரியாததால் அவர் சரணாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில சூப்பர் சிங்கர் போட்டியாளர்களும் கூட்டத்தில் தென்பட்டார்கள். (கூட்டத்தில் மட்டும் என்பது மகிழ்ச்சி).  கூட்டத்திலேயே மிக அதிகமாக இசையை ரசித்தவர் பிரகாஷ் ராஜ். (உடன் தில், தூள் தரணியும்). ஒரு கட்டத்தில் கமல் ‘அங்க எங்காளு ஒருத்தர் இருக்கார், கை தட்ட சொன்னா ஜோரா தட்டுவார்’ என்று ப்ரகாஷைச் சொன்னார். எங்கள் ஏரியாவின் கலாய்த்தல் தலைவனாக தன்னைத் தானே நியமித்துக்கொண்ட ஒருவர் மிதப்பது போல தெரிந்தது ராஜ போதையில் என்று நம்புவோமாக. ராஜா உள்ளே வரும் பொழுது ஓடிச்சென்று காலில் அவர் விழப்போக யாரோ தடுத்து நிறுத்திவிட்டார்களாம். ச்சே! ‘ப்ரோக்ரோம் ஸ்டார்ட் ஆனதும் யாராச்சும் குறுக்க நெடுக்க நடக்கட்டுமே பாத்துக்குறேன்’ என்று அவர் கத்தியதும் நாங்களெல்லாம் பாதுகாப்பாக உணர்ந்தோம். நிகழ்ச்சி துவங்கியதும் இசைக்கு கட்டுபட்டவர் போல ஒரு சத்தமும் இல்லை. நிகழ்ச்சி ஏழரைக்கே துவங்க, கூட்டத்தினர் அரசியலும் முந்தைய இசை நிகழ்ச்சிகளும் என அரட்டை அடித்தும் பலருக்கு வழி சொல்லியும் தடுப்புகளை தாண்ட முயற்சித்த பட்டுப் புடவை பெண்மணிகளுக்கு தைரியமும் உற்சாகமும் தந்து பொழுதை போக்கினர். கூட்டத்தில் அதிகம் கேட்ட தமிழல்லாத மொழி – சௌராஷ்ட்ரம்! கூட்டத்தில் கேட்ட ரிங் டோன்கள் – டயானா டயானா பாடலின் துவக்கத்தில் வரும் ப்யானோ, வானுயர்ந்த சோலையிலே ஜானகி பாடித் திரியும் ஹம்மிங், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம். (எ.ஏ.கலாய்த்தல்.தலை – ‘ஏய், என்ன ஷங்கர் கணேஷ் பாட்டு வெச்சுட்டு வந்துருக்கே?). கூட்டத்தில் அனைவரும் குடித்தது – உள்ளே நுழையும் போதே எங்களின் கைகளில் திணிக்கப்பட்ட டாட்டா தண்ணீர். ராஜா இன்னும் ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க வாழ்த்துகளுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. அதை நாங்களும் கொஞ்சம் குடித்து பயனைடைந்தோம்.

#) ‘ராம் ராம்’  பாடலின் துவக்க இசை முழங்க ராஜாவின் காரின் முன்னே சில பைக் வீரர்களுடன் உள்ளே நுழைந்தது. நேரே மேடைக்குச் சென்று அனைவரின் முன்னே வணங்கி கால் தொட்டு பின் மேடைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த வெள்ளை சிம்மாசனத்தில் சென்றமர்ந்தார்.  அந்தப்பக்கம் உத்தம் சிங், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே சும்மாவே அமர்ந்திருந்தார். இந்தப்பக்கம் ஒரு இருக்கை காலி – அங்கே யார் என விஜய் தொலைகாட்சி சுவாரசியத்தைக் கூட்டிக்கொண்டே இருக்கவும் நாங்களும் ஊகிக்க முடியாமலேவும் மிகவும் சிரமப்ப்ட்டோம். ஒரு இருக்கை தள்ளி, தெலுங்கு உலகிலிருந்து ஒரு token presence வெங்கடேஷ்.

#) அனிதா, சுர்முகி, செந்தில் உள்ளிட்டோர் ‘குரு பிரம்மா’வென தொடங்கிப், பிரதானமாக செந்தில் ஜனனி ஜனனியென முன்னெடுக்க பாடி முடித்தனர். இடைவிடாமல் தொடர்ச்சியாக – மௌன ராகம் கார்த்திக் காட்சிகளின் இசை – பியானோ மற்றும் வயலினில், தென்பாண்டிச் சீமையிலே வாத்தியங்களில், அருண்மொழி என்கிற நெப்போலியன் (நிற்க, இவர் மீது அபரிமிதமான அன்பிருக்கிறதே, அதற்கு மாறாக என்ன செய்ய?) மாங்குயிலே பூங்குயிலேவின் இரண்டே இரண்டு வரிகளை வைத்து அழகாக் துவங்க(நிற்க, மிகப்பொருத்தமாக, அவர் அணிந்திருந்த வெள்ளை ஜிப்பாவில் மணிக்கட்டில் மட்டும் தங்கக் காப்பு போல ஜரிகை வளையம்), அங்கிருந்து சொப்பனசுந்தரி கார் இசை, காட்டுக்குயிலு மனசுக்குள்ளே துவக்க இசை, ஆண்பாவம் பெண் பார்க்கும் படலம் என நீண்டு அபூர்வ சகோதரர்களை வயிற்றில் சுமந்தபடி ஸ்ரீவித்யா தோணியில் தனித்து மிதந்ததுடன் முடிந்தது. பாடகர்கள் அங்கிருந்து துவங்கி இசையில்லாமல் வெறும் ஹார்மனிகளால் – தென்றல் வந்து தீண்டும்போது (சுவை), ராஜா ராஜாதி ராஜானிந்த ராஜா (சுமார்), எந்தப் பூவிலும் (சிறப்பு) என நீண்டு எதிர்பார்த்தபடி நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்திலே என்று முடித்தனர்.

#) கமலின் சுருக்கமான வீடியோ வாழ்த்து ஒன்று திரையிடப்பட்டது. (’என்ன மச்சி, பயங்கர குண்டாயிட்டாப்ல?’ ‘ச்சீச்சீ, அடுத்த பட கெட்டப்பா இருக்கும்’). அவசர அவசரமாக எங்கிருந்தோ ஜெயராம் ராஜாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.  விக்கு வினாயக்ராமும் டி.வி.ஜியும் முதலில் நாங்கள் தான் மேடையில் வருவோம் என்று செல்லமாக பிடிவாதம் பிடித்ததாக டி.டி சொன்னார். இருவரும் மேடையின் இருபுறமும் எதிரெதிராக பக்க வாத்தியங்களுடன் அமர்ந்துகொண்டார்கள். முதலில் விக்கு வினாயக்ராமும் செல்வ கணேஷும் துவங்கினர். போற்றிப் பாடடி பொன்னே போலத் தோன்றவே, கொஞ்சம் கவனமேற்பட்டது. பின் வேறெங்கோ சென்று விட்டனர். டி.வி.ஜியும் கர்னாடக சங்கீதத்தில் கொஞ்சம் கடினப்பட்டே பாடினார். முடிக்கும் பொழுது கொஞ்சமாக இது ஒரு நிலாக் காலம் ஆலாபனை. இருவரும் கொஞ்சம் ராஜாவின் இசையை தொட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வினாய்க்ராம் ராஜா மகாப்பெரியவரின் மணிமண்டபம் கட்டுவதற்காக (?) ஒரு கச்சேரி செய்து தந்ததையும் பவதாரிணியின் திருமணத்தில் வாசித்ததையும் நினைவு கூர்ந்தார். டி.வி.ஜி தனக்கு ராஜா சிஷ்யனாக கிடைத்தது வரம் என்று சொல்லப்போக, ராஜா இடைமறித்து நான் எப்படி கத்துகிட்டேன்னு கொஞ்சம் சொல்லுங்க என்றார்.  இரவு பதினோரு மணி வரை ரெகார்டிங்க் முடித்துவிட்டு காலை நாலு மணிக்கு எழுந்து நாலரைக்கு குளித்து பல சமயங்களில் தலையில் நீர் சொட்ட சொட்ட வந்த நிற்பார் என்றும் தான் தலை துவட்டச் சொல்ல நேரிடுமென்றார். கோயமுத்தூரில் இருந்து சென்னை வரும் நேரத்திலே எவ்வளவு கற்றுக்கொள்வாரென்றும் எத்தனை கடினமான விஷயமாக இருந்தாலும் ஒரு இரவிலே அதை கிரகித்து அடுத்த நாள் ‘கூந்தலிலே..’ என்று பாட்டு போட்டு விடுவார் என்றும் சொன்னார். என்ன கற்றுக்கொடுத்து என்ன ‘என் மண்டையிலே ஏறவே இல்லையே?’ என்று ராஜா கேட்க, டி.வி.ஜி ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார். ‘இப்படி சொன்னா என்ன சொல்றதுன்னு தெரியலயே எனக்கு?’ என்று இருவரும் கொஞ்சம் நேரம் அதைச் சுற்றி பேசவும் மறுக்கவுமாக தொடர்ந்தது.

#) என்னைப் பொறுத்தவரையில் நிகழ்ச்சியின் முதல் சுவாரசியம் – கிட்டார் பிரசன்னா. அவர் மேடையேறியதுமே டி.டி ‘நீங்க கிட்டார் கத்துக்க காரணமே ராஜா சாரோட ஒரு பாட்டு தானாமெ? ’ என்று கொக்கி போட, எப்படி இல்லை என்று சொல்வது என கொஞ்சம் சங்கடப்பட்ட பிரசன்னா, ‘நாலு வயசுலேர்ந்தே கிட்டார் கத்துக்க ஆரம்ப்பிச்சாச்சு இருந்தாலும் பதினோரு வயசுல இளைய நிலா வந்தப்போ தான் இன்னும் சீரியசா கத்துக்க ஆரம்பிச்சேன்’ என்றார். வெளிநாட்டிலிருந்த வந்த பாஸ் கிட்டாரிஸ்ட், ட்ரம்மர்கள் துணையுடன் முதலில் முழுமையாக அமர்க்களமாகவும் ‘ஏய் உன்னைத் தானே’. பின் கொஞ்சம் நேரம் கிட்டாரில் எங்கெங்கோ சுற்றித் திரிந்திவிட்டு சரியாக ‘அந்தி மழை பொழிகிறதே’ துவக்கத்திலிருந்து பிரமாதமாக துவங்கி அப்படியே ‘தூங்காத விழிகள்’ சரணத்திற்குச் சென்று பின் அந்தி மழையில் மீண்டும் சுபம். கடைசியில் சின்னக் கண்ணை அழைக்கிறானை கொஞ்சமாக அழைப்பதாகச் சொல்லி அதைத் தான் நீண்ட நேரம் வாசித்து முடித்தார். (கூட்டத்தில் எதையோ மறைக்க தொப்பியுடன் கார்த்தி திரையில் அப்பா தோன்றிய பாடல் என்பதை மீறி உடலெல்லாம் சிலிர்க்க ரசித்தார்).  புஸுபுஸுவென தலையும் பிரதானமான மூக்கும் எப்போதும் புன்னகையுடன் கொஞ்சம் வளைந்து நின்று கிட்டாரை இறுகப் பற்றி பிரசன்னா வாசிக்கையில் உடலியக்கத்தில் இசைக்கேற்ப லேசான நடனம் போல ஒரு பாவனை. அதுவும், உதட்டிற்குக் கீழே கம்பளிப்பூச்சி தாடியுடன் ட்ரம்ஸ் வாசித்தவர் முகத்தில் தாவிக்கொண்டேயிருந்த உற்சாகமும், ‘அசையும் அசைவுகள் இசையின் நிழல்’ என்ற பிரமாதமான வரியை நினைவுபடுத்தின.

#) பின் மேடையேறிய பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசினார் என்பதைத் தவிர எதுவும் நினைவில்லை. சமீபத்தில் ராஜாவிடம் ஒரு அபத்தமான கேள்வி கேட்டதைக் குறிப்பிட்டு, தன்னை கேட்டிருந்தால் மழுப்பியிருப்பேன், நான் ஒரு க்ரிமினல். ராஜா அப்படிச் செய்ய அவசியமில்லை என்றார். கடல்கள் கொந்தளிக்கவே செய்யும், அதை கொந்தளிக்க விடாமல் பார்த்துக்கொள்ளவது நமது கடமை என்றார். (நன்றி சார்) . ‘ஏ ஆர் ரஹ்மானின் காரில் போகும் போது கேட்பது யாருடைய பாடல்களை?’ என்றொரு ட்வீட்டை ஞாபகமாகக் குறிப்பிட்டார். பாலாவையும் பஞ்சு அருணாச்சலத்தையும் மேடைக்கு அழைக்கும் பொழுது இசையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திவர் என்றும் ஆயிரமாவது படம் என்ற பெருமையை தன் படத்திற்கு (சாமர்த்தியமாக என்பது நான் தருகிற அழுத்தம்) பயன்படுத்திக்கொண்டார் என்றும் சொல்லப்போக பாலா கடும் கடுப்பில் மேடை ஏறினார். மைக் வந்ததும் ‘ரொம்ப விவரமாக அப்படி பயன்படுத்திட்டதா சொன்னீங்க, அப்படியெல்லாம் இல்ல’ என்று வெடித்தார். ராஜாவிடம் பிடிக்காதது என்னவென்று கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு உண்மையான கோபம் என்று இரண்டே வார்த்தைகளில் பதில். ப.அ., அன்னக்கிளியையும் அதற்கு ஒரு வருடத்திற்குப் பின் நிகழ்ந்த கச்சேரியில் ராஜா மழையில் நகராமல் நின்ற மக்களுக்குக்காக மூன்று மணிநேரம் வாசித்ததையும் சொன்னார். ராஜாவிடம் பிடிக்காத விஷயம் – தமிழ் டிவிட்டர் சில பல காதுகளையும் அதிர்ச்சியில் பிளக்கும் வாய்களையும் அழுந்த மூடிக்கொள்ளவும் – தேவையில்லாத தன்னடக்கம் என்றார். அடுத்து மேடையேறிய குழுவில் பிரகாஷ்ராஜும் பால்கியும் இரண்டே வரிகள் தான் பேசவேண்டும் என்று சொன்னதால் இரண்டே வரிகள் பேசினர். பி.வாசு ஏற்கனவே விஜய் தொலைகாட்சியில் தோன்றி சின்னத் தம்பி படத்தில் தாலி கட்டியிருப்பது தெரியவரும் காட்சியில் ராஜா ஏன் உரக்க இசையமைக்கவில்லை என்பதை உலகுக்கே சொன்னதை மீண்டும் விஜய் தொலைகாட்சியிலேயே தோன்றி உலகுக்கே மீண்டும் அதே உற்சாகத்தோடு சொன்னார். பாக்யராஜ் ‘வேற ஆங்கிள்’ல சொல்லப் போறேன் என்று துவங்கி எங்கோ பட டிஷ்கஷனில் தங்கியிருக்கும் போது சீட்டு விளையாடும் குழுவினர் வற்புறுத்தலால் ஈடுபட்டதையும் அதில் மாணிக்கம்பாளையத்தைச் சேர்த்த தியாகராயாஜ செட்டியாரோ தியாகராஜ முதலியாரோ யாரோ ஒரே ஒரு முறை பதிமூன்று சீட்டுக்களையும் பார்த்துவிட்டு சரியாக விளையாடி ஜெயிப்பார் என்றும் அதை வியந்த பாக்யராஜ்…. நிற்க, இதோ வந்துவிடுகிறோம்.. அதே போல வெகு நாட்களாக வியந்தது ராஜா எப்படி ஒரே ஒரு முறை காட்சியைப் பார்த்து விட்டு இப்படி இசையமைக்கிறார் என்பதை. இப்படியாக இளையராஜா ஆயிரம் என்ற சரித்திர நிகழ்ச்சியில் வெற்றிகரமாக மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த தியாகராஜ செட்டியாரோ தியாகராஜ முதலியாரோ யாரோ இடம்பெற்றதும் அதை உங்களுக்கு நான் விளக்கிச் சொல்ல நேர்வதும் நம் தலையெழுத்து. மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருப்பதாகச் சொன்ன மிஷ்கின் (கண்ணாடி போட்டிருப்பதால் தெரியவில்லை), 25 வருடங்களுக்கு முன், இன்னும் சில நாட்களே உயிருடன் இருப்பான் என டாக்டர்களால் கைவிடப்பட்ட ஒரு வட இந்திய இளைஞன் அவரை ஒரு பாடலின் அர்த்தத்தைக் கேட்டு வந்தததாகவும் உடைந்த ஆங்கிலத்தில் இருவரும் பேசிக்கொண்டதாகவும் சொன்னார். அந்த இளைஞன் அடுத்த அறுபது நாட்கள் திரையரங்கில் அந்தப் பாடலுக்காக படத்தை தினமும் பார்த்ததாகவும் சொன்னார். அவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. இதைச் சொல்லும் பொழுது தன் உடலெல்லாம் நடுங்குவதாகச் சொன்னார். அந்தப் பாடல் – போவோமா ஊர்கோலம். கதாநாயகி அறிமுகப்பாடல் என்பது ஒரு தனி genre அதில் ராஜா செய்த ஜாலங்கள் ஏராளமாம் என்று சொல்லி சில நடிகைகளை மேடையேற்றினர். பூர்ணிமா பாக்யராஜ் பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தை சுந்தர்ராஜனின் ஓவர் எமோஷனல்  நரேஷனையும் மீறி ஒப்புக்கொள்ள காரணமே அது ராஜாவின் இசையில் அவருக்கு முதல் படமாக அமையுமென்பதால். பின்னர் வரிசையாக நிறைய படங்களின் பெயர்களைச் சொன்னார். ராதாவும் தன் அறிமுகப்படம் எத்தனை சிறப்பு என்று சொல்லி அவர் ரெகார்ட்டிங்குக்குச் சென்ற பொழுது ‘ஓ இது தான் கப்பங்கிழங்கா’ என்று கேட்டது எதனால் என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அந்தப் பாடல் ஏற்கனவே இசையமைக்கப் பட்டதாலா அல்லது ராதா அப்படி இருந்ததாலா. (அழுத்திக் கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டாம், எனக்கு வலித்தது). ராஜா உடனே ‘ச்சிச்சீ, அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை’ என்றார். தொலைகாட்சியில் அந்த அழுத்தமான ச்சீச்சீ வராமல் போகலாம். மீனா, ராசாவின் மனசிலே, எஜமான், வீரா என்றெல்லாம் அடுக்கி விட்டு, அவர் என்னாளும் குழந்தை நட்சத்திரம் என்பதால் அன்புள்ள ரஜினிகாந்த் படப்பாடலில் ‘ஹலோ, நான் இருக்கேன், இங்க’ என்று ரெகார்டிங்கில் பேசிய போது அது எத்தனை பெரிய விஷயம் என்று தெரியவில்லை என்று வியந்தார். இப்போதும் தெரிந்ததாக தெரியவில்லை. அடையாளம் காணமுடியாமல் இருந்த பானுப்ப்ரியா சுருக்கமாக மெல்லப்பேசுங்கள், சித்தாராவை குறிப்பிட்டார். கொள்ளை அழகாக இருந்த கௌதமி கொள்ளை அழகாகப் பேசி 80களின் மானத்தை கொஞ்சம் காப்பாற்றினார். மக்களே – இது தான் ஒட்டுமொத்தமாக தமிழ்த்திரையுலகம் ராஜாவிற்கு செய்த மரியாதை. ப்ரோமாக்களில் கொடுத்த ஒரு நிமிடத்தில் பாதி நேரம் கேள்வியையே பதிலாக எழுதி நிரப்புவுது போல ஆயிரம் படமென்பது எத்தனை பெரிய விஷயம் என்று உளறுகிறவர்களிடம்  ‘சூப்பர் ஹிட் சாங்க்ஸ்’ என்ற விஷயத்தை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க? (இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஹாலில் இருந்து ஏதோ பிண்ணனி இசை இழுக்கிறது – மெட்டி). நன்றி, நீங்கள் எல்லோரும் போகலாம். கமல் அரங்கத்தில் அப்போது வந்திருக்க அவரை அப்படியே மேடையில் வரவழைத்து நாயகிகளுடன் அவரை கீழே இருக்கைக்கு அனுப்பினார்கள். அவர் காதல் மன்னன் என்பதை தொடர்ந்து நிறுவ வேண்டுமல்லவா? (கமல் ‘இது பாடற ப்ரோகிராம், என்னத்துக்கு பேசிகிட்டு’ என்று வேகமாகச் சென்றார்).

#) அடுத்து மனதை கொஞ்சம் சாந்தப்படுத்தியது பாடகிகள். சுசீலா, ஜென்சி, உமா ரமணன், சைலஜா, சித்ரா. சுசீலா ‘ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான்’ பாடிவிட்டு சம்மந்தமேயில்லாமல் புதுப்பாடகர்களுக்கு நிறைய வாய்ப்புக்கொடுக்க வேண்டுமென்று சொன்னார். (இது எப்படி இருக்கு?) ராஜாவின் முகபாவங்களில் எந்த வரிக்கு என்ன கண்டாரா ‘எதானா தப்பா சொன்னா மன்னிச்சுக்கோங்கோ சார்’ என்றார். ஜென்சிக்கு உணர்ச்சிப்பெருக்கில் பேசவே முடியவில்லை. அழுது விடுவாரெனப் பட்டது. ‘ஆர்டினரி சிங்கர் நான்’ (டிவிட்டரில் சில ஆமோதிக்கும் குரல்கள் கேட்கின்றன) ‘.. எனக்கு என்ன பாட்டெல்லாம் கொடுத்திருக்கு’ என்றார். சில வரிகள் தெய்வீக ராகம் சிறப்பாகவே பாடினார். (ஆமாம்.. ஜென்சியை வைத்து ஒரு சுவாரசியமான கதை சொல்வார்களே.. சரி விடுங்கள்). உமா ‘சுசீலாவைத் தவிர இங்க நிக்கிற எல்லாரும் இங்க நிக்க காரணமே நீங்க தான் என்றார்’. அமெச்சூர் பாடகர்களுக்கு எத்தனை கடினமான பாடல்களைக் கொடுத்து தேற்றினார் என்று குறிப்பிட்டார். இதையும் சுசீலாவின் கோரிக்கையையும் எடுத்து முடிச்சு போடலாமாவென இரு முனைகளை உற்று உற்றுப் பார்க்கிறேன். சித்ராவின் மைக் போனதும் கூட்டத்தில் ஏகமான ஆர்பரிப்பு. ‘ஹையையோ ராஜா சார் முன்னாலயெ இருக்கார் பேச பயமாருக்கு’ என்றதோடு முடித்துக்கொண்டார். ஒவ்வொரு பாடல் பாடுவதும் யுனிவர்சிட்டி எக்ஸாம் போல என்று சொன்னார். மற்றவரெல்லாம் விடை பெற அவர் மட்டும் தங்கி நின்று முதலில் ‘கண்ணன் வந்து பாடுகின்றான்’ பாடலை ஜானகியின் துள்ளலும் குறும்பும் இன்றி மெலடியாகவே பாடினார். அதன் பின்னர் எடுத்துக் கொண்டது சுவர்ணலதாவின் என்னுள்ளே என்னுள்ளே. பாடலின் ஒவ்வொரு ஏற்றத்தையும் இறக்கத்தையும் திருப்பத்தையும் அழந்தக் கோடிட்டு அமர்க்களமாக பாடி நிகழ்ச்சியின் முதல் சிறப்பை நிகழ்த்தினார். தொடர்ந்து சித்ரா ஜானகியின் பாடல்களையே நிகழ்ச்சிகளில் பாடுவது அத்தனை வியப்பு. அவருக்கு ராஜா மீது இருக்கும் அன்பும் ஜானகி மீதிருக்கும் காதலும் அவரின் பாடலை விட சற்றே சற்று கூடுதல் இனிமை.

#) ‘காலத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு’ என மனோ முழுக்குரலில் உற்சாகமாகப் பாடியபொழுது தான் கூட்டம் ஓஹோ இந்நிகழ்ச்சியில் பாட்டும் வருமோ என்று கவனிக்க ஆரம்பித்தது. (கூடச் சிறப்பாகப் பாடியது, சுர்முகி என்று நினைவு). தொடர்ந்து, எதிர்பார்க்காத விதமாக, மனோ ‘இளமையெனும் பூங்காற்று’ பாடினார்.  அடுத்து மேடையேறிய கௌதம் மேனன், கௌதம்ஸ் ப்ளேலிஸ்ட் என்று ஒன்று இருப்பதாகவும் அதை கார்த்திக்கிடம் கொண்டு சென்றதாகவும், அவரிடம் அதே ப்ளேலிஸ்ட் இருந்ததாகவும், அதை பிரசன்னாவிடம் கொண்டு சென்றதாகவும், அவரிடமும் அதே இருந்ததகவும், ஏன் இன்று பாடவதாக இருந்தவர்களின் லிஸ்ட்டிலும் இதே பாடல்கள் இருந்ததாகவும், கெஞ்சிக் கூத்தாடி இதை தங்களுக்கென வாங்கியதாகவும் சொன்னார். பேசாமல் இளையராஜா பத்து எனப் பெயர் வைத்திருக்கலாம். ஆர்க்கெஸ்ட்ராவிடம் வயலினையெல்லாம் படுக்க வைக்கச் சொல்லி விட்டு கார்த்திக்கின் குரலும் பிரசன்னாவின் கிட்டாருமாகத் துவங்கினார்கள். ஆங்கிலத்தில் புத்தியில் உதித்து தமிழாக கௌதமின் உதட்டில் வந்த எத்தனையோ வரிகளில் மிகச்சிறப்பானதாக அமைந்தது அன்று சொன்ன ‘என்னுடைய இசைச் சிந்தனைக்குக் காரணம் ராஜா சார் தான்’ என்றது தான். கௌதமிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற பாடல்களே தொடர்ச்சியாக வந்தன – 80கள், popular. கார்த்திக் பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்வதில்லை. வந்தோமா, உட்கார்ந்தோமா, Shall we go என்றோமா, அவ்வப்போது Are you ok, Hello Chennai என்றோமா, சிறப்பாகப் பாடினோமா, அவ்வளவு தான். கார்த்திக்கிற்காக ஒரு இளம்பெண் கத்திய கத்தலில் இரண்டு வாரங்கள் வெறும் காற்று தான் வரப்போகிறது. கோடைக் காலக் காற்றே பாடலின் இடையிசையில் ஆட்டுக்குட்டிப் போல துள்ளுகிற வயலினைப் பிரமாதமாகப் பாடினார். தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தத்தில் அங்கங்கே கொஞ்சம் சங்கதிகள். ‘தள்ளித் தள்ளிப் போனாலும்..’ என்ற தொடங்கும் இரண்டும் வரிகளுக்காகவே ‘காற்றை கொஞ்சம் நிற்கச்சொன்னேன்’  பாடல் உயிர் பெற்றது என பரவலாக (நானும் இன்னொரு டிவட்டர் நண்பரும்) கருதுவதை ஊர்ஜிதப்படுத்துவதைப் போல, அந்த இரண்டு வரிகளின் போது பிரசன்னாவின் கிட்டார் மணலில் ஓடும் நண்டைப் போல மனதில் அடியில் புகுந்து கிடுகிடுவென ஓடியது. சாக்ஸஃபோனுக்குப் பதிலாக கௌதம் தரரரார தாரரா எனப் பேசினார். தொடர்ந்து ராசாவே உன்ன நம்பி, போட்டு வைத்தக் காதல் திட்டம் எனச் சிறப்பாகப் பாடி விஜய் டிவியின் மானத்தைக் கொஞ்சம் காப்பாற்றினார்கள்.  ஒரே ஒரு விஷயம் – பிரசன்னாவின் கிட்டாரில் எல்லா சத்தமும் எப்படியோ வருகிறது. திடீரென தடித்தும், இளைத்தும், ஆழம் தொட்டும், மேலேற்றி ஒற்றைக்காலில் தாவித் தாவியும், நடந்தும், வழிந்தும், பெருகியும் – பிரமாதம்!

#)  கூட்டத்தின் ஒட்டுமொத்தக் காதலையும் அலுங்காமல் அப்படியே அடுத்து வந்து பெற்றவர் எஸ்.பி.பி. பேசுவதற்கு என்ன இருக்கு, எல்லாம் தான் நமக்குத் தெரியுமே என்றார். I am born for him, He is born for me. I love him, that’s all. அவ்வளவே என்று சொல்லிவிட்டு, நேரே என்ன சத்தம் இந்த நேரம். சத்தமெல்லாம் வேறெதுவுமில்ல, கூட்டத்தின் ஆரவாரம் மட்டுமே. எஸ்.பி.பியின் முதல் அடடாவிற்கும், அத்தனை இசையும் நின்றப் பிறகு துவங்கும் நெப்போலியனின் குழலுக்கும், இரண்டாம் இடையிசையில் வரும் சாக்ஸிற்கும் அத்தனை ரசிப்பும் வரவேற்பும். யாரோ சொன்னது போல, ஹிட் பாடல்கள் ஹிட்டாக ஆனதிற்கும் ரசிக்கப்படுவதிற்கும் காரணங்கள் உண்டல்லவா? உண்மையில் நிகழ்ச்சி நிகழத் துவங்கியது பெரும்பாலான மக்களுக்கு இங்கே தான்.  அப்போதே மணி பத்தரை பதினொன்று.  ராஜா, கமல், எஸ்.பி.பியில் யார் நிஜமான காதல் மன்னன் என்று டி.டி. கேட்க தன் முதல் காதலுக்கு எஸ்.பி.பியின் பாடலே உதவிய என்றும் மூவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்று கமல் முடித்தார். அடுத்து ப்ரியதர்ஷினியுடன் ஒ ப்ரியா ப்ரியா. சரியாகப் பொருந்தி வராமல் கொஞ்சம் பிசுபிசுப்பாகவே இருந்தது. மனோ ஏன் தமிழில் பாடநேரிட்டத்து என்று விளக்கி மனோ சிறப்பாக பாடியதாக பாராட்டினார். (இங்கே என்னுடைய பலமான மறுப்பு திரையில் வந்திருக்க வேண்டியது). கிட்டார் பிரசன்னாவை மேடைக்கு அழைத்து அவருடன் ‘இளைய நிலா பொழிகிறது’.  ஏராளமான improvisationsகள் ரெக்கை கட்டி பறந்தன. ராஜா முன்னிலையில் எஸ்.பி.பியுடன் இணைந்து கிட்டார் பிரசன்னாவிற்கு உண்மையாகவே அது மறக்க முடியாத நிகழ்வெனப் பட்டது. எஸ்.பி.பி, இந்தி வெர்ஷனைப் குறைத்து பேச விருப்பமில்லையென்றாலும் உண்மையை சொல்ல வேண்டியிருந்தது. பின்னர் சித்ராவுடன் சுந்தரி கண்ணால் ஒரு சேதி.  ராணுவ ஒழுங்குடன் பாடுகிற சித்ராவிடம் சென்றும் எஸ்.பி.பி என்னென்னவோ மாற்றி மாற்றிப் பாடிப்பார்க்கிறார் – ம்ஹூம், சித்ரா அசருவதாக இல்லை. ஆயிரம் முறை கேட்டிருந்தாலும், ஓரிரு முறை நேரிலேயே கேட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை அந்த பிரம்மாண்ட இசையில் எங்கோ ஒரு மனம் விக்கித்து தொலைந்து நிற்கிறது.  ஒரு காதல் பாடலுக்கான சூழலில் இருந்து இதை எப்படி உருவாக்கி இருக்க முடியும்? (அழுத்தத்திற்காக மீண்டும் ஒரு முறை – உண்மையிலேயே எப்படி?). பின்னர், கர்நாடகாவில் பாடாமல் போனால் கல்லடி விழும் ஜோதேயலி, முழுக்க முழுக்க கன்னடத்தில், ப்ரியா ஹிமேஷுடன். (ஜானகி சிரிப்பதைப் போலவே நன்றாகச் சிரித்தார்).

#) பிறகு ஜெயராம், குஷ்பூவை மேடையேற்றினர். கார்த்தியை இரண்டு மூன்று முறை அழைத்தும் அவர கௌரவமாகவும் புத்திசாலித்தனமாகவும் மறுத்துவிட்டார். ஜெயராமின் மகனின் முதல் படத்திற்கு ராஜா தான் இசை என்று சொன்னார். (அது எப்போதோ வந்த கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்று பிறகே புரிந்தது). குஷ்புவிற்கும் பேச வரவில்லை. கமல் வேறு இருப்பதால் ஏதோ சிற்சில வார்த்தைகளைச் சொன்னார். வெங்கடேஷை ஈநாடே ஏதோ அயிந்தி பாடலுடன் மேடைக்கு அழைத்தனர். எத்தனையோ ஆவரேஜ் ப்ராடெக்டுகளை, தன்படங்கள் உட்பட, சிறப்பாக்கினார் என்று சொன்னார். ரமண ரிஷி மூலமாக ராஜாவுடன் spiritualஆகவும் connect செய்தவாகவும் சொன்னார். அதன் பின்னர் மேடையேறியது எல்.சுப்பிரமணியம்.  காமிரா உற்றுப் பார்க்காத கோணத்தில் கமல் போல யாரோ நடந்து backstageபோவது போலத் தெரிந்தது. LS என்ன வாசித்தார் என்றுத் தெரிகிற அளவிற்கு அறிவில்லை. இருந்தாலும், வியந்து போய் அமைதியுடன் கவனிக்க வைக்கும் அளவிற்கு மிகப் பிரமாதமாக இருந்தது. தி.மோகனாம்பாளில் மனோரமா சொல்வது போல நிஜமாகவே வயலின் சத்தம் வித்தியாசமாகவே இருந்தது. (ராஜா மிகக் கவனமாக இசையை கவனித்தார். திடீரென யாரோ அருகில் வந்து நிற்க, என்னவெனக் கேட்கிறார். ஆள் தபாலென காலில் விழ, சரிசரி என்று சொல்லிவிட்டு மீண்டும் இசையிலும் கவனம். நிற்க, கமலை நிஜமாகவே காணோம்). LS ஒரு வார்தையும் பேசாமல் வாசித்து முடித்ததும் மேடையைக் காலி செய்தார். தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஒரு பத்து பேர் மேடையேறினார். எல்லோரும் பேசுவார்களோ என்று வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்க, ஒருவர் தலைவர் மட்டும் பேசுவார் என்று புளியை பாலாக்கினார். தலைவராகப்பட்டவர் தானு. (கமல், டபுள் எஸ்கேப்). தானு ‘பன்னிசையும் நல்லிசையும் சேர்ந்தக் கலவை’ என்றெல்லாம் என்னவோ பின்னியெடுத்தார். யாராவது செய்வார்கள் என்றெதிர்பார்த்த ஆயிரம் பூமாலையை ராஜாவுக்கு அணிவித்தார்கள். விஜய் தொலைகாட்சியும் தயாரிப்பாளர்கள் சங்கமும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை நெருப்பில்லாமல் வதந்தி புகைவதில்லை என்பதாகக் கொஞ்சிக் கொண்டனர். நாசர் தானாக முன்வந்து டிடியிடம் நடிகர்கள் சங்கத்தை நினைவுபடுத்தி ராஜாவிற்கு கௌரவம் செய்தனர்.

#) ‘Hello everybody, this is DSP’ DSP எத்தனை பெரிய ராஜா ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். (உங்களுக்குத் தெரியாதென்றால் உங்களைப் பற்றி நான் பேசவில்லை). சிறுவயதில் ஒரு தகர டப்பாவில் ராஜாவின் பாடலை வாசித்து பல பரிசுகள் பெற்றவர், அதே பாடலை இன்று பாட உற்சாகமாக வந்தவர், ராஜாவின் படத்தை சிறு வயதில் வரைந்து வைத்து இன்றும் அதை கொடுக்க முடியாமல் சங்கோஜப்படுபவர், தன் ஸ்டூடியோவில் ராஜா புகைப்படத்தை பெரிதாக வைத்திருப்பவர் (இதை அவர் சொல்லவில்லை, நானே சேர்த்தது), மேடையேறி ராஜாவின் முன் பாடலாம் என்று வந்தால் அந்த நேரம் ராஜாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர். மனிதரால் தாங்கிக்கவே முடியவில்லை. அழுது விடுவாரெனத் தோன்றியது. (டிடியைக் கூப்பிட்டு கேட்கிறார். டிடி ‘ஓ ராஜா சார் இல்லையா’ என்று முழித்து விட்டு ‘அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். He is listening to you’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார்). இரண்டே நிமிடங்கள் – ஏமாற்றத்தை எல்லாயும் கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு ஜோராக ‘உள் மனசுல ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடும் தூரம்’ என ஒரு சரணம் பாடி விடைபெற்றார்.  Thaikkudam Bridge ஒரு முறை மேடையேறிவிட்டு ஏதோ சரியில்லை என்று காணாமல் போயினர். ராஜா இல்லாததால் சென்று விட்டனர் என்பது என் கணிப்பு. ஃபின்லாந்திலிருந்து ஒரு ரசிகரை மேடையேற்றினர். என்னக் கொடுமை இதெல்லாம் என்று புரியவில்லை. தன் இந்திய நண்பனுடன் காரில் செல்கையிலெல்லாம் ராஜாவின் பாடல்களைக் கேட்டு மயங்கி இங்கேயே வந்துவிட்டாராம். ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ பாடலை வாத்தியங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘சொரியோடு லயம் போலவே’ என்று ஏகப்பட்ட சிரிப்புக்கும் வரவேற்புக்கும் இடையே பாடினார்.

#) நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த தித்திப்பும் அதிகரிக்க காரணம் உஷா உதூப். ராஜா மீண்டும் வந்துவிட்டிருந்தார். மற்றவர்களைப் போல தனக்கு ஆயிரம் பாடல்கள் ராஜாவிடம் இல்லையென்றாலும் கடந்த 45 வருடங்களாக பாடிக்கொண்டிருக்கக் காரணம் அவரிடம் பாடிய நான்கைந்து பாடல்கள் தாம். தன்னைப் போல எத்தனையோ பேர் அவரின் பாடல்களை எப்போதோ திரையில் பாடியதால் தான் தங்களின் தினசரி சோற்றுக்கு வழி கிடைப்பதாகச் சொன்னார். The King, The King, The King என்று ஏராளமான முறையும், The God Himself என்றும் அப்பழுக்கில்லாத அழகான அன்பு. மிகவும் நடுக்கத்துடன் பாடப்போவதாகவும் ராஜாவின் முன்னால் மீண்டும் பாடும் வாய்ப்பிற்காக எத்தனையோ வருடங்கள் காத்திருந்ததாகவும் சொன்னார். முன்னெப்போதும் பாடாத அளவிற்கு வேகம் வேகம் போகும் பாடலை இன்று பாடப்போவதாகச் சொன்னதெல்லாம் நிஜமாகவே சிலிர்ப்பு. மூன்றைரை மணியிலிருந்து காத்திருந்தவர் நடுவில் ராஜா எங்கோ எழுந்து சென்றதும் தன் வாய்ப்பு போய்விட்டதாக அழுததாகவும் சொன்னார். ஆனால் என்ன – மறுபடி அந்த வாய்ப்பு கை வர அதை அவர் விடுவதாயில்லை. ஜிவ்வென துவங்கிய பாடலின் மூன்றாவது வரியில் திடுமென நிறுத்திவிட்டார். மானிட்டர் சரியில்லை சாரி சாரி சாரி என்று சொன்னவர் அதை சரிசெய்யும் நேரத்தில் ‘இந்தப் புடவ நன்னாருக்கா? இன்னைக்கு பாடறதுக்குன்னே புதுசா வாங்கினேன்’ என்றெல்லாம் சொன்னார். So sweet! ராஜாவுக்கு தாங்கமாட்டாத சிரிப்பு. மறுபடி பாடல் துவங்கி, ஆர்கெஸ்ட்ட்ராவும் அவரும் ஒரிஜினிலுக்கு ஒரு படி மேலேயே சென்று அமர்க்களமாக இசைத்தார்கள். அத்தனை நடுக்கம் இருந்தால் அத்தனை நன்றாகத் தானே வருமென அவரே சொன்னார். தொடர்ந்து செந்திலுடன் தண்ணி தொட்டியைத் துவங்க (ஷூரியன் வழுக்கி ஷேத்தில் விழுந்தது மாமி!) என்ன ஸ்ருதி Dயா Dயா என்று கேட்டுக்கொண்டேயிருக்க கமல் உள்ளே புகுந்து ஆமாடி என்றார். அதற்கு பதிலாக இவர் ஒரு ஐ லவ் யூடா! தொடர்ந்து ரம்பம்பம். DSPயை தேடிப்பிடித்து மேலே கொண்டு வந்து உடன் பாட வைத்தார் உஷா. ராஜா எங்கோ போனதும் இருவருமாக backstageஇல் ஓரமாக சோகமாக அமர்ந்திருந்திருப்பார்கள் போல (குஷ்பூவை உஷா அழைத்து ஆட வைத்தது சற்றே ரம்பம்). இருந்தும் ரொம்ப நேரமாக காய்ந்து போய்க்கிடந்தவர்களுக்கு பெரும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தந்தவர் உஷாவே. இதற்கு முன்னால் நழுவிய வாய்ப்பு மீண்டும் வர  ராஜாவிடம் நேராக பவ்யமாகப் பேசிய DSP ராஜா கைய வெச்சா பாடலை அங்கங்கே ராஜா சார் ராஜா பாட்டு என்றெல்லாம் இட்டு கட்டிப் பாடினார்.

#) LS ராஜாவிற்கு தன் அப்பாவின் பெயரால் வழங்கும் விருதை ராஜாவின் இடத்திற்கே சென்று வழங்கினார். ராஜா அவரிடம் ஒரு மைக்கைத் தந்து என்னன்னு சொல்லுங்க என்றார். கமல் திரும்பி வந்துவிட்டிருந்தார் – அவரும் LSம் இரண்டு முறை வணக்கம் சொல்லிக்கொண்டனர். ராஜா LSவீட்டிலேயே தங்கி வளர்ந்து இசை கற்றத்தை குறிப்பிட்டார்.

#) கறுப்பு சட்டையும் சிகப்பு வேஷ்டியுமாக மேடையேறினர் Thaikkudam Bridge. மெமோ கிடைக்காத சிலர் கை வைக்காத சிகப்பு பனியனில் வந்திருந்தனர். சுருக்கமாகப் பேசிவிட்டு மலையாளத் தமிழுக்கு மன்னிக்கச் சொல்லி விட்டு,  புன்னகை மன்னன் தீமில் துவங்கி, ராஜ ராஜ சோழன் சரணத்திற்குத் தாவி, நீ பார்த்த பார்வைக்கு, நாயகனில் போலீஸ் தீம், சரண்யா-கமல் தீம், தளபதியிலிருந்து இரண்டு துவக்க இசைகள் என்று தொடர்ந்து கடைசியில் சற்றும் எதிர்பார்க்காத கணத்தில் ஓம் சிவோஹத்தை துவக்கி அராஜப்படுத்தினார்கள். ஒட்டு மொத்த நிகழ்ச்சியில் ஓம் சிஹோம் தொடங்கி நீண்ட அந்த இரண்டு நிமிடங்களைப் போல வேறெந்த நிமிடங்களில் ஆச்சரியமும் ஒரு வகையான அதிர்வும் சிலிர்ப்பும் ஏற்படவில்லை.

#) யுவன் ஷங்கர் ராஜா பள்ளி மாணவன் போல துள்ளிக்குதித்து ஓடிவந்தார். (மூன்று பிள்ளைகளும் தத்தம் துணைகளுடன் வெவ்வேறு இடங்களில் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்). பள்ளி மாணவன் போலவே பேசிய அவர் சொன்ன விஷயம் சிறப்பு – இங்கு யாரும் குறிப்பிடாத சிலரை குறிப்பிட்டே தீரவேண்டுமென்றும் அப்பாவிற்கு மிகப்பிடித்தவர்களைக் குறிப்பிடவில்லை எனில் நிகழ்ச்சி நிறைவேறாதென்றும் சொல்லி , வாலி, எம்.எஸ்.வி, தக்.. தக்‌ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் தானே? என்பதாகச் சந்தேகம், ஜீவா அனைவரையும் குறிப்பிட்டார். அம்மா இல்லையெனில் இதெல்லாம் நிகழ்ந்திருக்காது என்று சொன்னார்.(ராஜா ஒற்றை விரலால் மணி அடிப்பதைப் போல சரியாகச் சொன்னாதாகச் சொன்னர். கொஞ்சம் கலங்கியதைப் போலவும் இருந்தது). விடைபெற்றுச் சென்ற யுவனை கூட்டம் மீண்டும் மேலேற்றியது. போட்டு வைத்த காதல் திட்டம் பாட முயற்சித்தார். சரணத்திலெல்லாம் ராஜாவிற்கு என்ன இது என்பதாகச் கமலிடம் சிரிப்பு. ஓரிடத்தில் out of body experience போல சுருதி முற்றிலும் விலகி நிற்க கூட்டத்தில் பவதா முகத்தை மூடிக்கொண்டு அதிர்ச்சியில் ஹையோவானார். (ஒரு சுருதி சேராதவரின் மனசு இன்னொரு..)

#) ஒரு வழியாக நிகழ்ச்சி நிறைவு – கமலை முதலில் மேடையில் ஏற்றினார்கள். வந்ததிலிருந்து முதல் ஒரு மணி நேரம் கமல் விழித்திருக்கிறாரா தூங்குகிறாரா என்றே விளங்கிக்கொள்ள முடியவில்லை. கமல்50ல் ஊர்வசி சொன்னது போல பொம்மையை பிடுங்கிய பின் குழந்தை கொள்ளும் முகபாவம். பின்னர் ஒரு மாதிரி சகஜமாகி இருந்தார். அவர் ராஜாவையும் அழைத்து, அடுத்து என்ன போடப்போறீங்க என்றார். ராஜா இன்னும் தெரியல என்று சொல்ல, அது உங்களுக்கு நிறைய இருக்கும் ஆனா எனக்கு தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு இருக்கு என்றார். புதுப்பட அறிவிப்போ என ஆர்வமேற்படுத்தினார்.  நம் எல்லோருக்காகவும் ஒரு தனிப்பரிசு கொண்டுவந்திருப்பதாகச் சொன்னார். மருதநாயகம் படத்தை மீண்டும் துவக்குவதாக அறிவிப்பார் என்று தோன்றியது. கையில் பாடல் வரிகளை ராஜாவிடம் கொடுத்து அவரின் காதில் சென்று இது என்னவென கிசுகிசுக்கிறார். ‘ஐயோ இது எப்பவோ பண்ணதாச்சே’ என்று ராஜா அழகாக அதிர்ச்சியடைந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ‘ராணி வந்து எப்பவோ பூஜை போட்டுட்டு போயிட்டாங்க’ என்றார். கமல் விடாமல் ‘இப்போ ராஜாவ வெச்சு மறுபடி ஆரம்பிக்க சொல்றேன்’ என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பை கூட்டினார். அங்கேயே கமல் ராஜாவிற்கு கொஞ்சம் மெட்டை நினைவுபடுத்திக் கற்றுகொடுக்க, ராஜா ‘எங்க கூடப்பாடறவங்க எல்லாம் வாங்க’ என்று அவர்களையும் அழைத்துச் சொல்லிக்கொடுக்க, கமல் சென்று வீடியோவை தயார் செய்ய, முதல் முறை மருதநாயகம் படக்காட்சிகளும் ராஜாவும் பாடிய பாடல் அத்தனை சரியாகப் பொருந்தவில்லை. ராஜாவிற்கு திருப்தியில்லை என்று சொல்லி மீண்டும் ஒரு முறை துவக்கி கச்சிதமாக ‘பொறந்தது..’ பாடலை அரங்கேற்றினார்கள். கொஞ்சம் பிரமிப்பு ஏற்பட்டது.  ‘படம் வெளியாகும் போது நல்லா கேட்டுக்குங்க’ என்று அம்போவென எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

#)  ராஜா ரத்தினச் சுருக்கமாகப் பேசினார். மணி அப்போது 1:15. துளியும் அயற்சியோ சலிப்போ இல்லை. இது எனக்கான பாராட்டு விழா மட்டும் அல்ல, எனக்கு முன்னாலான அத்தனை இசையமைப்பாளர்களுக்குமான விழா என்றார். அவர்கள் அனைவரும் ஷாஷ்டாங்க நமஸ்காரம் என்றார். வட இந்தியாவில் சிலரை குறிப்பிட்டு அவர்களுக்கும் ஷாஷ்டாங்க நமஸ்காரம் என்றார். ஒரு முறை திருத்தி அழுத்தமாக எனக்கு முன்னால் வந்த இசையமைப்பாளர்கள் என்று சொன்னார். அதைத் தவிர ஆயிரமென்பதோ பாராட்டு என்பதோ சற்றும் உணர்ந்தவராக இல்லை. அவர் எப்போதும் சாதாரணமாகவே இருக்கிறார்.  இந்தப் பாராட்டு விழாவிற்கு இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள், அதற்கு நன்றி எப்படி சொல்வது, அதற்குப் பதிலாக ஒரு இசை விருந்து விரைவில் காத்திருக்கிறது என்று இரு முறை வாக்கு கொடுத்தார்.  உடனே சுபம்.

#) ஆக – விஜய் தொலைகாட்சியின் இளையராஜா ஆயிரம் கொஞ்சமாகவேனும் கரையேறக் காரணம் – எஸ்.பி.பி, சித்ரா, மனோ, விக்கு வினாய்க்ராம், டிவிஜி, கிட்டார் பிரசன்னா, கார்த்திக், உஷா உதூப், Thaikkudam Bridge ஆகியோரால் மட்டுமே. அவர்கள் ராஜா மீது வைத்திருக்கும் அன்பினாலும், தங்கள் திறமையாலும் மட்டுமே. அவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பணியைச் சுலபமாக்கி நிகழ்ச்சியை மேம்படுத்தியிருக்க வேண்டிய விஜய் தொலைகாட்சி அதை எங்கும் எள்ளளவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்பட்டமாக பலமுறை ப்ரோக்ராமர் மைக்கில் அடுத்து என்ன பண்ணறது எனக்கேட்பதும், சித்ராவை வரவழைப்பதும் போகச் சொல்வதும் அவர் தானாக முன்வந்து நான் வேணா ஷார்ட் பண்ணிக்கிறேன் என்றதும், எஸ்.பி.பி மேடையிலேயே பலமுறை  – அடுத்து என்ன? நான் தனியா பாடப்பேறேனா? இப்ப பாடணும்னா பாடறேன் இல்ல அப்புறமா வரணும்னா வறேன்? இல்ல வரலேன்னாலும் பரவால்ல. ஆனா ப்ளீஸ் இதுக்கப்புறம் என்னன்னு மட்டும் சொல்லிடுங்க என்றெல்லாம் கேட்கவிட்டு – ஒரே கலவரமாக இருந்தது. கும்பல் கும்பலாக மேடையேறியவர்களில் பெரும்பாலோனோர் எதையோ பிதற்றிச் சென்றனர். ராஜா சார் மேல் இருக்கிற அன்பினால எல்லாரும் எங்களையும் கூப்பிடுங்கனு கேட்டுகிட்டே இருக்காங்க என மறுபடி மறுபடி ஜாமீன் மனு போட்டாலும் அந்த அன்பை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. இளையராஜா 1000 என்ற தலைப்பிற்கான ஆழமும் ஆராய்ச்சியும் எங்கும் துளியும் தென்படவில்லை. டிடியை நினைத்துக் கொஞ்சம் பாவமாக இருந்தது – முன்னால் நின்று முகம் காட்டி அத்தனை எரிச்சலையும் எதிர்கொண்டார். அவ்வப்போதும் மன்னிப்பும் கேட்டார். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலே பின்னால் மக்கள் கூச்சல்கள் ஏற்படுத்தியும் நிர்வாகித்தினர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மேடையேறிய ஐந்து பாடகிகளை அப்படியே அமர வைத்து சில வரிகள் பாட வைத்திருக்க எத்தனை யோசிக்க வேண்டியிருக்கும்? இல்லை வராமல் போன முக்கியமான நபர்களிடம் சில அனுபவப்பூர்வமான வார்த்தைகளை வாங்கிப் போட எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கும்? பலரின் வருகையும் இருப்புமே இந்நிகழ்ச்சியின் சிறப்பு என விஜய் தொலைகாட்சி தப்புக் கணக்கு போட்டிருந்தது, அவர்களில் கமல் மட்டுமே வந்தும் இருந்தும் நிகழ்ச்சியைல் காப்பாற்றினார். தூரமாக இருந்தாலும் பரவாயில்ல நேரமானாலும் பரவாயில்ல ராஜாவை பாக்கலாம்னு வந்தோம் என பல புலம்பல்கள் கேட்டன. பதினோரு மணி வாக்கில் மக்கள் சாரை சாரையாக வெளியேறத் துவங்கிய பின்னரே நிகழ்ச்சி ஓரளவும் சிறப்படையவும் செய்தது. ராஜாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லது என்று ஒரு கட்டத்தில் தோன்ற ஆரம்பித்தது. ராஜா நகர்கிற வரையில் எங்கும் நகர்வதில்லை என்பதாலேயே இறுதி வரையில் அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. ராஜா அறிவித்திருக்கும் இசை நிகழ்ச்சி இவர்கள் கையில் சிக்காமல் இருக்க நம்மால் ஆன முயற்சி ஏதேனும் இருந்தால் செய்யலாம்.

#) ராஜா பெரும்பாலும் உற்சாகமாக இருந்தார்.  மேடையில் பேசுபவர்களுக்கு பல சமயங்களில் உடனடி ரியாக்‌ஷன்களை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி. DSP தான் முதலில் பாடும் போது நீங்க இல்ல என்று வருந்திய போது உடனே சாப்பிடப் போனதாக சைகை செய்கிறார், ஒவ்வொருவருக்கும் விடாமல் கை தட்டுகிறார், சலிக்காமல் புன்னகைக்கிறார், அத்தனை புகழ்ச்சிக்கும் சற்றே தள்ளி நின்றே பார்த்துக்கொண்டிருக்கிறார், யார் பாடினாலும் யார் இசைத்தாலும் ஒரே பாவம், ஒரே கூர்மையான பார்வை – அது மட்டும் சற்றும் மாறுவதேயில்லை. ஒருவேளை தெரிவதெல்லாம் இசையாக மட்டுமே இருக்கலாம். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைத் தாண்டி இது ராஜாவுக்கான நிகழ்ச்சி என்று எங்குமே தோன்றவில்லை. என்ன பெரிசாக அழுது விடப்போகிறோம் என்று திடமாக அமர்ந்திருக்க பத்து முறை ஓட்டிய ப்ரோமோவில் ராஜா ‘எனது பிறப்பு இசைக்கான ஒரு நிகழ்வு’ என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் மனம் கலங்குகிறது. அரங்கின் உள்ளே ராஜா நுழைந்ததும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக திடல் முழுக்க காவலர்கள் புடை சூழ விறுவிறுவென புன்னகையுடன் கையசைத்துக்கொண்டே நடக்கத்துவங்கிவிட்டார். (நியுஜெர்ஸிக்கு வந்த பொழுது ஒவ்வொருவர் மனதிலும் விளக்கடித்துப் பார்த்தவர் என்பதால், இது அவரின் யோசனையாக இருக்கலாம்).  என்ன நிகழ்கிறதென விளங்கிக்கொள்ள சற்று நேரம் பிடித்தது. எம்பிக் குதித்து விளக்கொளிகள் நகர்கிறதையும் கரவொலிகள் எழுவதையும் வைத்து எங்கே நடக்கிறார் என்பதைக் கணித்து எங்கே எவ்வளவு வேகமாகச் சென்றால் அருகில் காணமுடியுமென்று கணக்கிட்டு ஹே ராம் நின்றி திடுமென வெடிக்கிற தாரை தப்பட்டை இசைக்கு செக்யூரிட்டியின் கண்ணில் இல்லையென்றாலும் ஓடுகிற ஓட்டத்தில் முட்டி வரை மண்ணைத் தூவி விட்டு குனிந்தும் மரக்கட்டை தடுப்புகளைத் தாவிக் குதித்தும் ஓடிச் சென்று அவர் நடந்து செல்கிற வழியில் அருகே மிக அருகே பக்கத்துக்கு பக்கத்திலே ஒரே ஒரு ஒரு ஆள் தொலைவில் நின்று பட்டும் படாமலே போகிற் பார்வையில் விழுந்து, அபத்தமாக ராஜா ஐ லவ் யூ என்று உங்களுக்குமாகச் சேர்த்து கத்திவிட்டு வந்தேன். இசை நிகழ்ச்சி அடுத்து எப்போது வருகிறதோ அங்கேயும் சென்றும் இதையே செய்வேனாக.

பின்குறிப்பு : இங்கே முதல் பதிவிட்டு இன்றுடன் சரியாக பத்து வருடங்கள் ஆகின்றன. ஆச்சரியக்குறி. தயவு செய்து அதையெல்லாம் சென்று படித்துவிடாதீர்கள்.

Written by sirumazai

பிப்ரவரி 28, 2016 at 2:29 பிப

இசை இல் பதிவிடப்பட்டது

யார் எழுதியதோ

with one comment

 

நீர்க்கரைகளிலே
தனிமையிலே திரிந்திருந்தேன்

மீன் வருமளவும்
முழுவதுமாய்ச் சலித்திருந்தேன்

நதிமேல் விழும் வானிலே
மிதந்தே வரும் தாரகை
அடையா உளவை உணர்ந்தேன் உணர்ந்தேன்

வான் தரையிறங்கும்
இரவுகளில்
உனை தொடர்வேன்

நான்
நடைபழகும் கவிதைகளின்
பொருள் பெறுவேன்

நிலவே விளக்கானவன்
அடியேன் தெருவாசகன்
மெதுவாய் நடந்தேன் தொடர்ந்தேன் தொடர்ந்தேன்

எதிரில் இருந்தும் கதவைத் திறவேன்
விடையை துறந்தேன் புதிரில் சுழன்றேன்

ஆண்
அறையினிலே
விடிவதில்லை சில பகல்கள்

பெண்
வரும் வரையில்
திறப்பதில்லை அதன் திரைகள்

விழியோ ஒரு சாளரம்
மனமோ சிறு தாவரம்
ஒளியாய் வளர்ந்தாய் கடந்தாய் கடந்தாய்

பின் குறிப்பு  #1 –  இதை எழுதிக் கொண்டிருக்கையில் தோன்றியது – சாதாரணமாகவே தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வேலை spying தானோ?

பின் குறிப்பு #2 – பதிவின் தலைப்பை கேள்வியாகவே பாவித்தால் – பதில் – நானே தான்.

Written by sirumazai

ஜூன் 29, 2014 at 4:28 முப

இசை, பாடல் வரிகள் இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

உன் வாழ்வில் சில நொடிகள்

with 44 comments

கொஞ்சம் ராஜா புராணம். ‘ராஜா’ என்று சொன்னதும் இசை நினைவுக்கு வராமல் ‘அகந்தை’, ’கண்டிப்பு’, ‘கசப்பு’, ‘விருது’, ‘ஈகோ’ போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருமானால், (இந்த blogகிற்கு எதிர் திசையை காட்டி பாடுகிறேன்) ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக?

———–

நவம்பரிலேயே ராஜா கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வருகிறார் என்ற தகவல் முதலில் வெளியிடப்பட்டது. கனடாவிற்கு போக விசா இல்லாத காரணத்தாலும், கலிஃபோர்னியாவிற்கான பயண சிரமங்கள் காரணமாகவும் இன்னொரு கான்ஸர்ட் வரும் என அத்தனை நினைப்பையும் கைவிட்டாயிற்று. ஜனவரி மாதக்கடைசியில் பெப்ரவரி 23ம் தேதி ராஜா நியுஜெர்ஸிக்கு வருகிறார் என்று சொன்னதும் திடீர் டிக்கெட் படபடப்பும் பயண பரபரப்பும். இது ஐந்து மணி நேர கான்சர்ட் கதை. (டிக்கெட் வாங்கித் தந்தும் நானூறு மைல்களையும் ஒரு மயிலாக தானே ஓட்டியும் சென்ற திரு மயில் செந்தில் (@mayilSK) அவர்களுக்கு நன்றிகள்).

அறுபது டாலர் டிக்கெட்டில் போயிருந்தோம். அந்த ஏரியாவும் இன்னும் மேலே ஐம்பது டாலர் டிக்கெட் ஏரியாவும் பிரமாதமாக விற்றுத் தீர்ந்திருந்தன. நிஜ கான்ஸர்ட் தரிசன டிக்கெட்களான நூற்றி இருபது டாலர் ஏரியாவும் கூட தீர்ந்திருந்தன. நடுவில் இந்த எண்பது டாலரில் தான் கொஞ்சம் காற்று வாங்கல். இரண்டு வாரங்களில் சேர்த்த கூட்டம் என்பதை வைத்து தாராளமாக மன்னித்து பாராட்டலாம். நியுஜெர்ஸி என்பதால் தமிழ்-தெலுங்கு என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதனால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு – தமிழ் மட்டும் எனில் என்னென்ன பாடல்கள் வரும் என்று பெரும்பாலும் யூகிக்க முடியும் என்பதால்.

ஒரு மணி நேரத் தாமதம். அது வரை random உள்ளூர் RJ VJ DJயினர் மேடையில் மைக் இரைச்சலோடு என்னமோ செய்துகொண்டிருந்தார்கள்.  மக்கள் கூட்டத்திலிருந்து சிலரை ஆங்காங்கே பிடித்து பாட வைத்தனர். பாடியவர்களில் பெரும்பாலோனோர் சங்கீதமே எங்கள் மூச்சென மூச்சை பிரதானமாக ஒலிக்கவிட்டார்கள். கூட்டத்தை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் விலக விலக பாடினாலும், எல்லாவற்றையும் மீறி ராஜாவின் மீதான பாசம் பளிச்சென தெரிந்தது. பொதுவாகவே, தெலுங்கு மக்கள் கொஞ்சம் கூடுதல் காரம் சாப்பிடுவதைப் போலவே கொஞ்சம் கூடுதல் பாசம் ராஜா மீது வைத்திருக்கின்றனர்.

மொத்தம் நாற்பது-ஐம்பது வாத்தியக்கலைஞர்கள். அதில் இருபது வயலின்கள் மட்டும். ஒரு சிதார் அம்மணி. நாலு தபலா. ஒரு டபுள் பாஸ். நாலைந்து ட்ரம் பேட்ஸ், கீபோர்ட்ஸ். நெப்போலியன் (பாடகர் அருண்மொழி) புல்லாங்குழல். பாலேஷ் ஷெனாய். எல்லோரையும் சேர்த்திசைக்க வைக்க பிரபாகர். (மனிதருக்கு ஒரே குறி இசை தான். வேறெதையும் கவனிப்பது போலத் தெரியவில்லை). நட்ட நடுவில் வெள்ளைத் துணி போர்த்தி மூடிய மேஜையொன்றின் மேல் அந்த அதிசய ஆர்மோனியப் பெட்டி. ராஜா வருகிறார் என்றதும் அரங்கத்தின் இரைச்சலெல்லாம் வாக்யூம் போட்டு இழுக்கிற வேகத்தில் போயே போச். அத்தனை விளக்குகளையும் அணைத்து விட்டு ஆர்மோனிய பெட்டிக்கு மட்டும் நல்ல ரம்மியமான நீல ஒளி. ஆள் வந்து நின்றால் போதும் புல்லரிக்கும் என்பதான அமைப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை டிக்காஷன் குறைவான காபி கலர் துண்டு என ஒரு ஓரத்தில் ராஜா உள்நுழையும் போதே அரங்கத்தின் அமைதி உடைந்து பொடியாகிறது. (மொத்த அரங்கத்திலேயே நான் தான் முதலில் அவரைப் பார்த்தேன். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்). வெள்ளை ஒளி எங்கோ மேலே மேலேயிருந்து ராஜாவை மட்டும் வட்டமெனத் தொடர்ந்து மேடையில் ஆர்மோனிய நீல ஒளிவட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் அவர் தலைக்கு மேல் வணக்கம் வைக்கிறார். நானெல்லாம் எழுந்து நின்று ஆவெனக் கத்திக்கொண்டிருக்கிறேன். கை கால் வாயெல்லாம் தானே தன் பாட்டுக்கு முடிந்ததை செய்கிறது. (ரொம்ப அபாயகரமான இருக்கை வரிசை வடிவமைப்பு. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றால் நடந்தால் இசை வெள்ளத்தில் தொபுக்கடீரில்லாமல் கீழே மக்கள் வெள்ளத்தில் நடுவே தொபுக்கடீராகி தினந்தந்தி பெட்டி செய்தியில் காலேஜில் எடுத்த பாஸ்போர்ட் புகைப்படம். ஆனால் பிற்பாடு சுடிதார் அம்மணிகளெல்லாம் சர்வசாதாரணமாக் சீட் மீதேறியே முன் வரிசைக்குத் தாவிச் சென்று கலவரமூட்டினார்கள்). ’ஹலோ’ ‘கிலோ’ அபத்தமாக ‘வாங்க’ என்றெல்லாம் சொல்லாமல் நேரடியாக ஷிவ சக்த்யாயுக்தோ யதி பவதி. சில கான்சர்ட்களில் தென்படுகிற துவக்கத் தயக்கங்களோ குரல் நடுக்கங்களோ இல்லாமல் ’வானம் இன்று மேகங்களின்றி பளிச்சென’ இருக்கிற குரல். இன்னும் அதே ஏதோ-ஒன்று அந்தக் குரலில். ‘பரி பூரணி’ என்பது அந்தக் குரலாகவும் இருக்கலாம். நிற்க, சில வருடங்களாகவே ஜனரஞ்சக மக்கள் கூட்டம் கூடும் மாபெரும் நிகழ்ச்சிகளில் எடுத்த எடுப்பில் ஒற்றை ஆர்மானியத்துடன் பக்திப் பாடல் பாடி கூட்டத்தை கட்டுக்குள் வைக்கிறார் ராஜா. இதை கொஞ்சம் ஆராய்ந்தால் பலப்பல வடிவங்களில் உலவிக்கொண்டிருக்கிற ராஜா ப்ராண்ட் ஃபிலாசபியில் ‘concert philosophy’ கிளை துவக்கலாம். ’ஜனனி ஜனனி’ முடிந்ததும் இரண்டே நொடிகளில் உடுக்கைகள் அடிக்கத்துவங்க கோட் சூட் டையுடன் கார்த்திக்கின் ‘ஓம் சிவோஹம்’. விஜய் பிரகாஷின் ஷூக்களில் கார்த்திக்கா (கார்த்திக்கா கார்த்திக்கா – கூட்டத்தின் சந்தேக echo) என்று குழம்பினால் கார்த்திக் பக்திப்பாடலாய் இருந்தாலும் ஷூக்களை மாட்டிக்கொண்டு கம்பீரமாக ரெண்டடி நடந்தே காட்டுகிறார். Surprise, surprise என்று விளம்பர மங்கை சிரிப்பது போல. பக்கபல குரல்கள் இன்னும் பிரமாதம். மந்திரங்கள் சொல்வதும் சொல்லி முடிந்ததும் மேளங்கள் உருள்வதுமென ஒரிஜினலைப் போல. பாடல் முடிந்ததும் அதே இரண்டு நொடி அவகாசத்தில் ‘ஜகதானந்த காரகா’ தெலுங்கில். (ஸ்ரீராமராஜ்யம்). எஸ்.பி.பியும் கீதா மாதுரி என்ற தெலுங்குப் பாடகியும். (பாடல் தேர்வுக்காக கேட்ட சந்தோஷக் கூச்சல் என்னுடையது). ஷ்ரேயா கோஷல் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். கான்ஸர்ட் முழுதுமே குரல்களின் ஒளியளவு கொஞ்சம் தூக்கல் என்றாலும், எஸ்.பி.பி எப்போது குரலை முழுக்க திறந்து உயரே ஏறினாலும் காவிரி நீர் திறந்து விட்டது போல அரங்கத்தை ஒரு மைக்ரோ நொடியில் நிறைக்கிறது அவரின் குரல். ஒவ்வொரு முறை அது நிகழ்கையிலும் நானும் செந்திலும் உச்சுக்கொட்டி உணர்ச்சிவசப்பட்டோம். மூன்று இறை வணக்கங்கள் முடிந்ததும் ராஜா முதல் முறையாக பேசி வரவேற்று நிறைய பாடல்கள் இருப்பதாகவும் நிறைய உழைத்திருப்பதாகவும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடர்கிறார். (இந்த இடத்தில், அறிவித்தபடி சுஹாசினி மணிரத்னம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவில்லை என்பது அறிந்தும் புரிந்தும் மலர்ந்து சிரிக்கும் என் முகம் ஒரு க்ளோசப்).

அடுத்த பாடல் தேர்விலேயே என்னுடைய முதல் விக்கெட் காலி. ‘என்னைத் தாலாட்ட வருவாளோ’க்கு எல்லோரும் ஓட்டு போடும் பொழுதே நானும் ‘இது சங்கீதத் திருநாளோ’ பாடலும் மட்டும் தனியாகக் காற்று வாங்கிக்கொண்டிருப்போம். குறிப்பாக, பியானோவும் பவதாவின் குரலுமான (!) அதன் துவக்க இசை, Synthலே ஒரு குறையிருந்தாலும் சிலிரிப்பினில் குறைவதுண்டோ வகையறா. அதை எல்லோருமாகச் சேர்ந்து மேடையில் தொடங்குகிறார்கள். (அதற்கு முன் ராஜா ‘கடல் கடந்து வாழும் உங்களுக்கு இது ஒரு சங்கீதத் திருநாள்’ என்று சொல்கிறார். ‘என்ன ஒரு ஆணவம்’ என்று பொங்கும் மக்களே, இன்னும் இந்தப் பதிவில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?) பியானோ (அதாவது கீபோர்டு) மற்றும் பவதா குரலுடன் கூடவே ஒரு வயலினும் (ஒரிஜினலில் இல்லையா கேட்கவில்லையா?). படிபடிப்படியாகத் தாண்டி ஏறிப்போகிற இசையிலே கூடவே விட்டு விட்டு படிப்படியாக ஸ்ருதியேறி வரும் வயலின் இழுப்புகள். (இந்த ‘என்னவென்று சொல்வதம்மா’ பாடலில் ’அந்தி மஞ்சள் நிறத்தவளை / என் நெஞ்சில் நிலைத்தவளை’ வரிகளுடன் வரும் வயலின் இழுப்புகள் போல – அந்தப் பாட்டில் வயலின் இழுப்பை ராட்டினமேற்றி விட்டாற் போலிருக்கும்). வயலின் மட்டும் ஒரு மைக்ரோ நொடி தப்பாகத் துவங்க, ராஜாவிற்கு ஏமாற்றம். ஒரு உக்கிரமான கையசைப்பில் அனைவரும் நிறுத்தி விடுகிறார்கள். (சிலர் வாத்தியத்தையே கீழே வைத்திருப்பார்கள் என்று என் dramatic யூகம்). என்னவோ பேசுகிறார் சொல்கிறார் விளக்குகிறார். அவர்களை பார்த்து திரும்பி நின்று ‘என்னைப் பார்’ என்பது போல கையசைத்து வழி நடத்த கச்சிதமாக வாசித்து எல்லோரும் கரையேறி வருகிறார்கள். வயலினோடு சேர்ந்து பவதாவும் பலப்பல ஸ்ருதிகளில் பாடத் துவங்கி விட, அவர் மட்டும் கரை வராமல் தத்தளிக்கிறார்.

அடுத்து மேடைக்கு மனோ வந்து காம்பியர் பண்ண எத்தனித்தபடி பேசி பாட்டுக்குத் தயாராகிறார். ஷெண்பகமே ஷெண்பகமே. ‘பட்டு பட்டுபூச்சி போல’ என தொகையறாவைப் பாடி முடிந்ததும், மக்களே, அருண்மொழியின் ஒரே ஒரு புல்லாங்குழல் மற்ற எல்லா கருவிகளையும் விஞ்சி நிறைகிறது. முதல் இடையிசையில் ஷெனாயும் அபாரமான துல்லியம். (இந்த இருவரும் கான்ஸர்ட் முழுக்க அமர்க்களம்). பொதுவாகவே மனோ பாடுவதில் அதிகம் ஈர்ப்பில்லையென்றாலும் ஜோராகவே பாடினார், கொஞ்சம் கலக்கமான முகமும் குரலும். எஸ்.பி.பியும் சித்ராவும் மேடையேறியதுமே எக்கசக்கமான எதிர்பார்ப்பு. ஆர்கெஸ்ட்ரா அங்கங்கே சிதறலாக வரப்போகிற இசையை வாசித்துப் பார்க்க நாங்கள் அந்தப் பாட்டா இந்தப் பாட்டா என குதித்துக்கொண்டே இருக்கிறோம். (கான்ஸர்ட் முழுக்க இதே விளையாட்டு தான்). வந்த பாடல், மௌனமேலநோயி. (தமிழில் சலங்கை ஒலி ‘மௌனமான நேரம்’). சமீபகாலமாக சித்ராவின் குரலில் வயது லேசாக அடி தங்கி குரல் தடித்தது போன்ற உணர்வும் எனக்கும் அதனால் கொஞ்சம் பயமும். அதையெல்லாம் அடித்து நொறுக்கி துவங்குகிற ஹம்மிங்குடன் எஸ்.பி.பியும் சித்ராவும் அன்றைய மாலைப் பொழுதின் முதல் சிக்ஸர். Studio level. ’தெலுங்கு பாட்டும் பாடுவாங்க’ என்பது ஊர்ஜிதமானதால் தெலுங்கு மக்கள் ஏகோபித்த கரகோஷத்தை பொழிந்தார்கள். (’அதெப்படி கரகோஷத்துல பிரிச்சு சொல்வீங்க’ என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது).

‘நின்னுக்கோரி வர்ணம்’ துவக்க இசை வந்ததே சர்ப்ரைஸ். இத்தனை சின்ன ஆர்கெஸ்ட்ராவில் இது முடியுமா என்ற சந்தேகம் போகப் போக நிஜமாகிறது.  ட்ரம்ஸ் முதல் முறையா(கவும் அன்று முழுவதுமாக) இடிஇடியென இடிக்கிறது. ’அழகிய ரகுவரனே அனுதினமும்’ என்றெல்லாம் விரைகிற இடங்களில் தடுமாற இன்னும் சித்ராவிற்கு நிறையவே வயதிருக்கிறது – மகிழ்ச்சி. அங்கே திரையில் க்ளோசப்பில் தெரிகிற சித்ரா ஒரு கடினமான சங்கதியை கண்களைச் சுருக்கி குரலின் உள்ளேத் தேடித் தேடி பிடித்து அடைந்து நிம்மதியடைந்து அடுத்த வரியில் ஒரு நிம்மதி புன்னகை உதிர்க்க, ரசிகாஸ் அந்த புன்னகைக்கு ஒஹோவென ஆர்பரித்த பொழுது – பாரதிராஜா மொழியில் – ஐ லவ் திஸ் ஆடியன்ஸ். (நிற்க, இயக்குனர் பாலா தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக சித்ராவின் புன்னகையை சொன்னதற்குப் பிறகே நானும் கவனிக்கிறேன்) ராஜா இந்தப்பாடலுக்கு 1/4/87ல் எழுதிய ஸ்கோர்ஷீட்டை எடுத்து வந்திருந்தார். (’சுஜாதா ஃபிலிம்ஸ்’ ‘நின்னுக்கோரி வர்ணம்’,’சித்ரா’ என்று அதில் குறிப்புகள் இருந்ததைப் படித்தார். நின்னுக்கோரி வர்ணத்தை popஆக மாற்ற நினைத்து செய்த பாடல். வாலி ‘நின்னுக்கோரி வர்ணம் இசைத்திட (ராஜாவைத்) தேடி வரணும்’ என்று எழுதியதாகச் சொன்னார்)

பிரியதர்ஷிணி என்றொரு பாடகி. அடிக்கடி ராஜா நிகழ்ச்சிகளில் தென்படுகிறார். என்ன பாடல்கள் பாடியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘இதயம் ஒரு கோவில்’ பாடலில் ஜானகியின் ஹம்மிங் பாடுவது அவருக்கான பணி, சிறப்பாக செய்தார். ஏதோ தீவிர யோசனையிலேயே பாடினாலும் பிசகாமல் பாடிக் கடந்த ராஜா தானே எழுதிய அந்த என்-ரசிகனே-கேள் வகையறா வரிகளை பாடிய விதம் எல்லாம் சிக்ஸர். ‘எனது ஜீவன் நீ தான்’ ’நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது’ என்றெல்லாம் கை நீட்டி அடித்த பஞ்ச்சுக்கெல்லாம் என்ன பதிலுக்குச் சொல்வதென்று புரியாமல் ஓவெனக் கத்தித் தீர்த்தோம். ‘என்றும் வாழ்கவே’ வரிகளுக்கு வாழ்த்தினார். ‘லலித பிரிய கமலம்’ (தமிழில் ‘இதழில் கதை எழுதும் நேரம்’) பாடலில் எஸ்.பி.பி நிறைய சறுக்கினார். சித்ராவிற்கு அப்படியெல்லாம் தவற விடுவது என்னவென்றே தெரியாது என்பதால் பாடலை தனியாளாகக் கட்டி இழுத்தார். (தெலுங்கில் ஜேசுதாஸ் பாடிய பாடலென்பதால் வரிகள் பழக்கமில்லை என்று எஸ்.பி.பி மனு கொடுத்தார்). ஹிந்தியில் நௌஷாத் மிஸ்ரலலிதா ராகத்தில் போட்ட (கிட்டதட்ட) இதே மெட்டுடைய பாடலை எஸ்.பி.பி பாடிக்காட்டி கேள்விகள் கேட்டார். ராஜா அதிகம் ரசித்ததாக தெரியவில்லை. அது வேற ராகம், இது வேற என்றார். பாலசந்தர் என்ன ராகத்தில் பாட்டு அமைத்தாலும் நாயகிக்கு அந்தப் பேரை வைப்பதாகச் சொன்னதாகவும் ராஜா லலிதப்ரியா ராகத்தை தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்). எஸ்.பி.பி மேடையிலேயே தொடர்ந்து நின்று ‘தோகை இளமயில்’ பாடி முடித்தார்.

அடுத்து பேருந்து ஹார்ன் கேட்டதும் கூட்டம் கத்தித் தீர்க்க அதே கோட் டையுடன் கார்த்திக் ‘என்னோடு வா வா’. ஏகக் குஷியாகத் தென்பட்ட கார்த்திக்கின் உடல்மொழி முழுக்க மகிழ்ச்சி கொப்பளித்தாலும் குரலில் எப்போதும் ஏனோ ஒரு மென்சோகம். (இந்த போக்கிரி படத்தில் லிஃப்ட் சரிசெய்கிற பாண்டு போல). பாடலின் இரண்டாவது இடையிசையில் ராஜாவிடம் ஓடிச்சென்று என்னவோ கிசுகிசுத்துவிட்டு எங்களிடம் கை தட்டி சத்தமாக உடன் பாடும்படியும் ராஜாவின் அனுமதி உண்டு என்றும் சொன்னார். (ராஜாவுக்கு ஏகச் சிரிப்பு) இரண்டாவது சரணம் முழுக்க இது தொடர ’அதை கட்டி வெச்சு உதைக்கணுமே’ என்று பாடுகையில் ராஜா சிரித்தபடி கார்த்திக்கைப் பார்த்து அதைப் பாடினார். (சிரித்தபடி என்பதை அழுத்திப் படிக்கவும், நாளை பத்திரிக்கைகளில் வேறு போல கதை வரும். நாங்கள் உட்கார்ந்து டிவிட்டரில் மறுப்பு சொல்ல வேண்டியிருக்கும்) ராஜாவே கடைசி பல்லவியை மைக்கில் ரசிகர்களைப் பார்த்து ‘எங்கேயும் போக மாட்டேன்’ என்றார். (டிக்கெட் காசெல்லாம் ஏற்கனவே தீர்ந்தது). (கார்த்திக் ராஜா தன் தாயாரின் மரணத்திற்குப் பிறகு முதன் முதலில் ‘அரேஞ்’ செய்த பாடல் இதுவென்றும், இந்த முதல் வரியை கேட்டு அம்மாவை நினைந்து நெகிழ்ந்ததாகவும் சொன்னார்)  ’பச்சரிசி மாவு இடிச்சு’ என்று கோரஸ் தொடங்கி (நிற்க – கோரஸ் நாள் முழுக்க அபாரம்) -. மறுபடி அருண்மொழியின் துல்லிய புல்லாங்குழல் என ‘மதுர மரிக்கொழுந்து’ பேரானந்தம். மனோ இரண்டு முறையும் சரணத்தை முடிக்கையில் கைத்தட்டல்கள்! தொடர்ந்து சிறிய medley. ’அழகு மலராட’ (சத்யன் – பிரியதர்ஷினி) இத்தாலி கான்ஸர்ட்டில் பாடிய வடிவில். முதல் வரியை தனியே பாஸ் மற்றும் வயலினில் வாசித்த பொழுது அதிர்ந்தது. அதற்கே இன்னொரு அறுபது டாலர் டிக்கெட் எடுக்கலாம் போல. (இந்த வீடியோவில் 37வது வினாடி – வீடியோ உபயம் @mayilSK). என்ன பாடல் என்று தெரியாததால் கூடுதல் திரில். (இரவு முழுக்க இப்படி என்ன பாடல் எனத் தெரியாமல் திடீரென இசை துவங்க என தாக்குதல்கள்). ’நானாக நானில்லை தாயே’ (எஸ்.பி.பி) முதல் இடையிசை மற்றும் சரணம் பல்லவி மட்டும். மலேசியா வாசுதேவன் நினைவாக ’ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே’ (செந்தில் தாஸ் – என்னா குரல்!).

இந்த MC, compere தொல்லையெல்லாம் இல்லையென்பதாலோ என்னவோ ராஜா விட்டால் போதும் என அடுத்தடுத்த பாடல்களுக்குத் தாவிக்கொண்டே இருந்தார். Medley முடிந்தது மறு கணமே திரும்புகிறார், என்னவோ சொல்கிறார், மைக்கிடம் செல்கிறார் ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது’ ஆலாப் ஆரம்பிக்கிறார். ஆலாப் முடிந்ததும் ஆர்கஸ்ட்ராவைப் பார்த்து வெட்டும் கை அசைவுகளில் அந்த prelude rushஐ கட்டி இழுக்கிறார். பார்க்க அப்படியொரு பரவசம். சித்ரா இன்னும் மேடையே ஏறவில்லை. மனிதர் பல்லவியைப் பிடித்து அடித்து நொறுக்க, அவசர அவசரமாக வந்து லிர்க் ஸ்டாண்ட் வைத்து மைக் எடுத்து சித்ரா சேரும் பொழுது ஏதோ அங்கேயே ஒரு மணி நேரம் ஆசுவாசமாக நின்று காத்திருந்து பாடுவது போலக் கச்சிதம்.

தெலுங்கு தேசத்தில் மிகப்பிரபலமான ‘பலப்பம் பட்டி’ (பொப்பிலி ராஜா) பாடல் வரும் என்ன பந்தயமே கட்டியிருந்ததால், மத்தளங்களும் ஷெனாயுமாய் தூள் பறந்த துவக்க இசை வந்ததும் அடியேன் ஏகோபித்த கரகோஷம். வேறெந்த பாடலுக்கு அரங்கம் இத்தனை அதிர்ந்ததாக நினைவிலில்லை. மனோ (எஸ்.பி.பி இடத்தில்) மற்றும் அசராமல் அடித்த சித்ரா. அடுத்த நாள் காலை வரை மண்டையில் அடித்துக்கொண்டிருந்தது ட்ரம்ஸ். இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லையெனில் உடனே கேட்டுவிடவும். Gult pleasure மட்டுமல்ல guilty pleasure! (நிற்க, இப்படி எத்தனை மசாலா-படத்துல-ஒரு-ஹிட்-பாட்டு. அதற்கென ஒரு ஃபார்மட், ஒரு எனர்ஜி, ஒரு மெலடி). கமல் இடத்தில் யுவன் பாட முயல்வது பெரும்பாலும் ஜோக் போலத் தான் தெரிகிறது. இருந்தும் யுவன் முடிந்தவரை ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில் err முயன்றார். (கூட NSK ரம்யா). முதல் இடைஇசையில் சாரியட் வண்டி – மணியோசை இசையெல்லாம் பிரமாதமான depthஉடன் கேட்டது. கிட்டத்தட்ட unreal. சித்ராவும் ‘செங்க சூளக்காரா’ அனிதாவும் புதிய இண்டர்லூட்களுடன் ‘தம்தன தம்தன தாளம் வரும்’ பாடலைப் பாடினார்கள். இண்டர்லூடுகள் எனக்கு மிகப்பழக்கமானவையாகப் பட்டது. அதாவது – பொதுவான ‘சிம்பனி’ இசை மற்றும் Nothing but wind தாக்கம். ’ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் எனக்கு எத்தனை பிடிக்கும் என நேரில் அங்கே கச்சிதமான ஆர்கெஸ்ட்ரா மற்றும் கார்த்திக்குடன் கேட்கையில் தெரிந்தது. (முதலில் கார்த்திக் பாடியபின் இசை துவங்கி ஒளியென பெருகும் என்று @meenaks ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்து அந்த momentஐ எதிர்பார்த்தேன், சரியே நிகழவில்லை) பவதா அதிகம் சொதப்பாமல் பாடினார். எல்லோருக்கும் அவர் மேல் soft corner இருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக் அதிகம் துணை நின்று பாடியது போல இருந்தது. (கவனிக்க, அவர் இசையில் ஒரு பாடல் தந்திருக்கிறார்). ராஜா மாற்றியெழுதிய கடல்-கடந்து-வாழறீங்களே-பாவம் வரிகளுடன் ‘சொர்க்கமே என்றாலும்’ (உடன் சித்ரா). அங்கங்கே இசையை நிறுத்தி வரிகளை விளக்குதல். பின் தொடர்ந்து பாடுதல்.

கான்ஸர்ட்டின் ஆகச்சிறந்த தருணமென நான் நினைப்பது – கீதாஞ்சலி (தமிழ் இதயத்தை திருடாதே) படத்தின் ‘ஓ ப்ரியா ப்ரியா’. சமீபமாக என்னவோ ஒரு மயக்கம் இந்தப் பாடலின் மேல், இந்தப் பாடலினால், இந்தப் பாடலுக்காக. மரணத்தின் வலியும் அதை எதிர்க்கிற நம்பிக்கையும் விசித்திரமாக ஒன்றாகச் சிக்கிக்கொண்டிருக்கிறது அதில். தெலுங்குப் பாடல்கள் என்று விளம்பரப்படுத்தியதிலிருந்தே இந்தப் பாடலுக்காக மனசு டமடமவென அடித்துக்கொண்டது. எஸ்.பி.பியும் சித்ராவும் அன்று பாடியது இது வரை பார்த்த மேடைப் பாடல்களிலே சிறந்தது என்றே சொல்லலாம். அவர்களையும் ஒரு படி மிஞ்சி ஆர்கெஸ்ட்ரா சிறப்பாக ஒத்திசைத்தார்கள். எங்கிருந்து எந்த இசை துவங்கி எங்கே கலக்கிறது என்று புரியாமல் பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி மங்க மங்க நான் ஒப்புக்கொள்ள விரும்புவதை விட அதிகமாகவே கண்களில் நீர் கோர்த்துக்கொண்டிருக்கலாம் 😉 தப்பித்தவறி யாரேனும் அழுதிருந்தால் அரங்கத்திற்கே கேட்டிருக்கக் கூடிய நிசப்தம் பாடல் முழுக்க.

’மாயாபஜா’ரிலிருந்து ‘நான் பொறந்து வந்தது’ (அபாரம்), பின்னர் தெலுங்கில் ‘பிரயதமா’ (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி’) இரண்டிலும் தனித்து தெரிந்தது ப்ரியா ஹிமேஷ். ஜானகியின் பாடலைப் பாடியும் எந்தக் குறையும் தெரியாமல் பாடினார். பிரயதமா பாடலின் துவக்க இசை மிகவும் பிடிக்குமெனில் வலது கையை தூக்கவும். (பாடலும் பிடிக்குமெனில் இரண்டு கைகளையும்). உங்கள் சார்பாக நான் அங்கே கை தூக்கி ஆர்பரித்தாயிற்ற்று. சரணங்களை எஸ்.பி.பியும் ப்ரியாவும் துல்லியமாக பாடினார்கள். ராஜா அந்த முதலிரண்டு சரண வரிகளை பாடிக்காட்டி (யாய்!) அதற்கு எந்த வார்த்தைகளை எழுதும் போது இனிமை கொஞ்சம் குறைந்து விடுவதாகச் சொன்னார். இருந்தும் தெலுங்கு பாடலாசிரியர் மிகவும் உழைத்து எழுதினார் என்று சொன்னார். (ஆத்ரேயா?) ‘சாய்ந்து சாய்ந்து’ யுவன் பிரமாதமாகப் பாடினார். (ரம்யா சொல்ல வேண்டியதில்லை). சமீபத்திய பாடல் மட்டுமில்லாமல் முழுக்க ஆர்கெஸ்ட்ராவுக்காக சமீபத்தில் தான் எழுதியது என்பதால் துல்லியமாக இருந்தது. (இதே காரணம் ஜகதானந்த காரகாவிற்கும்). மிகவும் எதிர்பார்த்த இரண்டாவது இடையிசையை யுவன் உடன் பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கான்ஸர்ட்டின் மற்றொமொரு monsterous performance – சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சித்ரா, எஸ்.பி.பி. வாத்தியக்கலைஞர்களுக்கும் அது முக்கியமான தருணமாக இருந்திருக்கும். ஓரிரு சிறிய தவறுகள் தவிர்த்து ஸ்டூடியோவில் என்ன நிகழ்ந்ததோ அதை இங்கே அரங்கேற்றினார்கள். பார்க்கிற எங்களின் கூர்ந்த கவனமும் வாசிக்கிறவர்களின் கூர்ந்த கவனமும் பிரமாதமான அமைதியில் கலக்கிற பொழுது, சத்தம் போடாமல் கேளுங்கள் என்று ராஜா சொல்வதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எஸ்.பி.பியின் குரல் ஏற்ற இறக்கங்களில் முன்பு எப்போதோ சறுக்கு மரம் விளையாடி பரவசமானது போல இப்பொழுதும் சாத்தியமாகிறது. மக்களே, எஸ்.பி.பியின் புகழ் இன்னும் இன்னும் பாடுக. ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ தெலுங்கில் எஸ்.பி.பியும் (மறுபடி அமர்க்களம்) அனிதாவும் கடைசி சரணம் தமிழில் ராஜாவும். (அவர் பாடியதாயிற்றே விடுவாரா?) கோரஸ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள், ரசித்து பாடுகிறார்கள். பெரும் நடுக்கத்துடன் பவதாரிணி ‘காற்றில் வரும் கீதமே’ துவங்க, ப்ரியா ஹிமேஷ் கொஞ்சம் சேர்ந்து சரி செய்ய, பின்னர் மனோ வந்து மீண்டும் குழப்ப, கடைசியில் ராஜாவே பாடி முடித்தார். ’ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ பாடல் அடைந்த பொழுது ஆர்கெஸ்ட்ரா அன்றைக்கு அட்டகாச ஃபார்மில் இருப்பது தெளிவாக புரிந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசமாகிக் கேட்க முடிந்தது. பாடகி ப்ரியதர்ஷினி பவ்யமாகப் பாடுகிறார், நன்றாகவும் பாடுகிறார். ’மாசி மாசம் ஆளான பொண்ணு’ தெலுங்கில் எஸ்.பி.பியும்(மறுபடி மறுபடி அமர்க்களம்) ப்ரியா ஹிமேஷும். ஹிமேஷ் விரைவில் ஸ்டாராகி விடுவார். இது ஸ்வர்ணலதாவிற்கு அஞ்சலி என்று சொல்லியிருந்தால் என்னைப் போன்ற ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம். (தெலுங்கில் படத்தில் பாடியது சித்ரா) தெலுங்கில் தன் பாடல்களுக்கு எழுதப்பட்ட வரிகளில் இதன் பல்லவியை பெஸ்ட் என்றார் ராஜா. நல்ல thought, fits and sounds nice என்பது அவரின் அளவுகோல்.

அடுத்த பெரிய சர்ப்ரைஸ் – ‘கண்ணே தொட்டுக்கவா ஒட்டிக்கவா’ என்று சத்யன் கமல் குரலில் துவக்கியது. எஸ்.பி.பி (சொல்லி சொல்லி போரடிக்குது, அமர்க்களம்), பிரியதர்ஷினி (ஆர்கெஸ்ட்ரா மற்றும் எஸ்பிபி அதிரடியில் இவரின் குரலைல் காணவே காணோம்). ’வனிதாமணி யவன மோகினி’ என்று அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எல்லா பக்கங்களிலும் அதிரடி. ராஜாவின் பாடல்களுக்கான திரைவடிவங்களில் எனக்குப் மிகப்பிடித்த தருணங்களின் ஒன்று இந்தப் பாடலில் இரண்டாவது இடையிசையின் முதல் பத்து நொடிகளில் வருகிறது. ஒளிந்திருக்கும் வில்லன்கள், திரையின் ஒரு புறத்தில் இன்னொரு புறத்திற்கும் விரையும் குதிரைகள், எதிர்ப்புறமாக ஓடி வருகிற கமல் – அம்பிகா என மொத்தமும் ஸ்லோமோவில் நிகழ (அந்த ஸ்லோமோ ஐடியாவை கொடுத்தவர் வாழ்க) அந்த இசையை திரையில் அழகாக உள்வாங்கியிருப்பார்கள். அந்த நொடியை ஒரு கான்சர்ட் ஹாலில் அமர்ந்து தரமான வாசிப்பிற்குக் கற்பனை செய்வேனென நினைத்ததேயில்லை. Majestic!

NSK ரம்யா துவக்கிய ‘உனக்கும் எனக்கும் ஆனந்தம்’ ஒரு சரணம் முடிந்ததும் அப்படியே அடங்கி பிண்ணனியில் Black Eyed Peas remix முழுதாக ஒலித்து முடித்தது. அர்த்தமேயில்லாத தேவையில்லாத plug. ராஜாவை யார் கன்வின்ஸ் செய்தார்கள் எனத் தெரியவில்லை. முழுநேரமும் ஆடியன்ஸை பார்க்காமல் அந்தப்பக்கம் திரும்பி நின்றுகொண்டிருந்தார். முகத்தில் கொஞ்சம் சங்கடம். அந்த adaptationஐ நாம் கேட்க வேண்டுமென ராஜா விரும்பியதாக எஸ்பிபி விளக்கினார். அடுத்த சிக்ஸர் ‘பூவரசம்பூ பூத்தாச்சு’. மிகவும் பிடித்த பாடல். பிரியதர்ஷினி பிரமாதமாகப் பாடினார். ரயில் ஒலிகள் கச்சிதமாக அமைந்த fun ride. ராதிகா வானம் பார்த்து சுற்றிச் சுற்றி தடுக்கி விழுந்து எழுந்து நின்று பார்க்கும் பொழுது வயலின்களுக்கு தலை சுற்றுமே – அது Perfect. தெலுங்கு ரசிகர்களை கொஞ்சம் சாந்தப்படுத்த மறுபடி ஜகதீக வீருடு அதிலோக சுந்தரியிலிருந்து abba nee பாடலை எஸ்.பிபியும் கீதா மாதுரியும் பாடினார்கள். அவர்களே மறுபடி மனோவுடன் botany பாட்டை பாடினார்கள்.

மறுபடி ஒரு pure moment. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ. சித்ராவும் ராஜாவும். ஆர்கெஸ்ட்ரா இன்னும் கொஞ்சம் உயிரூற்றி வாசித்திருக்கலாம் எனத் தோன்றியது. இருந்தாலும் பாடலின் உயரம் ஏகமென்பதால் கொஞ்சம் குறைந்தாலும் பொன். ஜானகி தந்திரமாக அந்தப் பாட்டின் நோட்ஸுகளுக்கிடையே தன் குரலையும் சேர்த்து எழுதிவிட்டார் என்பது சித்ரா பாடுகையில் கேட்டது. (சித்ரா அடிக்கடி கூட நின்று கொண்டிருந்த கோரஸ் பாடகர்களிடம் என்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்). அங்கங்கே மைக் கொஞ்சம் சொதப்பியது.  சும்மா கேட்டுகொண்டிருந்தே நாங்களே சோர்ந்து போயிருக்க ராஜா ஐந்து மணி நேரமாக நின்றிருந்தாலும் ‘ஓரம் போ ஓரம் போ’ பாடலை உற்சாகச் சைக்கிளேற்றினார். கோரஸ் மக்களும் செந்தில் தாஸ் (பல குரல்களில்) ஜாலியாகப் பாடினார்கள். ’ருக்குமணிய பின்னால உக்கரவெச்சு’ என்று பாடும் போது ராஜாவின் பாவனையெல்லாம் அத்தனை அழகு. (அழகன்யா எங்காளு!). உடனே அன்னக்கிளியிலிருந்து ‘சுத்தச்சம்பா’ மிகத் திறமையாகப் பாடப்பட்டது – காரணம் பாடகி பிரயதர்ஷினி. டீம் லீட் போல அவர் ஒரு மினி கண்டக்டராக கோரஸ்களை ஒழுங்குபடுத்தி பாட வைத்தார். அதே ஜோஷுடன் ‘நிலா அது வானத்து மேல’ ஒரு பாதி பாடப்பட்டது. ராஜா ‘நிலா அது வானத்து மேல’ எப்படி முதலில் தாலாட்டாக இசையமைக்கப்பட்டது (தென்பாண்டிச்சீமையில இடத்தில்) என்று விளக்கி பாடி காண்பித்தார். (பின்னால் அமர்ந்திருந்த தெலுங்கு குடும்பத்தினருக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. எனக்குப் புரியாத தெலுங்கிலும் அவர்கள் கண்ட அதிசயத்தை புரிந்துகொள்ள முடிந்தது ஜீன்ஸ் படப்பாடலில் வராத அதிசயமாக மிஞ்சியிருந்தது. வெளியே கலைந்து போகும் பொழுது ஒரு தமிழ்நாட்டு வெள்ளைதாடி பெரியவர் தன் குடும்பத்தினரிடம் மிக மகிழ்ச்சியாக ‘என்ன அநியாயம் பாத்தீங்களா அந்த நிலா அது வானத்துலு பாட்டு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இத்தனை லேட்டாக இதெல்லாம் புரிந்து தெரிந்து என்னத்த..) அபிநந்தனாவிலிருந்து ‘ப்ரேமா எந்த்தா மதுரம்’  – எஸ்.பி.பி. தெலுங்கு ரசிகர்களின் தேசிய கீதம் போல. இது போன்ற மெட்டை தான் வேறெங்கும் பாடியதேயில்லை என்று எஸ்பிபி உணர்ச்சிவசப்பட்டார். நான் முதல் முறையாக கேட்கிறேன். (வெட்கம், வேதனை). பின்னர் ராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி முடித்து வைத்தார்.

சப்பா, ஒரு சோடா.

சரி, பாட்டு லிஸ்ட்டெல்லாம் ஓகே, கருத்து சொல்ல வேண்டிய கட்டம். ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக.

இடம் – சரியாக இருந்தது. போனவுடன் ‘ஏன் ஸ்டேஜ் அங்க இருக்கு’ ‘இத்தன சின்னதா இருக்கு’ ‘நம்ம இடத்துல சவுண்ட் கேக்குமா’ போன்ற கலவர கேள்விகள் எழுந்தன. (முதல் கான்ஸர்ட் அல்லவா?). எல்லாம் சரியாக இருந்தது.

கூடிய மக்கள் – இசை ரசிக்கத் தெரிந்த மக்கள். தெலுங்கு – தமிழ் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சில் என்பதால் அதிகம் தமிழ் பாடல்கள் இருந்தன. அது சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மனோ, எஸ்பிபி, ராஜா என எல்லோரும் ஓரிரு முறை தெலுங்கு பாடுகிறோம் என்று வாக்களிக்க வேண்டியிருந்தது. கடைசியில் சில தெலுங்கு பாடலை பாடி சரிகட்டினார்கள். இருந்தாலும், அவர்வர் சங்கங்களில் (தமிழ்ச் சங்கம், தெலுங்கு சங்கம்(லு?)) அடுத்த மீட்டிங்கில் சலசலப்பு இருக்குமென்றே நினைக்கிறேன். மக்கள் ராஜா கேட்டுக்கொண்டும் அவ்வப்போது கொஞ்சம் சத்தம் போடவே செய்தனர். பியர் நிறைய புழங்கியது. நிறைய குழந்தைகள் தென்படவில்லை, நன்றி.

ஆர்கெஸ்ட்ரா – (ஏனோ எஸ்பிபி ஆர்செஸ்ட்ரா என்கிறார்) – நினைவு சரியெனில் இரண்டு முறை தான் நிறுத்தப்பட்டார்கள். மற்றபடி நல்ல உழைப்பு.

பாடகர்கள் – எஸ்பிபி லலிதபிரியகமலம் தவிர மற்ற எல்லாப் பாடல்களையும் வெளுத்து வாங்கினார். சமீபகாலமாக ஏற்படிருக்கிற தொய்வு இங்கே அதிகம் தென்படவில்லை. சித்ராவும் அவரும் நிகழ்ச்சியின் delight. எஸ்பிபி மனோ கார்த்திக் யுவன் என எல்லோரும் அங்கங்கே ஏதேதோ பேச சித்ரா பாடுவது மட்டுமே. ‘ஏன் பேசவே மாட்டேங்கிற? ராஜாகிட்ட பாடின எக்பீரியன்ஸ் சொல்லு’ என எஸ்பிபி வம்பிழுக்க சித்ரா சம்பிரதாய வார்தைகள் சொல்ல ‘அது என்ன இது என்ன’ கிட்டதட்ட ராகிங் நடந்தது. (’என்னோட கேரியர்லயே..’ ‘கேரியரா அது என்ன டிஃபன் கேரியரா?). இருவரையும் அந்த நிகழ்ச்சியில் பார்த்தது உண்மையில் புல்லரிப்ஸ். மனோ எத்தனை MC செய்ய முயன்றாலும் ராஜா விடாது தடுத்தார். என்ன கேள்வி மனோ கேட்டாலும் ‘சரி சரி பாட்டு பாடலாம் வா’ என கலாய்த்தார். ‘இந்த மாதிரி பாட்டெல்லாம் நீங்க’ என மனோ நா தழதழுத்தாலும் ‘நிறுத்து நிறுத்து நீ ஊதவே வேணாம்’ தொனியில் தடா. மற்ற இளம் பாடகர்கள் அனைவரும் சுகமாகப் பாடினார்கள் – குறிப்பாக ப்ரியா ஹிமேஷ்.

பாடல்கள் தேர்வு – ராஜாவின் oeuvreஇல் இருந்து பாடல்கள் தேர்ந்தெடுப்பது ராஜாவாகவே இருந்தாலும் கடினம் தான். ஆக அதில் விமர்சனம் செய்து ஒன்றும் ஆவதில்லை. (மக்கள் ‘அந்தப் பாட்டு வேணும் இந்தப் பாட்டு வேணும்’ என குரல் கொடுக்க ராஜா இரண்டு முறை பொறுமையாக ‘சில பாடல்கள் எடுத்து prepare பண்ணியிருக்கோம். அதத் தான் பாடறோம்’ என்று விளக்கியும் ‘கண்ணே கலைமானே’ என்று ஒரு கூவல் எழுந்தால் அதற்கு ‘கத்தியவன் என கண்டேன் உனை நானே’ என பாடிக் கலாய்த்தார். பின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாக ‘நான் கம்போஸ் பண்ணின பாட்டத்தானே உங்களாக கேக்கமுடியும். நான் கம்போஸ் பண்ணாத பாட்டு (மனசுக்குள்) ஆயிரம் இருக்கு, அதெல்லாம் என்ன பண்ண, கேக்க முடியுமா?’ என்ற கேட்டார். அவர் சொன்னதின் உண்மையை சுருக்கென உணர புரிந்தது. இசையைப் பற்றிய ராஜாவின் philosophy புரிய நமக்கு ரொம்ப நாளாகும் போல.

கடைசியாக ராஜா. ராஜா கான்ஸர்ட்களை எத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்கிறார் என்பது புரிந்தது. ‘நிறைய தப்பு பண்றோம் கான்ஸர்ட்ல. அது உங்களுக்குத் தெரியறது இல்ல. ஆனா என்னால தாங்க முடியறதில்ல. அதான் கான்ஸர்ட்ஸ் பண்ண இஷ்டமில்ல’ என்றார். தவறுகள் இருந்தால் உடனே மறுபடி வாசிக்கை வைக்கிறார். பாடும் போது அத்தனை சின்சியாரிட்டி. என்னவோ, சிறு குழந்தைகள் தங்கள் பணியில் கொள்கிற கவனம் போல தோன்றியது. (குறிப்பாக ஜனனி ஜனனியில்). அவ்வப்போது சுற்றி இருப்பவர்களை சதாய்ப்பதெல்லாம் சூப்பர். (கடைசியாக மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடகியை அறிமுகப்படுத்திவிட்டு ‘என்னம்மா உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்களா இல்லையா’?) எஸ்பிபியுடன் நல்ல நட்பு. ஸ்கூட்டரில் சுற்றிய கதைகள் சொன்னார். எஸ்பிபி ஏராளமான பாராட்டுகளை பொழிந்துகொண்டே இருந்தார். (’இன்னும் குறைந்தபட்சம் நூறு வருஷத்துக்காவது இந்த மாதிரி ஒரு கம்போஸர் எங்கயும் வர மாட்டார்”). ஒரு கட்டத்தில் எஸ்பிபியை முதல் முறையாக ‘அவன்’ என்று குறிப்பிடுவதாக ராஜா சொன்னார்.

Meta referenceகளை சரியாகக் கையாளுகிறார். ‘தாய் குழந்தைக்கு தருவது போல’ போன்ற பிரயோகங்கள் இருந்தன. ரசிகர்களுக்காக பாட்டெழுதி வருகிறார். இதெல்லாம் old style என்றாலும் நேர்மையாக இருக்கிறது. பாடுகிற பாடலில் சரியான வரிகளில் சரியான செய்திகளை சேர்ப்பிக்கிறார். மேடையேறியதும் அரங்கம் முழுக்க ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ‘என்ன இவங்க முகத்தையெல்லாம் பாக்கலனா எப்படி?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொரு செக்‌ஷனாக விளக்கை ஒளிரச் செய்து நேராக மனசுக்குள் டார்ச் அடிக்கிறார். இசையை நடத்திச் செல்கையில் அவர் உடல்மொழி பிரமிப்பானது. ‘அதிக நேரம் கிடைக்கல ரிஹர்சலுக்கு. தப்பு இருந்தா பொறுத்துக்குங்க’ என்று சொல்கிறார். சத்தம் போடாம பாட்டக் கேளுங்க என்கிறார். வெறும் இசைவழி மட்டும் பேசுகிறார். நமக்கிருக்கும் சோகங்களை அங்கீகரிக்கிறார்.

ராஜாவிடம் மிகமிக பிடித்த விஷயம் – தன் ரசிகர்களிடன் தனிக்கிருக்கிற authorityயை முழுதாக புரிந்துகொண்டிருப்பது; அதை grantedஆக எடுத்துக்கொள்வது. அதையெல்லாம் நாம் அவருக்கு விளக்கிச் சொல்லி புரியவைக்கவேண்டுமானால் ஆகுமா என்ன? ‘என் இசை உனக்கு இன்றியமையாதது’ என்பதை அவர் அறிவது தான் எனது பணியை மிகச் சுலபமாக்குகிறது. அதை சொல்லிகொண்டிருக்கவோ கேட்டுக்கொண்டிருக்கவோ நேரமில்லை; துவங்கினாலும் முடிக்க நேரமில்லை. புதிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை ஆனால் உரையாடல் தொடர்ந்திருக்கிறது என்பதான புரிதல்.

கடைசி கட்டத்தில் ஏகக்களேபரம். மாபெரும் அபிமானத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாமல் திணற வேண்டியதாயிருக்கிறது. அன்பை சரியாகக் கொண்டு சேர்த்தாயிற்றா என்று கவலையெல்லாம் எழுகிறது. மெல்ல மெல்ல அது கூட்டம் முழுக்க பரவுகிறது. ராஜா அந்தக் கணத்தை சரியாகக் கணிக்கிறார். ‘எல்லாம் எனக்குத் தெரியும், பாட்டக் கேட்டுட்டே இரு எப்பவும் போல’ என்று சுலபமாகச் சொல்லி வைக்கிறார். மறுபடி இதெல்லாம் நிகழுமா என்று தெரியாத நிலையில் எதையும் யோசிக்காமல் இசையை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் அதையும் சரியாகச் சொல்லிவிடுகிறார். தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு புது வரிகளாக ‘உன் வாழ்வில் சில நொடிகள் / என் வாழ்வில் சில நொடிகள் / என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடி தான்’ என்று பாடி வைக்கிறார். (அதைப் பாடுகையில் நம்மையும் அவரையும் காட்டிக்கொள்கிற விரலில் அத்தனை அழுத்தம்). மறுபடி தென்பாண்டிச் சீமையிலேயே அறுந்த குரலில் முழுதாகப் பாடுகிறார். இரண்டு நிமிடங்களில் பாடல் முடிந்தால் நிகழ்ச்சி முடிந்து விடும். ஆர்கெஸ்ட்ரா அமைதியாயிருக்க வெறும் கைதட்டல்கள் மட்டும் பாடலை பின்தொடருகிறது. பாடல் முடிந்ததும் விடை கொடுக்க சரியான வழி தெரியாமல் எல்லோரும் கத்தித் தீர்க்கிறார்கள். ராஜா நின்று அனைவருக்கும் தலைக்கு மேல் கை கூப்பி நன்றி சொல்லி கையசைத்து ஒரு சுற்று அப்படியாக முடிகிறது. அமைதி வந்ததும் துண்டை எடுத்து போட்டுக்கொள்கிறார். புத்தகத்தை மூடிவைக்கிறார். யாரும் நகர்வதாயில்லை. யாரோ திடீரென கூட்டத்திலிருந்து ராஜாவென அழைக்க பத்திக்கொண்டது போல மறுபது கூட்டம் மொத்தம் அலறுகிறது. துண்டை மறுபடி கீழே வைத்துவிட்டு மைக் ஸ்டாண்டை விட்டு விலகி பொறுமையாக நடந்து முன்னே வந்து குனிந்து தரையை தொட்டு வணக்கம் வைக்கிறார். அதிர்ச்சியா கோபமா வருத்தமா  என்னவென்று புரியாமல் மறுபடி கூட்டம் அலற கத்தி போல கிழிக்கிறது சத்தம். இன்னுமொரு அலை கைதட்டல்களும் ராஜாவின் கையசைப்புகளும் வணக்கங்களும் மக்களின் கூக்குரல்களும் அடங்கித் தீர்ந்ததும் எல்லோருமாகக் கலைகிறோம்.

Written by sirumazai

பிப்ரவரி 25, 2013 at 5:19 முப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,