சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

பயணிகளின் கவனத்திற்கு

with 10 comments


முன்னறிவிப்புகள் ஏதுமின்றி திடீரென்று வரிசையாக வெள்ளிக்கிழமைகளின் மாலைகளில் விமானப் பயணங்கள் அமைந்து விட்டிருந்தன. காலையில் கண் விழித்துக் குளித்து முடித்து அவசரமாக அலமாரியில் முன்னும் பின்னுமாக தேடும் கையில் கிடைக்கும் சட்டை போல ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு நிறம், விதம். அழுத்தமான சிறுகதையை ஒவ்வொரு வாரமும் தனியே தேடிச் செல்வதைப் போல. மிகச்சிறிய வட்டத்தினுள் இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் தொடர்ச்சியாக சந்திக்க நேர்ந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை இலக்கில்லாத உரையாடல்களினால் எங்களது வார இறுதியின் நேரங்களை ஒன்றாக நிரப்பிக்கொண்டிருந்தோம். ஒரு திருமணமோ, பிரிவோ, தோல்வியோ, மரணமோ, மாற்றமோ – வரிசையான நிகழ்வுகளின் மூலம் எல்லோருமாக அடுத்த கட்டத்திற்கு ஒரே சமயத்தில் நகர்கிறோம் – ஒரு இருக்கை காலியானதும் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அனைவரும் எழுந்து மற்றொரு இருக்கை நகர்ந்து அமர்ந்து காத்திருப்பதைப் போல. வெள்ளிக்கிழமைகளில் ததும்பும் உற்சாகத்தை பத்திரமாகவும் அவசரமாகவும் உள்ளங்கைகளில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு என்ன செய்வது என்று விழிப்பதே எனக்குப் பழகியிருந்தது. இந்த மாற்றத்தினுள் அடங்காத என் வெள்ளிக்கிழமைகளை வியாழன் இரவுகளிலேயே பெட்டியினுள் பெரும் பிரயத்தனத்துடன் திணிக்கத் துவங்கியிருந்தேன். புதன்கிழமைகளிலேயே சலவை. கழுவாமல் மாலை அவசரமாக எறியப்படும் மதிவு உணவுப் பாத்திரத்தை திங்கட்கிழமை காலை திறக்க பயந்து வெள்ளிக்கிழமை மதிய உணவு உணவகங்களில். எந்த தாமதத்தையும் அனுமதிக்கக் கூடாதென சீக்கிரமே எழுந்து வீட்டைவிட்டு வெளியேறி வெட்ட வெட்ட எழத்துடிக்கும் அலுவலை எதிர்கொள்ளுதல். பொதுவாக மூன்று மணியிலிருந்தே இருப்பு கொள்ளாமல் தவிப்பது. தவறியும் ஏதும் அலுவலக சந்திப்பிற்கு வார்த்தையையும் தலையையும் தராமல் இருப்பது. வார்த்தைகளை எடுத்து கொடுத்தும் முடிக்க உதவியும் விரைவாக உரையாடல்களை கடக்க நினைப்பது. விமானம் புறப்படும் நேரம், நிலையம் சென்று அடையும் பயண நேரம், அதற்கு டாக்ஸி, அதற்கு முன்பாக அத்தனை அலுவலக சந்திப்புகளையும் மாற்றுதல், போகும் வழியில் மழை, அல்லது பனி, சில நாட்களில் எதற்கெனத் தெரியாமல் வெயில்.

இத்தனை பரபரப்புடன் நிலையத்தை அடைந்து இன்னும் இன்னும் ஏராளமானோருடன் கூட்டத்தில் சேர்கையில் என்னுடைய அவசரம் மட்டும் லேசாக துருத்திக்கொண்டிருக்கிறது. நீல நிறச் சுவரில் ஓரிடத்தில் மட்டும் இரண்டு முறை இழுத்ததால் சற்றே அடர்ந்த நீலம் போல. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில் பயணித்து பழகிய மக்களின் இடையே என்னுடைய பெட்டியின் கால் சக்கரங்களின் அவசரம், காலணிகளை பாதுகாப்புச் சோதைனைகளுக்குக் கழற்றி பின் மாற்றும் தீவிரம், விமான அறிவிப்புகளை எதிர்நோக்குதல், தாமதத்தை எதிர்கொள்ளுதல் என அனைத்தும் தனித்து தெரிகிறது. நேரே நிமிர்ந்து அனைவரும் விமானத்தில் ஏற வரிசையாக நிற்கையில் நான் மட்டும் தலையை சாய்த்து முன்னே பார்ப்பது போல. தாமதங்கள், வானிலை, பயணத்தின் மறுமுனையில் காத்திருக்கும் காதல், வரவிருக்கும் திங்கட்கிழமை என்பதைச் சுற்றிய சம்பிரதாய உரையாடல்களின் ஊடே மிதமான அவசரத்துடன் அனைவரும் கடந்து செல்கின்றனர். நான் மட்டும் கொஞ்சம் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கிறேன் – நிச்சயமாக அந்தப் பக்கம் எனக்காக காத்திருப்பது காதலியே என்று சில முதியவர்கள் அடிக்கோடிடுவதோ, சிறிய குடும்பத்தினர் ஒன்றாக என்னைப் பார்த்து பளீரென்று புன்னகைப்பதோ. விடுமுறை பயணங்களுக்கென எப்போதேனும் விமானத்தில் பிரமிப்புடனும் கவனத்துடனும் பயணம் செய்து பழகியிருந்த எனக்கு அந்த மூன்று மாதங்களில் வரிசையாக பயணங்கள் மேற்கொள்ளத் துவங்கி மெல்ல மெல்ல ஊஞ்சலின் வேகத்தை மற்றவர்களின் வேகத்திற்கு இணையாக குறைப்பதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சம் முன்சென்றும் பின்தங்கியும் அலைகிறேன். பயணத்திற்கான காரணம் மட்டும் ஒரு ரகசியம் போல மனதில் படபடவென துடிக்க சரியான இடத்தில் சரியான அளவில் பாவனைகள் புன்னகைகள் உரையாடல்கள் என பயில்கிறேன். கூட்டங்களில் தனித்திருப்பதை எப்போதும் நாடிக்கொண்டிருப்பவனுக்கு மற்றுமொரு அபாரமான வழி.

ஒரு நாள் விமானம் தாமதமானதாக அறிவிப்பு. அலைபேசி இன்னும் சில நிமிடங்களில் அணைந்துவிடக்கூடும். மின் இணைப்புடன் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. எல்லோரும் கன்னத்தில் ஒரு கையும் அலைபேசியில் ஒரு கையும் கவிழ்ந்த தலையுமாக அமர்ந்திருக்கிறார்கள். சிலர் தலை குப்புற தூங்குகிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பப் போகும் விமானங்களின் தளங்கள் வரிசையாக இருக்க, எங்கும் மக்கள் மக்கள். அவர்களை விட்டு விலகி நடக்க நடக்க பின்னரவில் கிளம்பும் விமானங்களின் தளங்கள் மிகச் சொற்ப மக்களுடன் இன்னும் பரபரப்பு தொற்றிக்கொள்ளாமல் திறந்திருக்கின்றன. மின் இணைப்புடன் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை ஒன்றில் ஓரமாக ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கிறாள். அதனுடனான மேஜையில் கவிழ்த்து வைக்கப்பட்ட அவளின் அலைபேசி. என்னுடைய அலைபேசியையும் இணைத்து விட்டு மேஜையில் அதை தலைகுப்புற கிடத்தி விட்டு இருக்கையின் இந்தக் கோடியில் அமர்கிறேன். இருவருக்கும் இருக்கும் அலுப்பு எந்த வார்தையினாலும் தாண்டி விடமுடியாதபடி எங்களுக்கிடையே இருக்கும் இருக்கையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் பொது பாவனைகளை கடந்து அந்த அலுப்பில் அவளுடன் இணைந்ததைப் போல உணர்கிறேன். அவ்வப்போது ஒரு யோசனை மங்கிவிடாமல் தூண்ட வேண்டி ஒரு மிடறு தேநீரை அருந்துகிறாள். எங்களுக்கு எதிரே விமான ஓடுதளம் மெல்ல ஊர்ந்து அரை வட்டம் இட்டுத் திரும்பி வேகம் பிடித்து ஓடுகிறது. வரிசையாக ஒன்றன்பின் விமானங்கள் காத்திருக்கின்றன. பலமாக மழை. அலைபேசி அமைதியாக அதிர்ந்து திரும்பும் ஒலி கேட்டு குனிந்து என்னுடைய அலைபேசியை பார்த்தவன், என்னுடையதல்ல என்பதை உணர்ந்து சட்டென திரும்பி அவளுடைய அலைபேசியை பார்க்கிறேன். பார்த்திருக்கக் கூடாதென்று உணர்ந்து அதை சரிபடுத்தி விடலாம் என்பதைப் போல எதிர்பக்கம் முழுதாக தலையை திருப்பிக்கொள்கிறேன். விடாமல் சொட்டும் மழைத்துளி போல அவளுடைய அலைபேசி சரியான இடைவேளைகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. அவள் அதை திருப்பி எடுத்து பார்ப்பதாகத் தெரியவில்லை. பள்ளி மாணவர்கள் வரிசையில் காத்திருந்து நீளம் தாண்டுவது போல எதிரே விமானங்கள் சத்தமின்றி ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து எழுந்து பறக்கின்றன. ஒவ்வொன்றின் சிறிய ஜன்னல்களிலும் யாரோ. அவர்களின் வெள்ளிக்கிழமை மாலைகள். திரும்பும் திங்கட்கிழமையின் காலைகள். அவ்வப்போது என்னுடைய அலைபேசியும் மேஜையில் அதிர்கிறது. அதிரும் பொழுது அதைச் சுற்றி மெல்லிய செவ்வகமாக ஒளி. அவளைப் போல நானும் அதை புறக்கணிக்கிறேன். சில நேரத்திற்கு தகவல்களும் மழையும் தரையிறங்க விமானங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நீண்ட பயணங்களில் முதல் விமானம் எப்போதும் கொஞ்சம் அலுப்பிலும் களைப்பிலுமே கழிந்துவிடுகிறது. மீண்டும் காத்திருந்து இரண்டாவது விமானத்தில் புறப்பட்ட பின்னரே உண்மையில் அந்த வாரத்திற்கும் வார இறுதிக்கும் இடையேயான காலத்திலும் வெளியிலும் பயணிக்க முடிகிறது. விமானம் தரையை விட்டெழும் நொடியில் உண்மையில் உடலும் மனதும் லேசாவதை உணர முடிகிறது. அதற்கு ஏதுவாக விமானத்தின் உள்ளே மட்டுப்படுத்தப்பட்ட ஒளி. இன்னும் கனிவான புன்னகைகள். ரகசியமாக புத்தகங்கள். முழுமையான தூக்கம். வழக்கம் போல நான் ஜன்னலுக்கு அருகே அமர்ந்து அரை நிலவின் வெளிச்சத்தில் நதிகளையும் ஏரிகளையும் வெறும் காடுகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உடனே எழுத வேண்டும் போலத் தோன்றுகிறது. அத்தனை உயரத்தில் அத்தனை ஆழத்தில் எந்தக் காட்சியையும் எந்த நினைவையும் அதற்கு வெளியே இருந்து கவனித்து எழுதி விட முடியும் என்பதைப் போல. எனக்குப் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் வைன் அருந்துகிறார். அவருக்கே முன்னே அமர்ந்திருக்கும் அவரின் துணை அவ்வப்போது ஏதேனும் திரும்பி சன்னமாக கேட்கிறாள். ஒரு கட்டத்தில் ஏதும் சொல்லாமல் திடீரென அவளின் வலது கை தலைக்கு மேலே இருக்கையை தாண்டி நீள, ஒரு நொடி தாமதிக்காமல் இவர் அதை தன் கையில் எடுத்து அலுப்புக்கு இதமாக அழுத்தத் துவங்குகிறார். பின் கையை இறுகப் பற்றுகிறார். கைகளை விலகிக் கொள்ளும் போது சில நொடிகளுக்கு முத்தத்தை விட மிக மெல்லிய ஸ்பரிசம். அவர்களின் காதலை தனித்து விடுவது போல ஏனோ என் தலைக்கு மேல் இருக்கும் விளக்கை அணைத்து விடுகிறேன். விமானம் எங்கோ ஒரு இடத்தில் மழைக்கு அருகே நெருங்குகிறது. தொலைவில் தொடர்ச்சியாக மின்னல்கள். கிளை போல் பிரிந்து படராமல் மேகங்களுக்கு மேலே வானில் வெறும் வெளிச்சமாக ஒரு குறைந்த ஒளி தரும் விளக்கைப் போல எரிந்து அணைகிறது. பளீரென வெள்ளையாக இல்லாமல் லேசாக செந்நிறம். ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்குமாக, எதற்குப் பின்னோ மறைந்துகொண்டு பூடகமாக. அடுத்து எப்பொழுது எங்கே ஒளிரும் என்று தெரியாமல் பார்த்தபடி இருக்கையில் அவரும் ஜன்னலின் வழியே பார்க்கத் துவங்குவதை உணர்கிறேன். நான் கொஞ்சம் பின்னகர்ந்து அவரின் பார்வைக்கு வழி விடுகிறேன். விசித்திரமான திரைக் காட்சி போல விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல்கள். ஒரே ஒரு இடத்தில் அவர் அதை ரசித்து ஒற்றை வார்த்தையில் ஏதோ சொல்ல அவரைப் பார்த்து புன்னகைக்கிறேன். என்ன வார்தையை சொன்னார் என்பது தேவைப்படவில்லை. தரையிறங்கும் வரை பேசிக்கொள்ளாமல் இருவரும் மின்னல்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சில மாதங்களுக்குப் பிறகு அனைத்து வெள்ளிக்கிழமை பயணங்களும் பனிக்காலமும் முடிந்த பிறகு அடர்ந்த மரம் ஒன்றின் கீழே கண்ணுக்குத் தெரியாத விழுதுகளின் அடியில் ஒரு துளி தீப்பிடித்தது போல அங்குமிங்குமாக மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம். தரையிலிருந்து ஒரே உயரத்தில் ஏராளமாக சிதறியிருந்தன. மாடியிலிருந்து பார்க்கும் தூரத்தில் என்னவென்று புலப்படவில்லை. மாலை மங்க மங்க வெளிச்சம் பிரகாசமாகத் துவங்கியிருந்தது. இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று அறை நண்பனிடம் சொல்லிவிட்டு கீழே சென்று மரத்திற்கு அடியில் கொஞ்சம் யோசனையுடன் நடக்கிறேன். எதையேனும் அறுத்து மின்மினிப் பூச்சிகள் கொட்டிவிடுமோ என்பதைப் போல. நெருங்கிப் பார்த்ததும் தரையில் வளர்ந்திருக்கும் புற்களின் நுனியில் வீற்றிருக்கின்றன பூச்சிகள் என்றறிகிறேன். ரகசியம் அறிந்த நிம்மதியுடன் வீடு திரும்பி மாடியிருலிருந்து இன்னும் ஒரே ஒரு முறை மின்மினிப்பூச்சிகளை கூர்ந்து கவனிக்க அவை மேஜையில் ஒளிர்ந்து அதிர்ந்த தகவல்களையும் தூரத்தில் கண்ட மின்னல்களையும் நினைவிலிருந்து எடுத்து கண்ணுக்கு தெரியாத இணைப்பில் ஒரு நொடியில் இணைக்கிறது.

[..]

தோன்றிய எண்ணத்தை தோன்றிய கணத்தில் ஏதேனுமொரு குளத்தில் எறிந்து சலனத்தை ஏற்படுத்த விழையும் பழக்கத்தை விட முயற்சிக்கிறேன். சில சமயங்களில் அலைபேசியை எடுத்த பின்பு ஒரு கணம் யோசித்து அதை மீண்டும் கீழே வைக்கிறேன். சில சமயங்களில் சமூக தளங்களில் அல்லது அரட்டைப் பெட்டியில் எழுதிய பின் அழிக்கிறேன். எறியாத கற்கள் ஒவ்வொன்றும் எனக்குள்ளே உள்ளே மெதுவாக எரிகல்லைப் போல விழுவதை பார்க்கவும் உணரவும் மிகப்பிடிக்கிறது. நால்வர் இருக்கும் அரட்டைக் குழுவில் அன்று கை மீறி கோபத்தில் சில கற்கள் விழுந்து விட்டன. எறிந்த கையுடன் அலைபேசியை அணைக்குமாறு விமானத்தின் அறிவிப்பைக் கேட்டு அலைபேசியை அணைத்தும் ஆயிற்று. அடுத்த நொடியில் ஜன்னலில் முழு மாலை நிலா உதிப்பதை காண்கிறேன். அத்தனை தொடர்புகளையும் உலகோடு கீழே விட்டு விமானம் மேகங்களுக்கு அப்பால் விரைகிறது. அசையாத கடலுக்கடியே கிடக்கும் உலகினுள் முழுக முடியாமல் திடுமென ததும்பி மேலேறியது போல நிலா. வெவ்வேறு வானங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கியது போல அடர் நீலம் அதற்கு மேல் இளஞ்சிவப்பு அதற்கு மேல் வெளிர் நீலமுமாய் வானமும் அதனூடே நகரும் நிலவும். ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுப்பதுடன் அதை புறக்கணிக்க முயல்கிறேன். இன்னமும் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதது, கோபம் வெளிக்கொண்டு வந்துவிடுகிற நெருக்கமும் அதன் இருப்பை உணர்ந்து ஏதோ அச்சமும் எல்லாமுமாக குழப்பமும். எதிர்புறத்தில் எல்லோரும் ஜன்னலை இழுத்து மூடியிருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரமும் விடாமல் உடன் வரப்போகிற நிலா கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை ஈர்க்கிறது. எதனுடனும் தொடர்பில்லாமல் கையில் அலைபேசி லேசாக இருக்கிறது. கண்கள் அதுவரை அறிந்த அளவுகளில் பொருந்தாமல் கீழே கட்டிடங்கள், வயல்கள், ஏரிகள். ஒரு கல்லை எறிந்தால் கீழே சென்றடைய வெகு நேரமாகும். தொடர்ச்சியான பயணங்களில் ஒவ்வொரு முறை அந்த உயரத்தை அடைந்ததும் உணர்கிற ஆழத்தை மற்ற நாட்களிலும் அடைய முயன்று கொண்டிருக்கிறேன் – இணையமில்லாமல் இரு வாரங்கள், அலைபேசியில்லாமல் ஒரு நடை, புத்தகங்களுடன் மட்டுமே ஒரு வார இறுதி. அந்த கணங்களின் துல்லியத்தை இந்த விமானப் பயணங்களிலேயே கண்டறிந்து பெற்றதை உணர்கிறேன். அதற்குப் பின் நிலவு மிக எளிதாக என்னை ஆட்கொள்கிறது.

இருபது நிமிடங்களில் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு. எல்லோரும் அசைய முடியுமா என்று பரிசோதிப்பது போல ஒரு முறை அசைந்து அடங்குகிறார்கள். விமானம் அது வரை பயணித்த திசைக்கு நேரெதிரே மெல்லத் திரும்பியபடி கீழிறங்குகிறது. ஜன்னலை விட்டு கரை ஒதுங்கும் நிலவை தலை திருப்பி பார்த்திருக்கையில் ஒரு நொடி வெறுமைக்குப் பின் மிகப் பிரகாசமாக சூரிய அஸ்தமனம். சில நொடிகளுக்கு ஏதும் புரியவில்லை. விமானம் நேராகி கீழிறங்க இறங்க காட்சி தெளிவாகிறது. வீட்டிலே மாடியிலிருந்து கட்டிடங்களுக்கு அப்பால் காண முயன்ற சூரிய அஸ்தமனத்திற்கும் முழு நிலவிற்கும் இடையே அது வரையில் ஒரு நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறேன் என்பது அடங்காத ஆச்சரியமாக விழிகளில் விரிகிறது. அத்தனை உயரம், அந்த திசைகள், அந்த உதயமும் அஸ்தமனமும் அதன் பின்னான எளிய உண்மையும் தரையிறங்கும் வரை மூச்சை கொஞ்சம் நிறுத்தியே வைக்கிறது. அலைபேசியை மீண்டும் உயிர்பித்து அந்த பிரமிப்பை கல்லெறிய நினைத்து உடனே கைவிடுகிறேன். அரட்டைக் குழுவில் ஏராளமான குறுந்தகவல்கள் – அங்கும் வானிலை சட்டென மாறியிருக்கிறது. அங்கும் இந்த பிரமிப்பை கல்லெறியாமல் ஒரு வருடத்திற்குப் பின்னர் இங்கே இந்த குளத்தில் எறிகிறேன்.

[..]

மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக குடி புகுந்த பொழுது நினைத்தால் இரண்டு மணி நேரத்தில் காரிலோ பேருந்திலோ நியுயார்க்கை வார இறுதிகளில் அடைய முடிந்தது. அடைந்ததும் ஒவ்வொரு முறையும் கால்கள் கொள்ளும் உற்சாகத்தை உணர வேண்டியே மீண்டும் மீண்டும் பயணித்திருக்கிறேன். தனியே ஊர்சுற்றுதல், நண்பர்களை சந்தித்தல், அந்நியர்களை சந்தித்தல் என நியுயார்க்குடன் நெருங்கிப் பழகியிருந்தும் கணங்களையும் காலத்தையும் உற்று கவனிப்பவனுக்கு மூன்று வருடங்களில் மூன்று சந்திப்புகள் மட்டும் அழுத்தந்திருத்தமாக மனதில் பதிந்திருக்கிறது. மூன்று சந்திப்புகளிலும் நீண்ட இரவுகள், நடந்தே கடந்த சாலைகள், இசையும் புகையும் கசியும் விடுதிகள், அதிகாலையைத் தொடத் தொட உரையாடல்களில் ஏற்படும் நீண்ட மௌனங்கள், மழுங்கும் வார்தைகளின் முனைகள், கண்களில் ஏராளமான தூக்கம் என கழிந்தன. முதல் சந்திப்பில் நாங்கள் மூவரும் அறிமுகமாகி அதன் பின்னர் வெறும் மின்னஞ்சல்களில் குறுந்தகவல்களில் மின்னரட்டைகளில் மிகவும் நெருங்கியிருந்தோம். நேரில் சந்திக்காமலே இரவெல்லாம் நீளும் அரட்டையில் பயங்கள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் என மிக எளிதாக ஒவ்வொருவரின் அந்தரங்கத்தினுள் நிழல்களாக அனுமதிக்கப்பட்டோம். விருப்பம் போல நடந்து செல்லும் மலைப்பாதைகளில் சில சமயங்களில் பாதி தூரம் வந்தபிறகு வந்த பாதையை கவனிப்பது போல மூவரும் அவ்விடத்தை அடைந்து விட்டிருந்தோம். வெகு அரிதாக தொலைபேசியில் உரையாடி விரல்களில் விரைவாக வளரும் வார்த்தைகளால் மட்டுமே கொண்டு நட்பு பலமாகியிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நியுயார்க்கில் சந்தித்த பொழுது இரண்டாம் முறை நேரில் சந்திக்கும் நண்பர்களும் ஒன்றரை வருடத்தில் அடைந்த நெருக்கமும் ஒன்றில் ஒன்று அடங்காமலும் ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொள்ளாமல் வேடிக்கையாக சங்கோஜப்பட்டோம். மிகத் துல்லியமாக உணர்ந்த கணம் அது – மூவரும் அத்தனை நேரம் நீருக்குள்ளே அமிழ்ந்தபடி மங்கலான ஒளியிலும் அலையிலும் வினோதமாகக் கலையும் ஒவ்வொருவரின் பிம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென நீருக்கு மேலே தலையை தூக்கிச் சிலுப்பிக்கொண்டு பிடித்திருந்த மூச்சை பலமாக விட்டு ஒருவரை ஒருவர் பார்ப்பது போல. சம்பிரதாயமான உரையாடல்களின் ஊடே கண்களைப் பார்த்தோ குரல்களை செருமிக்கொண்டோ ஒரு கேலியாகக் கூடவோ அந்த நெருக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கொண்டாட்டத்திற்காக சேர்ந்திருந்தால் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கலாம் – இன்னமும் குழப்பங்களுடனும் கவலைகளுடனுமே இருக்கிற மூவரும் நெருக்கத்தை வெளிப்படுத்திக்கொள்வது இன்னும் அவசியமாகவும் இன்னும் கடினமாகவும் இருந்தது. நியுயார்க் நகரின் பிரமாண்ட இருப்பே எங்களின் கவனங்களை கொஞ்சம் கலைத்தது. அதன் பெரும் கட்டிடங்களை ஆயிரமாயிரம் விளக்குகளை அண்ணாந்து பார்த்தபடி நீரில் விழுந்து அசையும் அதன் பிம்பங்களை அவ்வப்போது கவனிப்பது போல அந்த நெருக்கத்தை அவ்வப்போது கவனிப்பதோடு விட்டுவைத்தோம். மீண்டும் ஒரு நீண்ட இரவுக்குப் பின் அதிகாலை தூங்கச் சென்று மதியம் எழுந்து நியுயார்க்கை விட்டு ஒவ்வொருவராகக் கிளம்பத் துவங்கினோம்.

மூன்றாவது சந்திப்பு எனக்கும் நகரத்திற்கும் மட்டுமானது. பணி நிமித்தமாக இடம் மாறுவதால் அதுவே நியுயார்க்குடன் கடைசி சந்திப்பாக இருக்கலாம். அதிகாலையில் இந்தியாவிலிருந்து வரும் விமானத்திற்காக காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் வார நாளில் ஆள் அரவமில்லாத நியுயார்க்கில் தனியாக சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். அந்த இரண்டு சந்திப்புகளில் சென்ற இடங்களை தனியே நடந்து கடக்கும் பொழுது அந்த சந்திப்புகளின் நினைவுகளை ஆழமாக பதித்துக்கொள்ளவே வந்தது போல நின்றும் அமர்ந்தும் நடந்தும் நேரத்தை கடந்தேன். ஒரே ஒரு புத்தகம் எழுத நேர்ந்தால், ஒரே ஒன்று மட்டும் எனில், அது நிச்சயம் இதைப் பற்றி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் ஒரு முறை விமானத்தில் நியுயார்க்கை கடந்து செல்லுதல் மிக மிக அவசியம்.

[..]

பின்குறிப்பு #1 – பதிவின் இடையே படத்தை வைக்க ஏனோ விருப்பமில்லை. விமானத்திலிருந்து எடுத்த படம் இங்கே.

பின்குறிப்பு #2 – இந்தப் பதிவு லாஹிரியின் இந்தப் புத்தகத்திற்கும், ராஜாவின் இந்தப் பாடலுக்கும்.

Written by Aravindan

ஏப்ரல் 13, 2014 இல் 10:55 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

10 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. Excellent!

  // நீல நிறச் சுவரில் ஓரிடத்தில் மட்டும் இரண்டு முறை இழுத்ததால் சற்றே அடர்ந்த நீலம் போல…என அனைத்தும் தனித்து தெரிகிறது// Flattu!

  //இன்னமும் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதது, கோபம் வெளிக்கொண்டு வந்துவிடுகிற நெருக்கமும் அதன் இருப்பை உணர்ந்து ஏதோ அச்சமும் எல்லாமுமாக குழப்பமும். எதிர்புறத்தில் எல்லோரும் ஜன்னலை இழுத்து மூடியிருக்கிறார்கள். // Oho!

  Btw, Gonna read ‘The Lowland’ again!:)

  Aishwarya Govindarajan

  ஏப்ரல் 14, 2014 at 1:54 பிப

 2. Aishwarya – விடாப்பிடியா ஆதரவு தருவதற்கு நன்றி:-)

  புத்தகம் சுமாராத்தான் பிடிச்சுது. Though the well written parts were lovely.

  Aravindan

  ஏப்ரல் 16, 2014 at 10:43 பிப

  • விட்டுவிட்டு தான் ஆதரவு தந்துட்டு இருக்கோம்!😛

   lovely but என்னால பாதி பக்கத்துக்கு மேல தாண்ட முடியல..
   second attempt-லையும்

   Aishwarya Govindarajan

   ஏப்ரல் 20, 2014 at 2:41 முப

 3. அரவிந்த், எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. சில பகுதிகள் அ.முத்துலிங்கத்தின் கட்டுரையை வாசிக்கும் உணர்வை ஏற்படுகிறது.

  Think serious about writing more

  Kaarthik Arul

  ஏப்ரல் 18, 2014 at 1:53 பிப

  • //அ.முத்துலிங்கத்தின் கட்டுரையை வாசிக்கும் உணர்வு//
   seriously kaarthik!
   particularly நியூயார்க் பத்தின அந்த last stanz.அதுவும் //..என்று நினைக்கிறேன்//-னு பட்டும் படாத மாதிரியா confirmation இல்லாத assurance தர இடத்துல..

   Aishwarya Govindarajan

   ஏப்ரல் 20, 2014 at 2:55 முப

   • இந்த விஷயம் முத்த்துலிங்கம் சாருக்கு தெரியாம பாத்துக்குங்க ரெண்டு பேரும்.

    Aravindan

    ஏப்ரல் 21, 2014 at 8:09 பிப

 4. கார்த்திக் – நன்றி. கொஞ்ச நாளா கொஞ்சம் சீரியசாவே யோசிச்சிட்டிருக்கேன்😉

  Aravindan

  ஏப்ரல் 18, 2014 at 7:29 பிப

 5. ஒரு எழுத்தைப் படித்ததும் அதற்கான நியாமான எம்பதியோடு ஆழாமல், ஒரு வித டிஸ்டார்ஷனுடன் தன்வயப்படுத்தி வாசித்துவிட்டு, தனக்குத் தோன்றுவதை முந்திரிக்கொட்டையாக எழுதும் மரியாதைகெட்டத்தனத்தை விட்டபாடில்லை. அதனால் ஒரு மன்னிப்பு
  மீண்டும் படித்து பயணிக்கலாம் தான். ஆனால் தன் பயணங்களைப் பற்றியே ஒன்றையும் எழுதாமல், எழுதி இருந்தால் மனப்பதிவாகி இருக்கக்கூடிய சாத்தியங்களை விடுத்தவன் என்கிற முறையில் இதை எவ்வளவு யோக்கியமாக வாசித்துவிடப் போகிறேன்.

  கடந்த நவம்பர் துவங்கி பல பயணங்கள். ஸினிஸிஸத்தை மூர்க்கமாக தவிர்த்து ( இணையப்பழக்கத்தையும் என்று தனியாக சொல்லவேண்டியதில்லை [பின்ன underbelly காண்பிக்கக் கூடியா இடமா அது {அதுவும் எனது underbelly (something even cleverer)}]) தேடல்சார் பயணம், நெடுவிடுப்பு, நுணுக்கமான திட்டமிடலைத் தவிர்த்து பயணிக்க எத்தனித்ததற்கும், நிகழ்ந்தவற்றுக்குமான இடைவெளி, அதிலும் எப்படியோ வந்துவிடுகிற to-make-the-most-of-time முனைப்பு… இவற்றில் எதையும் எழுதவில்லை.

  ‘கவிக்கணங்கள் தோணத்தோண குறிப்பெடுத்துக் குள்வீரா?’ என்ற கேள்விக்கு You can’t take notes in a love affair என்று கூறிய Robert Frostஐ துணைக்கு இழுத்துக்கொண்டு சோம்பலை மறைக்கிறேன்.

  ஆனால் இதை ‘சோம்பல்’ என்று வகைப்படுத்துவதே சோம்பல் தான்.
  பயணத்தில் பார்த்த இடங்கள் என்று ட்விட்டர் துணுக்குகள் போல (அழகிய படங்களுடன் கூடிய) எழுத்து மற்றுமொறு travelogue-ஆக அமையும். எல்லோருக்கும் எனக் காணக்கிடைக்கும் உலகில், இல்லாத ஒரு பிரத்யேகத்தை என் எழுத்தின் மூலம் நிறுவ முயலும் அசட்டுத்தனமாகவே வந்து விழும், என்ற ஆர்வமின்மை அது. அதை விட ‘தேடல்’ என்பது – உங்கள் சொல்றகளைக் கடன் வாங்கினால் – ’கல்லெறியாமல்’ இருக்கும்தோறும் தீவிரமும், நிறைவும் அளிக்கத்தக்கது’ , என்று நம்ப விழைந்தேன்.

  தாயகம் திரும்பியதும் என் எண்ணங்களை/செயல்களை எல்லாம் மிகையாக மதித்துக்கொண்டுவிட்ட லஜ்ஜையை ஏற்படுத்தும்படி நடந்த சூழல்சார் நிகழ்வுகள் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் சங்கிலியின் (உங்கள் மனதில் எழ வேண்டிய படிமம் பிணைச்சங்கிலி அன்று, தொடர்ச்சங்கிலி) சின்னஞ்சிறு கண்ணியாக உணர்ந்து marching on. அதன்பிறகு தினசரித்தனத்தில் இருந்து விலகிய விளையாட்டை முடித்துக்கொண்டு இணங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன. அதன் நடுவே அலுவல்சார் பயணம், மாறியது போல பிரமை ஏற்படுத்தி மீளும் பழக்காமான வழக்கங்கள், அதே அரட்டைகள், அதே பரிமாற்றங்கள், அதே கவலைகள், அதே கரிசனங்கள்…. என்று ’பயணத்தி’ன் சுவடே இல்லை எனலாம்.

  ’பதிவாக்காமல் ஒன்றை கடக்கிறோம், நிச்சயம் அவற்றின் நுணுக்கங்களை மறப்போம்’ என்றெல்லாம் தெரிகிறது. ’ஆனால் ஒருவேளை எழுதியிருந்தால், அதற்காக அவற்றில் ஆழ்ந்திருந்தால், அந்தக்கணத்திற்கான முக்கியத்துவம் inherent என்று கொள்வதற்கில்லை, வலிந்து செய்த அந்த லயிப்பில்/ எழுத்தில் கொணரப்பட்டது’ என்றும் தோன்றுகிறது. அதனை வைத்துக் கொண்டு ’என் தன்மை இதுதான்’ என்ற புனைந்து, நம்பி தீர்மானித்து, பிறர் புரிதலுக்கு ஏதுவாக சுருக்கி …என்ற சர்வசாத்தியங்களை முடக்கிவிட்டேன். இனி எழுத முடியாதபடி அதன்மேல் நினைவுகளை அடுக்கித்தள்ளிவிடும் அன்றாடம்.

  இவ்வளவு uncynically earnesஸ்டாக எழுதிவிட்டதால், அறிவார்ந்த முத்தாய்ப்பு வைத்து ஒரு விலகலை சாத்தியப்படுத்திக்கொள்கிறேன்: பூங்கன்றனார் அன்றே சொன்னார்; கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று: நீர்வழிப் படூஉம் புனை போல்

  dagalti (@dagalti)

  ஏப்ரல் 23, 2014 at 8:26 முப

  • >>ஒரு வித டிஸ்டார்ஷனுடன் தன்வயப்படுத்தி வாசித்துவிட்டு, தனக்குத் தோன்றுவதை முந்திரிக்கொட்டையாக >>

   எழுதறதே அப்படித் தானே. எழுத நினச்சதும் எழுதி வெக்கறதும். அதுல ஒரு வகை டிஸ்டார்ஷனும்.

   >>எழுதி இருந்தால் மனப்பதிவாகி இருக்கக்கூடிய சாத்தியங்களை விடுத்தவன் என்கிற முறையில் இதை எவ்வளவு யோக்கியமாக வாசித்துவிடப் போகிறேன்.>>

   :>

   Robert Frost நல்லாவே சொல்லியிருக்கிருக்கார்.

   >>பதிவாக்காமல் ஒன்றை கடக்கிறோம், நிச்சயம் அவற்றின் நுணுக்கங்களை மறப்போம்’ என்றெல்லாம் தெரிகிறது. ’ஆனால் ஒருவேளை எழுதியிருந்தால், அதற்காக அவற்றில் ஆழ்ந்திருந்தால், அந்தக்கணத்திற்கான முக்கியத்துவம் inherent என்று கொள்வதற்கில்லை, வலிந்து செய்த அந்த லயிப்பில்/ எழுத்தில் கொணரப்பட்டது’ என்றும் தோன்றுகிறது. அதனை வைத்துக் கொண்டு ’என் தன்மை இதுதான்’ என்ற புனைந்து, நம்பி தீர்மானித்து, பிறர் புரிதலுக்கு ஏதுவாக சுருக்கி …என்ற சர்வசாத்தியங்களை முடக்கிவிட்டேன். இனி எழுத முடியாதபடி அதன்மேல் நினைவுகளை அடுக்கித்தள்ளிவிடும் அன்றாடம்.>>

   பயமா இருக்கே. நான் இதை அதிகம் யோசிக்காமல் அப்படியே மறந்திருக்கிறேன். (அல்லது மறந்தது போல இருக்கிறேன்). எப்போதுமே நினைவில் கொஞ்சம் ஆறப் போட்டு (ஊற ப் போட்டு?) எழுதுவது வழக்கம். நீங்கள் சொல்கிற >>நிச்சயம் அவற்றின் நுணுக்கங்களை மறப்போம்>> பிரச்சினை இருந்தாலும், எழுத அமர்ந்த கணத்தில் ஐ விரும்பும் மனசும், நினைவில் கொஞ்சம் கலைந்தே இருக்கிற நிகழ்வும், பேனாவும் சேர்த்துக் கொண்டு எதையாவது எழுதவே முடிகிறது.

   Aravindan

   ஏப்ரல் 23, 2014 at 3:41 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 40 other followers

%d bloggers like this: