சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

ஒரு துளி பரிச்சயம்

with 18 comments


ஒரு தேர்விற்கு தயாராவதற்கு கையெழுத்தை மட்டும் கொஞ்சம் சரிபார்த்து தயாரானால் போதுமென்பது விசித்திரமாக இருந்தது. காலை எழுந்தவுடன் சில காகிதங்களில் வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழில் கொஞ்சம் எழுதிப் பார்த்துவிட்டு தேர்வு துவங்க பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக கிளம்பி வீட்டிலிருந்து இரண்டு நிமிட நடையில் இருக்கும் கல்லூரிக்குள் நுழைகிறேன். அது பெண்கள் கல்லூரியென்று அப்போதே உறைக்கிறது – கிளம்பும் முன் சவரம் செய்திருக்கலாம் என்ன உடை அணிகிறோம் என்று யோசித்திருக்கலாம் என்று இன்னமும் தோன்றுகிற வயது – ஒரு நொடி யோசித்து அதைத் தாண்டி எங்களுக்கென தனியே ஒதுக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு செல்கிறேன். தேர்வு அறை கிட்டதட்ட முழுக்க நிரம்பியிருந்தது – சுமார் இருபது மேஜைகள், ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு நாற்காலிகள், ஒரு கண்காணிப்பாளர், எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த ஒரு மின்விசிறி. கண்காணிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவர் என்னை ஒரு மேஜைக்கு அழைத்துச் செல்கிறார். முன்னமே வந்து தயாராக அங்கு அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையங்கியால் முக வியர்வையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் நாற்காலியை நகர்த்தி அமர்கிற ஒலி கேட்டு அவள் நானிருந்த திசையில் நிமிர்ந்தாள் – அவளால் பார்க்க முடியாது. தேர்வு துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அவள் சொல்லச் சொல்ல நான் அந்த விடைகளை சரியாக எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையை அவளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கூடவே என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லவும் எத்தனித்தவன் தேர்வு அறையில் அத்தனை விடைகளையும் ஒரே நொடியில் மறந்தவன் போல அதிர்கிறேன். அவளால் என்னை பார்க்க முடியாது என்பதை புதிதாக உணர்ந்தவன் போல என் குரலை என்னுடைய மொத்த அடையாளமாக மாற்ற முயல்கையில் ஏனோ தடுமாறுகிறேன். பரிதாபமோ ஆர்பாட்டமோ அலட்சியமோ சலிப்போ அவசரமோ தெரியாத ஒரு குரலை என்னுள் இருந்து எடுக்க முயற்சிக்கிறேன். எளிய மளிகைக்கடையில் இருக்கும் எடைகாட்டியின் மேல் காணாத பாரத்தை வைத்தால் அதன் முள் தடதடவென அதிர்வது போல தன் எடை தெரியாமல் திணறுகிறது குரல்.

பாதியில் துவங்குபவன் போல என்னுடைய பெயரை மட்டும் சொல்லி வைக்கிறேன். அவள் தன்னுடைய பெயரைச் சொல்லிவிட்டு தேர்வெழுத உதவி செய்வதற்கு நன்றி செல்கிறாள். அதிக கவனத்துடன் தேர்தெடுக்காமல் மிகவும் சாதாரண வார்தைகளையே சொல்கிறாள். பதிலுக்கு எதையும் சொல்லத் தெரியாத தவிப்பை கூட அவளிடம் கொண்டு சேர்க்கத் தெரியாமல் கேள்வித்தாளுக்கு காத்திருக்கிறேன். தேர்வு துவங்கியதும் ஒரு முறை கேள்வித்தாளை சுருக்கமாக படித்துக்காட்டுகிறேன். முதல் கேள்வியைச் சொன்னதும் சிறிது யோசித்து விடை தெரியுமென்று சொல்கிறாள். இரண்டு நிமிடங்கள் விடையை மனதிற்குள் தயாரித்துவிட்டு சொல்லத் துவங்குகிறாள். நிறைய யோசனை இடைவெளிகள் கொண்ட வார்த்தைகளை அவள் மனதிலும் நான் காகிதத்திலும் சேகரிக்க சேகரிக்க எங்கோ சட்டென வார்த்தைச் சரம் அறுந்து அனைத்தும் கொட்டுகிறது. தயங்கித்தயங்கி எழுதியதை ஒரு முறை படித்துக்காட்டச் சொல்கிறாள். சில வாக்கியங்கள் எங்கோ துவக்கி எங்கோ முடிகின்றன. இலக்கண பிழைகள். விடையை யோசிக்க நிறைய தாமதம். ஒவ்வொன்றையும் உறுத்தாமல் சுட்டிக்காட்டும் சரியான குரல் தெரியாமல் முதல் பத்து நிமிடங்களிலேயே துவண்டு போகிறேன். வெப்பமும் குழப்பமுமாக கவனம் சிதறுகிறது. வீணடிப்பதற்கு இது என்னுடைய தேர்வல்ல என்பதை எனக்கே ஒரு முறை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன். அவள் நினைப்பதை எழுதுவது தான் சரி – பிழைகள் இருந்தாலும் இல்லையென்றாலும். முதல் முறை இந்தப் பணியை செய்ய முயன்ற என் மேல் எனக்கே கோபம் வருகிறது. அவள் சொல்வதில் இருக்கும் பிழைகளை புறக்கணித்து வெறும் சொற்களை மட்டும் கேட்டு கேட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் நிறையும் வரை எதையும் யோசிக்க மறுக்கிறேன். அடுத்த பக்கம் தொடங்குகிற சமயத்தில் அவள் வார்தைகளின் கயிறை எப்படியோ தேடி இறுக்கப் பிடித்துவிடுகிறாள். சன்னமான குரல் வழியே அவள் விடுவிக்கிற ஒவ்வொரு சொல்லையும் நான் காகிதத்தில் எழுதும் முன் அதை எனக்கு நானே சொல்லிக்கொள்கிற என் குரல் நீருக்குள்ளிருந்து மேலெழும்பி ஒலிப்பதைப் போல ஒரு கட்டத்தில் எனக்கு கேட்கிறது. மின்விசிறியின் சத்தத்தையும அவளின் குரலையும் மீறி ஆழ்ந்து அதை கவனிக்கிறேன் – எந்த பாவங்களும் அற்ற அந்த வார்தையின் குரலாக மட்டும் அது இருக்கிறது. இருளில் பின் தொடர்பவன் போல கவனித்து தொடர்ந்து ஒரு கட்டத்தில் அமைதியை அடைகிறேன். சொற்கள் அவளின் குரலில் என்னுடைய குரலில் என்னுடைய எழுத்தில் என நெருக்கமாக பயணிக்கத் துவங்குகின்றன. இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு ஒரு முறை இன்னும் மறக்காத அவளின் முகத்தையும் அவளின் விழிகளையும் பார்க்கிறேன். அடுத்த வார்தையை யோசித்துக்கொண்டிருக்கும் அவளை கொஞ்சம் துரிதப்படுத்தவோ, சொல்வதில் பிழைகள் இருக்கக்கூடிய சாத்தியங்களை சுட்டிக்காட்டவோ, உறுத்தாமல் உபத்திரமில்லாமல் ஒரு திருத்தமோ உதவியோ இனி செய்ய முடியும் என்று தோன்றுகிறது. அவளை பார்த்தபடி காத்திருந்து விட்டு அவள் உச்சரிப்பு பிழையுடன் சொன்ன ஒரு சொல்லை எழுதும் பொழுது உச்சரிப்பு பிழைகளில்லாத என்னுடைய குரல் அதன் கீழே ஒரு புன்னகையை அடிகோடிடுகிறது.

[..]

எத்தனை நீண்ட பயணமாக இருந்தாலும் இரவு உறங்குவதற்கு வீட்டிற்கு திரும்பிவிட அம்மா எப்போதுமே முயல்வார். அது இயலாத நாட்களில் உறவினர்களின் வீட்டிலோ நண்பர்களின் இல்லத்திலோ விடுதியிலோ உண்டும் தங்கவும் நேரிடும் இரவுகளில் அவர் உடல் மொழியில் ஏற்படும் கூச்சமும் தயக்கமும் பதினான்கு வயதில் எனக்கு சலிப்பைத் தந்தது. என்ன ஏதென்று தெரியாமல் நம்மையும் மீறி நிகழ்ந்துவிடக்கூடிய புரிதல் ஒன்றினால் அந்த சலிப்பு ஒரு கட்டத்தில் ஒரு துளி அதிக கவனமாக மாறியது. அவருக்கு சரியான உணவு, பேச்சுத் துணை, தலையனை கிடைக்கிறதாவென சரிபார்க்கிற கவனம். சரிபார்த்துவிட்டு உறங்கச் சென்று இருவரும் அரைகுறையாகத் தூங்கி எழுந்து வீட்டை நோக்கி புறப்படுவோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு நாள் பயணமாக ஒரு மலைப்பிரதேசத்திற்கு நானும் அவருமாக செல்லத் திட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு காணப்போகும் இடங்கள், கோவில்களைப் பற்றிய உரையாடல்களில் நாங்கள் தங்கப் போகும் இடத்தைப் பற்றிய குறிப்புகளை கவனமாக நழுவவிட்டுக்கொண்டிருந்தேன். மலையின் மேலே ஆங்காங்கே இருக்கும் பங்களாக்களை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்களுடன் தங்கி விருந்தோம்பல் பெற்று காசு கொடுத்து திரும்புவதே உசிதமும் திட்டமும். அதை முழுதும் புரிந்துகொண்ட பின்னர் சரியென அவர் சம்மதித்தாலும் ஓய்வு பெற்ற பிறகிலிருந்து எனக்கு எப்போதும் எதற்கும் கிடைக்கும் சம்மதங்களுக்கு இடையே அது கொஞ்சம் சந்தேகத்தையே தந்தது. நாள் முழுக்க பயணித்து இரவில் வெகு தாமதமாக அங்கு சென்று சேர்ந்ததால் முதல் நாள் அந்த வீட்டிலிருந்தவர்களின் அறிமுகம் சரியாக கிடைக்கவில்லை. ஒரு நடுத்தர வயது பெண்மணி கீழே தனியே தங்கியிருந்து மேலே மூன்று அறைகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அதிகாலையிலேயே கிளம்பி தாமதமாக வந்து சேர்ந்ததால் சில காபிகள் மட்டும் மேலே அறைக்கு வந்தன. மூன்றாம் நாள் மாலையே நாங்கள் வீடு திரும்பியதால் இரவு உண்பதற்கு கீழே வருமாறு கட்டாய அழைப்பு. எங்கள் மொத்த பயணத்தின் வரைபடத்தில் ஒரு முக்கிய புள்ளியை குறிப்பவன் போல உணர்கிறேன். பளிச்சென தயாராகி அம்மா புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார், தண்ணீரில் ஒரு துளி எண்ணெய் விழுந்து கலங்குவதைப் போல ஒரு தயக்கத்துடன்.

அழைப்பு வந்ததும் இருவரும் ஹாலின் வெளிச்சமும் நிசப்தமும் ஒரு துண்டென விழுந்து கிடக்கும் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்கிறோம். முழுக்க முழுக்க பூச்சிகளின் சத்தங்கள் நிறைகிற இரவு. உள்ளே நுழைந்ததும் முதன் முறையாக அந்த வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு விருந்தினரை பார்க்கிறோம் – நடுவயது ஆண் – தோற்றம் முழுக்க பணத்தின் பொலிவு, உடன் ஒரு இளம் அமெரிக்கப் பெண் – இருவரும் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். காட்சியின் விசித்திரம் அழுத்தமாக என் மனதில் பதிகிறது. அடுத்த நகரில் தங்கி வங்கியில் பணிபுரியும் வீட்டின் மருமகள் வந்திருந்து பரபரவென இயங்கிக்கொண்டிருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை கவனிக்குமாறு சொல்லிவிட்டு நானும் அம்மாவும் அங்கிருந்த பிரம்பு நாற்காலிகளில் அமர்கிறோம். வீட்டின் உரிமையாளர் உடைந்த ஆங்கிலத்தில் வரவேற்று தாமதத்திற்கு வருந்தி சூழ்நிலையின் சங்கடத்தை கூட்டியும் குறைத்தும் கலைக்கிறார். பத்து நிமிடங்களில் உண்டு முடித்தவர்கள் எழு நாங்களும் அவர்களும் இடம் மாறுகிறோம். அவர் எதையோ சொன்னதும் ஹாலின் வேறொரு விளக்கு ஏற்றப்பட்டு அறையின் வெளிச்சம் மாறி மங்குகிறது. அவர் அந்த அமெரிக்கப் பெண்ணை பார்த்தபடி சன்னமான குரலில் ஏதோ ஒரு கதையை சொல்லத் துவங்குகிறார். எனக்கு நேராக அமர்ந்திருக்கும் அம்மாவையும் அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அவர்களையும் பார்த்தும் பார்க்காமலுமாக பிரமாதமான உணவை உண்ணத் துவங்குகிறேன். வார்தைகள் புரியாமல் ஒரு துளி பரிச்சயமும் ஒரு துளி காதலும் ஒரு துளி மோகமும் கொண்ட குரல் மட்டும் ரகசியம் போல கேட்கிறது. பாத்திரங்களின் ஒலிகள், ஆள் நடமாடும் சத்தங்கள், சாப்பிடுவதால் ஏற்படும் சின்னஞ்சிறு ஓசைகள் எல்லாம் மெல்ல அந்த குரலுக்குப் பின்னால் பதுங்கி ஒளிகின்றன. அந்தக் குரலில் தெரியும் நெருக்கத்தினால் அவர்கள் இருவரும் கைகோர்த்துக்கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருளில் திரையரங்கில் பார்க்கிற காட்சியைப் போல இருக்கிறது. அம்மா எதற்கோ பிரகாசமாக என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அது அந்தக் குரலுக்கும் காட்சிக்குமாக இருக்கும் என்று அனுமானம். அம்மா மெல்லிய குரலில் அந்த மருமகளிடம் உணவு பிரமாதமாக இருப்பதாகச் சொன்னதும் எனக்கு ஏனோ கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. உள்ளிருந்து இன்னொரு பீங்கான் பாத்திரம் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அதிலிருந்து எழும் மணம் தூண்ட அதன் மூடியை திறந்து ஒரு சிறிய தேக்கரண்டியினால் அதைக் கொஞ்சம் கிளறுகிறேன். உள்ளே அந்தக் காட்சியின் நிறத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு சிறிய கரப்பான்பூச்சியைக் கண்டு அதிர்கிறேன்.

அறையின் அமைதி பேரிரைச்சலைப் போல கேட்க அதன் ஒற்றைக் கயிற்றின் மேலேறி நடப்பவன் போல ஒன்றும் புரியாமல் திகைக்கிறேன். கை தானாக அந்த பாத்திரத்தை மூடி கொண்டு அப்படியே மூடிவைக்கிறது. அந்த இரு பெண்களும் அடுப்படி வாசலில் நின்று சம்பிரதாய கேள்விகளை கேட்க முயற்சிக்க அம்மா உற்சாகமாக பதில்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். எனக்கு அந்த உரையாடலில் இருக்கும் சிற்சில மௌனங்கள் ஓவெனக் கேட்கிறது. நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதை கவனித்து அம்மா என்னவென்று கேட்கிறார். அந்த வீட்டின் மருமகள் அவசரமாக வந்து என்னவென்று கவனிக்கிறார். முகத்தில் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கிறேன் என்று உணர்ந்தவனாய் சுதாரித்து ஏதுமில்லை என்று சொல்லி நம்பவைக்கிறேன். கொஞ்சம் பிசகினால் எல்லாம் உடைந்து தூள் தூளாகி விடும் என்கிற பயம் உணர்ந்து மெல்ல மெல்ல அமைதியடைகிறேன். கொஞ்சமும் மாறாமல் அவரின் குரல் மீண்டும் கேட்கத் துவங்குகிறது – அது வரை அவர் பேச்சை நிறுத்தியிருந்தாரா இல்லை எனக்கு கேட்கவில்லையா என்று தெரியவில்லை. முடியாத கதை போல நீண்டுக்கொண்டே இருக்கிற பேச்சின் பிண்ணனியில் எல்லோரும் தத்தமது பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தப் பெண்ணை அழைத்து உருளைக்கிழங்கு வேண்டாம் என்றும் அம்மாவிற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் சொல்ல அவள் உடனே பதற்றமும் கலக்கமும் கொண்டு குழும்புகிறாள். மீண்டும் அதைச் சொல்லி அம்மாவும் கொஞ்சம் வியப்புடன் ஆமோதிக்க அவள் சந்தேகத்துடனே சரியென தலையசைத்து அதை உள்ளே எடுத்துச் செல்கிறாள். எனக்கு போதுமென மிச்ச உணவை அப்படியே வைக்கிறேன். என்னையும் தட்டையும் ஒரு முறை பார்த்துவிட்டு அம்மா ஏதும் சொல்லாமல் சில நொடிகளுக்குப் பின்னர் தயிர் மட்டும் சாப்பிடறேன் என்று ஏனோ என்னிடம் சொல்கிறார். விளையாட்டாக யோசிப்பதைப் போல கொஞ்சம் யோசித்து விட்டு சரி என்று மெல்ல தலை அசைக்கிறேன்.

[..]

துணைக்கும் அறிமுகத்திற்கும் யாருமில்லாத நகரில் துவங்கிய முதல் மாலைப்பொழுதில் என்னுடைய கோப்புகள், உடைகள் மற்றும் புத்தகங்கள் இருந்த விடுதி அறையை இழுத்துப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். விடுதியின் வரவேற்பறையில் இருந்தவளுக்கும் வீதியில் எதிர்பட்டவர்களும் வழங்கிய புன்னகை ஒன்று மட்டுமே அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த நகரில் என்னுடைய அடையாளம். நாட்டின் எல்லையை தாண்டி வந்தமையால் அலைபேசியால் எந்த இடையூறும் இல்லை. . இங்கிங்கு செல்ல வேண்டுமென்றோ அதை புகைப்படம் எடுக்கவென ஒரு நல்ல இடம் தேடவேண்டுமென்றோ அதன் பெயர்களை நினைவில் வைக்கவோ அவசியமில்லை. கைவசம் அலைபேசி இல்லாததால் திசை காட்ட யாருமில்லை திசை தவறவும் வாய்ப்பில்லை. என்னை எனக்கே நினைவுபடுத்தும் விருப்பமான பாடல்கள் என் காதுகளுக்கு மட்டும் ஒலிக்க அதன் மெல்லிய திரைக்கு அப்பால் நிகந்துகொண்டிருந்த நகரத்தின் இரைச்சலின் ஊடே நடக்கத் துவங்குகிறேன். என்ன செய்யலாம் – ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு தீவிர வாசக அடையாளத்தைப் பெற்று அவ்வப்போது தலை நிமிர்ந்து உலகை ஒரு பார்வையில் அளக்கலாம். ஒரு குறிப்பேட்டில் (இதை) எழுத வேண்டி ஒரு தேநீர் கோப்பையுடன் சாலையோர ஜன்னல் இருக்கையில் அமர்ந்து யோசிக்கலாம். வெறும் காற்றை வேண்டுபவனாக பூங்காவில் அமரலாம். நேரம் பார்க்க வேண்டாம். பேருந்து டாக்ஸி வேண்டாம். சில சமயங்களில் வெறும் சாத்தியங்கள் மட்டுமே போதும், செயல்கள் தேவை அல்ல. ஒரு விரல் கொண்டு தொட்டுப் பார்க்கிற, ஒரு துளி மட்டும் சுவைத்துப் பார்க்கிற சாத்தியங்கள். அவற்றை அசை போட்டபடி பாடல்களுக்கு ஏற்ப நின்று நடந்து திரும்பி இசையே திசையாகிறது. பழங்கட்டிடங்கள், நினைவிடங்கள், சிலைகள் என திரும்பிய பக்கமெங்கும் காண்பவைகளை என்ன ஏதென்று வினவாமல் என்னைப் போலவே பெயரற்றவைகளாக இருக்க விட்டு கடந்து செல்கிறேன். ஒரு கட்டத்தில் ஒரு நீண்ட சாலையும் உடனோடும் ஆறும் அதற்கு அப்பால் சரிந்து கொண்டிருக்கும் சூரியனும் என்பதாக முடியும் நகரின் மேற்கு எல்லையை அடைகிறேன். அதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நகரின் மீது விழும் பிரம்மாண்ட மாலைப்பொழுது நீள நீள நிழல்களாக விழுந்து ஊர்ந்துத் தேய்ந்து மறையும் வரை நடக்கிறேன். காட்சிகள், காட்சிகள், காட்சிகள் – ஏதும் அற்ற வெற்றுக் காட்சிகள் – இசையும் எண்ணங்களும் நிறைந்ததும் வடிவம் பெறும் காட்சிகளை குறித்துக்கொண்டு உடனுக்குடன் மறக்கிறேன். மிக மிகத் தாமதமாக சூரியன் மறைந்து மாலைக் காட்சி நிறைவடைந்ததும் விடுதியை நோக்கிச் செல்லும் வழியை கண்டறியத் தொடங்குகிறேன். மதிய உணவிற்கு அடங்கிய பசி இன்னும் எழுவில்லை என்பதால் உண்ண வேண்டிய கட்டாயமில்லை. அறைக்குச் சென்று அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கி வேறு யாரோவாகக் கூட எழுந்து விடலாம்.

நடக்கத் துவங்கியவன் ஏனோ தென்படும் முதல் இந்திய உணவகத்தினுள்ளே நுழைந்து விடுகிறேன். மிகவும் சோம்பலாகவும் எளிமையாகவும் இருந்தது அந்த உணவு விடுதி. என்னைத் தவிர யாருமில்லை. கிட்டத்தட்ட இணைந்தேவிட்ட இரு புருவங்களால் என்னை வரவேற்ற இளம்பெண்ணிடம் ஏதோ ஒரு உணவை தேர்ந்தெடுத்து சொல்கிறேன். . எனக்கென ஒரே ஒரு மேஜையினருகே ஒரு விளக்கு எரியவிடப்படுகிறது. பசியில்லாமல் எதற்கு இங்கு வந்தேன் என்பதைப் பற்றி யோசிக்காமல் அங்கிருந்த அறிவிப்புகளை பார்க்கிறேன். அந்த நகரில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக முஸ்லிம்களை இணைக்கிற தொழுகைகள், நிகழ்ச்சிகள் ஆகியற்றின் அறிவிப்புகள். சுவற்றில் ஆங்காங்கே சில அவசர ஓவியங்கள். வேறெங்கும் பார்த்திராத வகையில் வெளியே எல்லார் பார்வைக்குமாய் அணைத்துவைக்கப்பட்டிருக்கும் அகண்ட அடுப்பு. ஐந்தே நிமிடங்களில் தயாராகிவிடுமென மன்னிப்பைக் கோருபவள் போல சொல்கிறாள். இருக்கைக்கு வந்து அமர்ந்த பின் கவனத்தை கொஞ்சம் கலைக்க முற்பட்டு தோற்று பெருமூச்சுடன் உணர்கிறேன் – எதுவாக இருந்தாலும் இரவு உணவை உண்பது கைவிட முடியாத பழக்கம். எங்கிருந்தாலும் தேடித் தேடி கேட்டு உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்துகிற அம்மாவினால் வந்த பழக்கம். விசித்திரமாக, வந்தும் மறைந்தும் போன நெருக்கமான பலரும் அதையே செய்திருக்கிறார்கள். பல சமயங்களில் அந்த கட்டாயத்திற்காகவே உள்ளுக்குள் ரகசியமாக காத்திருந்திருக்கிறேன் என்பதை முதல் முறை கொஞ்சம் சந்தேகத்துடனே உணர்கிறேன். தொடர்பேயின்றி பலப்பல காட்சிகள் நினைவிற்கு வருகின்றன. எனக்குள் இல்லாத பசி மிகச்சுலபமாக என்னுடைய அடையாளத்தை உருவி எடுத்ததை தோற்றவன் போல ஒப்புக்கொள்வதில் சலிப்பேற்பட்டு அவ்வளவு நேரம் நடந்ததின் அலுப்பு தெரிகிறது.

ஆறேழு நிமிடங்களில் விடுதிக்குள் சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் வருகிறான். அந்தப் பெண்ணும் அவனும் சலாம் சொல்லிக்கொண்ட விதத்தில் முன்பே பரிச்சயமானவர்கள் என்று தோன்றுகிறது. விடுவிடுவென நடந்து எனக்கு குறுக்காக இருக்கும் மேஜையில் அவன் மூச்சை இழுத்துப் பிடித்தவன் போல மிக நேராக தன்னுடைய முதுகைக் காட்டியபடி அமர்கிறான். சில நொடிகளை மனதில் எண்ணிக் காத்திருந்தது போல சட்டென கணீரென்ற குரலில் தன்னுடைய தொழுகையை சொல்லத் துவங்குகிறான். என் விழிகள் தானாக சற்று சாய்ந்து வானோக்கிய அவனுடைய கைகளை பார்க்கிறது. அவன் சொல்லாமலே அந்தப் பெண் ஒரு சிறிய தட்டில் சில பழத்துண்டுகளை கொண்டு வந்து அவனுடைய மேஜையில் வைக்கிறாள். விடுதியின் அத்தனை விளக்குகளையும் எரிய விடுகிறாள். சன்னமாக முனகிக்கொண்டிருந்த இசையை நிறுத்துகிறாள். உள்ளிருந்து இன்னும் சிலர் விடுதியின் முகப்பிற்கு வந்து அடுப்பை மூட்டுகிறார்கள். சரசரவென சமையலறை சத்தங்கள். சூரியனின் நீண்ட அஸ்தமனம் முடியும் வரை பசியுடன் காத்திருந்த விரதத்தை முடிக்கிற பேரமைதி அவனுடைய குரலில் கூர்மையாக அங்கு அமர்ந்திருக்கும் எனக்கு மட்டுமாக எல்லா சத்தங்களையும் மீறி கேட்கிறது. அந்தப் பெண் என் உணவை என் மேஜையில் வைத்து விட்டு நகர்கிறாள். துளியும் பசியின்றி அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி கடவுளுக்கு அவன் சொல்லும் நீண்ட நன்றியை உன்னிப்பாக கேட்கிறேன். எங்கோ ஒரு கணத்தில் எதற்கோ என் கையெங்கும் சிலிர்க்கிறது. அதை மறைக்க வேண்டி அரைக்கை சட்டையை அனிச்சையாக கொஞ்சம் கீழிழுத்துக் கொள்கிறேன். அதற்கு மேல் உண்ண முடியாமல் உணவை வைத்து விட்டு அவனுடைய குரலை கேட்டபடி அமர்ந்திருக்கிறேன். வெளியே இருந்து இன்னும் மூவர் உள்ளே வந்து சலாம் வைத்துவிட்டு அந்தக் காட்சியில் அந்நியமாகத் தெரியும் எனக்கு ஒரு அழுத்தந்திருத்தமான புன்னகையைத் தருகிறார்கள். இன்னும் பலர் விரதத்தை முடிக்க உள்ளே வரத் துவங்குகிறார்கள். அவர்களுக்கு இடம் விட வேண்டி என்னுடைய உணவை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்று அதை வீட்டுக்கு எடுத்தச் செல்ல ஏதுவாகத் பெட்டியிலிட்டு தரச் சொல்கிறேன். முன்னதை விட பிரகாசமான புன்னகையுடன் அவசரமாகச் செய்து தருகிறாள். அதை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறும் முன் தற்செயலாக திரும்பி அங்கு அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரின் விழிகளைச் சந்திக்க அவர் எனக்கு மெல்ல தலையசைத்து விடை தருகிறார்.

[..]

இது – வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தளங்களில் சந்தித்து வெவ்வேறு வகைகளில் எனக்கு நெருக்கமான அவர்கள், வெவ்வேறு கணங்களில் ஏதோ நினைத்து காரணங்கள் இருந்தும் இல்லாமலும் தங்களின் குரலில் ஒவ்வொரு பாடலை பாடிப் பதிவு செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஒவ்வொரு முறை அதை கேட்கையிலும் ஏற்படுகிற வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும், அவர்களுக்கும் அவர்களின் குரல்களுக்கும்.

Written by Aravindan

ஓகஸ்ட் 6, 2013 இல் 4:58 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

18 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. lovely!

  //……அவள் உச்சரிப்பு பிழையுடன் சொன்ன ஒரு சொல்லை எழுதும் பொழுது உச்சரிப்பு பிழைகளில்லாத என்னுடைய குரல் அதன் கீழே ஒரு புன்னகையை அடிகோடிடுகிறது.//:)

  //..எழுதுவது தான் சரி – பிழைகள் இருந்தாலும் இல்லையென்றாலும்.//So we are ignoring the spell and wording errors here and there😀

  on a related note,is that college WCC by any chance?

  //..சில சமயங்களில் வெறும் சாத்தியங்கள் மட்டுமே போதும், செயல்கள் தேவை அல்ல. ஒரு விரல் கொண்டு தொட்டுப் பார்க்கிற, ஒரு துளி மட்டும் சுவைத்துப் பார்க்கிற சாத்தியங்கள்…//True!!

  //..பல சமயங்களில் அந்த கட்டாயத்திற்காகவே உள்ளுக்குள் ரகசியமாக காத்திருந்திருக்கிறேன் என்பதை முதல் முறை கொஞ்சம் சந்தேகத்துடனே உணர்கிறேன்..//
  Oho!

  //சூரியனின் நீண்ட அஸ்தமனம் முடியும் வரை பசியுடன் காத்திருந்த விரதத்தை முடிக்கிற பேரமைதி அவனுடைய குரலில் கூர்மையாக அங்கு அமர்ந்திருக்கும் எனக்கு மட்டுமாக எல்லா சத்தங்களையும் மீறி கேட்கிறது. அந்தப் பெண் என் உணவை என் மேஜையில் வைத்து விட்டு நகர்கிறாள். துளியும் பசியின்றி அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி கடவுளுக்கு அவன் சொல்லும் நீண்ட நன்றியை உன்னிப்பாக கேட்கிறேன். எங்கோ ஒரு கணத்தில் எதற்கோ என் கையெங்கும் சிலிர்க்கிறது. //I say , nothing is more a beauty than this ramzan.

  Aishwarya Govindarajan

  ஓகஸ்ட் 6, 2013 at 6:48 முப

 2. Biutiful post Aravind. Loved so many lines

  //எளிய மளிகைக்கடையில் இருக்கும் எடைகாட்டியின் மேல் காணாத பாரத்தை வைத்தால் அதன் முள் தடதடவென அதிர்வது போல தன் எடை தெரியாமல் திணறுகிறது குரல்// – Lovely

  //அவள் உச்சரிப்பு பிழையுடன் சொன்ன ஒரு சொல்லை எழுதும் பொழுது உச்சரிப்பு பிழைகளில்லாத என்னுடைய குரல் அதன் கீழே ஒரு புன்னகையை அடிகோடிடுகிறது//.

  //எனக்கு அந்த உரையாடலில் இருக்கும் சிற்சில மௌனங்கள் ஓவெனக் கேட்கிறது. // – Superb.

  BTW, the college is Meenakshi College & the hill station is Coorg ?

  //பல சமயங்களில் அந்த கட்டாயத்திற்காகவே உள்ளுக்குள் ரகசியமாக காத்திருந்திருக்கிறேன் என்பதை முதல் முறை கொஞ்சம் சந்தேகத்துடனே உணர்கிறேன்//

  //கிட்டத்தட்ட இணைந்தேவிட்ட இரு புருவங்களால் என்னை வரவேற்ற இளம்பெண்ணிடம் // – I could imagine a Muslim girl like mella thiRandhadhu kanavu Amala:-)

  And finally, thanks for the dedication:-)

  Kaarthik Arul

  ஓகஸ்ட் 7, 2013 at 3:07 பிப

 3. குரல்கள் வடித்த ஓவியம் கண்டு இரசித்தேன்

  //கையங்கியால்// — கைக்குட்டை?

  //அடுத்த பக்கம் தொடங்குகிற சமயத்தில் அவள் வார்தைகளின் கயிறை எப்படியோ தேடி இறுக்கப் பிடித்துவிடுகிறாள்// — “கோர்வை” -ன்றத இன்னும் கொஞ்சம் நளினமா சொல்லி இருக்கலாமோ?

  பறவைகளற்ற மாலையா? என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்:-)

  Arun Rajendran

  ஓகஸ்ட் 7, 2013 at 11:21 பிப

  • Arun – நன்றி. கைக்குட்டை தான், கொஞ்சம் வித்தியாசமா எதையாவது சொல்லலாம்னு:-)

   Aravindan

   நவம்பர் 11, 2013 at 1:17 முப

 4. மிக நேர்த்தியாக ஒரு சூழ்நிலை, இதற்கு மேல் இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது என்ற பாவனை, அற்புதமாய் கை வந்ததிருக்கிறது.

  ஐஸ்வர்யாவும் கார்த்தியும் வரி வரியாய் பாராட்டி விட்டார்கள்.வழி மொழிந்து அமர்கிறேன்:)

  உங்களுக்கும் அம்மாவிற்கும் அழகான ஒரு ஆசிரியன்-மாணவன் உறவு இருப்பதை கவனித்தீர்களா?. உரிமையின் காரணமாய் எல்லை மீறி எதுவும் செய்துவிடாமல், குட்டி குட்டியாய் சில விஷயங்களை செய்து விட்டு ஆசிரியனின் மெல்லிய அங்கீகாரத்திற்கு காத்திருக்கும் மாணவன் போல.

  தேர்வு எழுத உதவி, நானும் செய்ய வேண்டும் என நினைத்தது, ஆனா நம்ம கையெழுத்து அந்த அளவு இருக்காது என கை விட்டு விட்டேன்.

  Madhan Kumar (@meetmadhan)

  ஓகஸ்ட் 16, 2013 at 10:47 பிப

  • @Madhan, vAththiyAr puLLa makkunu solvAnga but ivardhAn vAththiyAramma puLLaiyAchchE😉

   Kaarthik Arul

   ஓகஸ்ட் 23, 2013 at 2:01 பிப

  • Madhan – நன்றி:-) ஆசிரியன் – மாணவன் உறவு என்பது ஓரளவிற்கு சரியே. இப்ப கொஞ்ச நாளா நான் தான் மீறிட்டிருக்கேன்.

   Aravindan

   நவம்பர் 11, 2013 at 1:18 முப

 5. வணக்கம் சகோதரரே..
  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்…
  தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
  அதற்கான சுட்டி இதோ….

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html

  நன்றி.

  நட்புடன்

  மனசு சே.குமார்

  சே.குமார்

  செப்ரெம்பர் 5, 2013 at 9:10 பிப

 6. வணக்கம்…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  திண்டுக்கல் தனபாலன்

  செப்ரெம்பர் 6, 2013 at 2:48 முப

 7. படிக்கும்போதே எழுதுபவரின் உணர்வு உள்ளுக்குள் இறங்குகிறது.
  நல்ல மேன்மையான எழுத்தாற்றல். வாழ்த்துகள்.

  pugazh

  செப்ரெம்பர் 15, 2013 at 4:20 முப

 8. உங்களது எந்த பதிவை வாசித்து முடிக்கும்தோறும் Nostalgia உணர்வை அடையாமல் முற்றுப்பெறுவதில்லை அரவிந்த். கல்லூரிக்காலத்தில் ‘Blind Reading’ படிக்க சனி ஞாயிறுகளில் சென்ற தருணங்களை எல்லாம் மீட்டுத் தந்துள்ளது இந்த பதிவு..

  ~ அவள் உச்சரிப்பு பிழையுடன் சொன்ன ஒரு சொல்லை எழுதும் பொழுது உச்சரிப்பு பிழைகளில்லாத என்னுடைய குரல் அதன் கீழே ஒரு புன்னகையை அடிகோடிடுகிறது

  ” கொஞ்சம் பிசகினால் எல்லாம் உடைந்து தூள் தூளாகி விடும் என்கிற பயம் உணர்ந்து மெல்ல மெல்ல அமைதியடைகிறேன்” – இது எனக்கு அத்தனை முக்கியமான வரியாக தெரிகிறது. வாழ்வின் முக்கியமான கணங்களில் வந்தே தீர்கிற ஒரு உணர்வு இது.

  Your writing has become more lyrical than before:)

  ~ காட்சிகள், காட்சிகள், காட்சிகள் – ஏதும் அற்ற வெற்றுக் காட்சிகள் – இசையும் எண்ணங்களும் நிறைந்ததும் வடிவம் பெறும் காட்சிகளை குறித்துக்கொண்டு உடனுக்குடன் மறக்கிறேன் – As photography is my passion, I could see everything as images these days.

  Great writing, Aravindan. இத்தனை வருஷங்களுக்கு அப்புறமும் நாம நேர்ல சந்திச்சு பேசலன்னு நெனைச்சா வருத்தமா தான் இருக்கு. ←இந்தியா வந்தா சொல்லுங்க, கண்டிப்பா சந்திக்கிறேன்:)

  silentstreams

  நவம்பர் 12, 2013 at 5:16 பிப

  • Karthickeyan Bangaru!

   silentstreams

   நவம்பர் 12, 2013 at 5:18 பிப

   • Gates,

    >> As photography is my passion, I could see everything as images these days>>

    naice:-)

    நன்றிகள் பல, Gates! சீக்கிரமா சந்திக்கலாம்:-)

    Aravindan

    நவம்பர் 25, 2013 at 8:56 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 40 other followers

%d bloggers like this: