சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

[சிறுகதை] விஸ்கி

with 17 comments


அபார்ட்மெண்ட் வளாகத்தையும் ரயில்நிலைய வளாகத்தையும் பிரிக்கிற இரண்டு ஆள் உயர வலைதடுப்பில் சாய்ந்தபடி தூரத்தில் அகி ஒரு தீக்குச்சி உயரத்தில் தெரிந்தாள். ஈரமும் உறுதியுமான பனி நிரம்பிய நடைபாதையில் என் கால்கள் கவனமும் வேகமும் கொண்டன. அகியை நெருங்க நெருங்க அவளின் கைகள் வலைத்தடுப்பை பற்றியிருக்கிற அழுத்தம் புலப்பட்டது. ஒரு காலை வணக்க புன்னகையை வழங்க சரியான சந்தர்ப்பத்தை கணித்தபடி நடந்து கொண்டே வலைதடுப்பின் கதவை அடைந்தேன். அகி என்னை பார்த்தபடி தீவிரமாக என்னைத் தாண்டி எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள். சாவி பூட்டில் பொருந்தாமல் குளிரில் நடுங்கியது. கதவை திறந்து அவளின் முன்னால் நின்றபடி ‘ஹாய்’ என்றேன். அகி புன்னகைத்துவிட்டு கைகள் இரண்டையும் முழங்கால் வரை நீள்கிற சாம்பல் நிற கம்பளி கோட்டின் பெரிய பாக்கெட்டுகளுக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘என்னாச்சு? ஏன் வெயிட் பண்றேன்னு சொன்னே’ என்றேன். ஏதுமில்லை என்று தலையசைத்த அகி சுற்றும் சுற்றும் பார்த்து காட்சியை உள்வாங்கியபடி தனக்குள்ளே ஏதோ வார்தைகளை தேடிக்கொண்டிருந்து விட்டு சட்டென ‘நான் ஷிவாவ லவ் பண்றேன்’ என்றாள். விழிகளை விரித்து பார்வையை கூராக்கி அவளை புதிதாக பார்த்தேன். ’ஐயாம் ஷ்யூர்’ என்று தொடர்ந்தவளின் அடுத்த சில வார்த்தைகள் வெறும் பனிப்புகையாக வெளியேறியது. அவ்வளவு தான் என்பது போல பார்த்தவளிடம் ஏதும் சொல்லாமல் ‘குட்’ என்று சொல்லி புன்னகைத்தேன். ‘வா’ என்பது போல ரயில் நிலையத்தை நோக்கி கை காட்ட, விடுபட்டவள் போல நடக்கத் துவங்கினாள். தினசரி அதே பெஞ்ச்சில் அதே ஆர்வத்துடனும் அதே புன்னகையுடன் என்னையும் அகியையும் பார்க்கிற அதே அமெரிக்கர் புன்னகையுடன் நிமிர்ந்து சட்டென புன்னகை வடிந்து என்ன என்பதைப் போல பார்த்தார். இருவரும் வேகமாக நடந்து மெல்ல மெல்ல ஊர்ந்து மேலேறும் நடைபாதையில் கூட்டத்தை திறமையாக கிழித்திக்கொண்டு முன்னேறினோம். உள்ளே குறுகிய எஸ்கலேட்டரில் மக்கள் நடந்தும் நின்றும் இறங்கிக்கொண்டிருந்தார்கள். நான் முன்னே சென்று கொஞ்சம் வழியை ஏற்படுத்த அகி என்னைத் தொடர்ந்து எஸ்கலேட்டரில் நின்று கொண்டு பாதி இறங்கியதும், ‘நீ எப்படி ப்ரப்போஸ் பண்ணே?’ என்றாள். ஆச்சரியத்தில் அவள் பக்கமாக திரும்பி மேலே பார்த்தேன். ‘சாரி’ என்று ஒரு வெற்றுப்புன்னகையை உதிர்த்தாள். ரயில் மேடையில் இரண்டு ரயில்கள் காத்திருந்தன. நான் அகியுடன் அவளுடைய ரயிலை நோக்கி நடக்கத் துவங்கியதும் ‘நீ போ’ என்றாள். என் ரயிலை ஒரு முறை திரும்பிப்பார்த்துக்கொண்டு ‘சரி’ என்று நகரத் துவங்கினேன். ‘ஒரு நிமிஷம்’ என்று பையிலிருந்து ஹாருகி முராகாமியின் நார்வீஜியன் வுட் புத்தகத்தை எடுத்து நீட்டி ‘படிக்கப் போறதில்ல’ என்றாள்.  ‘எய்ட்டீந்த் எங்க ஆஃபீஸ் லீவ் இல்லையாம்’ என்று சொல்லியபடி புத்தகத்தை வாங்கிக்கொண்டு ’ரொம்ப யோசிக்காத, எதுவும் ஆகாது’ என்று சொல்லிவிட்டு நடைமேடையை கடந்து என்னுடைய ரயிலில் ஏறிக்கொண்டேன். ஏதேதோ அறிவிப்புகள்,  அவசரமாக ஏறி இறங்கும் யார்யாரோக்கள். ஒலியழைப்புகளுடன் ரயிலின் கதவுகள் மூடிக்கொண்டன. குனிந்து கண்ணாடி வழியே எதிர் ரயிலில் தேடித் தேடி அகியின் குழம்பிய விழிகளை கண்டடைந்தும் ஒரு சிலிர்ப்பில் தத்தமது திசைகளை அறிந்தது போல ரயில்கள் எதிரெதிர் திசையில் புறப்பட்டன.

1

இன்பா

நாளெல்லாம் புத்தகம் என் அலுவலக மேஜை யின்மீது கிடந்தது. என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அதை மற்றுமொரு புத்தகம் எனக் கண்டுகொள்ளவில்லை. என்னை அறிய முற்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் புத்தகத்தைப் பற்றியும் பல முறை தொடங்கியும் அந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைத் தாண்டி இது வரை படித்ததில்லை என்பதைப் பற்றியும் விளக்கிச் சொல்லி பல அமெரிக்க பொய் ஆச்சரியங்களையும் சில குறுகிய கண் சீன ஆச்சரியங்களையும் புன்னகையுடன் எதிர்கொண்டேன். அகி நாளெல்லாம் வாட்ஸாப்பிலும் ஜிமெயிலும் அதிசயமான அமைதியைக் கொண்டிருந்தாலும் அதை கலைக்க ஏனோ தோன்றவில்லை. மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி ரயிலை பிடித்தேன். ரயில் நிலையத்திலிருந்து இறங்கியதும் அங்கேயே அமர்ந்து புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடங்கலாம் என்றும் அகி வரும் வரை காத்திருக்கலாம் என்றும் தோன்றியது. ஷிவாவைப் பற்றி கேட்க வேண்டும், பேச வேண்டும். இருந்தும் அகி யோசிக்க இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படலாம் என்று தோன்றியது. எதற்காக எல்லோரும் காதலித்துத் தொலைக்கிறார்கள்? அகி இந்தக் காதலை பொறுத்தவரை என்ன செய்யக்கூடும் என்பதில் எந்த தெளிவும் எனக்கில்லை. நாலரை மணிக்கே இருட்டத் தொடங்கும் பனிக்கால வெறுமை மனதையும் இருட்டத் துவங்கியது. இலக்கில்லா யோசனைகளில் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தேன். இன்பா இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. ஹால் இருண்டு கிடந்தது. அதன் ஒரு மூலையில் அரை மனதுடன் எரியும் ஒரு சுவர் விளக்கை திருப்பினேன். சோஃபா டீப்பாய் அதன் மேல் அடுக்கை வைக்கப்பட்ட சில கடிதங்கள் என அறை துல்லிய ஒழுங்குடனும் ஏராளமான வெற்றிடமுமாக இருந்தது. டிவியோ லேப்டாப்போ சுவர்க்கடிகாரங்களோ ஏதுமின்றி சப்த கால பெருவெளிகளில் சேராமல் எப்போதும் மிதக்கிற அறை. ‘உங்க வீட்டு ஹால் சும்மாத்தானே இருக்கு?’ என்று ஒவ்வொரு முறை ஒரு டின்னரையோ பர்த்ட்டே பார்ட்டியையோ திட்டமிடுகையில் நண்பர்கள் கேட்கவே செய்வார்கள். (ஆனால் டிவி இல்லாதது தடையாக இருந்தது). நானும் இன்பாவும் தத்தமது தனிமைகளை மிகத் தீவிரமாக பாதுகாப்பவர்கள். சரியான அளவில் சரியான பொழுதில் சங்கடப்பட வைக்காத அக்கறையை காட்டிக்கொண்டாலும் எங்களின் அறைகளே எங்களின் உலகம், அதிலிருந்து எந்தத் தடயமும் இந்த ஹாலிற்கு தவறியும் வந்ததில்லை. துவக்கத்தில் எனக்கு இது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. இன்பா குடி வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு சனிக்கிழமை இரவுப் பொழுதில் ஹாலில் அவன் அமர்ந்திருந்ததைப் பார்த்து நானும் மரியாதைக்காக பேச்சு கொடுக்கத் துவங்கி சினிமா அரசியல் விளையாட்டு என இதழ்கள் உதிர்ந்து உதிர்ந்து பெயர்களும் இடங்களும் காலமும் குறிக்கத் தேவையற்ற ஒரு பேச்சை இன்பா துவக்கினான். ஒரு பூனை ரகசியமாக மதில் ஏறுவதைப் போல காதலா மோகமா அப்பாவைப் பற்றியா நண்பனைப் பற்றியா என்றெல்லாம் அடைமொழி இடாத ஒரு பேச்சுக்கு அவன் தாவியிருந்தான். இருந்தும் அவன் சொல்பவை முழுமையாக இருந்தன. மிகத் துல்லியமான தகவல்களுடன் நிரம்பிய பெயரற்ற கதாபாத்திரங்களின் கதை போல அதை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அதிகாலை வரை பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம். பின்னர் நானோ அவனோ ஹாலில் அமர்ந்திருப்பது அப்படி ஒரு பேச்சுக்கான வார்த்தைகளில்லாத அழைப்பாக ஆகிப் போனது.

நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் என நீளும் இணைப்புச்சங்கிலியின் முனைகளில் நானும் இன்பாவும் சேர்ந்த நாள் அவனது பிறந்தநாள். அவன் யாரென்று அறியாமலே நானும் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். மிகத் தாமதமாக நான் கிளம்பியிருந்ததாலும் அதற்குள் பரிசு கொடுக்கப்பட்டு கேக்கும் வெட்டப்பட்டிருந்ததாலும் வெறுங்கையுடன் போக விருப்பமின்றி சில நண்பர்களை அழைத்து என்ன வாங்கி வரலாம் என்று கேட்டிருந்தேன். பர்த்ட்டே பார்ட்டி கூச்சலில் யாரோ ‘பேசாம ஒரு விஸ்கி பாட்டில் வாங்கிக் கொடு பெஸ்ட்டு’ என்று கத்தினார்கள். முன் தகவல்கள் ஏதுமின்றி நானே ஆறு வருடங்கள் வயதான ஒரு விஸ்கி பாட்டிலை வாங்கிக்கொண்டு சென்று அவனிடம் கொடுத்தேன். ‘இவனும் ராஜா ஃபேன்’ என்று யாரோ என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். விஸ்கி பாட்டிலை வாங்கிப் பார்த்து விட்டு இன்பா ‘என்ன மறந்தாலும்னு ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா? காதல் சாதி. ரீலீஸ் ஆகல’ என்றான். ‘ஐயோ அவ்ளோலாம் தெரியாது’ என்று சிரித்தேன். அதன் பின்னர் ஆறு மாதங்களாக எந்தப் பொதுச்சந்திப்பில் சந்தித்தாலும் ‘விஸ்கி பாட்டிலை இன்னும் ஓப்பனே பண்ணல’ என்பதும் ‘இன்னும் அந்தப் பாட்ட கேக்கல’ என்பதும் எங்கள் இருவரின் நலம் விசாரிப்பானது. எல்லா விவாதங்களிலும் கூட்டத்திலும் அமைதியாகவே இருக்கும் இன்பா எப்போதேனும் அளவான கருத்தை பகிர்வான். பெரும்பாலான நேரங்களில் மொட்டைத் தலையும் கீழிறிங்கி தாடையில் நிரம்பும் மீசையும் அதற்குள் சிரிப்புமாக ஒரு மூலையில் இருப்பான். இந்த வீட்டை நான் வாடகைக்கு எடுத்த நாளில் நான் ரூம்மேட் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று யார் மூலமோ அறிந்ததும் இன்பா என்னை அழைத்து வீடு தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்ல எதுவும் யோசிக்காமல் அடுத்த நாளே வருமாறு சொன்னேன். உடனே நினைவு வந்தவனாக புதிதாக வாங்கிய ஸ்பீக்கரை பிரித்து இன்னும் பொருட்கள் நிரப்பாத ஹாலில் பொருத்தி ‘என்ன மறந்தாலும்’ பாடலைத் தேடி ஓடவிட்டு நகர்ந்தவன் பாடல் தொடங்கியதும் ஒரு கணம் நின்று விட்டேன். பிறந்த நாளன்று எதேச்சையாக எனக்குச் சொன்ன பாடல் அது என்று நம்பமுடியவில்லை. ஏதோ ஒரு தனிச் செய்தி போல அதில் பொதிந்திருந்த வெறுமையும் சோகமும் இன்பா வருவதற்கு முன்னரே வீட்டில் நிரம்பி விட்டது.

இருந்தும் நான் எதிர்பார்த்ததை விட இன்பா மகிழ்ச்சியாக இருந்தான். நல்ல சமையல்.  எப்போதும் மெல்லிசையில் மிதக்கிற அறை. சனிக்கிழமை இரவுகளில் பால்கனியில் கொஞ்சம் விஸ்கி அல்லது ரம். (குடி வந்த அன்று அடையாளத்திற்காக என நான் கொடுத்த விஸ்கி பாட்டிலைத் திறந்து ஒரு மிடறு அருந்தினான்) . சில சமயங்களில் சிரிக்க சிரிக்க பேச்சு. (காரில் எங்கேனும் போகையில்). பல சமயங்களில் தனிமை. யாரும் எதுவும் இன்பாவைப் பற்றி அதிகமாகச் சொல்லிக் கேட்டதில்லை. ‘நல்லா பேசுவான்’ என்று சொல்லிவிட்டு மேலே சொல்ல இல்லை என்பதைப் போல நிறுத்திவிடுவார்கள். அந்தப் பேச்சினுள்ளே கலைக்க முடியாத ஒரு மௌனம் இருப்பது எனக்கு மட்டும் தெரிந்திருந்தது.

கதவைத் திறக்கிற சத்தம் கேட்டதும் சோஃபாவிலிருந்து எழு முற்பட்டேன். அதற்குள் இன்பா ஹாலிற்குள் வந்து ‘ஹாய்’ என்று சொல்லிவிட்டு கடிதங்களைப் பார்க்க முற்பட்டு பின்னர் நிமிர்ந்து என் முகத்தில் தெரிந்த யோசனைகளையும் ஹாலில் அமர்ந்திருப்பதையும் கவனித்து ‘என்னாச்சு?’ என்றான். ‘ஒண்ணுமில்ல’ என்றேன். ‘கீழ உங்க ஃப்ரெண்ட் அகி இருக்காங்க’ என்றான். (முன்பெல்லாம் ‘உங்க ஃப்ரெண்ட்’ என்று சொல்லிவிட்டு ஒரு வேளை இது காதலோ என்று ஒரு சந்தேக இடைவெளி விட்டு ‘அகி’ என்று முடிப்பான். ஏதோ ஒரு தருணத்தில் அவனுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது). ‘ஓ’ என்று சொல்லிவிட்டு கீழிறங்கி சென்றேன். அகியின் விழிகள் குழம்பிய குட்டைகளின் மீன்கள் போலிருந்தன. ‘எதுக்கு குளிர்ல வந்த? ஃபோன் பண்ணிருக்கலாம்ல’ என்றேன். ‘ப்ச். மூட் இல்ல. கார் எடுக்கிறியா? நான் ஓட்ட பழகுறேன்’ என்றாள்.

காரை கிளப்பிக்கொண்டு நாலு மைல் தொலைவில் இருக்கும் யாரும் உபயோகப்படுத்தாத அலுவலக வளாகத்திற்குச் சென்றோம். காரை அகியிடம் தந்துவிட்டு பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டேன். அகி யோசித்து யோசித்து கியர் போட்டு ஆளரவம் அற்ற பார்க்கிங் லாட்டில் அக்கம் பக்கம் பார்த்து பார்த்து மெதுவாக கிளம்பும் வரை ஷிவாவை பற்றி கேட்க நினைத்து கடைசியில் ‘காலையில எதுக்கு சாரின்னு சொன்னே?’ என்றேன். ‘எப்போ?’ ‘நீ எப்படி ப்ரப்போஸ் பண்ணேன்னு என்ன கேட்டே. நான் திரும்பி உன்ன பாத்ததும் சாரின்னு சொன்னே’ ‘திடீர்னு அப்படி கேட்டிருக்கக் கூடாதுன்னு தோணுச்சு’ ‘ம்ம்ம்’. முழுதும் வலதாக திருப்பியிருந்த ஸ்டியரிங்கை விட்டதும் அது சல்லென சுற்றி நேரானதும் பிடித்துகொண்டாள்.  ‘சரி, சொல்லு இப்பவாச்சும்’ ‘ப்ச், இப்ப எதுக்கு?’ ‘ரொம்ப வருஷமாச்சுல்ல?’ ‘ம்ம்’ அவசரமாக மனதிற்கு வருடங்களை கூட்டத்துவங்கி ‘ஆறேழு வருஷமாச்சு’ என்றேன். ’அவங்க மொதல்ல நோ சொல்லிட்டு அப்புறமா  அவங்களே யெஸ் சொன்னாங்க தானே?’ ‘ஆமா’ ‘சொல்லிருக்க ஒரு தடவ, ப்ரேக்கப் ஆனது வர கொஞ்சம் கொஞ்சம், சரி எதானா சொல்லு’. ‘யோசிக்கணும்’ என்று இழுத்தவன் என்னையறியாமலே அவள் பக்கமாக திரும்பி வேகமாக சொல்ல ஆரம்பித்தேன். ’அது ஏதோ ரிஷப்ஷன். ஃப்ரெண்டோட அக்கா ரிஷப்ஷனோ அண்ணா ரிஷப்ஷனோ. நாங்க ஒரு இருபது பேர் போயிருந்தோம். காலேஜ் முடிஞ்சு ஒரு வருஷம் ஆயிருக்கும். சோ நான் ப்ரப்போஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு. ஒரே ஆஃபீஸ்ல சேந்ததால தினம் பாத்து பேசி ஃப்ரெண்ட்ஸா இருக்கிறதா வேணாமானு ஒரே சங்கடம். அவ மனசும் கொஞ்சம் கொஞ்சமா மாறுதுன்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா அவசரப்படுத்தவும் முடியாது. விட்டும் போக முடியாது. ரிஷப்ஷன் முடிஞ்சு எல்லாரும் வட்டமா சேர் எல்லாம் போட்டு உக்காந்து அரட்டை அடிச்சிட்டிருக்கோம். என் பக்கத்துல அவ உக்காந்திருக்கா. ‘இவ்ளொ செலவு பண்ணி கல்யாணம் பண்ணனுமா’னு ஏதோ பேச்சு. எல்லாரும் ஏதோ ஏதோ சொல்றாங்க. திடீர்னு நானும் சேந்துகிட்டு ‘இவ்ளோ செலவு எல்லாம் வேஸ்ட்டு. பொண்ண புடிச்சிருந்தா’னு சொல்லிட்டு எனக்கே தெரியாம அவளோட கைய பிடிச்சு எடுத்து ‘கைய பிடிச்சு நேருக்கு நேரா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா போதாதா? அவ சரின்னு சொன்னா முடிஞ்சது’னு சொன்னேன். சொன்னப்புறம் தான் நான் அவ கைய பிடிச்சிட்டு இருக்கேன்னு தெரியும். எல்லாரும் அமைதியாகிட்டாங்க’.

‘ஓ, ஒனக்கு தெரியாமலே நடந்திருச்சு’ ‘சத்தியமா’ ‘சரி சரி’ என்று சிரித்தபடி தலையசத்தாள். ‘அவங்க என்ன சொன்னாங்க?’ ‘எதுவும் சொல்லல’ ‘எப்படி பாத்தாங்க?’ ‘எப்படி… பாத்தாங்கவா.. நினவில்ல. எதுவும் சொல்லல, சிரிச்சான்னு நினைக்கிறேன்’ ‘யோசிச்சு சொல்லு’ யோசிக்க வெளியே பார்க்க திரும்பியவன் மீண்டும் பனி பெய்ய ஆரம்பித்திருப்பதை கவனித்தேன்.  வெள்ளையாக விரிந்திருந்த பார்க்கிங்க லாட்டினில் காரின் தடயங்கள் மட்டும் பதிந்து அதில் பனி மீண்டும் நிரம்பிக்கொண்டிருந்தது. ‘வீட்டுக்கு போலாமா?’ ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என்று சொல்லிவிட்டு அகி காரை  எதிரே இருந்த நான்கடுக்கு பார்க்கிங் லாட்டிற்குள் செலுத்தினாள். இருட்டாக குகை போல அடுத்து எங்கே திரும்பும் என்று புரியாமல் எங்களை உள்வாங்கிக்கொண்டது அந்தக் கட்டிடம். ‘உள்ளயே சுத்தறேன். நீ மேல யோசிச்சு சொல்லு’ என்றாள். அந்த ரிஷப்ஷன் ஃபிப்ரவரியில் நடந்திருந்தால் அப்போதும் இதே போல இங்கு பனிபெய்து கொண்டிருந்திருக்கும். சென்னையில் அன்று மழை பெய்து கொண்டிருந்ததா? வெளியே இருந்து சில சோடியம் வேப்பர் விளக்குகளின் வெளிச்சம் சில நிழல் ஒளி செவ்வகங்களாக காரின் மேல் விழுந்து நழுவியது. சுற்றிச் சுற்றி ஏறி பின்னர் அதே போல இறங்கி வெளியே வந்து மீண்டும் ஏறி இறங்கி கார் சென்றுகொண்டே இருந்தது. பனிப்பொழிவு காற்றுமண்டலத்திற்கும் ஒளிக்கும் ஒரு விதமான வெண்மையை சேர்த்திருந்தது. சன்னமாக ஏதோ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ‘நான் அப்படியே லேசா தூங்கறேன், நீ ஓட்டு’ என்று சொல்லி விட்டு பதிலுக்கு காத்திராமல் தலையை சாய்த்தேன். தூக்கம் வராது என்று தெரிந்தாலும் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

2

அகி

அகியை அவளுடைய வீட்டில் இறக்கி விடும் பொழுது தயங்கித் தயங்கி ’ஒரு விஷயம்’ என்றாள். ’என்ன?’ ‘இன்பா அடுத்த வாரம் ப்ரதீபா வீட்டுக்கு டின்னருக்கு போறானா?’  தெரியுமா?’ ‘தெரியாது. நீ சொல்லி தான் டின்னர் ப்ளான் இருக்குன்னே தெரியுது. ஏன்?’ ‘என்னயும் கூப்டிருக்கா. அவன் போறான்னா என்ன பிக் பண்ண சொல்றியா?’ ‘சரி’ பேச்சு முடியவில்லை என அகியின் முகத்தில் தெரிந்தது. காரை கிளப்பாமல் காத்திருந்தேன். ‘அவன் என்னைக்காச்சும் ப்ரதீபா பத்தி எதானா சொல்லிருக்கானா?’ யோசித்தேன். ‘நோ. மே பி ராண்டம்லி. ஏன் கேக்குறே?’ அகி யோசனையுடன் இல்லையென்று தலையசைத்து விட்டு முடிவை மாற்றிக்கொண்டு ‘ஐ திங்க் ஷீ லைக்ஸ் ஹிம்’ என்றாள். புருவத்தை உயர்த்தி ‘ஓ’ என்றேன். ‘அவ என்கிட்ட நேரா சொன்னதில்ல, நானா கெஸ் பண்ணது. இந்த டின்னரே அவனுக்காக தான் ப்ளான் பண்றானு நினைக்கிறேன். ரொம்ப எக்ஸைட் ஆறா’ ‘ஹ்ம்ம்’ அன்று ரயில் நிலையத்தில் குழம்பிய அகியின் முகத்தில் இன்னும் தெளிவில்லை. ‘ரொம்ப எதுவும் யோசிக்காத அகி’ என்றேன். ‘ச்சேச்சே, அவங்கள பத்தியில்ல’ என்றாள். ஷிவாப் பற்றி இருக்கும். என்ன கேட்பது? ‘சரி நான் போறேன்’ என்றாள். ‘ஒரு நிமிஷம்’ என்று அவளை நிறுத்தினேன். ‘பேசாம ஒழங்கா கார பார்க் பண்றியா? பேசிட்டு போலாம்’ என்றாள். சிரித்தேன். ‘இல்ல இல்ல, சும்மா, நீ போ’ என்றேன்.

அகி இதுவரை யாரைப் பற்றியும் இத்தனை பேசியதில்லை என்று தோன்றியது. கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. தமிழ்த் திரை நகைச்சுவை வசனங்களை பொருந்தாத இடங்களில் சொல்வதே பிரதான பொழுதுபோக்காக இருந்த ஒரு டின்னரில் தான் அகியை முதன் முதலில் சந்தித்தேன். என்னைப் போலவே ஒரு கட்டத்திற்கு மேல் செயற்கையாக சிரிக்க முடியாமல் அமைதியான புன்னகையில் அமிழ்ந்திருந்தாள். கூட்டத்திலிருந்து தனித்து தெரிந்த அவளிடம் நான் எதிர்பார்த்த போல – போலியான பேச்சு / உற்சாகம் / தொனி, தேவையில்லாத ஈகோ, புறம் பேசுதல், தன்னைப் பற்றியே பேசிக்கொள்ளுதல் – என எதுவும் இல்லை. ஆனால் அன்று அந்த டின்னரில் அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள எந்த வழியுமில்லை. இருந்தும் ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ளத் தோன்றியது. பின்னர் இந்த ஒரு வருடத்தில் வியப்பாக நெருங்கத் துவங்கிய பின் நான் எதிர்பார்த்த ஒவ்வொரு குணமும் அகியிடம் இருந்தது. கூடவே, புத்தங்களின் மீது ஏராளமான காதலும். அகியும் நானும் சந்திக்கையிலெல்லாம் ஒரு உரையாடலை துவக்க எந்த சிரமும் இருந்ததில்லை.

நண்பர்களுக்குள்ளான டாலர் சண்டைகள், நண்பர்களின் பெற்றோர்களை / குழந்தைகளை சந்தித்தல், ஒரு காதலன் / காதலி அறிமுகம், நிறைய வேலை, விடுமுறை , எதற்கோ ஒரு சோகம், பின் அது தானாய் விலகுதல், விவாதங்கள், பசி, சோம்பல் என எல்லாவற்றையும் அகி எப்படி எதிர்கொள்வாள் என இந்த ஒரு வருடத்தில் தினசரி கவனித்து அறிந்து புரிந்திருக்கிறேன். ஆனால் ஒரு காதலை அகி எப்படி எதிர்கொள்வாள் என்பதில் எனக்கு தெளிவில்லை. இயல்பாகவே எல்லா இடங்களிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாகிப் போனதால் துவக்கத்தில் எல்லோரும் எங்களை காதலர்கள் என்று நினைத்தார்கள். சிலர் நாங்கள் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதாக நினைத்துக்கொண்டு எங்களை டின்னருக்கோ தொலைதூர பயணத்திற்கோ அழைத்துச் சென்று எங்களை தனிமையில் விட்டு பாக்கெட்டுகளில் கையை விட்டுக்கொண்டு நடந்து சென்றும் ஆற்றில் தூரமாக கல்லெறிந்தும் பார்த்தார்கள். அகி அறிமுகமான மூன்றாவது மாதத்திலேயே இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் இதைப் பற்றி அகியிடம் வாய்விட்டு பேசியதில்லை. இருந்தும் மற்றவர்களின் செலுத்தும் இந்தத் தனி கவனத்தை கையாண்டதே காதலைப் பற்றி நானும் அகியும் கொண்ட நீண்ட உரையாடலாக இருந்திருக்கிறது.  மற்றவர்கள் மிகச் சாதாராண விஷயங்களை காதலாக அர்த்தப்படுத்திக்கொள்வதை வியப்பாக இருவரும் வேடிக்கை பார்த்திருக்கிறோம். இது கொஞ்சம் அதிகமாக இருந்த ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் ஒரு முறை அதைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறோம். (அப்போது அவளுக்கு நான் பழைய கதையை சுருக்கமாக சொல்லியிருந்தேன்). இருபத்தி இரண்டு வயதில் சந்தித்திருந்தால் ஒரு வேளை நிறைய காதலைப் பற்றி பேசியிருந்திருக்கலாம். முப்பது வயதில் சந்தித்திருந்தால் திருமணத்தை பற்றி பேசியிருந்திருப்போம். இருபத்தி ஏழு வயதில் காதலுக்குப் பின்பாக திருமணத்திற்கு முன்பாக வருகிற மௌனம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதையும் மீறி முதன் முறையாக அவளுடைய காதல் என்னுடைய காதல் இன்பா பிரதீபா என எல்லாவற்றையும் தொட்டும் தொடாமல் பேச வேண்டிய சூழல் திடீரென உருவாகி இருட்டியிருந்தது.

எனக்கு ஷிவாவையும் தெரியாது, இன்பாவின் பழைய காதலையும் தெரியாது, பிரதீபாவையும் தெரியாது. இருந்தும் என்னைச் சுற்றி எப்போது ஒரு காதல் கதை நிகழ்ந்தாலும் எங்கிருந்தோ பெரும் பயம் சூழ்ந்துகொள்கிறது.  இன்பா இன்னமும் எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறான்? ப்ரதீபாவை அவனுக்குப் பிடிக்குமா? ஷிவாவிடம் அகியை பேசச் சொல்லி சொல்ல வேண்டும். தினசரி சலிப்பின்றி பெய்கிற பனியைப் போல ஆனது இந்த யோசனைகள். இரண்டு மூன்று நாட்களாக வழக்கத்திற்கு வேறான நேரங்களில் ரயிலை பிடிக்கத் துவங்கியிருந்தேன். அகிக்கு என்ன புரிந்ததோ, இருந்தும் அவள் ரயில் நிலையத்திற்கு தினமும் கிளம்பும்பொழுது எங்கிருக்கிறேன் என என்னைக் கேட்பாள். அறையிலும் இன்பாவின் கண்களில் அதிகம் படாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். நெரிசல் நேரங்களைத் தாண்டி ஒரு நொடி கடந்ததும் கூட்டத்தைத் தொலைத்து ரயில் மொத்தமே பத்து பதினைந்து பேருடன் சென்று வந்துகொண்டிருந்தது. இன்பாவுடனோ அகியுடனோ ஒரு உரையாடல் முடிந்த பின்னர் தோன்றும் தனிமையைப் போல திடீரென ரயிலில் நான் மட்டும் சென்று வந்துகொண்டிருந்தேன். கம்பார்ட்மெண்ட்டில் நானும் தூரத்தில் கண்ணாடி ஜன்னலில் தலைசாய்த்த யாரோவும் மட்டும் இருப்போம். அகியும் இன்பாவும் என்னைப் பற்றி என்ன யோசித்துக்கொண்டிருப்பார்கள்? நான் எப்படி ஷிவாவைப் பற்றியோ ப்ரதீபா வீட்டு டின்னரைப் பற்றியோ பேச எத்தனித்துக்கொண்டிருக்கிறேனோ அதைப் போல அவர்களும் என்னிடம் எதைப் பற்றி பேச நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? அப்படி பேச அவர்களும் ஏதேனும் இருக்கிறதா, இருக்க விட்டிருக்கிறேனா? மற்றவர்களிடம் ஒரு சிறிய சலசலப்பையாவது  நானோ எனது பிரச்சினைகளோ ஏற்படுத்துகிறேனா?

இன்பா அந்த வாரம் இருக்கும் டின்னர் ப்ளானை பற்றி எந்த யோசனையும் இல்லாதவன் போல இருந்தான். ஒரு வேளை ப்ரதீபாவை மிகச்சாதாரணமான தோழியாக நினைத்திருக்கலாம். ப்ரதீபாவிற்கு அவன் மேல் இருக்கும் ஈர்ப்பு தெரியாமல் இருந்திருக்கலாம். தெரிந்தும் புறக்கணித்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் டின்னரைப் பற்றி கேட்க சில கேள்விகளை ஒத்திகை பார்ப்பதோடு சரி. அகி தினசரி இரவு உறங்கப் போகும் முன் ‘இன்பாகிட்ட கேட்டியா?’ என்று கேட்பாள். ஒவ்வொரு நாளும் ஏதேனும் காரணம் சொல்லிச் சொல்லி டின்னருக்கு முந்தைய நாள் மாலை அகி அழைத்தே கேட்டுவிட்டாள். ஒரு வாரமாக பார்க்கவில்லையென்றாலும் அவளின் முகத்தில் தெரிந்த குழப்பம் குரலிலும் இருந்தது. ‘ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கே?’ ’இட்ஸ் ஹர். அவ ரொம்ப எக்ஸைட் ஆறா’ ‘நீ கேட்டு நான் கேட்டு என்ன ஆகப்போகுது?’ ‘இல்ல, சப்போஸ் அவன் போறத பத்தி யோசிக்கலனா?’ ‘யோசிக்கலனா? ‘மே பி  நீ சொல்லலாம்?’ ‘போன்னா?’ ‘டைரக்டா இல்ல. பட், யா’ ‘விளையாடறியா?’ ‘ரொம்ப யோசிக்காத. எனக்கு எதுனா சொல்ல மாட்டியா? அந்த மாதிரி தானே இன்பாவும்?’ சுருக்கென்றது. ‘ஐ வில் ட்ரை’. ‘ரொம்பல்லாம் இல்லடா. ஜஸ்ட் கேளு’ ‘சரி’.

வீட்டிற்கு வந்து அவசரமாக சமைத்து வைத்தேன். அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டு சென்ற போது இன்பாவின் துணிகள் இன்னும் ட்ரையரில் இருந்தது. அப்படி இருந்தால் இதுவரை எப்படி அங்கேயே விட்டுவிட்டு காத்திருப்பேனோ அதைப் போலவே இன்றும் விட்டுவிட்டேன். இருந்தும் துணிகள் இன்னும் கொஞ்சம் ஈரமாக இருந்ததைப் போல இருந்தது. ட்ரையரை மீண்டும் ஓட விட்டு சாப்பிட்டேன். இன்பா வரும் அறிகுறியே இல்லை. ஹாலிலும் பால்கனியிலும் கொஞ்சம் உலவிக்கொண்டிருந்தேன். ஒரே இடத்தில் கொஞ்சம் நேரம் நின்றால் அடி பாதத்தில் குளிர் மெல்லிய ஐஸ் தகடாக மாறி விடும் போலிருந்தது. ஒன்பதரை மணியளவில் அறைக்குச் சென்று கண்களை வெறுமனே மூடிக்கொண்டு கிடந்தும் எப்படியோ ஒரு தூக்கத்தை தொட்டுவிட்டேன். திடீரென முழிப்பு வந்து எழுந்த போது இன்பா என்னுடைய அறை வாசலில் நின்றுகொண்டிருந்தான். ‘எழுப்பிட்டனா?’ என்ற படி அறைக்குள் வந்து ஆச்சரியம் தந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் ‘இல்லல்ல’ என்றேன். ‘ஆஃபீஸ்ல இஷ்யூ’ என்றான். ‘ம்ம்’ ‘நாளைக்கு என்ன டின்னர் ப்ளான்?’ என்றான். எனக்குள் நானே சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன். ‘நத்திங் ஸ்பெஷல். சாப்டாச்சா?’ நீங்க வாங்க போங்க என்று சொல்ல விருப்பமில்லாமல் மழை நாள் சாலையில் நடப்பது போல அவற்றைத் தாண்டி தாண்டிச் சென்றுகொண்டிருந்தோம். ‘பசிக்கல. படம் போலாமா?’ ‘இப்பவா?’ ‘யா’. யோசித்தேன். சரி என்றதும் அவன் சென்று கிளம்பத் தயாரானேன். அபார்ட்மெண்ட்டிற்கு எதிரேயே ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் இருந்தது. வெளியே காற்று மெல்ல மெல்ல சுழன்று எழ முயன்று பனித்துகள்களை மேலெழுப்பி நழுவிக்கொண்டிருந்தது. காரை எடுக்காமல் வேகமாக நடக்கத்துவங்கினோம்.  திரையரங்கில் கவுண்ட்டரில் என்னையும் இன்பாவையும் கொட்டாவி விட்டபடி வினோதமாக பார்த்தார்கள். இந்தியாவிலிருந்து எனக்கு செல்பேசி அழைப்பு வந்து நான் ஓரமாக ஒதுங்க இன்பா ஏதோ ஒரு படத்தை தேர்ந்தெடுத்துவிட்டு டிக்கெட் வாங்கி என்னிடம் ஒன்றை தந்து விட்டு உள்ளே போனான்.

நான் உள்ளே செல்லும் பொழுது படம் துவங்கி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. தியேட்டரில் இன்பாவைத் தவிர யாருமில்லை. என்னைப் பார்த்ததும் இன்பா தியேட்டரில் இல்லாத கூட்டத்தை காண்பித்து சிரிப்பது போல சிரித்தான். நான் இன்பாவின் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்துகொண்டேன். அது ஏற்கனவே வெளியாகி ஓடி முடித்த திரைப்படம் என்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்கள் இந்த வாரம் மட்டும் சில திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படுவதாகச் சொன்னான். ‘ரீ எடிட் பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன்’ என்றான். முதல் காட்சியே வேறு போல இருந்ததாம். எனக்கு அந்த திரைப்படம் நினைவிலில்லை. இப்போதும் கவனம் பதியவில்லை. இன்பாவின் நிழலுருவையும் திரைப்படத்தையும் இலக்கின்றி பார்த்துக்கொண்டிருந்தேன். படம் நெடுக இன்பா அவ்வப்போது திரும்பி இந்தக் காட்சியில் என்ன வெட்டியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தான். சில சமயங்களில் எனக்கே அந்தக் காட்சியில் ஏதோ மாறி இருப்பதாகத் தோன்றி அவன் என்னை திரும்பிப் சொல்லப் போகிறானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நடுவில் எழுந்து வெளியே சென்று இரண்டு கோக் வாங்கி வந்தவன் என் இருக்கைக்கு ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தான். நான் திரையை புதிய கவனத்துடன் பார்க்கத் துவங்கினேன். ‘அகி எப்படி இருக்காங்க?’ என்றான். ’யா, ஃபைன்’. ‘நேத்து வால்மார்ட்ல பாத்தேன். ஃப்ரெண்டோட வந்திருந்தாங்க. பயங்கர ப்ரீ ஆக்யுபைடா இருந்தாங்க’ ‘ஓ’ புன்னகைத்தேன். என் பக்கம் திரும்பாமல் ‘ஈவன் யு’ என்றான். ’நத்திங் ரியலி’. ’உங்க ரெண்டு பேரையும் நான் மொதல் மொதல்ல ரயில்வே ஸ்டேஷன்ல தான் பாத்தேன். அவங்க அமெரிக்காவுக்கு வந்த புதுசு. காலைல அவசரம். ரெண்டு பேரும் வெண்டிங் மெஷின் கிட்ட நிக்கறீங்க’. இன்பா ஹாலில் அமர்ந்து நள்ளிரவைத் தாண்டி பேசும் பொழுது வருகிற தொனி. ‘ரிஸிப்ட் வர ஸ்லாட், கார்ட் ஸ்வைப் பண்ற எடம், காசு போட எடம்னு மாறி மாறி பரபரப்பா பாக்குறீங்க. யாராச்சும் ஹெல்ப்க்கு வருவாங்களான்னு தேடறீங்க. அப்போ யு வில் காரி தட் அம்ப்ரெல்லா, எங்க போனாலும் எதுக்கோ’ சிரித்தேன். ‘அவங்க காதுல ஐபாட். இருந்தும் அப்படியே பேசறாங்க சொல்றத கேக்குறாங்க. மே பி பாஸ் பண்ணிருப்பாங்க. உங்கள பாக்க சிரிப்பா இருந்தது’ என்றான். ‘ஹா ஹா ஹா’. ‘நேத்து அவங்க முகத்துல அதே மாதிரி ஒரு லுக். என்ன வெண்டிங் மெஷின் தான் இல்ல’ என்றான். புன்னகைத்தேன், ‘சொல்றேன்’. ‘ஹா ஹா ஹா’. திரையில் யாரோ ஜன்னலைத் திறந்து வெறித்துப் பார்த்தார்கள். ‘ஆர் திங்க்ஸ் ஃபைன்?’ என்றான். அகியையா என்னையா என்று தெரியவில்லை. ‘யா’ என்று சொல்லிவிட்டு ஒரு இடைவெளி விட்டு கேட்க நினைத்தவன் அவசரமாக கேட்டு வைத்தேன் ‘நாளைக்கு என்ன ப்ளான் டின்னர்?’. இன்பா என்னை திரும்பிப் பார்க்காமல் மிகச்சாதாரணமாக ‘ப்ரதீபா தெரியும்ல? அவங்க வீட்டுல கொஞ்சம் பேருக்கு டின்னர்’ என்றான். ‘ஓ குட். அகி சொல்லிட்டிருந்தா. ஜஸ்ட் கோ. அப்போ எதும் சமைக்க வேணாம். நான் வெளில சாப்டுக்கிறேன்’ என்றேன். இன்பா கொஞ்ச நேரம் யோசித்து விட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான். இருட்டில் பாதி புன்னகை தெரிந்தது.

3

விஸ்கி

இன்பா சரியாக ஆறரை மணிக்கு கிளம்பினான். வழக்கத்தை விட இன்று தோற்றத்திற்கு அதிக கவனம் எடுத்துக்கொண்டது போலிருந்தது. என்னுடைய ஆர்வம் துருத்திக்கொண்டு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதில் பெரிதும் கவனம் கொண்டிருந்தேன். அவனுடைய கார் புறப்பட்டுச் சென்றதும் அகிக்கு மெஸேஜ் அனுப்பினேன். அவள் அதி உற்சாகமாக பதிலனுப்பினாள். இன்னும் பதினைந்து நிமிடத்தில் கிளம்பலாம் என்று சொன்னாள். சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து சேர்ந்தாள். ‘என்ன இப்படி அழுமூஞ்சி மாதிரி வந்திருக்கே? டின்னருக்கு போறா மாதிரியா இருக்கே?’ ‘அஹ்’ என்றவள் ‘சரி விடு, சீக்கிரம் கிளம்பு, ஆல்ரெடி லேட்’ ‘ஏன் இன்பாவோட போகல?’ ‘லேட் ஆகும்னு தான்’ என்றவள் ஜிபிஎஸ்ஸை எடுத்து முகவரியை அதில் ஏற்றினாள். காரில் பாட்டு எதுவும் ஓடாமல் அமைதியாக இருந்தது. பனிப்பொழிவு கொஞ்சம் நின்றிருந்ததால் மக்கள் எல்லாரும் கார்களைக் கிளப்பி எங்கோ போய்க்கொண்டிருந்தார்கள். ப்ரதீபாவின் வீடு அரை மணி நேரத் தொலைவில் ஒரு பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கிறதென நினைவு. பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அகி ‘இன்பா ரீச் ஆயிருப்பானா?’ என்றாள். சிரித்தேன், ‘ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்கே?’ ‘சும்மா தான். மெஸேஜ் அனுப்பி கேளேன்?’ ‘அங்க தானே போறே? போய் பாத்துக்கோ’ ‘நீ எங்க சாப்பிடப் போறே?’ ‘தெரியல, உன்ன எறக்கி விட்டுட்டு தான் யோசிக்கணும்’. ஜிபிஎஸ் அடுத்த எக்ஸிட்டை எடுத்து திரும்பிப் போகச் சொன்னது. ‘ஏன் 278 வெஸ்ட் எடுக்க சொல்லுது அகி? ஈஸ்ட் தானே?’ அகி ஜிபிஎஸ்ஸை எடுத்து சரிபார்த்தாள். ‘கரெக்டான அட்ரெஸ் தான்’ என்றாள். ‘நான் உன் மொபைல் எடுத்து இன்பாவுக்கு மெஸேஜ் பண்ணிக் கேக்கவா?’ ‘என்ன? டின்னர் மெனு என்னன்னா?’ ‘இல்ல ஆரம்பிச்சாச்சான்னு’ ‘பொறுமை பொறுமை. எதானா பாட்டு போடேன்’ என்றேன். ‘வேண்டாம்’ என மறுத்தவள் சட்டென ‘உனக்கு என்னாச்சு? ஏன் ஒரு வாரமா ஒரு மாதிரி இருக்கே?’ ‘வாட்? ஒண்ணுமில்ல?’ ‘சொல்லு ப்ளீஸ்’ ‘என்ன சொல்ல சொல்ற? ஐயாம் ஃபைன்’ ’நோ. அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு அவசரமா கூப்பிட்டதுலேர்ந்து சரியில்ல’ ‘ஒண்ணுமேயில்ல சீரியஸா’ ‘நான் தேவையில்லாத பெர்சனல் விஷயமெல்லாம் கேக்குறனா?’ ‘சீரியஸா அப்படி நினைக்கிறியா?’ ‘இனி வேணும்னா ஷிவாவ பத்தி எதுவும் சொலல்ல’ அவளைத் திரும்பி பார்த்து முறைத்தேன்.

எங்களுக்குப் பின்னால் வந்த கார்கள் ஒவ்வொன்றாக எங்களைத் தாண்டி வேகம் பிடிக்கத் துவங்கின. ‘நீ போய் நல்லா டின்னர் சாப்டுட்டு வா, இன்னொரு நாள் பேசலாம்’ என்றேன். ‘இன்னைக்கே சொல்லு. அதுக்கு தான் உன் பிக் பண்ண சொன்னேன்’ ‘சரி. போறப்போ ஏன்? நாளைக்கு பேசலாம்’ ‘நான் டின்னருக்குப் போகல. உங்கிட்ட பேச தான் கூப்டேன்’ ‘வாட்?’ ‘ஆமா’. காரை அடுத்த லேனுக்கு செலுத்தி வருகிற எக்ஸிட்டை எடுக்க முயன்றேன். ‘ப்ளீஸ், போகலாம். நிறுத்தாத’ ‘என்ன அட்ரெஸ் போடிருக்கே?’ ஏதோ புக் ஷாப்’ ‘பைத்தியமா ஒனக்கு? மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?’ ‘சொன்னா நீ வருவியான்னு தெரியல’ அமைதியானேன். ‘ப்ரதீபா இன்னொரு ஃப்ரெண்டையும் கூப்பிட்டிருந்தா. அவன் ஒடம்பு முடியலன்னு வரலயாம். அதான் நானும் போகல’ ‘ஓ, இன்பா மட்டும் போயிருக்கானா?’ ‘ம்ம்’ ‘ஏன் இப்படி பண்றே? நீ இப்படி பண்றதுனால மட்டும் என்ன ஆகப்போகுது?இன்பா என்ன நினைக்கிறானா அதத்தான் செய்வான்.’ ‘ஒண்ணும் ஆகாதுன்னு தான் போகல. ப்ரதீபா என்கிட்ட இத தான் எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன். ஜஸ்ட் ஆன் ஆப்பர்ட்யுனிட்டி ஃபார் தெம் டு டாக். எனக்கு எப்படியும் டின்னர் போற மூட் இல்ல’ ‘ஏன்?’ ‘அதான் கேக்குறனே? ஏன் இப்படி இருக்கேன்னு? என்னாச்சுன்னு சொல்லு. இல்லனா எப்படி சாதாரணமா இருக்க முடியும் என்னால?’

எனக்கு பெருமூச்சு வந்தது. ‘அகி, அகி’. சங்கடமான மௌனம் நான்கு மைல்களுக்கு நீண்டது. ‘என்னயும் இன்பாவையும் விடு அகி. இன்பா இன்னும் எதோ பழசையே நினச்சிட்டிருக்கான். அப்படித் தான் நினைக்கிறேன். ப்ரதீபா பத்தி நினைக்கிறான்னான்னு தெரியாது. ஏதோ ஒரு முடிவு தானா வரும்’ ‘இன்னைக்கு வந்துரும்னு நினைக்கிறேன்’ ‘ரைட். ஐயாம் ஜஸ்ட் டிஸ்டர்ப்ட். தட்ஸ் ஆல். நீ ஷிவாவ பத்தி சொல்லு. பேசினியா அவன்கிட்ட?’ ‘வொய் ஆர் யு டிஸ்டர்ப்ட்’ தெரியல, ஜஸ்ட் ஆங்ஷியஸ்’ ‘அபௌவுட்?’ ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன் ‘வீட்டுக்கு போகலாம்’ என்றேன். அகி அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டாள். ‘அகி, நெஜம்மா என்ன சொல்லணும்னே தெரியல. நான் ஏன் டிஸ்டர்ப்ட்-ஆ இருக்கேன்னு எனக்கே தெரியல. அன்னைக்கு உன் கிட்ட ரிஷப்ஷன்ல நடந்ததெல்லாம் சொன்னேன்ல. அதுக்கப்புறம் மூணு நாலு நாளா ஒரு மாதிரி இருக்கு. அது யாரோட ரிஷப்ஷன்னு நினவில்ல. அவ காதுல ஏதோ பிரகாசமா போட்டிருந்தா, அது என்னன்னு நினவில்ல. நான் அவ கைய தொட்டதும் அவ என்ன சொன்னா எப்படி பாத்தானு கேட்டியே, சத்தியமா ஞாபகமில்ல. மறந்துட்டேன்னு என்னாலயே நம்ப முடியல. ஐ ஜஸ்ட் ஹேட் இட்’

‘ப்ச், ப்ளீஸ்’

’நோ, ரியல்லி. தெனம் உங்கிட்ட ஷிவாவ பத்தி பேசணும்னு நினைக்கிறேன். ஆனா என்ன பேசறதுன்னே தெரியல. ஐ ஜஸ்ட் ஃபீல் ப்ளாங்க். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காத. உனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஷிவாகிட்ட இப்படி கேட்டுப் பாரு இந்த மாதிரி பேச்ச ஆரம்பி ஃபோன் பண்ணு இல்ல மெயில் பண்ணுனு சொல்லத் தோணுது அப்புறம் அவ்ளோ தான் ஏதோ யோசிக்க ஆரம்பிச்சடறேன். நான் என்ன பண்ணேன்னு திடீர்னு ஒண்ணுமே ஞாபகமில்லாத மாதிரி. ஐ ஃபீல் சோ அஷேம்ட்’

‘ஏன் எப்படியெல்லாம்? இட்ஸ் ஓக்கே. யு ஹாவ் மூவ்ட் ஆன். இது நார்மல்’

‘நோ, இட்ஸ் நாட். ஐ ஹாவண்ட் மூவ்ட் ஆன். இன்னும் ஒவ்வொரு நாளும் கஷ்டமா இருக்கு. ஆனா எதுக்குன்னு தெரியலன்னா அது எவ்ளோ முட்டாள்த்தனம். உன்கிட்ட பேசுற வரைக்கும் அது எனக்கு உரைக்கல. அப்புறம் எவ்ளோ யோசிச்சேன். பின்ன எதுக்கு தெனம் கஷ்டமா இருக்கு? ஐ ஃபீல் லைக் எ லூஸர். இன்பாவப் பாரு. ஹீ ஹாஸ் சம்திங் இன் ஹிஸ் மைண்ட். எனக்கு நல்லா தெரியும். ஆனா என்னன்னு தெரியாது. பாத்தா தெரியல, ஆனா அவன பிடிச்சு உலுக்கினா கூட அவன் விட்டு விழாத ஏதோ கஷ்டம் அவன் கிட்ட எப்பவும் இருக்கு. மே பி அவனுக்கு எல்லாம் நினைவிருக்கு. ஐ திங்க் சோ. அட்லீஸ்ட் அதுல எதாச்சும் அர்த்தமிருக்கு. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல’

‘நான் கேட்டிருக்க கூடாதுன்னு நினக்கிறியா? இல்லல்ல’

‘இல்ல. இட்ஸ் குட் இன் எ வே. லீவ் மீ அண்ட் இன்பா. என்னவோ எப்படியோ போக வேண்டிய எடத்துக்கு போயிடுவோம். ஷிவாவ பத்தி யோசி. டிலே பண்ணாத. சீக்கிரம் சொல்லு. பட் ரிமம்பர் எவ்ரிதிங். ஒவ்வொரு விஷயமும். எங்க சொன்னே எப்போ சொன்னே அவன் என்ன சொன்னான் எல்லாம். ஜஸ்ட். ரிமம்பர். எவ்ரிதிங்.’

‘ஒளற்றேன்ல? சாரி’

‘விடு’

’இத ஒன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம ஒரு வாரமா ஒளிஞ்சிட்டிருக்கேன்’

‘விடு, எனக்கு புரியுது. ஐ கெஸ்ட்’

‘இப்போ எங்க போறோம்? லெட்ஸ் ஜஸ்ட் கோ ஹோம்’

அகி எதுவும் சொல்லவில்லை. திரும்பிப் பார்த்த பொழுது ‘வேண்டாம்’னு தலையாட்னேன்’ என்றாள். ‘ஏன்?’ ‘ஷிவாகிட்ட பேசிட்டேன்’

‘எப்போ?’

‘உன்கிட்ட சொன்ன அன்னைக்கே’

‘ம்ம்’  தொண்டையிலிருந்து ஏதோ ஒன்று மூண்டு நெஞ்சுக்கு சென்றது. ‘ஃபோன் பண்ணியா?’ ‘மெயில் அனுப்சேன்’ ‘ம்’. காரின் வேகத்தை கால்கள் தானாக குறைத்தன. அகியை திரும்பிப் பார்த்தேன். ‘ஹீ செட் நோ’ ரோட்டைப் பார்த்தேன். ‘ஹீ லைக்ஸ் சம் ஒன். சீக்கிரம் கல்யாணம்.’ எதுவும் சொல்லாமல் இருந்தேன். ‘ரொம்ப அப்ஸெட் ஆயிட்டான்’. ‘சாரி’ ‘விடு, ஐயாம் ஃபைன்’ அவளை திரும்பிப் பார்த்தேன். ‘ரியலி’ என்றாள். ‘இப்ப சொல்லு. எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கவா இல்ல மறந்திடவா?’

புத்தகக்கடை மிகப் பழசாக இருந்தது. நான் உள்ளே போகாமல் கவுண்ட்டர் அருகே நின்று கொண்டேன். அகியை விட இரண்டு மடங்கு உயரத்திற்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அகி உன்னிப்பாக ஒவ்வொரு புத்தகத்தையும் பார்ப்பதையும் எடுத்து நோட்டம் விடுவதையும் சில சமயங்களில் வாசம் பார்ப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் மொபைலில் புத்தகத்தைப் பற்றி எதாவது தேடினாள். கடையில் உலவிக்கொண்டிருந்தவர்களிடம் புன்னகை செய்தாள். என்னை ஓரிரு முறை திரும்பிப் பார்த்தாள். எனக்கு ஏனோ அகி இந்தக் காதலை எப்படி எதிர்கொள்வாள் என்று முன்பெழுந்த கேள்வி நினைவிற்கு வந்தது. நான் கடைக்கு வெளியே குளிரில் வந்து கொஞ்சம் நேரம் நின்று கொண்டேன். அவசரமாக வெளியே வந்த அகி, ‘இன்பா அங்க போகவே இல்ல’ என்றாள். ‘ப்ரதீபா மெஸேஜ் அனுப்ச்சா’ என்றாள்.

இன்பா எத்தனை முறை அழைத்தாலும் ஃபோனை எடுக்கவில்லை. ‘சரி வீட்டுக்குப் போகலாம்’ என்றாள். இருவரும் காரைக் கிளப்பிக் கொண்டு புத்தகக் கடை இருந்த சாலையைக் கடந்து அடுத்த சாலைக்குள் நுழைந்தோம். இன்னும் பனியை அப்புறப்படுத்திருக்கவில்லை. கார்கள் மெதுவாக நகர்ந்தன. ஒரு கட்டத்தில் காரை அப்படியே ரோட்டில் நிறுத்திவிட்டேன். ‘என்னாச்சு’ என்று அகி நான் பார்க்கிற இடத்தில் எட்டிப் பார்த்தாள். இன்பாவின் கார் சாலையோரமாக பார்க் செய்யப்பட்டிருந்தது. காரை நானும் பார்க் செய்துவிட்டு குளிரில் இறங்கினேன். அகியும் இறங்கி ‘அவனோட கார் தானா’ என்றாள். ‘ம்ம்’ என்றேன். நீண்ட சாலை முழுக்க கார்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான ஒரு அடுக்கு கட்டிடங்கள் வரிசையாக. ‘எங்க இருப்பான்’ என்று அகி கேட்டபடி சாலையை கடந்தபடி கடைகளை நோட்டம் விட்டாள். நான் இன்பாவை அழைத்தபடி நடக்கத்துவங்கினேன். தூரத்தில் வெளியே விளக்கொளிகளுடன் பிரகாசமாக ஒரு கட்டிடம் தெரிந்தது. அதை நோக்கி வேகமாக நடக்கத்துவங்கினேன். ‘விஸ்கி டேஸ்டிங்’ என்று ஒரு பெரிய போர்டும் ‘ஃப்ரீ விஸ்கி சாம்பிள்ஸ்’ என்று இன்னொரு சிறிய பலகையும் வைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட கட்டிடம். உள்ளே கால் வைத்ததும் கரக் கரக் என்றது. ஏராளமான பொன் விளக்குகள் ரகசியம் போல எரிந்தன. கிட்டாருடன் ஒருவன் ட்ரம்ஸுடன் ஒருவன் மைக்குடன் ஒருவன் என ஒரு குழு ஒரு மூலையில் நின்று பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே ஒரு கூட்டம் கலைந்த கோலத்தில் நின்றுகொண்டிருந்தது. சிலர் புன்னகையுடன் சிலர் யோசனையுடன் சிலர் கை கோர்த்த வண்ணம் சிலர் முத்தமிட்டுக்கொண்டிருந்தனர். சிலர் பேசிக்கொண்டிருந்தது சன்னமான சிகரெட் புகையாக வெளியேறிக்கொண்டிருந்தது. ’ஒனக்கு ஓகேவா உள்ள வர’ என்றேன் அகியிடம். ‘வொய் நாட்?’ என்று என்னை பின் தொடர்ந்தாள். பாட்டுக் குழுவும் மக்களில் சிலரும் எங்களைப் பார்த்து ஒரு மிதமான தலையசைப்பைத் தந்து விட்டு மீண்டும் தொடர்ந்தார்கள். ஒரு மூலை மூழுக்க பெரிய பெரிய மர பேரல்களில் பார்லி இருந்தது. விஸ்கி செய்முறை விளக்கமும் செய்முறையும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு தடுப்பைத் தாண்டி உள்ளே இன்னும் நிறைய விஸ்கி நிறைய மக்கள். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விஸ்கி பாட்டில்களை கடந்து நடக்க நடக்க விஸ்கி பாட்டில்களின் வயது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. நான் இன்பாவிற்கு பரிசாகக் கொடுத்த விஸ்கி பாட்டில் நினைவுக்கு வர நேராக ஆறு வருடங்கள் பழைய விஸ்கி பாட்டில்கள் இருந்த இடத்திற்கு விரைந்தேன். அங்கே கவுண்டருக்கு அருகே நிறைய மர நாற்காலிகள் வரிசையாக இருந்தன. எல்லோரும் உற்சாகமாக உறக்க பேசியபடி விஸ்கியை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தை மீண்டும் மீண்டும் நோட்டம் விட்டு ஒரு இடத்தில் இன்பாவைக் கண்டு பிடித்தேன்.

இன்பாவின் முன்னே மேஜையில் ஒரே ஒரு க்ளாஸில் விஸ்கி குடிக்கப்படாமல் இருந்தது. அவனுடைய தோளைத் தொட்டதும் நிமிர்ந்து என்னையும் அகியையும் பார்த்தான். பார்வை எங்களைக் கிரகிக்காமல் நழுவி விழுந்தது. ‘இன்பா, போலாம், எழுந்திரு’ என்றேன். மீண்டும் நிமிர்ந்தவன் என்னையும் அகியையும் இரண்டு மூன்று முறை பார்த்தான். ‘சாரி’ என்றான். ‘சரி விடு, பாத்துக்கலாம், இப்ப எழுந்திரு’ இன்பா அகியிடம் சாரி என்றான். அகி ‘பராவாயில்ல, உங்களுக்கு இஷ்டமில்லன்னா நீங்க போக வேண்டாம். சிம்பிள். அவ்ளோ தான்’ என்றாள். இன்பா மெதுவாக ஆமோதித்தான். எனக்கு அந்த உரையாடல் புரியாதவனான இருவரையும் பார்த்தேன். ‘நீ மொதல்ல எழுந்திரு’ அகி ‘பசிக்குதான்னு கேளேன். ரொம்ப குடிச்சா எதாச்சும் சாப்பிடணும்னு சொல்லி கேட்டிருக்கேன்’. ‘குடிக்கல’ என்று இன்பா மெதுவாக எழுந்து நின்று கொஞ்சம் தடுமாறினான். ‘சத்தியமா இல்ல’ என்றான். என்னை தோளில் பிடித்துக்கொண்டான். ‘எப்போ வந்தே?’ என்றேன். ‘ஒரு மணி நேரம் இருக்கும்’ என்றான். நிறைய தூக்கத்திலோ நிறைய அலுப்பிலோ இருந்தவன் போல இருந்தான். ‘ஐயாம் சாரி’ என்றான் மறுபடி. ‘எவ்ளோ குடிச்சே?’ என்றேன். ‘கொஞ்சம் கூட இல்ல’ என்றவன் விஸ்கி க்ளாஸை எடுத்து ‘இப்போ ஒனக்காக ஒரு சிப்’ என்று ஒரு சிறு மிடறு அருந்திவிட்டு ‘அகி உங்களுக்காக ஒண்ணு’ என்று இன்னொரு சிறு மிடறு அருந்தினான். அகி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ‘சரி வாங்க போகலாம்’ என்று இருவரையும் அழைத்தாள். மூவருமாக மீண்டும் ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒரு வருடம் என பழைய விஸ்கிக்களை கடந்து நடந்து பாட்டுக் குழுவினரை தாண்டி வெளியே வந்தோம். இன்பா என்னைப் பிடித்துக்கொண்டே நடந்தான். வெளியே வந்ததும் அகி ‘இவன் கார் ஓட்டுவானா?’ என்று குளிரில் நடுங்கியபடி கேட்டாள். நான் இன்பாவைப் பார்த்தேன். இன்பா ஏதும் புரியாதவன் போல பார்த்தான். ‘இவன் குடிச்சிருக்கானா இல்லையான்னு தெரியல’ என்று அவனிடம் விஸ்கி வாசனை இருக்கிறதா என்று பார்த்தேன். ‘அவன் குடிக்கலன்னு தான் சொல்றான் பாத்தா அப்படி தெரியல’ என்றாள். ‘வாசன வருது’ என்றேன். ‘உள்ள இருந்தான்ல’ என்றவள், ‘சரி நீயும் அவனும் உன் கார்ல போங்க. நான் அவனோட கார ஓட்டிட்டு வரேன்’ என்றாள். ‘விளையாடறியா? ஒண்ணும் வேணாம். அவன் கார் இங்கயே இருக்கட்டும். காலைல வந்து எடுத்துக்கலாம்’ என்றேன்.

மூவருமாக என்னுடைய காரை நோக்கி நடந்தோம். இன்பா அமைதியாக என்னைப் உறுதியாக பற்றியபடி நடந்தபடி வந்தான். காரின் அருகே வந்ததும் அகி என்னிடம் ‘நீ அவன பாத்துக்கோ. நான் ஓட்டறேன்’ என்றாள். ‘ஐ திங்க் ஹீ ஈஸ் ஃபைன். குடிக்கல’ என்றேன். ‘மே பி. பட் ஹீஸ் ட்ரங்க்’ என்றாள். ’எல்லாரும் சாப்பிடலாம் போலாம்’ என்றான் இன்பா. ‘ஷுயூர்’ என்று புன்னகைத்த அகி காரில் அமர்ந்ததும்  நான் இன்பாவை உள்ளே அமர வைத்தேன். ’உன் கிட்ட இன்ஷூரன்ஸ் இல்ல லைசன்ஸ் இல்ல’ சுலபமாக உள்ளே அமர்ந்தவன் நகர்ந்து இடம் தந்தான். நான் அமர்ந்ததும் காரின் சீட்டில் இன்பா தலையை சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். ’விடு, சீக்கிரமா போயிடலாம்’ என்றாள். ‘ஒனக்கு ஓட்ட வேற ரொம்ப தெரியாது’ என்றேன். ‘கத்துக்குறேன்’ என்ற அகி இண்டிகேட்டரை போட்டுவிட்டு காரை கிளப்பி சாலையில் சேர சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். ரியர் வியு மிரரில் அகியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்பா தூங்கியவன் போல தலை சரிந்து என் தோளில் சேர்ந்தான். எல்லோருக்கும் பொதுவாக ‘சாரி’ என்றான். அகி சட்டென ரியர் வ்யு மிரரில் என்னைப் பார்த்ததும் நான் திரும்பி சாலையை ஒரு முறை பார்த்துக் கணித்து மீண்டும் அவளின் கண்களைப் பார்த்து கண்ணசைத்தேன். கார் சாலையில் சேர்ந்து பனிப்பொழிவிற்கு இடையே ஒரு நேர்கோட்டில் போகத்துவங்கியது.

Written by Aravindan

ஜூன் 10, 2013 இல் 11:13 பிப

கதை இல் பதிவிடப்பட்டது

17 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. மிகவும் அருமையாக இருந்தது. பல இடங்களில் அனாயாசமான flow. வழக்கம் போல் முடிவு மட்டும் புரியவில்லை. ஹாருகியையும் ராஜாவையும் பொருத்தமான இடங்களில் நுழைத்திருக்கிரீர்கள்.

  Loved these lines…

  //நாலரை மணிக்கே இருட்டத் தொடங்கும் பனிக்கால வெறுமை மனதையும் இருட்டத் துவங்கியது. //

  //சப்த கால பெருவெளிகளில் சேராமல் எப்போதும் மிதக்கிற அறை//,

  //ஏதோ ஒரு தனிச் செய்தி போல அதில் பொதிந்திருந்த வெறுமையும் சோகமும் இன்பா வருவதற்கு முன்னரே வீட்டில் நிரம்பி விட்டது.//

  //திரை நகைச்சுவை வசனங்களை பொருந்தாத இடங்களில் சொல்வதே பிரதான பொழுதுபோக்காக இருந்த ஒரு டின்னரில் //

  மீண்டும் ஒருமுறை தனிமையில் வாசிக்க வேண்டும்:-)

  Kaarthik Arul

  ஜூன் 12, 2013 at 10:28 முப

 2. Kaarthik – நன்றி:-) நானும் உங்கள இம்ப்ரெஸ் பண்ற ஒரு க்ளைமேக்ஸ் எழுதணும்னு பாக்குறேன், நடக்க மாட்டேங்குது😉

  Aravindan

  ஜூன் 13, 2013 at 12:31 பிப

 3. அய்யய்யோ என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரியா? நீங்க செம காமெடி சார். ஒரு வேளை உங்க கதையைப் புரிஞ்சுக்கற அளவுக்கு எனக்கு ஞானம் இல்லையோ? எதையுமே விம் போட்டு வெக்குனாத்தான் எனக்கு புரியும்:)

  Kaarthik Arul

  ஜூன் 13, 2013 at 2:00 பிப

 4. *வெளக்குனாத்தான் #typo

  Kaarthik Arul

  ஜூன் 13, 2013 at 2:13 பிப

 5. உண்மையைச் சொல்றேன் .. வர வர உன் கதையை முழுசா ஒரே தடவைல படிக்கிற பொறுமையே எனக்கு இல்ல … 3 attempt-ல தான் படிச்சு முடிச்சேன்..
  2 அகி அத்யாயம் படிக்கிறப்போ எல்லாம் ஒரு சின்ன கடுப்பே வந்திடுச்சு, இப்படி இழுக்கிறானேன்னு .. but போகப்போக அப்படி ஒரு கிறக்கம், ஜன்னலோரமா ஒரு கப் டீயோட உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்க்கிற feel.. It was a lovely experience..Thanks for that.

  // பாத்தா தெரியல, ஆனா அவன பிடிச்சு உலுக்கினா கூட அவன் விட்டு விழாத ஏதோ கஷ்டம் அவன் கிட்ட எப்பவும் இருக்கு. மே பி அவனுக்கு எல்லாம் நினைவிருக்கு. ஐ திங்க் சோ. அட்லீஸ்ட் அதுல எதாச்சும் அர்த்தமிருக்கு. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல’//
  இங்க, இங்க… இந்த வரிகள்ல the magic began !! And you have succeeded in sustaining it, till the end.

  PS: Author and இன்பாவுக்கு கிடைச்ச detailing அகி கேரக்டருக்கு இல்லன்னு மனசுக்கு படுது .. ஒரு வேளை உன்னால இன்னும் பெண்களை அந்த அளவு analysis பண்ண முடியலையோ?!!

  krithiha

  ஜூன் 14, 2013 at 3:05 பிப

  • Krithiha – YAY!

   உண்மையச் சொன்னதுக்கு நன்றி😉 (சிலர் ‘அஞ்சு தடவ படிச்சிட்டேன், நாலு தடவ படிச்சிட்டேன்’ன்னு சொன்னாங்க, அது பாராட்டான்னு இப்ப சந்தேகம் வருது😉 )

   அகியை இன்னும் பெட்டரா எழுதணும்னு நினச்சேன், வரல்ல:-)

   எப்படியோ உங்கள கமெண்ட் போட வெச்சிட்டேன்! அது போதும்😉

   Aravindan

   ஜூன் 15, 2013 at 12:25 முப

 6. Pch. Book ezhudhu aravind. I started off reading somewhere along the middle (the portion where the narrator and aki go for a drive) and then finished it through and came back to the beginning.. the atmospheric you create is so dense and layered that its really difficult to not inhabit that world, to peep into inba’s room, to not glance at you and aki as you stand by the railway station. And I feel all the characters are, you know, being set up so beautifully that when the story ends where it does, you just feel you need to know them, be in their world for just little bit longer. This story doesnt deserve to end where it does. Adhaan solren, book ezhudhu nu:-)
  Also as I read, I was sort of shocked and amazed at the way you developed the aki character. She is so much like someone very close to me, everything right from the tiny details like how she talks, handles stuff, mannerisms. In fact name kooda😉

  Very proud of you but am sure you are capable of this and so much more.:-)

  Amilie

  ஜூன் 16, 2013 at 2:25 பிப

 7. Mi – YAY!

  I knew this is more than a short story and less than a novel (probably), glad you felt the same. And yeah, it is based on a lot of people I know personally. (“name kooda” – okay okay!)

  Thank you for being proud of me and such a nice comment😉

  >>you and aki>> Err, it is not me, it is the narrator.😛

  Aravindan

  ஜூன் 16, 2013 at 4:18 பிப

 8. ஒரு தடவை தான் படிச்சேன்.
  மறுபடி படிப்பேன்னு தோணுது. உடனே தோணுறதை உடனே சொல்ற பழக்கம் இப்பொல்லாம்.

  I am not a big fan of ‘slice of life’ short stories. And I tend to undervalue the mood creation that the author has achieved because of very traditional expectations of payload, tension & relief and all that. It is quite an inexplicable impasse – between a distaste for plot-heavy stories which have ‘built for a purpose’ characters and the sense of incompleteness than one gets in mood/character pieces which stop with a snapshot.

  That was to reiterate my parochial approach to temper how my comments ought to be received:-) இதுக்கு மேல ‘தன்னைப் பற்றியே பேசிக்கொள்ளுதல்’ல மேலும் இறங்கிடாம – always temptation hard to resist – கதை’க்கு வரேன்.

  The moods, the characters, the hesitations – home turf.
  The inevitable discomfort in gauging and slotting interpersonal relationships – there’s so much to write and you write them well and engrossingly each time.

  // நீங்க வாங்க போங்க என்று சொல்ல விருப்பமில்லாமல் மழை நாள் சாலையில் நடப்பது போல அவற்றைத் தாண்டி தாண்டிச் சென்றுகொண்டிருந்தோம்//

  // ஏதோ ஒரு தருணத்தில் அவனுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது//

  The first conversation with inba – was the best ‘phase’ of the story for me. The hyper-conversation that ‘reality’ scarcely affords, that cannot be ‘depicted’ in detail plausibly, that which is closest to literature itself.
  That conversation – which remains undepicted and only (well) described – beat all the conversations in this story.

  And yet there is a distance. And yet such a conversation (probably) never happened with Agi – and there is an assumption of closeness – an assumption seemingly shared by the narrator, who is anything but blasé the elephant in the room in such friendships, but they seem to share a mutual amusement about others’ assuming things about them!

  I felt the flashbacks were not as well told – both the ‘incidents’ and the recounting. They seemed flat. And since a lot of the later conversation were around it, it could have been spelt more effectively. But then I know there is only so much time and space that the story can spend on it. And that, it has to be reflected through how much the narrator, in his current state , is likely to engage with it. So I do see your constraints. In fact, one of my other points of criticism were the story itself could have been tighter. So I don’t know how to reconcline these two disparate pieces of inconsistent criticism.

  But then, that’s the irresponsible luxury of being on this side of the table:-)

  By default in first person narratives one is invested in everyone through the narrator. So him telling Agi about Inba (wrt Agi’s concerns for the ‘excited’ hostess) seemed telescoping further and further away.

  Although I wouldn’t say I liked it as many of your other pieces, I feel I did like it better than I am able to crystallize into a comment.

  The all pervasive unease of niceties in modern life/relationships coupled with the fundamentally independent nature of personal contentions, makes ‘help’ a ridiculously clumsy attempt, leaving one with the option to do the only thing we can perhaps bring ourselves to do – empathize and witness each other fumble through.

  To quote your narrator: ”‘ஒளற்றேன்ல?”

  அப்புறமா இன்னொரு தடவை படிச்சுட்டு வரேன்.

  btb, sorry to break it to you முப்பதுன்றது இருவத்தேழோட மூணு சேர்த்தா வர்றது. அவ்வள தான்:-)

  dagalti (@dagalti)

  ஜூன் 17, 2013 at 5:31 முப

  • Prabhu – Thank you. Before anything, after finishing writing up this story, there was only one comment in my mind. “எங்கோ துவங்கி அம்போவென முடிக்கிறார்கள்”. Not verbatim, not as told by Sujatha, but rather you quoting him.😉 (கவிதைய ஒரு வழியா முடிசிட்டேள், அடுத்து இது தான்னு நினைக்கிறேன் :P)

   >>between a distaste for plot-heavy stories which have ‘built for a purpose’ characters and the sense of incompleteness than one gets in mood/character pieces which stop with a snapshot>>

   >>In fact, one of my other points of criticism were the story itself could have been tighter. So I don’t know how to reconcline these two disparate pieces of inconsistent criticism>>

   This is so me. I haven’t spent time on any post as I did on this one and a couple of times I was this close to scrapping the whole thing, but I had to find the answer for the above two questions I was asking myself during writing. And the only way out seemed to write this one. There was this point of, I don’t want to put it this way, compromise – at which I stopped and tried to strengthen whatever was on paper. (Only now it seems like a compromise, but then there is this high of achieving something). And then I happily moved on to greater questions like – ‘what is short story? ‘why write?’ etc only this time I had a little more clarity to these thoughts.

   >>But then, that’s the irresponsible luxury of being on this side of the table>>

   of course. I might be even making all these attempts only because I don’t have that luxury and hearing about the story from others helps a great deal.

   >>empathize and witness each other fumble through>>:-)

   >>sorry to break it to you முப்பதுன்றது இருவத்தேழோட மூணு சேர்த்தா வர்றது. அவ்வள தான்>. loffing lyk nything.

   Thank you very much! மறுபடியெல்லாம் படிக்காதீங்க. நானே அதெல்லாம் தப்பித்தவறி கூட செய்யறதில்ல.

   Aravindan

   ஜூன் 17, 2013 at 11:31 முப

 9. சார்,
  மொத தடவயா உங்கப் பதிவ படிக்கிறேன்..உங்க எழுத்து நடை எனக்கு புதிது..தொடக்கத்துல கொஞ்சம் கொழப்பமா இருந்தது ஆனா பாத்திரங்கள் மனசுல பதிய ஆரம்பிச்சதும் எளிதா நடையும் கதையும் புரிய ஆரம்பிச்சுடுச்சு..ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகளையும் சூழலும் அருமையா பதிவு பண்ணிருக்கீங்க… சில வாக்கியங்கள்ல அதிகப்படியான சொல்லாடல்கள் இருந்ததா பட்டது ;-( … மன்னிக்க …

  இவண்
  அருண்

  Arun Rajendran

  ஜூன் 21, 2013 at 8:49 பிப

  • அருண் – வருக, வருக! நன்றி:-) மன்னிப்பெல்லாம் எதுக்கு, நீங்க இன்னும் அழுத்தந்திருத்தமா நிறைய சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும்:-)

   Aravindan

   ஜூன் 22, 2013 at 11:52 பிப

   • சார், ஒரு மின்னஞ்சல் உங்களுக்குப் பார்சல். எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் சார்..வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாதிங்க😦

    Arun Rajendran

    ஜூன் 25, 2013 at 6:19 பிப

 10. நான் சிறு கதைகளுக்கு (நாவல்களுக்குக் கூட) ரிவ்யூ எழுதறது இல்லை:-). ஃபீல் என்ன கவுத்து போட்ரும்:-) இந்த பொழுது சாயும் காலத்தோட மாயை என்னன்னா விடியாம இருந்துட்டா தேவலாம்னு இருக்கும். அது ஏறக்குறைய உங்க, ந்ம்ம நேப் டைம் மாதிரி தான். போதைத் தரக்கூடிய சமாச்சாரம். இந்த போதைக்கு மேல பனி வேற‌ பெய்யறது மீள முடியாத இன்பம் துன்பம் தரக்கூடியது. மனநிலையை அப்படியே திருப்பிப் போடக்கூடிய சமயம் அது. எல்லா கதையும் அந்த பின் மாலை பொழுதுலேயே நடக்கக்கூடாதான்னு எனக்கு ஒரு ஏக்கம். நானும் கொஞ்சம் ஒளற்றேன்ல? விஸ்கி குடிச்சா அப்படித்தானோ?:-):-)

  Chandsethu

  ஜூன் 21, 2013 at 10:09 பிப

  • Sethu – >>இந்த பொழுது சாயும் காலத்தோட மாயை என்னன்னா விடியாம இருந்துட்டா தேவலாம்னு இருக்கும்>>:-) >>எல்லா கதையும் அந்த பின் மாலை பொழுதுலேயே நடக்கக்கூடாதான்னு எனக்கு ஒரு ஏக்கம்>> பிரகாஷ்ராஜ் சொல்றா மாதிரி, ரொம்ப “அழகான விஷயம்”:-)

   நன்றி.

   Aravindan

   ஜூன் 22, 2013 at 11:53 பிப

 11. Beautifully written. I got this link through Benly a while ago, but could get to reading it only now. I love slice of life. Pliss tekkit one <O–<😀

  Jäger

  ஓகஸ்ட் 8, 2013 at 12:39 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 40 other followers

%d bloggers like this: