சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Posts Tagged ‘கவிதை

இரண்டு கவிதைகள்

ஒரு மறுமொழியுடன்

பகல் கனவு

நேற்றைப் பற்றிய
தெளிவில்லாத
தவறான குறிப்புகளை
தினமும் அதிகாலையில்
எழுதுகிறது
கனவு

எல்லாம் தவறாக நடைபெற்ற
நாளொன்றின் குறிப்புகளை
அது
திருத்தி சரியாக எழுதும்
தினத்தை
நான் வாழ்ந்திருந்தேன்
தலைகீழாக

——————————-

தனிமையுடன் தனித்திருத்தல்

வழியெங்கும் இரு புறமும்
தலையெடுத்து நிற்கும் விளக்குகள்
ஜன்னல்கள் வழியே
வெட்டிக் கொள்ள,
விழுந்து நகரும்
ஒளி-நிழல்
செவ்வகங்களும்

நினைவலைகளின் மேலே
இலக்கின்றி மிதக்கும்
வெறித்த கண்களும்

இணையும் புள்ளியில்
சீராக
விரைகிறது
இந்த இரவுப் பேருந்து

Written by aravind

அக்டோபர் 13, 2009 இல் 3:06 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

காதலைப் பற்றிய ஒலி/ஒளிக் குறிப்புகள்

2 மறுமொழிகளுடன்

தனித்தனிக் கவிதைகளாக இருந்தாலும், காதலின் பல நிலைகளில் சிலவற்றை வரிசைப்படி விவரிக்க முயன்றிருக்கிறேன். எவை எவை என விளக்க வேண்டிய அளவு கடினமில்லை என்று நினைக்கிறேன். ரூம் போட்டு யோசிக்க உடனடி வசதியில்லாதவர்கள் ரொம்ப குழம்பிக்கொள்ளவேண்டாம்.

—————————————————————————————————–

காதல் மின்னும்
மனதின் மேற்பரப்பில்
மிதந்து கொண்டிருக்கிறது
தெளிவில்லாத
உன்னுடைய
ஏதோ ஒரு பிம்பம்.

நெற்றிச் சுருக்கி
கூர்ந்து கவனிக்க,
அமைதியாக
கழிந்து கொண்டிருக்கிறது
இரவு.

******

சுற்றி இருப்பவர்களின்
கவனிப்பில்
சிக்காத குறிப்புகளை
நீ அடைக்கத் துவங்கியிருந்தாய்
உன் வார்தைகளில்

உன் வீட்டிற்கும்
என் வீட்டிற்கும்
இடையில்
தினம் நூறு முறை ஓடும்
இந்த ரயில்
கடக்கிறது
எல்லோருக்கும் பொதுவாக
முழங்கியபடி.

******

அமைதியாக
அதிரும்படி
அலைபேசியை
பணித்திருந்த
இரவின் வெளியில்
மின்மினிப்பூச்சிகளாகின்றன
உன் குறுந்தகவல்கள்

******

ரசனைகள் குறித்த
ஆயிரம் வாதங்கள்
நமக்குள்
நிகழ வைத்த
பாடலொன்று
காற்றலையில் ஒலிக்கையில்
ஒரு வானவில்
இணைக்கும்
நம் புன்னகைகளை

******

மழைக்காலத்தின்
முதல் மாலைப்பொழுதில்
கரங்கள் பிரித்து
நீ நடக்கத் துவங்குகிறாய்
ஒரு பிரிவை நோக்கி

நமக்கிடையில்
நீளும் வழியெங்கும்
இறைகிறது
தவளைகளின் சத்தம்.

——————————

கடைசிக் கவிதையில் இறை / இரை இரண்டையும் முயற்சித்துப் பார்த்துவிட்டு, இதைதேர்ந்தெடுத்தேன்.

Written by aravind

ஆகஸ்ட் 10, 2009 இல் 5:10 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

பிளாஸ்டிக் குருவி / கடவுளை வரைதல்

5 மறுமொழிகளுடன்

உள்ளங்கை அளவில்
ஒரு குயில் பொம்மை
அம்மா வாங்கி வந்தாள்
குழந்தைக்கென.
வாலைத் தொட்டால் சத்தமிடும்
“கூ குக்கூ குக்கூ
குக்கூகுக்கூகுக்கூ”.
இரண்டு நாள் குழந்தை விளையாடியது.
ஒரு நாள் நாங்கள் விளையாடினோம்.
நான்காம் நாள் கிடந்தது
டி.விக்குப் பக்கத்தில் தலை குப்புற.
டீ.வி.யின் அதிர்வு,
ரிமோட் வைத்தல் / எடுத்தல்,
பெருங்காற்று
எல்லாம் ஆனது
“கூ குக்கூ குக்கூ
குக்கூகுக்கூகுக்கூ” – ஆக.
பின்பு
பீரோவை திறக்கும் போது
நாற்காலியை இழுக்கும் போதெல்லாம்
சத்தம் போடத் துவங்கியது.
எங்களுக்கு புலப்படாத
அசைவுகள் எல்லாம்
ஆனது
குயில் சத்தமென.
விருந்தாளிகள்
கண்களை அலைய விடுவர்
நாங்கள் கவனம் விலகாமல் பேசுவோம்.
ஒரு நாள்
எங்கள் காதுகள் பழகிய
சப்தவெளியில் கலந்து விட்டு
இல்லாமல் போனது.
பின் ஒரு அசதியான மதிய வேளையில்
எல்லோரும்
திடுக்கிட்டு திரும்பினோம்
“கூ குக்கூ குக்கூ
குக்கூகுக்கூகுக்கூ”
என
இந்த பெருநகரத்தில் மிஞ்சிய
கடைசிக் குயிலொன்று
கூவிய போது.

—————————————

இரண்டாம் வகுப்பு, எப்போதும் முதல் ரேங்க்
என்று அறிமுகப்படுத்தப்படும்
ரேஷ்மியை அழைத்து
‘கடவுளை வரை’ என்று சொன்னேன்
பேப்பரை நீட்டியபடி.
‘ஒரு நிமிஷம் அங்கிள்’ என்று ஓடியவள்
ஸ்கெட்ச் பென்களோடு ஓடி வந்தாள்.
தரையில் இருவரும் அமர்ந்துகொண்டோம்.
‘நீயும் வர’ என்று
எனக்கொரு பேப்பரை நீட்டினாள்.
சடசடவென ஆறு கைகள் வரைந்தாள்.
ஒன்றில் பூக்கள்; ஒன்றில் பலூன்கள்;
ஒன்றில் சாக்கலேட்டுகள்.
பின் மீண்டும் பூக்கள்.
கடவுளின் காலடியில் நீமோ, அது இருக்க ஒரு குட்டி குளம்.
இந்தப்பக்கம் பாண்டா, அதன் மேல் கொஞ்சம் பனிமழை.
அந்தப்பக்கம் எனக்குத் தெரியாத இன்னொரு கார்டூன்.
கண்ணைப் பறிக்கும் நிறங்கள்.
omerflowers.jpgகடவுளின் வாய், அகல திறந்து சிரிக்கிறது.
பேப்பர் நிரம்ப நிரம்ப வரைந்தாள்.
கடவுளை முதலில் வரைந்தவன்
கண்டிருக்க வேண்டிய ஓவியம், அதை
என்னிடம் தந்துவிட்டு ஓடிவிட்டாள்.
இனி ஒவ்வொரு நாளும்
அதிலிருந்து அழியும்
ஒவ்வொரு கோடாய்.
பின்பு ஒரு நாள் அது தேய்ந்துவிடும்,
என்ன வரைவது எனத் தெரியாமல்
நான் கிழித்து வைத்த
ஒற்றைக் கோடென.

(புகைப்படங்கள் – www.iditmatan.com)

Written by aravind

ஏப்ரல் 28, 2009 இல் 3:44 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

உதிரிப் பூக்கள்

2 மறுமொழிகளுடன்

347379161xswybr_fsவேண்டாம் என்று விழி மூடுகையில் விழுந்துவிட்ட கண்ணீர் துளி
என்று கண்ட நாளிலும்
தொலைந்த போன நட்பு
என்று கண்ட நாளிலும்
வெறுமனே கடந்து சென்றேன்.
இடையில்
கவிதைகள் வேண்டப்படாத
நாளொன்றில்
வெறும் உதிர்ந்த பூக்கள்
என்று கண்ட போது
கடந்து சென்றேன்
ஒரு சின்னப் புன்னகையோடு.

————————————–

உதிர்ந்த பூவொன்றை
கையிலெடுத்து
அழகை ரசித்து முடித்த பின்
நினைவுக்கு வந்தது
பெரியப்பா பிணத்தின்
பெரு விரல்களை
சேர்த்து கட்டிய போது
தொண்டையில் விக்கிய விறைப்பு.

என் இறப்பு இருக்கட்டும்
இந்த உதிரிப் பூக்களைப் போல.

Written by aravind

பெப்ரவரி 26, 2009 இல் 3:13 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

பிளாட்ஃபாரம் எண் 6 – சில குறிப்புகள்

13 மறுமொழிகளுடன்

தடதடவென
உள்ளே வந்த ரயில்
இடித்து கொண்டு முன்னேறியது
ஏழே முக்கால் பிளாட்ஃபாரமை.

கடைசி பெட்டி
வெளியேறுகையில்
பின் விட்டு செல்லும்
எட்டு மணி பிளாட்ஃபாரமை.

*****************

இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
இது வரை
கடந்திருக்கிறது
ஆறு ரயில்களை.
மூன்று பாசஞ்சர்,
ஒரு கூட்ஸ்,
நிற்காமல் கடந்த
ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
எல்லாம் சேர்த்து.

*****************

இந்த
எடை பார்க்கும் மிஷின்கள்
பிறந்தது
வளர்ந்தது
எல்லாம்
இதே
பிளாட் ஃபாரத்தில்
தானா?

*****************

யானைப்பிளறல் ஒன்று கேட்கிறது.
மடை திறந்தது போல
ஆயிரம் வார்த்தைகள்
அமைதியாக பேசிக் கொண்ட
விழிகளுக்கிடையில்
நீளத் துவங்கியது
ரயில்.

*****************

ரயில் புறப்பட்ட போன பின்
கசக்கி எறியப்படுகின்றன
காலி காஃபி கோப்பைகள்
பிளாஸ்டிக் கவர்கள்
மற்றும்
சொல்லாமலே விட்டு விட்ட
சில வார்த்தைகள்

Written by aravind

ஜனவரி 22, 2009 இல் 5:02 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,