சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Posts Tagged ‘கவிதைகள்

Ittefaaq se :)

2 மறுமொழிகளுடன்

ஒரு பாடலின் மீது பித்து பிடித்து அலைவது, என்னிடம் இருக்கும் பலவீனங்களில் எனக்குப் மிகப் பிடித்தது. கடந்த இரு வாரங்களாக வேறெதையும் கேட்காமல் ‘பா’ படத்தில் ராஜாவின் இசையில் வருகிற பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஷில்பா ராவின் குரலில் ஒலிக்கிற இரண்டு versionகள், ஒரு மாலை நேர காதல் சந்திப்பு, காத்திருப்பு தரும் பரவசத்தையும் குதூகலத்தையும் தருகிறது. பி.சி.ஸ்ரீராமின் தகதகக்கும் ஒளிப்பதிவு (பாடல் இங்கே - ஆடியோ தரம் அத்தனை சிறப்பில்லை) காதல் கனவுகளை சிறகடிக்க வைக்க, சில காதல் கவிதைகள், அந்த பாடல்களுக்கு சின்ன dedication :)

 

 

 

 

 

 

 

————————-

சிறுமிகள்
உற்சாகமாக
கைகள் கோர்த்தபடி
சாலைகளை கடக்கின்றனர்

வானேறத்
துவங்குகின்றன
பட்டங்கள்

விற்பனைக்கு
வந்து விட்டன
புத்தம் புதிய பூக்கள்
வண்டியை உதைத்து
கிளப்புகிறேன்
உன்னிடம் தேடி

ஒரு பொன்மாலைப் பொழுதை
கையில் கொண்ட படி

————————————-

எப்பொழுது? / இப்பொழுது

உன் விழிகளில்
விழ

ஒரு ரகசியமான புன்னகையை
கொள்ளும்
இப்பொன்பொழுதினைப்
போல்
வேறெதுவுமில்லை

————————————-

பால் மயக்கம்

எதிரெதிர் இருக்கைகள்
இரண்டு கோப்பைகள்
உதடு துடைக்கும் டிஷ்யு பேப்பர்கள்
காத்திருக்கின்றன

ஒரு காதல் ஜோடியென
நாம் வந்தமர்ந்த பின்

தத்தம் பாலினங்கள்
தீர்மானிக்கப்பட

————————-

பறவைகள் கிறீச்சிடும் பொழுதுகள்

கவனத்தில்
இல்லவே இல்லை
பேசப்படும் வார்த்தைகள்

இருபுறமும்
முடிவில்லாமல்
திரிக்கப்படும்
ஒலிக்கயிறில்
இப்படியும் அப்படியும்
போய் வருகிறது
காதல்

————————————-

காதல் அலையும் நெடுஞ்சாலை

உற்சாகமாக
உருண்டோடும் எதையோ
தட்டிக்கொண்டே
நடக்கிறேன்
உன்னோடு

வழி தேடுவபர்கள்
நேரம் கேட்பவர்கள்
பூக்காரிகள்
வேடிக்கை பார்ப்போர்

குறுகுறுப்பாக
இருக்கிறது
மூன்றாமவர் முன்னிலையில்
ஒரு நொடி
நம் ரகசிய காதலை
நடத்த

நம்மை கடந்து சென்றபின்
அவர்களும்
தட்டிக்கொண்டே நடக்கலாம்
தத்தம் காதல் நினைவுகளை

————————————-

சலனங்கள் இல்லாத
நீர்பரப்பின் மேல்
தங்கமாய் மின்னுகிறது
இந்த மாலைப்பொழுது

வா
மிதப்போம்
இரு பூக்களாக

————————————-

“உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே, அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்று வைரமுத்து நறுக்கென்று சொன்னதைத் தான் கொஞ்சம் நீட்டி முழுக்கி ‘காதல் அலையும் நெடுஞ்சாலை’யில் சொல்லியிருக்கிறேன் ;)

இதே மெட்டை பிரிவில் உருகி உருகிப் ஷான் பாடுகிற பாடலுக்கான டெடிகேஷன் – விரைவில் ;)

Written by aravind

நவம்பர் 27, 2009 இல் 4:56 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

கவிதை இரவு இரவு கவிதை

10 மறுமொழிகளுடன்

night

வழிகள் தெரியாமல்
அகண்டு விரிந்த பலகையின் மேலே
இருண்ட திசையில்
ஊர்ந்துகொண்டிருந்தேன்
சிறிய பூச்சி போலே

திடுமென
ஒரு தலைகீழ் திருப்பம்

பார்த்தால்
பகலாகியிருந்தது!

************

ஆளில்லாத சமவெளியில்
ஒற்றை மரமாக
நின்றிருந்தேன்
தலைக்கு மேல் பெருமேகமென
இரவு என்னை கடக்க.

—————————————————————

தட்டிவிட்ட குவளையின் நீர் போல
மெதுவாக என்னை வந்தடைந்தது
உள்ளறையின் ஒலிகள்.
அம்மா நாளிதழால் விசிறிக்கொண்டிருக்கிறாள்.
சின்ன அக்கா தொட்டிலை
முன்னிழுத்து பின்னே
முன்னிழுத்து பின்னே தள்ளிக்கொண்டேயிருக்கிறாள் .
என் விழிகளை கூடவே அசைத்துப் பார்க்கிறேன்.
பெரிய அக்கா தூங்கி விட்டாள் போலும்.
சொந்த ஊரின் மின்வெட்டுகளைப் பற்றி
அம்மா பேசத்துவங்குகிறாள்
ரகசியம் போன்ற குரலில்.
திரும்பிப் படுக்கையில் வளையல் ஒலிகள்.
வியர்வை கலந்த பெருமூச்சுகள்.
‘அபி தூங்கிட்டான் போல’ என்று
அக்காவிடம் சொல்கிறாள்.
எனக்கு பெரும் புன்னகை வருகிறது.
மெல்ல மெல்ல ஒலிகள் தேய்ந்து
அமைதியில் கலந்தோம்.
பெரும் சத்தத்துடன்
மின்விசிறிகள் சுழலத் துவங்கின.
மின்சாரம் வந்ததும்
எல்லாரும் துண்டிக்கப்பட்டோம்.

************

ஒரு வீட்டிலிருந்து
மற்றொன்றுக்கும்
பின் வேறோன்றுக்குமாக
தாவிக்கொண்டு
ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தது
கறுப்புப் பூனையொன்று
கடிகாரச் சத்தங்களின் மீதேறி
நடந்தபடி.

Written by aravind

மே 26, 2009 இல் 3:32 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

வீடு திரும்புதல்

8 மறுமொழிகளுடன்

ஒரு சிக்னலில் இருந்து
மற்றொன்றுக்கு
பைத்தியமென விரைகின்றது வாகனம்.
எங்கள் பேருந்து
உறுமிக்கொண்டிருக்கும்
சமீபத்திய குத்துப்பாடலின் வரியொன்றை
அடித்து
வேறொன்றை எழுதிச்செல்கிறது
வலப்பக்கமாய் முன்னேறும் வாகனம்.
தாமதத்தால் சுருங்கும் முகங்கள்
வழியெங்கும்.
முன்னாலும் பின்னாலும்
தொடர்கிறது
நெரிசல்.

அச்சமூட்டுவதாக உள்ளது
இப்பெருநகரம்
இப்போது நிகழ்த்திக்கொண்டிருக்கும் சடங்கு
வீடு திரும்புதல்
என்பது.

——————————————

நீரடைத்த பொலீத்தீன் பையில்
இரு மீன்களோடு
ஆற்றங்கரையில் இருந்து
நடக்க நடக்க
தொலைவாகிக்கொண்டிருக்கிறது
வீடு

——————————————-

குளிர் மலையிலிருந்து
வீடு திரும்புகிற நானும்
முன்பொரு நாள்
வெயில் பிரதேசத்திலிருந்து
வீடு திரும்பிக்கொண்டிருந்த நானும்
சந்திக்கிற புள்ளியில் இருக்கிறது
என் வீடு

—————————————

எல்லாம் எடுத்து வைத்தாயிற்று
எல்லாரிடமும் சொல்லியாயிற்று
விடாமல் சிந்திக்கொண்டிருக்கிறேன்
புன்னகைகளை.
‘ஏழு மணிக்கு தான் ட்ரெயின்
இன்னும் நேரம் இருக்கு’
என்று சொல்லிக்கொண்டாலும்
என்னை இடித்துக்கொண்டு
குடுகுடுவென
பையுடன் ஓடுவான்
பள்ளிக்கூடம் விட்டதும்
ஓடியே வீடு திரும்பிய
என் சின்னவயது நான்!

—————————

Written by aravind

மார்ச் 21, 2009 இல் 10:19 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

பிளாட்ஃபாரம் எண் 6 – சில குறிப்புகள்

13 மறுமொழிகளுடன்

தடதடவென
உள்ளே வந்த ரயில்
இடித்து கொண்டு முன்னேறியது
ஏழே முக்கால் பிளாட்ஃபாரமை.

கடைசி பெட்டி
வெளியேறுகையில்
பின் விட்டு செல்லும்
எட்டு மணி பிளாட்ஃபாரமை.

*****************

இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
இது வரை
கடந்திருக்கிறது
ஆறு ரயில்களை.
மூன்று பாசஞ்சர்,
ஒரு கூட்ஸ்,
நிற்காமல் கடந்த
ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
எல்லாம் சேர்த்து.

*****************

இந்த
எடை பார்க்கும் மிஷின்கள்
பிறந்தது
வளர்ந்தது
எல்லாம்
இதே
பிளாட் ஃபாரத்தில்
தானா?

*****************

யானைப்பிளறல் ஒன்று கேட்கிறது.
மடை திறந்தது போல
ஆயிரம் வார்த்தைகள்
அமைதியாக பேசிக் கொண்ட
விழிகளுக்கிடையில்
நீளத் துவங்கியது
ரயில்.

*****************

ரயில் புறப்பட்ட போன பின்
கசக்கி எறியப்படுகின்றன
காலி காஃபி கோப்பைகள்
பிளாஸ்டிக் கவர்கள்
மற்றும்
சொல்லாமலே விட்டு விட்ட
சில வார்த்தைகள்

Written by aravind

ஜனவரி 22, 2009 இல் 5:02 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

ட்ராஃபிக் – சில குறிப்புகள்

4 மறுமொழிகளுடன்

தொலைக்காட்சியில் வருகிற ராமாயணத் தொடரின் பாடல்களுக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் டிப்ரசிங்காக இருப்பது சென்னை நகரின் ட்ராபிக் தான். அதை பற்றிய ஒரு சின்ன முயற்சி. போக்குவரத்து நெரிசலின் நான்கு விதமான அம்சங்களை நான்கு கவிதைகளில் படம் பிடிக்க முயற்சித்துள்ளேன்.

—————————

விட்டு விட்டு பொருந்தின
மெதுவாய் முன்னகரும் காரின்
பின் சீட்டு கண்ணாடியில்
மூக்கு அழுந்திய
அந்த கரடி பொம்மையின் கண்களும்
என் கண்களும்.
இரண்டுக்கும் இடையே
ஒரு வெற்றுப் பார்வையென
சிக்கித் திணறியது ட்ராஃபிக்.

*****

அவரவர் காதுக்கு பாயும்
அவரவர் இசை
அவரவர் காற்றலையில்
அவரவர் பேச்சு
பெருநகரமே கலக்கும்
ஒரு பேரூர்வல ட்ராஃபிக்கில்
தனித்தனியாக

*****

அசந்த நேரம் பார்த்து
என் பெப்சியை தட்டி பறித்தாள்
அழுக்கு உடையுடன்
பிச்சை கேட்டு
அடம் பிடித்த சிறுமி.
திடீரென கருணை முகமாக மாறி
மூளை குழம்பிய
அந்த கிழிந்த ஆடை பெண்ணுக்கு
பெப்சியை தந்தாள்.
எங்கிருந்தோ வந்த
அந்தச் சிறுமியின் அம்மா
சிறுமியையும் என்னையும் சேர்த்து
வையத் தொடங்கினாள்
காரின் கண்ணாடியை ஏற்றியும்
ஒரே டிராபிக் இரைச்சல்.
கண்ணாடியை முட்டியபடி
மூன்று பேரின் முகமும்.
பச்சை சிக்னலும்
ஆக்சிலரேட்டரும்  இல்லை
அந்த கொடுங்கனவில்.

*****

அவசரமாக சொல்லவேண்டியதை
அழைத்து சொல்லியாயிற்று
உன் கண்களை
நினைத்துப் பார்த்துக்
கொண்டுமாயிற்று.
உன் உள்ளங்கையின்
தண்மைக்கு காத்திருக்கும்
என் உள்ளங்கையின்
வெம்மை மட்டும் பெருகும்
இந்த ட்ராஃபிக் உஷ்ணத்தில்

Written by aravind

ஆகஸ்ட் 24, 2008 இல் 1:54 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,