சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Posts Tagged ‘கல்லூரி

கல்லூரி

3 மறுமொழிகளுடன்

kallori161107_22.jpg

எந்த உண்மையான சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டதல்ல இப்படம் என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது படம். மொத்த படத்திலும் இருக்கிற ஒரே ஒரு பொய் அது மட்டுமே!

முதல் நாள் கல்லூரிக்கு வருகிற ஜூனியர்களுக்கு சீனியர்கள் கானா அறிவுறை சொல்லும் பஸ் பயணத்துடன் ஹை வோல்டேஜில் துவங்குகிறது படம். ஏற்கனவே பழக்கமான ஒன்பது நண்பர்களுடன் பத்தாவதாக ஒருத்தி இணைய, தொடர்கிறது கல்லூரிக் கதை. அந்த ஒன்பது பேரின் நடிப்புக்கும் ஒரு சபாஷ்!

கடைசியாக எப்போது உங்கள் நண்பர்களின் சாயலையோ தெரிந்தவர்களின் சாயலையோ திரையில் பார்த்தீர்கள்? இந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் ஒன்றே ஒன்றாவது உங்களுக்கு யாரையோ ஞாயபகப்படுத்தும்! அத்தனை அழகும் இயல்பும் கதாபாத்திரங்கள்!

யார் இந்த ஹேமலதா?? வறுமையின் பிடியிருந்து மீள முயலும் தன்னையும் நண்பர்களையும் எப்போதும் நல்வழிப்படுத்தி, நாகரீகம் கற்றுத் தந்து, பக்குவப்படுத்தி, பெண்களையும் ஆண் பெண் நடபையும் இழிவுபடுத்துவோரை அடிக்க பாயும் பெண்ணாய் அசத்தியிருக்கிறார்.

யாரோ போல் அந்நியமாய் அறிமுகமானாலும் போகப் போக கச்சிதமான முகபாவங்களும் காதல் குழப்பங்களுமாய் கவர்கிறார் தமன்னா. “கேடி” , “வியாபாரி” படங்களுக்குப் பின் காணாமல் போக இருந்தவருக்கு கோடம்பாக்க கல்லூரியில் க்ராண்ட் ரீ அட்மிஷன்!

நண்பர்கள் காதலிக்க கூடாது என்று எண்ணும் ஒருத்தியும், நண்பனை காதலிக்கு அவள் தோழியும் கடைசி கட்டத்தில் மனம் விட்டு பேசிக்கொள்கிற காட்சி ஆஹா!

அடக்க ஒடுக்கமான ஏழை மாணவனாய் கவர்கிறார் அகில். தமன்னா தன்னை கவனிக்கவில்லை என்று கலங்கும் போதும், பின்னர் தமன்னாவின் ஆர்வம் அறிந்து குதூகலிக்கும் போது அத்தனை இன்னொசென்ஸ்!

நண்பர்கள் அனைவரும் கனக் கச்சிதம். அவர்களின் குடும்பப் பிண்ணனியை நச்சென ஒரே காட்சியில் சொல்லியிருப்பது பக்குவம்! தமன்னா தன்னுடைய அப்பாவை “டாடி” என்றழைப்பதை அறிந்து மற்றவர்கள் தத்தம் அப்பாக்களை அப்படி அழைத்துப் பார்த்து கனவு காண்கிற காட்சி குபீர் சிரிப்பு!!

அகில் தமன்னாவுக்கிடையேயான ஈர்ப்பு மெது மெதுவாய் வளர்வது அழகு. காதலா நட்பா என்று தவித்து உருகும் தருணங்களில் கறை ஒட்டிக்கொண்ட கர்ச்சீஃப் மற்றும் தொடர்ந்து துரத்தி வரும் ரிஷப்ஸன் பாட்டு சிம்பாலிஸம்கள் கவிதை.

செழியனின் காமிரா செழிப்பு. தமன்னா இவ்வளவு அழகா என்று வியக்க வைக்கிறார். மழையில் கால்பந்து விளையாடும் போது இரு மனங்கள் தனியே கால்பந்து ஆடும் காட்சி ஜிலீர்!

பலவிதமான டிஃபன் பாக்ஸுகள் உலர்கிற அந்த விளம்பர ஹோர்டிங் ஐடியா பளிச்!

நன்றாக எழும்பி வந்த பந்தில் சூப்பர் சிக்ஸர் அடிக்காமல் டொக்கு வைத்திருக்கிறார் ஜோஷ்வா! “உன் அருகில்” பாடல் மட்டும் தாலாட்டு. பிண்ணனி இசையின் பிண்ணனியில் “காதல்”!

எளிமையே பிரம்மாண்ட அழகு என்று அழுத்தம் திருத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் பாலாஜி ஷக்திவேல். ஷங்கர் தயாரிப்பில் அதை நிருபித்திருப்பது மிகச் சிறந்த கோடாம்பாக்க irony! இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்!

திரைக்கதை கட்டமைப்பு அநியாயத்திற்கு இயல்பு. ஒரு கட்டத்தில் படத்தில் எதுவுமே இல்லையா என்று கொஞ்சம் சலிப்பு தட்டிவிடுகிறது. அது ஒரு மைனஸாகியும் விடுகிறது.

படத்தில் கதையில்லை தான். ஆனால், நம் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது?? இது அப்படி சிலரின் வாழ்க்கை.

குட்டைப் பாவாடை பெண்கள், காதல் மட்டும் அரங்கேறும் வகுப்புகள், கோமாளிப் பேராசியர்கள், மூன்றாம் தர கவர்ச்சி நாயகிகள் பேராசிரியைகளாக வலம் வந்த அத்தனை கோடம்பாக்க கல்லூரிகளுக்கும் நெத்தியடியாக இப்படத்தை தந்திருக்கிறார் பாலாஜி ஷக்திவேல்! இந்த “கல்லூரி” அத்தனை டவுன் கல்லூரிகளின் நகல்! இல்லை இல்லை அசல்!!

திரையரங்கிலிருந்து வெளிவரம் பொழுது ஏதேதோ கேள்விகளும் நினைவுகளும். தன் அடுத்த படத்தையும் தமிழ் சினிமாயின் முக்கிய சினிமா ஆக்க வேண்டுமென்ற பாலாஜி ஷக்திவேலின் ஆர்வத்திற்கு அதை நிறைவேற்றியதற்கும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமாவின் கல்லூரி அராஜகங்களுக்கும் கேள்வி கேட்கப்படாமல் இருக்கிற அரசியல் அராஜகங்களுக்கும் ஒரே சாட்டையில் இரட்டை சவுக்கடி இந்த கல்லூரி!

ரேட்டிங் :

5992full_star-thumb.gif5992full_star-thumb.gif5992full_star-thumb.gif5992full_star-thumb.gif5992no_star-thumb.gif ப்ளஸ் thumbs_up.gif

Written by aravind

டிசம்பர் 10, 2007 இல் 2:25 பிற்பகல்