சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Posts Tagged ‘கற்றது தமிழ்

கற்றது தமிழ்

5 மறுமொழிகளுடன்

எல்லா குழந்தைகளையும் போல தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் ஏழு வயது ஆனந்தியும் பிரபாகரும். மலையில் விளையாடி ரயில் தண்டவாளத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்து அம்பாசமுத்திரத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறப் போகிறது என்று காண மனமில்லாதது போல் ரயிலில் அடிபட்டு செத்துப் போகிறது அவர்கள் வளர்க்கும் நாய்க்குட்டி. அங்கே துவங்குகிறது துயரங்களும் மரணங்களும்.

 

“மயிர் நீப்பின் உயிர் வாழா” குறளை விளக்க, காவல்துறையினர் உங்களை தெருவில் அடித்து இழுத்து சென்றால், மானம் போனதாக எண்ணி உயிர் துறக்க வேண்டும் என்று சொல்கிறார் தமிழாசிரியர் பிரபாகர். அடுத்த காட்சியில் அவர் செய்யாத குற்றத்திற்காக அவரை பள்ளிக்குழந்தைகள் முன்னிலையில் அடித்து இழுத்துச் செல்கிறது காவல்துறை! பிரபாகர் உயிர் வாழ்வதா? சாவதா?

 

துவக்க காட்சிகளிலேயே கட்டிப் போடுகிறார் இயக்குனர்.

 

கற்றது தமிழ் பாலுமகேந்திராவின் பட்டறையிலுருந்து வந்திருக்கும் ராமின் முதல் படம். வருக!

 

தொடர்ந்து சூழ்நிலைகளால் பந்தாடப்படுகிற பிரபாகரும் ஆனந்தியும் இருபது வருடங்கள் கழித்து அம்பாசமுத்திரத்துக்கு வந்து தங்கள் ஏழு வயது வாழ்க்கையை எப்படி அடைகிறார்கள் என்பது தான் படம்.

 

குடும்பத்தை இழந்து, ஒரு தமிழாசிரியரின் ஆதரவில் வளர்ந்து, அவரையும் இழந்து, தமிழ் படித்துவிட்டு வேலையில்லாமல் வாழ்க்கை போகிற போக்கில் செல்கிறான் பிரபாகர். அவனுக்கு தினமும் நம்பிக்கை தருவது, எங்கோ ஆனந்தி காத்துக்கொண்டிருக்கிறாள் என்பது தான்.

 

சிறு வயது காயங்கள், மரணத்தின் வலிகள், யாருமில்லாத தனிமை, ஆசையாக தமிழ் படித்துவிட்டு வாழ்க்கை சூன்யமாக போக, ரௌத்திரம் கொண்டு கொலையாளியாக மாறுகிறான். நியாயப்படுத்த முடியாத கொடிய விதியால் வஞ்சிக்கப்படுகிற பிரபாகரின் கோபமும் ஆத்திரமும் ஆதங்கமும் அவனின் கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்து ருத்ரதாண்டவம் ஆடுகிறது. கொலைகள் விழுகின்றன. காவல்துறை துரத்தாத போதும், இழந்த வாழ்க்கையைப் பெற ஆனந்தியோடு முயற்சிக்கிற பிரபாகர் வெற்றிப்பெறுகிறானா என்பதே படம்.

 

 

வறுமையில் வாடும் தமிழ் திரைப்பட கதாநாயகிகள் விலைமகளாக மாறுவது தமிழ் சினிமாவின் விதி போலும். தவிர்த்திருக்கலாம்.

 

ஒரு கதையை சொல்ல சினிமாவில் சில விதிகளும் கட்டமைப்பும் உண்டு. அவை அனைத்தையும் உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குனர் ராம். மனம் போகிற போக்கில் செல்லும் இளைஞனின் கதையை அது போகிற போக்கில் சொல்லி அசரவைக்கிறார். இயல்பாக கடந்தகாலமும் நிகழ்காலமும் மாறி மாறி திரையில் விரிகிறது. அதற்கே ஒரு தனி சபாஷ்!

 

ஒவ்வொரு காட்சிக்கும் அபாரமாக உழைத்திருக்கிறார்கள். பல லட்சங்கள் கொட்டி பிரமாண்டங்கள் தருகிறவர்கள் மத்தியில், பல லட்சம் கொட்டி இயல்பை இழைத்து தந்திருக்கிறார்கள். நடித்தவர்கள், கதை நிகழும் இடங்கள் என அத்தனையும் அச்சில் வார்க்கப்பட்டிருக்கிறது.

 

ஒரு கட்டத்தில் ராஜஸ்தானில் இருக்கும் ஆனந்தியைப் பார்க்க பிரபாகர் பயணம் செல்கிறான். அந்தப் பயணத்தை தனி குறும்படமாகவே வெளியிடலாம்! அத்தனை பிரமிப்பு!

 

First person narrationஐ தேர்தெடுத்திருப்பது நல்ல ஐடியா. ஒரு கட்ட்த்துக்கு மேல் கருணாஸுக்கு கதை சொல்கிறார் என்பது மறந்து போகிறது. நமக்கே சொல்வது போல இருக்கிறது.

 

எதற்கும் வளையாமல் தான் சொல்ல வந்ததை முதல் படத்தில் சொல்லி முத்திரை பதித்திருக்கிறார் ராம். அசா(ச) த்திய தைரியம்!

 

பள்ளிக்கதை சொல்லப்படுகிற போது தான் உறைக்கிறது பிரபாகர் என்பது ஜீவா என்று. அதுவரை ஜீவாவே கண்ணுக்கு தெரியவில்லை. எங்கும் பிரபாகர் பிரபாகர் பிரபாகரே! அத்தனை நுணுக்கமாக நடித்திருக்கிறார். புதிய தலைமுறை நடிகர்களில் துணிச்சலும் திறமையும் சேர்ந்த ஒருவர். சாமியாராக வெறித்தனமாக ஆட்டம்போடுவதில் தொடங்கி கடைசியில் மீண்டும் ஏழு வயது பிரபாகர் ஆகும் வரை ஜீவனுள்ள நடிப்பு. பி.பீ.ஓ இளைஞனை தெருவோரமாக அமர்த்தி தெருவில் ஆடுகிறாரே ஒரு ஆட்டம்! அடேங்கப்பா! சில இடங்களில் கொஞ்சம் சத்தம் அதிகமாக இருந்தாலும், இது நிஜமாகவே கொண்டாடப் பட வேண்டிய நடிப்பு. விருதுக்குழுக்கள் கவனிக்க!

 

தெருவில் நடந்து செல்லும் போது சடசடவென பெய்துவிட்டு நின்றுப்போகும் மழையைப் போல ஆனந்தப்பட வைக்கிறார் தமிழாசிரியராக வரும் (இயக்குனர்) அழகம்பெருமாள்.

 

கருணாஸ் “நடித்திருக்கும்” முதல் படம் இது. ஆனந்தியாக வருகிற அஞ்சலி அழகிய நல்வரவு. இயல்பாக நடித்திருக்கிறார்.

 

இயக்குனர், ஜீவா இவர்களுக்கு அடுத்து படத்தில் அசத்துபவர் ஒளிப்பதிவாளர் கதிர். முதல் படமென்று நம்ப முடியவில்லை. ராஜஸ்தான் பயணத்தில் முழு மதிப்பெண்கள் இவருக்கே.

 

யுவன் ஷங்கருக்கு மற்றுமொரு வெற்றி. இளையராஜா மயக்குகிற “பறவையே..” அருமை. யுவன் பாடியதற்கு ஏற்கனவே குட்டு வைத்தாயிற்று.

 

நல்ல பிண்ணனி இசையை நீங்கள் கேட்டவுடன் கண்டுபிடித்துவிடலாம். மிக நல்ல பிண்ணனி இசை உங்களுக்கு கேட்கவே கேட்காது. படத்தோடு ஒன்றிவிடும். அப்படி தான் இந்தப் படத்தின் பிண்ணனி இசையும்.

 

சில குறைகள் இல்லாமல் இல்லை.

 

தமிழ் படித்தவர்களின் நிலையை கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லியிருக்கிறார்கள். இப்படி சொன்னால் தான் போய் சேருமென்றாலும், இன்னும் இயல்பாக சொல்லியிருக்கிலாம். (மக்கள் தொலைக்காட்சியில் வேலை கேட்டிருக்கலாமே??)

 

ஆர்வத்தின் விளைவாக, நல்ல வேலை கிடைக்காது என்று தெரிந்தும் தமிழ் படித்துவிட்டு, பின்னர் ஏன் பிரபாகர் அதிக சம்பளம் வாங்கும் மென்பொருள் வல்லுனர்கள் மேல் பாய்வேனான்?? ரியல் எஸ்டேட் பிரச்சினையை கையில் எடுத்தது நல்ல விஷயமே என்றாலும், அதை கையாண்ட விதத்தில் (தொலைக்காட்சி விவாதெல்லாம் நடக்கிறது) ஏன் இத்தனை “ஷங்கர்”த்தனம்??

 

“கற்றது தமிழ்” என்று பெயர் வைத்ததன் மூலம் தமிழ் படித்ததால் தான் பிரபாகர் இப்படி ஆனதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்தியிருக்கிறார் ராம். ஆனால் கதைப்படி அப்படியில்லையே?? பரபரப்புக்காக இதை செய்தாரெனின், வெரி ஸாரி!

 

இந்த படத்துக்கு சென்ஸாரில் எப்படி U/A கொடுத்தார்கள்?? (இத்தனைக்கும் நான் பார்த்த போது மிக கோரமான காட்சியை நீக்கிவிட்டதாக அறிகிறேன்.)

 

இதையெல்லாம் தாண்டி அசரவைக்கிற அழகு இருக்கிறது இப்படத்தில்.

 

தமிழ் படித்தவர்களின் அவல நிலை ஜீவா ஆக்ரோஷமாக திரையில் சொல்லும் போதெல்லாம், தியேட்டரில் ஒரு மூலையிருந்து ஒருவர் தொடர்ந்து கைதட்டிக் கொண்டேயிருந்தார். தமிழ் படித்தவர் போலும். மனசுக்கு சங்கடமாய் இருக்கிறது.

 

முதல் படமென்பதால் இழைத்து இழைத்து தந்திருக்கிறார். சில இடங்களில் உலக தரத்தை தொட்டே விடுகிற கவித்துவம் இருக்கிறது, கோணங்களிலும் காட்சிகளுமே. சிறு வயதில் பிரபாகரும் ஆனந்தியும் ஒரு பறவையின் இறகை துரத்தி துரத்தி பிடித்து பென்சில் டப்பாவில் அடைத்து விட்டு, இருபது வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்து அதே இடத்தில் காற்றில் பறக்க விடுவது ஒரு உதாரணம்.

 

நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Written by aravind

அக்டோபர் 29, 2007 இல் 4:47 மு.பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,