Posts Tagged ‘எண்ணங்கள்’
புத்தனுடன் சில மௌனங்கள்
நான் உயரத்தில் நின்றிருந்தேன். அது ஒரு மலைக்கோயில். இரவின் மென்குளிரை விலையுயர்ந்த சலவைக் கற்கள் உள்வாங்கி, என் உள்ளங்கால் வழியே சில்லென ஏற்றிக்கொண்டிருந்தது. மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கோயிலாலதலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் கூட்டத்தில் கலந்திருந்தார்கள். நான் மட்டும் இங்கே மலையின் ஓர் முக்கில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஹைதராபாத் நகரம் கீழே ரத்தினங்கள் பதித்த கம்பளம் போல விரிந்திருந்தது. நெக்லஸ் சாலையின் இரு புறமும் விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தன. விரைவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்களின் ஒளி ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து கலைந்து கரைந்தது. ஒளி கரைவதையே பார்த்துகொண்டிருந்த நான், மெல்ல திரும்பி நடுவில் பிரம்மாண்டமாக வீற்றிருந்த புத்தன் சிலையை பார்த்தேன். புத்தனின் முகம் தெரியவில்லை. இங்கிருந்து சிலையின் உயரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இருந்தும், ஒரு நொடியில் புத்தனின் சாந்தமான புன்னகையை உணரத் தொடங்கினேன். மனதையும் முகத்தையும் அந்தப் புன்னகை அப்படியே தொற்றிக்கொண்டது. வாகனங்களின் இரைச்சல், காற்றின் ஒலி, கோயிலில் மக்கள் தனித்தனியாக ஏற்படுத்தும் ஓசைகள் எல்லாம் சேர்ந்து உருவான பேரிரைச்சல் என எல்லா இடையூறுகளையும் மீறி, கிணற்றில் ஆழத்தில் விழுந்து கிடக்கும் கல்லை பார்ப்பது போல, புத்தனின் புன்னகையை பார்த்துக்கொண்டிருந்தேன்.
நண்பர்கள் திரும்பி வந்தார்கள். வழக்கம் போல ஜோ இந்த இடத்தின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தேன். நூனூறு டன்னுக்கும் மேலான் எடை கொண்ட சிலை. புத்தனின் வடிவம் என் நெஞ்சில் இன்னும் பெரிதாக விரிகிறது. ஏராளமான கற்கள், ஏராளமான வேலையாட்கள். மிகப்பிரம்மாண்டமாக தயாராகி, ஒரு படகில் ஏற்றப்பட்டு, ஒரு பொறியியல் வல்லுனர் மற்றும் நான்கு உதவியாளர்களின் துணையுடன், சிலை பீடத்தை நோக்கி பயணிக்கிறது. புத்தனின் சிலை பீடத்தில் ஏற்றப்படும் பொழுதில், அவரின் புன்னகை காற்றில் வெட்டும் ஆரத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். படகு பாதி வழியில் கவிழ்ந்து விட்டதாக ஜோ சொல்கிறான். கற்பனைகளை நிறுத்திவிட்டு, அவன் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பாரம் தாங்காமல் படகு கவிழ்கிறது. அது மழைக்காலமா என்று ஜோ சொல்லவில்லை. இருந்தும் நான் என் கற்பனையில் மழையை சேர்த்துக்கொள்கிறேன். படகில் சென்ற ஐந்து பேரும் காணாமல் போகிறார்கள். இரண்டு நாட்கள் தேடும் பணி தொடர்கிறது. பின் ஓர் இடத்தில் சிலையை கண்டுபிடிக்கிறார்கள். ஐந்து பேரும் சிலைக்கடியில் சிக்கி இறந்து போயிருக்கிறார்கள்.
அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து புத்தனின் புன்னகைக்கு அடியில் அவர்கள் உயிரற்று கிடக்கும் காட்சி நெஞ்சில் ஓடியபடி இருந்தது.
*********************
மூன்று வருடங்களுக்கு முன், அம்மாவுக்கு பணி மாற்றத்துடன் இட மாற்றமும் விதிக்கப்பட்டது. தலைமை ஆசிரியராக அம்மா ஆக, எங்கள் எல்லோருக்குமே விருப்பம் தான். ஆனால் இடமாற்றத்தில் எங்களுக்கு ஒப்புதலில்லை. முன் பின் தெரியாத தென் தமிழக டவுன் அது. தற்போது குடியிருந்த ஊர், அம்மா பிறந்த இடம். நிறைய நண்பர்கள், உறவினர்கள். அக்காக்களும் நானும் சென்னையில் தங்கியிருந்ததால், அம்மாவை இந்த ஊரை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றோம். இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் ஒரு நாள் அவகாசமே இருந்த சமயத்தில், அம்மா எங்களிடம் சொல்லாமல் போய் சேர்ந்து விட்டார். ஏறத்தாழ அடுத்த ஒரு வருடத்திற்கு நாங்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வசித்துக்கொண்டிருந்தோம். வீடு தனியே வசித்துக்கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை நானும் அம்மாவும் வீட்டுக்கு வருவோம். வீடு திறந்து, அறைகள் ஜன்னல்கள் திறந்து, தூசு தட்டி, வெறுமையை எதிரொலித்துக்கொண்டிருந்த வீட்டின் காற்று மண்டலத்தின் எங்கள் குரலை கரைத்தோம். தண்ணீரின் சுவை மாறிப்போனது போல இருந்தது. எவ்வளவு சுத்தப்படுத்தியும் துடைத்தும், வீடு அந்நியமாகவே இருந்தது. விடுதியிலிருந்து மாதம் இரண்டு முறை வீடு திரும்பும் போது அம்மாவிடம் என்னென்ன பேசுவேனோ, எப்படியெல்லாம் கவனிப்பேனோ, அப்படியே வீட்டையும் கவனிக்கத் தொடங்கினேன். அம்மாவுடனும் வீட்டுடனும் நெருங்கிய காலம் அது.
நான் வீட்டுக்குள்ளேயே தாழப் பறக்கும் பறவை. என் வாழ்க்கையின் பாதிக்கும் மேலான பொழுதுகளில் அது தன்னுள் என்னைக் கொண்டிருந்தது. வீட்டை விட்டு நான் வெளியே இருந்த பொழுதுகளில் நான் வீட்டை என்னுள் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்த நாள் முதல், இது வரை நான் இரண்டு வீடுகளில் இருந்திருக்கிறேன். இரண்டும் ஒன்று போலிருக்கும். மூன்று ரயில் பெட்டிகளை இணைத்தது போல. ஒரு பெட்டியின் வாசல் தான் வீட்டு வாயில். முதல் வீட்டின் நினைவுகள் அத்தனை இல்லை. இரண்டாம் வீட்டில் தான் நான் பெரும்பாலும் வளர்ந்தேன். ஒரு மொட்டை மாடியின் பாதியை அந்த கான்க்ரீட் ரயில் பெட்டிகள் அடைத்திருந்தன. இன்னொரு பாதி திறந்த மாடியாகவே கிடந்தது. ஒரு கால் எடுத்து வைத்தால் வீடோ, வானமோ. என் படுக்கைக்கு நேராக இருக்கும் ஜன்னல் வழியே மதியப்பொழுதுகளில் வரும் வெயிலும், சில மாதங்களில் இரவு தோறும் வரும் நிலவும் தான் வீடு எனக்கு நிர்ணயித்த வானிலை. சாய்ந்து நின்று பேச ஏதுவாக தொலைபேசி ஒரு முக்கில் இருக்கும். எறும்பு ஊரும் வழிகள் மனப்பாடம். உள்ளறையில் குறுக்கே என்னுயரத்திற்கு கட்டபட்ட கொடிக்கயிறும் அனிச்சையாக குனியும் என் கழுத்தும் எப்போதிலிருந்து சினேகம் கொண்டன என நினைவில்லை. என் மேஜை, படுக்கையறைக்கு வீடு அமைத்து தந்திருந்த இளமிருட்டு, ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருக்கும் பின் வீட்டு துணிகள் துவைக்கப்படும் சப்தம், கோடைக்காலத்தில் நான் மட்டும் தனியே கழித்த பொழுதுகள் என நினைவுகள் ஏராளம். என்னுயரத்தில் நின்று, முகமளவே இருக்கும் அலமாரியினுள் பதித்தது போல நிற்கும் கண்ணாடியில் கடக்கும் போதெல்லாம் எப்போதும் என் முகம் தெரியும். அந்தக் காட்சியிலிருந்து என் முகத்தை எப்படி பிரித்தறிய முடியாதோ, அப்படியே அந்த வீட்டையும் என்னிடமிருந்து பிரித்தறிய முடியாது.
விடுதியில் சேர்ந்த முதல் வாரம் என்னவோ ஆகி விட்டது. யாராவது தலை வலிக்கிறதோ என்று கேட்டால், தலை வலிப்பது போல இருந்தது. வயிற்று வலியா என்றால் வயிறு வலித்தது. உடம்புக்கு எல்லாம் வந்து விட்டது போல இருக்கும். ஏதுமில்லாதது போலவும் இருக்கும். நான்கு நாட்கள் கழிந்ததும், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வண்டி ஏறிவிட்டேன். நான்கு மணி நேரம் வீட்டை நோக்கி பயணிக்கையில் தலை வலி, வயிற்று வலி, உடல் வலி என ஒவ்வொன்றாக உடலிலிருந்து கழன்று விழுந்து கொண்டே இருந்தது. யாருமில்லாத வீட்டைத் திறந்த அடைந்த நேரம், உடமும் மனமும் ஜிவ்வென்று இருந்தது. வீட்டில் யாருமில்லாதது கூட குறையாகத் தெரியவில்லை. நான் எப்போது சரிந்து கிடப்பது போல, வரவேற்பறையில் சரிந்து கிடந்த பின்னர் தான் எல்லாம் சரியானது.
அன்று பகலில் வீட்டைத் தேடி புறப்பட்ட நானும், ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறிய புத்தனும் சந்திக்கவே முடியாது.
*********************

மிகப்பெரும் ஆசையொன்றை
துறப்பதாக
முடிவெடுத்த பொழுது
அமர்ந்திருந்த
இந்த பூங்கா இருக்கையை
தந்த கல்
புத்தனின் சிலையாக
வடிக்கபட காத்திருந்து
வழி மாறியிருக்கலாம்.
என்னளவிலான
சிறிய அறிதலையும் புரிதலையும்
உணர்ந்த பொழுது
சுற்றி எதுவுமேயில்லை
தலைக்கு மேல் பறந்த
பறவைக்கு
புத்தனின் பெயரை வைத்தேன்
கூட்டமில்லாத ரயில் நிறுத்தம்
தெருக்கள் ரகசியமாக சந்திக்குமிடம்
நூலகம்
மொட்டைமாடிகள்
இரவுப் பேருந்தின் கடைசி இருக்கை
எதுவேனும் இருக்கலாம்
யாருக்காயினும்
புத்தனின் அடையாளமாக
இந்த பெருநகரத்தில்
அத்தனை மரங்கள் இல்லை.
*********************
இருபத்தி நான்கு மணி நேரத்தை சரி பாதியாக உடைத்து பகலைத் துவக்கும் வைகறையில், யாரேனும் வாழ்க்கையின் மறு பாதியை ரகசியமாகத் தேடிப் போகலாம். ‘வீட்டை விட்டு ஓடிப் போகுதல்’. காதலைத் தேடியா? காமத்தை தேடியா? குடும்பத்தை துறந்தா? அவர்களில் யாரேனும் ஞானத்தை அடைந்திருக்கலாம். புத்தனை யாரும் ‘ஊரை விட்டு ஓடிப் போனவன்’ என்று அழைத்து நான் கேட்டதில்லை. ஒரு வேளை புத்தன் ஞானத்தை அடையாமல் போயிருந்தால்? அடைந்த ஞானத்தை யாருக்கும் சொல்லாமல் போயிருந்தால்? சொல்லி எத்தனை பேர் அந்த ஞானத்தை உணர்ந்திருக்கிறோம்? ஞானத்தை உணராதவர்களுக்கு புத்தன் வெறும் வீட்டை விட்டு ஓடிப் போனவன் தானா? யசோதாவின் இழப்பு, புத்தனின் ஞானத்தின் பெருமையை குறைத்ததுண்டா?
காணாமல் போனவர்கள், எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? தங்கள் போதி மரத்தையா?
*********************
புத்தனை பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை. சிறிய வயதில் படித்த சில கதைகள் தவிர. புத்தனின் புரிதல்களை அறிய வேண்டும் என்ற ஆவலை, அந்த எளிமையான புன்னகை மிகச்சிறப்பாக ஏற்படுத்திவிடுகிறது. சில கணங்களில், புத்தனின் அத்தனை புரிதல்களின் அதிர்வையும் ஏற்படுத்த அந்தப் புன்னகையே போதும் என்றே தோன்றுகிறது. மிகத்துல்லியமான தூய இதயத்தில் இருந்து அந்த புன்னகை வர முடியுமென்றால், வழி வழியாக, அதிர்வை தரக்கூடிய புன்னகையை கல்லில் கடத்த ஏதுவாக, முதன் முதலில் புத்தனின் புன்னகையை கல்லில் வடித்தவனின் மனம் எப்படி இருந்திருக்கும்? கல்லின் எந்த துகளை நீக்கி, எதை செதுக்கி, எதைக் கொண்டு, அப்புன்னகையை கொண்டு வந்திருப்பான்? அந்தப் புன்னகையை சிறப்பாக கொண்டு வந்த கணத்தில், புத்தன் தன் ஞானம் மூலம் பெற்ற அத்தனையையும் கடந்த ஒரு நிலையை நிச்சயம் ஒரு நொடி அவன் கண்டிருப்பான்.
*********************
எழுத்தும் புகைப்படங்களும் – அரவிந்தன்
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
பனி விழும் முன்னிரவிலோ, மேகங்கள் சூழ்ந்த இளமிருட்டு மாலையிலோ, அடுத்த வண்டியில் போகலாம் என்று, பச்சை நிறத்தில் மெதுவாக உங்கள் முன்னால் வந்து நிற்கும் பேருந்தை நிராகரிக்கும் சுகம் உணர்ந்திருக்கிறீர்களா? நண்பர்களுடனான பேச்சை நீட்டித்துக்கொள்வதற்காக இருக்கலாம், ஏதோ யோசனையாக இருக்கலாம், இல்லை ஏதுமே காரணம் இல்லாமல் இருக்கலாம். ‘அடுத்ததுல போய்க்கலாம்’ என்ற நிச்சயமோ, நிச்சயமற்றத் தன்மையோ , எதிர்பார்ப்போ, எதுவோ. ஒன்று போனால் இன்னொன்று என்பதாக நினைவில் வரிசையாக வந்து விழுகிற எண்ணங்கள் போல, அடுத்தடுத்து வரும் பேருந்துகள் நிறைந்து பொழுதுகள், சொந்த வாகனங்கள் இல்லாத என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையெங்கும் நிறைந்திருக்கின்றன. பத்து வயது முதல் எனக்கு பேருந்துகளுடன் பழக்கம். வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு வண்ணங்களில், வேறு வேறு பாதைகளில்.
***********
பத்தாம் வகுப்பு தொடங்கி நான்கைந்து மாதங்கள் கழிந்த பிறகு அவள் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். நம் மொழி பேசுபவள் இல்லை. முக்கியமான படிப்பாண்டு என்பதால், அதுவரை நடந்த பாடங்களை வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் இரண்டே நாளில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அவளுக்குத் தந்தோம். எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னது தான் அவள் அதிகபட்சமாக பேசியது. கூர்மையான நாசியும் பார்வையும் கொண்டவள். அவளிடம் பேச வேண்டும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரு சனிக்கிழமை, அதிக தொலைவு இருக்கும் வேறொரு பள்ளிக்கு ஒரு விழாவிற்காக எல்லாருமாக ஒரு பேருந்தில் பயணமானோம். நாள் முழுக்க விளையாட்டு. அன்றைய மாலைப்பொழுது மிக அழகாக இருண்டது. மிக வேகமாக பறக்கிற பேருந்தில், அசதி தரக்கூடிய சோம்பலும் அமைதியுமாக அத்தனை பேரும் இருக்கைகளில் சரிந்திருக்கிறோம். அவளின் சிகப்பு நிறத்தில் வெள்ளைக் கோடுகள் கொண்ட சட்டையும், குதிரை வால் கூந்தலும் மட்டும் தெரிய, ஆளில்லாத இரண்டு இருக்கைகள் தாண்டி முன்னே ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறாள். தீவிரமான ஏதோ யோசனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் இருக்க, நானும் புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். வெளியே சூழல் இருள இருள, பேருந்தின் விளக்குகள் கொஞ்சம் பெரிய பெரிய புன்னகைகள் சிந்த தொடங்கியது. அப்போதும் ஏதும் பேசவில்லை. ஒரு நாவலின் கடைசி பக்கம் தருவது போல, ஒரு திரைப்படத்தின் முழுமை தருவது போல, அவளுக்குப் பிறகு நான் இறங்க நேர்ந்தது ஏனோ மகிழ்ச்சியைத் தந்தது. அதற்குப் பிறகான நாட்கள் பற்றிய நினைவுகளில் எத்தனை முயன்றும் அவளை பொருத்த இயலவேவில்லை.
**********
அத்தனை அழுக்கான ஆடைகள் அவருக்கு. பாக்கு போட்டு கறை படிந்த பற்கள். முகம் சுளிக்க வைக்கிற தோற்றம். ஆனால் அவர் மது அருந்திவிட்டு வந்திருக்கவில்லை. ஏறியதிலிருந்து தேடித் தேடி மூன்று ரூபாயை சில்லறைகளாக எடுத்து, யாரிடம் தருவது என்று யோசித்து, என்னிடம் தந்தார். அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமாம். நடத்துனர் எங்கோ பின்னால் இருக்கிறார். எட்டி எட்டிப் பார்த்து விட்டு, இவரிடம் திரும்பி ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்வதற்குள் பேருந்து நின்றுவிட்டது. யாரோ ‘பெரிசு உன் இடம் வந்துடுச்சு’ என்கிறார்கள். அவர் ஒரே ஒரு முறை என்னை திரும்பிப் பார்த்தார். எனக்கு ஏதேனும் புரிந்ததா என்று கூட சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் மனதிற்குள் தடால் என்று நானே விழுந்தது போல ஒரு அதிர்வு. ஒரு வேளை இந்த மூன்று ரூபாய் அவருக்கு ரொம்ப முக்கியமோ? தினசரி தேவைக்குத் தேவையோ? விருட்டென முன்னே நகர்ந்து படிகளை அடைவதற்குள் அவர் இறங்கி விட்டிருந்தார். ‘பெரியவரே’ என்று கூப்பிட்டு சில்லறைகளை கை மாற்றியதும், அவரே அறியாமல் அவர் புன்னகைக்க, பேருந்து புகை விட்டு புறப்பட்டது. அவர் தந்த சில்லறைகளில் இருந்த லேசான எண்ணைப் பிசுக்கு, விரல்களில் கொஞ்ச நேரம் பிசுபிசுத்தது.
**********
சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு (இந்த நகரத்தில் மிஞ்சியிருந்த கடைசி கல்லூரித் தோழனை வழியனுப்ப) சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் புறப்படுகையில் ரயிலா பேருந்தா என்று யோசித்தேன். பத்தரை மணிக்கு காற்று வாங்கும் பேருந்தில் சில நினைவுகளை அசைபோட்டபடி மிகச்சிலருடன் பயணிக்கலாமென, பேருந்து நிறுத்தத்திற்கு சென்று விட்டேன். ஏராளமான மக்களை அடைத்துக்கொண்டு வந்து நின்றது பேருந்து. சென்ட்ரலில் இறங்கும் போது, எதிர்பார்த்ததை விட அதிகமான நினைவுகளை அசைபோட்டபடி இறங்கினேன்.
**********
எங்கள் ஊரின் ‘எட்டே கால் வண்டி’யோடு ஆறு வருட பழக்கம் இருந்தது. ஏழாம் வகுப்பில் நான் அதில் முதன் முதலில் ஏறியபோது, ‘உன் பேர் என்ன?’ என்று கேட்ட பனிரெண்டாம் வகுப்பு அக்காக்கள், வருடங்கள் உருண்ட பின் புதுத்தாலியோடு கணவனோடு அமர்ந்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்து, சென்னைக்கு தொலைந்து போயிருக்கிறார்கள். மொத்த எட்டு வருடத்திலும் இரண்டே இரண்டு ஓட்டுனர்கள், இரண்டே இரண்டு நடத்துனர்கள். நடத்துனரின் மகன் வெவ்வேறு இடங்களில் இறங்கினாலும், நடத்துனர் எங்கே என்று கேட்காமல் டிக்கெட் கிழித்துக் கொடுப்பார். நாற்பது கிலோமீட்டர் பயணிக்கும் பேருந்தில், மொத்தமாக ஒரு பத்து பதினைந்து மாணவ மாணவிகள் இருபதாவது கிலோமீட்டரில் இறங்கிவிட, தினசரி பயணிக்கும் நபர்களுக்கு சுவாரசியமான திரைப்படத்தின் இடைவேளை அங்கே விழும். எங்களுக்கு முன்னே படித்து முடித்தவர்கள் வேலை தேடி எங்களுடனே வருவார்கள். தினசரி மூன்று இருக்கைகள் பிடித்து வைக்கும் பழக்கம் இருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு சென்னை போன நாட்களில் வண்ண ஆடையில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து சென்றிருக்கிறேன். அம்மாவோ அக்காக்களோ அதில் வருவதாக சொல்லிவிடுகிற மாலைப்பொழுதுகளில் அவர்களுக்கு மிகச்சரியான இருக்கைகளை ராஜ மரியாதையுடன் பிடித்து வைத்துக் காத்திருந்திருக்கிறேன். இடது பக்க இருக்கைகளில் வெயில் விழுமென்பதால், எட்டே கால் வண்டியின் வலது புற விலாசம் மட்டுமே நானறிவேன். இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே பேருந்து வரும் – அதன் நெற்றியில் இரண்டு புருவங்கள் போல தடம் எண் எழுதப்பட்டிருப்பதை வைத்தோ, முன் பற்கள் இரண்டு தகர்ந்திருப்பதை வைத்தோ மட்டும் அல்லாமல், இன்னும் அந்தரங்கமான அடையாளங்கள் கொண்டு அதை அறிந்திருந்தோம். தவிர்க்க முடியாத காலைகளில் வேறெதாவது பேருந்து அனுப்பி வைக்கப்பட்டு விடும் பொழுது, வழியில் எதிர் திசையில் வேற்று தடப் பேருந்தாக பொருந்தாத ஆடையணிந்த நபர் போல விரையும் அதைப் பார்த்து, ‘டேய், நம்ம பஸ்ஸு டா!’ என்று சில முறை கத்தியிருக்கிறேன்.
**********
‘எட்டே கால் பேருந்தி’ல் செல்வதற்கான வயது எனக்கில்லை என்று அம்மா நினைத்ததால், டவுன் பள்ளியில் படித்த முதல் மூன்று ஆண்டுகள் பள்ளிப் பேருந்தில் சென்றேன். அதை இந்தப் பேருந்துகள் பற்றிய பதிவில் சேர்க்கவே கூடாது. சொல்லாமல் கொள்ளாமல் சடார் சடாரென திரும்பியும் குதித்தும் ஆனந்த அதிர்வுகள் தந்தபடி, அர்த்தமில்லாத விளையாட்டுகளின் ஆறு சக்கர மைதானமாக, புழுதி பறக்கிற ஏதேதோ கிராமங்களுக்குள் புகுந்து விரைந்து கொண்டிருந்தது அது.
நண்பனின் திருமணம்
கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன். பின் ஸீட்டில் அம்மா, பெரியக்கா, சின்னக்கா மடியில் குழந்தையுடன் அமர்ந்துகொண்டனர். மழை தூறிக்கொண்டிருந்தது. ‘கிஃப்ட் எடுத்துக்கிட்டாச்சா?’ மீண்டும் ஒரு முறை கேட்டுத் தெரிந்துகொண்டேன். மணி ஏழாகியிருந்தது. எப்படியும் திரும்பி வர பத்து மணியாகிவிடும். சொந்த ஊரிலிருந்து நிறைய பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரிடமும் பேசிவிட்டுக் கிளம்ப நேரமாகி விடும்.
இன்று ராமுக்கு திருமணம்.
வண்டி புறப்பட்டு விட்டது. மடியில் ஜானு அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் திடீரென பெரியக்காவின் குரல் கேட்டது போல இருக்கவே, திரும்பனேன். ‘கூப்பிட்டியா?’
‘எவ்வளவு நேரமா கூப்பிடறது!’
‘ஓ. கேக்கல. என்ன?’
‘என்ன எதாச்சும் ஸ்டோரி கான்டஸ்ட்டா?’
‘ஹி ஹி. ஆமாம். எப்படி கண்டுபிடிச்சே?’
‘மூஞ்சியிலயே தெரியுது’
‘ஐ சீ’. அசடு வழிந்தேன்.
‘அந்த மிஸ்டரி கதை நல்லாருந்தது. ப்ரைஸ் கடச்சிதா?’
‘ம்’
‘இந்த முறை என்ன?’
‘ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டோரி’
‘கதை யோசிச்சிட்டியா?’
‘இன்னுமில்ல’
‘ம்’
‘ஏதாச்சும் கதை சொல்லேன். எழுதறதுக்கு’
‘ம்’
‘நான் ஒரு கத யோசிச்சேன். கேளேன்.’
‘சொல்லித் தொல’
‘ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். சின்ன வயசுலேர்ந்து திக் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டும் பொண்ணுங்க. ஒரு பொண்ணு தைரியசாலி. ஒரு பொண்ணு ரொம்ப கோழை. கோழைய வந்து சித்தி ரொம்ப கொடும பண்றா’
‘எஹ்?’
‘கேளு. சித்தி ரொம்ப கொடும செய்யுறா. அவளால தாங்க முடியாம ஃப்ரெண்டுகிட்ட அழறா. இருபது வருஷமா இதே கத. ஒரு நாள் கொடும தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறா. அந்த அதிர்ச்சியுல ஃப்ரெண்டுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் வந்துடுது. அவளோட ஸ்பிளிட் செத்து போன ஃப்ரெண்டு மாதிரி பிஹேவ் பண்ணுது. சித்திய பழிவாங்குது. சித்திய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடறா’
பின் ஸீட்டில் பயங்கிர அமைதி.
‘ரெண்டு பேருக்கும் காம்மனா இன்னொரு ஃப்ரெண்டு இருக்கா. அவ ஒரு டாக்டர். அவ வந்து கோர்டுல வாதாடி ஜெயிக்கிறா. ஆனா அவளுக்கு மட்டுமே உண்மை தெரியும், இந்த பொண்ணுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி இல்லேனு. அவ நட்புக்காக செய்யுறா. எப்படி’
சின்னக்காவின் குழந்தை அழ ஆரம்பித்தது.
‘சரி விடு’ என்றேன்.
‘நம்ம ஜானுவயும் ஸ்ரீயயும் வெச்சு எழுதேன்?’
ஜானுவுக்கு வயது ஆறு மாதம். ஸ்ரீக்கு வயது நான்கு மாதம். முறையே பெரியக்கா சின்னக்காவின் மகள்கள். இருவரும் எதிரேதிரே தத்தம் மகள்களை தூக்கிக்க்கொண்டு நின்றால், இரு குழந்தைகளும் ‘ஆ ஊ’ என்று பேசிக்கொள்கின்றன.
‘ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ்! ஃப்ரெண்ட்ஸ் இல்ல’
அக்கா சிரித்தாள். ‘இல்லனா இவளோட ஃப்ரெண்ட் ஒருத்தி இருந்தாளே’ (சின்னக்காவைப் பார்த்து கை காட்டியிருப்பாள்) ‘அந்த மார்வாடிப் பொண்ணு.. ரெண்டு பேரையும் வெச்சு எழுது’
‘ம் ம் எழுதலாம்’
கொஞ்ச நேர அமைதிக்குப் பின் அம்மா சன்னமான குரலில் கேட்டாள். ‘ராம் பத்தியே எழுதேன். அவன் தான் உன்னோட ஃப்ர்ஸ்ட் ஃப்ரெண்ட்..’
‘ஆமால்ல..’ என்று மனசு சொன்னது.
ராமின் குடும்பமும் நாங்களும் ஒரே வீட்டில், முறையே கீழ் போர்ஷனிலும் மேல் போர்ஷனிலும் குடியிருந்தோம். 1980களின் முதல் பாதியில் சந்தித்துக்கொண்டோம். வீட்டு உரிமையாளரிடம் ஏற்பட்ட சச்சரவுகளில் ஒன்றாக கை கோர்த்தோம். ராமின் அப்பா டாக்டர். என்னுடைய அம்மா டீச்சர். இன்று வரையும் ராமின் வீட்டில் எல்லாரும் அம்மாவை ‘டீச்சர்’ என்றே அழைக்கிறார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் ராமின் அப்பாவை ‘டாக்டர்’ என்றே அழைத்தோம்.
‘ஃபேமிலி ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையை நான் முதன் முதலில் படித்து அம்மாவிடம் அது என்னவென்று அர்த்தம் கேட்டபொழுது, ராமின் குடும்பத்தினரையே அம்மா அடையாளம் காட்டியிருக்க வேண்டும். அப்பா அப்போது (கட்சியில்) இருந்தார். கட்சி அலுவலகத்தில் பெரும் பகுதி கழிந்தது. ராஜா வீட்டு கன்னுக்குட்டி. நிறைய பணம். நிறைய நண்பர்கள். நிறைய எதிரிகள். அம்மா எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருந்தார். அப்போது அம்மாவுக்கு இருந்த ஒரே துணை ராமின் குடும்பத்தினர். அப்பா மறைந்த பின், அவர்கள் துணை இன்னும் முக்கியமானதானது. (நேற்று அப்பாவின் 13ஆவது நினைவு நாள் என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. zoozooக்களை படம் பிடித்து அதன் மீது ஏதேதோ கிறுக்கத்தனமாக எழுதியபடி நாள் கழிந்தது.)
ராம் எனக்கு நண்பனா என்பதில் எனக்கு சந்தேகங்கள் உண்டு. என்னை விட இரண்டு வயது மூத்தவன். நாங்கள் பள்ளிக்கு செல்லும் போதோ, ட்யூஷன் செல்லும் போதோ, விளையாடப் போகும் போதோ, நான் ராமின் முழுப்பொறுப்பில் விடப்பட்டேன். எங்கள் குடும்பங்களுக்கு நெருக்கமாக இல்லாதவர்கள், எங்களை அண்ணன், தம்பி என்றே நினைத்தார்கள். நானும் பல நாட்கள் அவனை அண்ணா என்றே அழைத்திருக்கேன். பின்னர் ‘ராம்’ என்றழைக்கத் தொடங்கிய நாளில் அவன் எனக்கு முழு நண்பனாகியிருக்கலாம்.
இருவரின் அம்மாக்களின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, மாடியில் கிரிக்கெட் விளையாடும் உத்தியை கண்டுபிடித்தோம். ப்ளாஸ்ட்டிக் பந்து, இல்லை துக்கு பந்து. (எங்கள் ஊரின் தொழில் நெசவு. அதில் கழிவாக எறியப்படும் துணிகளை வைத்து செய்யும் பந்து).பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பந்து பறந்து, பக்கத்தில் புதரென மண்டிக்கிடக்கும் கார்பரேஷன் இடத்தில் விழும். பாம்புகள் அதிகமென்பதால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். அந்த இடத்தை ஒரு நாள் சுத்தம் செய்த போது, அள்ளி அள்ளி பந்துகளை எங்கள் காம்பவுண்டுக்குள் கொட்டினார்கள். நாங்கள் இருவரும் ஓடி ஓடி அவற்றை பொறுக்கியது இன்னும் நினைவிருக்கிறது.
இன்று அவனுக்குத் திருமணம்.
நடுவில் எதுவோ சரியாக இல்லாமல் போய்விட்டது. அவன் பனிரெண்டாவது வகுப்பு செல்கையில் அவன் மட்டும் நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்துச் சென்றான். அப்போது ஏற்பட்ட தொடர்பின்மை வளர்ந்து வளர்ந்து ஒரு நாள் முற்றிலுமாக தொடர்பு அறுந்தது. கிட்டதட்ட எட்டு வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகிறேன்.
நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.
எதைப் பற்றி எழுதுவது? சைக்கிள் பூட்டு எதற்கென்று தெரியாமல் பல காலம் முழித்து, என்னைப் பின்னால் வைத்து அவன் ஓட்டி சென்று பொழுது, பூட்டைப் போட்டு சைக்கிளை நிறுத்திய கதை உண்டு. இல்லை பெரியக்காவுடன் ரசம் வைத்த கதை. இல்லை அந்த ட்யூஷனில் இருந்த அந்தப் பெண் அவனை காதலித்தது (?!) பற்றியும், இவன் மறுத்ததும், அப்போது பிரபலமாக இருந்த ‘ரோஜாப்பூ கீழ விழ்ந்தா, செடியோட ஒட்டி வைக்க முடியாது’ என்ற ‘பூவே உனக்காக’ வசனத்தை சொல்ல சொல்லி அடம் பிடித்த கதை உண்டு. (அவள் என்னை ‘மச்சினராக’ பாவித்தது கிளைக்கதை).
பெரியக்காவும் சின்னக்காவும் ராமின் அண்ணாவுடனான நினைவுகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கலாம்.
போய் இறங்கியதுமே ஒரு விதமான அதிர்வு தொடங்கிவிட்டது. ஏழெட்டு வருடங்கள் கழித்து நிறைய பேரை பார்க்கப் போகிறேன். ராமின் அண்ணனும் அண்ணியும் வரவேற்றார்கள். சம்பிரதாய கேள்விகள், நலம் விசாரிப்புகள், ‘ஃபோனே பண்றதில்ல’ கோபங்கள். மண்டபமெங்கும் புன்சிரிப்புகள். ‘இது அபி தானே?’ என்ற சந்தேகப் பார்வைகள். சின்னக் குழந்தையாக பார்த்தவர்கள் வளர்ந்து நம் முன் நிற்கும் போது அதிர்ச்சியாகவே இருக்கிறது. (நான் பள்ளிக்கூட பேருந்துக்கு காத்திருக்கையில் ஒரு குட்டிப்பையனுடன் விளையாடுவான். அந்தப் பையனின் அம்மா நான் நிச்சயம் இன்று வருவேன் என்பதற்காகவே அவனை அழைத்து வந்திருந்தார்!) எத்தனை மக்கள்! எத்தனை நினைவுகள்.
மேடையில் ராம் பிரகாசமாகத் தெரிந்தான். ஷெர்வானி மிகப் பொருத்தமாக இருந்தது. நிறைய எடை கூடிவிட்டான். அவனுக்கும் என்னைப் பார்த்ததும் இப்படி நிறைய தோன்றும். தூரத்திலேயே என்னைப் பார்த்து விட்டு கையசைத்தான். மணப்பெண்ணிடம் ஏதோ சொல்கிறான். மேடையேறியவுடன் கட்டியணைத்துக்கொண்டான். இத்தனை வருட தொடர்பின்மையும் ஒரு நொடியில் உடைந்துவிட்டது என்றே தோன்றியது. ‘ச்சே! பாக்கலனா என்ன! பேசலானா என்ன!’ மனசு சொன்னது. அவன் குரல் பத்து வருடங்களுக்கு முந்தைய ஒலியைக் கொண்டிருந்தது.
பூரிப்பாக இருந்தது. நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.
மேடையை விட்டு இறங்கியதும் குமாரண்ணனைப் பார்த்தேன். ‘அபி! ஆளே மாறிட்டே’ என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்றார். ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை பெரியவர் அமர்ந்திருந்தார். மிகவும் தளர்ந்து போயிருந்தார். அவரிடம் என்னை நிறுத்தினார். ‘இவன் தான்’ என்றார்.
பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை. முயற்சி செய்து தோற்றுப்போனார். நான் அவரிடம் குனிந்து கொண்டேன். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கு. அவருக்குப் பின்னால் அவரின் தம்பி போன்ற ஒருவர், மகன்கள், மனைவி எனப் பலர் என்னை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். என் கன்னங்களை தயங்கி தொட்டுப் பார்த்தவர், ‘நான் உங்கப்பாவோட ஃப்ரெண்டு’ என்றார்.
உடலில் மெல்லிய மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. கண்கள் ஏனோ கலங்கின. அதில் பல சிறுகதைகள் ஒரு தொடர்கதையும் அடங்கியிருந்தன.
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன்
)
ரஜினிக்கு ஒரு கடிதம்
அன்புள்ள ரஜினிக்கு,
நான் உங்கள் ரசிகனல்ல. எதிரியுமல்ல.
எனக்கு மொழி வெறியெல்லாம் இல்லை. நான் துளு பேசுகிற மாநிலத்தில் பிறந்தால் துளுவே சிறந்த மொழி என்று சொல்லுவேன். அந்த அளவில் தான் மொழி வெறியை நான் பார்க்கிறேன். என்னை ஒரு நடுநிலையாளனாக உறுதிபடுத்திக்கொண்டே இதை எழுதுகிறேன்.
எல்லா பக்கங்களில் இருந்தும் அம்புகள் எய்யப்படுகின்றன. குசேலனுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும் செய்திகள் வருகின்றன. நீங்கள் வருத்தத்தில் இருப்பீர்களா மகிழ்ச்சியாக இருப்பீர்களா என்று என்னால் கணிக்க முடியவில்லை. சினிமாவில் நீங்கள் நல்லவராக வல்லவராக இருப்பதனால் நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் அப்படித்தான் என்று நம்புகிற முட்டாள் நானில்லை. உங்களை நெருங்கி பார்த்தவனுமில்லை.
என்னிடம் இருப்பவை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் மட்டுமே.
நீங்கள் மன்னிப்பு கேட்டது தவறு என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லப்போவதில்லை. நீங்கள் சொன்னது என்ன, திருத்தியது என்ன, கடைசியில் என்ன தான் சொல்கிறீர்கள் என்று எதுவும் புரியவில்லை. நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் வியாபாரமாக்கப்படுகிற நாட்டில் இருந்து கொண்டு இன்னும் தெளிவாக பேச உங்களால் முடியவில்லையென்பது மடத்தனமாக உள்ளது.
பொது இடத்தில் ஒருவரை உதைப்பேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசிய மறுநாள் அது தவறென்று உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த நாளும் தெரியவில்லை. இத்தனை நாளாய் தெரியவில்லை. இப்போது திடீரென தெரிந்திருக்கிறது. அந்த மன்னிப்புக்காக வைக்கப்பட்ட பணயம் உங்கள் படத்தின் ரிலீஸ்.
௮) நீங்கள் உண்மையாகவே அப்படி பேசியதற்கு வருந்தியிருக்கிறீர்கள்.
ஆ) உங்களுக்கு உங்கள் படம் ரிலீஸ் ஆக வேண்டும்.
இந்த இரண்டு காரணங்களுக்கு மேல் எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை. சாதாராண கணித விதிகளின் படி கூட இரண்டுக்கும் ஐம்பது – ஐம்பது வாய்ப்புள்ளது!
காரணம் ௮) வாக இருந்திருந்தால், மன்னிப்பு கேட்டுவிட்டு, என் படம் அப்படி ஒன்றும் ரிலீஸ் ஆக வேண்டியதில்லை என்று சொல்லி நீங்களே ரிலீசை நிறுத்தியிருக்கலாம். ஒரு மாநிலத்தில் வரப்போகிற வருமானம் உங்களுக்கு கால் தூசு. உங்கள் குருவான தயாரிப்பாளார் உங்களை எண்ணி பெருமைப்பட்டிருப்பார் – வேறு வழியில்லை அவருக்கு. ஏற்கனவே உங்கள் படம் ஓடாத போது விநியோகஸ்தர்களுக்கு பணம் தந்த வள்ளல் தானே நீங்கள்? நீங்களே உங்கள் தயாரிப்பாளர்களுக்கு பணம் தந்திருக்கலாம். அப்படியும் இல்லாமல் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சினிமா ரிலீஸ் இனி ஒரு ஆயுதம் ஆகி விடும். மிக்க நன்றி!
காரணம் ஆ) வாக இருப்பின் – அப்படி குசேலன் ரிலீஸ் ஆகி என்ன சாதிக்கப் போகிறது என்று யோசிக்கிறேன். இந்த காவியத்தை பார்க்காமல் கர்நாடக மக்கள் என்ன ஆகி விடுவார்களோ? நினைத்து பார்க்க சற்று பயமாகத் தான் இருக்கிறது.
மன்னிக்கவும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் சுயநலம் தான் தெரிகிறது.
இந்த பிரச்சினையின் வெற்றிக்கான அடையாளமாக இதை அவர்கள் மாற்றுகிற போது, நீங்களும் கூட சேர்ந்து கும்மி அடித்திருக்கிறீர்கள்.
ஒரு வேளை இது உங்கள் திரைப்படங்களில் வருகிற காட்சியாயிருந்தால் கே.எஸ்.ரவிக்குமார்களும் பி.வாசுக்களும் மோட்டுவளையை முட்டி முட்டி இப்படி ஒரு காட்சி வைத்திருப்பார் – மன்னிப்பு கேட்டவன் கோட்டைக்கு சென்று அடித்து துவம்சம் செய்து, “கண்ணா, நீ மன்னிச்சு தான் என் படம் ரிலீஸ் ஆகனும்னு கடியாது” என்று சொல்லியிருப்பீர். என்ன செய்வது, இது சினிமா இல்லையே?
நீங்கள் ஒரு மாபெரும் குழப்பவாதி. அதை குசேலன் படத்திலும் நிருபித்திருக்கிறீர்கள்.
“அரசியல் பற்றி ஏதோ ஒரு படத்தில் யாரோ எனக்காக எழுதிய வசனத்தை பேசினேன். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டால் எப்படி?” என்று அர்த்தம் வருமாறு ஒரு முத்தை உதிர்த்திருப்பதாக நண்பன் சொன்னான்.
கூடவே “இது எப்படி இருக்கு” என்று சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லையென்றான்.
அட! அட! என்னவொரு வியாக்கியானம்? அரசியல் சர்ச்சையில் நாங்களே உங்களை சிக்க வைத்தது போலவும், நீங்கள் அப்படி ஒரு ஆசையற்றவர் போலவும்……
ஐயா, தொடர்ந்து நான்கு படங்களிலாவது காமிராவுக்குள் உங்கள் முகத்தை நீட்டியபடி விஷ்க் விஷ்க் வசனம் பேசினீர். படத்திற்கு ஒரு அரசியல்வாதியையாவது அடக்கி வைத்தீர்கள். உங்கள் நாயகிகள் உங்களை ஈஷிக்கொண்டு “என்னமோ திட்டம் இருக்கு” என்று விரல் ஆட்டி பாடினார்கள். “படை” என்று உங்கள் ரசிகர்களை பாடல்களில் விளித்தீர். நேற்று அங்கே, இன்று இங்கே, நாளை என்று வானம் நோக்கி கை காட்டி சிரித்தீர். “ராஜ்ஜியமா இமயமா” என்று எங்களை படாத பாடு படுத்தினீர். உங்கள் கதாபாத்திரத்தின் ஜாதகம் சாதாரண ஜாதகம் வேறு அல்ல.
கமல் தசாவதாரத்தில் நம்பி, அபூர்வ சகோதர்களில் அப்பு, நாயகனில் நாயக்கர். ஆனால் நீங்கள் எல்லாப் படத்தில் ரஜினி தானே?? அப்படித் தானே உங்கள் கதாபாத்திரங்களும் உருவாக்கப் படுகிறது? அதனால் தானே நீங்கள் உங்கள் பெர்சனல் பஞ்சாயத்திற்கு உங்கள் படங்களை உபயோகப்படுத்தினீர்? நீங்கள் எது பேசினாலும் ரஜினியின் குரலாக தானே பார்க்கப்படுகிறது? பார்க்க வைத்தீர்கள்?
இப்போது எங்களையே திருப்பி கேட்கிறீர்களே – ஐயா நாங்கள் முட்டாள் இல்லை.
ஐயா, நீங்கள் உங்களை மட்டுமே மோசமாக முன்னிலைபடுத்துகிற ஒரு ஆள். நீங்கள் ஒருவர் தான் நல்லவர். ஊரில் உங்களை விட்டால் வீரமான ஒரு ஆண்மகன் இல்லை, நாட்டை காக்க வந்தவர் என்றெல்லாம் காட்டுவீர். நீங்கள் கடவுள் என்று சொல்லவில்லையே தைவர, நீங்கள் தான் எல்லாம் என்றீர்கள். இப்படி தங்களை காட்டிக்கொண்டவர்கள் அடுத்த சென்ற இடம் அரசியல் என்று உங்களுக்கு தெரியும். தெரிந்தும் அதை தொடர்ந்து செய்ய நீங்கள் மீசை வைத்த குழந்தையா?
“நான் அரசியலுக்கு வந்தால் என்ன? வரவில்லையென்றால் என்ன? உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்” என்றும் திருவாய் மலந்து உளறி இருக்கிறீர்கள்.
இரண்டு தேர்தலில் நீங்கள் யாரையோ எதிர்பதற்காக உங்கள் ரசிகர் மன்றங்கள் நாயாக பேயாக உழைத்தார்களே, போகிற வருகிற கட்சியெல்லாம் உபயோகப்படுத்தி அவர்களை குப்பையாகினார்களே, அப்போது உங்கள் இமயமலை பயணத்திற்கு பூப்பறித்துக் கொண்டிருந்தீர்களா? அப்போது அவர்களின் வாழ்க்கை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களை எதிர்பார்க்க வைத்து விட்டு, இன்று அரசியல் உங்களுக்கு வராது என்று அமைதியாக இருக்கிறீர்.
அமைதியாக இருந்தால் கூட பராவாயில்லை, இப்படி அதியற்புதமாக பேசியிருக்கிறீர்கள். இது பொறுப்பின்மை மட்டுமல்ல, சந்தர்ப்பவாதமும் கயமைத்தனமும் கூட!
இதையெல்லாம் கூட நீங்கள் ஒரு படத்தில் நடிகர் அசோக்குமாருக்குள் ஒளிந்து கொண்டு தான் சொல்கிறீர்கள். அப்படியென்றால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா ஐயா? தமிழ் நாடு என் மூச்சு, ரசிகர்கள் ரத்தம், உயிர் கொடுப்பேன் என்றெல்லாம் சொன்னது ஐயா? அவையும் வசனம் தானா?
அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு நீங்கள் எங்கே பதில் சொல்லியிருக்கிறீர்? உங்கள் படத்தில்! அது என்ன என்ன என்று உங்கள் கடை நிலை ரசிகன் வரை கிடந்து தவித்து ஏகக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இதை தெரிந்துகொள்ள வேண்டும்! “இந்த படத்தில் நான் ஹீரோ அல்ல” என்று அறிவித்தது போல இதையெல்லாம் அறிவித்திருக்கலாமே!
உங்கள் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறலாம். ஒரு கொடியோடு நீங்கள் துவக்கிய உங்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் இதை கவனிக்க தவற மாட்டார்கள்.
“அரசியலுக்கு வர எண்ணினேன், ஆனால் அந்த என்ணத்தை கை விட்டுவிட்டேன்” என்று ரஜினியாக வந்து சொன்னால், உங்களுக்கு சல்யூட் வைக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்! அது உங்கள் கடமை!
வணக்கம்!
மரத்தடி
ஒரு திரைப்படத்தின் கதையை சொல்வதற்கு ஒவ்வொருவரும் ஒரு உத்தியை கையாள்கிறார்கள். சிலர் இரண்டு மணி நேர கதையை ஐந்து மணி நேரம் சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள். ஐந்து மணி நேரம் கழித்தும் திருப்தியடையாதவர்கள் பலர். சிலர் பாடல்கள் எங்கு வரும் என்று குறிப்பிடுவதில் கவனமாக இருப்பார்கள். பாடல்களை வழிகாட்டி மரம் போல பாவித்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலையும் அடையும் போது, சரியான பாதையில் செல்கிறோம் எனற ஒரு திருப்தி அவர்கள் முகத்தில் தெரியும். கதை சொல்லி முடிக்கும் போது நிச்சயம் ஒரு பாடல் விட்டு போயிருக்கும். மீண்டும் வந்த வழியே சென்று விட்டுப்போன பாடலை பொருத்துவார்கள். சிலர் வசனங்களை அதே தொனியில் சொல்லிக் காட்டுவர். பலருக்கு இரண்டு வரிகளுக்கு மேல் கதையை சொல்லத் தெரியாது. முக்கியமான காட்சியை விளக்குவதற்கு முன்னால் சிலர் நம்மை கவனப்படுத்துவார்கள். அந்தக் காட்சி கடந்ததும் அதில் என்ன அப்படி முக்கியமானது இருந்தது என்று நிச்சய்ம் தோன்றும். சிலர் முழுதாக சொல்லி முடித்ததும் அவர்கள் அந்த படத்தை பார்க்கவேயில்லையென நமக்கு தோன்றும்.
அலுவலகத்திற்கு என்னை தினமும் காரில் கொண்டு விடும் அன்பர் அன்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அவரின் புன்னகையில் ஒரு உரையாடலை அவர் தொடங்குவதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்தன. நேற்று இரவு அவர் ஒரு திரைப்படத்தை பார்த்திருக்கிறார். சுமார் நான்கு வருடங்கள் கழித்து திரையரங்கில் சென்று பார்த்திருக்கிறார். அதுவே அந்த உற்சாகத்திற்கு காரணம். நான் அப்படியா சந்தோஷம் புன்னகை ஒன்றை உதிர்த்தேன். அவரோ படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். கடைசிக் காட்சியில் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள் என்பதை முன்னுரையாகச் சொல்லிவிட்டு தொடங்கினார். நினைவுக்கு வருகிற எல்லாக் காட்சியையும் சொல்லிக்கொண்டே வந்தார். வரிசையில் சொல்ல வேண்டும் என்று அவருக்கு ஏனோ தோன்றவில்லை. தோன்றிய காட்சியை உடனே சொல்லாவிட்டால் அது மறந்து விடுமோ என்னவோ. அலுவலகம் அடைந்த போது அவர் சொல்லி முடித்துவிட்டாரா என்பதை அவரிடமே கேட்க விரும்பினேன். அவருக்கே தெரிந்திருக்காது என்று நினைத்து அந்த எண்ணத்தை நிராகரித்தேன். ஒரு முத்துமாலையை அறுத்தது போல அந்த திரைப்படத்தை அவர் என்னிடம் அறுத்திருந்தார். திரைப்படம் என்னைச் சுற்றி சிதறிக்கிடந்தது. கதவை திறந்து இறங்குகையில் மடியிலிருந்து விழுந்து சிதறியோடியது திரைப்படத்தின் பாடல் ஒன்று.
******************
“கடைசி பேருந்து” என்ற வார்த்தைப் பிரயோகமே நகரங்களில் இல்லையென தோன்றுகிறது. எங்கள் டவுனுக்கு சென்னையிலிருந்து வரும் கடைசி பேருந்துக்கு கோயில் தேர் போல ராஜ மரியாதை தரபட்டது. எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது கண்ணுக்குத்தெரியாமல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. எத்தனை சுவாரசியமான பேச்சையும் எட்டரை மணிக்கு துண்டித்தாக வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி நிற்க வேண்டும். சென்னை திருமணங்களிலிருந்து சாப்பிடாமலே பலர் அதை பிடிக்க ஓடி வந்துவிடுவர். அலுவலக ஊழியர்கள் அந்த பேருந்தில் ஒரு நண்பர் வட்டத்தையே உருவாக்கியிருப்பர். காய்கறிகள் விற்றுவிட்டு திரும்பி வரும் வயதான பாட்டிகளின் குடிசை வாயில்களிலே பேருந்து நின்று செல்லும். நடத்துனர் கொஞ்சம் பேச்சு சிரிப்புடன் பேருந்தை வழி நடத்திச் செல்வார். டிக்கெட் கிழித்தலில் இயந்திரத்தனம் குறைந்திருக்கும். நாள் முழுதும் ரகசியமாக ஊரைச் ஒன்றாக சுற்றி திரும்ப வரும் காதலர்கள் யாரையும் நான் அறியேன் என்ற பாவனையோடு தூரதூரமாக அமர்ந்து வந்துகொண்டிருப்பார்கள். அலைபேசிகள் இல்லாமல் அம்மாமார்களின் மனம் அல்லாடிக்கொண்டிருக்கும். இரவில் விழித்திருக்கும் கடவுள்களுக்கு அவர்களின் பிரார்த்தனை புளித்து போயிருக்கும். ஒரு தலைமுறையாகவே வீட்டின் பெண்கள் அதற்காக தினமும் காத்துக்கொண்டிருந்தார்கள், பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு.
******************
பாதி நிரம்பிய வாளியினுள் குழாயின் நீர் சொட்டும் ஒலியை விட இரவில் கேட்பதற்கான ரம்மியமான இசை வேறெதுவும் இல்லை. ஒரு ராணுவ ஒழுங்கை கொண்டது சொட்டுகளுக்கிடையேயான அந்த இடைவெளி. முடிவற்ற ஒரு பாடலைப் போல தொடர்ச்சியாக நீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது. ஏதோ நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிற வேளைகளில் அந்த ஓசை மிகச் சுலபமாக நினைவுகளுடன் கலந்து விடுகிறது. உறுத்தாமல் பக்க வாத்தியம் வாசிப்பது போல. வாளியில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அதே சின்ன அதிர்வு என் எண்ணவெளிகளில் ஏற்படுகிறது. திடீரென யாராவது குழாயின் வாயை அழுத்தி மூடிவிட்டு படுக்கிறார்கள். அவர்களுக்கு அது ஏதோ ஒரு விடுதலையை தந்துவிடுகிறது. அதன் பிறகு எனக்கு தான் உறக்கம் போய்விடுகிறது. சப்தப்பெருவெளி எங்கும் நீர் துளிகள் சொட்டிக்கொண்டே இருப்பது போன்று ஒரு பிரமை.
காற்று வீசும்………….