Posts Tagged ‘உலக சினிமா’
பிம்பங்கள் #2
அகிரா குரோசாவாவைப் பற்றி என்னிடம் பேசாத உலக சினிமா ஆர்வலர் இல்லை. ‘ஓ, நீங்க உலக சினிமா பாப்பீங்களா?’ என்ற கேள்வி வந்த பின் மூன்றாவது கேள்வி இவரைப் பற்றியே இருக்கும். போர் வீரர்கள் பெரிய கொண்டை இட்டுக்கொண்டு அதில் ஒரு பெரிய ஊசி போன்ற ஒன்றை சொருகி வைத்து, ஆக்ரோஷமாக முகம் காட்டும் ஸ்டில்களோ, ‘யோஜிம்போ‘ போன்ற படத்தின் பெயர்களோ – எதுவோ ஒன்று அவர் படங்களைப் பார்க்கும் ஆவலைத் தூண்டாமல் இருந்தது. பின் மனதை திடப்படுத்திக்கொண்டு போன வெள்ளிக்கிழமை இரவை ‘ரஷோமா‘னுக்கு தாரை வார்த்தேன்.
அகிராவின் மிகப்பெரிய பெருமை, காலம் கடந்து திரைப்படங்களில் தொடர்ந்து வரும் க்ளீஷேக்களை உருவாக்கியது. உதாரணமாக, நாயகன் காட்டில் செல்லும் காட்சியை கற்பனை செய்யலாம். இரவில் காட்சி நடக்கிறது. இதை சினிமாவில் காண்பிக்கும் போது, காமிரா வானம் பார்த்தபடி நகர, மரங்களின் இலைகளினூடே நிலா நகர்வது போன்ற ஒரு காட்சி மனதுக்கு வருகிறதா? இது போன்ற சின்னச்சின்ன விஷயங்களை முதன் முதலில் செய்தவர் அகிரா! சண்டைக்காட்சிகளில் ஒரு கத்தி தரையில் விழுவதும் அதை நாயகன் எடுக்க முயல்வதும், வில்லன் நாயகனின் காலைப் பிடித்து இழுப்பதும் – எத்தனை முறை பார்த்திருப்போம்? திரைப்படங்களுக்கு அந்தக் காட்சியை உபயம் செய்தது இவரே! (முன்பெல்லாம் காமிரா வழியே அண்ணாந்து சூரியனை பார்க்க மாட்டார்களாம்! லென்ஸ் வெந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ! அதை முதலில் செய்தவர் அகிரா என்று சொல்லுகிறார்கள்!)
‘ரஷோமான்‘ மிகவும் எளிமையான ஒரு படம். மழைக்கு ஒருவன் ஒரு மண்டபத்தில் ஒதுங்குகிறான். அங்கே இருவர் பேயறைந்தது போல அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் துறவி. மழைக்கு ஒதுங்கியவன் பேச்சு கொடுக்கிறான். இருவரும் ‘இது போன்ற ஒரு விசித்திர கதையை கேட்டதேயில்லை‘ என்பதை பயங்கர முஸ்தீபுடன் சொல்கிறார்கள். மழை நிற்கிற பாடு இல்லை. மழைக்கு ஒதுங்கியவனுக்கு பொழுது போக வேண்டும். ‘சரி, என்ன சொல்லு கேட்போம்!’
நாயகன் -நாயகி. காட்டு வழியில் ஒற்றைக் குதிரையில் போகிறார்கள்.
(பெண் அமர்ந்து வர, ஆண் நடத்தி வருகிறான்). வழியில் ஒரு திருடனை சந்திக்கிறார்கள். திருடன் அந்தப் பகுதியில் மிகப்பிரபலம். லேசுபட்டவன் அல்ல. நாயகியின் பேரழகு திருடனை என்னவோ செய்கிறது. (‘She was like a goddess’) நாயகனை தந்திரமாக ஏமாற்றி கட்டிப் போட்டு விட்டு, நாயகியை கற்பழித்து விடுகிறான். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நாயகன் செத்துக் கிடக்கிறான். நாயகி ஒரு கோயிலில் ஒளிந்துகொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்படுகிறாள். திருடன் விஷச்செடி வளர்ந்த மலையின் அருவி நீரை குடித்து மயக்கமாகி காவல்துறையிடம் சிக்குகிறான். இந்த மண்டபத்தில் துறவியோடு இருந்தவன் தான் முதலில் நாயகனின் பிணத்தை பார்க்கிறான். அவனே காவல்துறைக்கு தகவலும் தந்தது.
விதமான வாக்குமூலங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று திருடனுடையது. மற்றொன்று நாயகியினுடையது. மூன்றாவது? சஸ்பென்ஸ்
காவல்துறை படத்தில் காட்டப்படவேயில்லை. மக்கள் தான் காவல்துறை என்பது போல, சாட்சி சொல்பவர்கள் காமிராவைப் பார்த்தே வாக்கு தருகிறார்கள்.
கேட்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கிற கதை, அகிராவின் இயக்கத்தில் எடுக்கிற ஒளி வடிவம் அபாரமானது. எழுத்திலும் சரி, காமிராவிலும் சரி – படத்தின் தரம் பரவசப்படுத்துகிற ஒன்று. மேக இடைவெளியில் மின்னலென சூரியன் உடைந்து கொண்டிருக்க, திருடன் குதிரையில் விரைகிற 2 நொடிக் காட்சியோ; மூன்று கதாபாத்திரங்களின் இடையே ஏற்படுகிற tension-ஓ அதை சடசடவென வெட்டுகிற கோணங்களில் காட்டுகிற விதமோ – எல்லாமே பரவசம்! படத்தின் மிகச்சிறப்பான அம்சங்கள் – காட்சியமைப்புகளும், படம் தட்டி எழுப்புகிற உணர்வுகளும்.
தமிழில் இதே போன்ற வந்த படங்களை நீங்கள் ஊகிக்க முடியும் – அந்த நாள், விருமாண்டி.
எது உண்மை? எது பொய்? என்ற சுவாரசியமான கேள்வியையும் மீறி மூன்று கதாபாத்திரங்கள் எடுக்கக் கூடிய வெவ்வேறு நிலையை ஒரே படத்தில் ரசிக்கும் வாய்ப்பு கிட்டும்!
(Rashomon / Japan / 1950 )
******
கனவுகளை துரத்துவது மிகவும் கடினம். ஒரு குதிரையேறி துரத்தலாம். உங்கள் ஆர்வத்தை குதிரையின் கடிவாளமாக மாற்றி குதிரையை இலக்கு நோக்கி செலுத்தலாம். ஆனால், நிதர்சனத்தின் கடிவாளம் உங்களையே கட்டுப்படுத்தினால்?
க்ரிஸ் ஒரு சேல்ஸ்மேன். உப்புப் பட்டாணிக்கு உதவாத ஒரு மருத்துவ சாதனம் ஒன்றை வீதியாக வீதியாக ஆஸ்பத்தரி ஆஸ்பத்திரியாக சென்று விற்க வேண்டும். மருத்தவர்களிடம் பல்லிளிக்க வேண்டும். ஒரு சாதனம் விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். வீடு நிறைய விற்கப்பட வேண்டிய சாதனங்கள் . வருமானம் போதவில்லை. மனைவிக்கு வேலையும் செய்து வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். மகனுக்கு ஆறு வயது. அவனது எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டும்.
இதையெல்லாம் மீறி க்ரிஸ்ஸுக்கு ஒரு கனவு உண்டு. பங்குச்சந்தைக் கனவு. கண்களில் எண்கள் மிதக்க, நாளெல்லாம் ஒரு பரவசமான வணிக விளையாட்டு. எப்படியாவது பங்குச்சந்தையில் தரகராக சேரவேண்டும். அதற்கும் ட்ரெயினிங் உண்டு! தற்போதைய நிர்பந்தங்களையும் மீறி அதை சாத்தியப்படுத்த அபாரமான முயற்சிகள் தேவை! முடியுமா?
முடியும் என்பதே படம் தருகிற உற்சாகமான பதில்!
வீட்டுக்கு வெள்ளை அடித்த கையோடு ஓடுவது, கிடைத்த ஐந்து நிமிடங்களில் மேலாளரை இம்ப்ரெஸ் செய்ய படபடப்பாக Rubik’s Cubeஐ பொருத்துவது, வீடிழந்த இரவில் தவிப்பது என பல அற்புதமான கணங்கள் படமெங்கும்.
படத்தின் அப்பா-மகன் உறவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! படத்தில் வில் ஸ்மித்தும் அவரது மகனுமே நடித்திருக்கிறார்கள். இருவருமே உண்மையாக அந்த பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியே இன்னொரு தகவல் – இது ஒரு உண்மைக் கதை!
தடைகளைத் தாண்டி வெற்றி பெறுதல் வழமையான திரைப்படக்கதை என்றாலும், பிரகாசமான சூரியப் பேரொளியை கண்டது போன்ற உற்சாகத்தை படம் தரும்!
(Pursuit of Happyness / Hollywood / 2006)
பிம்பங்கள் #1
சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மதிய வேளையில் தொலைக்காட்சியில் நுனிப்புல் மேய்ந்துகொண்டிருக்கையில் அந்தக் காட்சியை கண்டேன்.(Zee Studio – உலக சினிமா பார்க்க தொடங்க வேண்டும் என்று என்னை மிகவும் தூண்டிய Amelie திரைப்படத்தையும் இதில் தான் கண்டேன்). மிகவும் அழகான ஒரு பெண்ணும் அந்த ஆணும் சந்திக்கிற முதல் சந்திப்பு. சின்னப் பந்தை வைத்து மேஜை விளையாட்டு எதையோ விளையாடிக் கொண்டிருக்கிறாள். நாயகன் அவளை அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கிறான். ‘விளையாட வருகிறாயா?’ என்று அவள் கேட்கிறாள். நாயகனுக்கு ஆட்டம் தெரியாது. தொடர்ந்து தோற்கிறான். ஒரு விதமான படபடப்பிலேயே நிற்கிறான். காட்சி வேறொரு இடத்திற்கு நகர்கிறது. ஒரு முதியவரிடம் நாயகன் அவளைக் கண்டதை விவரிக்கிறேன். அத்தனை அழகை கண்ட அவனது வியப்பும் அதை விவரிக்கும் விதமும் அலாதியானது. ‘ஏதேனும் பேசி தொலைத்தாயா இல்லையா?’ முதியவர் பொறுமையிழந்து கேட்கிறார். ‘ஓ. ஐந்து வார்த்தைகள்.’ ‘என்னவெல்லாம்?’ நாயகன் புன்னகைக்கிறான். ‘உன் பெயர் என்ன? என்று கேட்டேன். அவள் பெயரைச் சொன்னாள், அப்பாவின் பெயரையும் சேர்த்து’. ‘ம், மிச்ச ரெண்டு வார்த்தைகள்?!’ நாயகன் மௌனமாகிறேன். ‘அவள் பெயரை சொல்லிப் பார்த்தேன்!’
இந்த காட்சி மூளையின் ஏதோ ஒரு பகுதியில் அழியாமல் தங்கிவிட்டது. நாயகனின் அப்பாவித்தனமா, நாயகியின் அழகா
, காட்சிப்படுத்திய முறையா, இசையா, எதுவோ தெரியவில்லை. காட்சி மட்டும் மறக்கவில்லை. ‘The Postman’ திரைப்படத்தை கையில் எடுக்கையிலேயே ஒரு மெல்லிய சந்தேகம் வந்தது. அந்தக் காட்சி இந்தப் படத்தில் தானா என்று. படத்தை வாங்கி வந்து இரண்டு மாதங்கள் ‘இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்’ என்று யோசித்தபடியே கழிந்தது. சென்ற வார இறுதியில் படத்தை கண்ட போது அந்தக் காட்சி வந்த போது, திசைகள் தெரியாமல் இத்தனை நாட்கள் தேடியது ஒரு வட்டமாக முடிந்தத போது, உண்மையிலேயே சிலிர்த்தது. (படத்தை பற்றிய நண்பர் மதனின் விமர்சனம்)
திரைப்படங்களிலிருந்து நான் மனதில் உள்வாங்கிக் கொள்வது இது போன்ற அழகான பிம்பங்கள் தான். அப்படி சில காட்சிகள், சில படங்கள் இந்தத் தொடரில்…
(Il postino / Italy / 1994)
**********
ஒரு படத்தின் முதல் காட்சி மிகவும் முக்கியம். ஒரு நாவலோ, சிறுகதையோ, அழகான பாடலோ தங்களின் துவக்கத்துக்கு எத்தனை மெனக்கெட வேண்டுமோ, அத்தனை மெனக்கெட வேண்டும். இந்தப் படத்தின் படக்குழுவினரின் பெயர்கள் ஒளிர துவங்கும் முதல் காட்சி அபாரமானது. படத்தின் மூன்று கதைகளில் ஒன்றின் நாயகரான முதியவரும் அவரின் மனைவியும் அவர்களின் பலசரக்குக் கடையை மெதுவாக அடைப்பதே காட்சி. மொத்த படத்திற்கான Moodஅயும் மிக அழகாக அமைத்துவிடுகிறார்கள்.சிங்கப்பூர் நகரொன்றில் துணையைத் தேடி தனிமையில் அலையும் மூன்று மாந்தர்களைப் பற்றிய கதை. ஒன்று உண்மைக் கதை.
முதல் நாற்பது நிமிடங்கள் நீங்கள் அசரப்போவது உறுதி. பல கதைகள் ஒரே திரைப்படத்தில் சொல்வது மிகவும் கடினமான விஷயம். இயக்குனர் அந்தப் மூன்று கதைகளினூடே புகுந்து வெளிவரும் முறை மிகச்சிறப்பு.
முதியவர் கடைத் தெருவில் திரிந்துகொண்டிருப்பதில் துவங்குகிறது படம். பார்த்துப் பார்த்து காய்கறிகளும் மாமிசங்களும் வாங்கி வந்து பல உணவுகள் சமைக்கிறார். அவற்றை எடுத்துக்கொண்டு பேருந்தேறி மருத்துவமனைக்கு செல்கிறார். மனைவிக்கு உடல் ந்லமில்லை. அமைதியாக உணவை ஊட்டிவிடுகிறார். பேச்சு வார்த்தை ஏதுமில்லை. மனைவி அழுதுகொண்டே சாப்பிடுகிறார். முதியவர் வீடு திரும்பி தனியாளாக கடையை அடைக்கிறார்.
அதே சமயம் மற்றொரு கதையில் அலுவலகத்தின் காவலாளி ஒருவன் கண்காணிப்பு காமிராவில் உயரதிகாரி போல இருக்கும் அந்த இளம்பெண்ணை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பார்வையில் காமமில்லை. அவளின் அருகாமை அவனுக்கு படபடப்பைத் தருகிறது. காதலை இதுவரை சொன்னதில்லை. மூன்றாவது கதையில் மின்னரட்டையில் இரு புனைப்பெயர்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. முதல் முறை பேசுபவர்கள். அலைபேசி எண்கள் பறிமாறிக்கொள்ளப்படுகின்றன. இருவரும் பெண்கள்.
முதியவரின் மகன் சமூக ஆர்வலன், வழக்கறிஞர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளன். அவன் தெரஸா சானை சந்திக்க நேரிகிறது. மாற்றுத் திறன் படைத்தவர். அவரின் சுயசரிதையை மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்குகிறான். இடைப்பட்ட நேரத்தில் முதியவரின் மனைவி இறக்கிறார். (அந்தக் காட்சி பெரும் அதிர்ச்சி மட்டுமல்ல, அழகும் கூட!). முதியவர் உணவு சமைப்பதையே நிறுத்திவிடுகிறார். மகன் என்றாவது வந்தால் மட்டும் சமைத்துத் தருகிறார். மகன் மூலம் தெரஸா சானை அறிந்துகொள்கிறார். சுயசரிதையை படிக்கிறார். அவரின் பால் பெரும் மதிப்பு வருகிறது. ஒரு நாள் மகனிடம் அவருக்காக உணவைச் சமைத்து கொடுத்தனுப்புகிறார். உணவுகள் மூலம் பரிவும் அன்பும் வளர்கிறது. ஒரு நாள் மகனால் உணவை எடுத்துச் செல்ல இயலாமல் போக, அவரே எடுத்துச் செல்கிறார். உணவை பறிமாறத் தொடங்கியதும், மனைவியை நினைத்து அழத் தொடங்கிறார்.
மற்ற இரண்டு கதைகளின் முடிவு இன்னும் சிக்கலானது. தாழ்வு மனப்பான்மையில் சிக்கிய ஒருவன் தன்னை விட நிலையில் உயர்ந்த பெண்ணை காதலிப்பதிலும், இரு பள்ளி மாணவிகள் ஓரினக் காதலில் விழுவதும் அத்தனை சுலபமான நிகழ்வுகள் இல்லையே!
மூன்று கதைகளிலும் பொதுவான அம்சம் தனிமையின் துயரும், காதலையும் அன்பையும் தேடுகிற வலியும் தான். தனித்தனியான இந்த மூன்று கதைகளையும் அழகாக இணைக்கிறது – மழை நின்று வெகு நேரமான பின் விழும் ஒழுங்கற்ற துளிகள் போன்ற பியானோ இசை. மூன்று கதைகளும் இணைகிற புள்ளி – படத்தின் பலவீனம்.
படத்தின் மிக சுவாரசியமான அம்சம் இயக்கம். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமான மொழியில் சொல்லியிருக்கிறார்கள். முதியவரின் கதை பெரும்பாலும் திரையில் எழுத்தாகவே சொல்லப்பட்டிருக்கிறது – ஏனென்றால் தெரஸாவால் பேச முடியாது! மிகவும் ரகசியமான ஓரினக் காதலர்களின் கதையை குறுந்தகவல் எழுத்துக்கள், மின்னரட்டைகள், மின்னஞ்சல்கள் வழியே சொல்லியிருப்பதும் அழகு. காவலாளியின் கதையில் வசனங்கள் கிடையாது. விழிகளால் கள்ளத்தனமாக காதலியைக் கண்காணிப்பவனின் கதை காட்சிகள் மூலமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் மொத்த வசனங்களும் சேர்த்தால் ஒரு பக்கத்தை தாண்டாது!
சிங்கப்பூரில் தணிக்கை முறை மிகவும் கடுமையானது. ஆகையால் ஓரினக் காதலை மிகவும் கண்ணியமாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் சமைக்கப்படுகிற அத்தனை உணவுகள் எச்சிலூற வைப்பவை. (நான் சைவம் என்பதையும் மீறி!
)
படம் பார்த்த பின் மனதில் பொங்குகிற பேரமைதிக்கு ஈடிணை ஏதுமில்லை.
(Be with me / Singapore / 2005 ) (Torrent)
**********
இரவுப் பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது. சைமன் வெளியே காத்திருக்கிறான். நடன விடுதிக்குப் போவதாக முடிவு. நண்பன் அவனுடைய காதலியுடன் வருவான். காதலியின் தங்கையும் வரப்போகிறாள். அவளோட சைமன் நடனமாடலாம். அப்படித் தான் எண்ணம். சைமனுக்கு பெண்கள் என்றாலே உதறல். கனிவாக பேசத் தெரியாது. சிரிப்பும் வராது. இருந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில் காத்திருக்கிறான். இன்றைய மாலைப் பொழுது இனிதாய் கழியுமா?
ஹாலேத் வெளியே வருகிறான். ஏதோ பாட்டுக் கும்பல் ஒன்று வழி மாறி வந்து இறங்கியிருக்கிறது. மொழியும் புரியாது. எதிரி நாடு வேறு. இள வயது என்பதைத் தவிர ஒற்றுமைகள் ஏதுமில்லை. ஹாலேத் Ladies man என்று அழைக்கப்படுபவன். இங்கே பொழுதே போகவில்லை. சைமனிடம் உடைந்த ஆங்கிலத்தில் என்னையும் அழைத்துப் போ என்கிறான். சைமனுக்கு விருப்பமில்லை. பிடிவாதமாக ஹாலேத் தொடர்கிறான். கார் வருகிறது. நேராக காதலியின் வீட்டுக்குச் செல்கிறது. காதலியின் தங்கை அறிமுகப்படுத்தப் படுகிறாள். ‘இவளா??’ சரியான முசுடு போல இருக்கிறாள்.
கார் நடன விடுதிக்கு செல்கிறது. நடன் விடுதி என்றால், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஆட வேண்டும். இருக்கிற சங்கடம் போதாதென இது வேறு. நண்பனும் அவன் காதலியும் விட்டால் போதும் என்று ஓடிப் போய்விடுகிறார்கள். அந்த முசுடுப் பெண் ஒரு ஓரமாக நின்று சைமனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. சைமன் ஹாலேத்துடனே நிற்கிறான். (ஹாலேத்துக்கு சக்கரம் வழுக்கி விட்டுக் கொண்டே இருக்கிறது.) சைமன் ஹாலேத்திடம் கேட்கிறான் – ‘நீ பெண்களுடன் பேசிப் பழகி இருக்கிறாயா?’ (உடைந்த ஆங்கிலம்). ஹாலேத் ஆம் என்கிறான். ‘அது எப்படியிருக்கும்? எனக்கு அவர்களிடத்தில் பேச பயம்!’ ஹாலெத் அதை ஆங்கிலத்தில் விளக்கி சொல்ல முடியாது, என் தாய்மொழியிலேயே சொல்கிறேன் கேட்கிறாயா என்கிறான். சைமன் தலையசைக்கிறான். ஹாலேத் பேசத்துவங்கிறான். ஆயிரம் ரோஜாப் பூக்களின் வாசத்தைப் பற்றியோ, முழு நிலவைப் பற்றியோ, இரவு கடற்கரையைப் பற்றியோ பேசுவது போல ரசித்துப் பேசுகிறான். சைமன் கண்களை விரித்து வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். ஐந்து நிமிடம் பேசுகிறான். முடித்து விட்டு, ‘ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்கவா?’ என்கிறான். சைமன் மெதுவாக வேண்டாமென தலையசைக்கிறான்.
அந்த முசுடு இப்போது நடந்து வருகிறாள். சைமனுக்கு பயம் பிடிக்கிறது. இவனிடம் வந்து கையை நீட்டுகிறாள். கையை கொடுப்பவன் திடீரென விலக முயற்சிக்கிறான். அவள் விட மறுக்கிறாள். சின்ன போராட்டத்தில் முடிவில் கால் சக்கரம் வழுக்கி அந்தப் பெண் தொப்பென விழுகிறாள். அடக் கடவுளே! எழுந்து நிற்கிற போது அழுதுகொண்டிருக்கிறாள். அங்கிருந்து போய் விடுகிறாள். சைமன் ஹாலேத்திடம் கேட்கிறான் ‘என்ன செய்ய இப்போது?’
ஹாலேத் சைமனை அழைத்துச் செல்கிறான். அந்த பெண் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறாள். முதலில் சைமன் அவள் பக்கத்தில் அமர்கிறான். ஹாலேத் அவனருகில் அமர்கிறான். ஹாலேத் கைகுட்டையை எடுத்துக் கொடுத்து ‘அங்கே’ என்பது போல கைகாட்டுகிறான். சைமன் அவசரமாக நீட்டுகிறான். அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு யோசித்து வாங்குகிறாள். ‘அடுத்து என்ன அடுத்து என்ன?’ சைமனுக்கு அவசரம்! ஹாலேத் மெதுவாக மிருதுவாக சைமனின் கைகள் பற்றுகிறான். ‘அங்கே!’ சைமன் அதே போல செய்கிறான். அந்தப் பெண் மெதுவாக அவன் கையைப் பற்றுகிறாள். ஹாலேத் சைமனின் கன்னத்தில் முத்தமிடுவது போல பாவனை செய்கிறான். சைமன் யோசித்து விட்டு, அதே போல் முத்தமிடுகிறான்.
நடன விடுதியெங்கும் பொங்கி வழிகிறது உற்சாக இசை.
(The Band’s Visit / Israel / 2007) (Torrent)
**********
(கொசுறு – படத்திற்கு வசனமொழியே தேவையில்லை என்று சொல்லும் ‘Be With Me’, மொழி தெரியாதவர்களிடம் இடையே ஏற்படும் நட்பை சொல்லும் ‘The Band’s Visit’ இரண்டையும் ஆஸ்கர் விருது குழு நிராகரித்து விட்டது. காரணம்? வேற்று நாட்டு மொழியை விட ஆங்கிலம் அதிகம் என்பதே!)
6வது சென்னை திரைப்பட விழா – #2
# மஜித் மஜிதியின் “The Song of Sparrows” படத்திற்கு நிச்சயம் இடம்
கிடைக்காது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நல்ல வேளையாக, சீக்கிரம் சென்று விட்டேன். மிகவும் பரிச்சயமான இயக்குனர் என்பதால் கூட்டம் அலைமோதியது. ‘பூ’ பட இயக்குனர் சசி தொடங்கி ஜோடி நம்பர் 1 ராஜேஷ் வரை பல முகங்களை பார்க்க முடிந்தது. ஒரு கிராமத்தானுக்கு வாய்ப்புகளும் பணமும் அதிகம் புழலுகின்ற நகரத்தில் ஏற்படுகிற அனுபவங்களும், அது அவன் வாழ்க்கையையும் குடும்பத்தினரையும் எப்படி பாதிக்கிறது என்பதை தன் பாணியில் சொல்லியிருந்தார். மஜிதியின் படங்களில் humour நான் எதிர்பாராதது. அதுவும், மென்மையான சின்னப் புன்னகையை வரவழைக்கும் Gentle Humour. காது கேட்காத முதல் மகளின் ஹியரிங் எய்டு தொலைந்து போவதில் துவங்குகிறது படம். தொடர்ந்து, நெருப்புக்கோழி(!) பண்ணையில் அப்பாவின் வேலை போக, நகரத்துக்கு வேலை தேடி செல்கிறார் அப்பா. அங்கே, பைக்கை வைத்து கொண்டு ஆட்டோ போல சவாரி எடுக்கலாம். (அதற்கு யுனியன் எல்லாம் உண்டு!) நிறைய காசும், உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுகிற பொருட்களையும் தினம் அள்ளி வருகிறார் அப்பா. பணம் பார்க்க பார்க்க தயாள குணம் மாறிவிடுகிறது. பண்ணையில் அவரது கவனக்குறைவினால் எஸ்கேப் ஆகிவிடுகிற நெருப்புக்கோழி ஊரெங்கும் தன் தடயத்தை விட்டுச்செல்வது, அப்பாவின் குணம் கலங்க கலங்க, வீட்டு புழக்கடை கிணற்றை பிள்ளைகள் சுத்தப்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன படிமங்கள் மூலம் கதை சொல்லப்படுகிறது. காமிரா அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். பல பருந்து விழி ஷாட்டுகள் (eagle-view
) அழகு. ஒன்று, இங்கே படத்தில் இருக்கிறது. இசை தான் கொஞ்சம் ஏமாற்றம். Children of Heavenஇல் ஹூ தவறி தண்ணீரில் விழுகிற காட்சியின் பிண்ணனி இசை என் மனதில் அப்படியே இருக்க, அதைப் போல இங்கே எதுவும் இல்லை. ஒரு நிமிடமும் சலிக்காமல், ஜில்லென்று நகர்கிறது படம். ஒரு ஆஸ்கர் நாமினேஷன் எதிர்பார்க்கலாம். பின்னால் அமர்ந்திருந்த இருவர், ஒவ்வொரு முறை நெருப்புக்கோழி முட்டையை காட்டும் போதெல்லாம், ‘நெருப்புக்கோழி முட்டை இவ்ளோ பெருசா’ என்று வியந்தது சுவாரஸ்யம்!
# விழா மேடையில் பேசுகிற 10 நிமிடங்களில் 4 நிமிடங்கள் மேடையை அலங்கரப்போரின் மேன்மையை விளக்குவதிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் Round robin கணக்காக ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து புகழ்ந்து புளிக்க ஆரம்பித்து விடுகிறது. நிறைவு விழாவில் பேசிய கவிஞர் வாலியின் பேச்சை அப்படியும் கேட்க முடிந்தது. இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், ராமநாராயணமன் ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர். யாரும் ஒரு படத்தையும் பார்க்கவில்லை, உலக சினிமாவைப் பற்றி பேசவும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு! கலைஞர் 25 லட்சம் தந்தது குறித்து அனைவரும் நன்றி நவின்றனர். ரிஜஸ்டர் பாஸ் வாங்காதவர்கள் மூன்று ரூபாய் தந்து டிக்கெட் வாங்கி ஒரு படம் பார்க்கலாம் என்ற அரசின் அறிவிப்பு டுபாக்கூர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
#- கான் திரைப்பட விழாவிற்கு போக வேண்டும் என்பது நான்
வாழ்நாளில் செய்ய விரும்புகிற 50 காரியங்களில் ஒன்று. அது வரை, அவ்விழாவில் பரிசு பெறும் திரைப்படங்களை பார்த்து மனதை தேற்றிக்கொள்வது தவிர வேறொன்றும் செய்ய முடியாது. இந்த முறை அந்த ஆசையில் கொஞ்சம் நிறைவேறியது. இந்த வருடம் சிறந்த இயக்குனர் விருதை தட்டிச் சென்ற ‘Three Monkeys’ படத்தை திரையிட்டு, விழாவை நிறைவு செய்தார்கள். ‘கெட்டதை கேட்காதே, கெட்டதை பார்க்காதே, கெட்டதை பேசாதே’ என்று சொல்லும் மூன்று குரங்குகளின் சித்தாந்தத்தை, ஒரு தவறை மறை(ற)க்க முயலும் ஒரு குடும்பத்தினரை (அப்பா, அம்மா, பையன்) வைத்து எடுத்திருந்தார்கள். அந்த வீட்டின் சூழலை மிகப் பிரமாதமாக கொண்டு வந்திருந்தார்கள். ஆர்ட் டைரக்ஷன் மூலமே பாதி கதை சொல்லிவிடுகிறார்கள்! லைட்டிங், கதாபாத்திரங்களின் அசைவுகள் எல்லாம் கதை சொல்கிறது. வசனங்கள் மிகக்குறைவு. ஒரு பெரிய பிரச்சினை முடிந்து, அப்பா வீட்டு மாடியில் பெருமூச்சோடு நிற்க, பின்னாலிருந்து பெரு மேகங்கள் திரண்டு வந்து மழை துவங்கும் க்ளோசிங் ஷாட், மிகப் பிரமாதம். படத்தின் மந்த கதி, கொஞ்சம் நெருடல். உட்காரந்திருந்தவர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து நகர, இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தவர்களுக்கு விமோசனம் கிடைத்தது. இது போன்ற ஒளிப்பதிவை காண, தமிழ் திரைக்கு இன்னும் எத்தனை நாளாகுமோ! உலகத்தரம்!
# கான் திரைப்பட விழாவில் மகுடம் சூடிய படம். The Class – ப்ரெஞ்ச்
படம். முழுக்க முழுக்க வகுப்பறையில் நடக்கிற படம். இது படமா இல்லை நிஜமா என்று கிள்ளி கிள்ளி கை வலித்தது தான் மிச்சம். 12-13 வயதுடைய மாணவர்கள், ஒரு ஆசிரியர், ஒரு வகுப்பறை. ஆசிரயராக இருப்பது எவ்வளவு கஷ்டமடா சாமி! அதுவும் ப்ரான்ஸில் பலதரப்பட்ட மக்கள் உண்டு. கறுப்பர்கள், சீனக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள் (ஒரு ஆப்பிரிக்கா பையன் – அம்மா வருகிற காட்சி எல்லாம் பிரமாதம்), அடாவடி ஆங்கிலேயர்கள் -எல்லாம் கலந்த கலவை. பருவ வயது வேறு – ஏடாகூடமான கேள்விகள், சண்டைகள், சச்சரவுகள். பள்ளியில் இருக்கிற ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க வேண்டி போராட வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் ஒரு கெட்ட வார்த்தை கூட பேச மாட்டேன், நிதானம் இழக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிற ஒரு ஆசிரியரை பின் தொடருகிறது படம். ஒரு வருட காலம் நடக்கிற கதை. ஒரு ஆண்டு முடிவில் மாணவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை விளக்கி விட்டு, காலியான வகுப்பறைகளின் montage ஷாட்டுடன் நிறைவுபெறுகிறது படம். இது நிச்சயம் நடிப்பாக இருக்க வாய்ப்பில்லை – அத்தனை பிரமிப்பான நடிப்பு. போன வருடம் நான் பார்த்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்று!
# நிறைவான அனுபவம். ஒரே ஒரு குறை – என்ன படங்கள் பார்க்கலாம் என்று முடிவு செய்ய, படம் எப்படியிருந்தது என்று விவாதிக்க, கூட சென்று வர ஒரு நண்பன்/நண்பி இல்லை! இருந்தவர்களும் கிற்ஸ்துமஸ் விடுமுறையில் சென்று விட, ஒரே போர். அடுத்த முறை என்னுடன் வருவதற்கு இப்போதே சொல்லி வைக்கலாம்
முற்றும்.
செல்லுலாய்ட் கவிதைகள் – 8

படம் ஒரு நீண்ட மௌனத்தில் துவங்குகிறது. ரொமானியாவின் ஒரு பல்கலைகழக விடுதி அது. அறைத் தோழிகளான ஒட்டிலியாவும் கபீட்டாவும் நீண்டதொரு விவாதத்தை அப்போது தான் முடித்திருக்கிறார்கள். பார்வையில் தைரியம் கொப்பளிக்கிற ஒட்டிலியா; மருண்ட கபீட்டா; ஒட்டிலியா ‘சரி’ என்கிறாள். கபீட்டா நன்றி சொல்கிறாள்.
ஒட்டிலியா எழுந்து வெளியே சென்று அன்றைய பொழுதுக்கு தேவையான பொருட்களை வாங்குகிறாள். கிடைக்காத பொருட்களை மற்ற தோழியரிடம் கடன் வாங்குகிறாள். கள்ளச் சந்தை கொழித்து கிடக்கிறது. நிறைய பொருட்களுக்கு பஞ்சம். இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகளில் ஒருவனின் கடைசி ஆட்சிக்காலம் அது. 1980கள்.
குளித்து முடித்து விட்டு ஓட்டிலியா மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறாள், அவளுடைய காதலனை பார்க்க. கையில் சுத்தமாக காசு இல்லை. செய்யப் போகிற காரியத்திற்கு நிறைய காசு வேண்டும். எண்ணி கொடுத்து விட்டு காதலன் கேட்கிறான், ‘நிச்சயம் இதை செய்ய வேண்டுமா?’
ஒரு அறை தேவைப்படுகிறது. ஒரு இரவு கூட போதுமானது. முதலில் அந்த டாக்டரிடம் பேச வேண்டும். அறையை எங்கு பார்ப்பது என்று அவரே சொன்னாலும் சொல்வார். கொஞ்சம் பேரம் பேச வேண்டும். டாக்டரிடம் கபீட்டாவை பேச சொல்கிறாள். இடம் முடிவாகிறது. கொஞ்சம் கெடு பிடி இல்லாத ஒரு ஹோட்டல் அது. ஆனால் அங்கு அறை இல்லை. காசும் ரொம்ப அதிகம். ஒட்டிலீயாவாக ஒரு ஹோட்டலை முடிவு செய்கிறாள். வேறு வழி இல்லை.
ரிஷப்ஷனில் ஆயிரம் கேள்விகள். ‘அடையாள அட்டையை முதலில் கொடு’ – இது தான் எங்கும் முதல் வாசகம். அது மற்றவர் கையில் இருக்கிற வரைக்கும், ஒன்றும் செய்ய முடியாது. நம் விதி அவர்கள் கையில். வரப்போகிற தேர்வுக்கு இரவெல்லாம் படிக்கப் போவதாக சொல்கிறாள். விடுதியில் நல்ல சூழ்நிலை இல்லை, ப்ளீஸ். பொய் சொல்கிறாள். உண்மையைச் சொன்னால், சிறைக்கு தான் போக வேண்டும். தங்கப் போகிற இருவரின் அடையாள அட்டையையும் அடகு வைத்து விட்டு நகர்கிறாள்.
அடுத்து டாக்டரை அழைத்து வர வேண்டும். பேசி வைத்த இடத்துக்கு போய் காத்திருக்கிறாள். முப்பது வயது மதிக்கத்தக்கவன் ஒருவன் வந்து சேர்கிறான். அதிகம் பேசுபனாக இல்லை. காசு இருக்குல்ல? நம்பத்தகுந்தவன் தான், ஏற்கனவே இதை செய்த தோழியிடம் ரகசியமாக பெற்ற முகவரியில் மருத்துவம் செய்கிறவன்.
ஹோட்டலுக்கு வந்து சேர்கிறாள் கபீட்டா. டாக்டரும் ஒட்டிலியாவும் வருகிறார்கள். ரிஷப்ஷனில் டாக்டரின் அடையாள அட்டையை வாங்கி வைத்து கொண்டு அனுப்புகிறார்கள். அறைக்கு உள்ளே வந்ததும் டாக்டர் சீறுகிறான். ‘இந்த ஹோட்டலுக்கு ஏன் வந்தீர்கள்? நான் இதை செய்ய மாட்டேன்.’ இரு பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். கபீட்டாவை பார்த்ததும் டாக்டர் கேட்கிறான் – ‘எத்தனை மாசம்?’ கபீட்டா கலவரமுறுகிறாள். மூன்று மாதம் மேல் வளர்ந்த கருவை யாரும் கலைப்பதில்லை. அதுவும் சட்டப் புறம்பாக. கருக்கலைப்பு அங்கே தண்டனைக்குரியது. தயங்கி தயங்கி, ‘நான்கு மாதம்’ என்கிறாள். ஒட்டிலியாவுக்கே இந்த விஷயம் தெரியாது.
டாக்டர் மூட்டை கட்டி கொண்டு கிளம்புகிறான். ‘பொய் மேல் பொய் சொல்லியிருக்கிறீர்கள். நான்கு மாத கருவை கலைப்பது உயிருக்கு ஆபத்து. இவள் செத்துப் போனால் எனக்கு ஆபத்து, முடியாது’ கபீட்டா அழத்தொடங்குகிறாள். காலில் விழுகிறாள். கெஞ்சுகிறாள்.
காசு அதிகம் கேட்கிறான். இருவரிடம் இருந்த காசு எல்லாவற்றையும் போட்டு கொண்டு வந்தது பழைய காரியத்துக்கு. 4 மாத கருவென்றால் அதிகம் தா. காசு சத்தியமாக இல்லை. அப்படியென்றால், அவன் ஒட்டிலியாவை பார்க்கிறான்!
குறைந்த அவகாசத்தில் முடிவு செய்ய வேண்டும். அவன் ஒட்டிலியாவை பார்த்து இறுதியாக கேட்கிறான், வருகிறாயா, இல்லையா?
கழிவறையில் இருந்து வெளியே வருகிறார்கள் டாக்டரும் ஒட்டிலியாவும். டாக்டர் பரபரவென வேலை செய்கிறான். அந்தக் கருவை எப்படி வெளியே எடுப்பார்கள் என்று நான் சொல்லத் தயாராய் இல்லை!
டாக்டர் வேலையை முடித்துக் கொண்டு கிளம்புகிறான். ‘இன்று இரவு முழுதும் அசையாமல் அப்படியே இரு. நாளை காலை கரு வெளியே வந்து விடும்’
ஓட்டிலியாவின் காதலன் அவளை வீட்டுக்கு அழைத்திருக்கிறான். அவனுடைய அம்மாவின் பிறந்த நாள் பார்ட்டி. கபீட்டாவை ஹோட்டலில் விட்டு விட்டு செல்கிறாள். இது வரை அவளை ஒரு நாய்க்குட்டி போல பின் தொடந்து வந்த காமிரா, அப்படியே தொடர்ந்து செல்கிறது.
அந்த விருந்து காட்சி மிகவும் நீளமானது. பேச்சும் சிரிப்புமாக மற்றவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் நகர, ஒட்டிலியாவுக்கு கவனம் அங்கில்லை. உண்மையில் அப்படி ஒரு சூழலில் சிக்கியவர்களுக்கு மற்றவர்களின் சகஜமான பேச்சு எத்தனை எரிச்சலாக இருக்கும் என்று அழகாக விளங்கும். அந்தக் காட்சி உங்களுக்கு பிடித்தால், இந்தப் படமும் உங்களுக்கு பிடிக்கும்,
ஒட்டிலியா திரும்ப ஹோட்டலுக்கு போகிறாள். அறையில் அவளைக் காணவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. களையப்படவேண்டியவை, கழுவப்படவேண்டியவை என அத்தனையையும் கவனித்துவிட்டு, கீழே இருக்கிற ரெஸ்டாரெண்டுக்கு செல்கிறாள். கபீட்டா அமர்ந்திருக்கிற டேபிளில் அமர்கிறாள்.
ஒரு நீண்ட மௌனத்துடன் முடிகிறது படம்.
- * – * – * -

திரைப்பட ரீல் எண் ‘1’ என்று சொல்கிறது. காமிரா ஒரு காருக்குள் இருக்கிறது. ஓட்டுனருக்கு பக்கத்து ஸீட்டில் கண் வைத்திருக்கிறது. ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். ஓட்டுனர் யாரெனத் தெரியவில்லை. பெண் குரல் மட்டுமெ கேட்கிறது. என்ன கேள்விகள் கேட்டாலும் சிறுவன் சட்டை செய்யவில்லை. ‘ஸ்விம்மிங் க்ளாஸ் எப்படிப் போகிறது? அப்பா உனக்கு என்ன வாங்கித் தந்தார்? வெளியே எங்காவது போகலாமா? நம் வீட்டுக்கு போலாமா, அப்பா வீட்டுக்கு போலாமா?’ சிறுவன் எந்தக் கேள்வியையும் மதிக்க வில்லை. வேடிக்கை பார்க்கிறான். லா லா என்று பாடுகிறான். பெண் குரல் பொறுமையாக கேட்டுக் கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் ‘நான் உன் அம்மா’ என்று சொல்ல, சிறுவன் வெடிக்கிறான். ‘நீ அம்மாவா? நீ மொதல்லா ஒரு பொம்பளையா? லிப்ஸ்டிக் போடறது சாத்தான் குணம் தெரியுமா? நீ ஏன் கார் ஓட்டக் கத்துகிட்டே? ஏன் வெளியே சுத்தறே? நீ அப்பாவுக்கு சேவை செய்ய வந்தவன்னு மறந்துடுச்சா? உன்ன மாதிரி பெண்கள கொல்லனும்னு அப்பா சொல்லியிருககார்.” அம்மா குரல் பதற்றமடையாமல் பொறுமையாக விளக்குகிறது, தன் சுதந்திரத்தை பற்றி, தன் உரிமைகளைப் பற்றி. பத்தி நிமிட பேச்சு. சிறுவன் தொடர்ந்து கத்துகிறான். இறங்க வேண்டிய இடம் வந்தது, கதவை ஓங்கி அறைந்து விட்டு போகிறான், அந்தப் பையன் ஏழு வருடம் வளர்ந்த விஷச்செடி. நாளைய இரான் சமூகத்தின் ஆலமரம். வேறு எந்தப் படத்தின் முதல் காட்சியும் என்னை இப்படி அதிர்ச்சிக்குள்ளாகியது இல்லை!
காமிரா இப்போது அந்தப் பெண்ணை காட்டுகிறது. இதுவரை குரலில் இருந்து நான் கற்பனை செய்த உருவம். அழகான இயக்கம்!
தொடர்ந்து 2, 3 என ரீல்கள் வருகின்றன. பத்து காட்சிகள். எல்லாம் காருக்குள்ளேயே. நாயகி பார்க்கும் பெண்களுக்கெல்லாம் எல்லாம் லிஃப்ட் தருகிறாள். (கார் பயணத்தை வாழ்க்கை என்றும், லிஃப்ட் தரப்பட்டவர்கள் உறவுகள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). அபப்டி ஒரு பத்து பயணக்காட்சிகள் தான் படமே. ஒரு மூதாட்டி, காதலனால் கைவிடப்பட்ட பெண், நாயகியின் தங்கை, விலைமாது என கதாபாத்திரங்கள். நாயகியின் மகனான அந்தச் சிறுவன் மூன்று உரையாடல்களில் வருகிறான்.
அப்பாஸ் கியரோட்ஸ்மியின் படங்களில் கார் பயணமும், உரையாடலும் இன்றியமையாதவை. சினிமா விதிகள் எல்லாம் தூள் தூள் ஆக்கிற சுத்தியல் – அவர் இயக்கம். இந்தப் படத்தை அவர் எடுத்த விதம் ரொம்ப சுவாரஸ்யம். காருக்குள் இரு காமிராக்களை பொருத்தி விட்டு, காட்சியை விளக்கிவிட்டு, நடிகர்களை ‘கிளம்புங்க’ என்று அனுப்பிவிடுவார். கூட யாரும் கிடையாது. ஒரு மணி நேரம் நகரைச் சுற்றி விட்டு வருவார்கள். அதை எடுத்து எடிட் செய்த படம் இது!
அந்தச் சிறுவன் பிரமிக்க வைக்கிறான். அது நடிப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
தொடர்ந்து பல காட்சிகளில், நாயகியின் காருக்கு வழி விடாமல் அடாவடித்தனம் செய்கிற ஆண் ஓட்டுனர்கள் – நல்ல படிமம்!
முந்தைய படம் சர்வாதிகார ஆட்சியின் கீழே பெண்களின் ஒரு போராட்டத்தை சொல்கிறது. பின்னதும் தான்!
தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்

1952. சேகுவேராவிற்கு வயது 22. இன்னும் இரண்டு பாடம் எழுதினால் மருத்துவ படிப்பு முடிந்து விடும். ஆனால் அதற்குள் அவருடைய பத்து வருடக் கனவை நனவாக்கிற அவசரம் முந்திக்கொள்கிறது. அர்ஜெண்டினாவில் துவங்கி வெனிசுலா வரை லத்தீன் அமெரிக்காவை முழுதும் கடந்து சென்று பார்க்க வேண்டுமென்ற கனவு. தான் பிறந்த தேசத்தை, அதன் மக்களை கண்டறிய வேண்டி ஆசை. சுமார் 8000 மைல்கள். துணைக்கு நண்பன் அல்பெர்ட்டோ. வயது 28. ‘சே’விற்கு லேசான ஆஸ்துமா. ஒரு ஓட்டை மோட்டார் சைக்கிள் தான் இருக்கிறது. கையில் நிறைய பணமுமில்லை. கனவுகள் மட்டுமே கச்சிதம்!
அப்பா, அம்மா, தங்கைகள், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை வழியனுப்பி வைக்கிறார்கள். தட தடக்கும் வண்டியில் பட படக்க வைக்கும் பயணம் ஆரம்பம்!
அது ‘சே’வின் வாழ்க்கையை மாற்றப் போகிற பயணம். மிகப்பெரும் மார்க்ஸிஸ புரட்சியாளராக மாறப் போகிற அவரின் மனதில் அதற்கான விதைகள் சின்னதாக விழுகிற பயணம். அவரே எழுதிவைத்த நாட்குறிப்புகள் மற்றும் அவரின் அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு பின்னப்பட்ட படம்.
இது ‘சே’வைப் பற்றிய ஆவணப்படம் இல்லை. சே ஒரு முழுமையான ஆளுமையாக மாறும் அந்த பயணத்தை திரையில் பதிவு செய்யும் முயற்சி. கொஞ்சம் பிசகினாலும் டாகுமெண்ட்ரியாகக் கூடிய இதை, செதுக்கி செதுக்கி எல்லோருக்குமான படமாக சிலிர்க்க வைக்கிறார்கள். ஆஸ்கர் தொடங்கி அத்தனை விருதும் வென்று குவித்த படம்.
பயணத்தின் முதல் பாதி, இரு இளைஞர்களின் விளையாட்டு பயணமாகவே விரிகிறது. கண்ணைக் கட்டிபோடும் காமிரா, சிலிர்ப்பான இசையென கச்சேரி களைகட்டுகிறது. அதிலும் ‘சே’யின் ஆளுமை பளிச். எத்தனை பெரிய கேளிக்கை காத்திருந்தாலும், வயதான கிழவிக்கு மருத்துவம் பார்க்க விருட்டெனக் கிளம்புவது, எங்கு என்ன அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பது என சின்ன சின்னதாய் அவரைப் பற்றி அவருக்கும் நமக்குமான புரிதல்கள்.
ஆயிரம் மைல் முடிந்ததும் காதலியின் வீட்டில் ஆறு நாள் டேரா. சின்னதாய் காதல், கூடல். கையில் கொஞ்சம் சொச்சம் கொடுத்து தனக்கு ஒரு உடை வாங்கிக் கொண்டு வருமாறு சொல்கிறாள் காதலி. அதிகம் காத்திருக்க வாய்ப்புகள் இல்லையென்று சொல்லி அழுது முத்தமிட்டு அனுப்பி வைக்கிறாள். நிச்சயம் திரும்ப வருவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அந்தக் காசை எந்தக் காரணத்திற்காகவும் சே செலவழிப்பதாயில்லை. மோட்டார் சைக்கிள் முற்றிலும் பழுதடைந்தாலும் அதை சரி செய்ய அந்தக் காசைத் தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். அதிகப் பசியெடுத்தாலும் அந்தக் காசு அப்படியே இருக்கும். ஆல்பெர்ட்டோ என்ன தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காரியம் ஆவதில்லை. அதில் தெரிவது ‘சே’ காதல் மட்டுமல்ல, அவரின் உறுதி.
பனிப்பிரதேசம், மகாநதி, பாலைவனமென தொடரும் பயணம் சரியான சாகசம். சின்ன சின்ன சண்டைகளும் நிறைய அவஸ்தையுமாக அரங்கேறுகிறது. அடகாமா பாலைவனத்தில் திகில் தனிமையில் அறிமுகமாகிற அந்த ஏழைத் தம்பதியினர் முதல் திருப்பத்தை தருகிறார்கள். தீ மூட்டி வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் கம்யூனிச எதிர்ப்பில் வீடிழந்து நாடிழந்து ஓடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். நண்பர்களின் சாகச பயணம் தான் பலரின் வாழ்க்கை நிதர்சனம் என்பது இருவருக்கும் உறைக்கிறது. அவர்களை விட்டு பிரிவதற்கு முன், காதலி தந்த பணத்தை அவர்களின் கை செலவிற்கு தந்துவிட்டு வந்தது பின்னொரு காட்சியில் விளங்குகிறது!
அதன் பின்னர் வருகிற அந்த பழங்குடியினர் எபிஸோட் பிரமிப்பு. அடக்குமுறையில் சிக்கிய மக்களுக்காக ஏதும் செய்யாமல் தன் வாழ்க்கை முடியக் கூடாது என சே உறுதி பூண காரணமான காட்சிகள் விரிகின்றன.
பயணத்தின் இறுதிக் கட்டம் அமேசான் நதியின் கரையில் இருக்கும் தொழு நோய் மருத்துவமனையில் மூன்று வார சேவை. டாக்டர்கள் எல்லாம் ஒரு கரையில், நோயாளிகள் எல்லாம் மறு கரையில்! நோயாளிகளை தொடவும் கூடாது. நோயாளிகளின் உடன் இருக்கும் கன்னிகாஸ்திரிகளின் கட்டளை அது. அங்கு சென்று இறங்கியதும் அதை உடைப்பதில் துவங்குகிறது ‘சே’யின் மனதில் விழும் அடுத்த விதை. பகலானதும் படகு ஏறி அந்த கரைக்கு போய் உதவுதலும், இரவானால் இந்தக் கரைக்கு திரும்புவதுமாக நாட்கள் கழிகிறது.
உச்சகட்ட காட்சி, ‘சே’யின் பிறந்தநாள் கொண்டாட்டம். மருத்துவர்களின் கரையில் பாட்டும் கூத்துமாய் ஒரே அமர்க்களம். ‘சே’யின் சேவைக்கு அனைவரும் ஆத்மார்த்தமாய் நன்றி சொல்கிறார்கள். பின்னிரவு ஆகிவிடுகிறது. திடீரென ‘சே’விற்கு ஒரே நெருடல். பிறந்தநாளை தொழு நோயாளிகளுடனுல்லவா கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டும்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ச்சே! படகு எதும் இருப்பதாக தெரியவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். விடுவிடுவென சட்டையைக் கழற்றி விட்டு நதிக்குள் குதிக்கிறார் சே! ஆஸ்துமா மூச்சு திணறல் அதிகமாக, இந்த்க் கரையில் ஆல்பெர்ட்டோவும் மருத்துவர்களும் கதறிக் கதறி அவரை நிறுத்த, கேட்காமல் நீந்திக்கொண்டே இருக்கிறார் சே! ‘சே’யின் பின் தொடரும் நாட்களை புல்லரிக்கச் செய்து விளக்குகிறது அந்தக் காட்சி.
முழு முதற்‘கண்’ வணக்கம் காமிராவுக்கு தான்! லத்தீன் அமெரிக்கா எத்தனை அழகான இடம்! இசையும் பக்க பலம்.
கார்ல் கார்சியா பெர்னால், துடிப்பான ஸ்மார்ட்டான புத்திசாலி நடிகர். அமொரெஸ் பெரோஸ், பேபல், பேட் எஜுகேஷன் முத்திரைகளை தொடர்ந்து இதிலும் அழுத்தமான முத்திரை. தீர்க்கமான பார்வை ப்ளஸ். ஆஸ்துமா அதிகமாகிற அந்த இரவில் கலவரப்படுத்திவிடுகிறார்.
சேகுவோராவைப் பற்றி அத்தனையும் இந்த படத்தில் தெரிந்துகொள்ள முடியாது. அவரை இத்தனை நெருக்கமாக வேறெதிலும் அறிந்துகொள்ளவும் முடியாது.
பரவசப் பயணம்!