சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Posts Tagged ‘அரட்டை

தேநீரில் சிநேகிதம்

6 மறுமொழிகளுடன்

Sip #1 – போஸ்டர்களுக்கு இடையில் கொஞ்சூண்டு சுவர் தெரியும் கோடம்பாக்கத்தில், ஜூலை 15ஆம் தேதி முழுக்க காமராஜர் பிறந்தநாள் விழா / வாழ்த்துகள் / வணக்கங்கள் சொல்லும் சுவரொட்டிகள். ‘காமராஜர் நம்மளுக்கு எல்லாம் சாமி மாதிரி. நாளைக்கு அவருக்கு பிறந்தநாள். அவர கையெடுத்து கும்பிடுங்க’ என்று ஏதோ ஒரு கார்பரேஷன் பள்ளி வாத்தியார் மிகக் தெளிவாக கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லி வைக்க, சின்ன ரோஜாச்செடி உயரமே இருக்கும் ஒரு வாண்டுக் கூட்டம், ஒரு போஸ்டர் விடாமல் தொட்டு தொட்டு வணங்கிச் சென்றன. கடைசி வாண்டு ரொம்ப சின்னது. ஓடி ஓடி அது வணங்கிய காட்சி அத்தனை அழகு. ஒரு குட்டிப் பெண் திருஷ்டி எல்லாம் கழித்தது. பஸ் டயர் பங்க்ட்சர் ஆனதில் கண்ட காட்சி. ஸோ ஸ்வீட்!

#2 – எங்கள் ஏரியாவில் பேப்பர் போடும் மிஸ்டர்.ராமனாதனை அழைத்து நிறைய முறை நியூஸ்பேப்பரை மாற்றிப் போடாதீர்கள் என்று சொல்லியாயிற்று. மாதம் மூன்று முறையாவது மாற்றிப் போட்டு விடுகிறார்கள். நாங்கள் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ தான் வாங்குகிறோம். மற்ற பேப்பர் எல்லாம் வேஸ்ட் என்பதெல்லாம் இல்லை. தினமும் பேப்பர் வந்ததும், அம்மா தூங்குகிற என் தலை மாட்டில் வைத்து விடுவார். காலை எழும்பியதும், அப்படியே திரும்பி பேப்பரை கையில் எடுத்து பார்த்து கண் விழிப்பது வழக்கம். நிறைய அதிகாலைக் கனவுகளுடன் எழுந்துக்கொள்கிற ஜந்து நான். (பெனசிர் கொல்லப்பட்ட அடுத்த நாள், சுவருக்குப் பின்னால் இருந்து திகிலுடன் நான் பார்க்க, ஒருத்தன் பெனசிரை குறி வைக்க, நான் அலற, பெனசிரை சுட்டு விட்டு, திரும்பி என்னையும் சுட்டு விட்டான். தசாவதார ரிலீஸுக்கு முன் நாள் முழுப்படமும் கனவில் வந்தது. :P ) எது உண்மை, எது கனவு என்று மலங்க மலங்க எழுந்து பேப்பரை எடுத்துப் பார்க்கும் போது, ‘The Hindu’ என்று இருந்தால், ‘ஐயோ என்னமோ தப்பா இருக்கு’ என்று மிரண்டு டமாலென்று திரும்ப படுக்கையில் விழுந்து விடுகின்றேன்.

#3 – காக்னிஸண்ட்டை சேர்ந்த ஷம்மீரை சந்திக்க நேர்ந்தது. நண்பர்கள் எல்லோரும் குழுவாக இணைந்து தயாரித்த ‘பயணம்’ என்ற இசை ஆல்பத்தை தயாரித்த கதையை ஆர்வமாக கண் நிறைய கனவுகளுடன் பேசினார்.  வாத்தியங்களை கையாள்வதில் நல்ல லாவகம் தெரிகிறது. நிறைய பாடல்களின் prelude கவனத்தை உடனே ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. தரமான ரெகார்டிங் பெரிய பலம். பாரதியாரின் ‘தேடிச் சோறு’ பாடலுக்கு தந்திருக்கும் இசை வடிவம், இவர்களுக்கு அழகான விசிட்டிங் கார்டு. கேட்டுப் பார்த்து பிடித்திருந்தால், உங்கள் கருத்தை தளத்தில் தெரிவியுங்கள்

#4 – ‘நாடோடிக’ளின் writing மிகவும் மோசமானதாக இருந்தது. Spoilers. ‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே’ என்பதை பறை சாற்ற எடுத்துக் கொண்ட கதையே முதலில் மிகவும் பலவீனம். மொத்தப் படத்தையும் க்ளைமாக்ஸிலிருந்து reverse engineering செய்திருக்கிறார்கள். கதைப்படி, ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு ‘ஒரே காலேஜ், ஒரே வகுப்பு, ஒரே தட்டு’ நண்பன் ஒருவன் தேவை. இத்தனை பழக்கமான ஒருவனின் காதல் உண்மையானதாக இருக்குமா இருக்காதா என்று ஊகிக்க தெரியாதா அப்பாவிகள் நமது நாடோடிகள். பின் இந்த சாகஸ திருமணத்தால் நாடோடிகள் நிறைய இழக்க வேண்டும். ஆக, அடியாட்கள் விளையாடும் பெரிய இடத்து பையன்/பெண் என்று கதை எழுதியாகி விட்டது. (ஒருவனுக்கு கால், ஒருவனுக்கு காது ஹோ கையா. நாயகனுக்கு மட்டும் உடல் இழப்பு ஏதுமில்லை. அது எப்படி இருக்க முடியும்? காதல் தோல்வி அதை விட பெரிசு என்பதெல்லாம் சப்பைக்கட்டு) ஒரு முன்னாள் எம்.பியின் மகன் எப்படி இருப்பான் என்ற பொதுவாக கருத்துக்கு நேர்மாறாக இருக்கிறான் அந்தப் பையன். அதில் தவறில்லை. அதை ஒரு காட்சியில் கொஞ்சம்  நிலை நாட்ட வேண்டாமா? (திருமணம் முறிந்த பின், அவன் வழக்கமான ‘எம்.பி பையன்’ ஆகிவிடுகிறான்!) இதை எல்லாவற்றையும் விட மகா கேவலம் – fast food love, ஒரு ‘வேகத்தில்’ திருமணம் என்றெல்லாம் கதையை மாற்றியிருப்பது. அதற்கு ஏன் அவர்கள் கல்யாணம் வரை கஷ்டப்படுப் போகிறார்கள்?! ‘ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்க’,'மாடர்ன் பசங்களின் காதல்’, இதெல்லாம் அப்ளாஸை அள்ளும் வசனங்கள் என்பதால் திணித்திருக்கிறார்கள். சசிக்குமார் காதலை துறக்க முடிவு செய்யும் போது, அவரின் நண்பர்கள் மட்டும் கண்ணியமாக விலகிவிடுகிறார்கள். ஒரு காட்சியில் கூட நாடோடிகள் ‘தீர விமர்சித்து திருமணம் செய்து வைப்போம்’ என்று யோசித்ததாக தெரியவில்லை. அவர்கள் மட்டும் ‘ஒரு வேகத்தில்’ சேர்த்து வைப்பார்கள் போல. போதாத குறைக்கு, நட்பு பற்றி அடிஷனல் ஷீட் அட்வைஸ்கள் வேறு! Characterகளின் writing பற்றி பேசினால் தாங்காது! ஒரு ஆரஞ்சு, ஒரு ஆப்பிள் என்று வைரட்டியாக எழுதியிருக்கிறார்களே தவிர, உள்ளே ஒன்றும் சரக்கில்லை. க்ளைமாக்ஸ் படு டூ மச்! நாடோடிகள் அந்த ஜோடியை அடிக்கும் போது, ‘ஒழுங்கா பாத்து சேத்து வெக்க மாட்டீங்களாடா’ என்று நாடோடிகளின் தலையில் தட்டலாம் போல இருந்தது! என்ன படமோ?! சசிக்குமாரின் நடிப்பு சில இடங்களில் ஏனோ எரிச்சல். (வசனங்களால்?). எல்லா சலனங்களையும் விலக்கி வைத்துப் பார்த்தால், ‘சம்போ சிவ சம்போ’ action block மட்டும் சத்து. மத்ததெல்லாம் வெத்து. 2 Stars.

#5 – ஒரு முழு சனிக்கிழமை க்வீன்ஸ்லாண்ட்டில் கழிந்தது. நிறைய உயர்-ரத்த-அழுத்த-வினாடிகளை அனுபவிக்க முடிந்தது. பயந்து அழும் ஆண்கள்/பெண்கள், இரண்டு பள்ளிகளின் திரளான குட்டீஸ், pirata ship எண்பது டிகிரியில் நின்ற போது பக்கத்தில் இருந்த நண்பன் ‘மச்சான் இந்தப் பிடி கையோட வருதுடா’ என்றலறியது, கை மணிக்கட்டில் ஒட்டிய டிக்கெட்டில் சுவாரசியமின்றி குறித்து வைக்கும் பணியாளர்கள் எல்லாவற்றையும் தாண்டி, மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டது ஒரு தருணம். ஒரு உள்ளூர் பெண்ணுக்கு இங்கிலாந்து ராணி வேஷம் போட்டு, ஒரு சித்திரக்குள்ளனுடன் குதிரை வண்டியில் உலவ விட்டிருந்தார்கள். ஒரு ப்ளாஸ்டிக் சிரிப்புடன் ம்ககளைப் பார்த்து கையசைத்தபடி நகர்வதை அங்குமிங்கும் காண முடிந்தது. ஜன நடமாட்டம் அதிகமில்லாத இடமொன்றில் ராணி சற்று இளைப்பாற, நாங்கள் அவர்களை கடக்க, பக்கத்து ராட்டினத்தில் டிக்கெட் போடும் பெண்ணிடம் ராணி பகிர்ந்து கொண்ட ரகசிய ஸ்னேகித சிரிப்பு – அழகிய ஹைக்கூ நொடி!
#6 – என்ன தான் man-made amusement ride  என்றாலும், இயற்கை அமைத்து தருவது போல வருமா? ஒரு பழைய புகைப்படம். வானத்தை பார்த்தபடி சிரிப்பது நான் ;) (பக்கத்தில் இருப்பது பையன் தான்!) எனக்கு உச்சகட்ட பயம் எப்போதுமே பயங்கர சிரிப்பாக வெளிவரும்! மணாலியில் எடுத்தது.

mani 418

#7 – போன வாரத்தின் ப்ளேலிஸ்ட் -  படபடவென பறந்திட (வெண்ணிலா கபடி குழு). அழகே சுகமா (பார்த்தாலே பரவசம்). செல்லமே செல்லமே (சத்யம்). சாமி கிட்ட சொல்லி வெச்சு (ஆவாரம்பூ). ஒவ்வொரு பிடியா ஐலேசா (குளிர் நூறு டிகிரி).

#8 – ஒரு டவுட்டு. காஃபி வித் அனுவில் விஷ்னுவரதனும், யுவனும் சிம்புவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சிம்புவின் நண்பர்கள் எல்லாம் டி.ஆரை கலாய்ப்பார்களா?

#9 – Happy week ahead!

Written by aravind

ஜூலை 20, 2009 இல் 3:54 மு.பகல்

தொடர், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

தேநீரில் ஸ்நேகிதம்

2 மறுமொழிகளுடன்

Sip #1 – பொதுவாக இப்போதெல்லாம் அலுவலகத்தில்/வீட்டில்/இணையத்தில் நான் சொல்கிற ஜோக்குகளுக்கு யாரும் சிரிப்பதில்லை. வெட்ட வெயிலில் நிற்பது போன்ற பாவனையுடன் பார்க்கிறார்கள். எல்லோருக்கும் ஏதோ பொதுவான பிரச்சினை என்று மட்டும் புரிகிறது. ஆனால், அக்காவின் மகள் நான் சொல்கிற எல்லா ஜோக்குகளுக்கும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள். (வயது நான்கு மாதங்கள்). வீட்டிற்கு போனதும் பையையும் ஷூவையும் தூர எறிந்து விட்டு அவளிடம் சென்று ஜோக் சொல்லத் தொடங்குகிறேன். அரை மணி நேரம். ஒரே சிரிப்பு. அவளளவுக்கு யாரும் என்னுடைய ஜோக்குகளை ரசிப்பதில்லை. நான் வருவதற்கும் முன்னரும் சென்ற பின்னரும் அவள் அப்படித்தான் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என அக்கா சொல்கிறாள். அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

#2 – எனக்கு நடக்காததை நடக்க வைக்கிற சக்தி இல்லை. USP, ASP தெரியாது. ஏதோ விளையாட்டாக நடிகை மீனாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக எழுதி வைக்க, அது அப்படியே நடந்துவிட்டது. மற்றபடி அதற்கும் அடியேனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் பற்றிய கேள்விகளை/மெயில்களை தவிர்க்கவும். அப்படி செய்தவர்களுக்கும், இதற்கு முன்னர் ‘நான் நானில்லை, என் வேறு நான், என்னை நானே கண்டேன்’ என்று எழுதிய போது, ‘உங்களுக்கு மல்டிபிள் பெர்ஸனால்ட்டில் டிஸார்டரா’ என்று கேட்டு மெயில் அனுப்பியவர்களுக்கும் சேர்த்து, அன்பு எச்சரிக்கை #1.

#3 – எங்கள் ஊரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் எப்போதாவது நடக்கும். (பெரும்பாலும் இடதுசாரிகள்). சாவடிக்கு எதிரே தெருவை அடைத்துக்கொண்டு மேடை போட்டுவிடுவார்கள். போக வர, இரண்டு பக்கமும் கொஞ்சமாக இடம் – அதில் பாதி இடத்துக்கு ஒரு பெரிய ஸ்பீக்கர் நின்று அலறிக்கொண்டு இருக்கும். (அதை கடந்து செல்பவர்கள், அம்மனுக்கு தீ மிதித்து ஓடுபவர்கள் போல அவசரமாக செல்வார்கள்). பக்கத்தில் பட்டாணிக் கடை வைத்திருப்பவர் வாயெல்லாம் பல்லாக இருப்பார். நேற்று வரை தெருவோரம் நின்று சத்தம் போட்டு அரசியல் பேசிக்கொண்டு இருந்தவர்கள், மேடையில் ஏறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். கூட்டம் என்றால் இருபது பேர். (மேடையில் இருக்கும் பத்து பேரையும் சேர்த்து). ஒரு சமயம் என்ன தான் பேசுகிறார்கள் என்ற ஆவலில், ‘குடிமகன்கள்’களுக்கு மத்தியில் அமர, மேடையில் இருந்தவர் உற்சாகமாக என்னைப் பார்த்து ‘நீ என்ன செய்தாய்?’ , ‘மக்களாகிய நீங்கள்’, ‘சமுதாயத்தின் பார்வையில்’ என்றெல்லாம் கர்ஜிக்க, அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து விட்டேன். பின்னொரு சமயம், ஹிந்தி ‘பிரச்சார’ சபா நடத்தும் தேர்வுகளுக்காக படிக்க, ஒரு டீச்சரிடம் ட்யூஷன் சேரப் போக, அவர் உள்ளாட்சி தேர்தலில் நிற்கப் போக, நோட் புக்கை கிழித்து மோதிர சின்னம் வரைந்து காற்றில் பறக்க விட்டு இரண்டு மாதம் பிரச்சாரம் செய்தோம். டீச்சர் டெபாஸிட் இழந்தார். நாங்கள் ஃபெயிலானோம்.

#4 -இளையராஜா பித்து ஒரு அளவில்லாமல் பயங்கரமாக ஏறுகிறது. நேற்று காலை வந்தவுடன், தன் முதல் பதிவில் ராஜா பற்றியே எழுதுவேன் என்று ஒரு புதிய பதிவர் வைராக்கியமாக எழுதியதைப் பார்த்து புல்லரித்து பொங்கி வழிந்தேன். இரண்டு நிமிடங்களில், ‘Happy Birthday So and So’ என்று வந்த அக்கவுண்ட் மெயிலில் ‘What do you miss in life?’ என்று கேள்விக்கு, பிறந்த நாள் கொண்டாடுபவர் ‘Ilaiyaraja’s blessings’ என்று சொல்லியிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல், யாய், ஊய், டூய் என்று அவருக்கு மெயில் அனுப்பிவிட்டேன். (பாராட்டி தான்). சாயங்காலம் 4.34க்கு சிக்கனமாக நன்றி சொன்னார்.

#5 – இரண்டு நிமிடங்களுக்கு மேல் படிக்க முடியாமல் கவனம் கலைகிற என்னை நடு ரோட்டில்,பேருந்தில்,நெரிசலில் அமர்ந்திருக்கையில் முற்றிலுமாக கட்டிப் போட்டு விட்டது அசோகமித்ரனின் ‘பிரயாணம்’ சிறுகதை. இதுவரை நான் தமிழில் படித்த சிறந்த சிறுகதைகளை ஒன்று என்று சொல்வேன். இன்னும் சில நல்ல சிறுகதைகள் அந்தப் புத்தகத்தில் கிடைத்தன. (‘ஐநூறு கோப்பை தட்டுகள்’ ‘உயிர்மை’ – 200 ரூபாய்)

#6 – குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட, என்னை எரிச்சலைடையச் செய்கிற விஷயங்கள் – மெகா சீரியல் பிண்ணனி இசை, உன்னிமேனன், 80/90களில் நாயகிகளுக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல், அலுவலகப் பேருந்தில் சீட் பிடித்து வைப்பது, ராத்திரி பத்து மணிக்கு மேல் சில சமயம் ஒரு மெஸேஜை நான்கு முறை டெலிவர் செய்யும் ஆர்வக்கோளாறு ஏர்டெல், நடிகை சிநேகா, காதல் தோல்வி எஸ்.எம்.எஸ் கவிதைகள் (முள், கல்லறை,கண்ணீர் இத்யாதி), பில் கொடுக்காமல் / சில்லறை கொடுக்காமல் மேலே பதுக்கியிருக்கும் குட்டி டீ.வியில் IPLஐ வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் கடை பையன்கள்.

#7 – கவனம் ஈர்த்தவை – தலைப்புச் செய்தி: ப்ளஸ்டூ தேர்வுகள் முடிந்தது – 200 மாணவர்கள் பிடிபட்டார்கள். (தினமலர்). (நான் தேர்வு நடத்துவது வேறெதற்கோ என்று நினைத்து விட்டேன்) போஸ்டர்: பார்த்திபன், சேரன் வரிசையில், இயக்குனர் நடிகராக மாறும் எதோ-ஒரு-உப்புமா-கம்பெனியின் ‘மாக்கான்’ அறிமுகம் எதோ-ஒரு-கிச்சடி-டைரக்டர். கீழே tag – ‘ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் வரிசையில்’!! தொலைக்காட்சி: சூப்பர் சிங்கரில் பிரசன்னாவை பார்க்க வந்த சிலோன் தம்பதியினர், ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில்’ வந்த இலங்கை தமிழர்கள்.

Written by aravind

மே 17, 2009 இல் 4:49 பிற்பகல்

தொடர், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

தேநீரில் ஸ்நேகிதம்

5 மறுமொழிகளுடன்

சிப் #1 – (விவிதபாரதி விளம்பரக்குரலில் படிக்கவும்) “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? காதலுக்கு வீட்டில் எதிர்ப்பா? வரும் சனிக்கிழமை பெங்களுவுக்கு உங்கள் ஆளுடன் வந்து தெருக்களில் டேட்டிங் செய்து திரியவும். ஓசியில் முறைப்படி அவசரத் திருமணம் செய்து வைக்கப்படும். ரிஜிஷ்ட்ரேஷன் செலவு முற்றிலும் இலவசம்!! உடனே அணுகவும், ராம் சேனா, மங்களூர்! டிங் டிங் டி டிங்!”

#2 – எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. அது எப்படி ஒரு காலத்தில் அருமையான படங்கள் எடுத்தவர்கள், திடீரென மரண மொக்கையான படங்களை எடுக்கிறார்கள்? அந்தத் திறமை எப்படி வருகிறது? சில வாரங்களுக்கு முன் தொலைகாட்சியில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ படம் போட்டிருந்தார்கள். சரி, ஃபாசில் படமாச்சே, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் உண்டே (கொஞ்சம் திற) என்று பார்த்தால்.. சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எப்படி?! ஒரு பக்கம் ஸ்ரீகாந்த் பிழிந்து பிழிந்து நடிக்கிறார், மறுபக்கம் சோனியா அகர்வால் அதை ட்ரையரில் போட்டு காய வைக்கிறார். எல்லாரையும் விட, ஸ்ரீகாந்தின் அப்பாவாக வருபவர் அமளி துமளியான நடிப்பு. நட்ட நடு ராத்திரி வரை தொலைக்காட்சியை மூக்கு முட்டியபடி அமர்ந்து திரு திருவென விழித்தது தான் மிச்சம்.

#3 – சென்னை மாநகர போக்க்குவரத்து கழகத்தின் மாதாந்திர வருமானத்தை கோடு போட்ட நோட்டில் எழுதுகையில் ‘தராமல் ஏப்பம் விட்ட ஐம்பது காசுகள்’ என்ற தனி column உண்டா என்பது பற்றிய தகவல் எனக்கில்லை. இந்த மாநகரில் ஒரு நாளுக்கு ஒரு ஜீவராசிக்காவது சரியான சில்லறை திரும்ப கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. அது நீங்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது பேராசை. இந்தப் பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா? மிகச்சிறப்பான யோசனை ஏதேனும் இருந்தால் கமெண்டில் அடிக்கவும்.

#4 – மேற்சொன்ன விஷயத்தை நீங்கள் யாரிடமாவது பேசி முடிக்கையில், ‘இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே!’ என்று வியக்க உங்களுக்கு உரிமை இல்லை. ‘பகல் கொள்ளை’ என்ற வார்த்தை தன் அதிர்ச்சித்தன்மையை (Shock factor?!) இழந்த நாளாகிவிட்டது. எல்லா கொள்ளையும் இப்போது பகலில் தான் நடக்கிறது. ‘பட்டப் பகலில்’ என்று சொன்னால் கூட அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. இதே போல, தமிழ் பேசும் மக்கள் ‘தண்ணி பட்ட பாடு’ என்ற phraseஐ தண்ணி பட்ட பாடாக உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு அந்த வார்த்தை தாகத்தை தணித்தது. இது போல தங்களின் உபயோகத்தை இழந்த வார்த்தை கோர்வைகளை எடுத்தாராய்ந்து சென்னை பல்கலைகழத்தில் ஆ.ஞானப்பிரகாசம் என்பவர் ஆராய்ச்சி இன்னும் செய்யவில்லை. (பெயர் சும்மா உபயோகித்தேன். யாரும் சண்டைக்கு வராதீர்கள், ப்ளீஸ்.)

#5 – ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் ஏன் காம்ப்ளான் வருகிறது என்று முதலில் என் அம்மாவிற்கு புரியவில்லை. பின்னர், காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் வந்தது. ‘இதையா தின்றீங்க? இதுல, அது அப்புறம் அது, ஐயோ அது வேற இருக்கு. சீச்சீ’ என்கிறார்கள். அதிலும், அதில் அபாராமான நுணுக்கமான விஷயங்கள் திணித்திருந்தார்கள். (ஹார்லிக்ஸ் அம்மா-பையன் நீல கலரில் உடை; காம்ப்ளான் ஜோடி காபி கலரில்). என்னவோ, இதை குடிக்காதவர்களுக்கு மூளையே வளராதது போல. என்னைப் போன்ற அறிவாளிகள் எல்லாம் அதை அப்படியே தின்றோ, இப்படியோ தின்றோ ஒன்றும் மூளை வளர்க்கவில்லை. சரி, நான் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள். சொந்த ஊரில் பல குழாயடிச்சண்டைகளை கண்டு களித்த எனக்கு, இது, ஜீன்ஸ் அணிந்த மங்கைகள் குழாயடிச்சண்டை போடுவது போல இருந்தது.

#6 – நான் படித்து ரசித்த ஒன்று – எங்கள் அலுவலக காஃபி கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த feedback நோட்டில், காஃபி தருபவர் பற்றி எழுதியிருந்த அழகழகான பாராட்டுகள். படித்து நெகிந்த ஒன்று – நடிகர் பிரபுதேவாவின் மகனின் உடலை தங்கள் நிலத்தில் சில காரணங்களினால் புதைக்க முடியாமல் போக, நடிகர் பிரகாஷ்ராஜ் தானே முன்வந்து தன் தோட்டத்தில் தன் மகனை புதைத்த இடமருகே புதைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.

#7 – ‘அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது / சடப்பொருட்களின் ஒழுங்கு’ என்றும், ‘ஓர் அடிமுட்டாள் / அயோக்கியன் / அதிபுத்திசாலி / ஒரு ஞானி / நால்வரும் குளத்தில் குதித்தனர் / ஒரே மாதிரி தான் / வட்ட வட்டமாக வந்தது’ என்றும் சிக்கன வார்த்தைகளில் கவிதை சொல்லி மனசைப் பிடிக்கிறார், கவிதாயின் தென்றல். தி.நகரில் வாங்கிவிட்டு, 12B பிடித்து வீடு வருவதற்குள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். மொத்தம் 89 கவிதைகள். விருப்பமுள்ளவர்கள் படித்துப் பாருங்கள். (நீல இறகு – தென்றல் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60 – 96 பக்கங்கள்)

#8 – இந்த வார பாடல் டெடிகேட் – ‘Where is the party?’ (சிலம்பாட்டம்) – To, ராம் சேனா! ;)

Written by aravind

பெப்ரவரி 8, 2009 இல் 3:08 பிற்பகல்

எண்ணங்கள், தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with

தேநீரில் சிநேகிதம் – 3

9 மறுமொழிகளுடன்

சிப் #1: போன வருடம் போலவே இந்த வருடமும், தீபாவளி விடுமுறைக்கு முதல் நாள் சென்னை அல்லோல கல்லோலபட்டது. பழைய பற்பசை ட்யூபை பிதுக்குவது போல, சென்னையின் வாயில்களில் வாகனங்கள் பிதுங்கின. அன்று பார்த்து தமிழக அரசின் மனிதச் சங்கிலியும் வானத்தையும் பூமியையும் இணைக்கும் மழைச்சங்கிலியும் கரம் கோர்க்க, சென்னைக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. “நான் ஊருக்கு போறேனே” என்று ஸ்மைலி ஸ்மைலியாக சிரித்து விட்டு போன ஜோ, இன்ச் இன்ச்சாக வேளச்சேரியில் நீந்திக்கொண்டிருப்பதாக அலைபேசியில் அலறினான். ஏழு ஐம்பதுக்கு கிளம்பிய என் அலுவலக பேருந்து, மெகா சீரியல் கதை போல நகரமாட்டேன் என்று அடம்பிடித்தது. வழியெங்கும் முகங்கள், முகங்கள், முகங்கள். சோகமான, பதற்றமான முகங்கள். புதுச்சேரி பேருந்து ஒன்றில் பெரியவர் ஒருவர் ‘இதற்க்கெல்லாம் காரணம் யார் தெரியுமா’ என்ற பாவத்தோடு யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். ஆற்காடு வீராசாமியாக இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. என் அலுவலக நண்பர் ஒருவர் எப்போதும் ‘உன்னை அடிக்கடி இங்கே பார்க்கிறே’ சிரிப்பு மட்டுமே சிரிப்பார். பேச மாட்டார். அன்று அவர் என்னிடம் ‘என்ன சார் இது’ என்று ஒரு வழியாக பேசிவிட்டார். ‘கோலங்கள்’ முடிந்ததும் அம்மா அழைத்து நிலவரம் கேட்டாள். அத்தனை களேபரத்திலும் அலுக்காமல் ஜல்லியடித்துக் கொண்டிருந்தது பண்பலைகள் மட்டுமே. பத்து பத்து நிமிட இடைவெளிகள் விட்டு, பாடல்களை வரிசைபடுத்தி விட்டு கண்ணியில் ஏற்றியிருந்த வானொலி நிலையம் அறிவிப்பாளர் எங்கோ மீன் பிடித்து கொண்டிருக்க ‘பப்பரப்பரப்பா’ என்று எதையோ இசைத்துக்கொண்டிருந்தது. வழியில் ஒருவர் மடிக்கணினியில் (க)சக்கரகட்டி படம் பார்த்துக் கொண்டிருந்தார். நிலைமை அவ்வள்வு மோசம். வெற்றிகரமாக வீட்டுக்கு போன போது மணி பதினொன்று. வரப் போகிற வருடங்களில் நமக்கு நாமே வைத்துக்கொள்கிற பெரும் வேட்டு – போக்குவரத்து நெரிசல்.

#2: இலங்கை பிரச்சினையில் நமக்கு எத்தனை சங்கடம். ஈழத்தமிழர்களை ஆதரித்தல் என்பது புலிகளை ஆதரித்தல் என்பதாகி விடுகிறது. புலிகளை எதிர்த்தல் தமிழர் நலனுக்கு எதிராதனதாகி விடுகிறது. அங்குள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னர், நாம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண வேண்டும். அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை. எத்தனை எத்தனை கிளைப் பிரச்சினைகள், நாடகங்கள்! எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக தமிழக மக்களை பிரதமருக்கு தந்தி அனுப்ப சொன்னது, மிகுந்த நகைப்பிற்கு உரியது. அது மின்வெட்டை மறக்க உதவாது ஐயா! இன்னும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம். நடிகர் விஜய் ‘சார்’ , தனது ரசிகர்கள் வைத்து தனியாக உண்ணாவிரதம் நடத்தியதோடு, பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளாராம். அதைக் கேட்ட நிறைய சிறுவர் சிறுமிகள் தந்தி அனுப்பியதாக நாளேடுகளில் புகைப்படங்கள் வந்திருந்ததை பார்த்த போது எனக்கு பீதி கிளம்பியது. நீங்க 2016 ஆங்ணா?

#3: தமிழ் அகராதியில் புதிய வார்த்தைகள் சேர்ப்பது எப்படி என்று தெரியவில்லை. நான் அவசரமாக ‘உள்குத்து’ என்ற வார்த்தையை சேர்க்க விரும்புகிறேன். நல்ல அர்த்தச் செறிவு இருக்கிறது அதில். பயன்படுத்துவதற்கு இலகுவான கவர்ச்சியான அம்சம் எதுவோ அதில் இருக்கிறது. இல்லையா? என்னுடன் இந்த வார்த்தை அதிகமாக தொடர்புபடுத்த படுகிறது. ‘உள்குத்து அரவிந்தன்’. எப்படி இருக்கிறது?

#4 – சமீப காலங்களில் நான் மிகவும் ரசித்த தலைப்பு செய்தி- Sachin Scales 12K, Sensex Dives Below 10K (Times of India, October 18). அந்தக் கட்டுரையில் வந்த ஒரு வாக்கியம்.- You may not know a thing about cricket, but you know about Sachin—and you may not know a thing about the stock market, but you know about the sensex.

#5: அமெரிக்க தேர்தல் உலகெங்கும் இருக்கிற ஊடகங்களில் ஏற்படுத்துகிற சலசலப்பு, அந்த நாடு உலகத்தின் மீது ஏற்படுத்தியிருக்கிற ஆதிக்கத்தையே ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்தியாவின் இந்தத் தலைமுறையினர் நம் தேசிய அரசியலை விட அந்த தேர்தலில் ஆர்வம் காட்டுகிறார்கள். என்ன தான் நம் அரசியல் சாக்கடை என்று சாக்கு சொன்னாலும், என்னை பொறுத்தவரையில் இது வெட்கக்கேடான விஷய்ம். அதுவும் நம் ஊடகங்கள் அடித்த கூத்து சொல்லி மாளாது. அடக்கப்பட்ட இனத்தவர் ஒருவர் பெற்ற மாபெரும் வெற்றி என்பதையும் தாண்டி, அமெரிக்காஆஆஆஆ என்று வாய் பிளக்கிற மனோபாவம் தவிர இது வேறெதுவும் இல்லை.

#6: நல்ல சினிமா விமர்சகர்கள் தமிழ்நாட்டில் இல்லாதது எனக்கு பெரும் குறையாக இருக்கிறது. இந்திய அளவில் நான் கவனிக்கிற ராஜீவ் மசந்த் (CNN-IBN), ராஜா சென் (ரீடிஃப்), பரத்வாஜ் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஆகியோரைப் போல தமிழகத்தில் சினிமாவை பற்றி பரவசமாக பேசுகிற அலசுகிற ஆள் இல்லவே இல்லை. ‘ஹாய்’ மதன் கொஞ்சம் ஆர்வமில்லாமல் தான் செய்துகொண்டிருந்தார். அவரையும் இப்போது காணோம். நியாயத் தராசை வைத்து சுஹாசினி செய்வதெல்லாம் சுத்த போங்கு. பத்திரிக்கைகளில் மிக மோசமான விமர்சனம் ஹிந்துவில் வருகிறது (மாலதி ரங்கராஜன்). விகடனின் விமர்சனம் மட்டுமே பல சமயங்களில் நம்பும்படியாக இருக்கிறது.

#7: எதற்காக காசு கொட்டி பிரபல நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் பண்ணுகிறார்களோ? ஏர்டெல்லின் டிஜிடல் டீ.வி விளமப்ரத்தில் எத்தனை பிரபலங்கள் வருகிறார்கள் என்று போட்டியே வைக்கலாம். அவர்களை விட குழந்தைகளும் மாடல்களும் கவனம் ஈர்க்கிறார்கள் (சயிஃப், ஷாருக், கரீனா அனைவரையும் தாண்டி ‘ஐ மிஸ் யூ ஸோ மச்’ விளம்பரத்தில் அந்த தோழி சின்ன பாவனையில் அசத்துகிறார்). தங்கப்பல் வேண்டி மண்ணில் புதைக்கிற தங்கச்சியும், சிட்டிகை போட முயலும் சுருட்டைமுடி சின்னப்பையனும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. வங்கிகள் மிகவும் புத்திசாலித்தனமாக விளம்பரங்களுக்கு ஏன் குழந்தைகளை போடுகிறார்கள் என்று யோசிக்கவும்.

#8: இந்த வார பரிசு மூட்டை – நிறைய சேர்ந்துவிட்டது ;)

1. நல்ல தரமான கோதுமையில் செய்யப்பட்ட அல்வா – ரஜினிக்கு – ரோபோ ரிலீஸ் ஆகும் வரை பிய்த்து பிய்த்து தின்ன
2. இப்படியும் அப்படியும் பல்டி அடிக்கிற குரங்கு, பிடித்து கொள்ள வசதியான கயிறுடன் – தமிழக மின் வாரியத் துறைக்கு – கட்டண உயர்வு, பின்னர் வீடுகளுக்கு ரத்து, அடுத்த நாள் நிறுவனங்களுக்கு ரத்து.
3. பழைய பீம்சிங் பட டி.வி.டிக்கள் நாலு – 1000 ஊழியர்களை அதிரடியாக அனுப்பி விட்டு, தூக்கம் வராமல் தவித்த ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல்
4. பாடல் டெடிகேட் – ‘அடிக்கிற கை தான் அணைக்கும்’ – உமா பாரதி

Written by aravind

நவம்பர் 11, 2008 இல் 4:10 மு.பகல்

எண்ணங்கள், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

தேநீரில் சினேகிதம் – 2

3 மறுமொழிகளுடன்

Sip #1 – நமது நாட்டின் ஒரே பிரச்சினை அரசியல்வாதிகள் என்பது மீண்டும் நன்றாக புரிகிறது. பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரப் போகிறார்களாம். அது தான் தீவிரவாதத்தை தடுக்கிற ஒரே வழி என்று அவர்கள் நம்புவதே விசித்திரமாக இருக்கிறது. அப்படி நம்புகிறவர்கள் என்ன எழவிற்கு அதை வாபஸ் பெற்றார்கள்? இப்போது எதற்கு அதை வேறு வடிவில் கொண்டு வருவானேன்? எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து அதைப்பற்றி விவாதிக்கவாவது முடியுமா? ஜெயலலிதாவும் வைகோவும் கை கோர்த்து ‘பொடா சட்டத்தை கொண்டு வாருங்கள்’ என்று சொன்னால் எத்தனை வேடிக்கையாக இருக்கும்! எல்லாம் நம் தலையெழுத்து.

#2 – அலுவலக நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு போய்விட்டு திரும்புகையில் தாம்பரத்தில் ரயிலேறி இருந்தோம். என்னுடன் வந்தவர் வங்காளி. எனக்கு தெரிந்த வங்காளப் படங்கள்/நாவல்கள் குறித்து அவரிடம் பேச ஆவலாக இருந்தேன். உங்களிடன் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று பீடிகை போட்டு விட்டு, பேச ஆரம்பித்தேன். கிண்டி வந்திருந்தோம். ஒரு மாதிரியான குழப்பமான முகத்துடன் என்னை பார்த்து ‘நிறுத்து’ என்றார். என்னவென்று கேட்டேன். ‘நீ நிறைய கேள்விகள் கேட்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனால் எனக்கு பதில் சொல்கிற உணர்வே இல்லையே’ என்று சொன்னார். நான் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என்னைப் பார்த்து ‘நீ என்னை பதில் சொல்லவே விடவில்லை. ஒரு வார்த்தை சொன்னதும் அதை பிடுங்கி ஒரு கேள்வியாக திரும்ப எறிகிறாய்’ என்றாய். மறுபடி நான் ஒன்றும் சொல்லவில்லை. ரொம்ப அவருக்கு ஒரு விதமான வியப்பு முகத்தில் தேங்கி இருந்தது. பாவம். மீண்டும் அது போன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்த போது, ரயில் பெட்டி காலியாக இருந்த போதிலும், ரொம்ப தூரமாக போய் உட்கார்ந்து கொண்டார். விதமாக விதமாக படமெல்லாம் எடுத்தார். என் பக்கம் திரும்பவே காணோம். மனிதர்கள் ஆனாலும் ரொம்ப மோசம்.

#3 – தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் யாருக்கும் அறிவில்லை என்பதும் என்னுடைய உயரிய எண்ணம். (என் எண்ணங்களை நானே தாழ்மையானவை என்று எதற்காக சொல்லிக் கொள்ள வேண்டும்?) எதற்காக இந்த மதுஸ்ரீயை பாட வைக்கிறார்கள் என்று புரியவில்லை. அவருக்கு கமகம், கரகரப்பிரியா, கரகரப்பில்லாத பிரியா எல்லாம் நன்றாக வந்தால் என்ன? தமிழ் வரவில்லையே! வித்யாசாகருக்கே இப்போதெல்லாம் மெலடி ஒழுங்காக வருவதில்லை. அதையும் தாண்டி ஒரு மெட்டு சுமாராக வந்திருக்கிறதே, (ஜெயம்கொண்டான் – நான் வரைந்த வைத்த சூரியன்), அதை ஏன் மதுஸ்ரீ வாயில் கொடுத்து கெடுப்பானேன்? (சாம்பிள் – ******** உண்தன் கன்கல் தொட்டு தொட்டு தங்கசிருப்பம் எண்ட்ரு மாரியதே… முதல் வார்த்தை என்னவென்று தெரியவில்லை) ரஹ்மானை உதைக்க வேண்டும். சாதனா சர்கமும் இப்படித் தான் இருந்தார். இப்போது நன்றாக உச்சரிக்க ஆரம்பித்ததும் பாட்டே தருவதில்லை. யாரோ ஒருவர் ஒரு பேட்டியில் அவர்களுடையது மழலைத் தமிழ் என்று சிலாகித்து இருந்தார். அப்படி என்றால் உதித் நாராயணன், மதுஸ்ரீயை வைத்து ‘கன்மனிப் பூங்கா’ நடத்தித் தொலையுங்கள்.

#4 – தப தப என்று ஆயிரம் கைதிகளை அண்ணா பிறந்த நாள் அன்று விடுதலை செய்து கைதிகளையும் நம்மையும் திக்குமுக்காட செய்திருக்கிறது அரசு. தன்னிலை மறந்து ஒரு முறை தவறு செய்தவர்கள், நன்னிலை மறந்து பல முறை தவறு செய்தவர்கள், ஆண்கள், பெண்கள், வயசாளிகள் என சகலரும் சிறகடித்தனர். ஒரு தொண்ணூறு வயது தாத்தாவிற்கு போகவே இடமில்லையாம். நிறைய பேரை அவர்கள் குடும்பத்தினர் திரும்ப சேர்த்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் பாராட்டுகிறார்கள். நிறைய பேர் திட்டியிருக்கிறார்கள். சிலர் குற்றம் சொல்கிறார்கள். அண்ணாவை யாரும் திட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.

#5 – என் பெயர் எனக்கு பிடிக்கவில்லை என்று யாராவது புலம்பும் போதெல்லாம், என் அம்மாவின் பள்ளியில் இருந்த இரு பெண்கள் நினைவிற்கு வருவார்கள். அக்கா தங்கைகள். அவர்களின் அப்பா கம்யூனிசமோ ஷோஷலிசமோ, எதுவோ ஒன்று தலைக்கேறி பெண்களுக்கு முறையே ‘ சமுதாயம்’ , ‘பகுத்தறிவு’ எனப் பெயர் சூட்டிவிட்டார். பகுத்தறிவுற்கு அடிப்படை அறிவே இல்லையென்பது அவளின் விடைத்தாளை திருத்துகையில் எனக்கு புரியும். அவர்களின் வீட்டில் இரண்டு சமுதாயங்களையும் எண்ணி அடிக்கடி கவலையுற வேண்டியிருந்தது. தெருவில் போகிற போது எத்தனை பையன்கள் கிண்டல் செய்தார்களோ. முன்னவள் கை கொட்டி சிரித்தால், ‘சமுதாயம் கை கொட்டி சிரித்தது’ என்று தோன்றுமோ என்னவோ?

#6 – 1995ம் வருஷம் உலகம் அழியப் போவதாக யாரோ கிளப்பி விட, பள்ளியிலிருந்து கும்பலாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில் எங்களில் மிகவும் தைரியமான பையன் அவனுடைய அத்தனை புத்தகங்களையும் நோட்டுகளையும் கிழி கிழியெனக் கிழித்து காற்றில் பறக்க விட்டான் (ஒலகம் அழியப் போகுது டோய்!!). போன வாரம் அவனை நினைத்துக் கொண்டேன். Big Bang theoryஐ நோண்டிப் பார்க்க விரும்பிய சில விஞ்ஞானிகள் என்னவோ செய்தார்களாம் (எனக்கு கணிதம், புவியியல், அறிவியல், சரித்திரம் மட்டும் ஆகாது). அதனால் உலகம் அழியப் போகிறது என்று கிளப்பி விட்டார்கள். யோசித்து பார்த்தால் நாமெல்லாரும் அதற்காக ரகசியமான ஒரு பரபரப்புடன் குறுகுறுப்புடன் காத்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. எனக்கு ஜாவாவிலிருந்தும், மெகா சீரியலிலிருந்தும் உடனடி விடுதலை.

#7 – இந்த வார லிம்கா ரெகார்ட் – திருவாளர் அரவிந்தன். சாதனை? ஒரே வாரத்தில் ‘வாரணம் ஆயிரம்’ ட்ரெயிலர் பாடலை சில நூறு முறை போட்டு பார்த்துக் கேட்டது. (பெயர்கள் மாற்றப்படவில்லை. படிப்பவர்களின் நலனுக்காக உண்மையான ‘எத்தனை முறை’ என்பது மாற்றப்பட்டிருக்கிறது) (ஒரே காட்சியில் வந்தாலும் சிம்ரனின் கண்ணில் அத்தனை காதல், அத்தனை பரிவு!)

#8 – நான் கவனித்த இரண்டு போஸ்டர்கள் – RJ தீனா நூறுக்கும் மேற்பட்ட மணி நேரம் ரேடியோவில் தொடர்ச்சியாக ‘ஒளி’பரப்பியதாக பீத்திக்கொண்ட பிக் வானொலி போஸ்டர். (பிக் – தமிழனின் பெருமை (!!!)) ; சுஜாதா பெயர் போட்ட ரோபோ பட போஸ்டர்.

#9 – இந்த வார கேலிச் சித்திரக் காட்சி/ஆள் மாற்றம் – தமிழக மின்சாரத்துறை அமைச்சகம் டூ இந்திய உள்துறை அமைச்சகம். ஆற்காடு வீராசாமி டூ ஷிவ்ராஜ் பாட்டில்.

கடைசி சிப் – எங்கள் பேருந்தின் காதல் இளவரசியை நினைவிருக்கிறதா? அடுத்த கட்ட அதிரடியாக மாலைகளில் அவளுடைய ஆளும் எங்கள் பேருந்தில் வரத்தொடங்கியிருக்கிறார். சீ சீ. உங்களுக்காக தான் அவர்களை கவனிக்கிறேன்.

Written by aravind

செப்டம்பர் 18, 2008 இல் 4:26 பிற்பகல்

எண்ணங்கள், தொடர், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with