சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

உன் வாழ்வில் சில நொடிகள்

39 மறுமொழிகளுடன்


கொஞ்சம் ராஜா புராணம். ‘ராஜா’ என்று சொன்னதும் இசை நினைவுக்கு வராமல் ‘அகந்தை’, ’கண்டிப்பு’, ‘கசப்பு’, ‘விருது’, ‘ஈகோ’ போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருமானால், (இந்த blogகிற்கு எதிர் திசையை காட்டி பாடுகிறேன்) ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக?

———–

நவம்பரிலேயே ராஜா கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வருகிறார் என்ற தகவல் முதலில் வெளியிடப்பட்டது. கனடாவிற்கு போக விசா இல்லாத காரணத்தாலும், கலிஃபோர்னியாவிற்கான பயண சிரமங்கள் காரணமாகவும் இன்னொரு கான்ஸர்ட் வரும் என அத்தனை நினைப்பையும் கைவிட்டாயிற்று. ஜனவரி மாதக்கடைசியில் பெப்ரவரி 23ம் தேதி ராஜா நியுஜெர்ஸிக்கு வருகிறார் என்று சொன்னதும் திடீர் டிக்கெட் படபடப்பும் பயண பரபரப்பும். இது ஐந்து மணி நேர கான்சர்ட் கதை. (டிக்கெட் வாங்கித் தந்தும் நானூறு மைல்களையும் ஒரு மயிலாக தானே ஓட்டியும் சென்ற திரு மயில் செந்தில் (@mayilSK) அவர்களுக்கு நன்றிகள்).

அறுபது டாலர் டிக்கெட்டில் போயிருந்தோம். அந்த ஏரியாவும் இன்னும் மேலே ஐம்பது டாலர் டிக்கெட் ஏரியாவும் பிரமாதமாக விற்றுத் தீர்ந்திருந்தன. நிஜ கான்ஸர்ட் தரிசன டிக்கெட்களான நூற்றி இருபது டாலர் ஏரியாவும் கூட தீர்ந்திருந்தன. நடுவில் இந்த எண்பது டாலரில் தான் கொஞ்சம் காற்று வாங்கல். இரண்டு வாரங்களில் சேர்த்த கூட்டம் என்பதை வைத்து தாராளமாக மன்னித்து பாராட்டலாம். நியுஜெர்ஸி என்பதால் தமிழ்-தெலுங்கு என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதனால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு – தமிழ் மட்டும் எனில் என்னென்ன பாடல்கள் வரும் என்று பெரும்பாலும் யூகிக்க முடியும் என்பதால்.

ஒரு மணி நேரத் தாமதம். அது வரை random உள்ளூர் RJ VJ DJயினர் மேடையில் மைக் இரைச்சலோடு என்னமோ செய்துகொண்டிருந்தார்கள்.  மக்கள் கூட்டத்திலிருந்து சிலரை ஆங்காங்கே பிடித்து பாட வைத்தனர். பாடியவர்களில் பெரும்பாலோனோர் சங்கீதமே எங்கள் மூச்சென மூச்சை பிரதானமாக ஒலிக்கவிட்டார்கள். கூட்டத்தை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் விலக விலக பாடினாலும், எல்லாவற்றையும் மீறி ராஜாவின் மீதான பாசம் பளிச்சென தெரிந்தது. பொதுவாகவே, தெலுங்கு மக்கள் கொஞ்சம் கூடுதல் காரம் சாப்பிடுவதைப் போலவே கொஞ்சம் கூடுதல் பாசம் ராஜா மீது வைத்திருக்கின்றனர்.

மொத்தம் நாற்பது-ஐம்பது வாத்தியக்கலைஞர்கள். அதில் இருபது வயலின்கள் மட்டும். ஒரு சிதார் அம்மணி. நாலு தபலா. ஒரு டபுள் பாஸ். நாலைந்து ட்ரம் பேட்ஸ், கீபோர்ட்ஸ். நெப்போலியன் (பாடகர் அருண்மொழி) புல்லாங்குழல். பாலேஷ் ஷெனாய். எல்லோரையும் சேர்த்திசைக்க வைக்க பிரபாகர். (மனிதருக்கு ஒரே குறி இசை தான். வேறெதையும் கவனிப்பது போலத் தெரியவில்லை). நட்ட நடுவில் வெள்ளைத் துணி போர்த்தி மூடிய மேஜையொன்றின் மேல் அந்த அதிசய ஆர்மோனியப் பெட்டி. ராஜா வருகிறார் என்றதும் அரங்கத்தின் இரைச்சலெல்லாம் வாக்யூம் போட்டு இழுக்கிற வேகத்தில் போயே போச். அத்தனை விளக்குகளையும் அணைத்து விட்டு ஆர்மோனிய பெட்டிக்கு மட்டும் நல்ல ரம்மியமான நீல ஒளி. ஆள் வந்து நின்றால் போதும் புல்லரிக்கும் என்பதான அமைப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை டிக்காஷன் குறைவான காபி கலர் துண்டு என ஒரு ஓரத்தில் ராஜா உள்நுழையும் போதே அரங்கத்தின் அமைதி உடைந்து பொடியாகிறது. (மொத்த அரங்கத்திலேயே நான் தான் முதலில் அவரைப் பார்த்தேன். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்). வெள்ளை ஒளி எங்கோ மேலே மேலேயிருந்து ராஜாவை மட்டும் வட்டமெனத் தொடர்ந்து மேடையில் ஆர்மோனிய நீல ஒளிவட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் அவர் தலைக்கு மேல் வணக்கம் வைக்கிறார். நானெல்லாம் எழுந்து நின்று ஆவெனக் கத்திக்கொண்டிருக்கிறேன். கை கால் வாயெல்லாம் தானே தன் பாட்டுக்கு முடிந்ததை செய்கிறது. (ரொம்ப அபாயகரமான இருக்கை வரிசை வடிவமைப்பு. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றால் நடந்தால் இசை வெள்ளத்தில் தொபுக்கடீரில்லாமல் கீழே மக்கள் வெள்ளத்தில் நடுவே தொபுக்கடீராகி தினந்தந்தி பெட்டி செய்தியில் காலேஜில் எடுத்த பாஸ்போர்ட் புகைப்படம். ஆனால் பிற்பாடு சுடிதார் அம்மணிகளெல்லாம் சர்வசாதாரணமாக் சீட் மீதேறியே முன் வரிசைக்குத் தாவிச் சென்று கலவரமூட்டினார்கள்). ’ஹலோ’ ‘கிலோ’ அபத்தமாக ‘வாங்க’ என்றெல்லாம் சொல்லாமல் நேரடியாக ஷிவ சக்த்யாயுக்தோ யதி பவதி. சில கான்சர்ட்களில் தென்படுகிற துவக்கத் தயக்கங்களோ குரல் நடுக்கங்களோ இல்லாமல் ’வானம் இன்று மேகங்களின்றி பளிச்சென’ இருக்கிற குரல். இன்னும் அதே ஏதோ-ஒன்று அந்தக் குரலில். ‘பரி பூரணி’ என்பது அந்தக் குரலாகவும் இருக்கலாம். நிற்க, சில வருடங்களாகவே ஜனரஞ்சக மக்கள் கூட்டம் கூடும் மாபெரும் நிகழ்ச்சிகளில் எடுத்த எடுப்பில் ஒற்றை ஆர்மானியத்துடன் பக்திப் பாடல் பாடி கூட்டத்தை கட்டுக்குள் வைக்கிறார் ராஜா. இதை கொஞ்சம் ஆராய்ந்தால் பலப்பல வடிவங்களில் உலவிக்கொண்டிருக்கிற ராஜா ப்ராண்ட் ஃபிலாசபியில் ‘concert philosophy’ கிளை துவக்கலாம். ’ஜனனி ஜனனி’ முடிந்ததும் இரண்டே நொடிகளில் உடுக்கைகள் அடிக்கத்துவங்க கோட் சூட் டையுடன் கார்த்திக்கின் ‘ஓம் சிவோஹம்’. விஜய் பிரகாஷின் ஷூக்களில் கார்த்திக்கா (கார்த்திக்கா கார்த்திக்கா – கூட்டத்தின் சந்தேக echo) என்று குழம்பினால் கார்த்திக் பக்திப்பாடலாய் இருந்தாலும் ஷூக்களை மாட்டிக்கொண்டு கம்பீரமாக ரெண்டடி நடந்தே காட்டுகிறார். Surprise, surprise என்று விளம்பர மங்கை சிரிப்பது போல. பக்கபல குரல்கள் இன்னும் பிரமாதம். மந்திரங்கள் சொல்வதும் சொல்லி முடிந்ததும் மேளங்கள் உருள்வதுமென ஒரிஜினலைப் போல. பாடல் முடிந்ததும் அதே இரண்டு நொடி அவகாசத்தில் ‘ஜகதானந்த காரகா’ தெலுங்கில். (ஸ்ரீராமராஜ்யம்). எஸ்.பி.பியும் கீதா மாதுரி என்ற தெலுங்குப் பாடகியும். (பாடல் தேர்வுக்காக கேட்ட சந்தோஷக் கூச்சல் என்னுடையது). ஷ்ரேயா கோஷல் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். கான்ஸர்ட் முழுதுமே குரல்களின் ஒளியளவு கொஞ்சம் தூக்கல் என்றாலும், எஸ்.பி.பி எப்போது குரலை முழுக்க திறந்து உயரே ஏறினாலும் காவிரி நீர் திறந்து விட்டது போல அரங்கத்தை ஒரு மைக்ரோ நொடியில் நிறைக்கிறது அவரின் குரல். ஒவ்வொரு முறை அது நிகழ்கையிலும் நானும் செந்திலும் உச்சுக்கொட்டி உணர்ச்சிவசப்பட்டோம். மூன்று இறை வணக்கங்கள் முடிந்ததும் ராஜா முதல் முறையாக பேசி வரவேற்று நிறைய பாடல்கள் இருப்பதாகவும் நிறைய உழைத்திருப்பதாகவும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடர்கிறார். (இந்த இடத்தில், அறிவித்தபடி சுஹாசினி மணிரத்னம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவில்லை என்பது அறிந்தும் புரிந்தும் மலர்ந்து சிரிக்கும் என் முகம் ஒரு க்ளோசப்).

அடுத்த பாடல் தேர்விலேயே என்னுடைய முதல் விக்கெட் காலி. ‘என்னைத் தாலாட்ட வருவாளோ’க்கு எல்லோரும் ஓட்டு போடும் பொழுதே நானும் ‘இது சங்கீதத் திருநாளோ’ பாடலும் மட்டும் தனியாகக் காற்று வாங்கிக்கொண்டிருப்போம். குறிப்பாக, பியானோவும் பவதாவின் குரலுமான (!) அதன் துவக்க இசை, Synthலே ஒரு குறையிருந்தாலும் சிலிரிப்பினில் குறைவதுண்டோ வகையறா. அதை எல்லோருமாகச் சேர்ந்து மேடையில் தொடங்குகிறார்கள். (அதற்கு முன் ராஜா ‘கடல் கடந்து வாழும் உங்களுக்கு இது ஒரு சங்கீதத் திருநாள்’ என்று சொல்கிறார். ‘என்ன ஒரு ஆணவம்’ என்று பொங்கும் மக்களே, இன்னும் இந்தப் பதிவில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?) பியானோ (அதாவது கீபோர்டு) மற்றும் பவதா குரலுடன் கூடவே ஒரு வயலினும் (ஒரிஜினலில் இல்லையா கேட்கவில்லையா?). படிபடிப்படியாகத் தாண்டி ஏறிப்போகிற இசையிலே கூடவே விட்டு விட்டு படிப்படியாக ஸ்ருதியேறி வரும் வயலின் இழுப்புகள். (இந்த ‘என்னவென்று சொல்வதம்மா’ பாடலில் ’அந்தி மஞ்சள் நிறத்தவளை / என் நெஞ்சில் நிலைத்தவளை’ வரிகளுடன் வரும் வயலின் இழுப்புகள் போல – அந்தப் பாட்டில் வயலின் இழுப்பை ராட்டினமேற்றி விட்டாற் போலிருக்கும்). வயலின் மட்டும் ஒரு மைக்ரோ நொடி தப்பாகத் துவங்க, ராஜாவிற்கு ஏமாற்றம். ஒரு உக்கிரமான கையசைப்பில் அனைவரும் நிறுத்தி விடுகிறார்கள். (சிலர் வாத்தியத்தையே கீழே வைத்திருப்பார்கள் என்று என் dramatic யூகம்). என்னவோ பேசுகிறார் சொல்கிறார் விளக்குகிறார். அவர்களை பார்த்து திரும்பி நின்று ‘என்னைப் பார்’ என்பது போல கையசைத்து வழி நடத்த கச்சிதமாக வாசித்து எல்லோரும் கரையேறி வருகிறார்கள். வயலினோடு சேர்ந்து பவதாவும் பலப்பல ஸ்ருதிகளில் பாடத் துவங்கி விட, அவர் மட்டும் கரை வராமல் தத்தளிக்கிறார்.

அடுத்து மேடைக்கு மனோ வந்து காம்பியர் பண்ண எத்தனித்தபடி பேசி பாட்டுக்குத் தயாராகிறார். ஷெண்பகமே ஷெண்பகமே. ‘பட்டு பட்டுபூச்சி போல’ என தொகையறாவைப் பாடி முடிந்ததும், மக்களே, அருண்மொழியின் ஒரே ஒரு புல்லாங்குழல் மற்ற எல்லா கருவிகளையும் விஞ்சி நிறைகிறது. முதல் இடையிசையில் ஷெனாயும் அபாரமான துல்லியம். (இந்த இருவரும் கான்ஸர்ட் முழுக்க அமர்க்களம்). பொதுவாகவே மனோ பாடுவதில் அதிகம் ஈர்ப்பில்லையென்றாலும் ஜோராகவே பாடினார், கொஞ்சம் கலக்கமான முகமும் குரலும். எஸ்.பி.பியும் சித்ராவும் மேடையேறியதுமே எக்கசக்கமான எதிர்பார்ப்பு. ஆர்கெஸ்ட்ரா அங்கங்கே சிதறலாக வரப்போகிற இசையை வாசித்துப் பார்க்க நாங்கள் அந்தப் பாட்டா இந்தப் பாட்டா என குதித்துக்கொண்டே இருக்கிறோம். (கான்ஸர்ட் முழுக்க இதே விளையாட்டு தான்). வந்த பாடல், மௌனமேலநோயி. (தமிழில் சலங்கை ஒலி ‘மௌனமான நேரம்’). சமீபகாலமாக சித்ராவின் குரலில் வயது லேசாக அடி தங்கி குரல் தடித்தது போன்ற உணர்வும் எனக்கும் அதனால் கொஞ்சம் பயமும். அதையெல்லாம் அடித்து நொறுக்கி துவங்குகிற ஹம்மிங்குடன் எஸ்.பி.பியும் சித்ராவும் அன்றைய மாலைப் பொழுதின் முதல் சிக்ஸர். Studio level. ’தெலுங்கு பாட்டும் பாடுவாங்க’ என்பது ஊர்ஜிதமானதால் தெலுங்கு மக்கள் ஏகோபித்த கரகோஷத்தை பொழிந்தார்கள். (’அதெப்படி கரகோஷத்துல பிரிச்சு சொல்வீங்க’ என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது).

‘நின்னுக்கோரி வர்ணம்’ துவக்க இசை வந்ததே சர்ப்ரைஸ். இத்தனை சின்ன ஆர்கெஸ்ட்ராவில் இது முடியுமா என்ற சந்தேகம் போகப் போக நிஜமாகிறது.  ட்ரம்ஸ் முதல் முறையா(கவும் அன்று முழுவதுமாக) இடிஇடியென இடிக்கிறது. ’அழகிய ரகுவரனே அனுதினமும்’ என்றெல்லாம் விரைகிற இடங்களில் தடுமாற இன்னும் சித்ராவிற்கு நிறையவே வயதிருக்கிறது – மகிழ்ச்சி. அங்கே திரையில் க்ளோசப்பில் தெரிகிற சித்ரா ஒரு கடினமான சங்கதியை கண்களைச் சுருக்கி குரலின் உள்ளேத் தேடித் தேடி பிடித்து அடைந்து நிம்மதியடைந்து அடுத்த வரியில் ஒரு நிம்மதி புன்னகை உதிர்க்க, ரசிகாஸ் அந்த புன்னகைக்கு ஒஹோவென ஆர்பரித்த பொழுது – பாரதிராஜா மொழியில் – ஐ லவ் திஸ் ஆடியன்ஸ். (நிற்க, இயக்குனர் பாலா தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக சித்ராவின் புன்னகையை சொன்னதற்குப் பிறகே நானும் கவனிக்கிறேன்) ராஜா இந்தப்பாடலுக்கு 1/4/87ல் எழுதிய ஸ்கோர்ஷீட்டை எடுத்து வந்திருந்தார். (’சுஜாதா ஃபிலிம்ஸ்’ ‘நின்னுக்கோரி வர்ணம்’,’சித்ரா’ என்று அதில் குறிப்புகள் இருந்ததைப் படித்தார். நின்னுக்கோரி வர்ணத்தை popஆக மாற்ற நினைத்து செய்த பாடல். வாலி ‘நின்னுக்கோரி வர்ணம் இசைத்திட (ராஜாவைத்) தேடி வரணும்’ என்று எழுதியதாகச் சொன்னார்)

பிரியதர்ஷிணி என்றொரு பாடகி. அடிக்கடி ராஜா நிகழ்ச்சிகளில் தென்படுகிறார். என்ன பாடல்கள் பாடியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘இதயம் ஒரு கோவில்’ பாடலில் ஜானகியின் ஹம்மிங் பாடுவது அவருக்கான பணி, சிறப்பாக செய்தார். ஏதோ தீவிர யோசனையிலேயே பாடினாலும் பிசகாமல் பாடிக் கடந்த ராஜா தானே எழுதிய அந்த என்-ரசிகனே-கேள் வகையறா வரிகளை பாடிய விதம் எல்லாம் சிக்ஸர். ‘எனது ஜீவன் நீ தான்’ ’நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது’ என்றெல்லாம் கை நீட்டி அடித்த பஞ்ச்சுக்கெல்லாம் என்ன பதிலுக்குச் சொல்வதென்று புரியாமல் ஓவெனக் கத்தித் தீர்த்தோம். ‘என்றும் வாழ்கவே’ வரிகளுக்கு வாழ்த்தினார். ‘லலித பிரிய கமலம்’ (தமிழில் ‘இதழில் கதை எழுதும் நேரம்’) பாடலில் எஸ்.பி.பி நிறைய சறுக்கினார். சித்ராவிற்கு அப்படியெல்லாம் தவற விடுவது என்னவென்றே தெரியாது என்பதால் பாடலை தனியாளாகக் கட்டி இழுத்தார். (தெலுங்கில் ஜேசுதாஸ் பாடிய பாடலென்பதால் வரிகள் பழக்கமில்லை என்று எஸ்.பி.பி மனு கொடுத்தார்). ஹிந்தியில் நௌஷாத் மிஸ்ரலலிதா ராகத்தில் போட்ட (கிட்டதட்ட) இதே மெட்டுடைய பாடலை எஸ்.பி.பி பாடிக்காட்டி கேள்விகள் கேட்டார். ராஜா அதிகம் ரசித்ததாக தெரியவில்லை. அது வேற ராகம், இது வேற என்றார். பாலசந்தர் என்ன ராகத்தில் பாட்டு அமைத்தாலும் நாயகிக்கு அந்தப் பேரை வைப்பதாகச் சொன்னதாகவும் ராஜா லலிதப்ரியா ராகத்தை தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்). எஸ்.பி.பி மேடையிலேயே தொடர்ந்து நின்று ‘தோகை இளமயில்’ பாடி முடித்தார்.

அடுத்து பேருந்து ஹார்ன் கேட்டதும் கூட்டம் கத்தித் தீர்க்க அதே கோட் டையுடன் கார்த்திக் ‘என்னோடு வா வா’. ஏகக் குஷியாகத் தென்பட்ட கார்த்திக்கின் உடல்மொழி முழுக்க மகிழ்ச்சி கொப்பளித்தாலும் குரலில் எப்போதும் ஏனோ ஒரு மென்சோகம். (இந்த போக்கிரி படத்தில் லிஃப்ட் சரிசெய்கிற பாண்டு போல). பாடலின் இரண்டாவது இடையிசையில் ராஜாவிடம் ஓடிச்சென்று என்னவோ கிசுகிசுத்துவிட்டு எங்களிடம் கை தட்டி சத்தமாக உடன் பாடும்படியும் ராஜாவின் அனுமதி உண்டு என்றும் சொன்னார். (ராஜாவுக்கு ஏகச் சிரிப்பு) இரண்டாவது சரணம் முழுக்க இது தொடர ’அதை கட்டி வெச்சு உதைக்கணுமே’ என்று பாடுகையில் ராஜா சிரித்தபடி கார்த்திக்கைப் பார்த்து அதைப் பாடினார். (சிரித்தபடி என்பதை அழுத்திப் படிக்கவும், நாளை பத்திரிக்கைகளில் வேறு போல கதை வரும். நாங்கள் உட்கார்ந்து டிவிட்டரில் மறுப்பு சொல்ல வேண்டியிருக்கும்) ராஜாவே கடைசி பல்லவியை மைக்கில் ரசிகர்களைப் பார்த்து ‘எங்கேயும் போக மாட்டேன்’ என்றார். (டிக்கெட் காசெல்லாம் ஏற்கனவே தீர்ந்தது). (கார்த்திக் ராஜா தன் தாயாரின் மரணத்திற்குப் பிறகு முதன் முதலில் ‘அரேஞ்’ செய்த பாடல் இதுவென்றும், இந்த முதல் வரியை கேட்டு அம்மாவை நினைந்து நெகிழ்ந்ததாகவும் சொன்னார்)  ’பச்சரிசி மாவு இடிச்சு’ என்று கோரஸ் தொடங்கி (நிற்க – கோரஸ் நாள் முழுக்க அபாரம்) -. மறுபடி அருண்மொழியின் துல்லிய புல்லாங்குழல் என ‘மதுர மரிக்கொழுந்து’ பேரானந்தம். மனோ இரண்டு முறையும் சரணத்தை முடிக்கையில் கைத்தட்டல்கள்! தொடர்ந்து சிறிய medley. ’அழகு மலராட’ (சத்யன் – பிரியதர்ஷினி) இத்தாலி கான்ஸர்ட்டில் பாடிய வடிவில். முதல் வரியை தனியே பாஸ் மற்றும் வயலினில் வாசித்த பொழுது அதிர்ந்தது. அதற்கே இன்னொரு அறுபது டாலர் டிக்கெட் எடுக்கலாம் போல. (இந்த வீடியோவில் 37வது வினாடி – வீடியோ உபயம் @mayilSK). என்ன பாடல் என்று தெரியாததால் கூடுதல் திரில். (இரவு முழுக்க இப்படி என்ன பாடல் எனத் தெரியாமல் திடீரென இசை துவங்க என தாக்குதல்கள்). ’நானாக நானில்லை தாயே’ (எஸ்.பி.பி) முதல் இடையிசை மற்றும் சரணம் பல்லவி மட்டும். மலேசியா வாசுதேவன் நினைவாக ’ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே’ (செந்தில் தாஸ் – என்னா குரல்!).

இந்த MC, compere தொல்லையெல்லாம் இல்லையென்பதாலோ என்னவோ ராஜா விட்டால் போதும் என அடுத்தடுத்த பாடல்களுக்குத் தாவிக்கொண்டே இருந்தார். Medley முடிந்தது மறு கணமே திரும்புகிறார், என்னவோ சொல்கிறார், மைக்கிடம் செல்கிறார் ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது’ ஆலாப் ஆரம்பிக்கிறார். ஆலாப் முடிந்ததும் ஆர்கஸ்ட்ராவைப் பார்த்து வெட்டும் கை அசைவுகளில் அந்த prelude rushஐ கட்டி இழுக்கிறார். பார்க்க அப்படியொரு பரவசம். சித்ரா இன்னும் மேடையே ஏறவில்லை. மனிதர் பல்லவியைப் பிடித்து அடித்து நொறுக்க, அவசர அவசரமாக வந்து லிர்க் ஸ்டாண்ட் வைத்து மைக் எடுத்து சித்ரா சேரும் பொழுது ஏதோ அங்கேயே ஒரு மணி நேரம் ஆசுவாசமாக நின்று காத்திருந்து பாடுவது போலக் கச்சிதம்.

தெலுங்கு தேசத்தில் மிகப்பிரபலமான ‘பலப்பம் பட்டி’ (பொப்பிலி ராஜா) பாடல் வரும் என்ன பந்தயமே கட்டியிருந்ததால், மத்தளங்களும் ஷெனாயுமாய் தூள் பறந்த துவக்க இசை வந்ததும் அடியேன் ஏகோபித்த கரகோஷம். வேறெந்த பாடலுக்கு அரங்கம் இத்தனை அதிர்ந்ததாக நினைவிலில்லை. மனோ (எஸ்.பி.பி இடத்தில்) மற்றும் அசராமல் அடித்த சித்ரா. அடுத்த நாள் காலை வரை மண்டையில் அடித்துக்கொண்டிருந்தது ட்ரம்ஸ். இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லையெனில் உடனே கேட்டுவிடவும். Gult pleasure மட்டுமல்ல guilty pleasure! (நிற்க, இப்படி எத்தனை மசாலா-படத்துல-ஒரு-ஹிட்-பாட்டு. அதற்கென ஒரு ஃபார்மட், ஒரு எனர்ஜி, ஒரு மெலடி). கமல் இடத்தில் யுவன் பாட முயல்வது பெரும்பாலும் ஜோக் போலத் தான் தெரிகிறது. இருந்தும் யுவன் முடிந்தவரை ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில் err முயன்றார். (கூட NSK ரம்யா). முதல் இடைஇசையில் சாரியட் வண்டி – மணியோசை இசையெல்லாம் பிரமாதமான depthஉடன் கேட்டது. கிட்டத்தட்ட unreal. சித்ராவும் ‘செங்க சூளக்காரா’ அனிதாவும் புதிய இண்டர்லூட்களுடன் ‘தம்தன தம்தன தாளம் வரும்’ பாடலைப் பாடினார்கள். இண்டர்லூடுகள் எனக்கு மிகப்பழக்கமானவையாகப் பட்டது. அதாவது – பொதுவான ‘சிம்பனி’ இசை மற்றும் Nothing but wind தாக்கம். ’ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் எனக்கு எத்தனை பிடிக்கும் என நேரில் அங்கே கச்சிதமான ஆர்கெஸ்ட்ரா மற்றும் கார்த்திக்குடன் கேட்கையில் தெரிந்தது. (முதலில் கார்த்திக் பாடியபின் இசை துவங்கி ஒளியென பெருகும் என்று @meenaks ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்து அந்த momentஐ எதிர்பார்த்தேன், சரியே நிகழவில்லை) பவதா அதிகம் சொதப்பாமல் பாடினார். எல்லோருக்கும் அவர் மேல் soft corner இருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக் அதிகம் துணை நின்று பாடியது போல இருந்தது. (கவனிக்க, அவர் இசையில் ஒரு பாடல் தந்திருக்கிறார்). ராஜா மாற்றியெழுதிய கடல்-கடந்து-வாழறீங்களே-பாவம் வரிகளுடன் ‘சொர்க்கமே என்றாலும்’ (உடன் சித்ரா). அங்கங்கே இசையை நிறுத்தி வரிகளை விளக்குதல். பின் தொடர்ந்து பாடுதல்.

கான்ஸர்ட்டின் ஆகச்சிறந்த தருணமென நான் நினைப்பது – கீதாஞ்சலி (தமிழ் இதயத்தை திருடாதே) படத்தின் ‘ஓ ப்ரியா ப்ரியா’. சமீபமாக என்னவோ ஒரு மயக்கம் இந்தப் பாடலின் மேல், இந்தப் பாடலினால், இந்தப் பாடலுக்காக. மரணத்தின் வலியும் அதை எதிர்க்கிற நம்பிக்கையும் விசித்திரமாக ஒன்றாகச் சிக்கிக்கொண்டிருக்கிறது அதில். தெலுங்குப் பாடல்கள் என்று விளம்பரப்படுத்தியதிலிருந்தே இந்தப் பாடலுக்காக மனசு டமடமவென அடித்துக்கொண்டது. எஸ்.பி.பியும் சித்ராவும் அன்று பாடியது இது வரை பார்த்த மேடைப் பாடல்களிலே சிறந்தது என்றே சொல்லலாம். அவர்களையும் ஒரு படி மிஞ்சி ஆர்கெஸ்ட்ரா சிறப்பாக ஒத்திசைத்தார்கள். எங்கிருந்து எந்த இசை துவங்கி எங்கே கலக்கிறது என்று புரியாமல் பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி மங்க மங்க நான் ஒப்புக்கொள்ள விரும்புவதை விட அதிகமாகவே கண்களில் நீர் கோர்த்துக்கொண்டிருக்கலாம் ;) தப்பித்தவறி யாரேனும் அழுதிருந்தால் அரங்கத்திற்கே கேட்டிருக்கக் கூடிய நிசப்தம் பாடல் முழுக்க.

’மாயாபஜா’ரிலிருந்து ‘நான் பொறந்து வந்தது’ (அபாரம்), பின்னர் தெலுங்கில் ‘பிரயதமா’ (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி’) இரண்டிலும் தனித்து தெரிந்தது ப்ரியா ஹிமேஷ். ஜானகியின் பாடலைப் பாடியும் எந்தக் குறையும் தெரியாமல் பாடினார். பிரயதமா பாடலின் துவக்க இசை மிகவும் பிடிக்குமெனில் வலது கையை தூக்கவும். (பாடலும் பிடிக்குமெனில் இரண்டு கைகளையும்). உங்கள் சார்பாக நான் அங்கே கை தூக்கி ஆர்பரித்தாயிற்ற்று. சரணங்களை எஸ்.பி.பியும் ப்ரியாவும் துல்லியமாக பாடினார்கள். ராஜா அந்த முதலிரண்டு சரண வரிகளை பாடிக்காட்டி (யாய்!) அதற்கு எந்த வார்த்தைகளை எழுதும் போது இனிமை கொஞ்சம் குறைந்து விடுவதாகச் சொன்னார். இருந்தும் தெலுங்கு பாடலாசிரியர் மிகவும் உழைத்து எழுதினார் என்று சொன்னார். (ஆத்ரேயா?) ‘சாய்ந்து சாய்ந்து’ யுவன் பிரமாதமாகப் பாடினார். (ரம்யா சொல்ல வேண்டியதில்லை). சமீபத்திய பாடல் மட்டுமில்லாமல் முழுக்க ஆர்கெஸ்ட்ராவுக்காக சமீபத்தில் தான் எழுதியது என்பதால் துல்லியமாக இருந்தது. (இதே காரணம் ஜகதானந்த காரகாவிற்கும்). மிகவும் எதிர்பார்த்த இரண்டாவது இடையிசையை யுவன் உடன் பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கான்ஸர்ட்டின் மற்றொமொரு monsterous performance – சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சித்ரா, எஸ்.பி.பி. வாத்தியக்கலைஞர்களுக்கும் அது முக்கியமான தருணமாக இருந்திருக்கும். ஓரிரு சிறிய தவறுகள் தவிர்த்து ஸ்டூடியோவில் என்ன நிகழ்ந்ததோ அதை இங்கே அரங்கேற்றினார்கள். பார்க்கிற எங்களின் கூர்ந்த கவனமும் வாசிக்கிறவர்களின் கூர்ந்த கவனமும் பிரமாதமான அமைதியில் கலக்கிற பொழுது, சத்தம் போடாமல் கேளுங்கள் என்று ராஜா சொல்வதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எஸ்.பி.பியின் குரல் ஏற்ற இறக்கங்களில் முன்பு எப்போதோ சறுக்கு மரம் விளையாடி பரவசமானது போல இப்பொழுதும் சாத்தியமாகிறது. மக்களே, எஸ்.பி.பியின் புகழ் இன்னும் இன்னும் பாடுக. ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ தெலுங்கில் எஸ்.பி.பியும் (மறுபடி அமர்க்களம்) அனிதாவும் கடைசி சரணம் தமிழில் ராஜாவும். (அவர் பாடியதாயிற்றே விடுவாரா?) கோரஸ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள், ரசித்து பாடுகிறார்கள். பெரும் நடுக்கத்துடன் பவதாரிணி ‘காற்றில் வரும் கீதமே’ துவங்க, ப்ரியா ஹிமேஷ் கொஞ்சம் சேர்ந்து சரி செய்ய, பின்னர் மனோ வந்து மீண்டும் குழப்ப, கடைசியில் ராஜாவே பாடி முடித்தார். ’ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ பாடல் அடைந்த பொழுது ஆர்கெஸ்ட்ரா அன்றைக்கு அட்டகாச ஃபார்மில் இருப்பது தெளிவாக புரிந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசமாகிக் கேட்க முடிந்தது. பாடகி ப்ரியதர்ஷினி பவ்யமாகப் பாடுகிறார், நன்றாகவும் பாடுகிறார். ’மாசி மாசம் ஆளான பொண்ணு’ தெலுங்கில் எஸ்.பி.பியும்(மறுபடி மறுபடி அமர்க்களம்) ப்ரியா ஹிமேஷும். ஹிமேஷ் விரைவில் ஸ்டாராகி விடுவார். இது ஸ்வர்ணலதாவிற்கு அஞ்சலி என்று சொல்லியிருந்தால் என்னைப் போன்ற ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம். (தெலுங்கில் படத்தில் பாடியது சித்ரா) தெலுங்கில் தன் பாடல்களுக்கு எழுதப்பட்ட வரிகளில் இதன் பல்லவியை பெஸ்ட் என்றார் ராஜா. நல்ல thought, fits and sounds nice என்பது அவரின் அளவுகோல்.

அடுத்த பெரிய சர்ப்ரைஸ் – ‘கண்ணே தொட்டுக்கவா ஒட்டிக்கவா’ என்று சத்யன் கமல் குரலில் துவக்கியது. எஸ்.பி.பி (சொல்லி சொல்லி போரடிக்குது, அமர்க்களம்), பிரியதர்ஷினி (ஆர்கெஸ்ட்ரா மற்றும் எஸ்பிபி அதிரடியில் இவரின் குரலைல் காணவே காணோம்). ’வனிதாமணி யவன மோகினி’ என்று அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எல்லா பக்கங்களிலும் அதிரடி. ராஜாவின் பாடல்களுக்கான திரைவடிவங்களில் எனக்குப் மிகப்பிடித்த தருணங்களின் ஒன்று இந்தப் பாடலில் இரண்டாவது இடையிசையின் முதல் பத்து நொடிகளில் வருகிறது. ஒளிந்திருக்கும் வில்லன்கள், திரையின் ஒரு புறத்தில் இன்னொரு புறத்திற்கும் விரையும் குதிரைகள், எதிர்ப்புறமாக ஓடி வருகிற கமல் – அம்பிகா என மொத்தமும் ஸ்லோமோவில் நிகழ (அந்த ஸ்லோமோ ஐடியாவை கொடுத்தவர் வாழ்க) அந்த இசையை திரையில் அழகாக உள்வாங்கியிருப்பார்கள். அந்த நொடியை ஒரு கான்சர்ட் ஹாலில் அமர்ந்து தரமான வாசிப்பிற்குக் கற்பனை செய்வேனென நினைத்ததேயில்லை. Majestic!

NSK ரம்யா துவக்கிய ‘உனக்கும் எனக்கும் ஆனந்தம்’ ஒரு சரணம் முடிந்ததும் அப்படியே அடங்கி பிண்ணனியில் Black Eyed Peas remix முழுதாக ஒலித்து முடித்தது. அர்த்தமேயில்லாத தேவையில்லாத plug. ராஜாவை யார் கன்வின்ஸ் செய்தார்கள் எனத் தெரியவில்லை. முழுநேரமும் ஆடியன்ஸை பார்க்காமல் அந்தப்பக்கம் திரும்பி நின்றுகொண்டிருந்தார். முகத்தில் கொஞ்சம் சங்கடம். அந்த adaptationஐ நாம் கேட்க வேண்டுமென ராஜா விரும்பியதாக எஸ்பிபி விளக்கினார். அடுத்த சிக்ஸர் ‘பூவரசம்பூ பூத்தாச்சு’. மிகவும் பிடித்த பாடல். பிரியதர்ஷினி பிரமாதமாகப் பாடினார். ரயில் ஒலிகள் கச்சிதமாக அமைந்த fun ride. ராதிகா வானம் பார்த்து சுற்றிச் சுற்றி தடுக்கி விழுந்து எழுந்து நின்று பார்க்கும் பொழுது வயலின்களுக்கு தலை சுற்றுமே – அது Perfect. தெலுங்கு ரசிகர்களை கொஞ்சம் சாந்தப்படுத்த மறுபடி ஜகதீக வீருடு அதிலோக சுந்தரியிலிருந்து abba nee பாடலை எஸ்.பிபியும் கீதா மாதுரியும் பாடினார்கள். அவர்களே மறுபடி மனோவுடன் botany பாட்டை பாடினார்கள்.

மறுபடி ஒரு pure moment. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ. சித்ராவும் ராஜாவும். ஆர்கெஸ்ட்ரா இன்னும் கொஞ்சம் உயிரூற்றி வாசித்திருக்கலாம் எனத் தோன்றியது. இருந்தாலும் பாடலின் உயரம் ஏகமென்பதால் கொஞ்சம் குறைந்தாலும் பொன். ஜானகி தந்திரமாக அந்தப் பாட்டின் நோட்ஸுகளுக்கிடையே தன் குரலையும் சேர்த்து எழுதிவிட்டார் என்பது சித்ரா பாடுகையில் கேட்டது. (சித்ரா அடிக்கடி கூட நின்று கொண்டிருந்த கோரஸ் பாடகர்களிடம் என்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்). அங்கங்கே மைக் கொஞ்சம் சொதப்பியது.  சும்மா கேட்டுகொண்டிருந்தே நாங்களே சோர்ந்து போயிருக்க ராஜா ஐந்து மணி நேரமாக நின்றிருந்தாலும் ‘ஓரம் போ ஓரம் போ’ பாடலை உற்சாகச் சைக்கிளேற்றினார். கோரஸ் மக்களும் செந்தில் தாஸ் (பல குரல்களில்) ஜாலியாகப் பாடினார்கள். ’ருக்குமணிய பின்னால உக்கரவெச்சு’ என்று பாடும் போது ராஜாவின் பாவனையெல்லாம் அத்தனை அழகு. (அழகன்யா எங்காளு!). உடனே அன்னக்கிளியிலிருந்து ‘சுத்தச்சம்பா’ மிகத் திறமையாகப் பாடப்பட்டது – காரணம் பாடகி பிரயதர்ஷினி. டீம் லீட் போல அவர் ஒரு மினி கண்டக்டராக கோரஸ்களை ஒழுங்குபடுத்தி பாட வைத்தார். அதே ஜோஷுடன் ‘நிலா அது வானத்து மேல’ ஒரு பாதி பாடப்பட்டது. ராஜா ‘நிலா அது வானத்து மேல’ எப்படி முதலில் தாலாட்டாக இசையமைக்கப்பட்டது (தென்பாண்டிச்சீமையில இடத்தில்) என்று விளக்கி பாடி காண்பித்தார். (பின்னால் அமர்ந்திருந்த தெலுங்கு குடும்பத்தினருக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. எனக்குப் புரியாத தெலுங்கிலும் அவர்கள் கண்ட அதிசயத்தை புரிந்துகொள்ள முடிந்தது ஜீன்ஸ் படப்பாடலில் வராத அதிசயமாக மிஞ்சியிருந்தது. வெளியே கலைந்து போகும் பொழுது ஒரு தமிழ்நாட்டு வெள்ளைதாடி பெரியவர் தன் குடும்பத்தினரிடம் மிக மகிழ்ச்சியாக ‘என்ன அநியாயம் பாத்தீங்களா அந்த நிலா அது வானத்துலு பாட்டு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இத்தனை லேட்டாக இதெல்லாம் புரிந்து தெரிந்து என்னத்த..) அபிநந்தனாவிலிருந்து ‘ப்ரேமா எந்த்தா மதுரம்’  - எஸ்.பி.பி. தெலுங்கு ரசிகர்களின் தேசிய கீதம் போல. இது போன்ற மெட்டை தான் வேறெங்கும் பாடியதேயில்லை என்று எஸ்பிபி உணர்ச்சிவசப்பட்டார். நான் முதல் முறையாக கேட்கிறேன். (வெட்கம், வேதனை). பின்னர் ராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி முடித்து வைத்தார்.

சப்பா, ஒரு சோடா.

சரி, பாட்டு லிஸ்ட்டெல்லாம் ஓகே, கருத்து சொல்ல வேண்டிய கட்டம். ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக.

இடம் – சரியாக இருந்தது. போனவுடன் ‘ஏன் ஸ்டேஜ் அங்க இருக்கு’ ‘இத்தன சின்னதா இருக்கு’ ‘நம்ம இடத்துல சவுண்ட் கேக்குமா’ போன்ற கலவர கேள்விகள் எழுந்தன. (முதல் கான்ஸர்ட் அல்லவா?). எல்லாம் சரியாக இருந்தது.

கூடிய மக்கள் – இசை ரசிக்கத் தெரிந்த மக்கள். தெலுங்கு – தமிழ் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சில் என்பதால் அதிகம் தமிழ் பாடல்கள் இருந்தன. அது சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மனோ, எஸ்பிபி, ராஜா என எல்லோரும் ஓரிரு முறை தெலுங்கு பாடுகிறோம் என்று வாக்களிக்க வேண்டியிருந்தது. கடைசியில் சில தெலுங்கு பாடலை பாடி சரிகட்டினார்கள். இருந்தாலும், அவர்வர் சங்கங்களில் (தமிழ்ச் சங்கம், தெலுங்கு சங்கம்(லு?)) அடுத்த மீட்டிங்கில் சலசலப்பு இருக்குமென்றே நினைக்கிறேன். மக்கள் ராஜா கேட்டுக்கொண்டும் அவ்வப்போது கொஞ்சம் சத்தம் போடவே செய்தனர். பியர் நிறைய புழங்கியது. நிறைய குழந்தைகள் தென்படவில்லை, நன்றி.

ஆர்கெஸ்ட்ரா – (ஏனோ எஸ்பிபி ஆர்செஸ்ட்ரா என்கிறார்) – நினைவு சரியெனில் இரண்டு முறை தான் நிறுத்தப்பட்டார்கள். மற்றபடி நல்ல உழைப்பு.

பாடகர்கள் – எஸ்பிபி லலிதபிரியகமலம் தவிர மற்ற எல்லாப் பாடல்களையும் வெளுத்து வாங்கினார். சமீபகாலமாக ஏற்படிருக்கிற தொய்வு இங்கே அதிகம் தென்படவில்லை. சித்ராவும் அவரும் நிகழ்ச்சியின் delight. எஸ்பிபி மனோ கார்த்திக் யுவன் என எல்லோரும் அங்கங்கே ஏதேதோ பேச சித்ரா பாடுவது மட்டுமே. ‘ஏன் பேசவே மாட்டேங்கிற? ராஜாகிட்ட பாடின எக்பீரியன்ஸ் சொல்லு’ என எஸ்பிபி வம்பிழுக்க சித்ரா சம்பிரதாய வார்தைகள் சொல்ல ‘அது என்ன இது என்ன’ கிட்டதட்ட ராகிங் நடந்தது. (’என்னோட கேரியர்லயே..’ ‘கேரியரா அது என்ன டிஃபன் கேரியரா?). இருவரையும் அந்த நிகழ்ச்சியில் பார்த்தது உண்மையில் புல்லரிப்ஸ். மனோ எத்தனை MC செய்ய முயன்றாலும் ராஜா விடாது தடுத்தார். என்ன கேள்வி மனோ கேட்டாலும் ‘சரி சரி பாட்டு பாடலாம் வா’ என கலாய்த்தார். ‘இந்த மாதிரி பாட்டெல்லாம் நீங்க’ என மனோ நா தழதழுத்தாலும் ‘நிறுத்து நிறுத்து நீ ஊதவே வேணாம்’ தொனியில் தடா. மற்ற இளம் பாடகர்கள் அனைவரும் சுகமாகப் பாடினார்கள் – குறிப்பாக ப்ரியா ஹிமேஷ்.

பாடல்கள் தேர்வு – ராஜாவின் oeuvreஇல் இருந்து பாடல்கள் தேர்ந்தெடுப்பது ராஜாவாகவே இருந்தாலும் கடினம் தான். ஆக அதில் விமர்சனம் செய்து ஒன்றும் ஆவதில்லை. (மக்கள் ‘அந்தப் பாட்டு வேணும் இந்தப் பாட்டு வேணும்’ என குரல் கொடுக்க ராஜா இரண்டு முறை பொறுமையாக ‘சில பாடல்கள் எடுத்து prepare பண்ணியிருக்கோம். அதத் தான் பாடறோம்’ என்று விளக்கியும் ‘கண்ணே கலைமானே’ என்று ஒரு கூவல் எழுந்தால் அதற்கு ‘கத்தியவன் என கண்டேன் உனை நானே’ என பாடிக் கலாய்த்தார். பின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாக ‘நான் கம்போஸ் பண்ணின பாட்டத்தானே உங்களாக கேக்கமுடியும். நான் கம்போஸ் பண்ணாத பாட்டு (மனசுக்குள்) ஆயிரம் இருக்கு, அதெல்லாம் என்ன பண்ண, கேக்க முடியுமா?’ என்ற கேட்டார். அவர் சொன்னதின் உண்மையை சுருக்கென உணர புரிந்தது. இசையைப் பற்றிய ராஜாவின் philosophy புரிய நமக்கு ரொம்ப நாளாகும் போல.

கடைசியாக ராஜா. ராஜா கான்ஸர்ட்களை எத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்கிறார் என்பது புரிந்தது. ‘நிறைய தப்பு பண்றோம் கான்ஸர்ட்ல. அது உங்களுக்குத் தெரியறது இல்ல. ஆனா என்னால தாங்க முடியறதில்ல. அதான் கான்ஸர்ட்ஸ் பண்ண இஷ்டமில்ல’ என்றார். தவறுகள் இருந்தால் உடனே மறுபடி வாசிக்கை வைக்கிறார். பாடும் போது அத்தனை சின்சியாரிட்டி. என்னவோ, சிறு குழந்தைகள் தங்கள் பணியில் கொள்கிற கவனம் போல தோன்றியது. (குறிப்பாக ஜனனி ஜனனியில்). அவ்வப்போது சுற்றி இருப்பவர்களை சதாய்ப்பதெல்லாம் சூப்பர். (கடைசியாக மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடகியை அறிமுகப்படுத்திவிட்டு ‘என்னம்மா உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்களா இல்லையா’?) எஸ்பிபியுடன் நல்ல நட்பு. ஸ்கூட்டரில் சுற்றிய கதைகள் சொன்னார். எஸ்பிபி ஏராளமான பாராட்டுகளை பொழிந்துகொண்டே இருந்தார். (’இன்னும் குறைந்தபட்சம் நூறு வருஷத்துக்காவது இந்த மாதிரி ஒரு கம்போஸர் எங்கயும் வர மாட்டார்”). ஒரு கட்டத்தில் எஸ்பிபியை முதல் முறையாக ‘அவன்’ என்று குறிப்பிடுவதாக ராஜா சொன்னார்.

Meta referenceகளை சரியாகக் கையாளுகிறார். ‘தாய் குழந்தைக்கு தருவது போல’ போன்ற பிரயோகங்கள் இருந்தன. ரசிகர்களுக்காக பாட்டெழுதி வருகிறார். இதெல்லாம் old style என்றாலும் நேர்மையாக இருக்கிறது. பாடுகிற பாடலில் சரியான வரிகளில் சரியான செய்திகளை சேர்ப்பிக்கிறார். மேடையேறியதும் அரங்கம் முழுக்க ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ‘என்ன இவங்க முகத்தையெல்லாம் பாக்கலனா எப்படி?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொரு செக்‌ஷனாக விளக்கை ஒளிரச் செய்து நேராக மனசுக்குள் டார்ச் அடிக்கிறார். இசையை நடத்திச் செல்கையில் அவர் உடல்மொழி பிரமிப்பானது. ‘அதிக நேரம் கிடைக்கல ரிஹர்சலுக்கு. தப்பு இருந்தா பொறுத்துக்குங்க’ என்று சொல்கிறார். சத்தம் போடாம பாட்டக் கேளுங்க என்கிறார். வெறும் இசைவழி மட்டும் பேசுகிறார். நமக்கிருக்கும் சோகங்களை அங்கீகரிக்கிறார்.

ராஜாவிடம் மிகமிக பிடித்த விஷயம் – தன் ரசிகர்களிடன் தனிக்கிருக்கிற authorityயை முழுதாக புரிந்துகொண்டிருப்பது; அதை grantedஆக எடுத்துக்கொள்வது. அதையெல்லாம் நாம் அவருக்கு விளக்கிச் சொல்லி புரியவைக்கவேண்டுமானால் ஆகுமா என்ன? ‘என் இசை உனக்கு இன்றியமையாதது’ என்பதை அவர் அறிவது தான் எனது பணியை மிகச் சுலபமாக்குகிறது. அதை சொல்லிகொண்டிருக்கவோ கேட்டுக்கொண்டிருக்கவோ நேரமில்லை; துவங்கினாலும் முடிக்க நேரமில்லை. புதிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை ஆனால் உரையாடல் தொடர்ந்திருக்கிறது என்பதான புரிதல்.

கடைசி கட்டத்தில் ஏகக்களேபரம். மாபெரும் அபிமானத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாமல் திணற வேண்டியதாயிருக்கிறது. அன்பை சரியாகக் கொண்டு சேர்த்தாயிற்றா என்று கவலையெல்லாம் எழுகிறது. மெல்ல மெல்ல அது கூட்டம் முழுக்க பரவுகிறது. ராஜா அந்தக் கணத்தை சரியாகக் கணிக்கிறார். ‘எல்லாம் எனக்குத் தெரியும், பாட்டக் கேட்டுட்டே இரு எப்பவும் போல’ என்று சுலபமாகச் சொல்லி வைக்கிறார். மறுபடி இதெல்லாம் நிகழுமா என்று தெரியாத நிலையில் எதையும் யோசிக்காமல் இசையை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் அதையும் சரியாகச் சொல்லிவிடுகிறார். தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு புது வரிகளாக ‘உன் வாழ்வில் சில நொடிகள் / என் வாழ்வில் சில நொடிகள் / என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடி தான்’ என்று பாடி வைக்கிறார். (அதைப் பாடுகையில் நம்மையும் அவரையும் காட்டிக்கொள்கிற விரலில் அத்தனை அழுத்தம்). மறுபடி தென்பாண்டிச் சீமையிலேயே அறுந்த குரலில் முழுதாகப் பாடுகிறார். இரண்டு நிமிடங்களில் பாடல் முடிந்தால் நிகழ்ச்சி முடிந்து விடும். ஆர்கெஸ்ட்ரா அமைதியாயிருக்க வெறும் கைதட்டல்கள் மட்டும் பாடலை பின்தொடருகிறது. பாடல் முடிந்ததும் விடை கொடுக்க சரியான வழி தெரியாமல் எல்லோரும் கத்தித் தீர்க்கிறார்கள். ராஜா நின்று அனைவருக்கும் தலைக்கு மேல் கை கூப்பி நன்றி சொல்லி கையசைத்து ஒரு சுற்று அப்படியாக முடிகிறது. அமைதி வந்ததும் துண்டை எடுத்து போட்டுக்கொள்கிறார். புத்தகத்தை மூடிவைக்கிறார். யாரும் நகர்வதாயில்லை. யாரோ திடீரென கூட்டத்திலிருந்து ராஜாவென அழைக்க பத்திக்கொண்டது போல மறுபது கூட்டம் மொத்தம் அலறுகிறது. துண்டை மறுபடி கீழே வைத்துவிட்டு மைக் ஸ்டாண்டை விட்டு விலகி பொறுமையாக நடந்து முன்னே வந்து குனிந்து தரையை தொட்டு வணக்கம் வைக்கிறார். அதிர்ச்சியா கோபமா வருத்தமா  என்னவென்று புரியாமல் மறுபடி கூட்டம் அலற கத்தி போல கிழிக்கிறது சத்தம். இன்னுமொரு அலை கைதட்டல்களும் ராஜாவின் கையசைப்புகளும் வணக்கங்களும் மக்களின் கூக்குரல்களும் அடங்கித் தீர்ந்ததும் எல்லோருமாகக் கலைகிறோம்.

About these ads

Written by Aravindan

பிப்ரவரி 25, 2013 இல் 5:19 முப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

39 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. The last moments were indeed resonating. Channelising every emotion precisely through every gesture and of course, his words, notes, etc. I’ll come back often and write whatever I want to.

  மயில்செந்தில்

  பிப்ரவரி 25, 2013 இல் 6:13 முப

  • நிகழ்ச்சியை பாத்தது நீங்களா இல்லை நானான்னு எனக்கு இப்போ சந்தேகம் வந்திடுச்சு. அரவிந்த்மனோ, அபாயகரமான எழுத்துகாறருங்க நீங்க

   மயில் இந்தபதிவுக்கு ஏற்ற வீடியோ இனைப்புகளை தேடிப்பிடித்து பதிவின் இறுதியில் வரிசையாக போட ஏஎம்முக்கு உதவுங்களேன்

   [μsic]மாபியா (@sicmafia)

   பிப்ரவரி 25, 2013 இல் 7:14 முப

 2. A gr8 post! U r so blessed to be a part of the concert. I too guess that it would have been nicer if Shreya had been there.

  Really I admire some Telugu ppl’s admiration towards Raja.

  Karthik sang Om ShivOham in the recent Toronto concert. Chithra and Sadhana Sargam sang thamnthana namthana in the same concert.

  Hard to believe that u haven’t heard prEma entha madhuram before? I feel it’s a rehash of maNiyOsai kEttu ezhundhu.

  Haven’t heard that balappam petti. Will listen to it.

  Thanks for sharing one of ur gr8est experiences :)

  Kaarthik Arul

  பிப்ரவரி 25, 2013 இல் 6:55 முப

 3. இளையராஜா இசை இரவினை அப்படியே நேரில் கொண்டு வந்து விட்டீர்கள்..அபாரம்..
  அன்புடன் சின்னக் கண்ணன்..

  சின்னக் கண்ணன்

  பிப்ரவரி 25, 2013 இல் 7:27 முப

 4. சமீபத்தில் பிரமித்த எழுத்து.பெருமழையில்
  நனைந்தேன்.concert ஐ விட விமர்சனம். ரகளை.நானே பார்த்த/கேட்ட உணர்வு .

  நளினி சாஸ்திரி

  பிப்ரவரி 25, 2013 இல் 8:28 முப

 5. ஆஹா ….அருமை …..அருமை …….
  வேறு சொல்ல வார்த்தைகள் வரவில்லை …
  நண்பர் ஒருவர் சொன்னது போல்
  நிகழ்ச்சியை நேரில் பார்த்தது நீங்களா
  நாங்களா என்ற சந்தேகம் வருமளவிற்கு
  மிக எளிமையாக கண் முன்னே கொண்டு வந்து விட்டிர்கள் …….
  என் போன்ற ராஜா வெறியர்களுக்கு ஒரு விருந்தே
  படைத்து விட்டிர்கள் …….
  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் …….
  நன்றி ……நன்றி …..நன்றிகள் பல ………

  gandhi

  பிப்ரவரி 25, 2013 இல் 9:29 முப

 6. எப்படி … அங்கேயே உட்க்கார்ந்து எழுதினீர்களா…?! பிரமாதம்…! நேரடியாக பங்கேற்க முடியவில்லையே என்றக் ஆதங்கம் போனது. நன்றி நண்பா…!

  Ambur Edwin-Prabanjapriyan

  பிப்ரவரி 25, 2013 இல் 9:50 முப

 7. you made us live on stage . Prasanna

  prasanna

  பிப்ரவரி 25, 2013 இல் 10:07 முப

 8. நேரில் பார்த்த உணர்வு. நிறைய நுணுக்கமா ரசிச்சிருக்கீங்க சார். வாழ்த்துக்கள். இந்த பதிவை எனது கோவை எஸ்.பி.பி ரசிகர்களுக்காக பதிகின்றேன். நன்றி.

  கோவை ரவி

  பிப்ரவரி 25, 2013 இல் 10:53 முப

 9. Enna venru solvadamma

  Giri

  பிப்ரவரி 25, 2013 இல் 11:48 முப

 10. Very nice post!!!.
  I was blessed to be part of this show as well.

  I am re-playing the whole evening again through your post!!!

  Ariv

  பிப்ரவரி 25, 2013 இல் 12:55 பிப

 11. nice post

  shafi

  பிப்ரவரி 25, 2013 இல் 3:14 பிப

 12. அந்த காலத்தில்வானோலியில் சினிமா வசனம் கேட்டதுபோல் அருமையாக எழுதிவிட்டீர்கள்

  Kulasegaran P

  பிப்ரவரி 25, 2013 இல் 3:49 பிப

 13. இப்படியெல்லாம் இசையை இரசிக்க முடியுமா!!!!!!!!!!! (borrowed these words from @yathirigan)

  yeasix

  பிப்ரவரி 25, 2013 இல் 4:06 பிப

 14. நமக்கு பிடிச்ச பாட்டை, நாமே போட்டு கேட்கிறது ஒரு சுகம்னா, நமக்கு பிடிச்ச பாட்டை, வேறு யாரோ போட்டு கேட்கும் போது, தற்செயலாக நாம கேட்டு, மெய் மறக்கிறது இன்னோரு சுகம். இதில் இரண்டாவது, எப்போதாவது நிகழும் தெய்வச் செயல். இதை படிக்கும் போது.. அது தான் நிகழ்ந்தது… இசையை அருந்தும் சாதகப் பறவை போல நானும் வாழ்கிறேன்..

  sendhu

  பிப்ரவரி 25, 2013 இல் 4:15 பிப

 15. Rocking. Raja raja raja raja raja raja raja

  Packiaraj

  பிப்ரவரி 25, 2013 இல் 4:55 பிப

 16. Thank you very much. We felt we were there with you!.

  Azhagan

  பிப்ரவரி 25, 2013 இல் 5:33 பிப

 17. காலையில படிக்க மட்டும்தான் முடிஞ்சது கமெண்ட் பண்ண முடியல சரி அப்புறம் commentifyனு இப்ப பார்த்தா facebookல புதுசா போட்ட ஃபோட்டோக்கு like and comments பார்த்த மாதிரியே இருந்தது.Great People Great fan followings..

  கமெண்ட் செய்யதான் முடியலயே ஒழிய பலமுறை படிச்சாச்சு காலைலேர்ந்து..சொல்லபோனால் நேற்று அந்த திருவிழாவிற்கு போனவங்க மேல அப்படியொரு காண்டு,பொறாமை(இதுல நீங்க வேற லைவ் ட்வீட்).. காலையில் இதைப் படிச்சதும் அதெல்லாம் ஃபடாஃபட்.. :)

  //ஆர்மோனிய பெட்டிக்கு மட்டும் நல்ல ரம்மியமான நீல ஒளி./// :)))) :)))) அந்த நீல ஒளிக்காக..

  //‘பரி பூரணி’ என்பது அந்தக் குரலாகவும் இருக்கலாம்.// felt that so often..

  //எஸ்.பி.பி எப்போது குரலை முழுக்க திறந்து உயரே ஏறினாலும் காவிரி நீர் திறந்து விட்டது போல அரங்கத்தை ஒரு மைக்ரோ நொடியில் நிறைக்கிறது அவரின் குரல்.// –இனிமேல் எஸ் .பி .பி எங்கு பாடினாலும் இப்படித்தான் தோன்றுமோ என்ற யோசனையுடன்,அந்த மைக்ரோ நொடிகளுக்கு கற்பனையில் உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்..

  //’அழகிய ரகுவரனே அனுதினமும்’ என்றெல்லாம் விரைகிற இடங்களில் தடுமாற இன்னும் சித்ராவிற்கு நிறையவே வயதிருக்கிறது// –Chitthu :)

  //பின்னர் தெலுங்கில் ‘பிரியதமா’ (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி’) இரண்டிலும் தனித்து தெரிந்தது ப்ரியா ஹிமேஷ். ஜானகியின் பாடலைப் பாடியும் எந்தக் குறையும் தெரியாமல் பாடினார். பிரயதமா பாடலின் துவக்க இசை மிகவும் பிடிக்குமெனில் வலது கையை தூக்கவும். (பாடலும் பிடிக்குமெனில் இரண்டு கைகளையும்).// -.இரண்டு கைகளையும் தூக்கியாச்சு..தூக்கியதற்கு பரிசா ‘பிரியதமா ரிக்கார்டட் வீடியோ ஏதாவது..?!

  //Black Eyed Peas remix முழுதாக ஒலித்து முடித்தது. அர்த்தமேயில்லாத தேவையில்லாத plug. ராஜாவை யார் கன்வின்ஸ் செய்தார்கள் எனத் தெரியவில்லை.// *Blinks * *WhatIsThisIDontEvenMode*

  //தென்றல் வந்து தீண்டும் போது…பொன். ஜானகி தந்திரமாக அந்தப் பாட்டின் நோட்ஸுகளுக்கிடையே தன் குரலையும் சேர்த்து எழுதிவிட்டார்//..படித்ததும் புன்னகை மிச்சம் :)) again வீடியோ ஏதாவது..?!

  //‘ப்ரேமா எந்த்த மதுரம்’…நான் முதல் முறையாக கேட்கிறேன். (வெட்கம், வேதனை).//–Seriously?! *AddingFuelToYourவெட்கம்&வேதனை*

  ஆனால் உரையாடல் தொடர்ந்திருக்கிறது என்பதான புரிதல். :’)

  பதிவும் மறுபடி மறுபடி அமர்க்களம்..

  பாராட்டுக்கள் கூடவே நன்றிகளும் சேர்த்து :)

  Aishwarya Govindarajan

  பிப்ரவரி 25, 2013 இல் 7:19 பிப

 18. தல அதே போன்ற அனுபவம் 2011லில் எனக்கு கிடைத்தது….அனுபவச்சியிருக்கிங்க…எங்களையும் அனுபவிக்கவச்சியிருக்கிங்க…நன்றியோ நன்றி ;))

  அப்புறம் உங்க புண்ணியத்துல 2 தெலுங்கு பாட்டு இப்பதான் தேடி கேட்டேன் ;)

  கோபிநாத்

  பிப்ரவரி 25, 2013 இல் 9:35 பிப

 19. நாலுதரம் படிச்சுட்டேன். Terrific Memory sarey! I can relive the experience now.

  மயில்செந்தில்

  பிப்ரவரி 25, 2013 இல் 11:31 பிப

 20. I keep reading and reading and reading, still I haven’t got enough of it. Very emotional write up and keep up the good work.

  Uma Chelvan

  பிப்ரவரி 26, 2013 இல் 12:50 முப

 21. With this article we could visualize the concert…Kudos :)

  Anathal

  பிப்ரவரி 26, 2013 இல் 3:50 முப

  • நாலுமுறை படித்துவிட்டேன்….மறுபடி படிப்பேன் :). படிக்க படிக்க நேரில் பார்த்து/கேட்டு மகிழ்ந்த ஒரு ஆனந்தம்! அத்தனையும் நினைவில் வைத்திருந்து எழுதியதற்கு ரொம்ப நன்றிங்க. அபாரமான எழுத்து நடை.

   NJ’வா டொராண்டோ ‘வா என்ற போராட்டத்தில் டொராண்டோ வெற்றி கொண்டது. ஒருவனாக 10 மணி நேரம் டிரைவ் பண்ணி, டொராண்டோ சென்று காணும் பாக்கியம் கிடைத்தது. ஆதலால் நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் காட்சியாக விரிந்தது.

   எல்லாத்துக்கும் மேலே, எதோச்சையாக, IR மற்றும் குழுவினர் தங்கிருந்த அதே ஹோட்டலில் நானும் தங்கம்படி ஆனது. கான்செர்ட் முடிந்து இசை தேவனை, ஹோட்டலில், very close range’ல் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

   காம்பியர் என்ற பெயரில் கனடாவில் சொதப்பினார்கள். பார்த்திபன், விவேக், சிநேக & பிரசன்னா மூவரும் shift போட்டு கொன்றார்கள். NJ’வில் அது இல்லாதது ரொம்ப சந்தோசம்.

   @RRSLM

   மார்ச் 3, 2013 இல் 6:25 முப

 22. Ennai pondra Raaja Rasigargal Avasiyam Padikka vendiya Pathivu.. Nandri Nanbare..!

  Saravanan

  பிப்ரவரி 27, 2013 இல் 1:54 பிப

 23. வணக்கம்

  அருமையாக எழுதியுள்ளீர்கள் அதுவும்
  தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு புது வரிகளாக ‘
  உன் வாழ்வில் சில நொடிகள் /
  என் வாழ்வில் சில நொடிகள் /
  என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடி தான்’ அருமையான புது வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் பயணத்தை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 24. English-la kooda ezhudhalam la! :P

  Ravi (@bhagravi)

  பிப்ரவரி 28, 2013 இல் 5:31 முப

 25. நாலுமுறை படித்துவிட்டேன்….மறுபடி படிப்பேன் :). படிக்க படிக்க நேரில் பார்த்து/கேட்டு மகிழ்ந்த ஒரு ஆனந்தம்! அத்தனையும் நினைவில் வைத்திருந்து எழுதியதற்கு ரொம்ப நன்றிங்க. அபாரமான எழுத்து நடை.

  NJ’வா டொராண்டோ ‘வா என்ற போராட்டத்தில் டொராண்டோ வெற்றி கொண்டது. ஒருவனாக 10 மணி நேரம் டிரைவ் பண்ணி, டொராண்டோ சென்று காணும் பாக்கியம் கிடைத்தது. ஆதலால் நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் காட்சியாக விரிந்தது.

  எல்லாத்துக்கும் மேலே, எதோச்சையாக, IR மற்றும் குழுவினர் தங்கிருந்த அதே ஹோட்டலில் நானும் தங்கம்படி ஆனது. கான்செர்ட் முடிந்து இசை தேவனை, ஹோட்டலில், very close range’ல் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

  காம்பியர் என்ற பெயரில் கனடாவில் சொதப்பினார்கள். பார்த்திபன், விவேக், சிநேக & பிரசன்னா மூவரும் shift போட்டு கொன்றார்கள். NJ’வில் அது இல்லாதது ரொம்ப சந்தோசம்.

  @RRSLM

  மார்ச் 3, 2013 இல் 6:26 முப

 26. Nice writeup

  Pandian

  மார்ச் 3, 2013 இல் 2:56 பிப

 27. ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இந்த மாதிரி விவரமான பதிவை இது வரை படித்ததே இல்லை. சும்மா அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். அதில் விசேஷம் என்னவென்றால் இவ்வளவு பெரிய பதிவைப் படிக்கும் பொழுது பொறுமையில்லாமல் ஸ்கிப் பண்ணிப் போவோம். அப்படி பண்ண முடியவில்லை, முழுவதும் படித்தேன்! :-)

  //இந்த இடத்தில், அறிவித்தபடி சுஹாசினி மணிரத்னம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவில்லை என்பது அறிந்தும் புரிந்தும் மலர்ந்து சிரிக்கும் என் முகம் ஒரு க்ளோசப்)//
  சிரித்து மாளவில்லை எனக்கு :-)

  அருமை!

  amas32

  amas32 (@amas32)

  மார்ச் 3, 2013 இல் 3:43 பிப

 28. Mayil – நன்றி :)

  Musicmafia – For a long time I will remember ‘அபாயகரமான எழுத்துக்காரர்’. நன்றி 

  Kaarthik – Thanks :) You should listen to Balapam patti and I shall listen Prema entha madhuram ;)

  சின்னக் கண்ணன் – நன்றி!

  நளினி சாஸ்திரி – நன்றி!

  Aravindan

  மார்ச் 31, 2013 இல் 5:22 முப

 29. gandhi – “மிக எளிமையாக”? நிஜமாகவா? :) கொஞ்சம் கொழப்படியா இருக்குன்னு நினச்சேன். நன்றி.

  Prabanjapriyan – :) நன்றி!

  Prasanna – Thank you, my pleasure!

  கோவை ரவி – நன்றி. பதிவை பகிர்வதற்கும் :)

  Giri – நல்லவிதமா எதாச்சும் சொல்லுங்களேன்..

  Aravindan

  மார்ச் 31, 2013 இல் 5:25 முப

 30. Ariv – I too! Thanks!

  Shafi – Thanks!

  Kulasegaran – நன்றி :)

  Yeasix – இதுல எதோ உள்குத்து இருக்கு போலயே? ;) நன்றி!

  Sendhu – ஆஹா :) நன்றி.

  Aravindan

  மார்ச் 31, 2013 இல் 5:27 முப

 31. Packiaraj – :) :)

  Azhagan – Thank you, my pleasure.

  Aishwarya – >>Great fan followings>> இந்த டகால்ட்டி தானே வேணாங்கிறது ;) Love the way you call her >> Chitthu >> Thank you so much!

  கோபிநாத் – என்ன இருந்தாலும் சென்னைல கான்ஸர்ட்னா அது வேறல? நன்றி!

  மயில் – தன்யவாத்!

  Aravindan

  மார்ச் 31, 2013 இல் 5:32 முப

 32. Uma Chelvan – Thank you, I wanted it to be emotional as I didn’t want hide my excitement and sentiments. Glad it worked.

  RRSLM – நன்றி :) உண்மை, பக்கவாத்தியங்கள் இல்லாதது NJவில் நிம்மதியாக இருந்தது.

  Saravanan – Thank you!

  ரூபன் – நன்றி!

  Ravi – Sorry machan :(

  Aravindan

  மார்ச் 31, 2013 இல் 5:35 முப

 33. Pandian – Thank you!

  Sushima – நன்றிமா :)

  Aravindan

  மார்ச் 31, 2013 இல் 5:36 முப

 34. You have a beautiful write-up on the NJ concert here! In fact, I had read it before I went to Raja’s concert in San Jose which I have written about in my blog (http://petrichordiaries.blogspot.com/). I have taken some liberty to reference your writing. Hope that is OK with you!

  Shankar

  ஏப்ரல் 4, 2013 இல் 6:25 முப

 35. Shankar – Sure, with pleasure. Thanks, in fact!

  Aravindan

  ஏப்ரல் 15, 2013 இல் 5:18 முப

 36. tears are running down after reading your experience just enjoyed the programme visually thanks for the same

  t v suresh

  ஜூன் 9, 2013 இல் 8:37 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers

%d bloggers like this: