சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

என்னமோ ஏதோ

10 மறுமொழிகளுடன்

நூறு சதவீத பாலியஸ்டரால் ஆனது என்னுடைய சாக்லேட் நிற போர்வை. (ஓப்பனிங் வித்தியாசமா இருக்கா?). பார்த்தவுடனே எடுத்துக் கட்டிக்கொள்ள அழைக்கிற நாய்க்குட்டி போல ப்ளாஸ்டிக் கவரில் மெத்தென அமைதியாக அடைந்திருந்ததை பார்த்ததுமே, ‘அது தான் வேணும்’ என்று பக்கத்திலிருந்த டேபிளை பிடித்துக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று வாங்கினேன். இந்தியாவிலிருந்து அப்போதே புத்தம் புதிதாக இறங்கியிருந்ததாலும் ஜனவரி மாதம் ஆதலாலும் குளிரிலும் தூக்க கலக்கத்திலும் இரு வாரங்கள் போர்வையினுள் ஒளிந்திருந்தேன். மூன்றாம் வாரம் தூக்கம் தப்பி விழித்திருந்த ஒரு நள்ளிரவில் சட்டென தோன்றிய இத-வெச்சு-ஒரு-போஸ்ட்-எழுதலாமே ஐடியாவினால் கொஞ்சம் வேகமாக திரும்பிப் படுத்ததில் போர்வை தன்னோடு தானே உரசிக்கொண்டு ஒரு நெருப்புப்பொறி. அலறியடித்துக்கொண்டு எழுந்து மொபைல் வெளிச்சத்தில் போர்வையை ஆராய்ந்து பார்த்து மோப்பம் பிடித்துப் பார்த்தும் ஒன்றும் விளங்காததால், எப்போதும் வேண்டுமானாலும் தீப்பிடிக்கக் கூடிய பொருளாக போர்வை பகல் வரை ஓரமாக கிடந்தது. அடுத்த நாள் அறையிலிருந்த எல்லாரும் மாற்றி மாற்றி, static electricity என்றால் என்ன என்று எப்போதோ பள்ளியில் படித்த ரெண்டு மார்க் கேள்விக்கு பத்தி பத்தியாக விளக்கம் அளித்தார்கள். (நிச்சயமாக நான் விளக்கப் போவதில்லை). கடைசியில் தங்கிய கசடு இது தான் – என் போர்வையில் கரண்ட் இருக்கிறது. (இது ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தலைப்பாக இருக்க நேர்ந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்)

இரண்டு மாதங்கள் நானும் இந்த ஐடியாவுடன் ரொமான்டிஸைஸ் செய்து பார்த்தேன். நான் சிறிய குழந்தை போலவும் போர்வையை கசகசக்கி ‘சிக்கிமுக்கி நெருப்பு பாரு’ என்று விளையாடுவதாகவும்; சில சமயங்களில் அஞ்சலி பாப்பா போலவும் சிரித்தும் பார்த்தாயிற்று. வீட்டுக்கு வருபவர்களில் குழந்தை மனம் கொண்டவர்களையும் புத்தம் புது இந்திய ஏற்றுமதிகளையும் தேர்ந்தேடுத்து, ‘இங்க பாரேன்’ என்று காட்டி மகிழ்ந்தாயிற்று. ’இரவெல்லாம் / அசையாத மின்மினிப்பூச்சி / அணைக்கப்படாத லேப்டாப்’ என்று யோசித்திருந்த ஹைக்கூவை ரத்து செய்துவிட்டு அதை முழு நீள போர்வைக் கவிதையாக விரிக்கும் எண்ணம் உடனடியாக அமலுக்கு வந்தது. பலப்பல உணர்ச்சிகரமான கதைச் சந்தர்ப்பங்களில் கதை மாந்தர்கள் இதைப் பற்றி பேசினால் எப்படியிருக்கும் என்று பேச வைத்து பாதியில் வெடுக்கென டயலாக் பேப்பரை பிடுங்கியுமாயிற்று. சரியாக மூன்றாவது மாதம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. ரொமான்டிசிஸம் முடிந்தது ரியாலிசம் வந்தது.

இதனால் ஷாக் அடிக்குமோ? தீப்பிடிக்குமா? இதை தவிர்க்க வழியில்லையா? தோலில் ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படுமா என்பன போன்ற நிபுணருடன்-பேசுங்கள்-பொதிகை-தொலைகாட்சிக்-கேள்விகள் கூகிளில் ஆங்கிலத்தில் தேடப்பட்டன. (“polyster blanket static electricity”, “bizarre static electricity incidents”, “static electricity kills software engineer” ஆகிய தேடுபொறிகள் பயன்படுத்தப்பட்டன). கூகிள் பெரிதாக பயப்படத் தேவையில்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், இது க்யூட்டான விஷயம் என்று பந்தயம் கட்டியவர்களின் பாஸ்போர்ட் புகைபடங்களை காட்டியது. உயிருக்கு ஏதும் ஆபத்தில்லாத விஷயமில்லாததால், மிஸ்டர்.சோம்பேறித்தனம் விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். [கவிதை மொழி அலர்ட்] கோடைக்காலம் வந்ததும் மினிமினிப்பூச்சிகளும் மெல்ல என் போர்வையிலிருந்து தொலைதூரம் பறந்து போயின. [அலர்ட் ஓவர்]. நவம்பர்  வந்ததிலிருந்து [அலர்ட்] பனிக்காலப் பூச்சிகள் போல மீண்டும் போர்வையெங்கும் பொறிகள் [/அலர்ட்]. தண்ணீர் குடிக்க எழுந்திருக்கையில், படுக்கையை சரிசெய்கையில், சாமி சத்தியமாக யாருமே எதுவுமே அசையாத சமயத்தில் என சும்மா சும்மா மின்மினிப்பூச்சிகள் வந்துகொண்டிருந்தால் எப்படி? என்பதே கடைசிக் கேள்வி. என் மனதையும் போர்வையையும் மாற்றக்கூடிய அனுபவங்கள் அதிர்ச்சி சம்பவங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லவும்.

[போர்வை / மின்மினிப்பூச்சிகள் கான்ஸெப்ட்டை புதுக்கவிதையில் உபயோகிக்க விரும்புபவர்கள் முறையாக இப்பதிவை லிங்க் செய்யவும்]

[..]

இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களில் மொத்தம் இரண்டே இரண்டு தமிழும் இரண்டு ஹிந்தியும் மட்டுமே பார்த்திருந்தாலும், தைரியமாக போர்வையிலிருந்து வெளியே வந்து ‘2011ன் சிறந்த காதல் ஜோடி’ ராமரும் சீதாவும் தான் என்று பந்தயமே கட்டுவேன். [ஸ்ரீராமராஜ்யம் – தெலுங்கு – பாலகிருஷ்ணா, நயன்தாரா]. சீதையும் ராமரும் வனவாசம் முடிந்து திரும்பி அயோத்திக்கு வருவதுடன் துவங்குகிற திரைப்படம் சீதையை மீண்டும் சந்தேகித்து காட்டுக்கு அனுப்புவது, லவ-குசா பிறப்பு, அப்பாவுடன் மகன்கள் போர் தொடுப்பு என்ற பாதையில் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுடனும் க்ராஃபிக்ஸ் மான்கள் மரங்களுடனும் பயணிக்கிறது. இன்னும் ‘ராவணன்’ தந்த பிரமிப்பே தீராத நிலையில், ராமரை என்னவென்று எதிர்பார்த்து சென்றிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ராமர் மிகுந்த காதல் கொண்ட கணவனாக, சாதரணனாக வந்தது சுவாரசியமாக இருந்தது. துளியும் பக்தி இல்லாமல் வெறும் மனிதர்களின் கதையாக இருந்தது ஓரளவிற்கு படத்தை காப்பாற்றியது. எல்லாவற்றுக்கும் மேலாக, சீதையும் ராமரும் ஒன்றாக நான்கைந்து காட்சிகளில் தோற்றமளித்தாலும், இரண்டு காட்சிகளில் காதல் பொங்கி வழிந்தது.

ஊரார் சீதையின் கற்பை சந்தேகித்துப் பேசியதை அறிந்து அதிர்கிற ராமர், (பாலகிருஷ்ணாவின் ரியாக்‌ஷன் டாப் க்ளாஸ்!), ராஜ்ஜியத்தை துறந்து விட்டு சீதையுடன் காட்டுக்கே போவதாக கதறியும் தம்பிகள் கிரீடத்தை ஏற்க மறுக்க, தன்னுடைய கர்மா இதுதானென சமாதானமடைந்து சீதையை அடுத்த நாள் அதிகாலை ஏதும் சொல்லாமல் அழைத்துச் சென்று காட்டில் விட்டுவிட லட்சுமணனை பணிக்கிறார். கட்டளை பிறப்பித்துவிட்டு ஊஞ்சலில் பச்சைப் பட்டாடையில் சித்திரம் போல தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்     சீதையின் (நயன்தாரா கொள்ளை அழகு! யாய்!) காலருகே கன்னம் சாய்த்து கண்ணீர் விட்டு விடைகொடுக்கும் காட்சி ஏனோ பளிச்சென மனம் தொட்டது. ராமர் இத்தனை காதலுக்கு உருகுவாரா என்று சந்தேகம் இருந்தது எனக்குப் புரிந்தது, புரிந்தவுடன் ப்ருத்விராஜ் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை கழற்றி கிளம்ப சொல்லிவிட்டு அந்த இடத்தில் பாலகிருஷ்ணாவை கிரீடத்துடன் அமரச் செய்தேன். இரண்டாவது காட்சி – காட்டில் தனியே வாழ்ந்துகொண்டிருக்கும் சீதை ராமர் நடத்தவிருக்கும் அஸ்வமேத யாகம் குறித்து கேள்விப்பட்டு தம்பதி சமேதராக மட்டுமே யாகம் நடத்தவியலும் என்பதால் ராமர் மறுமணம் புரிந்திருக்கக்கூடும் என்று வருந்துகிறார். வருத்தத்தை நீக்க விசுவாமித்திரர் சீதையை மனதை அயோத்திக்கு அனுப்பி வைக்கிறார். ராமரின் அறைக்குள் செல்லும் சீதை அங்கே தன்னுடைய தங்க விக்கிரஹம் இருப்பதைக் கொண்டு கொள்ளை இன்பமும் துன்பமும் ஒரு சேர அடைந்து அதை வைத்தே யாகம் நடக்கவிருப்பதை அறிந்து நிம்மதி அடைவது காட்சி. அக்காட்சியில் ராமர் வந்து சிலையிடம் பேசுவதும் சீதையின் வாசம் அறிந்து துடிப்பதும் – அட, கண்களில் நீலு சார்!. நயன்தாராவின் கடைசி படம் என்று பரவலாக பேச்சு – வேறு எந்த ஸ்டார் நடிகை இப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது அவர்கள் அவர்களையே கேலி செய்துகொண்டது போலிருந்திருக்கும் என்பதையே நாம் இவருக்கு பாராட்டாக கொடுக்கலாம். ஒரு நந்தி அவார்டு ப்ராப்பிரஸ்த்து!

தியேட்டரை விட்டு வந்தபிறகும் இவ்விரண்டு காட்சிகளும் மனதில் வட்டமிட்டுக்கொண்டே இருக்க, இரண்டு விஷயங்கள் தெளிவாயின – ஒன்று இக்காட்சிகளில் பாலகிருஷ்ணா, நயனின் அழகான நடிப்பையும் மீறி ராஜாவின் பிண்ணனி இசை ஒரு சொட்டு தேன் போல இனிமை ஏற்றியிருக்கிறது. (இரண்டாவது காட்சியின் இசை இங்கே); இன்னொறு – ராஜாவை விட வேறு யாருக்கும் இப்படி #kolaveri விசிறியாக இருக்க என்னால் இயலாது.

மனைவியின் மரணத்திற்குப் பிறகு மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? எழுபதை தொடப் போகிறவரை யார் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்? சாப்பாடு, தூக்கம் என யார் உடனிருந்து கவனிக்கிறார்கள்? மனதுக்கு நெருக்கமான கலைஞர்களின் சொந்த வாழ்க்கை துயரங்கள் எப்படி நம்மை அலைகழிக்கக் கூடும் என்பது விசித்திரம். மனம் வருந்திக்கொண்டிருந்த சமயத்தில், பக்கத்து தியேட்டரில் ஸ்ரீராமராஜ்யம் படம் என்றதும் ராஜாவுக்காக டிக்கெட் வாங்கிச் சென்று அமர்ந்து விட்டேன். இந்த இரண்டு காட்சிகளும் மனிதருக்கு இன்னும் ஒரு யுகத்திற்கு காதல் காட்சிகளுக்கு இசையமைப்பதற்கான longing அவரது மனதிலும் இசையிலும் இருப்பதையே காட்டின. டிசம்பரில் நேரில் சந்திக்க வருவதாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.

[..]

காக்கை எத்தனை முயன்றாலும் என்னவோ ஆக முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆனால் Crow-pheasant என்றொரு குயிலினமாக ஆக வாய்ப்பிருக்கிறது, சங்கக் காலப் போர்க்களப் பாடலை பொறுத்தவரையில்.

தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்

குருதி படிந்துண்ட காகம் – உருவிழந்து

குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்

தப்பியா ரட்ட களத்து

போர்களத்தில் கிடந்த பிணங்களில் அம்புகள் பட்டுத் திறந்த இடங்களிலெல்லாம் இருந்த இரத்தத்தை வாய் வைத்த குடித்த காகங்கள், தங்கள் அலகில் ரத்தமேறி மீன்கொத்திப் பறவைகள் போலவும், உடலில் ரத்தம் படிந்து குக்கு – crow pheasant – போல உருமாறியதாக களவழி நாற்பதில் சொல்லப்படுகிறது. போரைக் காட்டிலும் உக்கிரமாக இருக்கும் இந்த வர்ணனை உலக சினிமாக்களில் பார்த்த அப்பட்டமான வன்முறைக் காட்சிகளைக் கூட வீழ்த்திவிடும்.

பெரும்பாலும் யானைகள், அவற்றின் மீது ரத்தம், செம்மலை போன்ற யானைகளின் தோற்றம், ரத்த ஆறு என்பன போன்ற உவமைகள் நிரம்பியிருக்கிற நாற்பது பாடல்களில் ஈர்த்த இன்னொறு வர்ணனை – போரில் இறந்தவர்கள் குடல்களை தின்ற பருத்த நரி சண்டையில் சாய்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடையின் ஓரமாக தூங்கிற காட்சி, முழு நிலவில் ஓரமாகத் தோன்றும் முயல் களங்கம் போலிருந்ததாம்! Terrific!

[..]

ஒரு தமிழ் சினிமா க்விஸ். முதல் படங்கள், இயக்குனர்-நடிகர்கள், துணை நடிகர்கள் என்ற பொது அம்சத்தை வைத்து உருவாக்கியது.

நடிகை A இயக்குனர்-நடிகர் Bயின் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் Cயும் Dயும் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார்கள்.

B நடிகராக முதன்முதலில் ஒரு காட்சியில் தலைகாட்டியது நடிகர் E ஹீரோவாக நடித்த படத்தில். பின்னாளில், E நடித்த படமொன்றை B எழுதினார்.

Cயும் Eயும் ஜோடியாக ஒரே ஒரு படம் மட்டுமே நடித்தார்கள். A அப்படத்தில் தன்னுடைய முதல் படம் போன்றே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை Fயும் Eயும் இணைந்து நடித்த மிகப்பிரபலமான படத்தை இயக்கியவர் G. இதில் D தன் முதல் படம் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பலப்பல அருமையான படங்களை இயக்கிய G முதன் முதலில் Eயை நாயகனாக வைத்து எடுத்த படத்தில் ஒரு வேடத்தில் தோன்றினார்.

ஏராளாமான வருடங்களுக்குப் பிறகு, E எழுதி நடித்த படமொன்றில் Dயும் Fம் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார்கள்.

பின்னர், D இயக்கிய படத்தில் ஹீரோவாக நடித்து இந்த காம்ப்ளெக்ஸான நடிகர்-இயக்குனர் சைக்கிளை முடித்து வைக்கிறார் E.

Aயிலிருந்து F வரை அடையாளம் காண்க. ஒரு க்ளு – சம்பந்தப்பட்ட புள்ளி ஒருவர் தெலுங்கில் தான் பிரபலம். ஆனால் இங்கே குறிப்பிடப்பட்ட படங்கள் தமிழிலும் உண்டு.

[..]

நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற பதிவர் மாற்றத்தை விரும்புகிறார் என்று எது உங்களுக்கு சுட்டிக்காட்டிகிறது?

அ) இதுவரை ‘தேநீரில் சினேகிதம்’ என்ற தலைப்பில் அரைத்துக்கொண்டிருந்ததை ‘என்னமோ ஏதோ’வாக அரைக்கிறார்.

ஆ) ரொம்ப நாட்களாக பதிவெழுதாதவர் இப்போது திடீரென பதிவெழுத முயல்கிறார்

இ) பத்திகளை கொண்டு ***** பிரிப்பவர் விசித்திரமாக ‘[**]’ கொண்டு பிரித்திரிக்கிறார்.

சரியான விடை அடுத்த என்னமோ ஏதோவில்.

Written by aravind

December 5, 2011 இல் 4:11 மு.பகல்

தொடர் இல் பதிவிடப்பட்டது

10 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Answers for Cine Quiz:

    A. Kalpana (Chinna Veedu did again same kinda role in Sathi Leelavathi)
    B. Bhagyaraj
    C. Kovai Sarala
    D. Chakravarthi aka Chakri Toleti (Kalpana’s Brother in Chinna Veedu, Boy who takes photos of Kamal in Slangai Oli, Kamal’s friend in Dashavataram who gives him lift in his car when Fletcher chases him, Director of Unnaipol Oruvan)
    E. Kamalhassan
    F. Jayapradha
    G. K.Vishwanath

    Kaarthik Arul

    December 5, 2011 இல் 7:02 மு.பகல்

    • Excellent!

      Kaarthik – இந்த தளத்தில் நீங்கள் பதிக்கிற ஐம்பதாவது மறுமொழி இது. ஸ்பெஷல் நன்றிகள்!

      aravind

      December 5, 2011 இல் 12:15 பிற்பகல்

  2. Tea (thEniir) konjam light-a iruntha, ennamO ethO.. :D

    enjoyed the whole post.. esp the blanket part.. vizhunthu vizhunthu sirichu stomach pain … :)

    //என் போர்வையில் கரண்ட் இருக்கிறது. (இது ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தலைப்பாக இருக்க நேர்ந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்)
    // [கவிதை மொழி அலர்ட்]
    abbaa… mudiyala saami…

    Rama Rajyam… music repeat playlistla iruku inga.. ennada ithu pathi Aravind ethum innum sollama irukare ninaichen.. there it is !!!

    //ஆ) ரொம்ப நாட்களாக பதிவெழுதாதவர் இப்போது திடீரென பதிவெழுத முயல்கிறார்
    romba romba pidichcha maaRRAm ithu thaan.. !!!!!!!!!!!!!!!!

    BTW Karthick is unbelievable… :) ungaluku Etha fan thaan !!

    Krithiha Prabu

    December 5, 2011 இல் 11:39 மு.பகல்

    • Krithiha – :) :) நன்றி நன்றி. ராம ராஜ்யம் பாடல் ஒவ்வொன்றும் ரத்தினங்கள். தலைவர் பின்னியிருக்கிறார்.

      கார்த்திக் சினிமாவுக்கு பயங்கர ஃபேன் என்று நினைக்கிறேன். எந்த க்விஸ் வைத்தாலும் பின்னுகிறார்!

      aravind

      December 5, 2011 இல் 12:16 பிற்பகல்

      • Aravind, today only I joined office after 1 week’s leave taken for Brother’s wedding. So couldn’t read the post completely due to lot of work :-( Have to read it peacefully in the night. But I couldn’t resist cracking the Quiz.

        I’m a big fan for Movies, Music and for ur writing too :-)

        Kaarthik Arul

        December 5, 2011 இல் 12:22 பிற்பகல்

  3. //மனைவியின் மரணத்திற்குப் பிறகு மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?.. மனதுக்கு நெருக்கமான கலைஞர்களின் சொந்த வாழ்க்கை துயரங்கள் எப்படி நம்மை அலைகழிக்கக் கூடும் என்பது விசித்திரம். //

    Part of life ,Passion and Everything are two parallel roads என்று தோழி ஒருத்திக்குவேறு விஷயமாக,இப்போதுதான் பதிலளிக்க இருந்தேன். :)
    அதே நாற்பதில்…
    -மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா
    ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்
    மேவாரை அட்ட களத்து-

    இந்த மாடு-காளான் அந்த போர்வை-மின்மினிப்பூச்சிகள், ஏதோ ஒரு Static Electricity பாஸ் ஆகல?! :P :D

    //பலப்பல அருமையான படங்களை இயக்கிய G//
    Missing those நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்,Felt in his movies,ths days!! :-|

    Aishwarya Govindarajan

    December 5, 2011 இல் 6:28 பிற்பகல்

    • >>part of life, part of passion>> மிக உண்மை. அவரின் சமீபத்திய வீடியோவை பார்க்கும் போது உண்மை என்று தான் தோன்றுகிறது.

      >>இந்த மாடு-காளான் அந்த போர்வை-மின்மினிப்பூச்சிகள், ஏதோ ஒரு Static Electricity பாஸ் ஆகல?>> LOL!

      And, we are not going get back those movies and music.

      aravind

      December 6, 2011 இல் 2:51 மு.பகல்

  4. Kaarthik – உங்களின் கடமையுணர்வு மெச்சத்தக்கது ;) நன்றி. திருமணக்கூட்டத்தில் வந்த பெண்களை அலசியாயிற்றா? ;)

    aravind

    December 6, 2011 இல் 2:49 மு.பகல்

  5. //static electricity kills software engineer//, //இது ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தலைப்பாக இருக்க நேர்ந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்.. – ROFL :-D

    ஸ்ரீ ராமராஜ்யம் படம் வருவதற்கு முன்பே நண்பர் தமிழ்ப் பறவையும் நானும் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம். படம் வெளிவந்தபோது தலைவர் ஜெர்மனி சென்று விட்டதால் இந்த வார இறுதி பார்க்கலாம் என்றிருக்கிறோம்.

    //சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.// – எப்போது இங்கே விஜயம்? CIFF காத்துக் கொண்டிருக்கிறது. பாஸுக்கு முன்பதிவு செய்துவிட்டேன். இம்முறை போக முடியுமா என்று தெரியவில்லை

    வரவேற்கத்தக்க மாற்றங்கள்! Esp //ரொம்ப நாட்களாக பதிவெழுதாதவர் இப்போது திடீரென பதிவெழுத முயல்கிறார்//. இன்னும் ஒரே ஒரு மாற்றம் மட்டும் தேவை – Proof Reading :-)

    //இன்னொறு//, //Aயிலிருந்து F வரை அடையாளம் காண்க// என்று கேட்டுவிட்டு G க்கான க்ளூவைக் கொடுத்திருக்கிறீர்கள் ;-)

    Half century அடிசிட்டேனா?! சீக்கிரம் செஞ்சுரி அடிக்க நீங்கதான் இப்படி அடிக்கடி பதிவெழுதணும் :-)

    சகோதரன் திருமணத்தன்று அன்று பெய்த கனமழையில் பலரும் நனைந்திருந்ததால் நான் தனியாக அலசவில்லை ;-)

    Kaarthik Arul

    December 8, 2011 இல் 4:13 பிற்பகல்

  6. Kaarthik – சென்னை அனேகமாக ஜூனில் விஸிட். Proof reading நடப்பது போல தெரியவில்லை, ஆகையால் தொடர்ச்சியான தாக்குதலிலிருந்து தப்பிக்க நீங்கள் Bullet Proof reading செய்வது நல்லது!

    aravind

    பெப்ரவரி 16, 2012 இல் 2:22 மு.பகல்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.