சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

புத்தனுடன் சில மௌனங்கள்

மறுமொழி இடுக »

Copy (2) of IMG_0972நான் உயரத்தில் நின்றிருந்தேன். அது ஒரு மலைக்கோயில். இரவின் மென்குளிரை விலையுயர்ந்த சலவைக் கற்கள் உள்வாங்கி, என் உள்ளங்கால் வழியே சில்லென ஏற்றிக்கொண்டிருந்தது. மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கோயிலாலதலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் கூட்டத்தில் கலந்திருந்தார்கள். நான் மட்டும் இங்கே மலையின் ஓர் முக்கில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஹைதராபாத் நகரம் கீழே ரத்தினங்கள் பதித்த கம்பளம் போல விரிந்திருந்தது. நெக்லஸ் சாலையின் இரு புறமும் விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தன. விரைவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்களின் ஒளி ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து கலைந்து கரைந்தது. ஒளி கரைவதையே பார்த்துகொண்டிருந்த நான், மெல்ல திரும்பி நடுவில் பிரம்மாண்டமாக வீற்றிருந்த புத்தன் சிலையை பார்த்தேன். புத்தனின் முகம் தெரியவில்லை. இங்கிருந்து சிலையின் உயரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இருந்தும், ஒரு நொடியில் புத்தனின் சாந்தமான புன்னகையை உணரத் தொடங்கினேன். மனதையும் முகத்தையும் அந்தப் புன்னகை அப்படியே தொற்றிக்கொண்டது. வாகனங்களின் இரைச்சல், காற்றின் ஒலி, கோயிலில் மக்கள் தனித்தனியாக ஏற்படுத்தும் ஓசைகள் எல்லாம் சேர்ந்து உருவான பேரிரைச்சல் என எல்லா இடையூறுகளையும் மீறி, கிணற்றில் ஆழத்தில் விழுந்து கிடக்கும் கல்லை பார்ப்பது போல, புத்தனின் புன்னகையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

நண்பர்கள் திரும்பி வந்தார்கள். வழக்கம் போல ஜோ இந்த இடத்தின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தேன். நூனூறு டன்னுக்கும் மேலான் எடை கொண்ட சிலை. புத்தனின் வடிவம் என் நெஞ்சில் இன்னும் பெரிதாக விரிகிறது. ஏராளமான கற்கள், ஏராளமான வேலையாட்கள். மிகப்பிரம்மாண்டமாக தயாராகி, ஒரு படகில் ஏற்றப்பட்டு, ஒரு பொறியியல் வல்லுனர் மற்றும் நான்கு உதவியாளர்களின் துணையுடன், சிலை பீடத்தை நோக்கி பயணிக்கிறது. புத்தனின் சிலை பீடத்தில் ஏற்றப்படும் பொழுதில், அவரின் புன்னகை காற்றில் வெட்டும் ஆரத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். படகு பாதி வழியில் கவிழ்ந்து விட்டதாக ஜோ சொல்கிறான். கற்பனைகளை நிறுத்திவிட்டு, அவன் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பாரம் தாங்காமல் படகு கவிழ்கிறது. அது மழைக்காலமா என்று ஜோ சொல்லவில்லை. இருந்தும் நான் என் கற்பனையில் மழையை சேர்த்துக்கொள்கிறேன். படகில் சென்ற ஐந்து பேரும் காணாமல் போகிறார்கள். இரண்டு நாட்கள் தேடும் பணி தொடர்கிறது. பின் ஓர் இடத்தில் சிலையை கண்டுபிடிக்கிறார்கள். ஐந்து பேரும் சிலைக்கடியில் சிக்கி இறந்து போயிருக்கிறார்கள்.

அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து புத்தனின் புன்னகைக்கு அடியில் அவர்கள் உயிரற்று கிடக்கும் காட்சி நெஞ்சில் ஓடியபடி இருந்தது.

*********************

மூன்று வருடங்களுக்கு முன், அம்மாவுக்கு பணி மாற்றத்துடன் இட மாற்றமும் விதிக்கப்பட்டது. தலைமை ஆசிரியராக அம்மா ஆக, எங்கள் எல்லோருக்குமே விருப்பம் தான். ஆனால் இடமாற்றத்தில் எங்களுக்கு ஒப்புதலில்லை. முன் பின் தெரியாத தென் தமிழக டவுன் அது. தற்போது குடியிருந்த ஊர், அம்மா பிறந்த இடம். நிறைய நண்பர்கள், உறவினர்கள். அக்காக்களும் நானும் சென்னையில் தங்கியிருந்ததால், அம்மாவை இந்த ஊரை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றோம். இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் ஒரு நாள் அவகாசமே இருந்த சமயத்தில், அம்மா எங்களிடம் சொல்லாமல் போய் சேர்ந்து விட்டார். ஏறத்தாழ அடுத்த ஒரு வருடத்திற்கு நாங்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வசித்துக்கொண்டிருந்தோம். வீடு தனியே வசித்துக்கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை நானும் அம்மாவும் வீட்டுக்கு வருவோம். வீடு திறந்து, அறைகள் ஜன்னல்கள் திறந்து, தூசு தட்டி, வெறுமையை எதிரொலித்துக்கொண்டிருந்த வீட்டின் காற்று மண்டலத்தின் எங்கள் குரலை கரைத்தோம். தண்ணீரின் சுவை மாறிப்போனது போல இருந்தது. எவ்வளவு சுத்தப்படுத்தியும் துடைத்தும், வீடு அந்நியமாகவே இருந்தது. விடுதியிலிருந்து மாதம் இரண்டு முறை வீடு திரும்பும் போது அம்மாவிடம் என்னென்ன பேசுவேனோ, எப்படியெல்லாம் கவனிப்பேனோ, அப்படியே வீட்டையும் கவனிக்கத் தொடங்கினேன். அம்மாவுடனும் வீட்டுடனும் நெருங்கிய காலம் அது.

நான் வீட்டுக்குள்ளேயே தாழப் பறக்கும் பறவை. என் வாழ்க்கையின் பாதிக்கும் மேலான பொழுதுகளில் அது தன்னுள் என்னைக் கொண்டிருந்தது. வீட்டை விட்டு நான் வெளியே இருந்த பொழுதுகளில் நான் வீட்டை என்னுள் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்த நாள் முதல், இது வரை நான் இரண்டு வீடுகளில் இருந்திருக்கிறேன். இரண்டும் ஒன்று போலிருக்கும். மூன்று ரயில் பெட்டிகளை இணைத்தது போல. ஒரு பெட்டியின் வாசல் தான் வீட்டு வாயில். முதல் வீட்டின் நினைவுகள் அத்தனை இல்லை. இரண்டாம் வீட்டில் தான் நான் பெரும்பாலும் வளர்ந்தேன். ஒரு மொட்டை மாடியின் பாதியை அந்த கான்க்ரீட் ரயில் பெட்டிகள் அடைத்திருந்தன. இன்னொரு பாதி திறந்த மாடியாகவே கிடந்தது. ஒரு கால் எடுத்து வைத்தால் வீடோ, வானமோ. என் படுக்கைக்கு நேராக இருக்கும் ஜன்னல் வழியே மதியப்பொழுதுகளில் வரும் வெயிலும், சில மாதங்களில் இரவு தோறும் வரும் நிலவும் தான் வீடு எனக்கு நிர்ணயித்த வானிலை. சாய்ந்து நின்று பேச ஏதுவாக தொலைபேசி ஒரு முக்கில் இருக்கும். எறும்பு ஊரும் வழிகள் மனப்பாடம். உள்ளறையில் குறுக்கே என்னுயரத்திற்கு கட்டபட்ட கொடிக்கயிறும் அனிச்சையாக குனியும் என் கழுத்தும் எப்போதிலிருந்து சினேகம் கொண்டன என நினைவில்லை. என் மேஜை, படுக்கையறைக்கு வீடு அமைத்து தந்திருந்த இளமிருட்டு, ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருக்கும் பின் வீட்டு துணிகள் துவைக்கப்படும் சப்தம், கோடைக்காலத்தில் நான் மட்டும் தனியே கழித்த பொழுதுகள் என நினைவுகள் ஏராளம். என்னுயரத்தில் நின்று, முகமளவே இருக்கும் அலமாரியினுள் பதித்தது போல நிற்கும் கண்ணாடியில் கடக்கும் போதெல்லாம் எப்போதும் என் முகம் தெரியும். அந்தக் காட்சியிலிருந்து என் முகத்தை எப்படி பிரித்தறிய முடியாதோ, அப்படியே அந்த வீட்டையும் என்னிடமிருந்து பிரித்தறிய முடியாது.

விடுதியில் சேர்ந்த முதல் வாரம் என்னவோ ஆகி விட்டது. யாராவது தலை வலிக்கிறதோ என்று கேட்டால், தலை வலிப்பது போல இருந்தது. வயிற்று வலியா என்றால் வயிறு வலித்தது. உடம்புக்கு எல்லாம் வந்து விட்டது போல இருக்கும். ஏதுமில்லாதது போலவும் இருக்கும். நான்கு நாட்கள் கழிந்ததும், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வண்டி ஏறிவிட்டேன். நான்கு மணி நேரம் வீட்டை நோக்கி பயணிக்கையில் தலை வலி, வயிற்று வலி, உடல் வலி என ஒவ்வொன்றாக உடலிலிருந்து கழன்று விழுந்து கொண்டே இருந்தது. யாருமில்லாத வீட்டைத் திறந்த அடைந்த நேரம், உடமும் மனமும் ஜிவ்வென்று இருந்தது. வீட்டில் யாருமில்லாதது கூட குறையாகத் தெரியவில்லை. நான் எப்போது சரிந்து கிடப்பது போல, வரவேற்பறையில் சரிந்து கிடந்த பின்னர் தான் எல்லாம் சரியானது.

அன்று பகலில் வீட்டைத் தேடி புறப்பட்ட நானும், ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறிய புத்தனும் சந்திக்கவே முடியாது.

*********************

IMG_0962
மிகப்பெரும் ஆசையொன்றை
துறப்பதாக
முடிவெடுத்த பொழுது
அமர்ந்திருந்த
இந்த பூங்கா இருக்கையை
தந்த கல்
புத்தனின் சிலையாக
வடிக்கபட காத்திருந்து
வழி மாறியிருக்கலாம்.

என்னளவிலான
சிறிய அறிதலையும் புரிதலையும்
உணர்ந்த பொழுது
சுற்றி எதுவுமேயில்லை
தலைக்கு மேல் பறந்த
பறவைக்கு
புத்தனின் பெயரை வைத்தேன்

கூட்டமில்லாத ரயில் நிறுத்தம்
தெருக்கள் ரகசியமாக சந்திக்குமிடம்
நூலகம்
மொட்டைமாடிகள்
இரவுப் பேருந்தின் கடைசி இருக்கை
எதுவேனும் இருக்கலாம்
யாருக்காயினும்
புத்தனின் அடையாளமாக

இந்த பெருநகரத்தில்
அத்தனை மரங்கள் இல்லை.

*********************

 

இருபத்தி நான்கு மணி நேரத்தை சரி பாதியாக உடைத்து பகலைத் துவக்கும் வைகறையில், யாரேனும் வாழ்க்கையின் மறு பாதியை ரகசியமாகத் தேடிப் போகலாம். ‘வீட்டை விட்டு ஓடிப் போகுதல்’. காதலைத் தேடியா? காமத்தை தேடியா? குடும்பத்தை துறந்தா? அவர்களில் யாரேனும் ஞானத்தை அடைந்திருக்கலாம். புத்தனை யாரும் ‘ஊரை விட்டு ஓடிப் போனவன்’ என்று அழைத்து நான் கேட்டதில்லை. ஒரு வேளை புத்தன் ஞானத்தை அடையாமல் போயிருந்தால்? அடைந்த ஞானத்தை யாருக்கும் சொல்லாமல் போயிருந்தால்? சொல்லி எத்தனை பேர் அந்த ஞானத்தை உணர்ந்திருக்கிறோம்? ஞானத்தை உணராதவர்களுக்கு புத்தன் வெறும் வீட்டை விட்டு ஓடிப் போனவன் தானா? யசோதாவின் இழப்பு, புத்தனின் ஞானத்தின் பெருமையை குறைத்ததுண்டா?

காணாமல் போனவர்கள், எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? தங்கள் போதி மரத்தையா?

*********************

 

புத்தனை பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை. சிறிய வயதில் படித்த சில கதைகள் தவிர. புத்தனின் புரிதல்களை அறிய வேண்டும் என்ற ஆவலை, அந்த எளிமையான புன்னகை மிகச்சிறப்பாக ஏற்படுத்திவிடுகிறது. சில கணங்களில், புத்தனின் அத்தனை புரிதல்களின் அதிர்வையும் ஏற்படுத்த அந்தப் புன்னகையே போதும் என்றே தோன்றுகிறது. மிகத்துல்லியமான தூய இதயத்தில் இருந்து அந்த புன்னகை வர முடியுமென்றால், வழி வழியாக, அதிர்வை தரக்கூடிய புன்னகையை கல்லில் கடத்த ஏதுவாக, முதன் முதலில் புத்தனின் புன்னகையை கல்லில் வடித்தவனின் மனம் எப்படி இருந்திருக்கும்? கல்லின் எந்த துகளை நீக்கி, எதை செதுக்கி, எதைக் கொண்டு, அப்புன்னகையை கொண்டு வந்திருப்பான்? அந்தப் புன்னகையை சிறப்பாக கொண்டு வந்த கணத்தில், புத்தன் தன் ஞானம் மூலம் பெற்ற அத்தனையையும் கடந்த ஒரு நிலையை நிச்சயம் ஒரு நொடி அவன் கண்டிருப்பான்.

*********************

எழுத்தும் புகைப்படங்களும்அரவிந்தன் :)

Written by aravind

நவம்பர் 10, 2009 இல் 3:20 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

மறுமொழி இடுக