சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for நவம்பர் 2009

தேநீரில் சினேகிதம்

ஒரு மறுமொழியுடன்

Sip #1 – எங்கள் அபார்ட்மெண்ட்டுக்கு ஏன் இத்தனை வருடங்களாக பெயர் வைக்காமல் இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக் தெரியவில்லை. அபார்ட்மெண்ட் செகரட்ரி முன்னோர் ஒருவர், மூன்று பெயர்களை யோசித்து விட்டு, அதை பொறுப்பாக எல்லோரிடமும் சொல்லி விட்டு, பெயர் வைக்காமல் விட்டு விட்டார். வழி வழியாக வந்த செகரட்ரிகள் மூன்று பெயர்களில் தங்களுக்குப் பிடித்ததை வைத்து அழைக்க, ஒரே குழப்பம். மக்கள் குழப்பத்தை தீர்க்க, தங்களுக்குத் தெரிந்த அடையாளங்களை சொல்ல ஆரம்பிக்க, மேலும் மேலும் குழப்பம். ஸோ-ஸோ அபார்ட்மெண்ட்டுக்கு டைகனலாக இருக்கும், முன்னால் இஸ்திரி வண்டி இருக்கும், பெரிய சிண்டெக்ஸ் டாங்க் இருக்கும், பக்கத்து வீட்டு மாடியில் மூணு டாட்டா ஸ்கை இருக்கும் என்றெல்லாம் அடையாளம் சொல்லிக்கொண்டிருந்தோம். (மத ஹார்மனியை விரும்பும் ஒரு அபார்ட்மெண்ட் வாசி, மசூதி இருக்க லெஃப்ட் எடுத்து-தெருப்பிள்ளையார் பார்க்கும் ரைட்டில்-திருச்சபை தாண்டி இருக்கிற அபார்ட்மெண்ட் என்று சொல்லிக்கொண்டு திரிவதாக கேள்வி) அத்தனை குழப்பங்களுக்கும் தீர்வு வந்து விட்டது. ஒரு சனிக்கிழமை மதியம் அபார்ட்மெண்ட்டுக்கு வெள்ளை அடிப்பது குறித்த மீட்டிங் போட, அம்மா என்னை அனுப்பி வைக்க, வெள்ளை தானே அடிக்கப் போறீங்க என்று நானும் அஸால்ட்டாக கவிதை கதை யோசித்துக்கொண்டு முறுக்கு சாப்பிட்டு விட்டு வந்தேன். வெள்ளை அடிக்கிற பணி ஜோராக தொடங்கியது. ஒரு வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய போது, இருட்டுல இது வெள்ளை மாதிரி தெரியலியே என்று தோன்றிய போதே அலர்ட்டாகி இருக்க வேண்டும். அடுத்த நாள் காலை வெளியே வருகிறேன்… அதிர்ச்சி.. இந்த தேவர் மகன் படத்தில் சிவாஜி செத்ததும் ‘வானம் தொட்டு போனான்’ பாட்டின் தொடக்கத்தில் ஒரு வெஸ்டர்ன் கொயர் ‘ஆஒஆஒஆஒ’ என்று பாடுமே… அது கேட்கிறது.. அபார்ட்மெண்ட் அப்படியே பிங்க் கலரில் ஜொலிக்கிறது. இது கனவா இல்லை நிஜமா என்று சுவரை சுரண்டியே பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம் சிம்பிளாக ‘அந்த தெருவிலேயே பிங்க் கலர்ல ஒரு அபார்ட்மெண்ட் தான் சார் இருக்கும். அங்க வாங்க’ என்று கடுப்பாக ஃபோனை கட் செய்து விடுகிறேன்.

#2 வித்தியாசமான பயம் : இந்த பச்சை-மஞ்சள்-நீலம்-சிகப்பு கலரில் வெட்கமே இல்லாமல் மாறி மாறி மூன்று மதக் கடவுளர்களின் தலையிலும் எரியுமே, இந்த பஸ்ஸில் எல்லாம் கண்ணாடி சட்டம் போட்டு இருக்குமே, அதைப் பார்க்கும் போதெல்லாம், ‘இந்தியா எவ்வளவு நல்ல நாடு’ என்றெல்லாம் தேவையில்லாமல் ஃபீல் ஆகும். போன வாரம் அது ரிப்பேராகி வெறும் ஒரு கடவுளின் தலைக்கு மேலே மட்டும் விட்டு விட்டு எரிய, யாராச்சும் பாத்தா பிரச்சினை வருமோ என்ற பயம் ஏற்பட்டது. வித்தியாசமான யோசனை: மொபைல் தொலைந்தால் ஒரு மிஸ்டு கால் கொடுத்து கண்டுபிடிப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது. அது போல ஏன் எல்லாப் பொருட்களிலும் ‘மிஸ்டு கால்’ வசதி மட்டும் வைக்கக் கூடாது. மிஸ்டு கால் டு சீப்பு, மிஸ்டு கால் டு சோப்பு என்று பிரச்சினை முடிந்து விடும். வித்தியாசமான கனவு: வரிசையில் மக்களோடு மக்களாக நிற்கிறேன். ஒரு நீண்ட கயிறு மேலிருந்து தொங்குகிறது. எந்த சப்போர்ட்டும் இல்லாமல், அப்படியே ஏற வேண்டும். மூச்சு வாங்கி ஏறி முடித்தால், அங்கே இன்னொரு கயிறை கெட்டியாக பிடிக்க சொல்லிவிட்டு, அப்படியே தள்ளி விடுகிறார்கள். ‘சொய்ய்ய்ய்ய்ன்’ என்று எங்கோ போய் விழ, அங்கிருந்து மீண்டும் கல்லில் கால் வைத்து ஒரு மலையை கையெல்லாம் சிராய்த்துக்கொண்டு ஏறி அந்தப்பக்கம் இறங்கினால், தமிழகத்தின் முக்கிய தலைவர் ஒருவரின் உடல் கருகிப்போய் கிடக்கிறது. மலர் வளையம் வைத்து விட்டு வரிசை நகர்கிறது. யெஸ் – வொய்.எஸ்.ஆர் ரெட்டி செத்துப் போனது + அணு அளவும் பயமில்லை பார்த்து விட்டு தூங்கியதால் வந்த கனவு

#3 – வேளச்சேரியில் இருந்த பொழுது இரண்டு கடைகளில் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தேன். ஒரு பெட்ரோல் பங்க் ஓரமாக Mango and Tango என்று ஒரு ஜூஸ் கடை. தினசரி இரவு சாப்பாட்டு முடிந்து, அங்கே போய் ஒரு ஜூஸ் குடிப்பது வழக்கம். சங்கடமே இல்லாமல், பத்து ரூபாய்க்கு ஒரே க்ளாஸில் இரண்டு முறை முழுசாக ஜூஸ் ஊற்றி குடுப்பார்கள். பல நாட்கள் மீண்டும் ஒரு டின்னரே அங்கே நடந்து விடும். எப்படி கட்டுபடியாகும் என்று வியந்து, தொழில் ரகசியத்தை கேட்க, கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி பழகுவதற்குள், கடையை ஒரு நாள் திறக்காமலே காணாமல் போய் விட்டார்கள். இன்னொன்று mothers kitchen. மெய்யாலுமே என்னுடைய அம்மா செய்யும் கத்திரிக்காய் சட்னி போலவே அங்கே செய்வார்கள் (சாம்பார் + கத்திரிக்காய் சட்னி தான் டிஃபனுக்கு சைட் டிஷ்). அந்த கத்திரிக்காய் சட்னிக்காகவே அவர்கள் ஹிமேஷ் ரேஷமைய்யாவின் பாடலை அலற விட்டாலும், தினசரி போய் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சமீபத்தில் வேளச்சேரி வழியாக போன போது கடையைக் காணவில்லை. வேளச்சேரி அன்பர்கள் சங்கதி அறிந்தால் சொல்லவும்.

#4 – கிட்சன் சிங்க் லீக் ஆகி கொண்டிருந்ததால், அதை சரி செய்ய ப்ளம்பரை வர சொல்லியிருந்தோம். அப்படியே மெயின் டோர் தாழ்ப்பாளையும் சரி செய்ய சொல்லலாம் என்று நானும் அம்மாவும் கிசுகிசுத்து விட்டு, ப்ளம்பர் ஆக இருந்தாலும் இதை செய்ய அவருக்கும் திறமை இருக்கிறது என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தோம். சும்மா ரஜினி ஸ்டைலில் ஸ்கூருக்களை கழற்றியவர், புது தாழ்ப்பாளை வாங்கி வந்து, அதை ‘டம் டம் டம்’ என்று அடித்து பொருத்தினார். ‘இனிமே ஏழேழு பரம்பரைக்கும் இந்த கதவுக்கு ஒண்ணும் ஆகாது’ என்று அம்மாவும் நானும் கண் கலங்கி, அவர் கேட்ட காசை எண்ணி குடுத்து விட்டு, அவர் சலாம் வைத்து விட்டு கிளம்ப, கிர்ர்ர்ர்ர்ர், கதவு திறக்கவில்லை. இப்படி பிடித்து இழுக்கிறார், அப்படி பிடித்து இழுக்கிறார், ம்ஹூம்! ‘காசு போச்சே’ என்று நானும் அம்மாவும் லுக் விட்டு கொண்டோம். ‘நான் ஒண்ணுமே பண்லீங்க’ என்று அவர் பதற, வெளியே அடிக்கடி ஒரு குட்டிப்பிசாசு தாழ்ப்பாள் போடுவது வழக்கம் தான் என்று அவரை சமாதானப் படுத்தினோம். வெளியே பயங்கர மழை. மட்ட மதியம் வேறு. ஆனால் திறந்து விட, பக்கத்து அபார்ட்மெண்ட்களில் அன்று ஆளில்லை. என்னையும் அம்மாவையும் விட, ப்ளம்பர் ரொம்பவே துடித்து விட்டார். வேலை முடிந்து ஒரு நிமிடம் எக்ஸ்ட்ராவாக இருந்தால் ரொம்ப சங்கோஜப்படுவார் போல. அப்புறம் மழை சத்ததை மீறி பக்கத்து அபார்ட்மெண்ட் செக்யூரிட்டியை அழைத்து கதவை திறக்க சொல்ல, ப்ளம்பர் ஒரே ஓட்டமாக எஸ்கேப்.

#5 – Non-fiction சுவாரசியமாக இருக்கும் என்று யாரேனும் சொல்லியிருந்தால் நாலு நாள் ரூம் போட்டு சிரித்திருப்பேன். ஆனால் இப்போது ஒரு பெரிய ‘ஆமாம்’ போடுகிறான். Maximum CIty-என்கிற புத்தகத்தை படிக்கத் தொடங்கும் பொழுது அத்தனை எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. பாதி புத்தகத்தை தாண்டியிருக்கிற வேளையிலேயே, கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாத இரண்டு கதாபாத்திரங்கள் கிடைத்துவிட்டனர். (அஜய் லால் – சினிமா ஹீரோ போலீஸ் கமிஷ்னர்லாம் ஜுஜுபி என்று தோன்ற வைக்கிற ஒரு போலீஸ் அதிகாரி. மோனலிஸா – பார் டான்ஸர்). லோக்கல் சிவசேனா தொடங்கி இண்டர்நேஷனல் தாவூத் இப்ராஹிம் வரை பல தகவல்களை மனதில் பதியுமாறு சுவாரசியகாம சொல்லியிருக்கிறார் சுக்கேது மேத்தா. (Maximum City / Suketu Mehta / Penguin / 395 Rs)

#6 – இப்போ-என்ன-செஞ்சு-கிழிச்சிட்டிங்கனு-மூஞ்ச-அப்படி-வெச்சுக்கிறீங்க செக்ஷனில் பிடிக்க வேண்டிய ஆட்கள் – க்யூவை உடைத்துக்கொண்டு அங்கே இங்கே நுழையும் ஆசாமிகள், ஒரு சின்ன அட்ரஸ் திருத்தம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படும் பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு நூறு ரூபாய் கேட்கும் போஸ்ட்மேன்கள், ‘நான் மிலிட்டரில செர்வீஸ்ல இருந்தேன்’ தெரியுமா ரேஞ்சுக்கும் ‘நான் தண்ணி அடிப்பேன் தெரியுமா’ என்று படம் காட்டுபவர்கள்.

#7 – இறுதியாக ஒரு பழைய ஃபோட்டோ. 2007ஆம் ஆண்டு பிறந்த நேரம். மணாலியில் fire camp நடந்த போது எடுத்தது. எதற்கு சிரித்தோம் என்று நினைவில்லை. ஆனால் பார்க்கும் போதெல்லாம் பச்சக்கென மனதில் அந்த மகிழ்ச்சி ஒட்டிக்கொள்கிறது!

Have a great weak ahead!

Written by aravind

நவம்பர் 29, 2009 இல் 3:22 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

Ittefaaq se :)

without comments

ஒரு பாடலின் மீது பித்து பிடித்து அலைவது, என்னிடம் இருக்கும் பலவீனங்களில் எனக்குப் மிகப் பிடித்தது. கடந்த இரு வாரங்களாக வேறெதையும் கேட்காமல் ‘பா’ படத்தில் ராஜாவின் இசையில் வருகிற பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஷில்பா ராவின் குரலில் ஒலிக்கிற இரண்டு versionகள், ஒரு மாலை நேர காதல் சந்திப்பு, காத்திருப்பு தரும் பரவசத்தையும் குதூகலத்தையும் தருகிறது. பி.சி.ஸ்ரீராமின் தகதகக்கும் ஒளிப்பதிவு (பாடல் இங்கே - ஆடியோ தரம் அத்தனை சிறப்பில்லை) காதல் கனவுகளை சிறகடிக்க வைக்க, சில காதல் கவிதைகள், அந்த பாடல்களுக்கு சின்ன dedication :)

 

 

 

 

 

 

 

————————-

சிறுமிகள்
உற்சாகமாக
கைகள் கோர்த்தபடி
சாலைகளை கடக்கின்றனர்

வானேறத்
துவங்குகின்றன
பட்டங்கள்

விற்பனைக்கு
வந்து விட்டன
புத்தம் புதிய பூக்கள்
வண்டியை உதைத்து
கிளப்புகிறேன்
உன்னிடம் தேடி

ஒரு பொன்மாலைப் பொழுதை
கையில் கொண்ட படி

————————————-

எப்பொழுது? / இப்பொழுது

உன் விழிகளில்
விழ

ஒரு ரகசியமான புன்னகையை
கொள்ளும்
இப்பொன்பொழுதினைப்
போல்
வேறெதுவுமில்லை

————————————-

பால் மயக்கம்

எதிரெதிர் இருக்கைகள்
இரண்டு கோப்பைகள்
உதடு துடைக்கும் டிஷ்யு பேப்பர்கள்
காத்திருக்கின்றன

ஒரு காதல் ஜோடியென
நாம் வந்தமர்ந்த பின்

தத்தம் பாலினங்கள்
தீர்மானிக்கப்பட

————————-

பறவைகள் கிறீச்சிடும் பொழுதுகள்

கவனத்தில்
இல்லவே இல்லை
பேசப்படும் வார்த்தைகள்

இருபுறமும்
முடிவில்லாமல்
திரிக்கப்படும்
ஒலிக்கயிறில்
இப்படியும் அப்படியும்
போய் வருகிறது
காதல்

————————————-

காதல் அலையும் நெடுஞ்சாலை

உற்சாகமாக
உருண்டோடும் எதையோ
தட்டிக்கொண்டே
நடக்கிறேன்
உன்னோடு

வழி தேடுவபர்கள்
நேரம் கேட்பவர்கள்
பூக்காரிகள்
வேடிக்கை பார்ப்போர்

குறுகுறுப்பாக
இருக்கிறது
மூன்றாமவர் முன்னிலையில்
ஒரு நொடி
நம் ரகசிய காதலை
நடத்த

நம்மை கடந்து சென்றபின்
அவர்களும்
தட்டிக்கொண்டே நடக்கலாம்
தத்தம் காதல் நினைவுகளை

————————————-

சலனங்கள் இல்லாத
நீர்பரப்பின் மேல்
தங்கமாய் மின்னுகிறது
இந்த மாலைப்பொழுது

வா
மிதப்போம்
இரு பூக்களாக

————————————-

“உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே, அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்று வைரமுத்து நறுக்கென்று சொன்னதைத் தான் கொஞ்சம் நீட்டி முழுக்கி ‘காதல் அலையும் நெடுஞ்சாலை’யில் சொல்லியிருக்கிறேன் ;)

இதே மெட்டை பிரிவில் உருகி உருகிப் ஷான் பாடுகிற பாடலுக்கான டெடிகேஷன் – விரைவில் ;)

Written by aravind

நவம்பர் 27, 2009 இல் 4:56 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

கடைசி பக்கங்கள்

2 மறுமொழிகளுடன்

கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வருகையில் காயத்ரி எங்களைப் பார்த்தே விட்டாள். அவளது நெற்றியில் ‘அபாயம்’ என்று எழுதி ஒட்டாதது மட்டுமே குறை. வாயில் டூத் பிரஷ் நுரை நுரையாக குதப்பிக்கொண்டிருந்தது. (இரவிலும் பல் துலக்குவாள். டாக்டரின் மகள்). ஆச்சரியத்தில் அவளது கண்கள் விரிந்தன. நுரை வெளியே வழியாத வரையில் வாயையும் பிளந்து கொண்டாள். ‘எங்க போறீங்க’ என்றாள் சைகையில்.

‘சும்மா. ஸ்டோர்ஸ் வரைக்கும் போயிட்டு வறோம்’.

இன்னும் ஆச்சரியம் விலகவில்லை.

‘அதிசயமா ரெண்டு பேருமா கிளம்பியிருக்கீங்க?’ தாடையை கொஞ்சம் உயர்த்தி கேட்டாள்.

நான் வெறுமனே புன்னகைத்தேன். தாமரை கைகளில் இருந்த ப்ளாஸ்டிக் கவரை வெறுமனே பிடித்தபடி என் அருகே நின்றிருந்தாள் என்றாலும், அதை பிடித்திருந்த விதத்திலேயே அதன் மீது கவனத்தை ஈர்த்தாள். பிரச்சினைகளை வாங்கிக் கட்டி கொள்வதில் அலாதி இஷ்டம் தாமரைக்கு.

‘நாங்க போறோம். மணி எட்டாச்சு. அரை மணி நேரத்துல கேட் மூடிடுவாங்க’. அவசரமாக சொல்லிவிட்டு, தாமரையை இழுத்துக்கொண்டு விடுதிக்கு வெளியே வந்தேன்.கோடைக்கால இரவுக்காற்று இதமாக இருந்தது. ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தவுடனே ஒரே எம்பாக எம்பி எட்டிப்பார்த்தேன். சுமார் முக்கால் கிலோமீட்டர் தாண்டி இருந்த காலேஜ் கேட் இருட்டில் அத்தனை தெளிவாக தெரியவில்லை.’இங்க பாரு தாமர. நீயே ‘இந்த கவர்ல என்ன இருக்குனு கேக்கவே இல்லியே’னு மூஞ்ச வெச்சுக்காத.”நான் சாதாரணமாத்தான் இருக்கேன். சத்தியமா. டென்ஷனாலாம் இல்ல”ம்ம். எதுக்கும் சொன்னேன். சரி, வா வேகமா’இருவரும் விடுவிடுவென நடந்தோம். என் மனம் படபடவென அடித்துக்கொண்டது. மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து ஒரு பாம்பென காலேஜின் அந்தக் கடைசி வரை ஓடும் சாலை அது. ஹாஸ்டல் கதவடைக்கும் நேரம் என்பதால் நிறைய பெண்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். பையன்களும் இருந்தனர். எவ்வளவு வேகமாக நடந்தும், சாலை மெதுவாகவே பின்னோக்கி கடந்தது போல இருந்தது. எங்கள் பேட்ச் பெண்கள் கும்பல் ஒன்று சாலையை அடைத்தபடி எதிரே வந்துகொண்டிருந்தது. கஷ்டம். தாமரையின் கையில் இருந்து கவரை நான் வாங்கிக்கொண்டேன். அவள் கையில் இருந்தால் பிடுங்கி கூட என்னவென்று பார்த்துவிடுவார்கள்.’அங்க பாரேன்’ – அதற்குள் அந்தக் கும்பலில் இருந்து ஒரு நெட்டைக் கொக்கு எங்களைப் பார்த்து கூவியது. செல்வியாக இருக்கும். உடனே கும்பல் ஒரு ஓ போட்டது. என்ன சொல்வதென கடகடவென ஒத்திகை பார்த்தபடி நடந்தேன். ‘சும்மா கோயிலுக்கு போகிறோம். கடைசி நாளில்லையா. பிள்ளையார் மேல் ஒரு திடீர் பாசம்.’

அப்படியே சொல்லி வைத்தேன். இன்னொரு கும்பல் இப்போது கோயிலில் இருக்கிறதாம். திரும்பி வந்ததும் கீழே வராண்டாவிற்கு சொன்னார்கள். அரட்டை அடிக்க. இது இந்த விடுதியில், இந்த கல்லூரியில், எங்கள் கடைசி இரவு.

கும்பல் எங்களை கடந்த போது, ‘இவங்க ரெண்டு பேரும் எப்போ ராசியானாங்க?’ என்று யாரோ யாரிடம் கேட்டுக்கொள்வது காதில் விழுந்து நெஞ்சில் சுருக்கென்றது. தாமரையை திரும்பிப் பார்த்தேன்.

காலேஜ் கேட்டருகே எதையும் எரிப்பதாக தெரியவில்லை. புகை எதுவும் எழவில்லை. ஒரு வேளை இப்போது தான் ஆரம்பித்திருக்கலாம். இல்லை எரிந்து அணைந்து போயிருக்கலாம். வாயிலை அடையும் வரை ‘இருக்கும், இருக்காது’ என்று எண்ணியபடி இருந்தேன். இல்லை. இன்று குப்பைகளை எரிக்கவில்லை. நாளையோட காலேஜ் லைஃப் முடியுதுல என்று விசாரித்தார் செக்யூரிட்டி.

திரும்பி நடக்கலானோம். எனக்கு சலிப்பாக இருந்தது. தாமரையும் கொஞ்சம் தளர்ந்தது போலிருந்தாள். ‘கோயிலுக்கு போலாமா?’ என்று கேட்டாள். ‘ப்ச்’ என்று மறுத்தேன். ஹாஸ்டலுக்கு திரும்புகையில் கோயிலிலிருந்த மற்றொரு கும்பல் எங்களோடு சேர்ந்துகொண்டது. என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசி நாள் என்பதால், எல்லோருக்கும் என்னென்னவோ பேசத் தோன்றியது. நானும் தாமரையும் அமைதியாக வந்தோம். ஒவ்வொருத்தியும் பேசுகையில், அவர்களோடு சேர்ந்து தாமரையை என்னவெல்லாம் கேலி பேசியிருக்கிறேன் என்று தோன்றியபடி இருந்தது. கேண, கிறுக்கி, அம்மா கோண்டு. பாத்ரூம் போகும் போது கூட டெடிபேர் பொம்மையை கொண்டு போனாலும் போவாள். ஃபர்ஸ்ட் பெஞ்ச், ஆனாலும் ஃபெயில். முதுகெலும்பில்லாதவள். என்னென்னவோ.

‘என்ன தேவி அமைதியாவே வரே?’ என்று யாரோ கேட்ட போது, ஒன்றுமில்லை என்று சொல்லி வைத்தேன்.

**************

சாப்பிட்டு விட்டு நான் மேலே சென்றேன். எல்லோரும் வட்டமாக அமர்ந்திருந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். நான்கு வருடக் கதையின் பக்கங்கள் கிழித்து கிழித்து எறியபட்டன. தாமரை இந்த நண்பர் வட்டத்தில் சேருவதில்லை. அவளுக்கென எந்த நண்பர் வட்டமும் இல்லை.

அறைக்குத் திரும்பிய போது மணி பதினொன்று இருக்கும். அறை திறந்து கிடந்தது. தாமரை அங்கு இல்லை. அந்தக் கவரும் இல்லை. வெளியே வராண்டாவில் போய் பார்த்தேன். கேட்டைத் தாண்டி போயிருக்க வாய்ப்பில்லை. பக்கத்து அறையில் கேட்பது சரியெனத் தோன்றவில்லை. பின்னால் துணி துவைக்கும் அறைகள் நோக்கி நடந்தேன். ஒரே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஒரு கழிவறையிலிருந்து தண்ணீரை ஃப்ளஷ் செய்யும் ஓசைக் கேட்டது. சிறிது நேரம் அங்கேயே நடந்துகொண்டிருந்தேன். தண்ணீர் மட்டும் ஃப்ளஷ் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது.

‘தாமர, உள்ளயா இருக்கே?’

பத்து விநாடிகள் கழித்து ‘இம்’ என்று சத்தம் கேட்டது.

‘வெளியே வா’பதிலில்லை.’வெளில நீ மட்டும் தான் இருக்கியா?’ என்றாள்.’ஆமா’கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தவளின் கையில் டைரி. உள்ளே கழிவறையில் துக்கல் துக்கலாக பேப்பர் கத்தைகள்.’என்ன பண்ணிட்டு இருக்கே? உனக்கு எதுக்கு இந்த வேல எல்லாம்?’ முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு கேட்டேன். அவளை அறைக்கு அழைத்து வந்தேன்.

அன்று மதியம் என் காலேஜ் வாழ்க்கையின் கடைசித் தேர்வை எழுதி முடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கேண்டினில் கும்பலாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, தாமரை என்னைத் தேடி வந்தாள். நடையிலும் செய்கைகளிலும் பதற்றம். ‘இப்போ என்ன பண்றது தேவி’ என்று அவள் வழக்கமாக கேட்கும் முக பாவம். கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்கு அழைத்துக்கொண்டு வந்தாள். கதவை தாழிட்டுக் கொண்டு, உள்ளே சூட்கேஸில் இருந்து ஒரு கவரை எடுத்து ‘தேவி, இந்த டைரிய என்ன பண்றது?’ என்று நீட்டினாள்.

அடர்ந்த காபி நிறத்தில், மெத்தென இருந்தது டைரி. ஒரு நாளைக்கு இரு பக்கங்கள் என்பதால், நல்ல கனம். முதல் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முந்தைய தேதியிட்டு எழுத ஆரம்பித்திருந்தது.

‘என்னதிது?’

தாமரை விழித்தாள். புருவங்கள் சங்கடத்தில் இருந்தன. ‘இத நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது தேவி’. உதட்டைக் கடித்தாள்.

‘ஏன்?’

‘கொஞ்சம் உக்காரேன்’. உட்கார்ந்து கேட்டால் மனிதர்களுக்கு கோபம் வராதென தாமரைக்கு ஒரு நம்பிக்கை. அடுத்து அவசரப்படாமல் அவள் சொல்வதை கேட்க சொல்லுவாள். அடுத்து என்ன செய்வதென தெரியாத ஏதோ ஒரு சங்கடம்.

உட்கார்ந்தேன். எதிர்க் கட்டிலில் அவளும் அமர்ந்தாள். ‘இதுல ஹரி பத்தி எல்லாமே எழுதி வெச்சிருக்கேன் தேவி. வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது. அம்மா எடுத்து கண்டிப்பா படிச்சுடுவாங்க. படிச்சா அவ்ளோ தான்’.

என் கையில் இருந்த டைரியைப் பார்த்தேன்.

‘என்னலாம் எழுதியிருக்கே?’

‘எல்லாம். என்னென்னவோ’

முதல் பக்கத்துக்கு மேல் திருப்ப யோசனையாக இருந்தது. ‘பாரு’ என்று அடுத்த நொடியில் சொன்னாள் தாம்ரை. மணி மணியான கையெழுத்தில், பிழைகள் இல்லாத வார்த்தைகள், வரிகளாக, ஒன்றின் கீழ் ஒன்றாக, அச்சடித்தது போல சீராக நிறைந்திருந்தன. வேகமாக புரட்டியதில் கடந்த இரண்டு வருடங்களின் நாட்கள் விரைந்தன.

‘படிச்சுப் பாரு தேவி’

‘இல்ல வேண்டாம். இத என்ன பண்ணனும்?’

‘படிச்சுப் பாரேன் ப்ளீஸ்’.

தாமரையை செய்வதறியாது பார்த்தேன். எழுந்து சென்று மின்விசிறியைப் போட்டு விட்டு வந்தவள், எனக்கெதிராக கிடந்த கட்டிலின் உள்ளே நகர்ந்து சுவற்றில் சாய்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவளையும் என்னையும் ஒரே அறையில் போட்டதற்காக வார்டனிடம் சண்டை போட்டு விட்டுத் தோற்றுப் போய், வேறு வழியில்லாமல் என்னுடைய பொருட்களை கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்த போது, அவள் இதே போன்று அமர்ந்திருந்தாள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவள் என்னை ஒரு பார்வையாளராகவே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும் என்று நினைத்துக் கொண்டேன். அறையில் இரவுகளில் கூட தங்காமல் வேறு அறைகளில் சுற்றிக்கொண்டிருந்தேன். அவள் அறையில் இல்லாத பொழுதுகளில் அறைக்கு வருவேன். பரிட்சை சமயங்களில் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அறையின் சாவி மட்டும் அவ்வப்போது எங்கள் இருவருக்கிடையில் இருந்த கதவைத் திறக்கும். மூன்றாம் ஆண்டு முடிந்த பிறகு அறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வந்த போது ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்று எனக்கே புரியவில்லை.

உண்மையில் நான் தான் ஒரு பார்வையாளராக மாறியிருந்தேன். எல்லாவற்றிலும் அஜாக்கிரதையாக இருக்கும் அவளை ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருந்தேன், என்னை அறியாமலே. நேரடியாக எதையும் நினைவு படுத்தாமல் பக்கத்து அறை காயத்ரியிடம் சொல்லி வைப்பேன். எதேச்சையாக நினைவுபடுத்தல், விசாரித்தல், அறைக்கு வருதல் என எல்லா விஷயங்களும் நடந்தது. எனக்கு காய்ச்சல் வந்த போது, அவள் எடுத்துக்கொண்ட பொறுப்பு எனக்கு புன்னகையைத் தந்தது. உடல் மொழியில் அத்தனை படபடப்பு, அத்தனை கவனிப்பு. ஒரு பரிட்சைக்குத் தயாராவது போல என்னைக் கவனிக்க முற்பட்டாள். அவளுக்கு காய்ச்சல் வந்த இரண்டு நாட்கள், அறையில அமைதியாக அமர்ந்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.

எந்த விதப் பற்றும் அவள் மீது இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த போது தான், அவளுக்கு ஹரிக்கும் என்னவோ நடக்கிறது என்றறிந்தேன். அவனைப் பற்றி சம்பந்தமில்லாமல் பேச்சை எடுத்தேன். ‘அவன் ஒரு பொறுக்கி’ என்றேன். லக்ஷ்மியை, ரமணியை அவளிடம் சொல்ல வைத்தேன். எதுவும் வேலை செய்யவில்லை என்றறிந்த போது, ‘தயவு செஞ்சு நான் சொல்றத கேளு, அவன நம்பாதே’ என்று அவளிடம் சொல்வதற்காக முதல் முறை அவளுக்காக அறையில் காத்திருந்தேன். மருண்ட விழிகளோடு சொல்வதை மௌனமாக கேட்டுக்கொண்டே இருப்பாள்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஹரிக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சினை எனத் தெரிந்தது. இந்த சந்தர்பத்தை விடக்கூடாது என அவளிடம் தினம் பேச ஆரம்பித்தேன். ஹரி பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன். முதல் சில நாட்கள் கலவரத்தோடு கேட்டுக்கொண்டிருந்தவள், அடுத்தடுத்த நாட்களில் அழ ஆரம்பித்தாள். இன்னும் மெதுவாக இதமாக சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு நாள், அவனை மறக்குமாறு சத்தியம் செய்யக் கேட்டேன். அடுத்த நாளில் இருந்து நான் தினமும் இரவில் அறையில் தங்கினேன்.’இன்னிக்கு ஹரி என்ன கிஸ் பண்ணிட்டான்’ என்ற வரி அப்படியே கொக்கி போட்டு என்னை இழுத்தது. டைரியிலிருந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். ‘படிச்சிட்டேன்.’ என்று பொத்தாம் பொதுவாக சொன்னேன்.’இன்னும் படி’ என்றாள்.‘இதுக்கு மேலயுமா?’‘ம்ம்ம்’

அவனோட ஸ்கூல்மேட் வீட்டுக்கு டின்னருக்கு போகலாம்னு சொல்லி என்ன கூட்டிட்டு போனான். ஆனா அது ஆக்சுவலி ஒரு பேச்சிலர்ஸ் ரூம். பூட்டியிருந்தது. சும்மா பேசிட்டு இருக்கலாம்னு சொன்னான். கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தோம். பேசிட்டே இருக்கும் போது திடீர் கிஸ் பண்ண வந்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். சொல்லியும் அவன் கேக்கல. கம்பெல் பண்ணான். நான் எழுந்து நகர ஆரம்பிச்சேன். ஆனா அவன் ஃபோர்ஸ் பண்ணி என்ன கிஸ் பண்ணிட்டான். எவ்ளொ சொல்லியும் கேக்கல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. திடீர்னு அவன அடிச்சிட்டேன். ஒரு நிமிஷம் பாத்துட்டு என்ன திருப்பி அடிச்சிட்டான். திரும்ப கிஸ் பண்ண வந்தப்ப, அங்கேர்ந்து நான் வந்துட்டேன். இப்ப ரூம்ல யாரும் இல்ல. தேவி இன்னிக்கு நைட்டும் வர மாட்டானு நினைக்கிறேன். எனக்கு சாகணும் போல இருக்கு. வேகமாக அடுத்த பக்கத்தை திருப்பினேன். அடுத்த இரண்டு நாட்களும் எதுவும் எழுதப்படவில்லை. மூன்றாவது நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு, நான் இல்லாத போது சாவதற்கு அவள் என்னென்ன செய்தாள் என எழுதப்பட்டு இருந்தது. அந்த ஆறு பக்கங்களைப் படிக்க படிக்க எனக்கு உடலே நடுங்க ஆரம்பித்தது.

நான்காவது நாளின் குறிப்பில் முதன் முறையாக அவளுக்காக நான் அறையில் காத்திருந்ததாக ஒரே ஒரு வரி எழுதப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு டைரியில் எதுவும் எழுதப்படவில்லை.

**************

தாமரை டைரியைப் பற்றி மறந்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு சின்னப் புன்னகையில் முகம் அழகாக இருந்தது. தாமரை கொள்ளை அழகு. தூங்கும் பொழுது இன்னும் அழகு. கல்லூரிக்கு வந்த முதல் நாள் பற்றி மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்தாள். கட்டிலில் படுத்தபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘தாமர, இனிமே சாகணும்னு நினைக்காத’ என்றேன் திடீரென்று.

கண்கள் விரிய பார்த்தவள், சட்டென ‘நிச்சயம் மாட்டேன்’ என்றாள்.

‘சாகர அளவுக்கு அவன் ஒண்ணும் நல்லவன் இல்ல. அவன் நல்லவனா இருந்தாலும் நீ சாகத் தேவயில்ல. அப்படி ஒண்ணும் நடக்கல’

‘ம்’

‘தைரியமா இரு. நீ நினைக்கறத விட நீ தைரியசாலி. சும்மா சும்மா பயப்படுறத நிறுத்து. சும்மா சும்மா அழறத நிறுத்து’

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள், ‘இன்னிக்கெல்லாம் நான் அழவே இல்லியே’ என்றாள்.

அமைதியாக தலையசைத்தேன்.

**************

‘தேவி…’

‘ம்….’ ‘உனக்கு நம்ம காலேஜ்ல யாரையாச்சும் பிடிச்சிருக்கா?”பிடிச்சிருக்கான்னா’ சிரித்தேன்.

‘உனக்கு அருண்னா ரொம்ப இஷ்டம் தானே?’

எனக்கு பக்கென்று இருந்தது. என்ன சொல்வதென்றது தெரியவில்லை. அவள் கட்டில் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டேன். ‘தெரியல’.

‘எனக்குத் தெரியும்.’ என்றாள்

‘ஓ’

‘நீங்க ரெண்டு பேரும் பெர்ஃபெக்ட் ஜோடியா இருப்பீங்க’

‘ம்’

‘ரமணி, லக்ஷ்மி யார் கிட்டயாச்சும் சொல்லிருக்கியா? அவங்க எதாச்சும் பண்ணுவாங்கல?’

‘இல்ல, சொல்லல. அவங்க என்ன பண்ண வேண்டி இருக்கு. எனக்கு வேணும்னா நான் தான் எதாச்சும் பண்ணனும்’

‘எதாச்சும் பண்ணு’.

‘ம்?’

‘நிஜமாத்தான் சொல்றேன். எதாச்சும் பண்ணு. விட்றாத.’

புன்னகைத்தேன்.

**************

எப்போது தூங்கிப்போனேன்று தெரியவில்லை. கனவில் கல்லூரியின் அத்தனை நாட்களும் வந்தது போல இருந்தது. எலக்ட்ரானிக்ஸ் லாபில் வோட்மீட்டரை தட்டிக்கொண்டிருப்பது போல இருந்த போது திடீரென்று கண்விழித்தேன். தாமரை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். மணி அஞ்சரையாகி இருந்தது. கண்கள் எரிந்தன. நிறைய நேரம் பேசி இருந்திருக்கிறோம். எழுந்து அமர்ந்ததும், டைரி ஞாபகம் வர, எழுந்து ஜன்னல் பக்கம் போனேன். எட்டிப் பார்த்ததில், தூரத்தில் கேட் அருகே, புகை குபுகுபுவென மேலெழும்பிக்கொண்டிருந்தது.

அவசர அவசரமாக சுடிதாருக்கு மாறி, கவரை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஏழெட்டு நிமிடத்தில் குப்பை எரிக்கும் இடத்தை அடைந்தேன். சுற்றி நின்றிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்க ஓடிப்போய், கவரை அப்படியே வீசிவிட்டு மூச்சு வாங்கினேன். தலையில் துண்டு சுற்றிகொண்டிருந்தவர், என்னையே வாயை பிளந்துகொண்டு பார்த்தார்.

**************

கையில் எதுவோ ஊர்வது போல இருந்தது. தட்டிவிட்டேன். மீண்டும் ஊர்ந்தது. மீண்டும் தட்டிவிட்டேன். வேகமாக திரும்பிப் படுத்துக்கொண்டேன். முகத்தில் பிரகாசமாக ஒளியடித்தது. முகத்தை மூடிக்கொள்ள ஏதாவது தென்படுகிறதா எனத் தேட முற்பட்ட போது, உள்ளுக்குள் சத்தமாக மணியடித்தது. வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தேன். தாமரை தயாராகி அமர்ந்திருந்தாள். அறை வாசலில் அவளது பெட்டிகள் இருந்தது.

‘ஸாரி, பயந்துட்டியா?. டைரியை நான் எடுத்துட்டு போயி போட்டுட்டேன். நீ நல்லா தூங்கிட்டிருந்தே.டைரிய தேடினியா?’

தாமரையின் முகம் பிரகாசமானது. இல்லையென்று தலையசைத்தாள்.

‘மணி என்னாச்சு?’

‘எட்டு’

‘கிளம்பிட்டியா?’

‘ம்’

‘உடனே போறியா?’

‘ம். பத்து மணிக்கு டிரையின்ல?’

‘ம்’

‘வெளியே வரைக்கும் நானும் வறேன்’

அவசரமாக முகம் கழுவி விட்டு ஒரு பெட்டியை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். எதுவும் பேசாமல் வாயிலை அடைந்தோம்.

‘நைட்டு நிறைய பேசணும்னு நினச்சேன். எப்ப தூங்கினேன்னு தெரியல’

‘ம். நீ போ தேவி. நான் பஸ் ஏறிக்கறேன்.’

‘இல்ல பரவாயில்ல. என்ன பண்ணப் போறேன். போயிட்டு ஃபோன் பண்ணு’

‘ம்…… தாங்க்ஸ்’

‘எதுக்கு’ என்று கேட்க நினைத்து, அமைதியாக புன்னகைத்தேன். தூரத்தில் பஸ் வந்தது. நான் பெட்டியைத் தூக்கிக்கொண்டேன். தாமரை குனிந்து பெட்டியின் ஸிப்பைத் திறந்தாள்.

‘என்னாச்சு?’

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள், உள்ளிருந்து சில பேப்பர்களை எடுத்து நீட்டினாள்.

‘என்னது?’ வாங்கிப் பார்த்த பொழுது, ‘இன்னிக்கு ஹரி என்ன கிஸ் பண்ணிட்டான்’ என்று வரிகள் தொடங்கியது. டைரியின் கடைசிப் பக்கங்கள்.

‘ஐயோ, இது எப்படி’? பஸ்ஸின் ஹாரன் சத்தம் அருகில் கேட்டது.

‘ஒருவேள டைரிய ஒண்ணும் பண்ண முடியலனா, இத மட்டும் போற வழியல போட்டுட்டலாம்னு நினச்சேன்.’ வெகுளியாக புன்னகைத்தாள். எனக்கும் படபடப்பாக இருந்தது. ‘ஓ, நான் கவனிக்கல.’ திரும்பி கேட்டருகே பார்த்தேன். ‘எரிச்சு முடிச்சிட்டாங்கனு நினைக்கிறேன், நீயே போட்டுடு போற வழியில எங்கயாச்சும்’. வேண்டாம் என்று தலையசைத்தாள். ‘வெச்சுக்கோ. உன் கிட்டயே இருக்கட்டும்…..’

‘ம்?”பத்திரமா…’ என்றாள்.

பஸ் புழுதி பறக்க வந்து நின்றது. என் கண்கள் லேசாக கலங்கின.

‘பை தேவி. கண்டிப்பா மேல படி. அம்மாகிட்ட அடிக்கடி சண்ட போடாதே. ஃபோன் பண்ணு. கிளம்பறேன்’, கடகடவென ஒப்பித்தாள். அவளின் கண்கள் கண்ணீரில் தத்தளிக்கும் படகுகள் போல ஆனது. அவசரமாக கட்டியணைத்துக் கொண்டு விட்டு தாமரை பெட்டியோடு ஏறினாள். இன்னொரு பெட்டியைத் தூக்கி ஏற்றினேன். உள்ளே ஏறி நின்றுத் திரும்பி கையசைத்தாள். கைகளிலிருந்த காகிதங்களை மற்றொரு கைக்கு மாற்றிக்கொண்டு கையசைத்தேன்.

((பின் குறிப்பு: அலுவலகத்தில் நடைபெற்ற One Night short story contestகாக எழுதியது. இரவு எட்டு மணிக்கு தொடங்கி, காலை எட்டு மணிக்கு முடிய வேண்டுமென்ற விதியில் போட்டி நடைபெற்றது.)

 

Written by aravind

நவம்பர் 22, 2009 இல் 1:36 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

புத்தனுடன் சில மௌனங்கள்

without comments

Copy (2) of IMG_0972நான் உயரத்தில் நின்றிருந்தேன். அது ஒரு மலைக்கோயில். இரவின் மென்குளிரை விலையுயர்ந்த சலவைக் கற்கள் உள்வாங்கி, என் உள்ளங்கால் வழியே சில்லென ஏற்றிக்கொண்டிருந்தது. மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கோயிலாலதலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் கூட்டத்தில் கலந்திருந்தார்கள். நான் மட்டும் இங்கே மலையின் ஓர் முக்கில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஹைதராபாத் நகரம் கீழே ரத்தினங்கள் பதித்த கம்பளம் போல விரிந்திருந்தது. நெக்லஸ் சாலையின் இரு புறமும் விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தன. விரைவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்களின் ஒளி ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து கலைந்து கரைந்தது. ஒளி கரைவதையே பார்த்துகொண்டிருந்த நான், மெல்ல திரும்பி நடுவில் பிரம்மாண்டமாக வீற்றிருந்த புத்தன் சிலையை பார்த்தேன். புத்தனின் முகம் தெரியவில்லை. இங்கிருந்து சிலையின் உயரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இருந்தும், ஒரு நொடியில் புத்தனின் சாந்தமான புன்னகையை உணரத் தொடங்கினேன். மனதையும் முகத்தையும் அந்தப் புன்னகை அப்படியே தொற்றிக்கொண்டது. வாகனங்களின் இரைச்சல், காற்றின் ஒலி, கோயிலில் மக்கள் தனித்தனியாக ஏற்படுத்தும் ஓசைகள் எல்லாம் சேர்ந்து உருவான பேரிரைச்சல் என எல்லா இடையூறுகளையும் மீறி, கிணற்றில் ஆழத்தில் விழுந்து கிடக்கும் கல்லை பார்ப்பது போல, புத்தனின் புன்னகையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

நண்பர்கள் திரும்பி வந்தார்கள். வழக்கம் போல ஜோ இந்த இடத்தின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தேன். நூனூறு டன்னுக்கும் மேலான் எடை கொண்ட சிலை. புத்தனின் வடிவம் என் நெஞ்சில் இன்னும் பெரிதாக விரிகிறது. ஏராளமான கற்கள், ஏராளமான வேலையாட்கள். மிகப்பிரம்மாண்டமாக தயாராகி, ஒரு படகில் ஏற்றப்பட்டு, ஒரு பொறியியல் வல்லுனர் மற்றும் நான்கு உதவியாளர்களின் துணையுடன், சிலை பீடத்தை நோக்கி பயணிக்கிறது. புத்தனின் சிலை பீடத்தில் ஏற்றப்படும் பொழுதில், அவரின் புன்னகை காற்றில் வெட்டும் ஆரத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். படகு பாதி வழியில் கவிழ்ந்து விட்டதாக ஜோ சொல்கிறான். கற்பனைகளை நிறுத்திவிட்டு, அவன் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பாரம் தாங்காமல் படகு கவிழ்கிறது. அது மழைக்காலமா என்று ஜோ சொல்லவில்லை. இருந்தும் நான் என் கற்பனையில் மழையை சேர்த்துக்கொள்கிறேன். படகில் சென்ற ஐந்து பேரும் காணாமல் போகிறார்கள். இரண்டு நாட்கள் தேடும் பணி தொடர்கிறது. பின் ஓர் இடத்தில் சிலையை கண்டுபிடிக்கிறார்கள். ஐந்து பேரும் சிலைக்கடியில் சிக்கி இறந்து போயிருக்கிறார்கள்.

அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து புத்தனின் புன்னகைக்கு அடியில் அவர்கள் உயிரற்று கிடக்கும் காட்சி நெஞ்சில் ஓடியபடி இருந்தது.

*********************

மூன்று வருடங்களுக்கு முன், அம்மாவுக்கு பணி மாற்றத்துடன் இட மாற்றமும் விதிக்கப்பட்டது. தலைமை ஆசிரியராக அம்மா ஆக, எங்கள் எல்லோருக்குமே விருப்பம் தான். ஆனால் இடமாற்றத்தில் எங்களுக்கு ஒப்புதலில்லை. முன் பின் தெரியாத தென் தமிழக டவுன் அது. தற்போது குடியிருந்த ஊர், அம்மா பிறந்த இடம். நிறைய நண்பர்கள், உறவினர்கள். அக்காக்களும் நானும் சென்னையில் தங்கியிருந்ததால், அம்மாவை இந்த ஊரை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றோம். இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் ஒரு நாள் அவகாசமே இருந்த சமயத்தில், அம்மா எங்களிடம் சொல்லாமல் போய் சேர்ந்து விட்டார். ஏறத்தாழ அடுத்த ஒரு வருடத்திற்கு நாங்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வசித்துக்கொண்டிருந்தோம். வீடு தனியே வசித்துக்கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை நானும் அம்மாவும் வீட்டுக்கு வருவோம். வீடு திறந்து, அறைகள் ஜன்னல்கள் திறந்து, தூசு தட்டி, வெறுமையை எதிரொலித்துக்கொண்டிருந்த வீட்டின் காற்று மண்டலத்தின் எங்கள் குரலை கரைத்தோம். தண்ணீரின் சுவை மாறிப்போனது போல இருந்தது. எவ்வளவு சுத்தப்படுத்தியும் துடைத்தும், வீடு அந்நியமாகவே இருந்தது. விடுதியிலிருந்து மாதம் இரண்டு முறை வீடு திரும்பும் போது அம்மாவிடம் என்னென்ன பேசுவேனோ, எப்படியெல்லாம் கவனிப்பேனோ, அப்படியே வீட்டையும் கவனிக்கத் தொடங்கினேன். அம்மாவுடனும் வீட்டுடனும் நெருங்கிய காலம் அது.

நான் வீட்டுக்குள்ளேயே தாழப் பறக்கும் பறவை. என் வாழ்க்கையின் பாதிக்கும் மேலான பொழுதுகளில் அது தன்னுள் என்னைக் கொண்டிருந்தது. வீட்டை விட்டு நான் வெளியே இருந்த பொழுதுகளில் நான் வீட்டை என்னுள் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்த நாள் முதல், இது வரை நான் இரண்டு வீடுகளில் இருந்திருக்கிறேன். இரண்டும் ஒன்று போலிருக்கும். மூன்று ரயில் பெட்டிகளை இணைத்தது போல. ஒரு பெட்டியின் வாசல் தான் வீட்டு வாயில். முதல் வீட்டின் நினைவுகள் அத்தனை இல்லை. இரண்டாம் வீட்டில் தான் நான் பெரும்பாலும் வளர்ந்தேன். ஒரு மொட்டை மாடியின் பாதியை அந்த கான்க்ரீட் ரயில் பெட்டிகள் அடைத்திருந்தன. இன்னொரு பாதி திறந்த மாடியாகவே கிடந்தது. ஒரு கால் எடுத்து வைத்தால் வீடோ, வானமோ. என் படுக்கைக்கு நேராக இருக்கும் ஜன்னல் வழியே மதியப்பொழுதுகளில் வரும் வெயிலும், சில மாதங்களில் இரவு தோறும் வரும் நிலவும் தான் வீடு எனக்கு நிர்ணயித்த வானிலை. சாய்ந்து நின்று பேச ஏதுவாக தொலைபேசி ஒரு முக்கில் இருக்கும். எறும்பு ஊரும் வழிகள் மனப்பாடம். உள்ளறையில் குறுக்கே என்னுயரத்திற்கு கட்டபட்ட கொடிக்கயிறும் அனிச்சையாக குனியும் என் கழுத்தும் எப்போதிலிருந்து சினேகம் கொண்டன என நினைவில்லை. என் மேஜை, படுக்கையறைக்கு வீடு அமைத்து தந்திருந்த இளமிருட்டு, ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருக்கும் பின் வீட்டு துணிகள் துவைக்கப்படும் சப்தம், கோடைக்காலத்தில் நான் மட்டும் தனியே கழித்த பொழுதுகள் என நினைவுகள் ஏராளம். என்னுயரத்தில் நின்று, முகமளவே இருக்கும் அலமாரியினுள் பதித்தது போல நிற்கும் கண்ணாடியில் கடக்கும் போதெல்லாம் எப்போதும் என் முகம் தெரியும். அந்தக் காட்சியிலிருந்து என் முகத்தை எப்படி பிரித்தறிய முடியாதோ, அப்படியே அந்த வீட்டையும் என்னிடமிருந்து பிரித்தறிய முடியாது.

விடுதியில் சேர்ந்த முதல் வாரம் என்னவோ ஆகி விட்டது. யாராவது தலை வலிக்கிறதோ என்று கேட்டால், தலை வலிப்பது போல இருந்தது. வயிற்று வலியா என்றால் வயிறு வலித்தது. உடம்புக்கு எல்லாம் வந்து விட்டது போல இருக்கும். ஏதுமில்லாதது போலவும் இருக்கும். நான்கு நாட்கள் கழிந்ததும், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வண்டி ஏறிவிட்டேன். நான்கு மணி நேரம் வீட்டை நோக்கி பயணிக்கையில் தலை வலி, வயிற்று வலி, உடல் வலி என ஒவ்வொன்றாக உடலிலிருந்து கழன்று விழுந்து கொண்டே இருந்தது. யாருமில்லாத வீட்டைத் திறந்த அடைந்த நேரம், உடமும் மனமும் ஜிவ்வென்று இருந்தது. வீட்டில் யாருமில்லாதது கூட குறையாகத் தெரியவில்லை. நான் எப்போது சரிந்து கிடப்பது போல, வரவேற்பறையில் சரிந்து கிடந்த பின்னர் தான் எல்லாம் சரியானது.

அன்று பகலில் வீட்டைத் தேடி புறப்பட்ட நானும், ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறிய புத்தனும் சந்திக்கவே முடியாது.

*********************

IMG_0962
மிகப்பெரும் ஆசையொன்றை
துறப்பதாக
முடிவெடுத்த பொழுது
அமர்ந்திருந்த
இந்த பூங்கா இருக்கையை
தந்த கல்
புத்தனின் சிலையாக
வடிக்கபட காத்திருந்து
வழி மாறியிருக்கலாம்.

என்னளவிலான
சிறிய அறிதலையும் புரிதலையும்
உணர்ந்த பொழுது
சுற்றி எதுவுமேயில்லை
தலைக்கு மேல் பறந்த
பறவைக்கு
புத்தனின் பெயரை வைத்தேன்

கூட்டமில்லாத ரயில் நிறுத்தம்
தெருக்கள் ரகசியமாக சந்திக்குமிடம்
நூலகம்
மொட்டைமாடிகள்
இரவுப் பேருந்தின் கடைசி இருக்கை
எதுவேனும் இருக்கலாம்
யாருக்காயினும்
புத்தனின் அடையாளமாக

இந்த பெருநகரத்தில்
அத்தனை மரங்கள் இல்லை.

*********************

 

இருபத்தி நான்கு மணி நேரத்தை சரி பாதியாக உடைத்து பகலைத் துவக்கும் வைகறையில், யாரேனும் வாழ்க்கையின் மறு பாதியை ரகசியமாகத் தேடிப் போகலாம். ‘வீட்டை விட்டு ஓடிப் போகுதல்’. காதலைத் தேடியா? காமத்தை தேடியா? குடும்பத்தை துறந்தா? அவர்களில் யாரேனும் ஞானத்தை அடைந்திருக்கலாம். புத்தனை யாரும் ‘ஊரை விட்டு ஓடிப் போனவன்’ என்று அழைத்து நான் கேட்டதில்லை. ஒரு வேளை புத்தன் ஞானத்தை அடையாமல் போயிருந்தால்? அடைந்த ஞானத்தை யாருக்கும் சொல்லாமல் போயிருந்தால்? சொல்லி எத்தனை பேர் அந்த ஞானத்தை உணர்ந்திருக்கிறோம்? ஞானத்தை உணராதவர்களுக்கு புத்தன் வெறும் வீட்டை விட்டு ஓடிப் போனவன் தானா? யசோதாவின் இழப்பு, புத்தனின் ஞானத்தின் பெருமையை குறைத்ததுண்டா?

காணாமல் போனவர்கள், எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? தங்கள் போதி மரத்தையா?

*********************

 

புத்தனை பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை. சிறிய வயதில் படித்த சில கதைகள் தவிர. புத்தனின் புரிதல்களை அறிய வேண்டும் என்ற ஆவலை, அந்த எளிமையான புன்னகை மிகச்சிறப்பாக ஏற்படுத்திவிடுகிறது. சில கணங்களில், புத்தனின் அத்தனை புரிதல்களின் அதிர்வையும் ஏற்படுத்த அந்தப் புன்னகையே போதும் என்றே தோன்றுகிறது. மிகத்துல்லியமான தூய இதயத்தில் இருந்து அந்த புன்னகை வர முடியுமென்றால், வழி வழியாக, அதிர்வை தரக்கூடிய புன்னகையை கல்லில் கடத்த ஏதுவாக, முதன் முதலில் புத்தனின் புன்னகையை கல்லில் வடித்தவனின் மனம் எப்படி இருந்திருக்கும்? கல்லின் எந்த துகளை நீக்கி, எதை செதுக்கி, எதைக் கொண்டு, அப்புன்னகையை கொண்டு வந்திருப்பான்? அந்தப் புன்னகையை சிறப்பாக கொண்டு வந்த கணத்தில், புத்தன் தன் ஞானம் மூலம் பெற்ற அத்தனையையும் கடந்த ஒரு நிலையை நிச்சயம் ஒரு நொடி அவன் கண்டிருப்பான்.

*********************

எழுத்தும் புகைப்படங்களும்அரவிந்தன் :)

Written by aravind

நவம்பர் 10, 2009 இல் 3:20 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

கண்டேன் காதலை / ஆதவன்

ஒரு மறுமொழியுடன்

jab-we-met-kandein-kadhalaiஇடைவேளையின் போது திரைக்கு பக்கத்தில் பெரிய பெரிய லைட்டுகள், திரைக்கு கீழே கொஞ்ச தூரத்தில் கேமிரா, ‘என்னடா நடக்குதுஎன்று எட்டிப் பார்த்தால்சன் பிக்சர்ஸ்குழுவினர் ஒரு படையோடு வந்திருந்தனர். ‘ஹையயோஎன்று வடிவேலு கணக்காக பதறினால், ‘இன்னிக்கு என்ன சமச்சீங்கஎன்று டி.வி.யில் மொக்க போடும் ஒரு வி.ஜே மேடையேறினார். தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சன் பிக்சர்ஸ் ஒரு குடும்ப படத்தை மிகப் பெரிய போராட்டத்திற்கு பின்னர் தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறார்களாம். படம் massive hit ஆம். (அது ரிலீஸான ரெண்டாவது நாள். கமலா தியேட்டர், மேட்னி.). நடிகர் பரத் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் மேடைக்கு வந்து, சன் பிக்ஸர்ஸ் இல்லையென்றால் எங்களுக்கு காலைல டிஃபன் கூட கெடச்சிருக்காதுஎன்ற ரேஞ்சில் பேச, காதுகளில் செக்கச்செவேலென ரத்தம். பத்து நிமிடத்திற்கு பிறகுநாங்க கிளம்பவா?’ என்று அவர்கள் உத்தரவு கேட்க, கூட்டம்ம்ஹூம்என்று கத்துகிறது. ‘வேற யாரு வரணும்என்று தொகுப்பாளர் கேட்க, ‘தமன்னாஎன்று மொத்த கூட்டமே கத்த, அடுத்த நொடி தமன்னா எங்கிருந்தோ புயலென உள்ளே நுழைகிறார். அதற்கு பிறகு அரை மணி நேரத்திற்கு பரத்தையும் டைரக்டரையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. கிட்டதட்ட படத்திலும் அதே கதை தான்!

பேச்சுப்போட்டியில் ஒரே தலைப்பில் எல்லோரும் பேச தயாராக இருக்கும் போது, நமக்கு முன்னால் ஒரு திறமையான போட்டியாளர் பேசிவிட்டால், நாம் பேச நினைத்தது எல்லாம் தீர்ந்து போகும். உண்மையிலேயே திறமை இருந்தால், நாமும் அதையே பேசலாம், நம் பாணியில். அத்தனை திறமையில்லாதவர்கள், சரக்கில்லாதவர்கள், சவசவ என்று சொன்னதையே திரும்ப சொல்லி ஒப்பேற்றி விட்டு போகலாம். இரண்டாவது வகை தான்கண்டேன் காதலை‘. ஹிந்தியில் கரீனாவும் ஷாகித் கபூரும் jab they metஇன் போது காதலை அறியாமல், போக போக காதலை கண்ட படத்தை ரீமேக்கிருக்கிறார்கள்.நான் தேனிப் பொண்ணுஎன்று சொல்வது மட்டும் கொஞ்சம் பொருந்தவில்லையே தவிர, தமன்னா தான் படத்தின் ராணித் தேனீ. தண்ணீர் பாட்டிலுக்கு சில்லறையை திருப்பிக் கேட்கும் சுவாரசியத்தில் ரயிலை தவற விடும் போது, ஒரிஜினலில் கரீனா கைகளால் முகத்தை அழுத்திக்கொண்டு ஒரு ரியாக்ஷன் தருவாரே, ஆஹ்! பைக்கில் பின்னால் வரும் ஜோக்கரிடம் (இந்தியில் தான் அவர் ஜோக்கர், தமிழில் பாக்ஸர் போல இருக்கிறார்), ‘மேன் வோ நஹிஎன்று எத்தனை அழகாக கரீனா சொல்லுவார்? இப்படியெல்லாம் தமன்னாவிடம் எதிர்பார்த்தால், கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் சின்சியராக நடித்திருக்கிறார். பின்பாதியில் பயங்கரமாக சொதப்புவாரோ என்று பார்த்தால், சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ், ‘நான் எவ்ளோ லூஸு மாதிரி இருந்திருக்கிறேன்என்று அழும் போது, நிஜமாகவே அழுதிருக்கிறார். படத்தின் ஒரே ஒரே ஆறுதல் தமன்னா!

முதல் காட்சியில், வாழ்க்கையின் எல்லாம் கட்டத்தில் தோற்று விட்ட வெறுப்பில், தளர்ந்த போன நடையில் பரத் நடந்து வரவேண்டும். அங்கேயே பரத் காலி. அதற்கு பிறகு எங்குமே எழுந்திருக்கவேயில்லை.டிரையினை மிஸ் பண்ற மாதிரி ஒரு கனவு வந்துச்சுஎன்று சொல்வது எத்தனை அழகான பொருத்தமான சிம்பாலஜி. அந்த காட்சிக்கு பொருத்தமாகபாஆஆஆஅங்என்று டிரெயின் ஓடுற சத்தம் எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட ஃபீலிங்கே வர்லியே?? பரத்தின் அம்மாவினுடைய கதை, தமன்னாவின் முதல் காதல் கதை, பரத் தமன்னா காதல் கதை, எதிலுமே கொஞ்சம் கூட சங்கதி இல்லை. ஒரிஜினலின் பாடல் வரிகளில் கூட அத்தனை ஆழம் (சிலது இயக்குனரே எழுதியது), இங்கு பாட்டெல்லாம் சோ சோ! (தமன்னாவின் அழகை பார்க்கதென்னாங்காயில் கூட மூணாம் கண்ணு முளைக்கிறதேஎன்றெழுதியது மட்டும் சுகம், நிஜம்) ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் லவ் அட் ப்ஃர்ஸ்ட் சைட் எல்லாம் இல்லாமல் உணர்வுபூர்வமாக ஒரு கதை என்று ஆவலாக இருந்தால், Just we met என்று ஏனோ தானோ என்றிருக்கிறது படம்.

முன்னாஅசோகவனம் படத்தில் என் ரோல் இருக்குமா வெட்டிடுவாங்களா என்ற குழப்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார். ஏகபட்ட மக்கள் திரையில் வலம் வருகிறார்கள். யாரையும் நினைவில்லை.

இந்த தலைமுறை தமிழ் இயக்குனர்களில் பலருக்கு, எமோஷன்களை கையாளுவதற்கு ரொம்பவே பயம். தியேட்டருக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம், காலேஜ் பையன்கள் அமர்ந்திருக்கும் குட்டிச் சுவர் இருக்கும் தெருவில் நடப்பது போல பயந்து பயந்தே வரும் இளம்பெண்கள் போல வருகின்றன. முதல் ரீலிலேயே கமெண்ட் பறக்கத் துவங்கி விடுகிறது. இதை தடுப்பதற்காக, அவர்களே ஒரு காமெடியனை படத்தில் நுழைத்து, படத்தின் எல்லா சீரியஸ் எமோஷனல் காட்சிகளில் கமெண்ட் அடிக்க வைத்து விடுகிறார்கள். கண்ணனின் முந்தைய படமானஜெயம்கொண்டான்படத்தில் எப்படி விவேக் எல்லா காட்சிகளிலும் மூக்கை நுழைத்தாரோ, அது போல இந்த படத்தில் சந்தானம். இப்படி துக்கடாவாக சேர்க்கப்படும் விஷயங்கள் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் பிளஸ்ஸாக மாறுவது தான் கொடுமை!படத்திற்கு ஒரே ஒரு பெருமை கண்டிப்பாக உண்டு. ரீமேக் ராஜாவிற்கு கூட இல்லாத பெருமை. வெளிநாட்டில் இருக்கும் என்னுடைய அக்கா அம்மாவிடம்அடுத்து ரெண்டு ஸ்பூன் உப்பா? எவ்ளோ மொளகா?’ என்று கேட்டு கேட்டு செய்வது போல, ‘பார்த்து, பார்த்துசெய்திருக்கிறார்கள். காஸ்ட்யூம் மாறினால் கூட சாமி கண்ண குத்திடும் ரேஞ்சுக்கு படத்தை இறுக்கத் தழுவியிருக்கிறார்கள். சமையல் முடிந்ததும் அக்கா திரும்ப அழைத்து, ‘என்ன இருந்தாலும் உன் கை பக்குவம் வரலியேஎன்று வருத்தபடுவது தான் மிச்சம்!

அடபோங்கப்பா, ரிவியு கூட மொக்கையாயிடுச்சு.—————————————————————————————————————————————————————–

copy-of-movie-popcornபடத்தின் ஒரே (ஆறுதலான) ஃபீலிங் கட்டம், சுரேஷ் வாத்கர் கடித்து துப்பி பாடியிருக்கும் அந்த சோகப்பாட்டுக்காக ரிசர்வ்ட்.

—————————————————————————————————————————————————————–
soft_drink1

‘கேடி’, ‘ஆனந்த தாண்டவம்’, ‘Happy days’ எல்லாம் பார்த்த பின் இதில் தமன்னா செமத்தியாக முன்னேறியிருக்கிறார்.

பாதி drink சின்மயிக்கு, இப்பவே சொல்ட்டேன் ஆமா!

—————————————————————————————————————————————————————–

‘சன் பிக்ஸர்ஸ்’லேர்ந்து யாராச்சும் வந்தா உடனே எஸ்கேப் ஆக. copy-of-exit-sign

(தமன்னாவிடம் கேட்கபட்ட கேள்வி – தொடர்ந்து மூன்று சன் பிக்சர்ஸ் திரைப்படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். Do you think its your luck factor?)
—————————————————————————————————————————————————————–

kanden-kadhalai-review-stip-with-stars
————————————————————————————————–

ஹையயோ, இங்கயும் சூர்யா ஜோதிகா குடும்ப ஃபோட்டோவ போட்டுட்டாங்களா? ‘ஆனந்பாபுனு ஏன் போட்டாங்க? ‘ஆனந்த்பாபு தானே? ஃபெஃப்ஸி விஜயன்எப்போ பெப்ஸி விஜயன் ஆனாரு? , இவ்ளோ அஷோஷியட் டைரக்டர்ஸா? காயத்ரி ரகுராம் கொரியோக்ராஃபர் ஆயிட்டாங்களா? இங்க பாரேன், சவுத் ஆஃப்ரிகாலேர்ந்து ஒரு ஸ்டண்ட் மாஸ்டராம், பேரு ஆனா ஃப்ராண்ஸாம்! – இப்படியெல்லாம் டைட்டில் போடும் போது உன்னிப்பாக கவனித்து நோட் செய்து ஆரம்பித்தால், அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கு நோட் செய்ய ஒன்றுமேயில்லை. படம் முடியும் போது போடுகிற டைட்டில்ஸில்கதை விவாதக் குழுஎன்று ஏழெட்டு பேரை நோட் செய்யும் போது வருதே ஒரு ஆத்திரம்! வடிவேலு நியாயப்படி சூர்யாவிற்கு அடுத்தபடியாக பெயர் போட்டிருக்க வேண்டும். அவரின் காமெடிக்கும்ஹஸிலி ஃபிஸிலிக்கும்மட்டும் தியேட்டர் அதிருகிறது. சூர்யா கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுவது கூட தாங்கிக்கொள்ளலாம், கடைசியில்உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பாஎன்று செண்டிமெண்டலாக ஃபீல் செய்யும் போது வாரணம்ஆயிரம்! ஆய்த எழுத்தெல்லாம் முடித்து விட்டு, அ ஃபார் அயன், ஆ ஃபார் ஆதவன் என்று மசாலாப் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கிறார் சூர்யா. வாழ்க வளமுடன்!

adhavan-review-stip-with-stars

Written by aravind

நவம்பர் 8, 2009 இல் 2:40 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with