இசையலைகள் (கவிதைகள்)

ஒலிச்சித்திரம்
பழகிச் சலித்த
கறுப்பு வெள்ளை
சித்திரமென
கிடக்கிற
நகரத்தின் ஊடே
பல வண்ணப்
பரவசக் தீற்றலென
பறக்கிறேன்
பண்பலை பரப்பும்
புத்தம் புதுப்
பாடலொன்றைக் கேட்டபடி
—————————–
ஒரு கிளைப் பூக்கள்
காதுகள் வழியே
இதமான இசைகள் வழிய
கைப்பிடி கம்பியின் மேல்
நானும்
ஜன்னல் மேல்
பக்கத்து இருக்கைக்காரரும்
தலைகள் சாய்த்திருக்கிறோம்.
இரவுக்காற்றின்
கிளையில்
பூத்திருக்கின்றன
இரு பூக்கள்
—————————-
ரகசியப்பாடல்
எந்தப் பாடலையும்
முழுதாக கேட்க
மனமில்லாமல்
கிசுகிசுத்துக்கொண்டிருக்கும்
இரவு நகரத்தின்
எட்டு பண்பலை நிலையங்களை
தாண்டியபடி
ஏதோ யோசனையுடன்
விரல்
நடக்கிறது
முன்னும் பின்னுமாக
ஏதேதோ பாடல்களின்
ஏதேதோ வரிகள் கலந்த
விசித்திரப் பாடல்
இது
திடீரென்று
ஒலிபரப்பை நிறுத்திவிட்டது
மூன்றாவது நிலையம்
விரல்கள்
அழுத்தி அழுத்தி
காதுகளை அடைக்கிற
நிசப்தத்தை
எதிர்பார்த்தே
கிடக்கிறேன்
பின்
மெதுவாக
கேட்கத் துவங்கினேன்
மூன்றாவது நிலையம்
ஒலிபரப்பிக்கொண்டிருந்த
ரகசியப் பாடலொன்றை
—————————-
இசைக்கோலம்
மெதுவாக
மேலெழும்பியபடி
முழு வட்டமிடும்
மேம்பாலத்தில்
விரைந்தபடி
நான்
இணைத்துக் கொண்டிருக்கிறேன்
காற்றடுக்கின்
எல்லா தளங்களிலும்
இப்போது நிரம்பியிருக்கும்
இந்தப் பாடலின்
இசைப்புள்ளிகளை.
————————-