ஈரம்
‘இப்போதைக்கு கொலையாளியோட பேர மரணம்னு வெச்சுப்போம்’ என்ற ஒற்றை வசனம், அசத்தலான ஒளிப்பதிவு, தலை தெறிக்க வான்நோக்கி பறக்கும் குடை என தொலைகாட்சி டீசர்களிலேயே வசீகரித்த படம். காதல் இல்லாமல் ஒரு தமிழ் சினிமா எடுப்பது அத்தனை எளிதில்லை. ‘வேற எதாச்சும் பண்ணலாமே’ என்று ரூம் போட்டு யோசித்து ஐடியா பிடித்தாலும், அதில் காதலை சவசவ என நுழைத்து சங்கடப்பட வைப்பார்கள். ஸ்ரீதர் காலத்திலிருந்தே இருக்கும் ‘பழைய காதலியை சந்திப்பது’ என்ற விஷயத்தை, ஒரு திரில்லரில் மிகத் திறமையாக நுழைத்து, வேறு திசையில் கியர் கிளப்பி, பலமாக ‘உள்ளேன் ஐயா’ போடுகிறார் இயக்குனர் அறிவழகன். ஒரு புலனாய்வின் துவக்கத்துக்கு தேவையான முரண்களை காதலை பயன்படுத்தி எழுதியது மட்டுமல்லாமல், அவைகளை அட்டகாசமான காட்சிச்சரமாக கோர்த்து வைத்து, ‘ஒரு நல்ல படத்துக்கு வந்திருக்கீங்க, வாங்க’ என்று வரவேற்கிறார்கள். அதை முதல் படத்திலேயே செய்ததற்கு, ஒரு எஸ்ட்ரா ஷொட்டு!
அறிவும் அழகும் மிளிர தெளிவாக யோசித்து விட்டு, நன்றாக திரைக்கதையும் அமைத்து விட்டு (கொஞ்சம் இசகுபிசகு உண்டு), நடிகர்களை கூட கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லிவிட்டு, அறிவழகன் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் துணையுடன் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இவர்கள் நால்வரும் தான் படத்தின் ஹீரோக்கள். (புத்திசாலித்தனமாக, திருட்டு வி.சி.டி நேயர்களுக்குப் பல சுகங்களை திருடியிருக்கிறார்கள்.)
Investigative thriller எடுக்கும் போது, நாயக போலீஸ் அதிகாரியை பார்ப்பவர்களின் ஐ.க்யூ விட கொஞ்சம் அதிகமாக வைப்பது ஒரு வழக்கம். அதுவும் ‘இவன் நல்லா யோசிப்பான்’ என்று நிருபிக்க பல வித்தைகள் செய்ய வைப்பது உண்டு. சில சமயங்களில் அவர்களின் அதிகப்பிரசங்கித்தனங்கள் சிரிப்பை வர வைப்பதும் கூட உண்டு. (ஃபோன் நம்பர்ல மொத்தம் 10 டிஜிட் தான் இருக்கு. இது கண்டிப்பா மொபைல் நம்பர் தான்) அப்படி எந்த முயற்சியும் செய்யாமல், வாசு (ஆதி) நம்மில் ஒருவராகவே வருவது ரொம்ப ஆறுதல். அந்த ‘தூக்க மாத்திரை’ கண்டுபிடிப்பில் மட்டும் அறிவை காட்டி கை தட்டல் பெறுகிறார். மூச்சை நிறுத்தியே நிறுத்து விடுகிற இடைவேளைக் காட்சியில், இது வாசுவின் கையை மீறிய கேஸ் என்று புரிகிற போது, வாசுவின் கதாபாத்திரத்தை கச்சிதமாகவே எழுதியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
‘கொலைக்கான ஆயுதம் H2O’ என்று டிரையிலரிலேயே சொல்லிவிட்டார்கள். தண்ணீரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?! ஒரு ஸ்டார் அதற்காகவே அதிகமாக கொடுக்கலாம் போல! வீட்டிற்கு வந்து குழாயை திருப்பியதும் ஒரு நொடி அதை உற்று பார்க்காமல் இருக்க முடியவில்லை.
காய்கறி கடையில் கிசுகிசு ஒன்று பேசப்படுகிறது. ஒரு அம்மாள் இன்னொரு அம்மாளிடம் ஏதோ சொல்கிறார். கேமரா தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. (கிளம்பப் போகிற புரளிப் புயலின் மையம் போல). அந்த அம்மாள் அப்படியே அபார்ட்மெண்டுக்கு நடக்க, கேமிரா அப்படியே எல்லா அபார்ட்மெண்ட்டையும் ஒரு ‘மேற்பார்வை’ பார்க்கிறது. கிசுகிசு பரவி விட்டது என்று அங்கேயே கச்சிதமாக புரிந்து விட, பிண்ணனியில் ஏன் ஒரு நூறு தொலைபேசிகள் அலறி இத்தனை obvious ஆக அதை சொல்ல வேண்டும்? இப்படி படம் நெடுக பல காட்சிகள், almost there-ஆக இருக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியை வைத்தே படத்தை அழகாக தராசில் நிறுத்தலாம். சின்னக் குழந்தை தரும் முத்தம் கொள்ளை அழகு; ‘அவரோட, என்னோட தப்பு’ என்று சொல்லிவிட்டு வலது கையால் காஃபி குடிப்பது – அறிவு; ஆனால், பாலாவுக்கு உண்மை தெரியணும்னு ரம்யா ஆசைப்படலியா என்ற சின்னக் கேள்வி – நெருடல்;
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை விட, செத்து செத்து விளையாடுகிற சைட் ஆர்டிஸ்ட்டுகள் கவனம் ஈர்க்கிறார்கள். ஆனால், ‘ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் கெட்டவனும், ஒவ்வொரு கெட்டவன்குள்ளேயும் ஒரு நல்லவனும்’ இருக்கிற கலிகாலத்தில், செத்துப் போகிற சைட் ஆர்டிஸ்ட்டுகள் அதை justify செய்வது போல, முழுக்க முழுக்க கெட்டவர்களாக அமைத்திருப்பது, என்னதான் கதைக்குத் தேவையான perfect worldஆக இருப்பினும், லேசாக நெருடல். டீச்சர் மாமனார் பேப்பர் திருத்திக் கொண்டே பேசுவது, ஸ்ரீரங்கத்து தங்கச்சி சென்னையிலும் காலேஜ் பையை நெஞ்சோடு கட்டிக்கொண்டே இருப்பது, ரம்யா (சிந்து) ரொம்ப கேஷுவலாக ‘பிரிவோம் சந்திப்போம்’ படிப்பது என டீடெய்ல்ஸ் யோசித்தவர்கள், பாலா (நந்தா) கதாபாத்திரத்தை இத்தனை கெடுத்திருக்க வேண்டாம். ‘பிப்ரவரி 31 என் பொறந்த நாள்னு சொன்னா நம்புவீங்களா’ போன்ற அழகிய வசனங்களுக்கிடையே, பாலா சும்மா சும்மா ‘எனக்கு செகண்ட் ஹாண்ட் கார் பிடிக்காது’ என்று சொல்வது கடுப்படுக்கிறது.
ஒன்று ஓவர் இன்னொஸெண்ட்டாகவோ, இல்லை ஓவர் பேச்சாகவோ சுற்றிக் கொண்டிருந்த சரண்யா மோகனை, தலையில் தட்டி தண்ணீர் குடிக்க வைத்திருக்கிறார்கள். ரகசியம் பேசும் போது நந்தியாக வருகிற அம்மாவை விரட்ட, ஒரு புருவ உயர்த்தலில் சமையலறை பாத்திரத்தை உருட்டி உடைக்கையில், நெஞ்சில் கலீர்!
படத்தின் ஒளிப்பதிவாளருக்கு ஒரு எக்ஸ்ட்ரா பாராட்டு. கோப்பையில் மாத்திரைகளை போடுவதில் கூட அழகு காட்டுகிறார். ஸ்ரீரங்கத்து மாமனாரை அறிமுகப்படுத்துகையில் ‘பிராமண கதாபாத்திரம்’ பிண்ணனி இசைக்கு உபயோகபடுத்துகிற க்ளீஷே வாத்தியங்கள் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் இடித்தாலும், தமனின் பிண்ணனி இசை ஜில் திரில்.
கல்யாணி கதாபாத்திரத்தின் சாவுக்கு வந்துவிட்டு வாசு வெளியே, வந்த கூட்டத்தில் யாரோ ‘உயிரோட இருந்தப்ப எப்படி வயித்தெரிச்சல கொட்டிகிட்டா’ என்று போகிற போக்கில் பேசுவது, அபார்ட்மெண்ட் மீட்டிங்கில் பிரச்சினைகள் பட்டியலில் ‘ஹோமம்,வாஸ்து’ என்று சொல்லிவிட்டு கட்டக் கடைசியாக ‘பேச்சிலர்ஸ துரத்துங்க சார்’ என்று சேர்ப்பது, மாறு வேடப் போட்டி சின்னப் பெண் பேய் முகத்துடன் பயமுறுத்துவது (பின்நவீனத்துவம்?!
), ஒவ்வொரு மரணத்தையும் மிகக்கச்சிதமாக அரங்கேற்றியது, வாதத்துக்குறிய விஷயத்தை நெருடாமல் கொண்டு சென்றது, இதமான இயல்பான காதல், பழைய காதலில் மீது காதலன் கொண்ட நம்பிக்கை, மனைவி மீது கணவன் கொண்ட சந்தேகம் என பலப்பல விஷயங்களில் ஈர்க்கிறார் அறிவழகன்.
அடுத்த படம் எப்போ சார்?
——————————————————————————————————————————————————
கொஞ்சமே வருகிற ‘தரையிறங்கிய பறவை’ பாடலோடு சேர்ந்து தலையாட்டியபடி கொறிக்க; ‘அங்க பாரேன் தண்ணி சொட்டுது’ என்று பரபரவென கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுகொள்ள; மரணங்கள் நிகழ்கையில் எல்லாம் வாயை பிளந்தபடி, பாப்கார்ன் பாக்கெட்டை மறந்திருக்க!
———————————————————————————————————————————————
தொடர்ந்து, கவன ஈர்ப்புப் படங்களை தீர்மானத்தோடு கொண்டு வருகிற எஸ் பிக்ஸர்ஸுக்கு, சியர்ஸ்!
காமிராமேன் மனோஜ் பரமாஹம்ஸாவிற்கு ஒரு எக்ஸ்ட்ரா ட்ரிங்க்!
——————————————————————————————————————————————
‘அந்த தொட்டி மீன் சிக்குறது, அக்வேரியத்துல கடல்கன்னிக்கு திடீர்னு ‘மூச்சு முட்டுறது’ எல்லாம் செம செம்பாலிஸம்ல?’, ‘கடைசி ஃபைட்டுல வாசு முகத்த இருட்டாவே காட்னது செம ஸ்மார்ட்ல?’ என்றெல்லாம் பேசியபடி வெளியேறுவதால் EXIT boardஐ பார்க்காமல் நடக்கலாம். அப்படியே பார்த்தாலும், ‘ஹே இதுவும் செகப்பு கலர்’ என்று நினைக்கலாம்!
——————————————————————————————————————————————————-

A good review..
சி.சரவணகார்த்திகேயன்
செப்டம்பர் 15, 2009 இல் 2:36 மு.பகல்
Excellent write up da…
hearing lot of good news about the movie and hearing the same from you gives an assurance
, loved the Sirumalai cinemas concept too…
Way to go dude, padam paathutu solren
VIgnesh
செப்டம்பர் 15, 2009 இல் 10:50 மு.பகல்
CSK – Thanks. Thanks for adding the link to your post
Vignesh – Thanks man! Yeah do check out, and ofcourse this rating was not on ‘olaga cinema scale’
aravind
செப்டம்பர் 17, 2009 இல் 4:19 பிற்பகல்
‘ஓ பக்கங்கள்’ (பூச்செண்டு, திட்டு, குட்டு) மாதிரி பாப்கார்ன்லாம் போட்டு அசத்திட்டீங்க!
)
சிறுமழை சினிமாஸ் பேனரும் சுவாரசியம்!
படம் பார்க்க முயற்சி பண்றேன் (வேளச்சேரி ‘ராஜலக்ஷ்மி’லயாச்சும்
அன்புடன்
வெங்கட்ரமணன்
venkatramanan
செப்டம்பர் 18, 2009 இல் 2:25 மு.பகல்
வெங்கட் – நன்றி நண்பரே. நீங்கள் சொல்கிற அதே ஐடியாவில் தான் செய்திருக்கிறேன். அந்த பாப்கார்ன், ட்ரிங்க் மற்றும் EXITஐ இது திட்டு இது பூச்செண்டு என்று fix ஆகவில்லை. முடிந்தவரை flexibleஆக வைத்திருக்க விரும்புகிறேன்.
aravind
செப்டம்பர் 20, 2009 இல் 7:52 மு.பகல்
Deliberately put away reading ur this review before watching the movie. Padam paathutu padicha innum better ah irukum nu thonuchu. Movie was classy aana second half was a kind of let down for me. Felt that the ‘aavi is only the killer revelation’ came a bit too early. Killed the suspense.Felt like all the deaths could have been fashioned like accidents or coincidences instead of the aavi directly coming and stabbing with umbrella and banging the guy against mirrors. And yeah Nandha character konjam over ah ve grey shaded, that it was almost entirely black. Loved the climax and the red symbolism though.Cinematography was too good that it became distracting (was thinking of this shot and that shot rather than the story as such
) BTW why am i writing a review in ur comment section?

PS: Love the sirumazhai cinemas concept. Kalakku!!
Amilie
செப்டம்பர் 21, 2009 இல் 4:56 மு.பகல்
அருமையான விமர்சனம். ரசித்து எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஊர்சுற்றி
செப்டம்பர் 21, 2009 இல் 7:58 மு.பகல்
பேராண்மை இன்னும் ‘சிறுமழை சினிமா’வில் வெளியாகவில்லையே! ஆணி அதிகமோ?
அன்புடன்
வெங்கட்ரமணன்
venkatramanan
நவம்பர் 6, 2009 இல் 10:59 மு.பகல்
வெங்கட் – இன்னும் பார்க்கவில்லை. ஆதவன், கண்டேன் காதலை பார்த்தாச்சு. கணினி கொஞ்சம் ரிப்பேர். எதும் எழுத முடியவில்லை நேற்று வரை.
aravind
நவம்பர் 8, 2009 இல் 9:17 மு.பகல்