Archive for செப்டம்பர் 2009
உன்னைப் போல் ஒருவன்
அத்தனை ஆர்பாட்டங்களும், ஆவேசங்களும், வார்த்தைப் போரும் முடிந்த பின்னர், ‘லேப்டாப்’ கட்டிக்கொண்டு கிளம்புகையில் கமல், மோகன்லாலிடம் ‘Nice meeting you’ என்று சொல்லும் போது, அத்தனை இறுக்கத்தையும் மீறி நமக்கு ஒரு சின்னப் புன்னகை வருகிறது. இந்திய திரை ராஜாங்கத்தின் இரண்டு நடிப்பரசர்கள் ஒரு படத்தில் இணைவது எத்தனை விஷேஷம்? இதற்கு எத்தனை காத்திருப்பு? அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ‘ரெண்டு பேருக்கும் எல்லா எக்ஸ்ப்ரணையும் காட்ட ஸ்கோப் வெச்சு வெளுத்து கட்டணும்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு காட்சிகள் எழுதாமல் (அல்லது புதுசாக சேர்க்காமல்
) கச்சிதமாக கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உள்ளது உள்ளபடி அவர்களை உலவ விட்டிருப்பதே படத்தின் ஒரு characteristic ஆக ஜொலிக்கிறது. இது மிகச்சாதாரணமான, மிகக் கச்சிதமான, மிக நேர்மையான, மிக நல்ல ஒரு படம்! ஒரு கபடி விளையாட்டுக்காக முதலிலேயே கோடுகள் கிழித்துவிட்டு அப்படியே களத்தில் குதித்து விறுவிறுவென ஆடி முடிக்கிறார்கள். சியர் லீடர்ஸ் என அயிட்டம் நம்பர், குத்துப் பாட்டு எதுவும் இல்லை. Just to the point.
‘பொன் கிடைத்தாலும் (ரீமேக் செய்ய) ‘A Wednesday’ போன்ற படம் கிடைக்காது’. அதை சிதைக்காமல் திரும்ப எடுத்தது பாராட்டுக்குரியது. ஹிந்திப் படத்தை பாத்தவர்கள் மட்டும் (நான் உட்பட) அதையும் இதையும் ஒப்பிட்டு ஆறு வித்தியாசம் எழுதிக்கொள்ளலாம். எப்படி அந்த ஸ்கிர்ப்ட் தமிழ்நாட்டுல வேல செய்யும் என்ற கேள்விக்கு, புத்திசாலித்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.
சினிமாவைப் பற்றி மிகப் பிரபலமான ஒரு சொற்றொடர், ‘Fiction, not fact’. சினிமா பற்றிய எல்லா வாதங்களுக்கும் இதை பயன்படுத்தலாம். அந்த சொற்றொடரை உடைக்க, எத்தனை நிஜமாக படத்தை எடுக்க முடியுமோ அத்தனை எடுத்திருக்கிறார்கள் (தற்போதைய முதல்வரின் குரலை உபயோகப்படுத்தியது வரை!). ஆனால், அது பார்ப்பவர்களின் மத்தியில் ஏற்படுத்தும் உணர்வுகள் நல்ல முரண்! கொஞ்சம் கவனத்தை சிதறடித்தது என்று கூட சொல்லும் அளவுக்கு. இருந்தும், முடிந்தளவு அதை சுவாரசியமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். (‘கடவுளின் கையா? ஐயோ அது கொஞ்சம் வில்லங்கமான கையாச்சே?’ என்பதில் தொடங்கி, ‘சி.எம் பாத்துட்டு இருப்பாரு, தமிழ்ல பேசு’ என்பது வரை. அந்த காட்சியில் மலையாளி தமிழருக்கு நல்ல தமிழ் வார்த்தைகள் பேச எடுத்துக் கொடுப்பது, அக்குறும்பு!) (சி.எம். வீடு செட்டாமே??).
முதல் சில காட்சிகளில் கமல் சும்மா ஒரு தனியார் டெலிகாம்-இன் சிம் கார்டை எடுத்து உபயோகிக்கும் போது, ‘ஐயோ, எதாச்சும் கேஸ் போட்டுரப்போறாங்க’ என்று பயமேற்படும் பொழுது, (மூலக்கதையை விட) படத்தின் political tone-ஐ இத்தனை ஏற்றி வைத்திருப்பது, ஆச்சரியமான அதிர்ச்சி. அதுவும் ‘கரகர குரலை’ பயன்படுத்திவிட்டு, பின்னர் பொத்தாம் பொதுவாக அரசாங்கம் நீதித்துறை எல்லாவற்றையும் வெளுத்து வாங்குவது, ஆச்சர்யம்! குஜராத் பற்றிய ஒரு வசனம், ‘நிஜமாவே அத தான் கேட்டோமா’ என்று பக்கத்து சீட்டுக்காரரிடம் கேட்கும் அளவுக்கு அப்பட்டம். SPOILER. ‘மோதி(ப்) பார்த்தாலே சாவு தான்’. END OF SPOILERS இது எல்லாமே, கமலின் கடைசி உணர்ச்சிப்பூர்வமான காட்சியை அத்தனை genuine ஆக ஆக்குகின்றன. இந்த படத்தை கமல் மீண்டும் எடுக்க, படத்தின் தரம் மட்டும் காரணம் அல்ல என்று நன்றாகப் புரிகிறது.
மோகன்லால் வருகிற எல்லா காட்சிகளிலுமே ‘லாலேட்ட்டாஆஆஆ’ என்று கத்தலாம் போல. ஆரம்பத்தில் இருக்கும் அமைதி, இறுக்கம் தொடங்கி கடைசியில் கன்னங்கள் லேசாக குலுங்க பேசுவது வரை, அணு அணுவாக அளவிட்டு நடித்திருக்கிறார். தன்னை விட உயர் அதிகாரிகளிடம் பழகுவதாக ஆகட்டும், அடுத்த நிலை அதிகாரிகளிடம் பழகுவது சரி, கனக் கச்சிதம். ‘My girl friend sir’ என்று கேட்கிற போது கொடுக்கிற பாவனை ஆகட்டும், ‘அவனுக்கு இவனுக்கும் ஆறு வித்தியாசமா?’ என்று நக்கலான கோபமாகட்டும், லால் லால் தான்!
தலைமைச் செயலர் பாத்திரத்திற்கு லக்ஷியை யோசித்தற்கே முதலில் ஒரு ஷொட்டு. எதிர்பாராத சில திருப்பங்களினால் ஒரு நாள் அரசு நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து முடிவுகள் எடுக்கவும் அதை செயல்படுத்துவதுமான காட்சிகள் பலே. (ஒரிஜினல் கதையிலும் இல்லாதது). திறமையான நடிகர்கள் சுவையான பாத்திரங்களில் (அதுவும் கமல் படத்தில்) வெளுத்து வாங்குவதை பார்ப்பதே, ஆஹா தனி சுகம். (லக்ஷ்மிக்கு மேக்கப் யாரு போட்டது? கமலா?
)
இரா.முருகனின் வசனங்கள் நல்ல சவுக்கு. அடி வெளுத்திருக்கிறார். அவரின் வசனங்களை கமல்-லால்-லக்ஷ்மி அழகாக வெளிப்படுத்தி முழுதாக்கியிருக்கிறார்கள். ‘கோபத்த காட்ட இந்த உலகமே இருக்கு’, ‘Tonight beer is mine’ போன்ற சில வசனங்கள் டைரக்டாக மும்பையிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட் பிடித்து வந்து சேர்ந்திருக்கிறது.
இரு ராஜாக்களுக்கு இடையில் நடக்கிற யுத்தத்தில், மூன்று முக்கிய சிப்பாய்கள் உண்டு. அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மகா கோட்டை விடல். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமின் gillette vector plus முகம் ஏனோ போலீஸ் உடையை துருத்திக்கொண்டு தனியே தெரிகிறது. அனுஜா ஐயர் கச்சிதம். (ஹிந்தியை விட இங்கே தூள்). சில ஒரு-சீன் -நடிகர்கள் சொதப்பல்.
‘சலங்கை ஒலியில்’ கமலை முழுக்க முழுக்க out-of-focusஇல் புகைப்படம் எடுத்த பொடிப் பையன் தான் இயக்குனர். அதற்கு பிராயசத்தமாக கமலை in-focus-இல் வைத்து எடுத்திருக்கிறார். சர்ஃப் எக்சல் டைரக்ஷன்! (தேடிகிட்டே இருக்கணும், எங்கயாச்சும் இருக்கான்னு!). படத்தில் என்னவோ கொஞ்சம் மிச்சிங் என்று தலையை சொறிய, டைரக்ஷனோ, எடிட்டிங்கோ, பிண்ணனி இசையோ, இல்லை எல்லாமுமோ காரணமாக இருக்கலாம். கடைசியில் கமல் தரப்பு நியாயங்கள் வெளியே வர உதவும் உரையாடல் ஏதோ பேட்டி போல கடுப்படிக்கிறது. (எடிட்டிங்?)
கொஞ்சம் பிசிபேளா பாத், கொஞ்சம் ரசம், ரெண்டு சப்பாத்தி, பொரியல் என்று இருக்கும் தமிழ் சினிமாவில், ஒரே விஷயத்தை சுற்றியே படம் எடுத்தது வரவேற்கத்தக்கது. கனமான ஒப்பனையுடன் மேடையில் நடித்து முடித்துக் களைத்த ஒரு நடிகருடன் அவரது green-roomஇல் அமர்ந்து மனசு விட்டு பேசும் பொழுது, அந்த ஒப்பனை கலைந்த முகத்தின் சின்ன சின்ன பாவனைகள், மேனரிசம்கள் ‘அட’ என்று ஈர்க்குமே, அப்படி இருக்கிறது கமலை பார்க்க. அவரது பாத்திரம் நம்மவராக படைக்கப் பட்டிருக்க, தோற்றத்திலும் ‘நம்மவர்’ கமலாக வருகிறார். கடையில் அமைதியாக தக்காளி பொறுக்கவதில் தொடங்கி மனைவியிடம் common manஆக பேசுவது வரை இதம். கமல் கண்ணீர் சிந்தி நாம் நூறு முறை பார்த்திருந்தாலும் அந்த கடைசி கட்ட வசனங்களும் ஒரு துளி கண்ணீரும், நம் தொண்டையை அடைக்க வைப்பது, முழுக்க முழுக்க கமலின் பெருமை. அந்த சில கணங்கள் படம் நமக்குத் தரும் அழகான பரிசு.
——————————————————————————————————————————————————
ரெண்டு ‘ஹெவி வெயிட்’ டென்னிஸ் ப்ளேயர்கள் விளையாடும் போது பாப் கார்ன் வாங்காமல் போவானேன்?
———————————————————————————————————————————————
அவ்வப்போது ஒவ்வொரு மிடறு குடிப்பது போல பாடல்களை பயன்படுத்தி விட்டு, ஏன் அத்தனை உழைப்பில் பாடல்களை தயார் செய்தார்களோ? அதையும் தவிர்த்து புதுமை செய்திருக்கலாமே?
இல்லை ப்ரொட்யூசர் ரெண்டு பர்ஸ் வைத்திருக்கிறாரா?
——————————————————————————————————————————————
‘இவ்வளவு சீக்கிரம் interval-ஆ?! அது சரி, interval விடாத தமிழ் சினிமா எப்போ தான் சார் வரும்?
——————————————————————————————————————————————————-

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
பனி விழும் முன்னிரவிலோ, மேகங்கள் சூழ்ந்த இளமிருட்டு மாலையிலோ, அடுத்த வண்டியில் போகலாம் என்று, பச்சை நிறத்தில் மெதுவாக உங்கள் முன்னால் வந்து நிற்கும் பேருந்தை நிராகரிக்கும் சுகம் உணர்ந்திருக்கிறீர்களா? நண்பர்களுடனான பேச்சை நீட்டித்துக்கொள்வதற்காக இருக்கலாம், ஏதோ யோசனையாக இருக்கலாம், இல்லை ஏதுமே காரணம் இல்லாமல் இருக்கலாம். ‘அடுத்ததுல போய்க்கலாம்’ என்ற நிச்சயமோ, நிச்சயமற்றத் தன்மையோ , எதிர்பார்ப்போ, எதுவோ. ஒன்று போனால் இன்னொன்று என்பதாக நினைவில் வரிசையாக வந்து விழுகிற எண்ணங்கள் போல, அடுத்தடுத்து வரும் பேருந்துகள் நிறைந்து பொழுதுகள், சொந்த வாகனங்கள் இல்லாத என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையெங்கும் நிறைந்திருக்கின்றன. பத்து வயது முதல் எனக்கு பேருந்துகளுடன் பழக்கம். வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு வண்ணங்களில், வேறு வேறு பாதைகளில்.
***********
பத்தாம் வகுப்பு தொடங்கி நான்கைந்து மாதங்கள் கழிந்த பிறகு அவள் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். நம் மொழி பேசுபவள் இல்லை. முக்கியமான படிப்பாண்டு என்பதால், அதுவரை நடந்த பாடங்களை வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் இரண்டே நாளில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அவளுக்குத் தந்தோம். எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னது தான் அவள் அதிகபட்சமாக பேசியது. கூர்மையான நாசியும் பார்வையும் கொண்டவள். அவளிடம் பேச வேண்டும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரு சனிக்கிழமை, அதிக தொலைவு இருக்கும் வேறொரு பள்ளிக்கு ஒரு விழாவிற்காக எல்லாருமாக ஒரு பேருந்தில் பயணமானோம். நாள் முழுக்க விளையாட்டு. அன்றைய மாலைப்பொழுது மிக அழகாக இருண்டது. மிக வேகமாக பறக்கிற பேருந்தில், அசதி தரக்கூடிய சோம்பலும் அமைதியுமாக அத்தனை பேரும் இருக்கைகளில் சரிந்திருக்கிறோம். அவளின் சிகப்பு நிறத்தில் வெள்ளைக் கோடுகள் கொண்ட சட்டையும், குதிரை வால் கூந்தலும் மட்டும் தெரிய, ஆளில்லாத இரண்டு இருக்கைகள் தாண்டி முன்னே ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறாள். தீவிரமான ஏதோ யோசனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் இருக்க, நானும் புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். வெளியே சூழல் இருள இருள, பேருந்தின் விளக்குகள் கொஞ்சம் பெரிய பெரிய புன்னகைகள் சிந்த தொடங்கியது. அப்போதும் ஏதும் பேசவில்லை. ஒரு நாவலின் கடைசி பக்கம் தருவது போல, ஒரு திரைப்படத்தின் முழுமை தருவது போல, அவளுக்குப் பிறகு நான் இறங்க நேர்ந்தது ஏனோ மகிழ்ச்சியைத் தந்தது. அதற்குப் பிறகான நாட்கள் பற்றிய நினைவுகளில் எத்தனை முயன்றும் அவளை பொருத்த இயலவேவில்லை.
**********
அத்தனை அழுக்கான ஆடைகள் அவருக்கு. பாக்கு போட்டு கறை படிந்த பற்கள். முகம் சுளிக்க வைக்கிற தோற்றம். ஆனால் அவர் மது அருந்திவிட்டு வந்திருக்கவில்லை. ஏறியதிலிருந்து தேடித் தேடி மூன்று ரூபாயை சில்லறைகளாக எடுத்து, யாரிடம் தருவது என்று யோசித்து, என்னிடம் தந்தார். அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமாம். நடத்துனர் எங்கோ பின்னால் இருக்கிறார். எட்டி எட்டிப் பார்த்து விட்டு, இவரிடம் திரும்பி ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்வதற்குள் பேருந்து நின்றுவிட்டது. யாரோ ‘பெரிசு உன் இடம் வந்துடுச்சு’ என்கிறார்கள். அவர் ஒரே ஒரு முறை என்னை திரும்பிப் பார்த்தார். எனக்கு ஏதேனும் புரிந்ததா என்று கூட சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் மனதிற்குள் தடால் என்று நானே விழுந்தது போல ஒரு அதிர்வு. ஒரு வேளை இந்த மூன்று ரூபாய் அவருக்கு ரொம்ப முக்கியமோ? தினசரி தேவைக்குத் தேவையோ? விருட்டென முன்னே நகர்ந்து படிகளை அடைவதற்குள் அவர் இறங்கி விட்டிருந்தார். ‘பெரியவரே’ என்று கூப்பிட்டு சில்லறைகளை கை மாற்றியதும், அவரே அறியாமல் அவர் புன்னகைக்க, பேருந்து புகை விட்டு புறப்பட்டது. அவர் தந்த சில்லறைகளில் இருந்த லேசான எண்ணைப் பிசுக்கு, விரல்களில் கொஞ்ச நேரம் பிசுபிசுத்தது.
**********
சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு (இந்த நகரத்தில் மிஞ்சியிருந்த கடைசி கல்லூரித் தோழனை வழியனுப்ப) சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் புறப்படுகையில் ரயிலா பேருந்தா என்று யோசித்தேன். பத்தரை மணிக்கு காற்று வாங்கும் பேருந்தில் சில நினைவுகளை அசைபோட்டபடி மிகச்சிலருடன் பயணிக்கலாமென, பேருந்து நிறுத்தத்திற்கு சென்று விட்டேன். ஏராளமான மக்களை அடைத்துக்கொண்டு வந்து நின்றது பேருந்து. சென்ட்ரலில் இறங்கும் போது, எதிர்பார்த்ததை விட அதிகமான நினைவுகளை அசைபோட்டபடி இறங்கினேன்.
**********
எங்கள் ஊரின் ‘எட்டே கால் வண்டி’யோடு ஆறு வருட பழக்கம் இருந்தது. ஏழாம் வகுப்பில் நான் அதில் முதன் முதலில் ஏறியபோது, ‘உன் பேர் என்ன?’ என்று கேட்ட பனிரெண்டாம் வகுப்பு அக்காக்கள், வருடங்கள் உருண்ட பின் புதுத்தாலியோடு கணவனோடு அமர்ந்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்து, சென்னைக்கு தொலைந்து போயிருக்கிறார்கள். மொத்த எட்டு வருடத்திலும் இரண்டே இரண்டு ஓட்டுனர்கள், இரண்டே இரண்டு நடத்துனர்கள். நடத்துனரின் மகன் வெவ்வேறு இடங்களில் இறங்கினாலும், நடத்துனர் எங்கே என்று கேட்காமல் டிக்கெட் கிழித்துக் கொடுப்பார். நாற்பது கிலோமீட்டர் பயணிக்கும் பேருந்தில், மொத்தமாக ஒரு பத்து பதினைந்து மாணவ மாணவிகள் இருபதாவது கிலோமீட்டரில் இறங்கிவிட, தினசரி பயணிக்கும் நபர்களுக்கு சுவாரசியமான திரைப்படத்தின் இடைவேளை அங்கே விழும். எங்களுக்கு முன்னே படித்து முடித்தவர்கள் வேலை தேடி எங்களுடனே வருவார்கள். தினசரி மூன்று இருக்கைகள் பிடித்து வைக்கும் பழக்கம் இருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு சென்னை போன நாட்களில் வண்ண ஆடையில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து சென்றிருக்கிறேன். அம்மாவோ அக்காக்களோ அதில் வருவதாக சொல்லிவிடுகிற மாலைப்பொழுதுகளில் அவர்களுக்கு மிகச்சரியான இருக்கைகளை ராஜ மரியாதையுடன் பிடித்து வைத்துக் காத்திருந்திருக்கிறேன். இடது பக்க இருக்கைகளில் வெயில் விழுமென்பதால், எட்டே கால் வண்டியின் வலது புற விலாசம் மட்டுமே நானறிவேன். இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே பேருந்து வரும் – அதன் நெற்றியில் இரண்டு புருவங்கள் போல தடம் எண் எழுதப்பட்டிருப்பதை வைத்தோ, முன் பற்கள் இரண்டு தகர்ந்திருப்பதை வைத்தோ மட்டும் அல்லாமல், இன்னும் அந்தரங்கமான அடையாளங்கள் கொண்டு அதை அறிந்திருந்தோம். தவிர்க்க முடியாத காலைகளில் வேறெதாவது பேருந்து அனுப்பி வைக்கப்பட்டு விடும் பொழுது, வழியில் எதிர் திசையில் வேற்று தடப் பேருந்தாக பொருந்தாத ஆடையணிந்த நபர் போல விரையும் அதைப் பார்த்து, ‘டேய், நம்ம பஸ்ஸு டா!’ என்று சில முறை கத்தியிருக்கிறேன்.
**********
‘எட்டே கால் பேருந்தி’ல் செல்வதற்கான வயது எனக்கில்லை என்று அம்மா நினைத்ததால், டவுன் பள்ளியில் படித்த முதல் மூன்று ஆண்டுகள் பள்ளிப் பேருந்தில் சென்றேன். அதை இந்தப் பேருந்துகள் பற்றிய பதிவில் சேர்க்கவே கூடாது. சொல்லாமல் கொள்ளாமல் சடார் சடாரென திரும்பியும் குதித்தும் ஆனந்த அதிர்வுகள் தந்தபடி, அர்த்தமில்லாத விளையாட்டுகளின் ஆறு சக்கர மைதானமாக, புழுதி பறக்கிற ஏதேதோ கிராமங்களுக்குள் புகுந்து விரைந்து கொண்டிருந்தது அது.
ஈரம்
‘இப்போதைக்கு கொலையாளியோட பேர மரணம்னு வெச்சுப்போம்’ என்ற ஒற்றை வசனம், அசத்தலான ஒளிப்பதிவு, தலை தெறிக்க வான்நோக்கி பறக்கும் குடை என தொலைகாட்சி டீசர்களிலேயே வசீகரித்த படம். காதல் இல்லாமல் ஒரு தமிழ் சினிமா எடுப்பது அத்தனை எளிதில்லை. ‘வேற எதாச்சும் பண்ணலாமே’ என்று ரூம் போட்டு யோசித்து ஐடியா பிடித்தாலும், அதில் காதலை சவசவ என நுழைத்து சங்கடப்பட வைப்பார்கள். ஸ்ரீதர் காலத்திலிருந்தே இருக்கும் ‘பழைய காதலியை சந்திப்பது’ என்ற விஷயத்தை, ஒரு திரில்லரில் மிகத் திறமையாக நுழைத்து, வேறு திசையில் கியர் கிளப்பி, பலமாக ‘உள்ளேன் ஐயா’ போடுகிறார் இயக்குனர் அறிவழகன். ஒரு புலனாய்வின் துவக்கத்துக்கு தேவையான முரண்களை காதலை பயன்படுத்தி எழுதியது மட்டுமல்லாமல், அவைகளை அட்டகாசமான காட்சிச்சரமாக கோர்த்து வைத்து, ‘ஒரு நல்ல படத்துக்கு வந்திருக்கீங்க, வாங்க’ என்று வரவேற்கிறார்கள். அதை முதல் படத்திலேயே செய்ததற்கு, ஒரு எஸ்ட்ரா ஷொட்டு!
அறிவும் அழகும் மிளிர தெளிவாக யோசித்து விட்டு, நன்றாக திரைக்கதையும் அமைத்து விட்டு (கொஞ்சம் இசகுபிசகு உண்டு), நடிகர்களை கூட கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லிவிட்டு, அறிவழகன் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் துணையுடன் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இவர்கள் நால்வரும் தான் படத்தின் ஹீரோக்கள். (புத்திசாலித்தனமாக, திருட்டு வி.சி.டி நேயர்களுக்குப் பல சுகங்களை திருடியிருக்கிறார்கள்.)
Investigative thriller எடுக்கும் போது, நாயக போலீஸ் அதிகாரியை பார்ப்பவர்களின் ஐ.க்யூ விட கொஞ்சம் அதிகமாக வைப்பது ஒரு வழக்கம். அதுவும் ‘இவன் நல்லா யோசிப்பான்’ என்று நிருபிக்க பல வித்தைகள் செய்ய வைப்பது உண்டு. சில சமயங்களில் அவர்களின் அதிகப்பிரசங்கித்தனங்கள் சிரிப்பை வர வைப்பதும் கூட உண்டு. (ஃபோன் நம்பர்ல மொத்தம் 10 டிஜிட் தான் இருக்கு. இது கண்டிப்பா மொபைல் நம்பர் தான்) அப்படி எந்த முயற்சியும் செய்யாமல், வாசு (ஆதி) நம்மில் ஒருவராகவே வருவது ரொம்ப ஆறுதல். அந்த ‘தூக்க மாத்திரை’ கண்டுபிடிப்பில் மட்டும் அறிவை காட்டி கை தட்டல் பெறுகிறார். மூச்சை நிறுத்தியே நிறுத்து விடுகிற இடைவேளைக் காட்சியில், இது வாசுவின் கையை மீறிய கேஸ் என்று புரிகிற போது, வாசுவின் கதாபாத்திரத்தை கச்சிதமாகவே எழுதியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
‘கொலைக்கான ஆயுதம் H2O’ என்று டிரையிலரிலேயே சொல்லிவிட்டார்கள். தண்ணீரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?! ஒரு ஸ்டார் அதற்காகவே அதிகமாக கொடுக்கலாம் போல! வீட்டிற்கு வந்து குழாயை திருப்பியதும் ஒரு நொடி அதை உற்று பார்க்காமல் இருக்க முடியவில்லை.
காய்கறி கடையில் கிசுகிசு ஒன்று பேசப்படுகிறது. ஒரு அம்மாள் இன்னொரு அம்மாளிடம் ஏதோ சொல்கிறார். கேமரா தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. (கிளம்பப் போகிற புரளிப் புயலின் மையம் போல). அந்த அம்மாள் அப்படியே அபார்ட்மெண்டுக்கு நடக்க, கேமிரா அப்படியே எல்லா அபார்ட்மெண்ட்டையும் ஒரு ‘மேற்பார்வை’ பார்க்கிறது. கிசுகிசு பரவி விட்டது என்று அங்கேயே கச்சிதமாக புரிந்து விட, பிண்ணனியில் ஏன் ஒரு நூறு தொலைபேசிகள் அலறி இத்தனை obvious ஆக அதை சொல்ல வேண்டும்? இப்படி படம் நெடுக பல காட்சிகள், almost there-ஆக இருக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியை வைத்தே படத்தை அழகாக தராசில் நிறுத்தலாம். சின்னக் குழந்தை தரும் முத்தம் கொள்ளை அழகு; ‘அவரோட, என்னோட தப்பு’ என்று சொல்லிவிட்டு வலது கையால் காஃபி குடிப்பது – அறிவு; ஆனால், பாலாவுக்கு உண்மை தெரியணும்னு ரம்யா ஆசைப்படலியா என்ற சின்னக் கேள்வி – நெருடல்;
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை விட, செத்து செத்து விளையாடுகிற சைட் ஆர்டிஸ்ட்டுகள் கவனம் ஈர்க்கிறார்கள். ஆனால், ‘ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் கெட்டவனும், ஒவ்வொரு கெட்டவன்குள்ளேயும் ஒரு நல்லவனும்’ இருக்கிற கலிகாலத்தில், செத்துப் போகிற சைட் ஆர்டிஸ்ட்டுகள் அதை justify செய்வது போல, முழுக்க முழுக்க கெட்டவர்களாக அமைத்திருப்பது, என்னதான் கதைக்குத் தேவையான perfect worldஆக இருப்பினும், லேசாக நெருடல். டீச்சர் மாமனார் பேப்பர் திருத்திக் கொண்டே பேசுவது, ஸ்ரீரங்கத்து தங்கச்சி சென்னையிலும் காலேஜ் பையை நெஞ்சோடு கட்டிக்கொண்டே இருப்பது, ரம்யா (சிந்து) ரொம்ப கேஷுவலாக ‘பிரிவோம் சந்திப்போம்’ படிப்பது என டீடெய்ல்ஸ் யோசித்தவர்கள், பாலா (நந்தா) கதாபாத்திரத்தை இத்தனை கெடுத்திருக்க வேண்டாம். ‘பிப்ரவரி 31 என் பொறந்த நாள்னு சொன்னா நம்புவீங்களா’ போன்ற அழகிய வசனங்களுக்கிடையே, பாலா சும்மா சும்மா ‘எனக்கு செகண்ட் ஹாண்ட் கார் பிடிக்காது’ என்று சொல்வது கடுப்படுக்கிறது.
ஒன்று ஓவர் இன்னொஸெண்ட்டாகவோ, இல்லை ஓவர் பேச்சாகவோ சுற்றிக் கொண்டிருந்த சரண்யா மோகனை, தலையில் தட்டி தண்ணீர் குடிக்க வைத்திருக்கிறார்கள். ரகசியம் பேசும் போது நந்தியாக வருகிற அம்மாவை விரட்ட, ஒரு புருவ உயர்த்தலில் சமையலறை பாத்திரத்தை உருட்டி உடைக்கையில், நெஞ்சில் கலீர்!
படத்தின் ஒளிப்பதிவாளருக்கு ஒரு எக்ஸ்ட்ரா பாராட்டு. கோப்பையில் மாத்திரைகளை போடுவதில் கூட அழகு காட்டுகிறார். ஸ்ரீரங்கத்து மாமனாரை அறிமுகப்படுத்துகையில் ‘பிராமண கதாபாத்திரம்’ பிண்ணனி இசைக்கு உபயோகபடுத்துகிற க்ளீஷே வாத்தியங்கள் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் இடித்தாலும், தமனின் பிண்ணனி இசை ஜில் திரில்.
கல்யாணி கதாபாத்திரத்தின் சாவுக்கு வந்துவிட்டு வாசு வெளியே, வந்த கூட்டத்தில் யாரோ ‘உயிரோட இருந்தப்ப எப்படி வயித்தெரிச்சல கொட்டிகிட்டா’ என்று போகிற போக்கில் பேசுவது, அபார்ட்மெண்ட் மீட்டிங்கில் பிரச்சினைகள் பட்டியலில் ‘ஹோமம்,வாஸ்து’ என்று சொல்லிவிட்டு கட்டக் கடைசியாக ‘பேச்சிலர்ஸ துரத்துங்க சார்’ என்று சேர்ப்பது, மாறு வேடப் போட்டி சின்னப் பெண் பேய் முகத்துடன் பயமுறுத்துவது (பின்நவீனத்துவம்?!
), ஒவ்வொரு மரணத்தையும் மிகக்கச்சிதமாக அரங்கேற்றியது, வாதத்துக்குறிய விஷயத்தை நெருடாமல் கொண்டு சென்றது, இதமான இயல்பான காதல், பழைய காதலில் மீது காதலன் கொண்ட நம்பிக்கை, மனைவி மீது கணவன் கொண்ட சந்தேகம் என பலப்பல விஷயங்களில் ஈர்க்கிறார் அறிவழகன்.
அடுத்த படம் எப்போ சார்?
——————————————————————————————————————————————————
கொஞ்சமே வருகிற ‘தரையிறங்கிய பறவை’ பாடலோடு சேர்ந்து தலையாட்டியபடி கொறிக்க; ‘அங்க பாரேன் தண்ணி சொட்டுது’ என்று பரபரவென கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுகொள்ள; மரணங்கள் நிகழ்கையில் எல்லாம் வாயை பிளந்தபடி, பாப்கார்ன் பாக்கெட்டை மறந்திருக்க!
———————————————————————————————————————————————
தொடர்ந்து, கவன ஈர்ப்புப் படங்களை தீர்மானத்தோடு கொண்டு வருகிற எஸ் பிக்ஸர்ஸுக்கு, சியர்ஸ்!
காமிராமேன் மனோஜ் பரமாஹம்ஸாவிற்கு ஒரு எக்ஸ்ட்ரா ட்ரிங்க்!
——————————————————————————————————————————————
‘அந்த தொட்டி மீன் சிக்குறது, அக்வேரியத்துல கடல்கன்னிக்கு திடீர்னு ‘மூச்சு முட்டுறது’ எல்லாம் செம செம்பாலிஸம்ல?’, ‘கடைசி ஃபைட்டுல வாசு முகத்த இருட்டாவே காட்னது செம ஸ்மார்ட்ல?’ என்றெல்லாம் பேசியபடி வெளியேறுவதால் EXIT boardஐ பார்க்காமல் நடக்கலாம். அப்படியே பார்த்தாலும், ‘ஹே இதுவும் செகப்பு கலர்’ என்று நினைக்கலாம்!
——————————————————————————————————————————————————-
