சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஆகஸ்ட் 2009

செகண்ட் செலக்ஷன்

2 மறுமொழிகளுடன்

எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல் முன் கண்ணாடியில் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் மெதுவாக நேரத்தை படிப்படியாக எண்ணியபடி தாண்டிக்கொண்டிருந்த நான், சரியாக பத்து நிமிடம் ஆனதும் கேட்டேன். ‘போலாமா?’

அவர் என்னைப் பார்த்தார். திரும்பி மீனுவை ‘போலாமா?’ என்பது போல பார்த்தார். அவள் தான் உத்தரவு தர வேண்டும்.

மீனு பின் சீட்டில் உட்காருவதற்கும் நிற்பதற்கும் இடையே ஏதோ ஒன்றை சிரமமின்றி செய்துகொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் உருண்டு பிரண்டிருப்பாள் என்பது என் யூகம். ‘டூ மினிட்ஸ் டாட்’.

இன்று அவளுக்கு ரிஸல்ட் வருகிறது. நெட்டிலே தெள்ளத் தெளிவாக போட்டுவிடுவார்கள். இன்று காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம் கழுவியதும் எங்களை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். பொட்டு வைக்க சொன்னால் வைக்கவில்லை. சண்டை வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தேன்.

இரண்டு நிமிடங்கள் இன்னும் ஆகவில்லை. இருந்தும் கேட்டேன். ‘மீனு, போலாமா?’ மீனு எதுவும் சொல்லாமல் இருந்தாள். வெயில் என் பக்கம் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ‘அதான் நெட்லயே போடறாங்களே?. வீட்டுலயே பாத்துருக்கலாம். ரிடிகுலஸ்’. என்னால் சும்மா இருக்க முடியவில்லை.’டோண்ட் யூ எண்ஜாய் திஸ் த்ரில் மாம்?’ மீனுவின் குரலில் முதல்-முறை-ஆச்சரியம் பாசாங்கோடு இருந்தது.

சண்டை வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். ‘இதென்னா ப்ளஸ்டூ ரிஸல்ட்டா, சுவத்துல ஒட்டி வெக்க? அதெல்லாம் செய்வாங்களோ மாட்டாங்களோ? நீங்க போய் முதல்ல விசாரிங்க’. இவர் மேலே எரிந்து விழுந்தேன். மனுஷன் நகரவில்லை.

மீனு எழுந்து அமர்வது கேட்டது. மூச்சை இழுத்து பெருமூச்சாக விட்டாள். ‘ஈஸி, ஈஸி’ என்றாள். திரும்பிப் பார்த்தேன். தியான நிலையில் அமர்ந்திருந்தாள். ‘டாட், நீங்க போய் பாருங்க. ஐ வில் ஸ்டே ஹியர்’.சொல்லி முடிப்பதற்குள் இவருக்குள் மின்சாரம் பாய்வது போல, சட்டென இறங்கிவிட்டார். கிளம்பும் முன் மீனுவைப் பார்த்து ஒரு தம்ஸ் அப்.

அமைதியாக அந்த ப்ளாக் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னிரு சீட்டுகளின் நடுவே மீனு தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிடங்களில் இவர் வெளியே வந்தார். தளர்ந்த நடை. அவர் நடந்து வரும் வரை எனக்கு பக் பக் என்றிருந்தது. ‘என்னாச்சு?’

‘அது.. ஒரு சின்ன குழப்பம்..’

‘டாட், ப்ளீஸ், சீக்கிரம்’

‘உன் பேர் இருக்கு டியர். ஆனா உன் பேரான்னு தெரியல.. பேர் பக்கத்துல ஒரு ப்ராக்கெட் போட்டு 2னு எழுதியிருக்கு’

‘ஷிட். டாட், நான் இனிஷியல் குடுக்கல.. உங்க பேர முழுசா சேத்து குடுத்திருக்கேன். மீனாட்சி ஸ்பேஸ் சங்கர். இஸ் தட் வாட் யு சா?’

‘ம்’ என்றார்.

‘காட்…’ மீனுவுக்கு பி.பி ஏறியது.

‘இவ நம்பர் தெரியாதா உங்களுக்கு. அத போட்டிருப்பாங்களே?’

‘சரியா நினவில்லமா.. டேட் ஆஃப் பெர்த்தும் சேம்..’

‘மீனு, உன் நம்பர் சொல்லு..’

‘மாம், டோண்ட் ஆஸ்க் மீ. டோட்டலி ப்ளாங்க். ஷிட் ஷிட். டாட், ஏன் எனக்கு இந்த பேர் வெச்சீங்க.. வேற பேர் வெச்சிருக்க கூடாதா?’

எனக்குப் பத்திக்கொண்டு வந்தது. அப்பாவும் பெண்ணும் சரியான முட்டாள்கள். தண்ணீர் தெளித்து விட முடியாமல், கூட தரதரவென இழுபட்டுக் கொண்டிருக்கிறேன். வெளியே இறங்கியபடி ‘நான் போய் பாக்குறேன்’ என்றேன். ‘வெயிட் மாம்..’ மீனுவும் இறங்கினாள்.

அது மீனு இல்லை. மீனாட்சி சங்கர் தான். அதே பிறந்த தேதி தான். ஆனால் மீனு இல்லை. இவள் மீனாட்சி சங்கர் (1). அந்த அட்மின் ஆஃபீஸில் இருந்த வெள்ளை சட்டை நபர் சங்கடமாக சிரித்தபடி மறுத்தார். அந்தப் பெண் இப்போது தான் வந்து பணம் கட்டுவது பற்றிக் கேட்டுவிட்டு போனாளாம்.

மூவருமாக திரும்பி நடக்க ஆரம்பித்தோம். அடுத்து என்ன? வேறெதாவது எக்ஸாமாக இருக்கும். அடுத்த மாப்பிள்ளை ஃபோட்டோவை கையில் எடுக்க வேண்டும்.

வீடு வந்து சேர்ந்ததும், இவர் என்னிடம் தனியாக ‘அது அவ நம்பர் இல்லேனு எனக்கு அப்பவே தெரியும். சொல்லல’ என்றார். ‘ரொம்ப சந்தோஷம்‘ என்றேன்.

******

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். மீனு மும்பைக் கல்லூரி ஒன்றின் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தாள். இந்த சமயம் பார்த்து வந்த வரன்களும் சரியாக இல்லை. என்ன செய்வது என்று விழித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரம், செக்யூரிட்டி காபி கலர் கவரை கொண்டு வந்து நீட்டினான். மேலே ஐ.ஐ.டி. அச்சிட்டிருந்தது. என்னவென்று பார்ப்பதற்குள் இவர் பிடுங்கிக்கொண்டு மேலே ஓடிவிட்டார். இரண்டு நிமிடங்கள் பிடிவாதமாக உட்கார்ந்துவிட்டு, நானும் மேலே போனேன்.

மீனு இப்படியும் அப்படியுமாக தலையை ‘இல்லை’ என்று ஆட்டிக்கொண்டிருந்தாள். கட்டில் மேலே ஏறி நின்றிருந்தாள். ‘இது அந்த ஜம்போ வேலயா இருக்கணும். திஸ் ஈஸ் ஃபேக். ராஸ்கல்’ சிரித்தபடி மொபைலை எடுத்தாள். நான் லெட்டரை வாங்கிப் படித்தேன்.

‘செகண்ட் ரவுண்ட் ஆஃப் செல்கஷனில் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறீர்கள் மிஸ்.மீனாட்சி சங்கர். உடனே வந்து பணம் கட்டவும். குறைவான அவகாசம் தந்தமைக்கு வருந்துகிறோம்’. தெள்ளத் தெளிவாக இது ஐ.ஐ.டி கடிதமென தெரிந்தது. மீனுவும், ஜம்போவோ டம்போவோ, அவன் இல்லையென அறிவித்தாள். பத்தாவது நிமிடம் கார் வெளியே புறப்பட்டது.

இந்த முறை நல்லவேளையாக மீனு காரை அந்த மரத்தடியில் நிறுத்த வேண்டுமென்றாலும் சொல்லவில்லை. போனதும் மூவரும் இறங்கி நடக்கத் துவங்கினோம். அதே அட்மின் ஆஃபீஸ். அதே ஆள். அதே சங்கட சிரிப்பு.

‘வெரி ஷார்ட் நோட்டீஸ் இல்லீங்களா?’ அரசாங்க-வருத்தம் தொனித்தது அவர் குரலில்.

‘தட்ஸ் ஓகே. நாட் எ ப்ராப்ளம்’ என்றார் இவர்.

‘நல்லது. எவ்ளோ சீக்கிரம் பணம் கட்ட முடியுமோ கட்டிடுங்க. மேலே கவுண்ட்டர் இருக்கு. நெக்ஸ்ட் வீக் கோர்ஸ் ஸ்டார்ட் ஆயிடும். எனி கொஸ்ட்டீன்ஸ், எங்கிட்ட வாங்க.’

‘பட், இந்த செகண்ட் செல்கஷன்.. இதுக்கு முன்ன நடந்த மாதிரி தெரியல.. மே ஐ நோ..’ மீனு கேட்டதும், நான் அவளை திரும்பிப் பார்த்தேன். எதற்கு இந்த அநாவசியம்?

‘ஷ்யூர். ஆக்ச்சுவலி வெரி அன் எக்ஸ்பெக்டட். ஒரு கேண்டிடேட் ஃபீஸ்லாம் கட்டிட்டு போயிட்டப்புறம் ஆக்ஸிடெண்டுல இறந்துட்டாங்க. தே இன்ஃபார்ம்ட் அஸ் வெரி லேட். அவங்க மேல தப்பு இல்ல. ஸோ, அடுத்து இருந்தவங்கள கூப்பிட்டோம். லக்கிலி, யு ஹாவண்ட்ட் மூவ்ட் டு அதர் காலேஜஸ்..’

‘ஓ..ஒகே..’ நாங்கள் யாரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

‘டூ யு ரிமம்பர்.. நீங்க அன்னிக்கு வந்து விசாரிச்சீங்களே.. அந்தப் பொண்ணு தான்.. உங்க டாட்டரோட நேம்.. சேம் டேட் ஆஃப் பெர்த்…’

..’ என்னையறியாமல் சொன்னேன். மீனுவையும் அவரையும் பார்த்தேன்.

‘வெரி அன்ஃபார்ச்சுனேட். அவங்க பாரண்ட்ஸ் ரீஃப்ண்டுக்கு வந்திருக்காங்க. ரொம்ப சங்கடமா இருக்கு. ஒரே பொண்ணு’.

இன்னும் பத்து நிமிடங்கள் அவரே பேசிவிட்டு, அவரே விடை கொடுத்தார்.

என்னால் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை. யாரந்த பெண்? அன்று அப்படி இப்படி என்று எங்காவது பார்த்திருப்போமோ? சே. பாவம். இவரும் அவளும் ஃபீஸ் எப்போது வந்து கட்டுவது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் முன்னால் நடந்து. காரை வந்தடைந்தேன். இவர்களும் வந்தபின், கார் கிளம்பியது.

அடுத்த நொடி நகரும் என்று நினைத்தபோது, மீனு ‘டாட்’ என்றார். இவர் வண்டியையே நிறுத்தி விட்டார். ‘நீ என்ன சொல்லப்போறேன்னு தெரியும் டியர்’ என்றார்.

என்னது‘ என்றேன். இது ஒரு ஆறேழு வருஷமாகவே நடக்கிறது. எனக்கெதுவும் புரிவதில்லை. ஏதோ ஏடாகூடம் என்று மட்டும் தெரியும். ‘என்னனு சொல்லுங்க‘ மீனுவைப் பார்த்தேன்.

‘ஐ வாண்ட் டூ ஸீ ஹெர் பாரண்ட்ஸ்’ என்றாள்.

‘வாட்? டோண்ட் பீ சில்லி’

‘ஐ வாண்ட் டூ. டாட், வரீங்களா?’

‘ஷ்யூர்’

‘அறிவில்லாம பேசாதீங்க ரெண்டு பேரும். யாரையும் பாக்க வேண்டாம். அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க. நம்ம கிளம்பலாம்’.

நான் சொல்லி முடிப்பதற்குள் மீனு காரை விட்டு இறங்கி முன்னால் வந்தாள். இவரும் இறங்க முற்பட்டார்.எனக்கு கோபம் தலைக்கேறியது. நானும் இறங்கினேன்.

‘ஹவ் இன்ஸென்ஸிட்டிவ் யு ஆர் மீனு? இதென்ன சினிமாவா? போய் என்ன பேசுவ அவங்க கிட்ட? என்ன உங்க பொண்ணு மாதிரி நினச்சிக்கோங்கனு பினாத்துவியா? யார எப்போ பாக்கலாம்னு கூட உனக்கு தெரியல? எல்லோமே ‘திரில் எக்ஸ்பீரியன்ஸ்’ ஆயிடுச்சு உனக்கு. யு ஷுட் நாட் கோ’ பொரிந்து தள்ளினேன்.

‘வாட் நான்ஸென்ஸ்’ என்று சொல்ல வந்த மீனு, வாயை ‘வா’ விலேயே வைத்துக் கொண்டு தோள்களை கொஞ்சம் மேலுயர்த்தி என்னையே ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் அந்தப் பக்கத்தில் இருந்து நடந்து வந்தவர் இவளைப் பற்றிக்கொண்டார்.

‘டென்ஷனாகதம்மா.. நாங்க போயிட்டு உடனே வந்துடறோம்.’

மீனுவை இழுத்துக்கொண்டு அவர் நகர்ந்தார். மீனு என்னையே திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தாள். வாய் இன்னும் ‘வா’விலேயே இருந்தது. எனக்கென்று வந்து பிறந்திருக்கிறது.

போய் அவர்களை அழவைத்து விட்டு வரப்போகிறார்கள். பணக்காரத் திமிர் என அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். ‘கொஞ்சம் அப்படி போறீங்களா’ என்று வெடிக்கப் போகிறார்கள். நான் சி.டி. ப்ளேயரை ஆன் செய்தேன். வெக்கையாக இருப்பது போல பட்டது. ஏ.சியை போட்டுக்கொண்டேன். மேலிருந்து சருகுகள் வேறு கார் முன் கண்ணாடியில் விழுந்து விழுந்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தது. என்னால் அங்கிருக்க முடியவில்லை.

வெளியே இறங்கி வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஐந்து, பத்து என நிமிடங்கள் கழிந்தன. அரை மணி நேரம் கழிந்ததும், அப்பாவும் பெண்ணுமாக வெளியே வந்தார்கள் கை கோர்த்துக்கொண்டு. மீனுவின் இன்னொரு கையில் ஒரு பெரிய பை. என்னைப் பார்த்ததும், மீனு ஓடி வர ஆரம்பித்தாள். நான் கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்துகொண்டேன்.

‘மாஆஆஆஆஆம்’. மூச்சு வாங்குவதும் ஓடுவதுமாக என்னை வந்தடைந்தாள். நான் நிமிர்ந்து ஒரு முறை முறைத்து விட்டு, பொத்தாம் பொதுவாக எங்கேயோ வெறித்துப் பார்த்தேன்.

‘மாம், தே ஆர் ஸோ ஸ்வீட். ஓ காட், சாண்ஸே இல்ல’. நானெதுவும் பேசவில்லை.

‘யூ நோ, ஹர் மாம் ஈஸ் ஸோ ஹோம்லி. பெரிய பெரிய கண்ணு. சாஃப்ட் வாய்ஸ். அழகா தலையாட்டி ஆடி பேசினாங்க. யு மிஸ்ட் மாம்”

வாட்டெவர்‘ என்று சொல்லிவிட்டு, உள்ளே திரும்பிக்கொண்டதும் அவள் கையில் இருந்த பை நினைவுக்கு வர, வெடுக்கென திரும்பி, ‘அதென்ன கைல?’ என்றேன். ‘இதுவா..’ என்றிழுத்த மீனுவின் குரல் ரைம்ஸ் சொல்லும் சின்னக்குழந்தையினுடையது போல மாறியது. ஏதோ பெரியமனுஷத்தனமான பேச்சு வரப்போகிறது என்று அர்த்தம்.

மீனு பின்னால் உட்காரப் போனாள். இவரும் வந்து முன்னால் வந்து அமர்ந்துகொண்டார்.

‘அந்தப் பொண்ணு என்ன மாதிரியே இல்ல மாம். நீட்டு முடி. ஸ்பெக்ஸ். . பயங்கர படிப்ஸ். இங்க சீட் கிடச்ச உடனே ஏகப்பட்ட புக்ஸ் வாங்கிருக்கா. அவங்க அம்மா எனக்கு குடுத்துட்டாங்க’. நான் பின்னால் திரும்பாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மீனு அப்படியே தாவி முகத்தை இரண்டு சீட்டுக்குமிடையில் முகத்தை நீட்டியபடி தொடர்ந்தாள். ‘ஃப்ரெண்டஸோட எங்கயோ கார்ல போறப்போ ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சாம். ஸ்பாட்லயே ஷீ பாஸ்ட் அவே. ரொம்ப அழுதாங்க. பட் போகப் போக நல்லா பேசினாங்க. தே ஃபெல்ட் குட் மாம்.’

ம்

‘ஐயோ. கோவப்படாத மாம். வீ டிண்ட் ஹர்ட் தெம். அவங்களுக்கு மனசு கொஞ்சம் லேசாகும்னு தான் போனேன். அட் டைம்ஸ் யு ஃபீல் டெல்லிங் மோர் டூ ஸ்டிரேஞ்சர்ஸ். நிஜமா மாம். டாடிய கேட்டுப் பாரு. டாட், தே ஃபெல்ட் குட் ரைட்?’

‘யா.. கண்டிப்பா..’

‘ம். நீதான் வரல’ என் தோளை தொட்டாள்.’போ மாம் நீ’.பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.

கொஞ்சம் நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டுத் நான் திரும்ப, அந்தப் பையை சீட்டின் மேலே அப்படியே கவிழ்த்திருந்தாள். ஏராளாமான புத்தகங்கள். ‘ஓ மை காட்…எவ்ளோ புக்ஸ்’ – மீனு அவற்றை ஆராயத் தொடங்கினாள்.

திடீரென முன்னே வந்தவள், ஒரு புத்தகத்தை நீட்டினாள். அதில் அழகான கையெழுத்தில் பெயரும் தேதியும் எழுதியிருந்தது. ஒரு பிள்ளையார் சுழி. மீனு அப்படியே புத்தகத்தை புரட்டிக் காட்ட, உள்ளே எங்கோ ஒரு ஸ்டிக்கர் பொட்டு. இவர் லேசாக புன்னகைத்தார்.கொஞ்சம் நேரத்திற்குப் பின், ‘மாம்’ என்றாள்.

‘ம்’

‘இங்க பாரேன்’

‘என்ன சொல்லு”

‘பாரேன் சொல்றேன்’

திரும்பினேன்.

‘கோவிச்சாகதயேன் ப்ளீஸ். நான் வேணும்னா பொட்டு வெச்சுக்குறேன்’. புத்தகத்திலிருந்த பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து ஈயென இளித்தாள்.

நிறைய சிரிப்பு வந்தாலும், கொஞ்சமாக சிரித்தேன்.

Written by aravind

ஆகஸ்ட் 29, 2009 இல் 8:25 மு.பகல்

கதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

இசையலைகள் #3

6 மறுமொழிகளுடன்

ஒரு பாடலின் துவக்க இசையின் பரிமாணத்தை முற்றிலுமாக மாற்றியவர் இளையராஜா. ஒரு சிறுகதையை துவக்கும் போது சில வர்ணணைகளுடன் துவங்குவது போல, ஒரு பாடலின் துவக்கத்தை அவர் அமைக்கத் துவங்கினார். ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலின் துவக்க இசையும் ‘ஏதோ மோகம்’ பாடலின் துவக்க இசையும், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு ஆச்சர்யம். ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ பாடலின் துவக்க இசைக்கு தண்ணீரில் கலையும் பிம்பத்தை யோசித்தார்களா, இல்லை முதலில் காட்சியை யோசித்து விட்டு இசையமைக்கப் பட்டதா தெரியவில்லை. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடலை ராஜா பன்னீர் தூவி துவக்கி வைப்பது போன்று இருக்கும். (கல்யாணக் கனவைப் பற்றிய பாடல் என்பது என் யூகம். இடையில் நாதஸ்வர இசை வரும்). மிகப்பெரிய அறையின் கதவை திறந்ததும் மெதுவாக தென்றல் உள்ளே வருவது போன்ற துவக்க இசை ‘பூவே செம்பூவே உன் வாசம்’ பாட்டுக்கு உண்டு. ‘ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை’ பாட்டின் துவக்கத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்கும்! ‘யெஸ், ஐ லவ் திஸ் இடியட், ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்’ என்று பாடல் துவங்கும் போது, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு தயாராக இருந்து பின் வரும் இசையோடு அப்படியே விழலாம்! ‘இசையில் தொடங்குதம்மா’ பாட்டில் தொடங்குதம்மா இசையின் அழகு! (என்னா பாட்டு!). ‘சின்னத்தாய் அவள்’ பாட்டின் துவக்க ரயிலோசை நீங்கள் அறிந்ததே. ‘பொத்தி வெச்ச மல்லிக மொட்டு’ பாட்டின் துவக்க இசையும் இரண்டாவது இடையசையும் அவர் செய்த இசை வேலைப்பாடுகளில் சிறந்தவைகளுள் ஒன்று. ‘தேவனின் கோயில் மூடிய நேரம்’ பாட்டில் ராஜாவே உச்சரிக்கும் மந்திரம் போன்ற வார்த்தைகள் அபாரமான துவக்கம். அலைகள் ஓய்வதில்லை படத்தின் ‘புத்தம் புது காலை’ பாட்டின் துவக்க இசை மட்டுமில்லாமல் பாட்டு முழுக்க வருகிற ஒவ்வொரு ஒலியும் வைகறையுடன் தொடர்புடைய ஏதோ ஒரு விஷயத்தை நினைவூட்டுமாறு இசையமைத்தது சாதாரண விஷயமல்ல! எல்லாவற்றையும் தாண்டி ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் துவக்க கிட்டாருக்கும் பாட்டுக்கும் என் உயிரையும் தருவேன்! ;) ராஜாவின் துவக்க இசைப் பற்றிய பேச்சுக்கு, துவக்கம் மட்டுமே உண்டு. முடிவு இல்லை!

ரஹ்மானின் ‘கண்ணுக்கு மையழகு’ பாட்டின் துவக்க இசை போன்ற மிகவும் எளிமையான அழகான வேறொன்று இல்லை. ‘வெள்ளைப் பூக்கள்’ பாட்டின் துவக்கமும் மறக்க முடியாது. ‘முன்பே வா’ பாட்டின் துவக்கம் தேன்! பிரிவைப் பற்றிய ‘மின்னலே நீ வந்ததேனடி’ பாடலின் துவக்கம், பறவையொன்று கைவிட்டுப் பறக்கிற உணர்வைத் தரும்!

உங்களுக்குப் பிடித்த துவக்க இசை பற்றிச் சொல்லுங்கள்.

***********

காதலை நீங்கள் முதன் முதலில் எப்போது அறிந்தீர்கள்? உங்கள் பதின்ம வயதில் இருக்கலாம். மிகவும் ரகசியமான அறிதல் மற்றும் புரிதல் அது. நான் காதலித்தால் இப்படித்தான் காதலிப்பேன் என்று நீங்கள் என்றேனும் முடிவெடுத்திருக்கிறீர்களா? ஒரு திரைப்படத்தை பார்த்தோ, ஒரு சிறுகதையை படித்தோ, உங்கள் அக்கம் பக்கத்தில் நிகழ்ந்த காதல் கதையே கேட்டோ – ஏதோ ஒரு வினாடியில், ‘இது தான் – இப்படித்தான்’ என்று முடிவெடுத்திருப்பீர்கள். நான் அப்படி காதலை idealize செய்துகொண்டது, மூன்று பாடல்களை பார்த்துக்/கேட்டு. இவை வெறும் பாடல்கள் அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையுண்டு. கதாபாத்திரங்கள் உண்டு. அழகான காதலும் உண்டு. ஹிந்தி பாப் பாடல்களின் பொற்காலத்தில் வந்த பாடல்கள். வீட்டின் வரவேற்பறையில் எல்லோருடனும் அமர்ந்து பார்த்தாலும், இந்தப் பாடல்கள் சில நிமிடங்கள் என்னை சட்டென தனிமைப் படுத்தும். MTV-இல் இந்தப் பாடல்கள் வராதா எனக் காத்திருந்து காத்திருந்தே கழிந்த வெறுமையான மதியப் பொழுதுகள் ஏராளம். பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகமானாலும், இப்போதும் இந்தப் பாடல்களும் மனதுக்கு நெருக்கமாகவே இருக்கின்றன.

pb‘மிக நீளமான முடி அவளுக்கு’ என்ற நாயகியின் வர்ணனை உள்ள கதைகள் ஏராளம் உண்டு. அப்படி ஒருத்தியின் காதல் கதை இது. இரு சக்கர வாகனங்களின் மீது காதல் கொண்ட அமெரிக்க இளைஞன் அவன். பரதத்தின் மீது காதல் கொண்ட இந்தியப் பெண் இவள். வீட்டு வாசலில் மிகப் பெரிய வண்ணக் கோலத்தை அவள் அமர்ந்து போட்டுக்கொண்டிருக்க, இவன் விளையாடுகிற பந்து, கோலத்தில் மேல் போய் விழ, வண்ணங்கள் சிதறுவது, இருவரின் மனதில். நீண்ட ஆளில்லாதா சாலைகளில் நடக்கையில் பேச்சுகள், இரு கலாச்சாரங்களை பற்றி அறிதல் என கழிகிறது காதல் கணங்கள். ஒரு குறிப்பிட்ட வாகனத்தை வாங்க இவன் கனவு காண்கிறான். அதற்கு பொருத்தமான தலைக்கவசம் இன்னும் விலை அதிகம். காதலனுக்கு அவன் விரும்பியதை வாங்கித்தர வேண்டும் என்று விரும்புகிற அவளிடம் வாகனம் வாங்குமளவு பணமில்லை. தலைக்கவசத்தையாவது வாங்கித் தரலாம் என்று முடிவு செய்து, அதை அவள் என்ன செய்து எப்படி வாங்குகிறாள் என்பதை பாருங்கள் (ஆஜ் இத்னே கரீப் ஆஜாவோ? :) ). மிக அழகான ஒரு துளிக் காதல் கண்ணீர் இந்தப் பாட்டின் வீடியோவில் உண்டு. (சமீரா ரெட்டியின் அறிமுகம் இதில் தான். நான் பத்தாவது படிக்கும் போது வந்தது. இது போல அழகாக அவர் அதற்குப்பிறகு எதிலும் இருந்ததே இல்லை!) (Aur aahista – Pankaj Udhas). (You tube)

2தடையில்லாத காதலில் சுவை இல்லை. காவலர்களால் தேடப்படுகிறவன் அவன். முகத்தைப் பார்த்தால் நிச்சயம் திருடனைப் போல தெரியவில்லை. கெட்டவர்களில்-ஒரு-நல்லவன் என அறிமுகமாகி, சில வினாடிகளே பழக்கம். அந்த மைக்ரோ வினாடிகளை விதையென வைத்து விருட்சமாக தனிமையில் வளர்கிற காதல் கதை. இத்தனையும் மீறி இது சமத்துக்-காதல்-கதை என்று பார்க்கும் பொழுதெல்லாம் தோன்றும். :) அழகான பாடலின் பல்லவியும் சரணமுமாக பிரிந்திருக்கிற ஜோடிகள், அனுபல்லவியில் மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு வருகிறது. ‘நிச்சயம்-இங்கே-தான்-எங்கோ இருக்கிறான்/ள்’ என்ற உள்ளுணர்வு படபடக்க, இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா என்ற வினாவுடன் முடிகிறது பாடல். (மீதிக் கதை, ஆல்பத்தின் அடுத்தடுத்த பாடல்களின் வீடியோக்களாக வெளி வந்தது). உஸ்தாத் சுல்தான் கானின் கரகர குரலும், சின்னக் குயிலின் குரலும் அழகாக இணைகிற பாடல். குறிப்பாக, சித்ராவின் சிறந்த பாடல்களில் ஒன்று. சின்னச் சின்னப் பூக்களை தண்ணீரில் மிதக்க விட்டு, நீரை மெல்ல நாயகி சலனப்படுத்துவது போன்ற ஒரு காட்சி வரும். இந்தப் பாட்டையும் அப்படி வர்ணிக்கலாம்! (Piya Basanti Re – Ustad Sultan Khan) (You Tube)

crநிலவு ஒளிரும் அறையில் இன்னும் தொடங்கப்படாத ஒரு ஓவியத்தை பார்த்துக்கொண்டிருக்கும் நாயகன், அப்படியே மெத்தையில் மெத்தென விழ, அறையின் உச்சியிலிருந்து தவழ்ந்தபடி நடந்து வருகிறாள் நாயகி. (என்னால் என்றுமே மறக்க முடியாத பிம்பமாக இது, அந்த வயதில் ஆழப் பதிந்து விட்டது). பிரிவைப் பற்றிய பாடல். காதலில் பிரிந்தவர்களின் பால் இயல்பாகவே ஒரு பரிவு வந்து விடுகிறது இல்லையா? ஒரு விதமான ஈர்ப்பு அவர்களின் மீது வருகிறது இல்லையா? இது எப்படிப்பட்ட வலி? அந்த வலியில் நாமும் கொஞ்சம் பங்கெடுத்துக் கொள்ள தோன்றும் இல்லையா? அதுவும் காரணங்கள் தெரியாத பிரிவு, வலியின் மீது ஒரு மெல்லிய சுகத்தை ஏற்றிவிடுகிறது ஏற்றி விடும் போல. மொட்டை மாடியை ஒட்டிச் செல்கிற பெரும் விமானங்கள், நகரத்தில் பைத்தியங்களென விரைகிற வாகங்கள், காற்றில் கொஞ்சம் ஈரப்பதம், நிறைய வானம் என, பிரிவுக்கு பொருத்தமான இரவு. அளக்க முடியாத ஒரு பெரும் பிரிவு தரும் அதிர்வுகள் தீர, இறுக்கப் பிடித்துக்கொள்ள ஒரு ஒற்றை கழுத்துச்சங்கிலியிலோ, ஒரு சின்னப் பரிசுப் பொருளோ தேவை என்பது போல, இந்த இரவுக்கு இந்தப் பாடல் மிகவும் அவசியமாகிறது. இதை பாடிய பெண்ணுக்கென ஒரு பூங்கொத்து என்னிடம் எப்போதும் இருக்கிறது. இந்தப் பாடலின் மீதான காதல் முற்றிப் போய், இதே போன்று ஒரு காதலும் ஒரு பிரிவும் வேண்டுமென ஒரு கட்டத்தில் நினைத்தது மறக்க முடியாதது! :) இசை ஏன் பிடிக்கும் என யாரேனும் கேட்டால், எப்படி பதில் சொல்ல முடியாதோ, அது போலவே இந்தப் பாடல் ஏன் பிடிக்கும் எனக் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது! (ரீமா சென்னின் அறிமுகம் இதில் தான்!) (Chandini Raatein – Partners In Rhyme) (You tube)

Written by aravind

ஆகஸ்ட் 18, 2009 இல் 7:09 பிற்பகல்

இசை இல் பதிவிடப்பட்டது

காதலைப் பற்றிய ஒலி/ஒளிக் குறிப்புகள்

2 மறுமொழிகளுடன்

தனித்தனிக் கவிதைகளாக இருந்தாலும், காதலின் பல நிலைகளில் சிலவற்றை வரிசைப்படி விவரிக்க முயன்றிருக்கிறேன். எவை எவை என விளக்க வேண்டிய அளவு கடினமில்லை என்று நினைக்கிறேன். ரூம் போட்டு யோசிக்க உடனடி வசதியில்லாதவர்கள் ரொம்ப குழம்பிக்கொள்ளவேண்டாம்.

—————————————————————————————————–

காதல் மின்னும்
மனதின் மேற்பரப்பில்
மிதந்து கொண்டிருக்கிறது
தெளிவில்லாத
உன்னுடைய
ஏதோ ஒரு பிம்பம்.

நெற்றிச் சுருக்கி
கூர்ந்து கவனிக்க,
அமைதியாக
கழிந்து கொண்டிருக்கிறது
இரவு.

******

சுற்றி இருப்பவர்களின்
கவனிப்பில்
சிக்காத குறிப்புகளை
நீ அடைக்கத் துவங்கியிருந்தாய்
உன் வார்தைகளில்

உன் வீட்டிற்கும்
என் வீட்டிற்கும்
இடையில்
தினம் நூறு முறை ஓடும்
இந்த ரயில்
கடக்கிறது
எல்லோருக்கும் பொதுவாக
முழங்கியபடி.

******

அமைதியாக
அதிரும்படி
அலைபேசியை
பணித்திருந்த
இரவின் வெளியில்
மின்மினிப்பூச்சிகளாகின்றன
உன் குறுந்தகவல்கள்

******

ரசனைகள் குறித்த
ஆயிரம் வாதங்கள்
நமக்குள்
நிகழ வைத்த
பாடலொன்று
காற்றலையில் ஒலிக்கையில்
ஒரு வானவில்
இணைக்கும்
நம் புன்னகைகளை

******

மழைக்காலத்தின்
முதல் மாலைப்பொழுதில்
கரங்கள் பிரித்து
நீ நடக்கத் துவங்குகிறாய்
ஒரு பிரிவை நோக்கி

நமக்கிடையில்
நீளும் வழியெங்கும்
இறைகிறது
தவளைகளின் சத்தம்.

——————————

கடைசிக் கவிதையில் இறை / இரை இரண்டையும் முயற்சித்துப் பார்த்துவிட்டு, இதைதேர்ந்தெடுத்தேன்.

Written by aravind

ஆகஸ்ட் 10, 2009 இல் 5:10 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with