Archive for ஜூலை 2009
தேநீரில் சிநேகிதம்
Sip #1 – போஸ்டர்களுக்கு இடையில் கொஞ்சூண்டு சுவர் தெரியும் கோடம்பாக்கத்தில், ஜூலை 15ஆம் தேதி முழுக்க காமராஜர் பிறந்தநாள் விழா / வாழ்த்துகள் / வணக்கங்கள் சொல்லும் சுவரொட்டிகள். ‘காமராஜர் நம்மளுக்கு எல்லாம் சாமி மாதிரி. நாளைக்கு அவருக்கு பிறந்தநாள். அவர கையெடுத்து கும்பிடுங்க’ என்று ஏதோ ஒரு கார்பரேஷன் பள்ளி வாத்தியார் மிகக் தெளிவாக கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லி வைக்க, சின்ன ரோஜாச்செடி உயரமே இருக்கும் ஒரு வாண்டுக் கூட்டம், ஒரு போஸ்டர் விடாமல் தொட்டு தொட்டு வணங்கிச் சென்றன. கடைசி வாண்டு ரொம்ப சின்னது. ஓடி ஓடி அது வணங்கிய காட்சி அத்தனை அழகு. ஒரு குட்டிப் பெண் திருஷ்டி எல்லாம் கழித்தது. பஸ் டயர் பங்க்ட்சர் ஆனதில் கண்ட காட்சி. ஸோ ஸ்வீட்!
#2 – எங்கள் ஏரியாவில் பேப்பர் போடும் மிஸ்டர்.ராமனாதனை அழைத்து நிறைய முறை நியூஸ்பேப்பரை மாற்றிப் போடாதீர்கள் என்று சொல்லியாயிற்று. மாதம் மூன்று முறையாவது மாற்றிப் போட்டு விடுகிறார்கள். நாங்கள் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ தான் வாங்குகிறோம். மற்ற பேப்பர் எல்லாம் வேஸ்ட் என்பதெல்லாம் இல்லை. தினமும் பேப்பர் வந்ததும், அம்மா தூங்குகிற என் தலை மாட்டில் வைத்து விடுவார். காலை எழும்பியதும், அப்படியே திரும்பி பேப்பரை கையில் எடுத்து பார்த்து கண் விழிப்பது வழக்கம். நிறைய அதிகாலைக் கனவுகளுடன் எழுந்துக்கொள்கிற ஜந்து நான். (பெனசிர் கொல்லப்பட்ட அடுத்த நாள், சுவருக்குப் பின்னால் இருந்து திகிலுடன் நான் பார்க்க, ஒருத்தன் பெனசிரை குறி வைக்க, நான் அலற, பெனசிரை சுட்டு விட்டு, திரும்பி என்னையும் சுட்டு விட்டான். தசாவதார ரிலீஸுக்கு முன் நாள் முழுப்படமும் கனவில் வந்தது.
) எது உண்மை, எது கனவு என்று மலங்க மலங்க எழுந்து பேப்பரை எடுத்துப் பார்க்கும் போது, ‘The Hindu’ என்று இருந்தால், ‘ஐயோ என்னமோ தப்பா இருக்கு’ என்று மிரண்டு டமாலென்று திரும்ப படுக்கையில் விழுந்து விடுகின்றேன்.
#3 – காக்னிஸண்ட்டை சேர்ந்த ஷம்மீரை சந்திக்க நேர்ந்தது. நண்பர்கள் எல்லோரும் குழுவாக இணைந்து தயாரித்த ‘பயணம்’ என்ற இசை ஆல்பத்தை தயாரித்த கதையை ஆர்வமாக கண் நிறைய கனவுகளுடன் பேசினார். வாத்தியங்களை கையாள்வதில் நல்ல லாவகம் தெரிகிறது. நிறைய பாடல்களின் prelude கவனத்தை உடனே ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. தரமான ரெகார்டிங் பெரிய பலம். பாரதியாரின் ‘தேடிச் சோறு’ பாடலுக்கு தந்திருக்கும் இசை வடிவம், இவர்களுக்கு அழகான விசிட்டிங் கார்டு. கேட்டுப் பார்த்து பிடித்திருந்தால், உங்கள் கருத்தை தளத்தில் தெரிவியுங்கள்
#4 – ‘நாடோடிக’ளின் writing மிகவும் மோசமானதாக இருந்தது. Spoilers. ‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே’ என்பதை பறை சாற்ற எடுத்துக் கொண்ட கதையே முதலில் மிகவும் பலவீனம். மொத்தப் படத்தையும் க்ளைமாக்ஸிலிருந்து reverse engineering செய்திருக்கிறார்கள். கதைப்படி, ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு ‘ஒரே காலேஜ், ஒரே வகுப்பு, ஒரே தட்டு’ நண்பன் ஒருவன் தேவை. இத்தனை பழக்கமான ஒருவனின் காதல் உண்மையானதாக இருக்குமா இருக்காதா என்று ஊகிக்க தெரியாதா அப்பாவிகள் நமது நாடோடிகள். பின் இந்த சாகஸ திருமணத்தால் நாடோடிகள் நிறைய இழக்க வேண்டும். ஆக, அடியாட்கள் விளையாடும் பெரிய இடத்து பையன்/பெண் என்று கதை எழுதியாகி விட்டது. (ஒருவனுக்கு கால், ஒருவனுக்கு காது ஹோ கையா. நாயகனுக்கு மட்டும் உடல் இழப்பு ஏதுமில்லை. அது எப்படி இருக்க முடியும்? காதல் தோல்வி அதை விட பெரிசு என்பதெல்லாம் சப்பைக்கட்டு) ஒரு முன்னாள் எம்.பியின் மகன் எப்படி இருப்பான் என்ற பொதுவாக கருத்துக்கு நேர்மாறாக இருக்கிறான் அந்தப் பையன். அதில் தவறில்லை. அதை ஒரு காட்சியில் கொஞ்சம் நிலை நாட்ட வேண்டாமா? (திருமணம் முறிந்த பின், அவன் வழக்கமான ‘எம்.பி பையன்’ ஆகிவிடுகிறான்!) இதை எல்லாவற்றையும் விட மகா கேவலம் – fast food love, ஒரு ‘வேகத்தில்’ திருமணம் என்றெல்லாம் கதையை மாற்றியிருப்பது. அதற்கு ஏன் அவர்கள் கல்யாணம் வரை கஷ்டப்படுப் போகிறார்கள்?! ‘ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்க’,'மாடர்ன் பசங்களின் காதல்’, இதெல்லாம் அப்ளாஸை அள்ளும் வசனங்கள் என்பதால் திணித்திருக்கிறார்கள். சசிக்குமார் காதலை துறக்க முடிவு செய்யும் போது, அவரின் நண்பர்கள் மட்டும் கண்ணியமாக விலகிவிடுகிறார்கள். ஒரு காட்சியில் கூட நாடோடிகள் ‘தீர விமர்சித்து திருமணம் செய்து வைப்போம்’ என்று யோசித்ததாக தெரியவில்லை. அவர்கள் மட்டும் ‘ஒரு வேகத்தில்’ சேர்த்து வைப்பார்கள் போல. போதாத குறைக்கு, நட்பு பற்றி அடிஷனல் ஷீட் அட்வைஸ்கள் வேறு! Characterகளின் writing பற்றி பேசினால் தாங்காது! ஒரு ஆரஞ்சு, ஒரு ஆப்பிள் என்று வைரட்டியாக எழுதியிருக்கிறார்களே தவிர, உள்ளே ஒன்றும் சரக்கில்லை. க்ளைமாக்ஸ் படு டூ மச்! நாடோடிகள் அந்த ஜோடியை அடிக்கும் போது, ‘ஒழுங்கா பாத்து சேத்து வெக்க மாட்டீங்களாடா’ என்று நாடோடிகளின் தலையில் தட்டலாம் போல இருந்தது! என்ன படமோ?! சசிக்குமாரின் நடிப்பு சில இடங்களில் ஏனோ எரிச்சல். (வசனங்களால்?). எல்லா சலனங்களையும் விலக்கி வைத்துப் பார்த்தால், ‘சம்போ சிவ சம்போ’ action block மட்டும் சத்து. மத்ததெல்லாம் வெத்து. 2 Stars.
#5 – ஒரு முழு சனிக்கிழமை க்வீன்ஸ்லாண்ட்டில் கழிந்தது. நிறைய உயர்-ரத்த-அழுத்த-வினாடிகளை அனுபவிக்க முடிந்தது. பயந்து அழும் ஆண்கள்/பெண்கள், இரண்டு பள்ளிகளின் திரளான குட்டீஸ், pirata ship எண்பது டிகிரியில் நின்ற போது பக்கத்தில் இருந்த நண்பன் ‘மச்சான் இந்தப் பிடி கையோட வருதுடா’ என்றலறியது, கை மணிக்கட்டில் ஒட்டிய டிக்கெட்டில் சுவாரசியமின்றி குறித்து வைக்கும் பணியாளர்கள் எல்லாவற்றையும் தாண்டி, மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டது ஒரு தருணம். ஒரு உள்ளூர் பெண்ணுக்கு இங்கிலாந்து ராணி வேஷம் போட்டு, ஒரு சித்திரக்குள்ளனுடன் குதிரை வண்டியில் உலவ விட்டிருந்தார்கள். ஒரு ப்ளாஸ்டிக் சிரிப்புடன் ம்ககளைப் பார்த்து கையசைத்தபடி நகர்வதை அங்குமிங்கும் காண முடிந்தது. ஜன நடமாட்டம் அதிகமில்லாத இடமொன்றில் ராணி சற்று இளைப்பாற, நாங்கள் அவர்களை கடக்க, பக்கத்து ராட்டினத்தில் டிக்கெட் போடும் பெண்ணிடம் ராணி பகிர்ந்து கொண்ட ரகசிய ஸ்னேகித சிரிப்பு – அழகிய ஹைக்கூ நொடி!
#6 – என்ன தான் man-made amusement ride என்றாலும், இயற்கை அமைத்து தருவது போல வருமா? ஒரு பழைய புகைப்படம். வானத்தை பார்த்தபடி சிரிப்பது நான்
(பக்கத்தில் இருப்பது பையன் தான்!) எனக்கு உச்சகட்ட பயம் எப்போதுமே பயங்கர சிரிப்பாக வெளிவரும்! மணாலியில் எடுத்தது.
#7 – போன வாரத்தின் ப்ளேலிஸ்ட் - படபடவென பறந்திட (வெண்ணிலா கபடி குழு). அழகே சுகமா (பார்த்தாலே பரவசம்). செல்லமே செல்லமே (சத்யம்). சாமி கிட்ட சொல்லி வெச்சு (ஆவாரம்பூ). ஒவ்வொரு பிடியா ஐலேசா (குளிர் நூறு டிகிரி).
#8 – ஒரு டவுட்டு. காஃபி வித் அனுவில் விஷ்னுவரதனும், யுவனும் சிம்புவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சிம்புவின் நண்பர்கள் எல்லாம் டி.ஆரை கலாய்ப்பார்களா?
#9 – Happy week ahead!
நண்பனின் திருமணம்
கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன். பின் ஸீட்டில் அம்மா, பெரியக்கா, சின்னக்கா மடியில் குழந்தையுடன் அமர்ந்துகொண்டனர். மழை தூறிக்கொண்டிருந்தது. ‘கிஃப்ட் எடுத்துக்கிட்டாச்சா?’ மீண்டும் ஒரு முறை கேட்டுத் தெரிந்துகொண்டேன். மணி ஏழாகியிருந்தது. எப்படியும் திரும்பி வர பத்து மணியாகிவிடும். சொந்த ஊரிலிருந்து நிறைய பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரிடமும் பேசிவிட்டுக் கிளம்ப நேரமாகி விடும்.
இன்று ராமுக்கு திருமணம்.
வண்டி புறப்பட்டு விட்டது. மடியில் ஜானு அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் திடீரென பெரியக்காவின் குரல் கேட்டது போல இருக்கவே, திரும்பனேன். ‘கூப்பிட்டியா?’
‘எவ்வளவு நேரமா கூப்பிடறது!’
‘ஓ. கேக்கல. என்ன?’
‘என்ன எதாச்சும் ஸ்டோரி கான்டஸ்ட்டா?’
‘ஹி ஹி. ஆமாம். எப்படி கண்டுபிடிச்சே?’
‘மூஞ்சியிலயே தெரியுது’
‘ஐ சீ’. அசடு வழிந்தேன்.
‘அந்த மிஸ்டரி கதை நல்லாருந்தது. ப்ரைஸ் கடச்சிதா?’
‘ம்’
‘இந்த முறை என்ன?’
‘ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டோரி’
‘கதை யோசிச்சிட்டியா?’
‘இன்னுமில்ல’
‘ம்’
‘ஏதாச்சும் கதை சொல்லேன். எழுதறதுக்கு’
‘ம்’
‘நான் ஒரு கத யோசிச்சேன். கேளேன்.’
‘சொல்லித் தொல’
‘ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். சின்ன வயசுலேர்ந்து திக் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டும் பொண்ணுங்க. ஒரு பொண்ணு தைரியசாலி. ஒரு பொண்ணு ரொம்ப கோழை. கோழைய வந்து சித்தி ரொம்ப கொடும பண்றா’
‘எஹ்?’
‘கேளு. சித்தி ரொம்ப கொடும செய்யுறா. அவளால தாங்க முடியாம ஃப்ரெண்டுகிட்ட அழறா. இருபது வருஷமா இதே கத. ஒரு நாள் கொடும தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறா. அந்த அதிர்ச்சியுல ஃப்ரெண்டுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் வந்துடுது. அவளோட ஸ்பிளிட் செத்து போன ஃப்ரெண்டு மாதிரி பிஹேவ் பண்ணுது. சித்திய பழிவாங்குது. சித்திய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடறா’
பின் ஸீட்டில் பயங்கிர அமைதி.
‘ரெண்டு பேருக்கும் காம்மனா இன்னொரு ஃப்ரெண்டு இருக்கா. அவ ஒரு டாக்டர். அவ வந்து கோர்டுல வாதாடி ஜெயிக்கிறா. ஆனா அவளுக்கு மட்டுமே உண்மை தெரியும், இந்த பொண்ணுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி இல்லேனு. அவ நட்புக்காக செய்யுறா. எப்படி’
சின்னக்காவின் குழந்தை அழ ஆரம்பித்தது.
‘சரி விடு’ என்றேன்.
‘நம்ம ஜானுவயும் ஸ்ரீயயும் வெச்சு எழுதேன்?’
ஜானுவுக்கு வயது ஆறு மாதம். ஸ்ரீக்கு வயது நான்கு மாதம். முறையே பெரியக்கா சின்னக்காவின் மகள்கள். இருவரும் எதிரேதிரே தத்தம் மகள்களை தூக்கிக்க்கொண்டு நின்றால், இரு குழந்தைகளும் ‘ஆ ஊ’ என்று பேசிக்கொள்கின்றன.
‘ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ்! ஃப்ரெண்ட்ஸ் இல்ல’
அக்கா சிரித்தாள். ‘இல்லனா இவளோட ஃப்ரெண்ட் ஒருத்தி இருந்தாளே’ (சின்னக்காவைப் பார்த்து கை காட்டியிருப்பாள்) ‘அந்த மார்வாடிப் பொண்ணு.. ரெண்டு பேரையும் வெச்சு எழுது’
‘ம் ம் எழுதலாம்’
கொஞ்ச நேர அமைதிக்குப் பின் அம்மா சன்னமான குரலில் கேட்டாள். ‘ராம் பத்தியே எழுதேன். அவன் தான் உன்னோட ஃப்ர்ஸ்ட் ஃப்ரெண்ட்..’
‘ஆமால்ல..’ என்று மனசு சொன்னது.
ராமின் குடும்பமும் நாங்களும் ஒரே வீட்டில், முறையே கீழ் போர்ஷனிலும் மேல் போர்ஷனிலும் குடியிருந்தோம். 1980களின் முதல் பாதியில் சந்தித்துக்கொண்டோம். வீட்டு உரிமையாளரிடம் ஏற்பட்ட சச்சரவுகளில் ஒன்றாக கை கோர்த்தோம். ராமின் அப்பா டாக்டர். என்னுடைய அம்மா டீச்சர். இன்று வரையும் ராமின் வீட்டில் எல்லாரும் அம்மாவை ‘டீச்சர்’ என்றே அழைக்கிறார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் ராமின் அப்பாவை ‘டாக்டர்’ என்றே அழைத்தோம்.
‘ஃபேமிலி ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையை நான் முதன் முதலில் படித்து அம்மாவிடம் அது என்னவென்று அர்த்தம் கேட்டபொழுது, ராமின் குடும்பத்தினரையே அம்மா அடையாளம் காட்டியிருக்க வேண்டும். அப்பா அப்போது (கட்சியில்) இருந்தார். கட்சி அலுவலகத்தில் பெரும் பகுதி கழிந்தது. ராஜா வீட்டு கன்னுக்குட்டி. நிறைய பணம். நிறைய நண்பர்கள். நிறைய எதிரிகள். அம்மா எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருந்தார். அப்போது அம்மாவுக்கு இருந்த ஒரே துணை ராமின் குடும்பத்தினர். அப்பா மறைந்த பின், அவர்கள் துணை இன்னும் முக்கியமானதானது. (நேற்று அப்பாவின் 13ஆவது நினைவு நாள் என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. zoozooக்களை படம் பிடித்து அதன் மீது ஏதேதோ கிறுக்கத்தனமாக எழுதியபடி நாள் கழிந்தது.)
ராம் எனக்கு நண்பனா என்பதில் எனக்கு சந்தேகங்கள் உண்டு. என்னை விட இரண்டு வயது மூத்தவன். நாங்கள் பள்ளிக்கு செல்லும் போதோ, ட்யூஷன் செல்லும் போதோ, விளையாடப் போகும் போதோ, நான் ராமின் முழுப்பொறுப்பில் விடப்பட்டேன். எங்கள் குடும்பங்களுக்கு நெருக்கமாக இல்லாதவர்கள், எங்களை அண்ணன், தம்பி என்றே நினைத்தார்கள். நானும் பல நாட்கள் அவனை அண்ணா என்றே அழைத்திருக்கேன். பின்னர் ‘ராம்’ என்றழைக்கத் தொடங்கிய நாளில் அவன் எனக்கு முழு நண்பனாகியிருக்கலாம்.
இருவரின் அம்மாக்களின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, மாடியில் கிரிக்கெட் விளையாடும் உத்தியை கண்டுபிடித்தோம். ப்ளாஸ்ட்டிக் பந்து, இல்லை துக்கு பந்து. (எங்கள் ஊரின் தொழில் நெசவு. அதில் கழிவாக எறியப்படும் துணிகளை வைத்து செய்யும் பந்து).பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பந்து பறந்து, பக்கத்தில் புதரென மண்டிக்கிடக்கும் கார்பரேஷன் இடத்தில் விழும். பாம்புகள் அதிகமென்பதால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். அந்த இடத்தை ஒரு நாள் சுத்தம் செய்த போது, அள்ளி அள்ளி பந்துகளை எங்கள் காம்பவுண்டுக்குள் கொட்டினார்கள். நாங்கள் இருவரும் ஓடி ஓடி அவற்றை பொறுக்கியது இன்னும் நினைவிருக்கிறது.
இன்று அவனுக்குத் திருமணம்.
நடுவில் எதுவோ சரியாக இல்லாமல் போய்விட்டது. அவன் பனிரெண்டாவது வகுப்பு செல்கையில் அவன் மட்டும் நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்துச் சென்றான். அப்போது ஏற்பட்ட தொடர்பின்மை வளர்ந்து வளர்ந்து ஒரு நாள் முற்றிலுமாக தொடர்பு அறுந்தது. கிட்டதட்ட எட்டு வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகிறேன்.
நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.
எதைப் பற்றி எழுதுவது? சைக்கிள் பூட்டு எதற்கென்று தெரியாமல் பல காலம் முழித்து, என்னைப் பின்னால் வைத்து அவன் ஓட்டி சென்று பொழுது, பூட்டைப் போட்டு சைக்கிளை நிறுத்திய கதை உண்டு. இல்லை பெரியக்காவுடன் ரசம் வைத்த கதை. இல்லை அந்த ட்யூஷனில் இருந்த அந்தப் பெண் அவனை காதலித்தது (?!) பற்றியும், இவன் மறுத்ததும், அப்போது பிரபலமாக இருந்த ‘ரோஜாப்பூ கீழ விழ்ந்தா, செடியோட ஒட்டி வைக்க முடியாது’ என்ற ‘பூவே உனக்காக’ வசனத்தை சொல்ல சொல்லி அடம் பிடித்த கதை உண்டு. (அவள் என்னை ‘மச்சினராக’ பாவித்தது கிளைக்கதை).
பெரியக்காவும் சின்னக்காவும் ராமின் அண்ணாவுடனான நினைவுகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கலாம்.
போய் இறங்கியதுமே ஒரு விதமான அதிர்வு தொடங்கிவிட்டது. ஏழெட்டு வருடங்கள் கழித்து நிறைய பேரை பார்க்கப் போகிறேன். ராமின் அண்ணனும் அண்ணியும் வரவேற்றார்கள். சம்பிரதாய கேள்விகள், நலம் விசாரிப்புகள், ‘ஃபோனே பண்றதில்ல’ கோபங்கள். மண்டபமெங்கும் புன்சிரிப்புகள். ‘இது அபி தானே?’ என்ற சந்தேகப் பார்வைகள். சின்னக் குழந்தையாக பார்த்தவர்கள் வளர்ந்து நம் முன் நிற்கும் போது அதிர்ச்சியாகவே இருக்கிறது. (நான் பள்ளிக்கூட பேருந்துக்கு காத்திருக்கையில் ஒரு குட்டிப்பையனுடன் விளையாடுவான். அந்தப் பையனின் அம்மா நான் நிச்சயம் இன்று வருவேன் என்பதற்காகவே அவனை அழைத்து வந்திருந்தார்!) எத்தனை மக்கள்! எத்தனை நினைவுகள்.
மேடையில் ராம் பிரகாசமாகத் தெரிந்தான். ஷெர்வானி மிகப் பொருத்தமாக இருந்தது. நிறைய எடை கூடிவிட்டான். அவனுக்கும் என்னைப் பார்த்ததும் இப்படி நிறைய தோன்றும். தூரத்திலேயே என்னைப் பார்த்து விட்டு கையசைத்தான். மணப்பெண்ணிடம் ஏதோ சொல்கிறான். மேடையேறியவுடன் கட்டியணைத்துக்கொண்டான். இத்தனை வருட தொடர்பின்மையும் ஒரு நொடியில் உடைந்துவிட்டது என்றே தோன்றியது. ‘ச்சே! பாக்கலனா என்ன! பேசலானா என்ன!’ மனசு சொன்னது. அவன் குரல் பத்து வருடங்களுக்கு முந்தைய ஒலியைக் கொண்டிருந்தது.
பூரிப்பாக இருந்தது. நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.
மேடையை விட்டு இறங்கியதும் குமாரண்ணனைப் பார்த்தேன். ‘அபி! ஆளே மாறிட்டே’ என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்றார். ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை பெரியவர் அமர்ந்திருந்தார். மிகவும் தளர்ந்து போயிருந்தார். அவரிடம் என்னை நிறுத்தினார். ‘இவன் தான்’ என்றார்.
பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை. முயற்சி செய்து தோற்றுப்போனார். நான் அவரிடம் குனிந்து கொண்டேன். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கு. அவருக்குப் பின்னால் அவரின் தம்பி போன்ற ஒருவர், மகன்கள், மனைவி எனப் பலர் என்னை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். என் கன்னங்களை தயங்கி தொட்டுப் பார்த்தவர், ‘நான் உங்கப்பாவோட ஃப்ரெண்டு’ என்றார்.
உடலில் மெல்லிய மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. கண்கள் ஏனோ கலங்கின. அதில் பல சிறுகதைகள் ஒரு தொடர்கதையும் அடங்கியிருந்தன.
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன்
)
