சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

நாய்கள், பூனைகள், மீன்கள் – சில குறிப்புகள்

2 மறுமொழிகளுடன்

dog

தெருவையே ஆண்டுக்கொண்டிருக்கின்றன
அந்த நான்கு நாய்களும்.
ஒன்று சாம்பல், ஒன்று கருப்பு,
மற்றயிரண்டும் பழுப்பு.
பத்து மணிக்கு மேல்
தெருவில் செல்ல பயந்தார்கள்
பெண்கள், குழந்தைகள்.
வந்த புதிதில்
அம்மாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.
பேய்களுக்குப் பிரசவ வலி போன்ற
சப்தங்கள் இரவெல்லாம்.
ஒரு நள்ளிரவில்
போக்குவரத்துக் காவலர்
இரு சக்கர வாகனத்தில் துணைக்கு வந்தார்
வீடு வரை
‘எங்களதுலயே ரெண்டு பேர கடிச்சுடுச்சுப்பா’
என்று புலம்பியபடி.
‘கார்பரேஷன்ல பிடிச்சுக் குடுக்கணும்’
நள்ளிரவு உறுதிமொழிக்கு பின்னே
பல நாட்கள்
தூங்கப் போகிறோம்.

80களுக்குப் பின்
மாற்றங்கள் கண்டிராத
பக்கத்து வீட்டில் வசிக்கும்
யாரிடமும் பேசாத
அதிகம் வெளியில் தென்படாத
அவரின்
கால்களை நக்கியபடி
கொஞ்சல் ஒலிகளோடு
அத்தனை நாய்களும்
உணவைத் தின்றுகொண்டிருக்கும் காட்சியை
குழுப்பத்துடன் கண்டபடி நடக்கிறேன்
எல்லா இரவுகளுக்குப் பின்னான
காலைகளிலும்.

******************

Fish

மிகப் பத்திரமாக
கையில் ஏந்தி
உதடுகள் குவித்துக்
காத்திருக்கிறாள்
ஒரு முத்தமிட்டுவிட வேண்டி

கண்ணாடிக் குடுவையின்
இரு புறமும்
முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு
தொட்டி மீன்
அளந்துக் கொண்டிருக்கிறது
சமுத்திரத்தை

******************

முன்பொரு முறை
பூனைகள் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு
உடனே எதுவும் சொல்லாமல்
பிறகு அம்மா கேட்டாள்
‘அதோட முடியெல்லாம்
சாப்பாட்டுல விழுந்ததுன்னா
எப்படி இருக்கும் யோசிச்சு பாரு’

நேற்றிரவும்
அம்மா பார்க்காத சமயத்தில் தான்
அவசரமாகக் களைந்தேன்
உணவிலிருந்து எடுத்த
நீண்ட தலைமுடியை

******************

எல்லா நாய்களையும் போலவே
அவ்விரண்டும்
பிறந்தன
திரிந்தன

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கும்
அந்த மூன்றாம் வீட்டில்
எடுத்து வளர்க்கத் துவங்கியதும்
ஒன்று ‘விக்டர்’ ஆனது.

நாங்கள் எடுத்துக்கொண்டது
‘மணி’ ஆனது.

(கவிதைகளில் லாஜிக் எதிர்பார்க்கும் சங்கத்தினருக்கு ஒரு ஜாமீன் மனுபூனைகளின் ரோமம் உடல் நலத்திற்கு கேடு என்பது முற்றிலும் உண்மையல்ல! ;)   )

(புகைப்படங்கள் – www.greatlakesdigitalsalon.org)

Written by aravind

ஜூன் 20, 2009 இல் 7:21 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. உங்க வீட்லயும் அத்லிச்சி புசி(பூனை)குட்டி இருக்கா. நான் ஒரு பூனை பைத்தியம். கவிதை எங்கள் வீட்டு பூனை மாதிரி அழகோ அழகு

    அடலேறு

    ஜூன் 22, 2009 இல் 8:38 மு.பகல்

    • அடலேறு – நிச்சயம் பூனை அதிக அழகு என்றே நினைக்கிறேன் ;) வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

      aravind

      ஜூன் 24, 2009 இல் 4:20 பிற்பகல்


மறுமொழி இடுக