சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஜூன் 2009

இறகுகளும் கொஞ்சம் காதலும்

2 மறுமொழிகளுடன்

featherநதியினில்
தன்னுருவத்தை
கண்டபடி
அமர்ந்திருக்கும்
மரத்தின் பறவை

தன் பிம்பத்தை
கலைக்கிறது
இறகொன்றை
உதிர்த்து

——-

இறகுகளை
புத்தகத்தினுள்
மிகப்பத்திரமாக
பாதுகாப்பவர்கள்
அறிந்தேயிருக்கிறார்கள்
பறவையின்
ஏதோவொரு
ரகசியத்தை

—————

வீட்டுக்குள்ளே
அடைந்து கிடப்பவர்களின்
ஜன்னலில்
நனைந்த பறவை
உதிர்த்துவிட்டுச் செல்கிறது
மழையிறகை

——-

பறந்து பறந்து
தீருவதில்லை
பறவைகளுக்கு

வானில்
அலையும்
சிறகுகள்

பூமியில்
அலையும்
இறகுகள்

—————-

தலை நிமிர்ந்து
பார்க்கையில்
உதிர்த்துவிட்டாய்
ஒரு புன்னகையை

அசைந்தசைந்து
இதமாய் விழுந்தது
மனதின் ரகசியப் படியில்

பின் காற்றடிக்கும்
போதெல்லாம்
படபடக்கிறது
மனது

——————————————————————————————————-

புகைப்படம்: http://www.jeffschneiderman.com

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:18 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

இசையலைகள் #2

6 மறுமொழிகளுடன்

2005050415040401எனக்கு பத்து வயதிருக்கையில் பெரிய அக்காவை கடுப்பேற்ற ஒரு எளிய வழி இருந்தது. எஸ்.ஜானகியைப் பற்றி எதாவது குறை சொல்வது! அக்கா உடனடியாக சரணடைந்து விடுவாள். ஒரு நாள் தொடர்ந்து கடுப்பேற்றி, கிட்டதட்ட அழவைத்திருக்கிறேன். அவளை வென்றுவிட்டாலும், ‘இப்படி அபரிதமான ஒரு ரசிப்பாஎன்று ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னர் கல்லூரியில் ஒரு நாள் தோழியொருத்தி, ‘உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத பாடகி ஒருவர் உண்டென்றால், அது எஸ்.ஜானகி தான்!’ என்று சொல்ல, ‘என்னது?’ என்று வியப்பிலும் அதிர்ச்சியிலும் எழுந்து நின்றுவிட்டேன். பழைய நிலையிலிருந்து இந்தப் புதிய நிலையை நான் வந்தடைந்த  வழியில் பல நூறு எஸ்.ஜானகியின் பாடல்கள்!

ஜும்பா லாஹிரியின் புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இந்தப் புத்தகத்தை படிக்கையில், பக்கத்திலிருப்பவரை பிடித்து இழுத்துஇதைக் கொஞ்சம் படியேன்என்று சொல்லத் தோன்றும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். முதல் மரியாதை திரைப்படத்தில் வருகிற ராசாவே உன்ன நம்பி பாடலை கேட்கையிலெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும்! ஜானகி ஒரு குயிலின் கச்சிதத்துடன் அந்தப் பாடலின் ஹம்மிங்கை துவங்குவார். உச்சரிப்பில் மணமணக்கும் கிராமியம், பாட்டை சிதைக்காத பாவங்கள் என பிரமாதப்படுத்துகிறவர், ஏற்கனவே அழகான பாடலை ஒரு சுகமான சோகத்தில் முற்றிலுமாக தோய்த்தெடுப்பார். தமிழ் திரையுலகின் பாடகிகளை, இந்த ஒரு பாடலிலேயே மற்றவர்களை அபாரமாக வென்று முன்னேறுவதாக எனக்குத் தோன்றும்.

தாயழுதாளே நீ வர, நீ அழுதாயே தாய் வர என்று பாடுகிற போது அதில் உள்ள சோகமோ, ஆடை கூட பாரமாகும், பாரிஜாதம் ஈரமாகும் என்பதில் உள்ள மெல்லிய மோகமோ, பறவை போல பறந்து பறந்து, படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து என்பதில் தெறிக்கும் பரவசமோ (அந்த வரியை முடிக்கையில் ஒரு சிரிப்பு), சிரிக்கிறான், , ஓஹோ, ரசிக்கிறான் ராஜா என்பதில் உள்ள வெட்கமோ - பாவங்களை மிக எளிதாக பாட்டில் நுழைத்தவர் (வெட்கபடத் தெரியாமல் பாரதிராஜாவிடம் அறை வாங்கிய நாயகிகள், ஜானகி குரலில் செய்ததை பாதி செய்தால் போதுமாயிருந்திருக்கும்).

9124சில பாடல்கள் ஜானகிக்கு என்றே விதிக்கப்பட்டவை. நாதம் என் ஜீவனே, காற்றில் எந்தன் கீதம், பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, பாடவா என் பாடலை, ஒரு பூங்காவனம் புதுமணம் எத்தனை பாடல்கள்! ஏற்கனவே மிகச்சிறப்பான பாடலை ஒரு பாடகர் அப்படியே வழிநடத்தி செல்ல முடியும் என்று தேவதை படத்தில் வருகிற ஒரு நாள், அந்த ஒரு நாள் பாடலைக் கேட்கையில் தோன்றும். எண்பதுகளின் நாயகிகளை இவரின் குரல் இன்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

வரிகள் இல்லாமலே உங்களை கட்டிப்போடும் வித்தையும் அவருக்குத் தெரியும். ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி பாடலின் துவக்க ஹம்மிங் நினைவில்லாமல் இருக்குமா? மெட்டி  ஒலி காற்றோடு  என் நெஞ்சை தாலாட்ட  பாடலில் ஜானகி துவக்கத்தில், பல்லவிக்குப் பிறகு, சரணத்திற்குப் பிறகு என வெறும் ஹம்மிங்காகவே ஒலிப்பார். வெள்ளைப் புறா ஒன்று பாடலை அவர் துவக்கும் விதத்திற்காகவே பல முறை கேட்பேன். இதயக்கோயில் படத்தில் பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் என்று ஒரு பாடல் உண்டு (இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்று என்று இதை சொல்வேன் ). அதில் பாதி ஜாமம்ம்ம்ம்ம்ம், காயும் போதும்ம்ம்ம்ம் என்று இழுப்பதெல்லாம் தேன்.

ஜானகியின் குரலில் எளிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரின் குரலில் உயர்ந்த தரமில்லை என்று நினைத்ததுண்டு. தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலைக் கேட்கையிலோ, எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா பாடலைக் கேட்கையிலோ, ஜேசுதாஸின் குரல் க்ளாஸ் என்றும் ஜானகியின் குரல் இதற்கு ஈடாகவே முடியாது என்றும் நினைத்த காலமுண்டு. இப்போது கேட்கையில், நிலைமை தலைகீழ்!

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கிடையில், குரல் மாறும் பச்சோந்தி ஜானகி. (அவரைத் தாழ்த்தி பேசவில்லை! ) சில்க் ஸ்மிதாவுக்குப் பாடும்போது, பேபி ஷாலினிக்கு பாடும் போது அவர் எத்தனை எளிதாக பாடுகிறார் என்பது வியப்பானது. மகளிர் மட்டும் படத்தில் வரும் காள மாடு ஒண்ணு பாடலில் மூன்று விதமான பாத்திரங்களுக்கு அவர் பாடியிருப்பார்.  ஆண் குரலில் பாடியிருப்பதாகக் கூட படித்ததுண்டு! இத்தனை பாவங்களுடன் ஒரு பாடகி இனி வரவியலாது.

இளையராஜாவிடம் ஜானகிக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடிய சித்ராவும், சில பாடல்களே பாடினாலும் ஜென்ஸி, உமா ரமணன், ஷைலஜா எனப் பலர் மனதில் நின்றாலும், எண்ணற்ற பாடல்களில் ராஜா இசைத்த வயலினைப் போல கச்சிதமாக கலந்து போனவர் எஸ்.ஜானகி. (எஸ்.பி.பியைப் போல!) அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:14 பிற்பகல்

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with

பிம்பங்கள் #2

without comments

toshiro_mifune_in_rashomon_2அகிரா குரோசாவாவைப் பற்றி என்னிடம் பேசாத உலக சினிமா ஆர்வலர் இல்லை. ‘, நீங்க உலக சினிமா பாப்பீங்களா?’ என்ற கேள்வி வந்த பின் மூன்றாவது கேள்வி இவரைப் பற்றியே இருக்கும். போர் வீரர்கள் பெரிய கொண்டை இட்டுக்கொண்டு அதில் ஒரு பெரிய ஊசி போன்ற ஒன்றை சொருகி வைத்து, ஆக்ரோஷமாக முகம் காட்டும் ஸ்டில்களோ, ‘யோஜிம்போபோன்ற படத்தின் பெயர்களோஎதுவோ ஒன்று அவர் படங்களைப் பார்க்கும் ஆவலைத் தூண்டாமல் இருந்தது. பின் மனதை திடப்படுத்திக்கொண்டு போன வெள்ளிக்கிழமை இரவைரஷோமானுக்கு தாரை வார்த்தேன். ;)

அகிராவின் மிகப்பெரிய பெருமை, காலம் கடந்து திரைப்படங்களில் தொடர்ந்து வரும் க்ளீஷேக்களை உருவாக்கியது. உதாரணமாக, நாயகன் காட்டில் செல்லும் காட்சியை கற்பனை செய்யலாம். இரவில் காட்சி நடக்கிறது. இதை சினிமாவில் காண்பிக்கும் போது, காமிரா வானம் பார்த்தபடி நகர, மரங்களின் இலைகளினூடே நிலா நகர்வது போன்ற ஒரு காட்சி மனதுக்கு வருகிறதா? இது போன்ற சின்னச்சின்ன விஷயங்களை முதன் முதலில் செய்தவர் அகிரா! சண்டைக்காட்சிகளில் ஒரு கத்தி தரையில் விழுவதும் அதை நாயகன் எடுக்க முயல்வதும், வில்லன் நாயகனின் காலைப் பிடித்து இழுப்பதும் – எத்தனை முறை பார்த்திருப்போம்? திரைப்படங்களுக்கு அந்தக் காட்சியை உபயம் செய்தது இவரே! (முன்பெல்லாம் காமிரா வழியே அண்ணாந்து சூரியனை பார்க்க மாட்டார்களாம்! லென்ஸ் வெந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ! அதை முதலில் செய்தவர் அகிரா என்று சொல்லுகிறார்கள்!)

ரஷோமான்மிகவும் எளிமையான ஒரு படம். மழைக்கு ஒருவன் ஒரு மண்டபத்தில் ஒதுங்குகிறான். அங்கே இருவர் பேயறைந்தது போல அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் துறவி. மழைக்கு ஒதுங்கியவன் பேச்சு கொடுக்கிறான். இருவரும்இது போன்ற ஒரு விசித்திர கதையை கேட்டதேயில்லைஎன்பதை பயங்கர முஸ்தீபுடன் சொல்கிறார்கள். மழை நிற்கிற பாடு இல்லை. மழைக்கு ஒதுங்கியவனுக்கு பொழுது போக வேண்டும். ‘சரி, என்ன சொல்லு கேட்போம்!’

நாயகன் -நாயகி. காட்டு வழியில் ஒற்றைக் குதிரையில் போகிறார்கள். machiko_kyo_in_rashomon(பெண் அமர்ந்து வர, ஆண் நடத்தி வருகிறான்). வழியில் ஒரு திருடனை சந்திக்கிறார்கள். திருடன் அந்தப் பகுதியில் மிகப்பிரபலம். லேசுபட்டவன் அல்ல. நாயகியின் பேரழகு திருடனை என்னவோ செய்கிறது. (‘She was like a goddess’) நாயகனை தந்திரமாக ஏமாற்றி கட்டிப் போட்டு விட்டு, நாயகியை கற்பழித்து விடுகிறான். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நாயகன் செத்துக் கிடக்கிறான். நாயகி ஒரு கோயிலில் ஒளிந்துகொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்படுகிறாள். திருடன் விஷச்செடி வளர்ந்த மலையின் அருவி நீரை குடித்து மயக்கமாகி காவல்துறையிடம் சிக்குகிறான். இந்த மண்டபத்தில் துறவியோடு இருந்தவன் தான் முதலில் நாயகனின் பிணத்தை பார்க்கிறான். அவனே காவல்துறைக்கு தகவலும் தந்தது.

விதமான வாக்குமூலங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று திருடனுடையது. மற்றொன்று நாயகியினுடையது. மூன்றாவது? சஸ்பென்ஸ் ;) காவல்துறை படத்தில் காட்டப்படவேயில்லை. மக்கள் தான் காவல்துறை என்பது போல, சாட்சி சொல்பவர்கள் காமிராவைப் பார்த்தே வாக்கு தருகிறார்கள்.

கேட்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கிற கதை, அகிராவின் இயக்கத்தில் எடுக்கிற ஒளி வடிவம் அபாரமானது. எழுத்திலும் சரி, காமிராவிலும் சரிபடத்தின் தரம் பரவசப்படுத்துகிற ஒன்று. மேக இடைவெளியில் மின்னலென சூரியன் உடைந்து கொண்டிருக்க, திருடன் குதிரையில் விரைகிற 2 நொடிக் காட்சியோ; மூன்று கதாபாத்திரங்களின் இடையே ஏற்படுகிற tension- அதை சடசடவென வெட்டுகிற கோணங்களில் காட்டுகிற விதமோஎல்லாமே பரவசம்! படத்தின் மிகச்சிறப்பான அம்சங்கள்காட்சியமைப்புகளும், படம் தட்டி எழுப்புகிற உணர்வுகளும்.

தமிழில் இதே போன்ற வந்த படங்களை நீங்கள் ஊகிக்க முடியும் – அந்த நாள், விருமாண்டி.

எது உண்மை? எது பொய்? என்ற சுவாரசியமான கேள்வியையும் மீறி மூன்று கதாபாத்திரங்கள் எடுக்கக் கூடிய வெவ்வேறு நிலையை ஒரே படத்தில் ரசிக்கும் வாய்ப்பு கிட்டும்!

(Rashomon / Japan / 1950 )

******

poster-pursuithappynessகனவுகளை துரத்துவது மிகவும் கடினம். ஒரு குதிரையேறி துரத்தலாம். உங்கள் ஆர்வத்தை குதிரையின் கடிவாளமாக மாற்றி குதிரையை இலக்கு நோக்கி செலுத்தலாம். ஆனால், நிதர்சனத்தின் கடிவாளம் உங்களையே கட்டுப்படுத்தினால்?

க்ரிஸ் ஒரு சேல்ஸ்மேன். உப்புப் பட்டாணிக்கு உதவாத ஒரு மருத்துவ சாதனம் ஒன்றை வீதியாக வீதியாக ஆஸ்பத்தரி ஆஸ்பத்திரியாக சென்று விற்க வேண்டும். மருத்தவர்களிடம் பல்லிளிக்க வேண்டும். ஒரு சாதனம் விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். வீடு நிறைய விற்கப்பட வேண்டிய சாதனங்கள் . வருமானம் போதவில்லை. மனைவிக்கு வேலையும் செய்து வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். மகனுக்கு ஆறு வயது. அவனது எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் மீறி க்ரிஸ்ஸுக்கு ஒரு கனவு உண்டு. பங்குச்சந்தைக் கனவு. கண்களில் எண்கள் மிதக்க, நாளெல்லாம் ஒரு பரவசமான வணிக விளையாட்டு. எப்படியாவது பங்குச்சந்தையில் தரகராக சேரவேண்டும். அதற்கும் ட்ரெயினிங் உண்டு! தற்போதைய நிர்பந்தங்களையும் மீறி அதை சாத்தியப்படுத்த அபாரமான முயற்சிகள் தேவை! முடியுமா?

முடியும் என்பதே படம் தருகிற உற்சாகமான பதில்!

வீட்டுக்கு வெள்ளை அடித்த கையோடு ஓடுவது, கிடைத்த ஐந்து நிமிடங்களில் மேலாளரை இம்ப்ரெஸ் செய்ய படபடப்பாக Rubik’s Cubeஐ பொருத்துவது, வீடிழந்த இரவில் தவிப்பது என பல அற்புதமான கணங்கள் படமெங்கும்.

படத்தின் அப்பா-மகன் உறவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! படத்தில் வில் ஸ்மித்தும் அவரது மகனுமே நடித்திருக்கிறார்கள்.  இருவருமே உண்மையாக அந்த பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியே இன்னொரு தகவல் – இது ஒரு உண்மைக் கதை!

தடைகளைத் தாண்டி வெற்றி பெறுதல் வழமையான திரைப்படக்கதை என்றாலும்,  பிரகாசமான சூரியப் பேரொளியை கண்டது போன்ற உற்சாகத்தை படம் தரும்!

(Pursuit of Happyness / Hollywood / 2006)

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:08 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

நாய்கள், பூனைகள், மீன்கள் – சில குறிப்புகள்

2 மறுமொழிகளுடன்

dog

தெருவையே ஆண்டுக்கொண்டிருக்கின்றன
அந்த நான்கு நாய்களும்.
ஒன்று சாம்பல், ஒன்று கருப்பு,
மற்றயிரண்டும் பழுப்பு.
பத்து மணிக்கு மேல்
தெருவில் செல்ல பயந்தார்கள்
பெண்கள், குழந்தைகள்.
வந்த புதிதில்
அம்மாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.
பேய்களுக்குப் பிரசவ வலி போன்ற
சப்தங்கள் இரவெல்லாம்.
ஒரு நள்ளிரவில்
போக்குவரத்துக் காவலர்
இரு சக்கர வாகனத்தில் துணைக்கு வந்தார்
வீடு வரை
‘எங்களதுலயே ரெண்டு பேர கடிச்சுடுச்சுப்பா’
என்று புலம்பியபடி.
‘கார்பரேஷன்ல பிடிச்சுக் குடுக்கணும்’
நள்ளிரவு உறுதிமொழிக்கு பின்னே
பல நாட்கள்
தூங்கப் போகிறோம்.

80களுக்குப் பின்
மாற்றங்கள் கண்டிராத
பக்கத்து வீட்டில் வசிக்கும்
யாரிடமும் பேசாத
அதிகம் வெளியில் தென்படாத
அவரின்
கால்களை நக்கியபடி
கொஞ்சல் ஒலிகளோடு
அத்தனை நாய்களும்
உணவைத் தின்றுகொண்டிருக்கும் காட்சியை
குழுப்பத்துடன் கண்டபடி நடக்கிறேன்
எல்லா இரவுகளுக்குப் பின்னான
காலைகளிலும்.

******************

Fish

மிகப் பத்திரமாக
கையில் ஏந்தி
உதடுகள் குவித்துக்
காத்திருக்கிறாள்
ஒரு முத்தமிட்டுவிட வேண்டி

கண்ணாடிக் குடுவையின்
இரு புறமும்
முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு
தொட்டி மீன்
அளந்துக் கொண்டிருக்கிறது
சமுத்திரத்தை

******************

முன்பொரு முறை
பூனைகள் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு
உடனே எதுவும் சொல்லாமல்
பிறகு அம்மா கேட்டாள்
‘அதோட முடியெல்லாம்
சாப்பாட்டுல விழுந்ததுன்னா
எப்படி இருக்கும் யோசிச்சு பாரு’

நேற்றிரவும்
அம்மா பார்க்காத சமயத்தில் தான்
அவசரமாகக் களைந்தேன்
உணவிலிருந்து எடுத்த
நீண்ட தலைமுடியை

******************

எல்லா நாய்களையும் போலவே
அவ்விரண்டும்
பிறந்தன
திரிந்தன

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கும்
அந்த மூன்றாம் வீட்டில்
எடுத்து வளர்க்கத் துவங்கியதும்
ஒன்று ‘விக்டர்’ ஆனது.

நாங்கள் எடுத்துக்கொண்டது
‘மணி’ ஆனது.

(கவிதைகளில் லாஜிக் எதிர்பார்க்கும் சங்கத்தினருக்கு ஒரு ஜாமீன் மனுபூனைகளின் ரோமம் உடல் நலத்திற்கு கேடு என்பது முற்றிலும் உண்மையல்ல! ;)   )

(புகைப்படங்கள் – www.greatlakesdigitalsalon.org)

Written by aravind

ஜூன் 20, 2009 இல் 7:21 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

முதல் ரகசியம்

8 மறுமொழிகளுடன்

பார்ப்பதற்கு திலீபனைப் போலவே இருந்த அந்த தூரத்து ஆளை ரவி திரும்பி பார்த்தார். அவரைக் காணவில்லை! அலைகள் வரைந்த நீளக் கோட்டையொட்டி தேடிப் பார்த்தார். பின் திரும்பி பார்க்கையில் அவரும் அவருடன் வந்த பெண்மணியும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

அது திலீபனாக இருந்திருக்கலாம். கூட வந்த பெண் சங்கரியாக இருந்திருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை சாத்தியப்படுத்த. சங்கரியும் திலீபனும் காதலித்தார்கள் தானே? யாரைக் கேட்டு அறிந்துகொள்வது?

சங்கரியின் வீட்டுக்கு போக வேண்டியிருந்தது. கடற்கரையின் கடைசி மனிதராக அமர்ந்திருந்த ரவி கைப்பையை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார், நினைவுகளில் மனம் புதைய புதைய.

அந்த டவுன் பஸ் பயணத்தை ரவி இன்னும் மறக்கவில்லை.  மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர்ந்த பேருந்து, வயல்வெளிகள் சூழ்ந்த தார்ச்சாலையில் மெதுவாக சென்றுகொண்டிருந்தது. கூட்டமில்லை. மாலைக் காற்று ஜன்னல் வழியே புகுந்து எதையோ படபடப்பாக பேருந்தெங்கும் தேடியபடி வெளியேறியது.  ஜன்னல் பக்கமாக அமர்ந்திருந்த சங்கரி கூந்தலையும் தாவணியையும் மாற்றி மாற்றி கவனித்தபடி அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின் இருக்கையில் ரவியும் திலீபனும் அமர்ந்திருந்தார்கள். திலீபனும் சங்கரியும் ஒரே ஜன்னல் வழியே உலகத்தை கவனித்தபடி வந்தார்கள். ரவி இருவரையும் கவனித்தபடி வந்தார். திலீபன் ஏதோ ஒரு பாடலை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்ததாக நினைவு. மூவரும் முகத்தில் விலகாமல் கிடந்தது ஒரு சின்னப் புன்னகை. அன்று ரவி சங்கரிக்கும் திலீபனுக்கும் மிக நெருக்கமாக உணர்ந்தார். அந்தத் திருவிழாவுக்கு சென்று திரும்பி நாள் தவிர, அப்படி ஒரு நெருக்கமான பொழுது அமையவே இல்லை.

ரவியின் அப்பா இறந்து அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அப்பாவின் இனம் புரியாத கண்டிப்பு ரவி, சங்கரி, அம்மா ஆகிய மூவரின் வாழ்க்கையிலிருந்து பல சுகங்களைத் திருடியிருந்தது. அம்மாவின் மொத்த எதிர்ப்பும் ஆழமான வேர்கள் கொண்ட மௌனமாக வளர்ந்தது. இரு பிள்ளைகள் பிறந்ததும், அவர்கள் அம்மாவின் மிகப்பெரும் மௌனத்தின் நிழலில் வளரத் தொடங்கினார்கள். அம்மா ரவிக்கும் சங்கரிக்கும் அப்பாவை வெறுக்கக் கற்றுத் தரவேயில்லை. அந்த வீட்டின் இயல்பே அது தான் என்பது எல்லாருக்கும் புரிந்திருந்தது. அம்மா அதை அப்படியே ஏற்றுக்கொண்டது போல, அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்தாள். அப்பாவைத் தவிர வீட்டில் வேறு யாரும் பேசியதே இல்லை. அப்பா இல்லாத நேரங்களிலும் வீடு அமைதியாகவே இருக்கும். எல்லா பிள்ளைகளும் அப்பாவை எதிர்த்து பேசுகிற வயதில், ரவியின் அப்பா படுத்த படுக்கையானார்.ரவிக்கு இருபது வயது ஆன போது அப்பா மாண்டு போய், அந்த அமைதியை நிரந்தரமாக்கினார்.

மூவருக்கும் அப்பாவின் திடீர் மரணம் மிகுந்த குழப்பத்தை தந்தது. சத்தம் போட்டு பேசிக்கொள்ள, வெளிப்படையாக அன்பைச் சொல்லிக் கொள்ள திடீரென வாய்ப்பு வந்திருந்தது. ஆனால் அதை எப்படி எடுத்துச் செல்வது என்று மூவருக்குமே தெரியவில்லை. அப்பா இருப்பதாக நினைத்துக்கொண்டு அதே வாழ்க்கையை தொடர்ந்தார்கள். ரவி பத்திரிக்கையொன்றில் வேலை தேடிக் கொண்டார். சங்கரி பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள். அம்மாவோடு வீட்டிலேயே தங்கிவிட்டாள். அந்த சமயத்தில் தான் திலீபன் வந்து சேர்ந்தான்.

கதைகள் எழுதுபவனாக அறிமுகம் செய்யப்பட்டான். திலீபனை கண்ட முதல் நாள் ரவிக்கு ஒரே விஷயம் தான் தோன்றியது. நிச்சயமாக திலீபனுடைய அப்பா, ரவியின் அப்பாவுக்கு நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டவராக இருக்க வேண்டும்.

திலீபன் உரத்த பேச்சும், சிந்தனைகளுமாக திரிந்தான். சில சமயங்களில் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருந்தான். ரவிக்கு யாரையும் நண்பராக்கவும் தெரியாது, யாராவது அவரை ஆக்கிக்கொண்டால் தடுக்கவும் தெரியாது. திலீபன் ரவியை மிகச்சிறந்த நண்பனாக்கிக் கொண்டான். ரவிக்கு திலீபனும் அவன் எழுதிய சொற்ப கதைகளும் அதிசயங்களாக இருந்தன. ரவிக்கு அந்தக் கதைகள் புரியாத போதும், அவற்றின் வசியத்தன்மைக்கு மயங்கியிருந்தார். பத்திரிக்கை ஆசிரியர் திலீபன் பெரிய எழுத்தாளனாக வருவான் என்று சொல்லும் போதெல்லாம் ரவிக்குப் பெருமையாக இருக்கும்.

ரவி வீட்டுக்கு அழைத்து வந்த முதல் நண்பனாக திலீபன் ஆனான். அவன் வந்த முதல் மாலைப் பொழுதிலேயே வீட்டில் இருந்த அடர்ந்த மௌனத்தை முற்றிலுமாக ஒழித்தான். அப்பாவைப் போலவே, அந்த இரண்டு வருடங்களுக்குப் அந்த வீட்டில் பேசிக்கொண்டே இருந்த ஒரே ஆளாக திலீபனாக ஆனான். வீடு அவனின் சிரிப்புகளால் நிறைந்து கொண்டிருந்தது.

சங்கரிக்கும் திலீபனுக்கும் ஈர்ப்பு இருப்பதாக எப்போது அவர் உணர்ந்தார் என்று நினைவில்லை. முதல் பூ பூத்த பின்னர் ஒரு செடியை கவனிப்பது போல, சங்கரியின் ஏதோ ஒரு புன்னகைக்குப் பின்னரே அவர் கவனிக்க ஆரம்பித்தார். திலீபன் வந்து சென்ற பிறகு அவன் இருந்த இடங்களிலெல்லாம் அவள் சுற்றித் திரிந்தாள். அவன் கதை வந்த இதழ்களை சேமித்து வைத்திருந்தாள். அவனைப் பற்றி அவர் ஏதேனும் சொன்ன அபூர்வ கணங்களில் அவள் அழுத்தமாக அவன் மீதான காதலை அவருக்கு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தாள். எப்போதும் சங்கரியிடம் நேரடியாக பேசாத திலீபன், ஒரு நாள் தேநீர் கொண்டு வந்த கொடுத்தவளிடம் ரவியை முன்வைத்துக்கொண்டு எதோ பேசிய பொழுது, ரவிக்கு இன்பமான அதிர்ச்சியாக இருந்தது. சங்கரிக்கும் அப்படியே இருந்திருக்கும். அதன் பின்னர், முன்னெப்போதும் இல்லாத விதமாக அவர்களின் காதலைப் பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.

நினைப்பதையெல்லாம் தயங்காமல் பேசும் திலீபனுக்கு சங்கரியைப் பற்றி பேசத் தயக்காம் இருக்காது என்று ரவி நம்பினார். ஒரு மாலைப்பொழுது அந்த நம்பிக்கையின் சுடர் மிகப்பிரகாசமாக எரிந்தது.அதன் பின்னரே திலீபன் ஒரு நாள் காணாமல் போனான். மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரவிக்கு இன்று நிச்சயம் திலீபன் சங்கரியைப் பற்றி பேசுவான் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. திலீபனின் அன்றைய புன்னகைகள் இன்றும் நினைவிருக்கிறது அவருக்கு. மிகச்சாதாரணமாக சங்கரியைப் பற்றி பேசி அன்றைய உரையாடலை முடித்துக்கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு அவன் காணாமல் போனான்.

இருந்த இடம் தெரியாமல், எங்கே சென்றான் என்று தெரியாமல் எங்கோ மறைந்தான். அதன் பிறகு அவன் பெயரிட்ட கதைகள் பத்திரிக்கைக்கும் வரவில்லை. வேறெந்த பத்திரிக்கையிலும் வரவில்லை. சங்கரி எப்போதும் போல அமைதியாக இருந்தாள். எனினும், முன்னெப்போதையும் விட அதிகமாகவே ரவி அவளின் காதலை உணர்ந்தார். அம்மாவுக்கு இது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை, சங்கரி தன்னிடம் மட்டுமே இதை பகிர்ந்துகொண்டிருக்கலாம்.

சங்கரிக்கு திருமணம் நடந்த நாள் வரையிலான ஒவ்வொரு நாளையும், ரவி திலீபனைப் பற்றி தகவல் வரும் என்று காத்திருந்தார். அம்மா திருமணப் பேச்சை எடுத்ததும், ரவியும் சங்கரியும் ஒருவரை ஒருவர் ஒரு முறை பார்த்துக்கொண்டதோடு சரி. திருமணம் இனிதே நிகழ்ந்தேறியது.

பேருந்தின் கண்ணாடியின் மேல் சட்டத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த மழை நீரை கவனித்துக் கொண்டிருந்த ரவியின் காதுகளில் ‘ஐஸ் அவுஸ் இறங்கு’ என்று கேட்டது.

மழையில் சிக்காமல் ரவி கடைகளில் ஒதுங்கியபடி நடந்தார். சங்கரிக்கு ஏதாவது வாங்கலாம் என்று தோன்றியது. அவளுக்குப் பிடித்த இனிப்பை வாங்கிக் கொண்டு அவளின் வீடு நோக்கி நடந்தார்.

*************************

கதவைத் திறந்ததும் பேச்சொலிகள் வெளியே சிதறின. ‘எங்கங்க போனீங்க?‘, கற்பகம் கேட்டாள். ‘இதே வேலையா போச்சு மாப்பிள்ளை சார். ஆஊன்னா பீச்சுக்கு போயிர்றது. அப்படி என்ன தான் பண்ணுவாரோம்மா! தெரியலயே’. கற்பகம் சங்கரியின் கணவரிடம் பேசியபடி உள்ளே போய் அமர்ந்தாள். சங்கரி ஹாலில் இல்லை. சங்கரியின் கணவரும் மகளும் ஒரு சோஃபாவில் அமர்ந்திருந்திருந்தனர். கற்பகம் எதிரே அமர்ந்திருந்தாள்.

‘வணக்கம் மாப்பிள்ளை சார்’ , ரவி சங்கரியின் கணவரை பார்த்து புன்னகைத்தார். கற்பகம் கொஞ்சம் நகர்ந்து ரவிக்கு இடம் விட்டாள். ‘புதுப்புடவையா?’ ரவி புன்னகைத்தபடி கேட்டார். ‘இங்க பாரும்மா.’ கற்பகம் பொய் அதிர்ச்சி காட்டினாள். ‘இவரு கண்ணு உறுத்துது. எம் பொண்ணு கல்யாண விஷயம் சொல்ல வெளில வறேன். ஒரு புது புடவ கட்டிக்க கூடாதா?’

சங்கரி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள். ‘வாண்ணே‘. கையில் தோசைத் தட்டு.

‘எங்க வீட்டுத் தலைவர் வண்ட்டாருபா’ பிரகாஷ் குரல் கேட்டு ரவி திரும்பினார். பெட்ரூம் வாசலில் நின்றிருந்தான் பிரகாஷ். ஒரு நிமிடம் ரவிக்கு தன்னையே இளம் வயதில் பார்த்தது போல இருந்தது.

‘எங்கம்மா? பீச்சுக்காமா?’ பிரகாஷ் வந்து ரவி பக்கத்தில் அமர்ந்தான்.

‘வேறெங்கே!’

‘நீ தான்பா இனி வீட்டுத்தலைவன். உன் தங்கச்சி கல்யாணத்த தனியாளா நின்னு முடிச்சிருக்க.’ வாய் விட்டு சிரித்தார் மாப்பிள்ளை சார்.

ரவி புன்னகைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கற்பகமும் பிரகாஷும் ஏதேதோ விடாமல் பேசிக்கொண்டேயிருந்தார்கள். இருவருக்கும் பேச்சு அத்தனை இஷ்டம்.

‘சரி. கல்யாணப் பொண்ணு வீட்டுல தனியா இருக்கா. கிளம்பலாம் சீக்கிரம். நாங்க விஷயத்த சொல்லியாச்சு. நீங்க ஒரு தடவ சொல்லி குடுங்க’ – பூ,பழம் எல்லாவற்றையும் வெளியே எடுத்தாள் கற்பகம்.

ரவி சங்கரியையும் மாப்பிள்ளை சாரையும் எதிரே ஜோடியாக நிற்க வைத்து சொன்னார் – ‘எம் பொண்ணு அனுவுக்கு கல்யாணம். கூட படிச்சவர், கூடவே வேல செய்யுறார். அவருக்கு அனு மேலே இஷ்டம். அவ எங்களுக்கு பயந்து சொல்லாம இருந்திருக்கா. பிரகாஷ் தான் எங்ககிட்ட சொல்லி சண்ட போட்டு முடிச்சு வெச்சாப் போல. முதல்ல அவனுக்கு முடிச்சிருக்கணும்.’ ரவி புன்னகைத்தார். ‘பத்திரிக்கையோட இன்னொரு நாள் வறோம்‘.

எல்லாரும் வாசல் வரை வந்தனர். பிரகாஷ் ஆட்டோ பிடிக்க தெருமுனைக்கு சென்றான். ரவி இருட்டில் சங்கரியின் முகத்தில் எதையோ தேடினார். ‘நாங்க கிளம்பறோம்‘.
தெருமுனை நோக்கி கற்பகமும் ரவியும் நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் சென்றதும் ரவி நின்று திரும்பி சங்கரியை நோக்கி கையசைத்தார்.

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக நடக்கும் சிறுகதை போட்டிக்காக எழுதியது)

Written by aravind

ஜூன் 16, 2009 இல் 3:51 பிற்பகல்

சிறுகதை இல் பதிவிடப்பட்டது

Tagged with