சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மரத்தடி

8 மறுமொழிகளுடன்

மாலைப்பொழுதிற்கான முதல் காற்று வீசியதும் நகரின் அனைத்து சோடியம் வேப்பர் விளக்குகளையும் ஒளிர விட்டுவிடுகிறார்கள். எத்தனை சோம்பலாக ஒரு ஒளி! குற்றங்கள் நிகழக்கூடிய ஒரு நகரத்தினுடைய ஓவியத்தின் முதல் தூரிகைக் கீற்றென ஒளிரத் துவங்குகிறது முதல் விளக்கு. இருளுக்குக் கொஞ்சமும் இடம் விடாமல் சாலையெங்கும் இரு தலைப் பாம்பென ஒளியை உமிழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அகல் விளக்குகள் போல சின்னச் சின்னதாக தூரத்திலே தெரிகையிலேயே மனதில் ஏதோ கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. கண்களை இறுக்க மூடி, இவை இல்லாத ஒரு நகரத்தின் இரவுக் காட்சியை கற்பனை செய்ய இயலவில்லை. கவனத்தை விட்டுப் போ என்று நினைவை உதறிப் பார்த்தாலும் ஆகவில்லை. வெறுப்புடன் இவை தரும் ஒளிக்குக் கீழே நடக்க வேண்டியுள்ளது. எதிர் வரும் பரிச்சயமற்ற முகங்களிலெல்லாம் அது ஒரு கள்ளத்தனமான அந்நியத்தை ஏற்றியிருக்கிறது. தெரிந்த முகங்களின் சிநேகிதத்தை ருசித்து விழுங்கிவிட்டிருக்கிறது. எல்லாம் முகங்களும் சோடியம் வேப்பரில் ஒளிர்கின்றன. அவை உண்டாக்கிய நிழலிலும் ஏதேனும் குற்றம் காண விழைகிறது மனம். சாலைகளில் எங்கேனும் நின்று திரும்பி, ‘என் பின்னால் வராதே, எங்கேனும் போய்த் தொலை’ என்று சொல்லலாம் போல இருக்கிறது. பிடிக்கவில்லை என்ற போதும் ஏதும் செய்ய முடிவதில்லை. பின்பு, ஒரு பிரகாசமான பகலில் நகரத்தை உன்னிப்பாக கவனித்தப் பின் தோன்றுகிறது – அச்சமும், அலுப்பும், அந்நியமும், சோர்வும் கலந்த ஒரு வாய்க்கால் நகரத்தின் அடி ஆழத்தில் நித்தமும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், அதிலிருந்து முளைத்து இரண்டாக கிளைத்த இந்த விளக்குகள், அவற்றையே உமிழ்கின்றன என்றும்.

**********

பேருந்து விட்டு விடுதலையாகி பறப்பது போல பறக்கிறது. பாடல்கள் கேட்கத் தோன்றவில்லை. நெடுஞ்சாலைக் காற்றில் பறந்துகொண்டிருக்கும் காகிதமென விரைகிற காட்சிகளினூடே விழிகள் இலக்கின்றி விரைகின்றன. கொஞ்சம் தலையைக் குனிந்தால், என் கவனத்தை ஈர்க்க முயன்று அப்போது தான் தோற்றுப் போன அலைபேசி, ஒளியை மட்டுப்படுத்துகிறது. எடுத்துப் பார்த்தால், ‘இதற்கு மேல் குறுந்தகவல்கள் சேமிக்க இடமில்லை’ என்று சொல்கிறது. மீண்டும் இந்த நாள் வந்துவிட்டதா? முன்னூறுக்கும் மேற்பட்ட தகவல்கள் இருக்கின்றன. ஒரே அழுத்தலில் அவற்றை அழிக்க முடியும். இருந்தும் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்து அழிக்கலாம் எனத் தோன்றுகிறது. தற்காலிகமாக கால் நீட்டிப் படுக்க எதையோ நகர்த்தி வைப்பது போல, இரண்டு மூன்று தகவல்களை மட்டும் அழிக்கலாம் தான். இருந்தும் இதை செய்ய இதுவே சரியான சமயம் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு அர்த்தத்தை தந்த தகவல்கள், இப்போது வெறும் வார்த்தைகளென ஊமையாகிக் கிடக்கின்றன. யார் எதற்காக அனுப்பினார்கள் என நினைவில்லை. நிதானமாக அழிக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேலே கவனம் தொலைந்து விட்டது. என்ன படிக்கிறேன் என்று தெரியாமல் அழித்துக்கொண்டேயிருக்கிறேன். முகம் பார்க்கும் சின்னக் கண்ணாடியை வைத்துப் பார்ப்பது போல அலைபேசியை எடுத்துப் பார்க்கும் அந்த முன்னிருக்கைப் பெண்ணின் மீது கவனம் செல்கிறது. என்னவோ யோசித்தவள், வேகமாக தகவல்பெட்டியைத் திறக்கிறாள். ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து அழிக்கிறாள். எனக்கு சிரிப்பு வருகிறது. இருவரும் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் போல மிகச்சிறப்பான ஒத்தியக்கத்துடன் தகவல்களை திறக்கிறோம்; படிக்கிறோம்; அழிக்கிறோம். இரண்டு நிமிடங்கள் சென்ற பிறகு பேருந்தின் அலறல் ஒன்று அவளின் கவனத்தை கலைக்க, நிறுத்துகிறாள். சில விநாடிகளில் நானும் நிறுத்துகிறேன். பின் அவள் இறங்கிச் செல்கிறாள். பின் நானும். அடுத்த நாள் காலையில் பேருந்தை பெருக்குகையில் கிடைத்திருக்கலாம் சிற்சில அர்த்தமில்லாத தகவல்கள்.

**********

கடவுளை வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுதல் அத்தனை சுலபமல்ல. வீட்டில் அலமாரியில் பீரோவில் மேஜையில் என பல இடங்களில் கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் என சில்லறைகள் காணக் கிடைப்பது போல, வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் காணக்கிடைக்காத இடங்களில் கடவுள் தந்திரமாக தங்கிவிடுகிறார். ஊரில் வீடு இருக்கம் தெருவில் இருந்தது. வீட்டில் இருந்து வெளியே வந்து, இடப்புறமாக பத்தடி நடந்தால் பஜார் தெரு வந்துவிடும். தெருக்கள் இணைகிற இடத்திற்கு நேரெதிரே ஒரு கடைப்பிள்ளையார் உண்டு. ஐந்தாம் வகுப்பு முதலே வெளியே கிளம்புகையிலெல்லாம் அவரை கும்பிடுகிற பழக்கம் உண்டு. யாரையோ பார்த்துக் கற்றுக் கொண்டது. நான் வெளியே கிளம்புகிற எல்லா சமயங்களிலும் அம்மா மாடியில் இருந்தபடி என்னைப் பார்த்தபடி இருப்பாள். அம்மா – நான் – பிள்ளையார் – ஒரு முக்கோணமாக இருப்போம். நான் நடக்க நடக்க, பின்னாலிருந்து அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறாள் எனப்புரியும். பிள்ளையாரை வணங்கியதும் அம்மாவைப் பார்த்து கையசைத்துச் செல்வேன். பின்னொரு நாள் கடவுளின் துணையில்லாமல் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்மாவிடம் அதை இன்று வரை சொன்னதில்லை. அம்மா கோபப்படலாம், வருத்தப்படலாம், ஏன் அழக்கூட செய்யலாம். ஆகையால் சொன்னதே இல்லை. அதன் பிறகு ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியேறுகையிலும், அந்த முக்கோணத்தை உடைக்கிற வாய்ப்பு இருந்தது. பத்தடிக்குள் பத்தாயிரம் எண்ணங்கள் தோன்றும். இன்று இதைச் செய்துவிடலாம் என்று மனது படபடவென அடித்துக் கொள்ளும். கடைசி விநாடியில் பிள்ளையார் வெற்றி பெறுவார். திரும்பி நான் அம்மாவைப் பார்த்து கையசைத்துச் சிரிக்கிற சிரிப்பில் ஒரு அர்த்தம் மட்டும் இருந்ததில்லை.

பின் ஜோவுடன் விடுதி அறையில் தங்கியிருக்கையில் இதே போன்றதொரு சங்கடம் ஏற்படும். ஜோவிற்கு ஆழமான பக்தி உண்டு. என்னைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். தேர்வுகளுக்கு கிளம்புகிற எல்லா காலைப் பொழுதுகளிலும், ஜோ மின்விசிறையை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி ஏற்றி மேரியன்னையை தொழத் தொடங்கியதும் நானும் பக்கத்தில் அமைதியாக நின்றிருக்கிறேன். தொழுது முடித்ததும் புனித நீர் இருக்கும் அந்தச் சின்ன பிளாஸ்டிக் குப்பியை எடுப்பான். நான் இரு கைகளையும் மூடிக்கொண்டு புறங்கைகள் காட்டியபடி நீட்டுவேன். புனித நீரைத் தொட்டு இரு கரங்களின் மீதும் ஒரு சின்ன அவசரச் சிலுவை எழுதுவான். பின் நெற்றியில் ஒன்று. ஒரு முறை கூட கையை நான் நீட்ட மறுத்ததில்லை. அவசரமாக அழித்துக்கொண்டதுமில்லை. ஜோவிற்காக. அன்றைய இரவு தொடங்கியதும் விளக்குகள் அணைத்த பின் படுக்கைக்கு நேரே இருக்கும் ரேடியத்தால் செய்யப்பட்ட அந்த மேரியன்னை இருளில் பிரகாசமாகத் தெரியப் போகும் காட்சி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். விளக்குகள் அணைத்த பின் எங்கெங்கோ பார்த்துவிட்டு மெதுவாக மேரியன்னையைப் பார்த்து புன்னகைத்துக் கொள்வேன்.

Written by aravind

மே 22, 2009 இல் 1:36 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Reading this after giving a pause, as always your prose is as beautiful and intense as your poetry.

    //அச்சமும், அலுப்பும், அந்நியமும், சோர்வும் கலந்த ஒரு வாய்க்கால் நகரத்தின் அடி ஆழத்தில் நித்தமும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், அதிலிருந்து முளைத்து இரண்டாக கிளைத்த இந்த விளக்குகள், அவற்றையே உமிழ்கின்றன என்றும்

    //ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு அர்த்தத்தை தந்த தகவல்கள், இப்போது வெறும் வார்த்தைகளென ஊமையாகிக் கிடக்கின்றன.

    Hats-off!!

    but at times these little messages when saved and read become the most cherished memories, as they occur when you live the moment. I know a friend who writes down in a note all the messages that he gets from his loved ones!!! :)

    Vignesh

    மே 24, 2009 இல் 5:16 பிற்பகல்

  2. Vignesh – Thanks man!! I would take a bow! :)

    aravind

    மே 26, 2009 இல் 4:12 பிற்பகல்

  3. ரொம்பவும் பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்!!

    Karthikeyan G

    மே 27, 2009 இல் 11:46 மு.பகல்

  4. Karthikeyan – தங்களுக்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி! நன்றிகள்.

    aravind

    மே 27, 2009 இல் 2:59 பிற்பகல்

  5. Loved this !! indeed beautiful and read a few missed posts of yours!!!

    Great wriitings as always thozhare!!!!

    barath

    மே 29, 2009 இல் 12:15 பிற்பகல்

  6. Barath – Nandri nanba! :) Thanks for the encouragement!!

    aravind

    ஜூன் 2, 2009 இல் 5:09 பிற்பகல்

  7. அற்புதம்… அருமையான உவமைகள். புதுமையான சிந்தனை மற்றும் நடை.

    சாணக்கியன்

    ஜூன் 18, 2009 இல் 4:57 பிற்பகல்

    • சாணக்கியன் – வருகைக்கு நன்றி. மறுமொழி நிறைய ஊக்கத்தை தருகிறது.

      aravind

      ஜூன் 24, 2009 இல் 4:19 பிற்பகல்


மறுமொழி இடுக