Archive for மே 2009
கவிதை இரவு இரவு கவிதை

வழிகள் தெரியாமல்
அகண்டு விரிந்த பலகையின் மேலே
இருண்ட திசையில்
ஊர்ந்துகொண்டிருந்தேன்
சிறிய பூச்சி போலே
திடுமென
ஒரு தலைகீழ் திருப்பம்
பார்த்தால்
பகலாகியிருந்தது!
************
ஆளில்லாத சமவெளியில்
ஒற்றை மரமாக
நின்றிருந்தேன்
தலைக்கு மேல் பெருமேகமென
இரவு என்னை கடக்க.
—————————————————————
தட்டிவிட்ட குவளையின் நீர் போல
மெதுவாக என்னை வந்தடைந்தது
உள்ளறையின் ஒலிகள்.
அம்மா நாளிதழால் விசிறிக்கொண்டிருக்கிறாள்.
சின்ன அக்கா தொட்டிலை
முன்னிழுத்து பின்னே
முன்னிழுத்து பின்னே தள்ளிக்கொண்டேயிருக்கிறாள் .
என் விழிகளை கூடவே அசைத்துப் பார்க்கிறேன்.
பெரிய அக்கா தூங்கி விட்டாள் போலும்.
சொந்த ஊரின் மின்வெட்டுகளைப் பற்றி
அம்மா பேசத்துவங்குகிறாள்
ரகசியம் போன்ற குரலில்.
திரும்பிப் படுக்கையில் வளையல் ஒலிகள்.
வியர்வை கலந்த பெருமூச்சுகள்.
‘அபி தூங்கிட்டான் போல’ என்று
அக்காவிடம் சொல்கிறாள்.
எனக்கு பெரும் புன்னகை வருகிறது.
மெல்ல மெல்ல ஒலிகள் தேய்ந்து
அமைதியில் கலந்தோம்.
பெரும் சத்தத்துடன்
மின்விசிறிகள் சுழலத் துவங்கின.
மின்சாரம் வந்ததும்
எல்லாரும் துண்டிக்கப்பட்டோம்.
************
ஒரு வீட்டிலிருந்து
மற்றொன்றுக்கும்
பின் வேறோன்றுக்குமாக
தாவிக்கொண்டு
ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தது
கறுப்புப் பூனையொன்று
கடிகாரச் சத்தங்களின் மீதேறி
நடந்தபடி.
மரத்தடி
மாலைப்பொழுதிற்கான முதல் காற்று வீசியதும் நகரின் அனைத்து சோடியம் வேப்பர் விளக்குகளையும் ஒளிர விட்டுவிடுகிறார்கள். எத்தனை சோம்பலாக ஒரு ஒளி! குற்றங்கள் நிகழக்கூடிய ஒரு நகரத்தினுடைய ஓவியத்தின் முதல் தூரிகைக் கீற்றென ஒளிரத் துவங்குகிறது முதல் விளக்கு. இருளுக்குக் கொஞ்சமும் இடம் விடாமல் சாலையெங்கும் இரு தலைப் பாம்பென ஒளியை உமிழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அகல் விளக்குகள் போல சின்னச் சின்னதாக தூரத்திலே தெரிகையிலேயே மனதில் ஏதோ கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. கண்களை இறுக்க மூடி, இவை இல்லாத ஒரு நகரத்தின் இரவுக் காட்சியை கற்பனை செய்ய இயலவில்லை. கவனத்தை விட்டுப் போ என்று நினைவை உதறிப் பார்த்தாலும் ஆகவில்லை. வெறுப்புடன் இவை தரும் ஒளிக்குக் கீழே நடக்க வேண்டியுள்ளது. எதிர் வரும் பரிச்சயமற்ற முகங்களிலெல்லாம் அது ஒரு கள்ளத்தனமான அந்நியத்தை ஏற்றியிருக்கிறது. தெரிந்த முகங்களின் சிநேகிதத்தை ருசித்து விழுங்கிவிட்டிருக்கிறது. எல்லாம் முகங்களும் சோடியம் வேப்பரில் ஒளிர்கின்றன. அவை உண்டாக்கிய நிழலிலும் ஏதேனும் குற்றம் காண விழைகிறது மனம். சாலைகளில் எங்கேனும் நின்று திரும்பி, ‘என் பின்னால் வராதே, எங்கேனும் போய்த் தொலை’ என்று சொல்லலாம் போல இருக்கிறது. பிடிக்கவில்லை என்ற போதும் ஏதும் செய்ய முடிவதில்லை. பின்பு, ஒரு பிரகாசமான பகலில் நகரத்தை உன்னிப்பாக கவனித்தப் பின் தோன்றுகிறது – அச்சமும், அலுப்பும், அந்நியமும், சோர்வும் கலந்த ஒரு வாய்க்கால் நகரத்தின் அடி ஆழத்தில் நித்தமும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், அதிலிருந்து முளைத்து இரண்டாக கிளைத்த இந்த விளக்குகள், அவற்றையே உமிழ்கின்றன என்றும்.
**********
பேருந்து விட்டு விடுதலையாகி பறப்பது போல பறக்கிறது. பாடல்கள் கேட்கத் தோன்றவில்லை. நெடுஞ்சாலைக் காற்றில் பறந்துகொண்டிருக்கும் காகிதமென விரைகிற காட்சிகளினூடே விழிகள் இலக்கின்றி விரைகின்றன. கொஞ்சம் தலையைக் குனிந்தால், என் கவனத்தை ஈர்க்க முயன்று அப்போது தான் தோற்றுப் போன அலைபேசி, ஒளியை மட்டுப்படுத்துகிறது. எடுத்துப் பார்த்தால், ‘இதற்கு மேல் குறுந்தகவல்கள் சேமிக்க இடமில்லை’ என்று சொல்கிறது. மீண்டும் இந்த நாள் வந்துவிட்டதா? முன்னூறுக்கும் மேற்பட்ட தகவல்கள் இருக்கின்றன. ஒரே அழுத்தலில் அவற்றை அழிக்க முடியும். இருந்தும் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்து அழிக்கலாம் எனத் தோன்றுகிறது. தற்காலிகமாக கால் நீட்டிப் படுக்க எதையோ நகர்த்தி வைப்பது போல, இரண்டு மூன்று தகவல்களை மட்டும் அழிக்கலாம் தான். இருந்தும் இதை செய்ய இதுவே சரியான சமயம் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு அர்த்தத்தை தந்த தகவல்கள், இப்போது வெறும் வார்த்தைகளென ஊமையாகிக் கிடக்கின்றன. யார் எதற்காக அனுப்பினார்கள் என நினைவில்லை. நிதானமாக அழிக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேலே கவனம் தொலைந்து விட்டது. என்ன படிக்கிறேன் என்று தெரியாமல் அழித்துக்கொண்டேயிருக்கிறேன். முகம் பார்க்கும் சின்னக் கண்ணாடியை வைத்துப் பார்ப்பது போல அலைபேசியை எடுத்துப் பார்க்கும் அந்த முன்னிருக்கைப் பெண்ணின் மீது கவனம் செல்கிறது. என்னவோ யோசித்தவள், வேகமாக தகவல்பெட்டியைத் திறக்கிறாள். ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து அழிக்கிறாள். எனக்கு சிரிப்பு வருகிறது. இருவரும் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் போல மிகச்சிறப்பான ஒத்தியக்கத்துடன் தகவல்களை திறக்கிறோம்; படிக்கிறோம்; அழிக்கிறோம். இரண்டு நிமிடங்கள் சென்ற பிறகு பேருந்தின் அலறல் ஒன்று அவளின் கவனத்தை கலைக்க, நிறுத்துகிறாள். சில விநாடிகளில் நானும் நிறுத்துகிறேன். பின் அவள் இறங்கிச் செல்கிறாள். பின் நானும். அடுத்த நாள் காலையில் பேருந்தை பெருக்குகையில் கிடைத்திருக்கலாம் சிற்சில அர்த்தமில்லாத தகவல்கள்.
**********
கடவுளை வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுதல் அத்தனை சுலபமல்ல. வீட்டில் அலமாரியில் பீரோவில் மேஜையில் என பல இடங்களில் கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் என சில்லறைகள் காணக் கிடைப்பது போல, வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் காணக்கிடைக்காத இடங்களில் கடவுள் தந்திரமாக தங்கிவிடுகிறார். ஊரில் வீடு இருக்கம் தெருவில் இருந்தது. வீட்டில் இருந்து வெளியே வந்து, இடப்புறமாக பத்தடி நடந்தால் பஜார் தெரு வந்துவிடும். தெருக்கள் இணைகிற இடத்திற்கு நேரெதிரே ஒரு கடைப்பிள்ளையார் உண்டு. ஐந்தாம் வகுப்பு முதலே வெளியே கிளம்புகையிலெல்லாம் அவரை கும்பிடுகிற பழக்கம் உண்டு. யாரையோ பார்த்துக் கற்றுக் கொண்டது. நான் வெளியே கிளம்புகிற எல்லா சமயங்களிலும் அம்மா மாடியில் இருந்தபடி என்னைப் பார்த்தபடி இருப்பாள். அம்மா – நான் – பிள்ளையார் – ஒரு முக்கோணமாக இருப்போம். நான் நடக்க நடக்க, பின்னாலிருந்து அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறாள் எனப்புரியும். பிள்ளையாரை வணங்கியதும் அம்மாவைப் பார்த்து கையசைத்துச் செல்வேன். பின்னொரு நாள் கடவுளின் துணையில்லாமல் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்மாவிடம் அதை இன்று வரை சொன்னதில்லை. அம்மா கோபப்படலாம், வருத்தப்படலாம், ஏன் அழக்கூட செய்யலாம். ஆகையால் சொன்னதே இல்லை. அதன் பிறகு ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியேறுகையிலும், அந்த முக்கோணத்தை உடைக்கிற வாய்ப்பு இருந்தது. பத்தடிக்குள் பத்தாயிரம் எண்ணங்கள் தோன்றும். இன்று இதைச் செய்துவிடலாம் என்று மனது படபடவென அடித்துக் கொள்ளும். கடைசி விநாடியில் பிள்ளையார் வெற்றி பெறுவார். திரும்பி நான் அம்மாவைப் பார்த்து கையசைத்துச் சிரிக்கிற சிரிப்பில் ஒரு அர்த்தம் மட்டும் இருந்ததில்லை.
பின் ஜோவுடன் விடுதி அறையில் தங்கியிருக்கையில் இதே போன்றதொரு சங்கடம் ஏற்படும். ஜோவிற்கு ஆழமான பக்தி உண்டு. என்னைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். தேர்வுகளுக்கு கிளம்புகிற எல்லா காலைப் பொழுதுகளிலும், ஜோ மின்விசிறையை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி ஏற்றி மேரியன்னையை தொழத் தொடங்கியதும் நானும் பக்கத்தில் அமைதியாக நின்றிருக்கிறேன். தொழுது முடித்ததும் புனித நீர் இருக்கும் அந்தச் சின்ன பிளாஸ்டிக் குப்பியை எடுப்பான். நான் இரு கைகளையும் மூடிக்கொண்டு புறங்கைகள் காட்டியபடி நீட்டுவேன். புனித நீரைத் தொட்டு இரு கரங்களின் மீதும் ஒரு சின்ன அவசரச் சிலுவை எழுதுவான். பின் நெற்றியில் ஒன்று. ஒரு முறை கூட கையை நான் நீட்ட மறுத்ததில்லை. அவசரமாக அழித்துக்கொண்டதுமில்லை. ஜோவிற்காக. அன்றைய இரவு தொடங்கியதும் விளக்குகள் அணைத்த பின் படுக்கைக்கு நேரே இருக்கும் ரேடியத்தால் செய்யப்பட்ட அந்த மேரியன்னை இருளில் பிரகாசமாகத் தெரியப் போகும் காட்சி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். விளக்குகள் அணைத்த பின் எங்கெங்கோ பார்த்துவிட்டு மெதுவாக மேரியன்னையைப் பார்த்து புன்னகைத்துக் கொள்வேன்.
தேநீரில் ஸ்நேகிதம்
Sip #1 – பொதுவாக இப்போதெல்லாம் அலுவலகத்தில்/வீட்டில்/இணையத்தில் நான் சொல்கிற ஜோக்குகளுக்கு யாரும் சிரிப்பதில்லை. வெட்ட வெயிலில் நிற்பது போன்ற பாவனையுடன் பார்க்கிறார்கள். எல்லோருக்கும் ஏதோ பொதுவான பிரச்சினை என்று மட்டும் புரிகிறது. ஆனால், அக்காவின் மகள் நான் சொல்கிற எல்லா ஜோக்குகளுக்கும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள். (வயது நான்கு மாதங்கள்). வீட்டிற்கு போனதும் பையையும் ஷூவையும் தூர எறிந்து விட்டு அவளிடம் சென்று ஜோக் சொல்லத் தொடங்குகிறேன். அரை மணி நேரம். ஒரே சிரிப்பு. அவளளவுக்கு யாரும் என்னுடைய ஜோக்குகளை ரசிப்பதில்லை. நான் வருவதற்கும் முன்னரும் சென்ற பின்னரும் அவள் அப்படித்தான் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என அக்கா சொல்கிறாள். அதைப் பற்றி நமக்கென்ன கவலை?
#2 – எனக்கு நடக்காததை நடக்க வைக்கிற சக்தி இல்லை. USP, ASP தெரியாது. ஏதோ விளையாட்டாக நடிகை மீனாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக எழுதி வைக்க, அது அப்படியே நடந்துவிட்டது. மற்றபடி அதற்கும் அடியேனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் பற்றிய கேள்விகளை/மெயில்களை தவிர்க்கவும். அப்படி செய்தவர்களுக்கும், இதற்கு முன்னர் ‘நான் நானில்லை, என் வேறு நான், என்னை நானே கண்டேன்’ என்று எழுதிய போது, ‘உங்களுக்கு மல்டிபிள் பெர்ஸனால்ட்டில் டிஸார்டரா’ என்று கேட்டு மெயில் அனுப்பியவர்களுக்கும் சேர்த்து, அன்பு எச்சரிக்கை #1.
#3 – எங்கள் ஊரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் எப்போதாவது நடக்கும். (பெரும்பாலும் இடதுசாரிகள்). சாவடிக்கு எதிரே தெருவை அடைத்துக்கொண்டு மேடை போட்டுவிடுவார்கள். போக வர, இரண்டு பக்கமும் கொஞ்சமாக இடம் – அதில் பாதி இடத்துக்கு ஒரு பெரிய ஸ்பீக்கர் நின்று அலறிக்கொண்டு இருக்கும். (அதை கடந்து செல்பவர்கள், அம்மனுக்கு தீ மிதித்து ஓடுபவர்கள் போல அவசரமாக செல்வார்கள்). பக்கத்தில் பட்டாணிக் கடை வைத்திருப்பவர் வாயெல்லாம் பல்லாக இருப்பார். நேற்று வரை தெருவோரம் நின்று சத்தம் போட்டு அரசியல் பேசிக்கொண்டு இருந்தவர்கள், மேடையில் ஏறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். கூட்டம் என்றால் இருபது பேர். (மேடையில் இருக்கும் பத்து பேரையும் சேர்த்து). ஒரு சமயம் என்ன தான் பேசுகிறார்கள் என்ற ஆவலில், ‘குடிமகன்கள்’களுக்கு மத்தியில் அமர, மேடையில் இருந்தவர் உற்சாகமாக என்னைப் பார்த்து ‘நீ என்ன செய்தாய்?’ , ‘மக்களாகிய நீங்கள்’, ‘சமுதாயத்தின் பார்வையில்’ என்றெல்லாம் கர்ஜிக்க, அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து விட்டேன். பின்னொரு சமயம், ஹிந்தி ‘பிரச்சார’ சபா நடத்தும் தேர்வுகளுக்காக படிக்க, ஒரு டீச்சரிடம் ட்யூஷன் சேரப் போக, அவர் உள்ளாட்சி தேர்தலில் நிற்கப் போக, நோட் புக்கை கிழித்து மோதிர சின்னம் வரைந்து காற்றில் பறக்க விட்டு இரண்டு மாதம் பிரச்சாரம் செய்தோம். டீச்சர் டெபாஸிட் இழந்தார். நாங்கள் ஃபெயிலானோம்.
#4 -இளையராஜா பித்து ஒரு அளவில்லாமல் பயங்கரமாக ஏறுகிறது. நேற்று காலை வந்தவுடன், தன் முதல் பதிவில் ராஜா பற்றியே எழுதுவேன் என்று ஒரு புதிய பதிவர் வைராக்கியமாக எழுதியதைப் பார்த்து புல்லரித்து பொங்கி வழிந்தேன். இரண்டு நிமிடங்களில், ‘Happy Birthday So and So’ என்று வந்த அக்கவுண்ட் மெயிலில் ‘What do you miss in life?’ என்று கேள்விக்கு, பிறந்த நாள் கொண்டாடுபவர் ‘Ilaiyaraja’s blessings’ என்று சொல்லியிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல், யாய், ஊய், டூய் என்று அவருக்கு மெயில் அனுப்பிவிட்டேன். (பாராட்டி தான்). சாயங்காலம் 4.34க்கு சிக்கனமாக நன்றி சொன்னார்.
#5 – இரண்டு நிமிடங்களுக்கு மேல் படிக்க முடியாமல் கவனம் கலைகிற என்னை நடு ரோட்டில்,பேருந்தில்,நெரிசலில் அமர்ந்திருக்கையில் முற்றிலுமாக கட்டிப் போட்டு விட்டது அசோகமித்ரனின் ‘பிரயாணம்’ சிறுகதை. இதுவரை நான் தமிழில் படித்த சிறந்த சிறுகதைகளை ஒன்று என்று சொல்வேன். இன்னும் சில நல்ல சிறுகதைகள் அந்தப் புத்தகத்தில் கிடைத்தன. (‘ஐநூறு கோப்பை தட்டுகள்’ ‘உயிர்மை’ – 200 ரூபாய்)
#6 – குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட, என்னை எரிச்சலைடையச் செய்கிற விஷயங்கள் – மெகா சீரியல் பிண்ணனி இசை, உன்னிமேனன், 80/90களில் நாயகிகளுக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல், அலுவலகப் பேருந்தில் சீட் பிடித்து வைப்பது, ராத்திரி பத்து மணிக்கு மேல் சில சமயம் ஒரு மெஸேஜை நான்கு முறை டெலிவர் செய்யும் ஆர்வக்கோளாறு ஏர்டெல், நடிகை சிநேகா, காதல் தோல்வி எஸ்.எம்.எஸ் கவிதைகள் (முள், கல்லறை,கண்ணீர் இத்யாதி), பில் கொடுக்காமல் / சில்லறை கொடுக்காமல் மேலே பதுக்கியிருக்கும் குட்டி டீ.வியில் IPLஐ வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் கடை பையன்கள்.
#7 – கவனம் ஈர்த்தவை – தலைப்புச் செய்தி: ப்ளஸ்டூ தேர்வுகள் முடிந்தது – 200 மாணவர்கள் பிடிபட்டார்கள். (தினமலர்). (நான் தேர்வு நடத்துவது வேறெதற்கோ என்று நினைத்து விட்டேன்) போஸ்டர்: பார்த்திபன், சேரன் வரிசையில், இயக்குனர் நடிகராக மாறும் எதோ-ஒரு-உப்புமா-கம்பெனியின் ‘மாக்கான்’ அறிமுகம் எதோ-ஒரு-கிச்சடி-டைரக்டர். கீழே tag – ‘ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் வரிசையில்’!! தொலைக்காட்சி: சூப்பர் சிங்கரில் பிரசன்னாவை பார்க்க வந்த சிலோன் தம்பதியினர், ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில்’ வந்த இலங்கை தமிழர்கள்.
பசங்க
இடைவேளைக்கு சற்று முன்னர், எதிர் வீட்டில் அன்புக்கரசு (கிஷோர், கிட்டதட்ட ஹீரோ) காலை ஐந்து மணிக்கு சத்தம் போட்டு படித்துக் கொண்டிருக்கிறான். நம்ம ஜீவாவுக்கு (ஸ்ரீராம், ஒரு மாதிரி வில்லன்) இது கேட்டு ரோஷம் ஏறுகிறது. இந்த அன்புக்கரசு வந்ததிலிருந்து பள்ளிக்கூடத்தில் எல்லாம் போச்சு. இது வரை ஜீவா கட்டிக் காத்த (??) கௌரவம், மதிப்பு, மரியாதை எல்லாம் ஒரே நாளில் காணாப்போச்சு! இருக்கிற பிரச்சினை போதாதென ஜீவாவின் மாமன் மகள் மணோன்மணியும் அன்புவிடம் சிநேகிதமாகி விடுகிறாள். அவன… அவன அப்படியே… ஜீவாவும் குரல் ஏற்றுகிறான். அங்கு அன்பு இன்னும் குரல் ஏற்றுகிறான். கூட மணோன் வேறு படித்துக் கத்திக் கதறுகிறாள். போட்டிப் போட்டு கத்துகிற கத்தில் தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது!
கிராமப்புற பள்ளிக்கூடத்தில் நடக்கிற சின்னப் பசங்களுக்கிடையில் நடக்கிற சில்லுண்டி சண்டைகளை வைத்து கதை பண்ணி, பின் பாதியில் ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்று சீரியஸ் சிலபஸ் சேர்த்து, அசர வைக்கிறது படம். இந்த இரண்டு மணி நேரம் உங்களை அமர வைத்தது நான்கு சின்ன பசங்க என்ற வியப்பு தீர நேரமாகும்.
ஊர்க்கிழவிகள் மோவாயில் தட்டி கைவைக்குமே – அப்படி தட்டி கை வைக்கலாம் – ‘சுப்ரமணியபுரம்’ சசிக்குமாரை பார்த்து. சும்மா தில்லாய், சின்னப் பசங்களை வைத்து சின்ன மற்றும் பெரிய பசங்களுக்கான படம் என்று எடுத்து, நம் மரியாதையை எக்கச்சக்கமாக சம்பாதித்துக்கொள்கிறார்.
‘யார்யா, இந்த பாண்டிராஜ்?’ (கவனிக்க – பாண்டியராஜ் அல்ல!). முதல் படத்தில் கொண்டு வர வேண்டிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை தீர்மானமாக கொண்டு வந்திருக்கிறார்.
ஹாலிவுட்டில் Indie films என்று சொல்லப்படும் ரகம் போல, சின்ன பட்ஜெட்டில் புதுப்புது முகங்களுடன் தமிழில் ஜொலிக்கிற படங்களின் வரிசையில், ‘பசங்க’ – விளையாட்டுப் படம் அல்ல! துவக்கத்தில் கொஞ்சம் தயக்கம் இருக்கலாம் – அதாவது நமக்கு – என்ன சின்னப் பசங்கள வெச்சு – இதுகளுக்கு உள்ள என்ன கதை இருக்கப் போகுது?. போகப் போக, வெளிவந்துக்கொண்டிருக்கும் மற்றப் பெரிய ஹீரோக்களின் படங்கள் போல, சுவாரஸ்யம் குறையாமல் அழகான படமாக முடிவது – பாண்டிராஜின் வெற்றி.
ஜீவாவின் சைட் கிக்காக வரும் அந்த ‘பகோடா’ – சரவெடி என்றால், அன்பு வீட்டில் இருக்கும் அந்த கடைக்குட்டி – ஊசிவெடி!
பொதுவாக படங்களில் நமது காமெடியன்கள் எல்லா காட்சிகளிலும் சைடில் நின்றுக்கொண்டு ஒரு ‘காமெடி ஆங்கிள்’ கொடுப்பார்கள். அது போல, இந்தப் படத்தில் ‘பசங்க ஆங்கிள்’ கொடுத்திருக்கிறார்கள். இரண்டு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போடும் போது, மேற்சொன்ன ஊசிவெடி வாண்டு வந்து கலாய்த்துவிட்டு போவதும் , அதைப் பார்த்து எதிர்(ரி) வீட்டு அம்மா (‘பருத்திவீரன்’ சுஜாதா – சூப்பர்) நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதும் – ஸீன்!
எங்கப்பா ஊர்க்கிழவிகள்? திரும்ப கூப்பிடுங்க. ‘அடியாத்தீ! ‘சரோஜா’ படத்துல சரோஜாவா வருமே அந்த வேகாவா இது?! டவுன் பொண்ணாக சுடிதார் போட்டு சுற்றுகிறார். ‘ஹீரோ’வாக வரும் விமல், நல்ல வழிசல் பார்ட்டி. இருவருக்குமான ‘ஒரு வெட்கம் வருதே’ – செம வீடியோ.
படத்தில் நடித்த மற்ற எல்லாருக்கும் சுத்தி போடுமளவுக்கு சுகமாக நடித்திருக்கிறார்கள். எதிர் எதிர் வீட்டு குடும்பத்தலைவிகள் அத்தனை பாந்தம். ‘காதல்’ படத்தில் துவங்கிய ‘ரியலஸ்ட்டிக் சைட் ஆர்டிஸ்ட் இயக்கம்’ (??) தொடர்ந்து களை கட்டுகிறது!
தமிழ் சினிமா விமர்சனங்களை காமிராவைப் பற்றிய எழுத அவசியமே இல்லாமல் போய்விடும் போல. எல்லாரும் கச்சிதமாக கலர் காட்டுகிறார்கள். அந்த நீளமான பாலம் மீதான காட்சிகள் எல்லாம் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறன. சம்பந்தமே இல்லாமல் பாட அட்டவணை மேல் மெதுவாக காமிரா நகர்கிற போது நமக்கு சின்னப் புன்னகை வருகிறது. அதிக நேரம் அடுப்பில் வைத்த சோறு போல, ஜேம்ஸ் வசந்தன் அங்கங்கே அதிகமாக குழைந்தாலும், பல இடங்களில் பதம்.
பார்த்து பார்த்து வன்முறையை தவிர்த்திருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் நகர்கிற போது, ஒரு வசனத்திற்கு முன் ஸீட்டில் ‘கிக்’கான ஆரவாரம். பசங்க பேசும் சாதாரண வரிகளிலும் நாம் தான் தேவையற்ற இரட்டை அர்த்தம் ஏற்றுகிறோமா? சின்னப் பசங்களுக்குள் ‘ஹீரோக்கள்’ ஏற்படுத்துகிற பாதிப்பையும் வாழைப்பழத்தில் ஊசியாக ஏற்றியிருக்கிறார்கள்.
அன்புவிற்கு பாராட்டும் கைதட்டலும் தான் ஊக்கம். அவன் சித்தப்பாவும் சோபிக்கண்ணுவை பாராட்டி பாராட்டியே கரெக்ட் செய்கிறார். குடும்ப குணம் கெட்டி போல
அவர்கள் ‘ஊக்கப்படுத்துங்க, அப்ப தான் முன்னேறுவாங்க’ என்று சொல்லும்போது, நாம் சில பல மொக்கைகளை வைத்துக் கொண்டு குறை சொல்ல முடியுமா? வாழ்க! வளர்க!
சின்னப் பசங்க படம் தானே என்று அசால்ட்டாக இருக்காமல் கச்சிதமாக உழைத்த எல்லாருக்கும் சல்யூட்.
பசங்களோடு கண்டிப்பா போய் பாருங்க!
![]()
![]()
![]()
![]()
![]()
ஆயிரமாயிரம் இரவுகள்
என்னைவிட மோசமான கணவன் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. சதைக்குள் சென்று தலை நீட்டிக்கொண்டிருக்கும் முள்ளை நெருடி நெருடிப் பார்ப்பது போல, என்னை நானே வருத்திக்கொண்டிருந்தேன்.
ஹரிணி, விநய், நான் – மூவரும் மெயின் ரோட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். நான் ஹரிணியிடமிருந்து கொஞ்சம் விலகி விலகி நடக்க, அவள் என்னிடம் வந்து சேர்ந்துக்கொண்டேயிருந்தாள். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்சம் நடந்ததும் ஹரிணி ‘நீ போய் அம்மாவுக்கு துணையா இருடா கண்ணா’ என்று விநயிடம் சொன்னாள். ‘ம்’ என்று சொல்லிவிட்டு விநய் அப்படியே நின்றான். நானும் ஹரிணியும் நின்றோம்.
‘தாங்க்ஸ்…’ என்றான் விநய். ‘ஓ! தாங்க்ஸ் சொல்ற அளவுக்கு பெரிய ஆள் ஆயாச்சா?’ என்று ஹரிணி அவன் கன்னங்களை தொட்டாள். தொட்டதும் அவன் பின்னகர்ந்துக் கொண்டான். வயது பதினொன்றா? பனிரெண்டா?. ‘இல்ல, காலைலேர்ந்து அம்மா மனிக்காக நிறைய பேர் கிட்ட கேட்டாங்க. கிடைக்கல. ரொம்ப பயந்துட்டாங்க’ என்றான். நான் அவனைப் பார்த்து ஏதாவது சொல்ல முயற்சித்து முடியாமல் புன்னகைத்தேன். என் கை அனிச்சையாக என் தோளிலிருந்து தொங்கிய பையை தொட்டுப் பார்த்தது. பணக் கத்தை லேசாக வெளியே பிதுங்கிக்கொண்டிருந்தது.
‘நீங்க கொண்டு வர்ரதுக்குள்ள ரெண்டு அங்கிள்ஸும் பணம் கொண்டு வந்துட்டாங்க. உங்களுக்கு ஃபோன் பண்றதுகுள்ள நீங்க இங்க வந்துட்டீங்க’ என்றான். ‘இட்ஸ் ஓகே கண்ணா. பரவால’, ஹரிணி சொல்லிவிட்டு, ‘நீ போ.’ என்றாள். அவன் ‘இம்’ என்று தலையசைத்து விட்டு, விடுபட்டு ஓடுவது போல ஹாஸ்பிட்டல் நோக்கி ஓடினான்.
தோளில் இருந்து மிகவும் அபத்திரமாக பை தொங்கிக் கொண்டிருந்தது போல எனக்குப் பட்டது. அப்படியே விட்டுவிடலாமா, இல்லை கக்கத்தில் வைத்துக் கொள்வதா, இல்லை…
‘அஹெம்’ என்று தொண்டையைச் செருமினாள் ஹரிணி. காட், நாங்கள் இருவரும் தனியாகி விட்டோம். என்ன பேசுவது அவளிடம். எப்படி பேசுவது?
நான் அவள் பக்கம் திரும்பாமல் நடக்கத் துவங்கினேன். இரண்டு அடிகளுக்குப் பின் தன் வலது கையை என் இடது கைக்குள் வளையமென மாட்டிக்கொண்டாள். அவளை திரும்பிப் பார்த்ததும், பளிச்சென சிரித்தாள். ஒரு சின்னப் பொட்டு முகத்தை எவ்வளவு அழகாக்கி விடுகிறது!
மெயின் ரோடு வந்தது. ஒரு ஷேர் ஆட்டோ எங்களை கவனித்துக் கிட்டே வந்து ‘தட் தட் தட்’ என்று உறுமியது.
‘சரண்! ஷாப்பிங் போலாமா? தி.நகர்?’
நான் விழித்தேன். ஆட்டோக்காரன், ‘ஏறுங்க மேடம்’ என்றான். ஹரிணி ‘வா’ என்று சொல்லிவிட்டு ஏறப்போனாள். ‘வேண்டாம்’ என்பது போல கையைப் பிடித்து லேசாக இழுத்தேன். ‘ப்ச். வா சரண்’.
எதிர் எதிரே வைக்கப்பட்ட இரண்டு டிரங்க்கு பெட்டிகள் மீது கொதறப்பட்ட இரண்டு மெத்தைகள் அலட்சியமாக கிடந்தன. கார் ஒரு வாரமாக மெக்கானிக் ஷெட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் ஒரு முட்டாள்.
நானும் ஹரிணியும் எதிர் எதிரே உட்காருகையில் எங்கள் கால் முட்டிகள் இடித்துக்கொண்டன. என் நீளமான கால்கள் எனக்கு கூச்சத்தை தந்தது. பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கால்களை கொஞ்சம் மறைத்துக் கொண்டேன். ஹரிணி புடவை முந்தானையை முன் இழுத்து கையால் பிடித்துக்கொண்டு, கால் மேல் கால் மாற்றி போட்டுக்கொண்டாள்.
எனக்கு மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது. பேசாமல் பேங்க்குக்கு போய் இந்த பணத்தை மீண்டும் போட்டுவிட்டால் என்ன? குழந்தையின் சிரிப்பு போல மனதில் ஒன்று தோன்றி உடனே செத்து மடிந்தது. ச்சே. எடுத்தாயிற்று. அவ்வளவு தான்.
‘திரும்ப ஐ.சி.ஐ.சி.ஐ போய் பணத்த போட்டுடலாம்னு தானே யோசிக்கிறே?’ ஹரிணி சிரித்துக்கொண்டே கேட்டாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இல்லையென்று தலையசைத்தேன். என்னவோ ஒரு வார்த்தை சொல்லுவாளே, என்னை திட்ட. என்ன அது. அது தான் நான், சத்தியமாக அது தான்.
‘அசமஞ்சம்’ என்றாள். யா! அசமஞ்சம். அசமஞ்சம்.
அசமஞ்சகள் தாம் கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி அவசர அவசரமாக பணம் எடுக்கும். விஜயின் நிலைமை பார்த்து கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். சின்னப் பையன்.எங்கள் இருவரின் அக்கௌண்ட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. நான் என்ன செய்ய? நொடியில் இந்த எண்ணம் தோன்ற, ஹரிணியிடம் விஷயத்தை அவசரமாக சொல்லி, இழுத்து வந்து, கையெழுத்து வாங்கி..
பேங்க்கிற்கு போனதும் தான் எனக்கு மண்டையில் உறைத்தது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? ஹரிணி முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. உள்ளுக்குள் உடைந்து போய்விட்டாளா? கொஞ்சம் யோசித்திருக்கலாமோ? எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டு வந்தேன். ஹரிணியே எல்லாம் பேசினாள். நான் ஒரு முட்டாள், அசமஞ்சம், எல்லாம்.
‘எங்களுக்கு குழந்தை பிறக்காது மேம்’ – ஹரிணி பேங்க்கில் தெளிவாக நிதானமாக சொன்னது ஈட்டியாக நெஞ்சில் பாய்ந்திருந்தது. அந்த பெண் அதிகாரி ஒரு நொடி திகைத்து விட்டாள். ‘ஏன் இந்த ப்ளான்ல போட்ட பணத்த இவ்வளவு சீக்கிரமா எடுக்குறீங்க?’என்று கேட்டதோடு அவள் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். பின் இரண்டு லட்சத்தை எடுத்து தரும் வரை அவள் பேசவேயில்லை.
ஹரிணி என் கண்களுக்கு முன்னால் கையை இப்படியும் அப்படியும் அசைத்தாள். கவனம் கலைந்து அவளைப் பார்த்தேன். தொடைகளின் மீது வலது கையை ஊணி அதனால் முகத்தை தாங்கியிருந்தாள். நான் பார்த்ததும் அவளது வலது புருவம் ‘என்ன?’ என்று கேட்க, அவள் கண்கள் சிரித்தன. கடவுளே, இந்தப் பெண் எத்தனை அழகு!
‘இறங்கணும்’ என்றாள்.
இறங்கி சில்லறையை கொடுத்து விட்டு அவளிடம் வந்தேன். தி.நகர் ஜெகஜ்ஜோதியாக இருந்தது. ‘ஹரிணி, பையில பணம் இருக்குமா. ரிஸ்க்’ என்றேன்.
‘ஒண்ணும் ஆகாது வா. டெக்ஸ்டைல் இந்தியாவா? போத்தீஸா?’
‘என்ன வாங்கப்போறோம்?’
‘உனக்கு எதாச்சும் வாங்கலாம். ஷர்ட்.. ஷூஸ்.. எதாச்சும்’
நான் அவளையே பார்த்தேன். ‘வா’ என்று ‘வா’வையும் என்னையும் இழுத்தாள்.
கடையினுள் நுழையும் வரை என்னை இழுத்துக்கொண்டே சென்றாள். இரண்டாம் மாடிக்கு லிஃப்ட்டில் சென்றோம். லிஃப்ட்டில் என் முகத்தை பார்த்தேன். செத்துப் போயிருந்தது.
‘முதல்ல, ஷர்ட்ஸ். ஓகே? நீ இங்க நில்லு’. இருகைகளாலும் என்னை பிடித்து கண்ணாடி பக்கத்தில் நிற்க வைத்து விட்டு மளமளவென இயங்கினாள். கையில் ஏழெட்டு சட்டைகளுடன் வந்தாள். என் மீது வைத்துப் பார்ப்பது, உதடு சுழிப்பது, புருவம் உயர்த்தி ‘நைஸ்’ என்பது, ‘ஓகேவா?’ என்று கேட்பது..
தோளிலிருந்து தொங்கிய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். பையில் பணம் வந்ததிலிருந்து பாரம் ஏறியிருந்தது.
கடை முழுக்க சுற்றினோம். ஹரிணி பேசிக்கொண்டே இருந்தாள். எங்கிருந்தோ ஒரு டெடி பேர் பொம்மையை உருவி முகத்துக்கு நேரே நீட்டி ‘உனக்கு வேணுமா? என்றாள். பின்னாலிருந்து முதுகில் தட்டினாள். ‘வெரைட்டியே இல்ல’ என்றாள். ‘ஏஸி போட்டிருக்காங்களா இல்லயா சரண்?’ ‘இதே மாதிரி நம்ம ஒண்ணு வாங்கினோம்ல?’ ‘அந்த ப்ரவீண் பக்கா ஃப்ராடு. நான் சொன்னேன்ல அப்பவே?’ ‘நாளைக்கு லீவா?’ ‘ஐயோ, இன்னிக்கு செம காமெடி நடந்தது தெரியுமா?”ஒரு ப்ளேசர் வாங்கலாமா’?
இது ஒரு சீஸா விளையாட்டு. நான் கீழே போகும் போது மேலிருந்து ஹரிணி சிரித்தும் பேசியும் என்னை மேலெழுப்புவாள். நான் எழுந்ததும் அவள் விழுவாள்.
சிக்கனமான புன்னகையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது தவிர வேறென்ன நான் செய்ய முடியும்?
முக்கால் மணி நேரம் கடந்தது. கீழிறங்கி வந்ததும் இரண்டு பெரிய பையில் பொருட்களை திணித்துத் தந்தார்கள். ‘எய்ட் தௌசண்ட் செவண்ட்டி சார்’.
நான் பர்ஸ் எடுக்க எத்தனிக்கும் போது, ஹரிணி தடுத்தாள். ‘பேங்க்கிலேர்ந்து எடுத்த பணம் இருக்குல்ல சரண். அதுலேர்ந்து கொடுத்துரு’ என்றாள். கடவுளே.
‘ஹரிணி.. வேண்டாம்மா..’
‘அய்யய்யே. எடு சரண்.’ ‘சரியான அழுமூஞ்சிய கட்டி வெச்சிட்டாங்க’
ஹரிணி என்னை இழுத்துக்கொண்டு ஓரமாக கிடந்த நாற்காலியில் அமர்த்தினாள். நான் பையில் இருந்து ஒரு கட்டு எடுத்தேன். பிரித்து, ஒன்பது ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்தேன். ஹரிணி வெடுக்கென பிடுங்கிக்கொண்டு எண்ணிப் பார்த்தாள். ‘குட் பாய்.’ சிரித்தாள். ‘விட்டா இந்த முழு பணத்துலயும் உனக்கு எதாச்சும் வாங்கிக் கொடுப்பேன் சரண்’ என்றாள். எனக்கு என்னவோ செய்தது. அவள் கைகளை பிடிக்க முயன்று வேண்டாம் என விட்டு விட்டேன்.
இந்த இரவு இனி என்னாகும் என எனக்குத் தெரியும். ஆட்டோவில் திரும்புவோம். அந்தப் பெரிய ஃப்ளாட் எங்களை அமைதியாக உள்வாங்கிக் கொள்ளும். ‘போய் குளிச்சிட்டு வா’ என்று என்னை தள்ளுவாள். மணக்க மணக்க சமைப்பாள். பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு, மொட்டை மாடிக்கு செல்வோம். ஏதாவது படம் பார்ப்போம். பின் படுக்கையில் விழுவோம். என்னைக் கட்டிகொண்டு கொஞ்சம் நேரம் அழுதுவிட்டு, விடிகாலை வரை என் காதில் கிசுகிசுத்தபடி தூங்கிப் போவாள்.
கவுண்ட்டரில் நின்றுக்கொண்டிருந்த ஹரிணி, திரும்ப நான் பத்திரமாக இருக்கிறேனா என்பதைப் போல பார்த்தாள்.
என்னை விட கொடுத்து வைத்த கணவன் உலகில் வேறு யாரும் இல்லை என்று தோன்றியது. அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.
————————————————————
(அலுவலகத்தில் நடந்த 200000 கதைப் போட்டிக்காக எழுதியது)