சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மூன்றாம் பிறை

6 மறுமொழிகளுடன்

சீனு வீட்டுக்கு திரும்பி வருகிறான். கோபம் குறைந்திருக்கிறது. வீடு திறந்து கிடக்கிறது. ‘விஜி?’. எல்லா அறைகளிலும் தேடுகிறான். ‘விஜி, உனக்கு சாப்பாடு வேணுமா? வேணாமா?’. விஜியைக் காணவில்லை. சுப்பிரமணி கட்டிலில் போர்வைக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. பக்கத்து வீட்டு பாட்டியிடம் போய் விசாரிக்கிறான். இன்னும் கொஞ்ச தூரம் போய் அண்டை வீடுகளில் கேட்டுப் பார்க்கிறான். மழை தூறிக்கொண்டிருக்கிறது. வீடு வந்து மீண்டும் பார்த்து விட்டுப் போகிறான். ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையில், பூங்காவில், ஏதேதோ பாதைகளில் தேடுகிறான். (பிண்ணனியில் வயலின் சரசரக்க ஆரம்பிக்கிறது). விஜி, விஜி என்று கத்தியது மட்டுமே மிச்சம். புத்தி தெளிவில்லாத பெண் எங்கு என்ன செய்துகொண்டிருப்பாளோ? பாதை நீண்டுக்கொண்டே போக, ஓரமாக மரத்தடியில் பிள்ளையார் தென்படுகிறார். (இசை நிற்கிறது). சீனு நின்று பார்க்கிறான். ஒரு விளக்கு அணைந்திருக்கிறது. முட்டிக்காலில் அமர்ந்து மற்றொரு விளக்கை எடுத்து அணைந்த விளக்கை ஏற்றி வைக்கிறான். கண்களில் கண்ணீர். என்ன கேட்பது பிள்ளையாரிடம் என்பது போன்ற ஒரு பாவனை. (கமல்!). மீண்டும் தேடுதல் துவங்குகிறது. (வயலின் மீண்டும் சரசரக்கிறது). இருள் பிறந்து விட்டது. மழை வலுக்கவில்லை. சீனு வீட்டிற்குள் வந்து கதவை சாத்துகிறான். திரும்பிப் பார்த்தால், உள்ளே விஜி. (வயலின் சடாரென நிற்கிறது). அப்போது சீனுவின் முகத்திலும் விஜியின் முகத்திலும் என்ன தோன்றுகிறது என்பதை விளக்கி விட முடியாது. இருவரும் எதுவும் பேசாமல் இரண்டு வினாடிகள் அதிர்ந்து பார்க்கிறார்கள். இருவருக்கும் மற்றொருவரின் மீது இருக்கிற அன்பு புரிந்துவிட்டது பயம், கலக்கம், கவலை, மகிழ்ச்சி எல்லாம் தோன்றுகிறது.

போத்தியிருந்த போர்வையை எடுத்தெறிந்து விட்டு விஜி ‘சீனு’ என்று ஓடி வருகிறாள். (இரு கைகளையும் விரித்தபடி). விஜி கட்டிபிடித்து ஒரு அவசர முத்தம் வைக்கிறாள் காதலோ காமமோ இல்லாத ஒரு முத்தம். சீனுவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன விட்டு எங்க போனே? என்பதான சம்பிரதாய கேள்விகள். சீனு இவ்வளவு நேரம் தேடியது யாரை காதலியையா? பிள்ளையையா?. சீனுவுக்கு எதுவுமே புரியவில்லை. விஜி எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டாள் என்பது மட்டும் அவனுக்கு புரிகிறது. (என் வாழ்வில் நீ வந்தது விதியானால், நீ எந்தன் உயிரன்றோ?) விஜி கேட்கிறாள் ‘சாப்பிட என்ன இருக்கு? எனக்கு பசிக்குது’!

******

விலைமகளிர் விடுதியில் விஜி தன் பெயர் பாக்யலட்சுமி என்று சொல்லுகிறாள். ‘ஏன் எல்லாரும் என்ன விஜயானு கூப்பிடுறாங்க?’ என்று சீனுவையே கேட்கிறாள். விஜியை ஊட்டிக்கு அழைத்து வந்து பின், ஒரு போதும் சீனு அவளை ‘பாக்யலட்சுமி’ என்று அழைப்பதில்லை. இப்போது அவள் விஜி. அவனுக்கு அவள் விஜி மட்டுமே. அவனுக்கு பாக்யலட்சுமியை தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். அவளை குணப்படுத்த அவனாக முயற்சி எடுக்கவில்லை. பாட்டியும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து சொல்ல, சீனு ‘இதெல்லாம் அப்படி குணப்படுத்த முடியாது’ என்று மறுத்துப் பார்க்கிறான். (தூரத்தில், விஜி ‘ரைட்டா தப்பா’ விளையாடிக்கொண்டிருக்கிறாள் J ) அப்பா, அம்மா, சகோதரர்கள் யாரும் இல்லாதவனுக்கு தேவைப்படுவது விஜி மட்டுமே. ஒரு வேளை சீனுவுக்கு தெரிந்தே இருக்கும். ஒரு நாள் விஜி பாக்யலட்சுமி ஆகிவிடுவாள். விஜி தொலைந்து விடுவாள் என.

******

சமீபத்திய தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாலு மகேந்திரா, நடிகை ஷோபாவைப் பற்றிய கேள்விக்கு அளித்த பதில், மீண்டும் இந்த படத்தை பார்க்கத் தூண்டியது. அவரின் வாழ்க்கையில் ஷோபாவின் திடீர் வருகையும் திடீர் மரணமும் (படத்தில் விஜி குணமாவது, கொஞ்சம் நம்ப முடியாத வகையில் ஒரு நாளில் நிகந்து விடுகிறது ஒரு மரணத்தைப் போல) தான் ‘மூன்றாம் பிறை’.

******

அந்த மரத்தடி பிள்ளையார் மீண்டும் இரண்டு காட்சியில் வருகிறார்.

சுப்பிரமணிக்கு பெல்ட் தருகிறேன் என்று விஜியை அழைத்துச் செல்லும் இரும்புக்கொல்லனிடமிருந்து, விஜி தப்பித்து வருகிறாள் – நெடிய மரங்களுக்கிடையில் அழுதபடி, ரவிக்கை கிழிந்தபடி. அந்த பாதை மெயின் ரோட்டில் சேர்கிறது. அந்தப் பக்கத்தில் இருந்து சீனு வந்துகொண்டிருக்கிறான். நடுவில் பிள்ளையார் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பின்பு, வைத்தியரிடம் விஜியை ஒப்படைத்து விட்டு சீனு வெளியேறி விடுகிறான். வீட்டிற்கு போலீஸ் வந்து விசாரித்துப் போகிறது. பாட்டி பயந்து போய், சீனுவை தேடுகிறாள். எங்கெங்கோ பார்த்துவிட்டு, இந்த ரோட்டிற்கு வர, சீனு பிள்ளையாரிடம் அமர்ந்திருக்கிறான். சீனு என்ன வேண்டிக்கொண்டிருப்பான்?

******

மூன்றாம் பிறையின் உலகம் மிகக்கச்சிதமான ஒன்று. உறவுகள் இல்லாத சீனு, யாரென்றே தெரியாத விஜி, ‘பக்கத்து வீட்டுப்’ பாட்டி, தெருவில் திரிந்துகொண்டிருந்த சுப்பிரமணி.

******

இரு அழகான கதை சொல்லும் முறைகள்.

ரோட்டில் ஒரு குரங்காட்டி குரங்கை வைத்து வித்தை காண்பித்துக் கொண்டிருக்க, சீனு அதையே விஜியிடம் செய்து காண்பிக்கிறான். விஜிக்கு குரங்கை அதட்ட சரியே வரவில்லை. சீனுவே சொல்லித் தரவேண்டியிருக்கிறது. சீனுவே விஜியிடம் தன்னை ஆட்டுவிக்கும்படி சொல்லிக்கொள்கிறான். இந்த உறவின் அபத்தமும் நிச்சயமற்றதன்மையும் தெரிந்தே காதல் வளர்ப்பது போல. அந்தக் காட்சியின் முடிவில், அக்கம் பக்கத்தினர் அவர்களை கண்டு சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். இதே குரங்காட்டி வித்தையை கடைசிக் காட்சியில் விஜிக்கு சீனு செய்து காட்ட முயன்று தோற்கையில், ஒரு சிறுவன் வந்து கேட்கிறான், ‘என்னாச்சு சார்?


இன்னொன்று
அந்த நீளமான ‘சாயத்தில் விழுந்த நரிக்கதை’ பாடல். யார் இப்போது சாயத்தில் விழுந்திருப்பது? யார் இப்போது தன் புது பலத்தின் குறை தெரிந்தும் மகிழ்ச்சியில் திளைப்பது? எப்போது மழை வரும்? எப்போது சாயம் வெளுக்கும்? சாயம் வெளுத்தால் என்னவாகும்? (அடுத்த காட்சியில் பாட்டியும் மற்றவர்களும் வந்து வைத்தியரிடம் அழைத்துப் போகும்படி சொல்கிறார்கள்)

******

இந்த படத்தில் ஸ்மிதாவை திணிக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று தெரியவில்லை. பாலுவின் விருப்பமா, சத்யஜோதி நிறுவனத்தின் விருப்பமா (அவர்களின் படங்கள் பார்த்ததில், இல்லையென்றே தோன்றுகிறது), இல்லை ஓடாது என்ற பயமா? (இந்தப் படம் இங்கே வெற்றிப் பெற்ற பின், ஹிந்தியில் எடுக்கும் போது ஸ்மிதா இருந்தார்) எதுவாயிருந்தாலும், யாராயிருந்தாலும் அவர்கள் வருந்தவேண்டியிருந்திருக்கும்.

பூர்ணம் விஸ்வனாதனுக்கு இப்படி ஒரு காட்சியா? J

*****

கடைசிக்காட்சியைப் பற்றி நான் என்ன புதிதாக சொல்லப்போகிறேன்?

சீனுவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றே எல்லாரும் என்னிடம் இதுவரை சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. பாக்யலட்சுமிக்குத் தெரியாத விஜி முற்றிலுமாக தொலைந்து போன நேரத்தில், விஜிக்கு மட்டுமே தெரிந்த ஒரு சீனுவும் தொலைந்து போகிறான். அதனால் சீனு என்னென்ன இழந்திருப்பான் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.

Written by aravind

மார்ச் 15, 2009 இல் 5:09 பிற்பகல்

எண்ணங்கள், திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with

6 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Wow! வெகு நேர்த்தியான பார்வை. நன்றி

    SnapJudge

    மார்ச் 16, 2009 இல் 3:27 பிற்பகல்

  2. Truly superb review of the movie, Thanks !

    anbudan_BALA

    மார்ச் 17, 2009 இல் 10:37 மு.பகல்

  3. subra – வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே:)

    bala – நன்றிகள். வருகைக்கு நன்றி. :)

    aravind

    மார்ச் 17, 2009 இல் 3:24 பிற்பகல்

  4. Aravind, A nice perception of the Subtle things that could be easily ignored at the first sight. Thanks for this wonderful post…

    Madhan

    மார்ச் 18, 2009 இல் 4:28 பிற்பகல்

  5. Wonderful!!! Moonram Pirai ku ipdi oru review engayume padichadhilla! Superb :-)

    Pavithra Vijay

    மார்ச் 25, 2009 இல் 4:41 பிற்பகல்

  6. Madhan – Thanks for the second comment ;) )

    Pavithra – Glad to hear that! Thanks!!!!

    aravind

    April 7, 2009 இல் 5:37 பிற்பகல்


மறுமொழி இடுக