தலைப்பில்லாத சில கவிதைகள்
இதுவரை மொத்தம் எத்தனை முகங்களை நான் கண்டிருப்பேன்? அதில் எத்தனை என் நினைவில் உள்ளது? ஒரு முகத்தை நினைவில் எழுத எந்த உணர்வு மையாகிறது? அழகா, அன்பா, வியப்பா, கொடூரமா, பயமா, பரிதாபமா?
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த முகங்கள் என் நினைவில் இருக்கும்?
******
அது ஒரு பண்டிகையின் முன்னிரவு. எந்தப் பண்டிகையென்று நினைவில்லை. எல்லா பண்டிகைகளின் நிறங்களும் விடுமுறையாக சாயமிழந்து விட்ட காலமிது. சொந்த ஊருக்கு செல்ல வேண்டி பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தேன். ஊரை அடைய நிறைய மார்க்கங்கள் இருந்தும், நான் எப்போதும் கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக செல்வதையே தேர்தெடுப்பேன். முகங்கள் மிதக்கும் கடல் அது. பண்டிகை காலங்களில் அலை பெரிதாக அடிக்கிற கடல். யாருமில்லாத அறையில் என் அடையாளம் காண்பது போலவே, மிகப்பெரிய ஜனத்திரளில் அடையாளமிழப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். என் பேருந்து இன்னும் கிளம்ப நேரமிருக்கிறது. கையில் விகடன் புரள்கிறது. அவ்வப்போது விழிகள் ஜன்னல் வழியே வெளியே விழுந்து புரள்கின்றன. பெண்கள், ஆண்கள், குழந்தைகள். நிரம்பிய பேருந்துகள். என்னென்னவோ அறிவிப்புகள். இதற்கெல்லாம் நடுவே அவர். தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனங்கள் தரும் அலுவல் உடை போன்றதொரு உடை. நீல நிறம். இதைப் பார்க்கையில், இதை நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று அறியவில்லை.
மீண்டும் கவனம் விகடனுக்கு வந்தது. இரைச்சலுக்கிடையில் என் குரல் வார்த்தை வார்த்தையாக எதையோ படிக்கிறது.
‘அண்ணா’ என்று ஒரு குரல். ஜன்னல் வழியே கீழ் நோக்கி பார்க்கிறேன். அதே அவர். நீல நிற உடையில், ஆஜானுபாகுவான தோற்றம். நல்ல கருப்பு. முப்பது வயது இருக்க வேண்டிய கட்டாயம் தோற்றத்தினால் ஏற்படுகிறது. அவரையும் என்னையும் பக்கத்தில் வைத்து பார்த்துப் பார்த்து ‘அண்ணா’ என்ற வார்த்தை தோற்கிறது. அவர் குரல் உடைகிற கண்ணாடிப் பாத்திரத்தின் வீறல் போல, கீறுகிறது. ‘திருவண்ணாமலை போகணும். பர்ஸ தொலச்சிட்டேன். டிக்கெட்டுக்கு ரெண்டு ரூபா குறையுது’ என்றபடி குரல் குறைகிறது. ‘அண்ணா’ என்று மறுபடி அழைத்துவிட்டு திணறுகிறார். கை விருட்டென சட்டை மேல் பாக்கெட்டிலிருந்து ஒரு கையளவு சில்லறை எடுத்தது. எவ்வளவு என தெரியவில்லை. அப்படியே கொடுத்தேன். என் செய்கைகளில் அவசரம். இந்த தர்மசங்கடத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். யாரை? என்னையா? அவரையா?
‘நன்றி’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.
அவர் முகத்தை நான் நினைவில் வைத்துக்கொள்வதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார்.
******
பெரியம்மா மயங்கி விழுந்ததாக முதலில் தகவல் வந்தது. அலுவலகத்தில் இருந்து உடனே புறப்பட்டு விடும்படியான கட்டாயம் இல்லை, சாதாரண மயக்கம் என்றே தகவல். அன்றிரவு தான் மூளையில் ரத்தக்கசிவு என்று எனக்குச் சொல்லப்பட்டது. வியாழனும் வெள்ளியும் நகராமல் நகர்ந்தன. விடுப்பு எடுக்க முடிந்த உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து இருந்து களைத்துவிட்டிருந்தனர். வெள்ளி இரவு நேரே மருத்துவமனைக்கு சென்று அங்கே அதுவரை இருந்த அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.
நகரின் பிரபலமான மருத்துவமனை. ஐ.சி.யு.வில் இருப்பவர்களின் உறவினர்கள் தங்குவதற்கென ஒரு சின்ன கூடாரம் போல ஒரு மண்டபம். நாலு வாசல், நாலு திசையிலும். உள்ளே மக்கள் ஒழிங்கில்லாமல் படுத்திருந்தார்கள். கிராம வாசனை வீசுகிறது அங்கே. போட்டது போட்டபடி வந்தவர்கள். மொத்தம் இருபது பேர் இருந்திருப்போம். தலைக்கு வைத்து படுக்க எதுவுமில்லை. என் உடை, ஷூ எல்லாம் அந்த இடத்துக்கு பொருந்தாமல் உறுத்துகிறது. எங்களை நோக்கி இருந்த ஒரு மரத்தில் ஒலிபெருக்கி கட்டப்பட்டிருக்கிறது. அறிவிப்புக்கு காத்திருக்கிறது காற்றும், எங்கள் கூட்டமும்.
தூக்கம் பிடிக்கவில்லை. மற்றவர்களின் தூக்கத்தில் இருந்து விதம் விதமான ஒலிகள் எழும்புகிறது. அந்த ஒழுங்கில்லாத ஒலிகளுக்கு என் எண்ணங்களை பொருத்திப் பார்க்கிறேன், மெட்டுக்கு பாட்டெழுதுவது போல. ஒரு கட்டத்தில் எழுந்து வெளியே வந்து பார்க்கிறேன். பக்கத்தில் இரண்டு மூன்று சிமெண்ட் பெஞ்சுகள். அந்த ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்ச்சில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். நான் இந்த ஓரமாக இருந்த ஒன்றில் போய் அமர்ந்து கொள்கிறேன். சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சம் எங்கள் இருவரையும் யாரென முகத்தில் அடித்து பார்க்கிறது.
அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்கிறாள். மஞ்சள் பூசி குளித்த முகம். ஒல்லியான உருவம். முகத்தில் பிரதானமாக குங்குமம். திருமணமாகி சில வருடங்களே ஆகியிருக்க வேண்டும். கையில் ஏதோ சாமி புத்தகம். ஏதோ முணுமுணுத்துப் படிக்கிறாள்.
எங்கிருந்தோ எழுந்து ஒரு சிறுவன் வருகிறான். அவளுடைய பையன். பேசத் தொடங்காத வயது. ஒரு சட்டை மட்டும் போட்டிருந்தவன் அவளையும் என்னையும் சுற்றிச் சுற்றி நடக்கிறான். பெஞ்சில் இருந்து குதிக்கிறான். சிரிக்கிறான். இவள் வெறும் சைகைகளால் அவனை கண்டிக்கிறாள், அழைக்கிறாள். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் ஆழ்ந்த சோகம்.
கொஞ்ச நேரத்தில் பையன் ஓய்ந்து விட்டான். அவள் மடியில் படுத்து தூங்கிவிட்டான். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் நான் வந்து அமர்ந்து. ஏதோ மரத்தின் அசைவை நான் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். அவள் தூங்குகிறவர்கள் யாரையும் எழுப்பி விட முடியாத ஒரு குரலில் என்னைப் பார்த்து பேச தொடங்குகிறாள், நான் கேட்காமலே.
அவள் கணவனுக்கு விபத்து ஆகி, மோசமான நிலையில் கிடக்கிறான். ஒரு கால் எடுத்தி விட்டதாக சொன்னதாக நினைவு. அழுகையில்லாமல், தெளிவாக பேசுகிறாள். அமைதியாக கவனிப்பது தான் மிகப்பெரிய ஆறுதல் என்று எனக்குத் தோன்றுகிறது. அவள் ஊர் என்னூர் பக்கம் தான் என்பதை மட்டும் சொல்ல நினைத்தேன்.
அவள் பேசி நான் கேட்கத்தான் இரவு இத்தனை அமைதியாக இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறேன். அவள் பேசி முடித்தது தெரியாமல், ஒரு மௌனம் பிறந்து விட்டது. இவ்வளவு நேரம் நான் கேட்டதும் மௌனம் தானா?
அடுத்த நாள் காலை பெரியம்மா இறந்து விட்டார். கிளம்பும் போது அவளைத் தேடினேன். அவளுக்கு விஷயம் தெரிந்திருந்தது. நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கிளம்பிய பிறகு எனக்கு ஏனோ தோன்றுகிறது, நேற்றிரவு பார்த்தற்கும் இப்போதும் பார்ப்பதற்கும் அந்த முகத்தில் நிறைய வித்தியாசங்கள். காலை பார்த்த முகம் நினைவில் இருந்து அழிந்து விட்டது. அந்த இரவு நான் கண்ட, கேட்ட, உணர்ந்த, முகம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
*****
உயிர் பிரிந்த உடலை வைத்து செய்யப்படுகிற சடங்குகள் என்னை வருத்தும். என்ன காரணங்களும், என்ன சாஸ்த்திரங்களும் என்னுடைய வருத்தத்தை போக்கவில்லை. பெரியம்மாவின் உடலை மின்சார இடுகாட்டின் உள்ளே வைத்ததும் நான் வெளியே வந்து விட்டேன்.
வெளியே கட்டிடத்தை பார்த்தபடி இரண்டு மூன்று பெஞ்ச்சுகள். அங்கே போய் அமர்ந்து கொண்டேன். வீட்டில் இருந்து புறப்படுகையில் கேட்ட அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. நினைவுகளை கலைக்க வேண்டிய கட்டாயம். இடப்புறமாக திரும்பி பார்க்கிறேன். அங்கே ஒரு முதியவர். செல்வச்செழிப்பு, முதுமைக்கு ஒரு கம்பீரத்தை தந்திருந்தது. கைத்தடியில் இரண்டு கைகளையும் வைத்தபடி அமர்ந்திருந்தார். உள்ளே எங்கள் சடங்கைத் தவிர வேறெதுவும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. பின் இவர் யாருக்காக வந்திருக்கிறார் எனத் தெரியவில்லை. அங்கே பணிபுரிகிற ஒருவன் மிகுந்த மரியாதையுடன் இவருக்கு வணக்கம் வைத்து விட்டு வெளியே சென்றான்.
நான் அவரையே தொடர்ந்து பார்க்கிறேன் என்பதறிந்து அவர் என் பக்கம் திரும்புகிறார். நான் பார்வையை விடுவித்து திரும்பிக் கொள்கிறேன்.
அமைதியாக இருவரும் அமர்ந்திருக்கிறோம்.
திடீரென பெரும் சப்தத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் அங்கு உள்ளே வருகிறது. நாங்கள் இருவரும் கொஞ்சம் திடுக்கிட்டே அதை கவனிக்கிறோம். உள்ளே வந்த ஆம்புலன்ஸ் அரை வட்டம் போட்டு திரும்பி, எங்களிடம் அதன் முகத்தை காட்டி நிற்கிறது. ஓட்டுனர் இறங்கி பின்பக்கம் சென்று அதன் பெரிய வாயை கட்டிடம் நோக்கி திறக்கிறார்.
நானும் பெரியவரும் பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்.
ஓட்டுனர் முன்னே வந்து எங்களைப் பார்க்கிறார். ‘ஒரு நிமிஷம் வாங்களேன்’ என்கிறார்.
நானும் பெரியரும் ஒருவரை பார்த்துக் கொண்டு விட்டு சட்டென எழுந்து செல்கிறோம்.
அங்கே மூன்று பேர் நின்றிருந்தார்கள். இரண்டு பெண்கள், ஒரு ஆண். எல்லோருக்குமே அதிகபட்சம் இருப்பதியிரண்டு வயதிருக்கலாம். வட கிழக்கு இந்திய மாநில முகங்கள். அண்ணன் தங்கைகளாக இருக்கலாம். அப்பாவுக்கான முகம் கொண்டவரென உடன் யாரும் இல்லை.
ஓட்டுனர் எங்களைப் பார்த்து ‘ஹிந்தி தெரியுமா?’ என்று கேட்கிறார். நான் உதட்டை பிதுக்கியபடி பெரியவரை பார்க்கிறேன். அவருக்கும் தெரியவில்லை. என்ன செய்வது? அவர்களுக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கவில்லை.
அந்தப் பெண் அழுதபடி எங்களிடன் ஏதோ சொல்கிறாள். அழுகையைத் தவிர வேறெதுவும் புரியவில்லை. பையனின் முகத்தில் உடைத்து விட முடியாத இறுக்கம். இன்னொரு பெண்ணின் அழுகை யாராலும் நிறுத்த முடியாதது போல இருந்தது. ‘இவங்க சடங்கு என்னனு தெரியலயே சார்’ என்கிறார் ஓட்டுனர்.
உள்ளிருந்து ஒருவர் வந்தார். எங்கள் எல்லாரின் முகங்களையும் எடை போடுவது போல பார்த்தார். அவருக்கும் பாஷை தெரியவில்லை. ‘உள்ளே எடுத்துட்டு வாங்க’ என்று சைகையில் சொல்கிறார்.
உடல் வெளியே இழுக்கப்படுகிறது. அம்மாவின் உடல் என்பது என் யூகம். மூக்கில் இருந்து இன்னும் இரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது.
விறுவிறுவென உள்ளே அனைவரும் போகிறார்கள். பெரியவரும் நானும் தங்கிவிட்டோம். கொஞ்சம் நேரம் அங்கேயே நின்றோம். பின் மெதுவாக நடந்து பெஞ்சுக்கு வந்தோம். வார்தைகளில்லாமல் உரையாடிக்கொண்டே வந்தது போல இருந்தது.
எண்ணி நான்கே நிமிடங்களில், அந்த கட்டிடமே அந்த பெண்களின் கதறலில் அதிருகிறது.
ஒரே நேரத்தில் நானும் பெரிவரும் திரும்பி, ஒருவரையொருவரை முகம் பார்த்துக்கொண்டோம்.
*****
ஓவியங்கள் – www.deweeseart.com மற்றும் www.hauptart.com
You have a good writing style…
உணர்வுகளை எழுத்தில் கொண்டுவரும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துகள்.
Kutty
பெப்ரவரி 1, 2009 இல் 4:53 பிற்பகல்
Kutty,
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள். தொடர்ந்து ஆதரவுக்கும் நன்றி.
aravind
பெப்ரவரி 4, 2009 இல் 5:03 மு.பகல்
vera enna naan pudhusa solla poren!!!
KALAKKAL!!!
unga ezhuthula oru vegam irukku, nalla style irukku… Very charismatic also! Keep it up!!!
Pavithra Vijay
பெப்ரவரி 4, 2009 இல் 4:06 பிற்பகல்
Thanks Pavithra. Very encouraging!
aravind
பெப்ரவரி 19, 2009 இல் 4:08 மு.பகல்
Super..
Karthikeyan G
மார்ச் 26, 2009 இல் 1:22 பிற்பகல்
Karthikeyan – Thanks Boss!
aravind
April 7, 2009 இல் 5:35 பிற்பகல்
First of all sorry to hear that you came across a death that
affects you personally.
உயிர் பிரிந்த உடலை வைத்து செய்யப்படுகிற சடங்குகள் என்னை வருத்தும்
If your generation thinks and decides collectively all this can
be avoided atleast 20 years from now.
pugazh
மே 7, 2009 இல் 6:20 மு.பகல்