சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for பெப்ரவரி 2009

உதிரிப் பூக்கள்

2 மறுமொழிகளுடன்

347379161xswybr_fsவேண்டாம் என்று விழி மூடுகையில் விழுந்துவிட்ட கண்ணீர் துளி
என்று கண்ட நாளிலும்
தொலைந்த போன நட்பு
என்று கண்ட நாளிலும்
வெறுமனே கடந்து சென்றேன்.
இடையில்
கவிதைகள் வேண்டப்படாத
நாளொன்றில்
வெறும் உதிர்ந்த பூக்கள்
என்று கண்ட போது
கடந்து சென்றேன்
ஒரு சின்னப் புன்னகையோடு.

————————————–

உதிர்ந்த பூவொன்றை
கையிலெடுத்து
அழகை ரசித்து முடித்த பின்
நினைவுக்கு வந்தது
பெரியப்பா பிணத்தின்
பெரு விரல்களை
சேர்த்து கட்டிய போது
தொண்டையில் விக்கிய விறைப்பு.

என் இறப்பு இருக்கட்டும்
இந்த உதிரிப் பூக்களைப் போல.

Written by aravind

பெப்ரவரி 26, 2009 இல் 3:13 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

நான் கடவுள்

15 மறுமொழிகளுடன்

(படம் பார்க்காதவர்களுக்கு – நிறைய காட்சிகள் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு படிப்பதை பற்றி யோசிக்கவும்)

(விமர்சனம் எழுதுவதில் நம்பிக்கை குறைந்து விட்டதாலும், இந்தப் படத்துக்கு ‘விமர்சனம்’ என்று கட்டமைத்து எழுத இயலாது என்று தோன்றுவதாலும், கடந்த மூன்று நாட்களாக என் சிந்தனையை தின்று கொண்டிருக்கிற இந்தப் படத்தைப் பற்றிய என் எண்ணங்களை வைக்கிறேன். என்னிடம் விமர்சனம் எழுத சொல்லி கேட்டவர்கள் என்னை மன்னிக்கவும். )

———————————————————————
naan-kadavul-02அம்சவல்லிக்கு இன்னும் அழுது தீரவில்லை. இதுவரை அவள் இருந்த தன் ‘குடும்பத்தி’டமிருந்து அவளை இப்போது பிரித்துவிட்டார்கள், காவல்துறையினரின் துணையோடு. ஏதோ மலை மீது கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். இனி புது குடும்பம். புது இடம். பல ‘பிறப்புகள்’ கொண்ட அவள் வாழ்க்கையில், மற்றொரு ‘பிறப்பு’! யார் யாரோ சமாதானம் சொல்கிறார்கள். அவர்களுக்கென்ன தெரியப் போகிறது, பார்வையற்றவளின் பாதையின் குழப்பங்கள்? ஆசான், ‘வளத்தவன் தானே, கழுத கெட்டுது போ! நானும் உன் தகப்பன் தான்’ என்கிறார். இருந்தும்….. திடீரென யாருக்கோ மாங்காட்டுச்சாமியின் நினைவு வருகிறது. மலைக்கோயிலிலேயே பல காலம் இருந்தும், யாரையும் முகம் பார்க்காத, பேசாத முனிவர் – அங்கே கடவுள் என்றே அறியப்படுகிறார். ‘அவரிடம் கொண்டு போங்க’ என்கிறார்கள். அம்சவல்லிக்கு தற்போது கடவுள் போதுமாயிருக்கிறது. ‘சாமி’, ‘சாமி’ என்று பிதற்றியபடி தட்டுத்தடுமாறி நகர்கிறாள். படிகளுக்கு முன் நிற்கிறாள். ஏழெட்டு படிகள் கடந்தால், ‘கடவுள்’. காமிரா சட்டென வேறொரு கோணம் பிடிக்கிறது. ருத்ரன் பிரம்மாண்டமாக படுத்துக் கிடக்கிறான், வானம் பார்த்து. அவன் கால்களிருந்து துவங்கும் ஒரு நேர்க்கோட்டின் இறுதியில் அம்சவல்லி. தலைக்கு நேரே ‘கடவுள்’. இடையில் இருக்கும் படிக்கட்டுகளுக்கு இணையாக கிடக்கின்றான் ருத்ரன். அம்சவல்லி, கடவுளை அடையப் போகும் படிக்கட்டுகள்! அம்சவல்லி ஏறி வரவில்லை. மெல்ல, ஏறி வருவது, இளையராஜாவின் இசை!

ஆற்றுப்படுகையெங்கும் சிதறிக்கிடக்கிற கூழாங்கற்களில் – ருத்ரன், அம்சவல்லி, மாங்காட்டுச்சாமி – என மூன்று கூழாங்கற்களை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, திரையின் இருட்டில், எப்படி ஒரு நேர்க்கோடில் வைப்பது என நான் யோசித்துக்கொண்டிருக்கையில், விரிகிற இந்த காட்சி பிரமிக்க வைக்கிறது.

சின்ன வயதில் எனக்கு கடவுள் அறிமுகப்படுத்தப்பட்டது போலவே, ருத்ரனும் அறிமுகப்படுத்தப்படுகின்றான். ஒரு பார்வையில் நல்லவர் / தீயவர் அறியும் வல்லமை, பிறப்பையே தடுத்து நிறுத்துகிற சக்தி என நீள்கிறது பட்டியல். இதே ருத்ரன் – மரணத்தையே வழங்க வல்லவன் – இங்கே மலைக்கோயிலில் வந்து தன் பணியைச் செய்ய உதவுகிறது திரைக்கதை. ருத்ரன் ஒரு கதாபாத்திரமே அல்ல, ஒரு உருவம். கடவுளின் உருவம். சமஸ்கிருதம், விருப்பம் இருந்தால் மட்டுமே நம் பேச்சுக்கு செவி சாய்த்தல் என பலப்பல ஒற்றுமைகளுடன், கடவுளாக நிற்க வேண்டியது மட்டுமே ருத்ரனின் வேலை. (இன்னொரு கோணத்தில், நமது ஹீரோக்கள் போல, எதையும் செய்ய வல்ல, யாருக்கும் அஞ்சாத, ஊரே போற்றும், கடைசில் தீய சக்தியை அழிக்கப் போகிற ஒரு ஹீரோ!)

ருத்ரன் கடவுளா? இல்லை கடவுளை அடையும் ஒரு வழியா?

படத்தில் ஏகபட்ட படிமங்களும் ஒப்பீடுகளும். மற்றவர்களால் தேவையற்றது என்று ஒதுக்கப்படுகிற பொருட்களை (பிணம் உள்பட! ) மட்டுமே பயன்படுத்தும் அகோரிகள் – உடை, உணவு, இருப்பிடம் என சமூகத்தால் ஒதுக்கப்பட்டவையை உபயோகப்படுத்தும் பிச்சைக்காரர்கள்; உடல் குறைபாடுள்ளவர்கள் – கடவுளர்கள்; (‘சாமி’. ‘சாமி’ என பலரும் சொல்ல, நாமும் என்னவென்று பார்க்க, அந்த இருண்ட குகையிலிருந்து மாங்காட்டுச்சாமி தூக்கி வரப்பட்டு அமர வைக்கப்படுகிற காட்சி, சிலிர்ப்பு!) எல்லாவற்றுக்கும் மேலே கடவுள் வேடமிட்ட பிச்சைகாரர்கள் என, யோசிக்க வைக்கிற பல ஒப்பீடுகள்.

ஒரு கட்டத்திற்கு மேல் மலைக்கோயிலிலேயே தங்கிவிடுகிற படம். ஆனால், சம்பிரதாயமாக ஒரு காட்சியில் கூட (பிண்ணனியில் ஒரு மணியோசையுடன் கூடிய) வானை உரசும் கோபுரமோ ஒரு ஆராதனையோ, கோயில் கடவுளையோ காட்டவில்லை. கடவுளின் கவனம் செலுத்த மறுக்கப்பட்ட இடத்தில் நடக்கிற கதைக்கு பொருத்தமான முடிவு. டிம்பிளின் மீது ஒரு துளி அதிக கவனமோ, கேலியோ, சுயபச்சாதாபமோ இல்லாது, அழகு.

naan-kadavul-01படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கட்டங்களில் ஒன்று, முகம் சிதைந்த அந்த பணக்காரரிடம் அம்சவல்லியை விற்கப் போவது அறிந்து முருகனும், டிம்பிளும் ஓடி வருகிற காட்சி. டிம்பிள் அவசரமாக அம்சவல்லியை முதுகில் ஏற்றிக்கொண்டு மலை மேலே ஏறுகிறாள். (காமிராவும் பின்னால் ஏறுகிறது). மாங்காட்டுச்சாமியின் முன் அவளை கொண்டு விட்டு, மலையாள ப்ரோக்கரின் ஆட்கள் வந்ததும் முருகனும் டிம்பிளும் அவளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். மாங்காட்டுச்சாமி, ‘மேலே இருக்கிற ஒருவனைப் ‘பாரு’ ’ என்கிறார். மீண்டும் ஒரு முறை, தன் தற்போதைய குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்ட அம்சவல்லி, இருட்டிலே துழாவித் துழாவித் தேடுகிறாள். (நமக்கும் இருட்டு). இருட்டில் தட்டுப்படுகிற ருத்ரனின் காலைப் பற்றி இழுத்து, அவனை அப்படியே சரிக்கிறாள். இதைத் தவிர, ருத்ரனுக்கும் அம்சவல்லிக்கும் ஒரு ‘பிடிப்போ’, உறவோ எங்கும் ஏற்படவில்லை. ருத்ரன் தன் எல்லா உறவுகளையும் அறுத்து விட்டுத் திரும்ப விடவேண்டுமென்பது குருவின் கட்டளை. அப்பாவின் உறவு அறுக்கத்தேவையில்லை என்றே தோன்றுகிறது. (‘என் பொண்டாட்டிகிட்ட ஒரு தடவ இவன் முகத்த காட்டிட்டா போதும்’). அம்மாவை ஒரு வார்த்தையில் தலைமுழுக வைக்க முடிகிறது. (அந்தக் காட்சி, நறுக்!). தங்கைக்கு செய்ய வேண்டிய கடமையை உதறித்தள்ளியும் ஆயிற்று. பின், ருத்ரனை அங்கே இருக்க வைக்கிற விஷயம் என்ன என்பதில் இன்னும் எனக்குத் தெளிவில்லை.

பாலாவிற்கு வழக்கமான கதை சொல்லும் பாணியில் சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. முருகனின் ‘உருப்படிகளில்’ இருவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிற காட்சி ஒன்று வருகிறது. அடுத்தக் காட்சியில், புதுச்சேலை, புதுத்தாலியோடு புதுப்புன்னகையுடன் புன்னகைக்கிறாள் அந்தப் பெண். அதே போல, ருத்ரன் நீதிமன்றத்திலிருந்து வெளி வருவதில் தொடங்கி சட் சட்டென வெட்டப்பட்ட காட்சிகள் கடைசியில் ருத்ர-தாண்டவத்தில் வந்து நிற்கிறது. டாடா சுமோவில் சென்று மாதா கோவிலிருந்து அம்சவல்லியை தூக்கி வருதல் என வள வள காட்சிகள் இல்லை. (மாதா கோயில் எதற்கு? அம்சவல்லியின் கடைசி பிறப்பில், மதமே மாறிவிட்டதா?!)

ஆசான் கடவுளை திட்டுவதும் சரி, அம்மாவிடம் ‘ஐயிரண்டு திங்களாய்’ என்று பாடுகிற போதும் சரி – பல இடங்களில் பட்டாசாய் வெடிக்கிற வசனங்கள் – கடைசிக்காட்சியில் ஏன் இத்தனை செயற்கை. பூஜாவின் நடிப்பு, காட்சி வடிவமைப்பு என மொத்தக் காட்சியும் செயற்கை. அதனாலே, பின்னால் வருகிற அம்சவல்லி ‘மோட்சம்’ பெறுகிற காட்சியும் அடிபட்டுப் போகிறது. (சென்ஸார் என்கிற அமைப்பு, அதன் நோக்கங்கள்,செயல்முறைகள் – இவற்றில் உள்ள முட்டாத்தனங்கள் மீண்டும் எனக்கு தெளிவாகிறது)

பாலாவின் மற்ற எல்லா படங்களை விட, படம் வண்ணக் கலவையாக இருக்கிறது. காசியில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிற காட்சியில், ஒளிப்பதிவு ஒவியம் வரைகிறது. (அப்பா, மகனை பார்த்ததும் ஒரு சின்ன சிதறல் இசையில். மெல்ல இசை சுற்றுகிறது, இசைக்கு மயக்கம் வருகிறது. இசை உச்சம் தொடுகையில் அப்பா மயக்கம் போடு விழுகிறார்!)

மீண்டும் ஒரு முறை பார்க்கையில், ராஜாவின் பிண்ணனி இசையை கவனிக்க வேண்டும். ‘மா கங்கா’ பாடல் அற்பதம்! (‘இசையமைப்பாளர் உத்தம் சிங் பெயர் ‘நன்றி’ என்று சொல்லி போடப்படுகிறது. அவர் இந்தப் பாடலில் ஏதேனும் செய்தாரா என தகவலில்லை) ‘கண்ணில் பார்வை’ பாடலின் இடையிசைக்கு என்ன காட்சி விரியுமோ என்ரு வியந்ததற்கு விடை கிடைத்து விட்டது. :)

அம்சவல்லியின் முதல் காட்சியில், அவள் பாடுகிற பாடல் ஒரு பாடகியின் குரலில் ஒலிக்கிறது. (மதுமிதா?). அடுத்த பாடலுக்கு முன்னரே, அவள் தாண்டவன் கூட்டத்திற்கு கடத்தப்படுகிறாள். அதற்கு பின் அம்சவல்லியின் குரல் நமக்கு கேட்பதேயில்லை. இதற்கு காரணம் என்ன என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கேன். ஒவ்வொரு முறையும் ரயிலில் முதல் பிச்சைக்காரனின் குரல் மட்டும் என்னை உருக்குவதாலா? இல்லை தாண்டவனிடம் வந்த பின்பு, அவள் வெறும் பாடலைப் பாடி பிச்சையெடுக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதாலா?

முந்தைய படங்களின் ஏற்படுத்தியது போல வன் அதிர்வுகள் ஏற்படுத்தாமல், சின்னச் சின்ன கேள்விகள் எழுப்பியிருக்கிறார் பாலா. சீட்டுக்கட்டில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி, மூர்க்கமாக அதை கலைக்கும் பாணி, காதல் என பல விஷயங்கள் கடந்து வந்து எடுத்த இந்தப் படம், அவரின் இதுவரையான படங்களில் சிறந்ததாகப் படுகிறது. (நான் ‘நந்தா’ அத்தனை கவனமாக பார்த்தது இல்லை) இப்படி கதைகள் பிடிக்கத் தூண்டுகிற அவரின் அனுபவங்கள் என்ன? வியப்பாக இருக்கிறது. சமீபத்திய விழா ஒன்றில், மணிரத்னம் சொன்னது போல, ‘one of the most authentic directors’!

Written by aravind

பெப்ரவரி 14, 2009 இல் 8:59 மு.பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with

தேநீரில் ஸ்நேகிதம்

5 மறுமொழிகளுடன்

சிப் #1 – (விவிதபாரதி விளம்பரக்குரலில் படிக்கவும்) “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? காதலுக்கு வீட்டில் எதிர்ப்பா? வரும் சனிக்கிழமை பெங்களுவுக்கு உங்கள் ஆளுடன் வந்து தெருக்களில் டேட்டிங் செய்து திரியவும். ஓசியில் முறைப்படி அவசரத் திருமணம் செய்து வைக்கப்படும். ரிஜிஷ்ட்ரேஷன் செலவு முற்றிலும் இலவசம்!! உடனே அணுகவும், ராம் சேனா, மங்களூர்! டிங் டிங் டி டிங்!”

#2 – எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. அது எப்படி ஒரு காலத்தில் அருமையான படங்கள் எடுத்தவர்கள், திடீரென மரண மொக்கையான படங்களை எடுக்கிறார்கள்? அந்தத் திறமை எப்படி வருகிறது? சில வாரங்களுக்கு முன் தொலைகாட்சியில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ படம் போட்டிருந்தார்கள். சரி, ஃபாசில் படமாச்சே, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் உண்டே (கொஞ்சம் திற) என்று பார்த்தால்.. சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எப்படி?! ஒரு பக்கம் ஸ்ரீகாந்த் பிழிந்து பிழிந்து நடிக்கிறார், மறுபக்கம் சோனியா அகர்வால் அதை ட்ரையரில் போட்டு காய வைக்கிறார். எல்லாரையும் விட, ஸ்ரீகாந்தின் அப்பாவாக வருபவர் அமளி துமளியான நடிப்பு. நட்ட நடு ராத்திரி வரை தொலைக்காட்சியை மூக்கு முட்டியபடி அமர்ந்து திரு திருவென விழித்தது தான் மிச்சம்.

#3 – சென்னை மாநகர போக்க்குவரத்து கழகத்தின் மாதாந்திர வருமானத்தை கோடு போட்ட நோட்டில் எழுதுகையில் ‘தராமல் ஏப்பம் விட்ட ஐம்பது காசுகள்’ என்ற தனி column உண்டா என்பது பற்றிய தகவல் எனக்கில்லை. இந்த மாநகரில் ஒரு நாளுக்கு ஒரு ஜீவராசிக்காவது சரியான சில்லறை திரும்ப கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. அது நீங்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது பேராசை. இந்தப் பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா? மிகச்சிறப்பான யோசனை ஏதேனும் இருந்தால் கமெண்டில் அடிக்கவும்.

#4 – மேற்சொன்ன விஷயத்தை நீங்கள் யாரிடமாவது பேசி முடிக்கையில், ‘இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே!’ என்று வியக்க உங்களுக்கு உரிமை இல்லை. ‘பகல் கொள்ளை’ என்ற வார்த்தை தன் அதிர்ச்சித்தன்மையை (Shock factor?!) இழந்த நாளாகிவிட்டது. எல்லா கொள்ளையும் இப்போது பகலில் தான் நடக்கிறது. ‘பட்டப் பகலில்’ என்று சொன்னால் கூட அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. இதே போல, தமிழ் பேசும் மக்கள் ‘தண்ணி பட்ட பாடு’ என்ற phraseஐ தண்ணி பட்ட பாடாக உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு அந்த வார்த்தை தாகத்தை தணித்தது. இது போல தங்களின் உபயோகத்தை இழந்த வார்த்தை கோர்வைகளை எடுத்தாராய்ந்து சென்னை பல்கலைகழத்தில் ஆ.ஞானப்பிரகாசம் என்பவர் ஆராய்ச்சி இன்னும் செய்யவில்லை. (பெயர் சும்மா உபயோகித்தேன். யாரும் சண்டைக்கு வராதீர்கள், ப்ளீஸ்.)

#5 – ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் ஏன் காம்ப்ளான் வருகிறது என்று முதலில் என் அம்மாவிற்கு புரியவில்லை. பின்னர், காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் வந்தது. ‘இதையா தின்றீங்க? இதுல, அது அப்புறம் அது, ஐயோ அது வேற இருக்கு. சீச்சீ’ என்கிறார்கள். அதிலும், அதில் அபாராமான நுணுக்கமான விஷயங்கள் திணித்திருந்தார்கள். (ஹார்லிக்ஸ் அம்மா-பையன் நீல கலரில் உடை; காம்ப்ளான் ஜோடி காபி கலரில்). என்னவோ, இதை குடிக்காதவர்களுக்கு மூளையே வளராதது போல. என்னைப் போன்ற அறிவாளிகள் எல்லாம் அதை அப்படியே தின்றோ, இப்படியோ தின்றோ ஒன்றும் மூளை வளர்க்கவில்லை. சரி, நான் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள். சொந்த ஊரில் பல குழாயடிச்சண்டைகளை கண்டு களித்த எனக்கு, இது, ஜீன்ஸ் அணிந்த மங்கைகள் குழாயடிச்சண்டை போடுவது போல இருந்தது.

#6 – நான் படித்து ரசித்த ஒன்று – எங்கள் அலுவலக காஃபி கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த feedback நோட்டில், காஃபி தருபவர் பற்றி எழுதியிருந்த அழகழகான பாராட்டுகள். படித்து நெகிந்த ஒன்று – நடிகர் பிரபுதேவாவின் மகனின் உடலை தங்கள் நிலத்தில் சில காரணங்களினால் புதைக்க முடியாமல் போக, நடிகர் பிரகாஷ்ராஜ் தானே முன்வந்து தன் தோட்டத்தில் தன் மகனை புதைத்த இடமருகே புதைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.

#7 – ‘அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது / சடப்பொருட்களின் ஒழுங்கு’ என்றும், ‘ஓர் அடிமுட்டாள் / அயோக்கியன் / அதிபுத்திசாலி / ஒரு ஞானி / நால்வரும் குளத்தில் குதித்தனர் / ஒரே மாதிரி தான் / வட்ட வட்டமாக வந்தது’ என்றும் சிக்கன வார்த்தைகளில் கவிதை சொல்லி மனசைப் பிடிக்கிறார், கவிதாயின் தென்றல். தி.நகரில் வாங்கிவிட்டு, 12B பிடித்து வீடு வருவதற்குள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். மொத்தம் 89 கவிதைகள். விருப்பமுள்ளவர்கள் படித்துப் பாருங்கள். (நீல இறகு – தென்றல் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60 – 96 பக்கங்கள்)

#8 – இந்த வார பாடல் டெடிகேட் – ‘Where is the party?’ (சிலம்பாட்டம்) – To, ராம் சேனா! ;)

Written by aravind

பெப்ரவரி 8, 2009 இல் 3:08 பிற்பகல்

எண்ணங்கள், தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with

தலைப்பில்லாத சில கவிதைகள்

7 மறுமொழிகளுடன்

இதுவரை மொத்தம் எத்தனை முகங்களை நான் கண்டிருப்பேன்? அதில் எத்தனை என் நினைவில் உள்ளது? ஒரு முகத்தை நினைவில் எழுத எந்த உணர்வு மையாகிறது? அழகா, அன்பா, வியப்பா, கொடூரமா, பயமா, பரிதாபமா?

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த முகங்கள் என் நினைவில் இருக்கும்?

******

அது ஒரு பண்டிகையின் முன்னிரவு. எந்தப் பண்டிகையென்று நினைவில்லை. எல்லா பண்டிகைகளின் நிறங்களும் விடுமுறையாக சாயமிழந்து விட்ட காலமிது. சொந்த ஊருக்கு செல்ல வேண்டி பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தேன். ஊரை அடைய நிறைய மார்க்கங்கள் இருந்தும், நான் எப்போதும் கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக செல்வதையே தேர்தெடுப்பேன். முகங்கள் மிதக்கும் கடல் அது. பண்டிகை காலங்களில் அலை பெரிதாக அடிக்கிற கடல். யாருமில்லாத அறையில் என் அடையாளம் காண்பது போலவே, மிகப்பெரிய ஜனத்திரளில் அடையாளமிழப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். என் பேருந்து இன்னும் கிளம்ப நேரமிருக்கிறது. கையில் விகடன் புரள்கிறது. அவ்வப்போது விழிகள் ஜன்னல் வழியே வெளியே விழுந்து புரள்கின்றன. பெண்கள், ஆண்கள், குழந்தைகள். நிரம்பிய பேருந்துகள். என்னென்னவோ அறிவிப்புகள். இதற்கெல்லாம் நடுவே அவர். தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனங்கள் தரும் அலுவல் உடை போன்றதொரு உடை. நீல நிறம். இதைப் பார்க்கையில், இதை நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று அறியவில்லை.

மீண்டும் கவனம் விகடனுக்கு வந்தது. இரைச்சலுக்கிடையில் என் குரல் வார்த்தை வார்த்தையாக எதையோ படிக்கிறது.

‘அண்ணா’ என்று ஒரு குரல். ஜன்னல் வழியே கீழ் நோக்கி பார்க்கிறேன். அதே அவர். நீல நிற உடையில், ஆஜானுபாகுவான தோற்றம். நல்ல கருப்பு. முப்பது வயது இருக்க வேண்டிய கட்டாயம் தோற்றத்தினால் ஏற்படுகிறது. அவரையும் என்னையும் பக்கத்தில் வைத்து பார்த்துப் பார்த்து ‘அண்ணா’ என்ற வார்த்தை தோற்கிறது. அவர் குரல் உடைகிற கண்ணாடிப் பாத்திரத்தின் வீறல் போல, கீறுகிறது. ‘திருவண்ணாமலை போகணும். பர்ஸ தொலச்சிட்டேன். டிக்கெட்டுக்கு ரெண்டு ரூபா குறையுது’ என்றபடி குரல் குறைகிறது. ‘அண்ணா’ என்று மறுபடி அழைத்துவிட்டு திணறுகிறார். கை விருட்டென சட்டை மேல் பாக்கெட்டிலிருந்து ஒரு கையளவு சில்லறை எடுத்தது. எவ்வளவு என தெரியவில்லை. அப்படியே கொடுத்தேன். என் செய்கைகளில் அவசரம். இந்த தர்மசங்கடத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். யாரை? என்னையா? அவரையா?

‘நன்றி’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

அவர் முகத்தை நான் நினைவில் வைத்துக்கொள்வதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார்.

******

dsc_02097_faces2பெரியம்மா மயங்கி விழுந்ததாக முதலில் தகவல் வந்தது. அலுவலகத்தில் இருந்து உடனே புறப்பட்டு விடும்படியான கட்டாயம் இல்லை, சாதாரண மயக்கம் என்றே தகவல். அன்றிரவு தான் மூளையில் ரத்தக்கசிவு என்று எனக்குச் சொல்லப்பட்டது. வியாழனும் வெள்ளியும் நகராமல் நகர்ந்தன. விடுப்பு எடுக்க முடிந்த உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து இருந்து களைத்துவிட்டிருந்தனர். வெள்ளி இரவு நேரே மருத்துவமனைக்கு சென்று அங்கே அதுவரை இருந்த அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

நகரின் பிரபலமான மருத்துவமனை. ஐ.சி.யு.வில் இருப்பவர்களின் உறவினர்கள் தங்குவதற்கென ஒரு சின்ன கூடாரம் போல ஒரு மண்டபம். நாலு வாசல், நாலு திசையிலும். உள்ளே மக்கள் ஒழிங்கில்லாமல் படுத்திருந்தார்கள். கிராம வாசனை வீசுகிறது அங்கே. போட்டது போட்டபடி வந்தவர்கள். மொத்தம் இருபது பேர் இருந்திருப்போம். தலைக்கு வைத்து படுக்க எதுவுமில்லை. என் உடை, ஷூ எல்லாம் அந்த இடத்துக்கு பொருந்தாமல் உறுத்துகிறது. எங்களை நோக்கி இருந்த ஒரு மரத்தில் ஒலிபெருக்கி கட்டப்பட்டிருக்கிறது. அறிவிப்புக்கு காத்திருக்கிறது காற்றும், எங்கள் கூட்டமும்.

தூக்கம் பிடிக்கவில்லை. மற்றவர்களின் தூக்கத்தில் இருந்து விதம் விதமான ஒலிகள் எழும்புகிறது. அந்த ஒழுங்கில்லாத ஒலிகளுக்கு என் எண்ணங்களை பொருத்திப் பார்க்கிறேன், மெட்டுக்கு பாட்டெழுதுவது போல. ஒரு கட்டத்தில் எழுந்து வெளியே வந்து பார்க்கிறேன். பக்கத்தில் இரண்டு மூன்று சிமெண்ட் பெஞ்சுகள். அந்த ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்ச்சில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். நான் இந்த ஓரமாக இருந்த ஒன்றில் போய் அமர்ந்து கொள்கிறேன். சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சம் எங்கள் இருவரையும் யாரென முகத்தில் அடித்து பார்க்கிறது.

அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்கிறாள். மஞ்சள் பூசி குளித்த முகம். ஒல்லியான உருவம். முகத்தில் பிரதானமாக குங்குமம். திருமணமாகி சில வருடங்களே ஆகியிருக்க வேண்டும். கையில் ஏதோ சாமி புத்தகம். ஏதோ முணுமுணுத்துப் படிக்கிறாள்.

எங்கிருந்தோ எழுந்து ஒரு சிறுவன் வருகிறான். அவளுடைய பையன். பேசத் தொடங்காத வயது. ஒரு சட்டை மட்டும் போட்டிருந்தவன் அவளையும் என்னையும் சுற்றிச் சுற்றி நடக்கிறான். பெஞ்சில் இருந்து குதிக்கிறான். சிரிக்கிறான். இவள் வெறும் சைகைகளால் அவனை கண்டிக்கிறாள், அழைக்கிறாள். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் ஆழ்ந்த சோகம்.

கொஞ்ச நேரத்தில் பையன் ஓய்ந்து விட்டான். அவள் மடியில் படுத்து தூங்கிவிட்டான். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் நான் வந்து அமர்ந்து. ஏதோ மரத்தின் அசைவை நான் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். அவள் தூங்குகிறவர்கள் யாரையும் எழுப்பி விட முடியாத ஒரு குரலில் என்னைப் பார்த்து பேச தொடங்குகிறாள், நான் கேட்காமலே.

அவள் கணவனுக்கு விபத்து ஆகி, மோசமான நிலையில் கிடக்கிறான். ஒரு கால் எடுத்தி விட்டதாக சொன்னதாக நினைவு. அழுகையில்லாமல், தெளிவாக பேசுகிறாள். அமைதியாக கவனிப்பது தான் மிகப்பெரிய ஆறுதல் என்று எனக்குத் தோன்றுகிறது. அவள் ஊர் என்னூர் பக்கம் தான் என்பதை மட்டும் சொல்ல நினைத்தேன்.

அவள் பேசி நான் கேட்கத்தான் இரவு இத்தனை அமைதியாக இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறேன். அவள் பேசி முடித்தது தெரியாமல், ஒரு மௌனம் பிறந்து விட்டது. இவ்வளவு நேரம் நான் கேட்டதும் மௌனம் தானா?

அடுத்த நாள் காலை பெரியம்மா இறந்து விட்டார். கிளம்பும் போது அவளைத் தேடினேன். அவளுக்கு விஷயம் தெரிந்திருந்தது. நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கிளம்பிய பிறகு எனக்கு ஏனோ தோன்றுகிறது, நேற்றிரவு பார்த்தற்கும் இப்போதும் பார்ப்பதற்கும் அந்த முகத்தில் நிறைய வித்தியாசங்கள். காலை பார்த்த முகம் நினைவில் இருந்து அழிந்து விட்டது. அந்த இரவு நான் கண்ட, கேட்ட, உணர்ந்த, முகம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

*****

faces1உயிர் பிரிந்த உடலை வைத்து செய்யப்படுகிற சடங்குகள் என்னை வருத்தும். என்ன காரணங்களும், என்ன சாஸ்த்திரங்களும் என்னுடைய வருத்தத்தை போக்கவில்லை. பெரியம்மாவின் உடலை மின்சார இடுகாட்டின் உள்ளே வைத்ததும் நான் வெளியே வந்து விட்டேன்.

வெளியே கட்டிடத்தை பார்த்தபடி இரண்டு மூன்று பெஞ்ச்சுகள். அங்கே போய் அமர்ந்து கொண்டேன். வீட்டில் இருந்து புறப்படுகையில் கேட்ட அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. நினைவுகளை கலைக்க வேண்டிய கட்டாயம். இடப்புறமாக திரும்பி பார்க்கிறேன். அங்கே ஒரு முதியவர். செல்வச்செழிப்பு, முதுமைக்கு ஒரு கம்பீரத்தை தந்திருந்தது. கைத்தடியில் இரண்டு கைகளையும் வைத்தபடி அமர்ந்திருந்தார். உள்ளே எங்கள் சடங்கைத் தவிர வேறெதுவும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. பின் இவர் யாருக்காக வந்திருக்கிறார் எனத் தெரியவில்லை. அங்கே பணிபுரிகிற ஒருவன் மிகுந்த மரியாதையுடன் இவருக்கு வணக்கம் வைத்து விட்டு வெளியே சென்றான்.

நான் அவரையே தொடர்ந்து பார்க்கிறேன் என்பதறிந்து அவர் என் பக்கம் திரும்புகிறார். நான் பார்வையை விடுவித்து திரும்பிக் கொள்கிறேன்.

அமைதியாக இருவரும் அமர்ந்திருக்கிறோம்.

திடீரென பெரும் சப்தத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் அங்கு உள்ளே வருகிறது. நாங்கள் இருவரும் கொஞ்சம் திடுக்கிட்டே அதை கவனிக்கிறோம். உள்ளே வந்த ஆம்புலன்ஸ் அரை வட்டம் போட்டு திரும்பி, எங்களிடம் அதன் முகத்தை காட்டி நிற்கிறது. ஓட்டுனர் இறங்கி பின்பக்கம் சென்று அதன் பெரிய வாயை கட்டிடம் நோக்கி திறக்கிறார்.

நானும் பெரியவரும் பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்.

ஓட்டுனர் முன்னே வந்து எங்களைப் பார்க்கிறார். ‘ஒரு நிமிஷம் வாங்களேன்’ என்கிறார்.

நானும் பெரியரும் ஒருவரை பார்த்துக் கொண்டு விட்டு சட்டென எழுந்து செல்கிறோம்.

அங்கே மூன்று பேர் நின்றிருந்தார்கள். இரண்டு பெண்கள், ஒரு ஆண். எல்லோருக்குமே அதிகபட்சம் இருப்பதியிரண்டு வயதிருக்கலாம். வட கிழக்கு இந்திய மாநில முகங்கள். அண்ணன் தங்கைகளாக இருக்கலாம். அப்பாவுக்கான முகம் கொண்டவரென உடன் யாரும் இல்லை.

ஓட்டுனர் எங்களைப் பார்த்து ‘ஹிந்தி தெரியுமா?’ என்று கேட்கிறார். நான் உதட்டை பிதுக்கியபடி பெரியவரை பார்க்கிறேன். அவருக்கும் தெரியவில்லை. என்ன செய்வது? அவர்களுக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கவில்லை.

அந்தப் பெண் அழுதபடி எங்களிடன் ஏதோ சொல்கிறாள். அழுகையைத் தவிர வேறெதுவும் புரியவில்லை. பையனின் முகத்தில் உடைத்து விட முடியாத இறுக்கம். இன்னொரு பெண்ணின் அழுகை யாராலும் நிறுத்த முடியாதது போல இருந்தது. ‘இவங்க சடங்கு என்னனு தெரியலயே சார்’ என்கிறார் ஓட்டுனர்.

உள்ளிருந்து ஒருவர் வந்தார். எங்கள் எல்லாரின் முகங்களையும் எடை போடுவது போல பார்த்தார். அவருக்கும் பாஷை தெரியவில்லை. ‘உள்ளே எடுத்துட்டு வாங்க’ என்று சைகையில் சொல்கிறார்.

உடல் வெளியே இழுக்கப்படுகிறது. அம்மாவின் உடல் என்பது என் யூகம். மூக்கில் இருந்து இன்னும் இரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது.

விறுவிறுவென உள்ளே அனைவரும் போகிறார்கள். பெரியவரும் நானும் தங்கிவிட்டோம். கொஞ்சம் நேரம் அங்கேயே நின்றோம். பின் மெதுவாக நடந்து பெஞ்சுக்கு வந்தோம். வார்தைகளில்லாமல் உரையாடிக்கொண்டே வந்தது போல இருந்தது.

எண்ணி நான்கே நிமிடங்களில், அந்த கட்டிடமே அந்த பெண்களின் கதறலில் அதிருகிறது.

ஒரே நேரத்தில் நானும் பெரிவரும் திரும்பி, ஒருவரையொருவரை முகம் பார்த்துக்கொண்டோம்.

*****

ஓவியங்கள் – www.deweeseart.com மற்றும் www.hauptart.com

Written by aravind

பெப்ரவரி 1, 2009 இல் 4:20 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with