சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

6வது சென்னை திரைப்பட விழா – #2

2 மறுமொழிகளுடன்

# மஜித் மஜிதியின் “The Song of Sparrows” படத்திற்கு நிச்சயம் இடம்17255 கிடைக்காது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நல்ல வேளையாக, சீக்கிரம் சென்று விட்டேன். மிகவும் பரிச்சயமான இயக்குனர் என்பதால் கூட்டம் அலைமோதியது. ‘பூ’ பட இயக்குனர் சசி தொடங்கி ஜோடி நம்பர் 1 ராஜேஷ் வரை பல முகங்களை பார்க்க முடிந்தது. ஒரு கிராமத்தானுக்கு வாய்ப்புகளும் பணமும் அதிகம் புழலுகின்ற நகரத்தில் ஏற்படுகிற அனுபவங்களும், அது அவன் வாழ்க்கையையும் குடும்பத்தினரையும் எப்படி பாதிக்கிறது என்பதை தன் பாணியில் சொல்லியிருந்தார். மஜிதியின் படங்களில் humour நான் எதிர்பாராதது. அதுவும், மென்மையான சின்னப் புன்னகையை வரவழைக்கும் Gentle Humour. காது கேட்காத முதல் மகளின் ஹியரிங் எய்டு தொலைந்து போவதில் துவங்குகிறது படம். தொடர்ந்து, நெருப்புக்கோழி(!) பண்ணையில் அப்பாவின் வேலை போக, நகரத்துக்கு வேலை தேடி செல்கிறார் அப்பா. அங்கே, பைக்கை வைத்து கொண்டு ஆட்டோ போல சவாரி எடுக்கலாம். (அதற்கு யுனியன் எல்லாம் உண்டு!) நிறைய காசும், உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுகிற பொருட்களையும் தினம் அள்ளி வருகிறார் அப்பா. பணம் பார்க்க பார்க்க தயாள குணம் மாறிவிடுகிறது. பண்ணையில் அவரது கவனக்குறைவினால் எஸ்கேப் ஆகிவிடுகிற நெருப்புக்கோழி ஊரெங்கும் தன் தடயத்தை விட்டுச்செல்வது, அப்பாவின் குணம் கலங்க கலங்க, வீட்டு புழக்கடை கிணற்றை பிள்ளைகள் சுத்தப்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன படிமங்கள் மூலம் கதை சொல்லப்படுகிறது. காமிரா அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். பல பருந்து விழி ஷாட்டுகள் (eagle-view ;) ) அழகு. ஒன்று, இங்கே படத்தில் இருக்கிறது. இசை தான் கொஞ்சம் ஏமாற்றம். Children of Heavenஇல் ஹூ தவறி தண்ணீரில் விழுகிற காட்சியின் பிண்ணனி இசை என் மனதில் அப்படியே இருக்க, அதைப் போல இங்கே எதுவும் இல்லை. ஒரு நிமிடமும் சலிக்காமல், ஜில்லென்று நகர்கிறது படம். ஒரு ஆஸ்கர் நாமினேஷன் எதிர்பார்க்கலாம். பின்னால் அமர்ந்திருந்த இருவர், ஒவ்வொரு முறை நெருப்புக்கோழி முட்டையை காட்டும் போதெல்லாம், ‘நெருப்புக்கோழி முட்டை இவ்ளோ பெருசா’ என்று வியந்தது சுவாரஸ்யம்!

# விழா மேடையில் பேசுகிற 10 நிமிடங்களில் 4 நிமிடங்கள் மேடையை அலங்கரப்போரின் மேன்மையை விளக்குவதிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் Round robin கணக்காக ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து புகழ்ந்து புளிக்க ஆரம்பித்து விடுகிறது. நிறைவு விழாவில் பேசிய கவிஞர் வாலியின் பேச்சை அப்படியும் கேட்க முடிந்தது. இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், ராமநாராயணமன் ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர். யாரும் ஒரு படத்தையும் பார்க்கவில்லை, உலக சினிமாவைப் பற்றி பேசவும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு! கலைஞர் 25 லட்சம் தந்தது குறித்து அனைவரும் நன்றி நவின்றனர். ரிஜஸ்டர் பாஸ் வாங்காதவர்கள் மூன்று ரூபாய் தந்து டிக்கெட் வாங்கி ஒரு படம் பார்க்கலாம் என்ற அரசின் அறிவிப்பு டுபாக்கூர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

#- கான் திரைப்பட விழாவிற்கு போக வேண்டும் என்பது நான்18392 வாழ்நாளில் செய்ய விரும்புகிற 50 காரியங்களில் ஒன்று. அது வரை, அவ்விழாவில் பரிசு பெறும் திரைப்படங்களை பார்த்து மனதை தேற்றிக்கொள்வது தவிர வேறொன்றும் செய்ய முடியாது. இந்த முறை அந்த ஆசையில் கொஞ்சம் நிறைவேறியது. இந்த வருடம் சிறந்த இயக்குனர் விருதை தட்டிச் சென்ற ‘Three Monkeys’ படத்தை திரையிட்டு, விழாவை நிறைவு செய்தார்கள். ‘கெட்டதை கேட்காதே, கெட்டதை பார்க்காதே, கெட்டதை பேசாதே’ என்று சொல்லும் மூன்று குரங்குகளின் சித்தாந்தத்தை, ஒரு தவறை மறை(ற)க்க முயலும் ஒரு குடும்பத்தினரை (அப்பா, அம்மா, பையன்) வைத்து எடுத்திருந்தார்கள். அந்த வீட்டின் சூழலை மிகப் பிரமாதமாக கொண்டு வந்திருந்தார்கள். ஆர்ட் டைரக்ஷன் மூலமே பாதி கதை சொல்லிவிடுகிறார்கள்! லைட்டிங், கதாபாத்திரங்களின் அசைவுகள் எல்லாம் கதை சொல்கிறது. வசனங்கள் மிகக்குறைவு. ஒரு பெரிய பிரச்சினை முடிந்து, அப்பா வீட்டு மாடியில் பெருமூச்சோடு நிற்க, பின்னாலிருந்து பெரு மேகங்கள் திரண்டு வந்து மழை துவங்கும் க்ளோசிங் ஷாட், மிகப் பிரமாதம். படத்தின் மந்த கதி, கொஞ்சம் நெருடல். உட்காரந்திருந்தவர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து நகர, இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தவர்களுக்கு விமோசனம் கிடைத்தது. இது போன்ற ஒளிப்பதிவை காண, தமிழ் திரைக்கு இன்னும் எத்தனை நாளாகுமோ! உலகத்தரம்!

# கான் திரைப்பட விழாவில் மகுடம் சூடிய படம். The Class – ப்ரெஞ்ச்entre_les_murs படம். முழுக்க முழுக்க வகுப்பறையில் நடக்கிற படம். இது படமா இல்லை நிஜமா என்று கிள்ளி கிள்ளி கை வலித்தது தான் மிச்சம். 12-13 வயதுடைய மாணவர்கள், ஒரு ஆசிரியர், ஒரு வகுப்பறை. ஆசிரயராக இருப்பது எவ்வளவு கஷ்டமடா சாமி! அதுவும் ப்ரான்ஸில் பலதரப்பட்ட மக்கள் உண்டு. கறுப்பர்கள், சீனக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள் (ஒரு ஆப்பிரிக்கா பையன் – அம்மா வருகிற காட்சி எல்லாம் பிரமாதம்), அடாவடி ஆங்கிலேயர்கள் -எல்லாம் கலந்த கலவை. பருவ வயது வேறு – ஏடாகூடமான கேள்விகள், சண்டைகள், சச்சரவுகள். பள்ளியில் இருக்கிற ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க வேண்டி போராட வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் ஒரு கெட்ட வார்த்தை கூட பேச மாட்டேன், நிதானம் இழக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிற ஒரு ஆசிரியரை பின் தொடருகிறது படம். ஒரு வருட காலம் நடக்கிற கதை. ஒரு ஆண்டு முடிவில் மாணவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை விளக்கி விட்டு, காலியான வகுப்பறைகளின் montage ஷாட்டுடன் நிறைவுபெறுகிறது படம். இது நிச்சயம் நடிப்பாக இருக்க வாய்ப்பில்லை – அத்தனை பிரமிப்பான நடிப்பு. போன வருடம் நான் பார்த்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்று!

# நிறைவான அனுபவம். ஒரே ஒரு குறை – என்ன படங்கள் பார்க்கலாம் என்று முடிவு செய்ய, படம் எப்படியிருந்தது என்று விவாதிக்க, கூட சென்று வர ஒரு நண்பன்/நண்பி இல்லை! இருந்தவர்களும் கிற்ஸ்துமஸ் விடுமுறையில் சென்று விட, ஒரே போர். அடுத்த முறை என்னுடன் வருவதற்கு இப்போதே சொல்லி வைக்கலாம் ;)

முற்றும்.

Written by aravind

ஜனவரி 11, 2009 இல் 5:49 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. திரைப்பட விழாவை நன்கு அனுபவித்து இருக்குறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி..

    Saravana Kumar MSK

    ஜனவரி 24, 2009 இல் 6:22 பிற்பகல்

  2. சரவணா,

    வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி நண்பா. நிச்சயம் ஒரு பிரமாதமான அனுபவமாக இருந்தது :)

    aravind

    ஜனவரி 25, 2009 இல் 4:50 மு.பகல்


மறுமொழி இடுக