Archive for ஜனவரி 2009
The Slumdog கூத்து
நம்ம காதல் நாயகன் கமலஹாசன் கட்டில் மேல உட்காந்திருக்காரு. கொசுவம் வெச்சு சீல கட்டின ரேவதி வந்து நிக்கறாங்க.
கமல்: ஏதோ படம் பாக்க போறேன்னு சொன்னியே. என்ன படம்? அத பத்தி பாடு….
ரேவதி: (அட்டென்ஷன்ல நிக்கறாங்க. தொண்டய சரி பண்ணிக்கிறாங்க. வாயால மூசிக் போடறாங்க. அப்புறமா பாடறாங்க)
ஸ்லம்மு கோடீஸ்வரனே
கோல்டன் க்ளோபு மகனே
பார்க்க விழி கூடுதில்லையேஏஏஏஏஏஏஏஏஏ
தினசரி பேப்பர் பாரு
கொடுக்கற விருத பாரு
எழுதுற விமர்சனம் கேளு
படம் தாஆஆஆஆஆஆஆஆஆன் தூள்!
கமல்: சரி போய் படத்த பாத்துட்டு வா.
(கொஞ்சம் நேரம் கழிச்சு திரும்ப வர்றாங்க).
கமல்: படம் பாத்தியா?
ரேவதி: ம்
கமல்: எங்க படத்த பத்தி பாடு கேப்பம்.
ரேவதி: ஸ்லம்மு… ஸ்லம்மு… ஸ்ல..
கமல்: என்னாச்சு?
ரேவதி: வெறும் Hype தாங்க இருக்கு!!
************
நாட்டில எல்லா விமர்சகர்களும் பின்னிப் பெடல் எடுக்கறாங்க. ராஜா சென்லேர்ந்து ராஜீவ் சென் வரைக்கும் எல்லாரும் ஸ்டார் ஸ்டாரா அள்ளி கொடுக்கறாங்க. அவங்க அடிக்கிற பஞ்ச்செல்லாம் என்னென்ன?
Realistic: ஹா ஹா ஹா, ஹி ஹி ஹி, ஹு ஹு ஹு!
Masterpiece: ஓ! அப்படி சொல்டீங்களா?
Inspiring: அதாவது நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது, இந்த படத்துக்கு ஆஸ்கர் கிடைக்கும்னா, நம்ம எடுக்குற ப்ளாக்பஸ்டர் படங்களுக்கும் நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும்! அதானே? இல்லியா?!
If a film made by a foreigner can portray the slums and religious riots so realistically, why cant an Indian film maker do it?: டாஆஆஆஆஆஆஆய்! வேணாம். நானும் ரொம்ப பொறுமையா இருக்கேன். உடனே ஆரம்பிச்சிடுவீங்களே இந்தப் பல்லவிய!
************
SPOILERS!
அவள்: என்ன, நீயும் ‘இது இந்தியாவ மோசமா காட்டுது’. ‘உலகத்தின் பார்வையில் அசிங்கப்படுவோம்’ அப்படின்னு சொல்றியா?
நான்: சீச்சீ, இல்ல. இருக்கறதா தான் காமிச்சிருக்காங்க.
அவள்: படத்த தடை பண்ணனும், எதிரா கேஸ் போடணும் – அப்படின்னு சொல்ற கும்பல்ல ஒருத்தனா?
நான்: இந்த படத்தோட ஸ்க்ரிப்ட் எவ்ளோ லூசுத்தனமா இருக்கோ, அதே அளவு லூசுத்தனம் – இந்த கேஸ் போடறது எல்லாம்.
அவள்: பின்ன என்ன தான் பிரச்சினை?
நான்: கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு. நெகட்டிவான விஷயம் எல்லாம் நல்லா பளிச்சுன்னு ‘ரியலிஸ்டிக்கா’ சொல்லியிருக்காங்க. ஆனா, பாசிட்டிவான மேட்டர் அவ்ளோ நல்ல சொல்லல.
அவள்: இன்னும் என்ன வேணும் உனக்கு? அவனுக்கு அந்த பொண்ணு கிடச்சிடற. காசு ஜெயிக்கிறான்.
நான்: ஆமாமா, இது எல்லாம் ரொம்ப ரியலா தான் இருக்கு.
அவள்: நீ குறை சொல்ல தான் லாயக்கு.
நான்: அனில் கபூர் கேரக்டர் அத விட மோசம். யாராச்சும் இப்படி லைவ் ஷோல ‘சாய்வாலா’ ‘சாய்வாலா’ னு கேவலப்படுத்துவாங்களா? மொதல்ல, இந்த மாதிரி சேரிப் பசங்க இங்கலிஷ் பேசறது செட்டே ஆகல. ஒரு மாதிரி சவ சவன்னு இருந்தது. அதுலேர்ந்து ஓவர்கம் பண்ணி வரதுக்குள்ள, படம் இனி எப்படி போகும் எல்லாம் தெரிஞ்சிடுத்து. அப்புறம் த்ரில்லும் இல்ல. ஒகேவான படத்த, ஏன் எல்லா இப்படி புகழ்றாங்க.
அவள்: உனக்கெல்லாம் ஒலக சினிமா தான் லாயக்கு. உவேக். எப்படி பாக்குறியோ. அசாத்திய பொறுமை, சகிப்புத்தன்மை எக்சட் ரா எக்சட் ரா.
நான்: ஹா ஹா ஹா!
அவள்: என்ன சிரிப்பு.
நான்: ஒன்னும் இல்ல.
அவள்: மரியாதையா சொல்லு.
நான்: இல்ல, நீயும் மாசம் தவறாம தியேட்டர் போறே. திரும்ப திரும்ப போறே. வருஷ்க்கடைசில கேட்டா, மூணு நல்ல படம் கூட பாக்கலன்னு சொல்றே. இந்த அசாத்திய பொறுமை, சகிப்புத்தன்மை எக்சட் ரா எக்சட் ரா எல்லாம் யாருக்குன்னு யோசிச்சேன்.
(அதோட இந்த ‘அவமானப்படுத்துற மேட்டர்லாம்’ ஏன் காட்டுறாங்கன்னு ஒரு கொஸ்டீன் போட்டாலும் கொஞ்சம் கலீஜ் தான். நான் சொல்றத விட, இவரு அழகா சொல்வாரு. சரி விடுங்க.)
************
நம்ம நடிகை சுஹாசினி அவங்க ஒரு ப்ரோக்ராம் நடத்துறாங்கல்ல, அதுல போன வாரம் இந்தப் படத்தையும், வில்லு படத்தையும் விமர்சனம் பண்ணாங்க. அவங்க வழக்கமா படங்கள தராசுல வெப்பாங்க. சீச்சீ, தராசுலாம் இருக்காது. சும்மா, ப்ளஸ் மைனஸ்லாம் சொல்வாங்க; பேலன்ஸ் பண்ணுவாங்க. அதுல இந்த வாரம் என்ன பண்ணாங்க தெரியுமா? ஒரு வித்தியாசத்துக்காக, ஸ்லம்டாக் படத்தோட ப்ளஸ் எல்லாத்தையும் ஒரு பக்கமும் வில்லு படத்தோட மைனஸ்லாம் ஒரு பக்கமும் வெச்சு பேலண்ஸ் பண்ணாங்க.
வாவ்! வாட் எ இன்னவேட்டிவ், இண்டலிஜெண்ட், இண்டெலக்ட்சுவல் ஐடியா!!
************
“This movie is so full of hope. It is brimming with hope and positive thoughts. So much that you come out feeling that you can achieve anything in life”.
ராசா!! நைனா!! எல்லாமே அதிர்ஷத்துல நடந்துரும்கிறது ஹோப் இல்ல கண்ணா! பேராச!
ஒரு வேள, The movie is so full of hypeனு சொல்ல வந்தீங்களோ!
************
Finally, Oscar “recognizes” our bollywood film culture. – செய்தி
ஹப்பா! சுதந்திரம் கிடைச்சு இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போ தான் நமக்கு விடிவுகாலம் வந்திருக்கு!!
************
SPOILERS!
(இரண்டு மாசத்துக்கு முன்னாடி)
நான்: “என்னடா, ஷாருக்கான் புது படம் பாத்துட்டியா?”
அவன்: “சை! படமா அது! மொக்க!”
நான்: “ஏன் டா?”
அவன்: “நம்பற மாதிரியே இல்ல படம். அவன் மாறுவேஷத்துல வருவானாம். அவன் பொண்டாட்டிக்கு தெரியவே தெரியாதாம். காது குத்தறானுங்க.”
நான்: “சரி மத்தபடி படம் எப்படி”
அவன்: “இதுக்கு மேல படம் வேற பாக்கணுமா?”
(போன வாரம்)
நான்: “என்னடா, ஸ்லம்டாக் பிடிச்சுதா?”
அவன்: “சூப்பர் டா! சான்ஸே இல்ல!!”
நான்: “ம்ம். எப்படிடா அவன் வின் பண்ணுவான், அவன் படிக்கவே இல்லங்கறே”
அவன்: “சில கொஸ்டீன் ஈஸியா இருக்கும். லைக் ராமர் கைல வில்லு அது மாதிரி. மத்தது Fluke, Coincidence”
நான்: “என்னடா சொல்றே? எல்லா கேள்வியுமா”
அவன்: “ஆமா டா, சினிமோட்டகிராஃபி வெயிட்டு போ!”
நான்: “நம்புற மாதிரியே இல்லியே லாஜிக்”
அவன்: “சினிமால எவனாச்சும் லாஜிக் பாப்பானா?! இதெல்லாம் அணுபவிக்கனும். ஆராயக்கூடாது! பத்து ஆஸ்கர் நானினேஷண்டா!!”
நான்: அது சரி!
************
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கத் தான் போகுது. அப்படியே நடக்க வாழ்த்துவோம். அது மட்டுமில்ல, இனி நிறைய நல்ல நல்ல இண்டர்னேஷனல் படம் கிடைக்கட்டும்! வாழ்த்துகள்!
*********
அவங்க ஸ்டைல்லயே முடிப்போம்!
இந்தப் படம் இவ்ளோ பெரிய ஹிட், உலகமெல்லாம். அதுக்கு என்ன காரணம்?
a) படம் சூப்பர்!
b) படத்துல வர ஜமால் மாதிரி ப்ரொட்யூஸர் ரொம்ப லக்கி, அதான்!
c) இந்த மும்பை அட்டாக்கால உலகம் முழுக்க மும்பை மேல ஒரு கவனம் வந்துடுச்சு. அந்த டைம் பாத்து ரிலீஸ் ஆகி, படம் பத்திகிச்சு!
d) It’s written. (நம்ம தலையில?!)
படம் பாத்துட்டு நீங்களே டிஸைட் பண்ணிக்கோங்க.
பிளாட்ஃபாரம் எண் 6 – சில குறிப்புகள்

தடதடவென
உள்ளே வந்த ரயில்
இடித்து கொண்டு முன்னேறியது
ஏழே முக்கால் பிளாட்ஃபாரமை.
கடைசி பெட்டி
வெளியேறுகையில்
பின் விட்டு செல்லும்
எட்டு மணி பிளாட்ஃபாரமை.
*****************
இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
இது வரை
கடந்திருக்கிறது
ஆறு ரயில்களை.
மூன்று பாசஞ்சர்,
ஒரு கூட்ஸ்,
நிற்காமல் கடந்த
ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
எல்லாம் சேர்த்து.
*****************
இந்த
எடை பார்க்கும் மிஷின்கள்
பிறந்தது
வளர்ந்தது
எல்லாம்
இதே
பிளாட் ஃபாரத்தில்
தானா?
*****************
யானைப்பிளறல் ஒன்று கேட்கிறது.
மடை திறந்தது போல
ஆயிரம் வார்த்தைகள்
அமைதியாக பேசிக் கொண்ட
விழிகளுக்கிடையில்
நீளத் துவங்கியது
ரயில்.
*****************
ரயில் புறப்பட்ட போன பின்
கசக்கி எறியப்படுகின்றன
காலி காஃபி கோப்பைகள்
பிளாஸ்டிக் கவர்கள்
மற்றும்
சொல்லாமலே விட்டு விட்ட
சில வார்த்தைகள்
இசையலைகள் – # 1
சாரங்கி தான் பாடலை துவங்கி வைக்கிறது. அதற்கு முன் சில வினாடிகளே வருகிற இசை அத்தனை defined ஆக இல்லையே என்று முதலில் தோன்றுகிறது. பின்னால் கேட்க கேட்க அது பாடலிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று ஆகி விடுகிறது. 00:16ல் தொடங்கி 00:23 வரை வருகிற அந்த இசை (தில்ருபா?) திரும்ப எப்போது வரும் என காக்க வைக்கிறது, கடைசி வரை. “கண்ணில் பார்வை போன போதும்” எனத் தொடங்குகிறார் ஷ்ரேயா கோஷல். பார்வையற்ற பெண் பாடுகிற பாடல். பார்வை பிறப்பிலே போனதாக தெரியவில்லை (“ஒளியைப் போலே ஒரு துணை / வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ?” என்கிறார் வாலி.) மிகவும் கடினமான ரிதம், முழு உணர்வுடன் அங்கங்கே உச்ச குரலில் பாட வேண்டிய கட்டாயம் என சில சமயங்களில் ஷ்ரேயாவின் உச்சரிப்பில் தெளிவில்லை. ஆனாலும், ஷ்ரேயாவைத் தவிர வேறு யாரும் இதை பாடி இருக்க முடியாது. சரணத்திற்கு முன்பான திகில் இசைக்கு திரையில் என்ன காட்சி விரியுமோ? ராஜாவிடமிருந்து இப்படி தெளிவான, சுவையான பாடல் கேட்டு கொஞ்ச நாளாச்சு! சோகத்தில் தோய்த்தெடுத்த அழகான பாடல். Haunting.
இதே மெட்டை ராஜா வேறு வரிகள் கொண்டு பாடியிருக்கிறார். ஒரே பாடலை ஷ்ரேயா கோஷல் குரலில் கேட்பதும் ராஜாவின் குரலில் கேட்பதும் ரொம்ப வித்தியாசம். துவக்க வரிகளே பிரமாதம். (ஒரு காற்றில் அலையும் சிறகு/ எந்த நேரம் ஓய்வு தேடும்? / கண்ணில்லாது காணும் கனவு / எதை தேடி எங்கு போகும்?)
ராஜாவின் பழைய மெட்டு ‘மாதா உன் கோவிலில்’ மீண்டும் மதுமிதாவின் (‘கனா காணும் காலங்கள்’ – ரெயின்போ காலனி) குரலில் ஒலிக்கிறது. 40 வினாடிகள் தான் பாட்டு! கையில் அகல் விளக்கு கொண்டு போவது போன்ற பயபக்தியும், ஒழுங்கும் குரலில் இருக்கிறது. பிண்ணயில் ஒலிப்பது உடுக்கையா? முழுப்பாட்டையும் பாட வைத்திருக்கலாம்.
ராஜாவின் ரமண மாலையில் இருந்து ‘பிட்சை பாத்திரம்’ பாடல் மதுபால கிருஷ்ணனின் குரலில் வருகிறது. அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு. பக்திப் பாடல்! ‘எலும்பொடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு என்னும்’ என்ற வரிகளுக்குள் மெட்டு எத்தனை அழகாக போய் வருகிறது என்பது தான் பாட்டின் ஒரே சுவாரஸ்யம். படத்தில் பூஜா பிச்சை எடுப்பவராக வந்தாலும் இது வேறு பிச்சையாக்கும்
ஹிந்தியில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடிய விஜய் பிரகாஷ், சுத்த சமஸ்கிரதத்தில் பாடியிருக்கிறார். (ஓம் சிவோ ஓம்). காசியில் (?) நடக்கிற பூஜை புனஸ்காரங்களை பாட்டோடு சேர்த்திருக்கிறார் ராஜா. உடுக்கை சும்மா அடி அடி என மரண அடி அடிக்கிறது. ஹீரோ இண்ட்ரோ பாட்டுக்கு மற்றவர்களெல்லாம் பண்ணுகிற அலப்பறையையும் பாலா செய்கிற வேலையையும் பாருங்கள்
மீண்டும் ‘மாதா உன் கோயிலில்’ மெட்டு சாதனாவின் குரலில் ‘அம்மா உன் பிள்ளை நான‘் என ஒலிக்கிறது. வாலியின் புது வரிகளில் “காட்டோரம் ஓடும் நீரே நதியானதே / ரோட்டோர வாழ்வு இங்கே விதியானதே” மட்டும் ஈர்க்கிறது. லோக்கல் ஆர்கஸ்ட்ராவினர் உபயோகப்படுத்திற ட்ரம்ஸோ என்று அலுப்பு தட்ட வைக்கிற அந்த synth இசை எப்போது தான் ராஜா நிறுத்தப் போகிறாரோ! இந்த அலட்சியம் மிகுந்த கோபத்தை தருகிறது! (அதற்கு எனக்கு உரிமை உண்டு
)
ஷ்ரேயா பாட்டு ஒன்று போதும், என் போன்ற ரசிகர்களுக்கு! நன்றி ராஜா!
ஜனவரி 28 மிஷ்கினின் “நந்தலாலா”வில் ராஜா ஐந்து புது மெட்டு போட்டிருக்கிறார் என்று ஆசை காட்டுகிறார்கள். பார்ப்போம்.
திரையிசை பற்றிய தொடரை, ராஜா “நான் கடவுள்” என்று சொல்லுகிற இந்த இசையைப் பற்றி பேசித் துவக்குவது பொருத்தம் தானே?
**********
ஏ.ஆர்.ரஹ்மானின் Slumdog Millionare, இன்று Golden Globe millionare விருதை தட்டிச் சென்று இருக்கிறார்!. காசு கொடுத்து வாங்கிய இசை அல்லது Official siteஇல் கேட்கிற இசையை பற்றி மட்டுமே நான் இந்த தொடரில் எழுதப்போவதால், Slumdog Millionareஐ பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. ஆஸ்கருக்கு பிறகு அதிகம் மதிக்கப்படுகிற விருது. (என்னைப் பொருத்தவரையில் ஆஸ்கரே ஒரு டுபாக்கூர்
) இசையலைகள் சார்பாகவும் சிறுமழை சார்பாகவும் ரஹ்மானை வாழ்த்துவோம்.
**********
‘உனக்கு ஹாரிஸ்/யுவன் இசை பிடிக்குமா?’ என்று சண்டைக்கு வருவது போல கேட்கிற எல்லாருமே அடுத்ததாக சொல்வது, ‘இங்க்லீஷ் பாட்டுலேர்ந்து எவ்ளோ காப்பி தெரியுமா? என்று சாடுவார்கள். இது மிகவும் சங்கடமான பிரச்சினை. (சின்ன வயதிலிருந்து கேட்டு கேட்டு அலுக்காத ஹிந்தி பாடல் ‘அகேலே ஹெய்ன்’ (Qayamat Se Qayamat Tak), அப்பட்டமான காப்பி என்று தெரிந்தது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நினைவிருக்கிறது) நீங்கள் கேட்டு மிகவும் ரசித்த பாடலுக்கான பாராட்டை யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் போவது மிகவும் கொடுமை தான். Inspire ஆவது கலைகளில் மிகவும் சாதாரணமான, சரியான விஷயம் தான் என்றாலும், அப்பட்டமான திருடல் ஒப்புக்கொள்ள முடியாது. Inspire ஆகிறவர்கள் கூட அதைப் பற்றி பாடல் தகட்டில் குறிப்பிடுவதாய்க் காணோம்! காப்பி அடித்தது பற்றி யார் சொல்லப் போகிறார்கள்
சமீபத்தில் எனக்கு மிகவும் நெருடலாய் அப்படி பட்ட பாடல்கள் ‘மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்’ (ஜி.வி.பிரகாஷ்), ‘உனக்கென நான், எனக்கென நீ’ (யார்?). (எனக்கு மிகவும் பிடித்த Inspired adaptation – ‘கிழக்கு வாசல்‘ படத்தில் வருகிற ‘வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி‘ பாடல். பீத்தோவனின் சிம்பொனி அது. ஒரு அழகான பாட்டி முன்பெல்லாம் டைட்டன் வாட்ச் விளம்பரத்தில் வாசிப்பாரே, அதே அதே!) யார் யார் எங்கெங்கு ‘Inspire’ ஆனார்கள் என்பதை இங்கு காணலாம்.
**********
12:58 வரை பேசிவிட்ட எஃப்.எம் தொகுப்பாளர்கள், 1:00 மணியைத் தொட உதவுவதும், ரொம்ப கதைத்துவிட்ட எனக்கு சின்னதாக இடத்தை நிரப்பவும் உதவப்போவதும் Bit Songs தான். இவர் தான் இதை துவக்கினார் என்று சொல்லுகிற அளவுக்கு யாரும் ட்ரெண்ட் செட் செய்யவில்லை என்றாலும், ஹாரிஸ் ஜெயராஜின் Bit songs மிகவும் வெற்றி பெற்றன. (பூப்போல் பூப்போல் – மின்னலே, ஒரு பார்வை பார் – 12B, இளமை உல்லாசம் – உன்னாலே உன்னாலே). பெரும்பாலும் பாடல்கள் இசையமைக்கப்படும் போதே இவையும் செய்யப்படுகின்றன. எனக்கு தெரிந்து ரீ-ரெகாட்டிங்கில் அப்படி சேர்க்கப்பட்ட பாடல், “தாஸ் தாஸ், சின்னப்பதாஸ்” (கடலோரக் கவிதைகள்). சட்சட்டென கட் ஆகும் காட்சிக்கேற்ப பாடல் இருப்பது பாரதிராஜா-இளையராஜா கெமிஸ்ட்ரி! ராஜாவின் மற்றொரு பிட்டு பாடல் வீராவில் வரும் (ஆத்துல அன்னக்கிளி). ரஹ்மான் ‘காதலன்‘ படத்திலேயே மூன்று பிட்டு போட்டார். எனக்கு மிகவும் பிடித்தது ‘ரட்சகன்’ படத்தில் வரும் ‘போகும் வழியெல்லாம் காற்றே‘. தமிழ் திரையில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பிட்டு பாட்டு உண்டெனில் அது, ‘தென்பாண்டிச் சீமையிலே தான்‘ (நாயகன்). சரிதானே?
தொடரும்..
6வது சென்னை திரைப்பட விழா – #2
# மஜித் மஜிதியின் “The Song of Sparrows” படத்திற்கு நிச்சயம் இடம்
கிடைக்காது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நல்ல வேளையாக, சீக்கிரம் சென்று விட்டேன். மிகவும் பரிச்சயமான இயக்குனர் என்பதால் கூட்டம் அலைமோதியது. ‘பூ’ பட இயக்குனர் சசி தொடங்கி ஜோடி நம்பர் 1 ராஜேஷ் வரை பல முகங்களை பார்க்க முடிந்தது. ஒரு கிராமத்தானுக்கு வாய்ப்புகளும் பணமும் அதிகம் புழலுகின்ற நகரத்தில் ஏற்படுகிற அனுபவங்களும், அது அவன் வாழ்க்கையையும் குடும்பத்தினரையும் எப்படி பாதிக்கிறது என்பதை தன் பாணியில் சொல்லியிருந்தார். மஜிதியின் படங்களில் humour நான் எதிர்பாராதது. அதுவும், மென்மையான சின்னப் புன்னகையை வரவழைக்கும் Gentle Humour. காது கேட்காத முதல் மகளின் ஹியரிங் எய்டு தொலைந்து போவதில் துவங்குகிறது படம். தொடர்ந்து, நெருப்புக்கோழி(!) பண்ணையில் அப்பாவின் வேலை போக, நகரத்துக்கு வேலை தேடி செல்கிறார் அப்பா. அங்கே, பைக்கை வைத்து கொண்டு ஆட்டோ போல சவாரி எடுக்கலாம். (அதற்கு யுனியன் எல்லாம் உண்டு!) நிறைய காசும், உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுகிற பொருட்களையும் தினம் அள்ளி வருகிறார் அப்பா. பணம் பார்க்க பார்க்க தயாள குணம் மாறிவிடுகிறது. பண்ணையில் அவரது கவனக்குறைவினால் எஸ்கேப் ஆகிவிடுகிற நெருப்புக்கோழி ஊரெங்கும் தன் தடயத்தை விட்டுச்செல்வது, அப்பாவின் குணம் கலங்க கலங்க, வீட்டு புழக்கடை கிணற்றை பிள்ளைகள் சுத்தப்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன படிமங்கள் மூலம் கதை சொல்லப்படுகிறது. காமிரா அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். பல பருந்து விழி ஷாட்டுகள் (eagle-view
) அழகு. ஒன்று, இங்கே படத்தில் இருக்கிறது. இசை தான் கொஞ்சம் ஏமாற்றம். Children of Heavenஇல் ஹூ தவறி தண்ணீரில் விழுகிற காட்சியின் பிண்ணனி இசை என் மனதில் அப்படியே இருக்க, அதைப் போல இங்கே எதுவும் இல்லை. ஒரு நிமிடமும் சலிக்காமல், ஜில்லென்று நகர்கிறது படம். ஒரு ஆஸ்கர் நாமினேஷன் எதிர்பார்க்கலாம். பின்னால் அமர்ந்திருந்த இருவர், ஒவ்வொரு முறை நெருப்புக்கோழி முட்டையை காட்டும் போதெல்லாம், ‘நெருப்புக்கோழி முட்டை இவ்ளோ பெருசா’ என்று வியந்தது சுவாரஸ்யம்!
# விழா மேடையில் பேசுகிற 10 நிமிடங்களில் 4 நிமிடங்கள் மேடையை அலங்கரப்போரின் மேன்மையை விளக்குவதிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் Round robin கணக்காக ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து புகழ்ந்து புளிக்க ஆரம்பித்து விடுகிறது. நிறைவு விழாவில் பேசிய கவிஞர் வாலியின் பேச்சை அப்படியும் கேட்க முடிந்தது. இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், ராமநாராயணமன் ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர். யாரும் ஒரு படத்தையும் பார்க்கவில்லை, உலக சினிமாவைப் பற்றி பேசவும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு! கலைஞர் 25 லட்சம் தந்தது குறித்து அனைவரும் நன்றி நவின்றனர். ரிஜஸ்டர் பாஸ் வாங்காதவர்கள் மூன்று ரூபாய் தந்து டிக்கெட் வாங்கி ஒரு படம் பார்க்கலாம் என்ற அரசின் அறிவிப்பு டுபாக்கூர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
#- கான் திரைப்பட விழாவிற்கு போக வேண்டும் என்பது நான்
வாழ்நாளில் செய்ய விரும்புகிற 50 காரியங்களில் ஒன்று. அது வரை, அவ்விழாவில் பரிசு பெறும் திரைப்படங்களை பார்த்து மனதை தேற்றிக்கொள்வது தவிர வேறொன்றும் செய்ய முடியாது. இந்த முறை அந்த ஆசையில் கொஞ்சம் நிறைவேறியது. இந்த வருடம் சிறந்த இயக்குனர் விருதை தட்டிச் சென்ற ‘Three Monkeys’ படத்தை திரையிட்டு, விழாவை நிறைவு செய்தார்கள். ‘கெட்டதை கேட்காதே, கெட்டதை பார்க்காதே, கெட்டதை பேசாதே’ என்று சொல்லும் மூன்று குரங்குகளின் சித்தாந்தத்தை, ஒரு தவறை மறை(ற)க்க முயலும் ஒரு குடும்பத்தினரை (அப்பா, அம்மா, பையன்) வைத்து எடுத்திருந்தார்கள். அந்த வீட்டின் சூழலை மிகப் பிரமாதமாக கொண்டு வந்திருந்தார்கள். ஆர்ட் டைரக்ஷன் மூலமே பாதி கதை சொல்லிவிடுகிறார்கள்! லைட்டிங், கதாபாத்திரங்களின் அசைவுகள் எல்லாம் கதை சொல்கிறது. வசனங்கள் மிகக்குறைவு. ஒரு பெரிய பிரச்சினை முடிந்து, அப்பா வீட்டு மாடியில் பெருமூச்சோடு நிற்க, பின்னாலிருந்து பெரு மேகங்கள் திரண்டு வந்து மழை துவங்கும் க்ளோசிங் ஷாட், மிகப் பிரமாதம். படத்தின் மந்த கதி, கொஞ்சம் நெருடல். உட்காரந்திருந்தவர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து நகர, இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தவர்களுக்கு விமோசனம் கிடைத்தது. இது போன்ற ஒளிப்பதிவை காண, தமிழ் திரைக்கு இன்னும் எத்தனை நாளாகுமோ! உலகத்தரம்!
# கான் திரைப்பட விழாவில் மகுடம் சூடிய படம். The Class – ப்ரெஞ்ச்
படம். முழுக்க முழுக்க வகுப்பறையில் நடக்கிற படம். இது படமா இல்லை நிஜமா என்று கிள்ளி கிள்ளி கை வலித்தது தான் மிச்சம். 12-13 வயதுடைய மாணவர்கள், ஒரு ஆசிரியர், ஒரு வகுப்பறை. ஆசிரயராக இருப்பது எவ்வளவு கஷ்டமடா சாமி! அதுவும் ப்ரான்ஸில் பலதரப்பட்ட மக்கள் உண்டு. கறுப்பர்கள், சீனக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள் (ஒரு ஆப்பிரிக்கா பையன் – அம்மா வருகிற காட்சி எல்லாம் பிரமாதம்), அடாவடி ஆங்கிலேயர்கள் -எல்லாம் கலந்த கலவை. பருவ வயது வேறு – ஏடாகூடமான கேள்விகள், சண்டைகள், சச்சரவுகள். பள்ளியில் இருக்கிற ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க வேண்டி போராட வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் ஒரு கெட்ட வார்த்தை கூட பேச மாட்டேன், நிதானம் இழக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிற ஒரு ஆசிரியரை பின் தொடருகிறது படம். ஒரு வருட காலம் நடக்கிற கதை. ஒரு ஆண்டு முடிவில் மாணவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை விளக்கி விட்டு, காலியான வகுப்பறைகளின் montage ஷாட்டுடன் நிறைவுபெறுகிறது படம். இது நிச்சயம் நடிப்பாக இருக்க வாய்ப்பில்லை – அத்தனை பிரமிப்பான நடிப்பு. போன வருடம் நான் பார்த்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்று!
# நிறைவான அனுபவம். ஒரே ஒரு குறை – என்ன படங்கள் பார்க்கலாம் என்று முடிவு செய்ய, படம் எப்படியிருந்தது என்று விவாதிக்க, கூட சென்று வர ஒரு நண்பன்/நண்பி இல்லை! இருந்தவர்களும் கிற்ஸ்துமஸ் விடுமுறையில் சென்று விட, ஒரே போர். அடுத்த முறை என்னுடன் வருவதற்கு இப்போதே சொல்லி வைக்கலாம்
முற்றும்.
6வது சென்னை திரைப்பட விழா – #1
நவம்பரில் இருந்தே சென்னை திரைப்பட விழா(டிசம்பர் 17 – டிசம்பர் 26) அறிவிப்பு எப்போது வருமென இந்த தளத்தை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அறிவிப்பு வந்ததும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நான் பார்த்த 8 படங்களில் 6 படங்களைப் பற்றி எழுத இருக்கிறேன். இரண்டு பதிவுகளில். வெறும் விமர்சனமாக இல்லாமல், கொஞ்சம் கதையாடலும் அரட்டையுமாகவே செய்ய விரும்புகிறேன். ரெடி ஜூட்.
# – 600 ரூபாய் கட்டணம் ரொம்ப அதிகம். அதுவும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டு சென்றால் இரவு ஒன்பது மணிக்கு வரை மென்பொருள் எழுதும் நான், மிஞ்சிப்போனால் பத்து படங்களை பார்த்தால் பெரிய விஷயம். அதனால் 600 ரூபாய் ரொம்ப அதிகம் என்று முதலில் விட்டுவிட்டேன். பின்னர் 500 ரூபாய் ஆக்கினார்கள். ஆசை கொஞ்சம் துளிர்விட்டது. ஒரு படத்துக்கு 50 ரூபாய் என்று கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்று சப்புக்கொட்டிவிட்டு, முதல் நாள் அங்கே நான் போய் சேரும் போது மணி 7 45. இப்போது ரிஜிஸ்டர் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த நாளும் இதே கதை. என் அலுவல் நேரத்தை விளக்கி, கொஞ்சம் ரிஜிஸ்டர் செய்யுங்கள் என்று சொன்னதற்கு எனக்கு கிடைத்த பதில் – ‘நேரம் இல்லையென்றால் அப்புறம் ரிஜிஸ்டர் செய்து என்ன செய்யப் போறீங்க’?! நல்லது, வந்தவர்களுக்கு இது போன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது அற்புதமான விஷயம், நன்றி. இத்தனை பிகு ஆகாது. (பின்னர், 300 ரூபாய்க்கு பாஸ் கிடைத்தது
) 200 ரூபாய் கட்டணத்தில் படங்களை திரையிடுகிற கேரள திரைப்பட விழா குழுவினர், வெகு முன்னரே என்னென்ன தேதியில் என்னென்ன படம் என தெளிவாக வலையேற்றியிருந்தார்கள். அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில், இவர்களது ஏற்பாடுகள் கொஞ்சம் ஏமாற்றமே. இருந்தும் தொடர்ந்து உற்சாகமாக நடத்துவதற்கு ஓ போடுவோம்!
# – Kim Ki Dukஇன் Spring Summer Winter Fall and Spring படத்தை ஏற்கனவே பார்த்து விட்டிருந்தேன். (அற்புதமான படம், பின்னொரு சமயம் சாவகாசமாக விமர்சிக்கலாம்; இந்த அழகான ஆங்கில விமர்சனத்தையும் படிக்கவும்). அது தான் அவரின் திரைப்படங்களில் உச்சம் என்பதும் அது மட்டுமில்லாமல், அவரின் மற்ற திரைப்படங்கள் இந்தப் படத்தைப் போல மெல்லினமாக இராமல், வல்லினமாக இருக்கும் என்று படித்திருந்தேன். அதனால், அவரின் Time படத்திற்கு செல்லும் போது அத்தனை எதிர்பார்ப்புடன் போகவில்லை. உள்ளே போய் அமர்ந்து, முதல் அரை மணி நேரம் ப்ரொஜக்டரில் ஏதோ கோளாறு. சத்தமில்லாமல் மீண்டும் மீண்டும் முதல் காட்சியை ஒரு பத்து முறை பார்த்தோம். முதல் காட்சி ஒரு கோரமான முக மாற்று அறுவை சிகிச்சை. ஆஸ்பத்திரியில் இருந்து திருடப்பட்ட footage போல இருந்தது. கோளாறு சரியான பிறகு அதே காட்சியை திரும்ப பார்த்த போது, அதற்கு மிகவும் மென்மையான இசையை சேர்த்திருந்தார்கள். கூட்டிலிருந்து பட்டாம்பூச்சி உருவாகும் முறையை நினைவுபடுத்தக்கூடிய மெல்லிசை. பிண்ணனி இசை எத்தனை அர்த்தத்தை படத்துக்கு தருகிறது! அதன் மூலம், முகமாற்று அறுவை சிகிச்சை இந்தப் படத்தில் விரும்பி செய்துக்கொள்ளப்பட போகிற ஒரு சிகிச்சை என்ற செய்தியும் கிடைக்கிறது. காதலர்கள், ‘இந்த முகத்தையே எவ்வளவு நாள் பார்க்கிறது’ என்று புலம்புவதை வைத்து ஒரு கதை சொல்லியிருந்தார்கள். அழகான காதலன் – சுமாரான காதலி, இவர்களுக்கிடையில் நடக்கிற இயல்பான ஊடல்களின் காரணமாக, காதலி ஒரு விபரீதமான முடிவெடுக்க, தொடர்ந்து நடக்கும் திடுக் திடுக்குகளே கதை. ஒரு உறவிற்கு முகம் எத்தனை முக்கியம்; ஒரு முகத்தை நான் எந்தளவுக்கு உள்வாங்குகிறோம் என்றெல்லாமல் நம்மை ஆழமாக யோசிக்க விடாமல், திடுக் திடுக்கென தோசையை திருப்புவது போல கதை சகட்டுமேனிக்கு திரும்புகிறது. போதாத குறைக்கு, நமது ‘அலைபாயுதே’ ஸ்டைல் திரைக்கதை உத்தியையும் கடைசியில் திணித்திருந்தார்கள். எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த நடிகர்-இயக்குனர் ரமேஷ் கண்ணா, எல்லாரையும் ‘சூப்பர் டைரக்டர்பா’ என்று பிடித்து பிடித்து உட்கார வைத்துக்கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போல, இயக்கம் அத்தனை ஏமாற்றவில்லை தான். கொஞ்சம் Predictable ஆக இருந்தது. எல்லாவற்றையும் விட, அவர்களின் மொழி, செம ஸ்வீட்!!
# – ஏன் ஒரு பொது அரங்கில் இருக்கையில் செல்ஃபோனை சைலண்ட்டில் போடவேண்டும் என்று யாருக்குமே தோன்றுவதில்லை! மகா எரிச்சல்; முக்கியமான காட்சியின் போது யாராவது ஃபோனை அலறவிட்டு எடுத்து ஊருக்கே கேட்பது போல, அல்லோ என்று சொல்லி கடுப்படிக்கிறார்கள். அதே போல, படம் முடியும் தருவாயில் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே வந்து, இருட்டில் இரு கைகளையும் நீட்டிக்கொண்டு எதற்கு பேய் போல நடப்பானேன்? என் முன் ஸீட்டு காலியா என்று பார்க்க முயன்றவர், அங்கே அமர்ந்திருந்தவர் ‘முகத்தில் கை’ வைத்தது, மறக்க முடியாத ஒரு நகைச்சுவை காட்சி.
# – உற்சாகம் தெறிக்கும் பிண்ணனி இசையுடன் துவங்குகிற
படங்களை நான் அதீத ஆர்வத்துடன் பார்க்கத்துவங்குவேன். நீலக்கடலலையில் சூரியன் மின்ன, அழகான அரபு இசையுடன் துவங்கிய Salt of this Sea, அதே ரகம். பாலஸ்தீனத்திலிருந்து சின்ன வயதில் அமெரிக்காவுக்கு வெளியேறிவிட்ட சுரையா, மீண்டும் நாட்டுக்கு 21 வயதில் வரப்போவது, நிச்சயம் உற்சாகமான ஒன்றாகத்தான் இருக்கும். புத்திசாலியான தைரியமான கதாநாயகிகளைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. குறிப்பாக சுரையா, மிகவும் நம்பும்படியாக இருக்கிறாள். தன் அப்பா வழி தாத்தா வங்கியில் வைத்திருந்த பணத்தை வாங்க முயற்சிப்பதில் துவங்கி, யுத்தத்தில் இஸ்ரேலிடம் இழந்த தன் சொந்த ஊரைப் பார்க்கப் போவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் அற்புதமான நடிப்பு. சின்னக் காதல், வங்கியில் திருடும் காட்சிக்கு பின்னான த்ரில் என ரசிக்கும்படியான கலவையாக நகர்ந்தது படம். இது போன்ற அரசியல் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட படங்களுக்கே உரிய குறை – சுரையாவை சுரையாவாக இருக்க விடாமல், மொத்த பிரச்சினையின் அடையாளமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’இவள் – பாலஸ்தீன மக்களின் குரல்’ என்பது போன்றவற்றை தவிர்த்துவிட்டு, personalisedஆகவே வைத்திருந்தால், அழகாக இருந்திருக்கும். NDTV Lumiere சேனல் வைத்திருக்கிறவர்கள், விரைவில் அதில் இந்தப் படத்தை எதிர்பார்க்கலாம். படத்தின் முதல் காட்சி, அற்புதம். அமெரிக்காவில் கிளம்புகிற போதும், சொந்த நாட்டுக்கு வரும்போதும் எத்தனை கேள்வி கேட்கிறார்கள்?! ஒரு கட்டத்தில் நமக்கே கோவம் வருகிறது. இதே போன்ற ஒரு ஆரம்ப காட்சி, சென்ற வருடத்தின் நல்ல இந்தியப் படங்களின் ஒன்றான ‘Aamir’இல் வருகிறது.
# – 7.45 மணி ஷோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிஜமாகவே நல்ல படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். பஸ் போய்விடும், கோலங்கள், சூப்பர் சிங்கர், சிலம்பாட்டம் நைட் ஷோ என நிறைய காரணம் தேடப்படும். தியேட்டர் பாதிக்கு மேல் காலியாக இருக்கும். நமக்கு பிடித்த காட்சியை வேறு யாரெல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை ‘ப்ச்’, ‘ச்சே (என்ன சீன்!)’, கைதட்டுதல் போன்றவற்றை வைத்து கணிக்க முடியும். படத்தை நிம்மதியாக ரசிக்கலாம். ஒரு குறிப்பிட்ட படத்தின் இறுதிகாட்சிகள் அபாரமான நகைச்சுவை கொண்டு இருந்தது. நானும் எனக்கு ஒரு ஸீட் தள்ளி இருந்த ஒருவனும் ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாமல் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தோம். போகப் போக மீதியிருந்த அனைவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். உச்சகட்ட காட்சி முடிந்து விளக்கு போட்டதும், யார் யாரென முகம் பார்க்காமல் கிளம்பினோம்.
# – நல்ல உலக சினிமாவை திரையரங்கிற்கும், DVD கடைகளுக்கும், வீட்டு வரவேற்பறைக்கும் கொண்டு வரும் NDTV Lumiere சேனல் நிறுவனத்திற்கு இந்தப் பதிவு டெடிகேட்!
(UTV World Movies, தேறாது பாஸு! )
தொடரும்…