சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மரத்தடி

3 மறுமொழிகளுடன்

குளக்கரையில் அமர்ந்து சின்னச் சின்ன கற்கள் தேடி, கை போன போக்கில் எறிவது எப்படி இருக்கும்? ஒவ்வொரு கல் பறக்கும் போது, ஒரு எண்ணம் பறக்குமாய் இருக்கும். கற்கள் தேடும் வரை எண்ணம் ஓடாமல் நிற்குமாய் இருக்கும். நான் இதுவரை அப்படி செய்ததில்லை. அது இப்படி இருக்கலாம் என்று யோசிக்கும் போது எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் நினைவிற்கு வருகிறது. பள்ளிக்கூடத்தில், வெயில் கொளுத்தும் மதிய பொழுதுகளில், கன்னத்தில் கை வைத்து அமர்ந்தபடி, காதில் வந்து விழும் ஒவ்வொரு சொல்லாக கேட்டு கேட்டு நோட்டில் எழுதுவது, அழகாக; நிதானமாக. என் கையெழுத்தை நான் காதலித்தேன். மிகவும். ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன ஓவியத்தை கச்சிதமாக வரைவது போல எழுதவே ஆசைப்பட்டேன். காதில் புகும் வார்த்தை மூளைக்கு செல்லாமல், கைக்கு சென்று, நீளமாகவும் நீலமாகவும் விரியும். வரிசையாக வந்து விழும் வார்த்தைகள், சட்டென நிற்கும் போது, இதுவரை எழுதியதை கொஞ்சம் வருடிப் பார்த்துவிட்டு, பாதியில் பாடுவது நின்றதும் நிறுத்திய இசைக் கலைஞன் போல காத்துக் கொண்டிருப்பேன். அடுத்த வார்த்தை வந்து விழுந்ததும், மீண்டும் இசை தொடங்கும். அது, குளத்தின் அமைதியை கலைக்கும் சின்னச் சின்னக் கற்களின் ‘ப்ளக்’ ‘ப்ளக்’ ஓசையாகவும் இருந்திருக்கக்கூடும். அந்த ஓசை குளத்தினுடையதா? கல்லினுடையதா?

******

உச்சி வெயிலில் வானத்தில் பறக்கிற பறவைகளின் எண்ணிக்கை நிழல்களோடு சேர்ந்து இரட்டிப்பாகி விடுவது போல, மழை பெய்யும் இரவில் நகரின் தெரு விளக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விடுகிறது. ஓங்கி வளர்ந்து வளைந்த விளக்குகள், கழுவி விடபட்ட தார்ச்சாலையில் தெரிவது தான் மழைக்காலத்தின் முதல் முகம் பார்த்தல். இரவு நகரத்தின் வண்ணங்களை மழையே எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது, ஈரமாக. சாலையின் ஒவ்வொரு சின்னக் குட்டையிலும், அத்தனை விளக்கும் விழுந்து செல்கிறது. சிக்னல் சிகப்பு, மெதுவாக வழிந்து சொட்டென விழுகிறது. தட தடவென அதிருகிற காரின் கண்ணாடியில், சின்னச் சின்னதாய் சோடியம் வேப்பர் துளிகள். ஒழுக ஒழுக, ஒரு விளக்கும் தீர்ந்து போவதில்லை. மஞ்சளும் பச்சையும் கொண்டு பெய்யுது மழை என்பதின் அர்த்தம் அன்றே புரிந்தது.

*****

பேசி பேசி வார்த்தைகள் தீர்ந்து போவதேயில்லை. அலைபேசியில் கதைத்து விட்டு, வீட்டுக்குள் நுழைந்ததும் நான் பேசிக் கொண்டேயிருந்தேன். தொலைக்காட்சி கவனம் இழந்தது. அடுத்து பேசுவதற்கு ஆயிரம் இருக்கிறது. தொலைக்காட்சி இரைச்சலை குரல்களும், சிரிப்பொலிகளும் ரம்மியமாக்கிக் கொண்டு இருந்தன. இன்று நான் இப்படித்தான். இன்று இரவு முழுதும் ஒரு இசையாக கசியப் போகிறேன் என்று தெரியும். நாளைய காலைப் பொழுதில், ஜன்னல் இருக்கையில், ஒரு புத்தகம் என்னை புரட்டும். நாளெல்லாம் ஒரு திரைப்படக் காட்சியின் நினைவிலேயே கழியும். அன்பர்கள், நண்பர்கள், கவிதைகள், கனவுகள், இசை, புத்தகம், திரை என எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறிந்துகொண்டே வருகிறேன். ஒரு வெற்றியின் மகிழ்ச்சியை தரவல்ல புரிதல் அது. மீண்டும் மீண்டும் இதை அசை போடுகையில், அது நிகழ்ந்தே விடும். எண்ணங்களில் பெரும் வெறுமையும், சிந்தனைகளோ சிரிப்புகளோ அற்று, என் ஜன்னல் கதவு எல்லாம் அடைத்து கொண்டு, இதுவரை ரசித்த அத்தனையையும் ஒதுக்கி விட்டு, ஆழ்ந்த மௌனத்தில் கழியும் ஒரு மாலைப் பொழுதோ, இரவுப் பொழுதோ வந்தே விடுகிறது. யாரையும் எதையும் மறுக்கக் கூடிய ஒரு தனிமை. இரவை பின் தொடரும் பகல் போல, அது என்னை தொடர்ந்து கொண்டே வருகிறது. நெடுஞ்சாலையில் விரைகையில், எத்தனை சீராக தெருவிளக்கு கடக்குமோ, அத்தனை சீரான இடைவெளியில், நான் அவனை சந்திக்கிறேன். என்னில் இன்னும் நான் கண்டறியாமல் விட்டிருக்கிற நான். அவனை மீண்டும் சந்திக்காமலே போனால், வாழ்க்கை ஒரு வேளை பூரணம் ஆகலாம்.

Written by aravind

December 9, 2008 இல் 3:23 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. //நீளமாகவும் நீலமாகவும் விரியும். வரிசையாக வந்து விழும் வார்த்தைகள், சட்டென நிற்கும் போது, இதுவரை எழுதியதை கொஞ்சம் வருடிப் பார்த்துவிட்டு, பாதியில் பாடுவது நின்றதும் நிறுத்திய இசைக் கலைஞன் போல காத்துக் கொண்டிருப்பேன். அடுத்த வார்த்தை வந்து விழுந்ததும், மீண்டும் இசை தொடங்கும். அது, குளத்தின் அமைதியை கலைக்கும் சின்னச் சின்னக் கற்களின் ‘ப்ளக்’ ‘ப்ளக்’ ஓசையாகவும் இருந்திருக்கக்கூடும். அந்த ஓசை குளத்தினுடையதா? கல்லினுடையதா?//

    இதற்காகவே உன்னை எவரேனும் காதலிக்கலாம்! அல்லது அதுதான் இதற்கு காரணமான்னு தெரியலை! ஏகாந்தமான தருணங்களை நினைவூட்டக்கூடிய சொல்லாடல். அற்புதம்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    venkatramanan

    December 10, 2008 இல் 3:06 மு.பகல்

  2. அரவிந்த,
    என்னங்க இது. !!!

    கவிதை நயத்தில்…
    //இதுவரை ரசித்த அத்தனையையும் ஒதுக்கி விட்டு, ஆழ்ந்த மௌனத்தில் கழியும் ஒரு மாலைப் பொழுதோ, இரவுப் பொழுதோ வந்தே விடுகிறது//

    நீங்க என்ன மனநி்லையில இந்த இடுகையை எழுதினீங்க? ஒண்ணுமே புரியலையே!

    ஜோன்சன்

    December 21, 2008 இல் 11:31 மு.பகல்

  3. வெங்கட்,

    தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிக்கவும்.

    கேட்பதற்கு எவ்வளவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ;) ;)

    மிக்க நன்றி வெங்கட்.

    ஜான்சன்,

    ஒரு சின்ன அலுப்பைத் தான் அப்படி சொல்லியிருந்தேன். பயப்பட வேண்டாம் ;)

    aravind

    December 27, 2008 இல் 6:07 மு.பகல்


மறுமொழி இடுக