Archive for டிசம்பர் 2008
நிற்பதுவே நடப்பதுவே
மாடிப்படி இருளில் மூழ்கியிருந்தது. தட்டுத் தடுமாறி குத்துமதிப்பாக நடந்து விக்ரம் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றேன். பின்பு தான் மொபைல் ஞாபகம் வந்தது. அதை எடுத்து, அதன் சின்னப் புன்னகையில் காலிங் பெல்லை தேடி அடித்தேன். மணி இரண்டே முக்கால். அதிகாலை.
எதிர் ஃப்ளாட்டை திரும்பி பார்த்துக் கொண்டேன். சத்தம் கேட்டு வந்துவிடக் கூடாது. அதிகாலையில் அநாவசியமாக தூக்கம் கலைப்பது மகா பாவம். மொபைல் எடுத்து விக்ரமின் நம்பரை அழைத்தேன். பதிலே காணோம். படுபாவி, இப்படி படுத்துகிறான். காலிங் பெல்லையும் மொபைலை சேர்த்து அழுத்தினேன். பலமுறை.
பத்து நிமிடங்கள் கழிந்து பலன் கிடைத்தது. விக்ரம் மொபைலை எடுத்து பேசினான். ‘ஹழோ’. அந்த கடைசி ‘ழோ’ முடிவே இல்லாமல், நாராசமாக நீண்டது. மொபைல் வழியாகவே விஸ்கி நாற்றம் அடிப்பது போல எனக்குப் பட்டது.
‘டேய், விக்ரம். நான் தான் கண்ணன். கதவ திற’.
முழுத்தொண்டையில் கத்தியும், அடித்தொண்டையில் கெஞ்சியும் பிரம்மப்பிரயத்தனப் பட்டு அவனுக்கு புரியவைக்க வேண்டியிருந்தது. கதவை திறந்த விக்ரம், ரத்த சிவப்பான கண்களோடு தள்ளாடிக் கொண்டிருந்தான். பயங்கர விஸ்கி நாற்றம். அவனை உள்ளே மெதுவாய் தள்ளியபடி நுழைந்து வேகமாக இயங்கினேன். அவனின் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு, டிவி லைட்டு கேஸ் எல்லாம் அணைத்து சரிபார்த்து விட்டு, அவனை இழுத்துக் கொண்டு புறப்பட்டேன். என் மேல் முழுதுமாக சரிந்திருந்தான். ஜிம் உடம்பு. அவன் காதலிக்காக பார்த்து பார்த்து ஏற்றிய உடம்பு. இப்போது மில்லி மில்லியாக ஏற்றுகிறான். காதல் தோல்வியாம். இழுத்துக் கொண்டு காருக்கு திரும்ப வருவதற்குள் மூச்சு பலமாக வாங்க ஆரம்பித்து விட்டது. சிவப்பு நிற ஸிவிஃப்ட். மிடில் க்ளாஸ் குடும்பத்தின் முதல் ஐ.டி. பாய்ச்சல் சாத்தியப் படுத்தியிருந்த வளம்.
விக்ரமும் என்னைப் போல தான் – குணம், நிறம், வேலை எல்லாம். ஆத்ம நண்பன். இந்த திடீர் காதல் தோல்வி, குடிப்பழக்கம் எல்லாம் அவனை என்னிடமிருந்து கொஞ்சம் பிரித்திருந்தது, ஹைவேயிலிருந்து சட்டெனப் பிரியும் சின்ன சாலை போல.
காரை கிளப்பியதும் ஒரு விதமான சாகச உணர்வு ஏற்பட்டது. நடு இரவு ஒரு மணிக்கு அழைத்து சாகப் போவதாக முழு போதையில் விக்ரம் அழுத போது, அவனை மறுபடி பார்ப்பேன் என்றே நினைக்கவில்லை. நேற்று மாலை முதல் வட சென்னை முழுக்க முடங்கி கிடக்கிறது. ரவுடிகள் மோதல், அரசியல்வாதிகளின் பின்பலத்தோடு களைகட்டியிருந்தது. நடு ரோட்டில் கொலை நடந்து நிலைமை மோசமாகி, நாளை ஆளும் கட்சியே பந்த் அறிவித்திருக்கிறது. நாளை மாலை வரை ரோட்டில் ஒரு ஈ காக்காய் கொசு எதுவும் இருக்காது. அப்பாவும் அம்மாவும் ஒரு நாள் வேலையாக விழுப்புரம் போனவர்கள், கலவரம் காரணமாக அங்கேயே தங்கி விட, நினைத்ததை உடனே செய்ய முடிந்தது. இதோ, மனசு நிம்மதியாக, தாம்பரத்தில் இருந்து கிளம்பியாயிற்று. விக்ரமை ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டேன். வானத்தை அண்ணாந்து பார்த்து தலையை கிடத்தியிருந்தான். ஏதோ அர்த்தமுள்ள உளறல் வேறு.
அவனைப் பார்த்து விட்டு தலையை திருப்புகையில் தான் அவரைப் பார்த்தேன். லிஃப்ட் கேட்பது போல கை காட்டினார். மந்திரத்துக்கு கட்டுப்பட்டாற் போல அவரருகே நிறுத்தி விட்டேன். மிகச்சில நொடிகளில் நடந்துவிட்டது.
இடுப்பு வரை தான் தெரிந்தார். தலையை குனிந்து உள்ளே பார்த்து ‘கிண்டி வரை’ என்றார். சாம்பல் நிற சட்டை. கோட்டு போல இருந்தது. ‘சரி’ என்று தலையசைத்தேன். பின்னால் ஏறிக்கொண்டார்.
‘சரியான முட்டாள்த்தனம் கண்ணா’ என்று என் குரல் எனக்கே கேட்டது. விக்ரம், ‘கழெக்டுடா’ என்றான்.
மேல் கண்ணாடியில் அவர் தெரியவில்லை. கொஞ்சம் நகர்த்தலாமா என்று நினைத்தேன். வேண்டாம், ரொம்ப அநாகரிகமாக இருக்கும்.
என்ன கேள்வி கேட்கலாம்? என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா? எங்கே போகிறார்? கேள்விகள் மூளையிலிருந்து தொண்டைக்கு பிங் பாங் பால் போல போய் போய் வந்தது. சத்தம் மட்டும் எழவேயில்லை.
இந்த அகால நேரத்தில், அசந்தப்பர்பமான சூழ்நிலையில், பொடிநடையாக போவது சாத்தியமே இல்லை. சரி, சாத்தியம். ஆனால், சரியான முட்டாள்தனம். அப்படி என்ன தலை போகிற வேலை. ஐயோ, யார் இவர்? சரேலென திருப்பத்தில் திரும்பி ஜெர்க்காகி நின்றது வண்டி. முன்னே நாலு சாலைத் தடுப்புகள் மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டு, வழியை முழுதாக அடைத்துக் கொண்டு நின்றது. வரும்போது இல்லையே?
காரிலிருந்து இறங்கி நடந்தேன். கிட்டே வந்து பார்த்தேன். காரின் பின் கதவு திறக்கும் ஓசை. அதிலிருந்து ஒரு ஷூவின் ஓசை பிரிந்து, என்னை நோக்கி வந்தது.
அவரை திரும்பிப் பார்த்தேன். சாம்பல் நிற சட்டை, முழங்கால் வரை சுடிதார் போல நீண்டு இருந்தது. கோட்டு போல நல்ல கணம். வெள்ளை பேண்ட். இது என்ன உடையோ? அவர் என்னிடம் வந்ததும் கீழே பார்த்தார். நல்ல கூரான மூக்கு. கைகளை பின்னால் கட்டியிருந்தார். ஐம்பது வயதிருக்கும்.
நான் ஒன்றை அகற்ற முயன்ற போது கொஞ்சம் தடுமாறி விட்டேன். எதிர்பார்த்ததை விட நல்ல கணம். சமாளித்து அகற்றி முடிக்கும் போது, அவர் என்னை விட்டு சாலையோரமாக நடந்து சென்றிருந்தார்.
ஆவிகளால் திடப்பொருட்களை கைகளால் தொடவோ எடுக்கவோ முடியாது என்ற தமிழ் சினிமா உண்மை முக்கியச் செய்தியாக மனசுக்கடியில் ஓடியது. ராம்கியோ யாரோ, ஆவேசமாக உற்சாகப்படுத்த படுத்த, வெள்ளையுடை ஊர்வசி ஒரு டைம்பாமை எடுக்க முயற்சிப்பது நினனவுக்கு வந்தது.
நான் மூச்சைப் பிடித்து மிச்சம் மூன்றையும் அகற்றி முடித்து விட்டு, அவரைப் பார்க்காமல், காருக்கு வந்து கதவை திறந்து அமர்ந்து கொண்டேன். கார் கதவை நன்கு அறைந்து சாத்தினேன்.
அவர் திரும்பாமல், அங்கிருந்த ஒரு காந்தி சிலையை பார்த்துக்கொண்டிருந்தார். கைகளை பின்னாலேயே கட்டியிருந்தார். பெரிய மகாராஜா.
‘போகலாமா’ – சத்தமாக கேட்டேன். குரல் கேவலமாக நடுங்கியது.
திரும்பிப் பார்த்த அவர், சிலையை மீண்டும் ஒரு தடவை பார்த்துக் கொண்டார். கடிகாரத்தைப் பார்த்தார். விறு விறுவென நடந்து வந்தார். மிதமான ஷூ ஓசை.
கார் கிளம்பியது. ஏதேதோ எண்ணங்கள் கவனம் கலைத்தன. அவரிடம் பேச வேண்டாம் போல இருந்தது. வேர்வையும் சின்ன வியப்புமாக நிமிடங்கள் கழிந்தன.
‘நான் இறங்கிக்கிறேன்’. ஆ, கிண்டி வந்துவிட்டதா? வண்டியை மிதப்படுத்தி நிறுத்தினேன்.
இறங்கி முன்பக்கம் வந்து, குனிந்து ‘நன்றி’ என்றார். ‘தட்ஸ் ஓகே’ என்றேன். விக்ரம் வானத்தை பார்த்து, ‘எங்கழா, காணோம்’ என்றான். அவர் சின்னதாய் புன்னகைத்தார். நல்ல வசீகரமான புன்னகை. ஒரு மாதிரி ‘போங்கள்’ என்று தலையசைத்தார்.
அழுத்தத்திலிருந்து க்ளட்ச்சும் மனசும் மீண்டது. கார் வெண்ணையாக வழுக்கிக் கொண்டு சென்றது.
எதுவும் விபிரீதமாக நடக்கவில்லை. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்றெல்லாம் அபத்தமாக நினைத்தேன். என்னை நானே ஆசுவாசபடுத்திக் கொள்வதும், பாராட்டிக் கொள்வதுமாக கலைந்திருந்த எண்ணங்கள், வேகமாக ஒரு ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறியதும் ஒன்றாக குவிந்தன. விக்ரம் என் பக்கமாக திரும்பி, ‘நேரு சிலை எங்கழா காணோம்?’ என்றான்.
கார் க்ரீச்சென நின்றது. எனக்கே தெரியாமல்.
அவர் நேரு சிலை அருகே தான் இறங்கிக்கொண்டார். சிலை அங்கிருந்ததா இல்லையா? அவநம்பிக்கையோடு விக்ரமை பார்த்தேன். கையை என் பக்கம் நீட்டி, ‘வேர் ஈஷ் இட்?’ என்று கேட்டான்.
எனக்கு மீண்டும் வேர்த்தது. ஸ்டியரிங்கையே உற்றுப் பார்த்தேன். நொடிப்பொழுதில் அரைவட்டம் போட்டு திரும்பியது கார்.
அவரின் உடை, புன்னகை எல்லாம் திரும்ப திரும்ப ஞாபகம் வந்தது. காந்தி சிலையை பார்க்கிறார். ஹூ சத்தம் கேட்கிறது. புன்னகைக்கிறார். அவர் தமிழில் தானே பேசினார்?
சிலைக்கருகே வந்ததும் மேலே எவ்வளவு கண்களை உயர்த்திப் பார்க்க முடியுமோ பார்த்தேன். சிலை தெரிந்தது. காரை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தேன். சிலை அங்கேயே இருந்தது, பத்திரமாக. மூக்கின் நுனியில் நிலா நின்றிருந்தது.
ஒரு மாதிரி படப்படப்பாக இருந்தது. நேருவின் தலை இப்போது திரும்பும, அலறியடித்துக் கொண்டு ஓடப்போகிறோம் என்று நினைத்தேன். விக்ரமின் உளறல் காரில் இருந்து கேட்டது.
சிலையை மீண்டும் பார்த்துக் கொண்டு திரும்பினேன். கார் பறந்தது. நூறுக்கும் மேலே.
இன்னும் ஐந்தே நிமிடம், வீட்டுக்கு போய்விடலாம். எங்கும் நிறுத்த வேண்டாம். ஒன்றும் பிரச்சினையில்லை. பயமெல்லாம் வேண்டாம்.
அஷோக் நகர் திரும்பி கவனமேயில்லாமல் ஓட்டினேன். கோடம்பாக்க ரோட்டில் திரும்புகையில் அங்கு இருக்கும் அம்பேத்கர் சிலை மைக்ரோ செகண்ட்டில் ஞாபகத்தில் வந்தது. என்னையுமறியாமல் வண்டியை மிதப்படுத்தி விட்டு குனிந்துப் பார்த்தபடி இருந்தேன். கார் நகர்ந்து கொண்டே இருந்தது. சிலையின் பீடத்தில் சோடியம் வேப்பர் வெளிச்சம் குவிந்து பளிச்சென இருந்தது, இப்போது தான் துடைக்கப்பட்டது போல. வண்டி திரும்பிவிட்டது.
பிரமை, பிரமை, எல்லாம் பிரமை. ஒன்றுமில்லை.
சாலை காலியாக இருந்தது. தொண்டையில் ஏதோ பிரச்சினை பட்டது. உடம்பு சரியில்லை போல் இருந்தது. வீட்டுக்கு போய் சேர வேண்டுமடா சாமி.
கொஞ்சம் நகர்ந்ததும் சாலையோரமாக யாரோ நடந்து செல்வது போல இருந்தது. ஓரக்கண்ணில் தான் பார்த்தேன். கோட்டு சூட்டு அணிந்திருந்தது போல இருந்தது. தலை வழுக்கையில் சோடியம் வேப்பர் பிரகாசித்தது. கையில் புத்தகம் போல ஏதோ ஒன்று.
கார் பெரும் உறுமலுடன் பறந்தது.
*******************************************************************************************************
அலுவலகத்தில் நடக்கும் Mystery Short Story Contestக்காக எழுதியது.
சிறுமழை 100
முதலில், கடந்த சில வாரங்களில் தாங்கள் தந்த மறுமொழிகளுக்கு உடனே பதிலளிக்க முடியாமல் போனதற்கு என் வருத்தங்கள்.
இது சிறுமழையின் நூறாவது பதிவு.
கமர்ஷியல் சினிமாவைப் போல கொண்டாடப் போவதில்லை என்றாலும், இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில், இந்தப் வலைப்பூவை துவங்கி மூன்று வருடங்கள் ஆகப்போகின்றன. மூன்று வருடங்களாக என்னுடைய ஆர்வத்தை தொடர்ந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது என்றால், அது என்னால் மட்டும் இயன்ற விஷயமில்லை. முகம் தெரியாத பல அன்பர்கள், மறுமொழிகள் மூலமும், வருகையின் மூலமும் தந்த ஊக்கமே.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து என்னுடன் பயணம் செய்துகொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள். 17 ஆயிரம் வருகைகளுக்கான காரணமான ஒவ்வொருக்கும் என் நன்றிகள்!
கவிதைகள் மட்டும் என்று துவங்கி விட்டு, இன்று நான் எழுதியிருக்கிற விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து கவிதைகள், கதைகள், இசை, திரை, உலக சினிமா, நாட்டு நடப்பு, மரத்தடி போன்ற இளைப்பாறல்கள் தொடரும்.
தொடர்ந்து எழுதுவேன். தொடர்ந்து வருகை தரவும்.
மீண்டும் என் நன்றிகள்.
மரத்தடி
குளக்கரையில் அமர்ந்து சின்னச் சின்ன கற்கள் தேடி, கை போன போக்கில் எறிவது எப்படி இருக்கும்? ஒவ்வொரு கல் பறக்கும் போது, ஒரு எண்ணம் பறக்குமாய் இருக்கும். கற்கள் தேடும் வரை எண்ணம் ஓடாமல் நிற்குமாய் இருக்கும். நான் இதுவரை அப்படி செய்ததில்லை. அது இப்படி இருக்கலாம் என்று யோசிக்கும் போது எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் நினைவிற்கு வருகிறது. பள்ளிக்கூடத்தில், வெயில் கொளுத்தும் மதிய பொழுதுகளில், கன்னத்தில் கை வைத்து அமர்ந்தபடி, காதில் வந்து விழும் ஒவ்வொரு சொல்லாக கேட்டு கேட்டு நோட்டில் எழுதுவது, அழகாக; நிதானமாக. என் கையெழுத்தை நான் காதலித்தேன். மிகவும். ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன ஓவியத்தை கச்சிதமாக வரைவது போல எழுதவே ஆசைப்பட்டேன். காதில் புகும் வார்த்தை மூளைக்கு செல்லாமல், கைக்கு சென்று, நீளமாகவும் நீலமாகவும் விரியும். வரிசையாக வந்து விழும் வார்த்தைகள், சட்டென நிற்கும் போது, இதுவரை எழுதியதை கொஞ்சம் வருடிப் பார்த்துவிட்டு, பாதியில் பாடுவது நின்றதும் நிறுத்திய இசைக் கலைஞன் போல காத்துக் கொண்டிருப்பேன். அடுத்த வார்த்தை வந்து விழுந்ததும், மீண்டும் இசை தொடங்கும். அது, குளத்தின் அமைதியை கலைக்கும் சின்னச் சின்னக் கற்களின் ‘ப்ளக்’ ‘ப்ளக்’ ஓசையாகவும் இருந்திருக்கக்கூடும். அந்த ஓசை குளத்தினுடையதா? கல்லினுடையதா?
******
உச்சி வெயிலில் வானத்தில் பறக்கிற பறவைகளின் எண்ணிக்கை நிழல்களோடு சேர்ந்து இரட்டிப்பாகி விடுவது போல, மழை பெய்யும் இரவில் நகரின் தெரு விளக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விடுகிறது. ஓங்கி வளர்ந்து வளைந்த விளக்குகள், கழுவி விடபட்ட தார்ச்சாலையில் தெரிவது தான் மழைக்காலத்தின் முதல் முகம் பார்த்தல். இரவு நகரத்தின் வண்ணங்களை மழையே எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது, ஈரமாக. சாலையின் ஒவ்வொரு சின்னக் குட்டையிலும், அத்தனை விளக்கும் விழுந்து செல்கிறது. சிக்னல் சிகப்பு, மெதுவாக வழிந்து சொட்டென விழுகிறது. தட தடவென அதிருகிற காரின் கண்ணாடியில், சின்னச் சின்னதாய் சோடியம் வேப்பர் துளிகள். ஒழுக ஒழுக, ஒரு விளக்கும் தீர்ந்து போவதில்லை. மஞ்சளும் பச்சையும் கொண்டு பெய்யுது மழை என்பதின் அர்த்தம் அன்றே புரிந்தது.
*****
பேசி பேசி வார்த்தைகள் தீர்ந்து போவதேயில்லை. அலைபேசியில் கதைத்து விட்டு, வீட்டுக்குள் நுழைந்ததும் நான் பேசிக் கொண்டேயிருந்தேன். தொலைக்காட்சி கவனம் இழந்தது. அடுத்து பேசுவதற்கு ஆயிரம் இருக்கிறது. தொலைக்காட்சி இரைச்சலை குரல்களும், சிரிப்பொலிகளும் ரம்மியமாக்கிக் கொண்டு இருந்தன. இன்று நான் இப்படித்தான். இன்று இரவு முழுதும் ஒரு இசையாக கசியப் போகிறேன் என்று தெரியும். நாளைய காலைப் பொழுதில், ஜன்னல் இருக்கையில், ஒரு புத்தகம் என்னை புரட்டும். நாளெல்லாம் ஒரு திரைப்படக் காட்சியின் நினைவிலேயே கழியும். அன்பர்கள், நண்பர்கள், கவிதைகள், கனவுகள், இசை, புத்தகம், திரை என எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறிந்துகொண்டே வருகிறேன். ஒரு வெற்றியின் மகிழ்ச்சியை தரவல்ல புரிதல் அது. மீண்டும் மீண்டும் இதை அசை போடுகையில், அது நிகழ்ந்தே விடும். எண்ணங்களில் பெரும் வெறுமையும், சிந்தனைகளோ சிரிப்புகளோ அற்று, என் ஜன்னல் கதவு எல்லாம் அடைத்து கொண்டு, இதுவரை ரசித்த அத்தனையையும் ஒதுக்கி விட்டு, ஆழ்ந்த மௌனத்தில் கழியும் ஒரு மாலைப் பொழுதோ, இரவுப் பொழுதோ வந்தே விடுகிறது. யாரையும் எதையும் மறுக்கக் கூடிய ஒரு தனிமை. இரவை பின் தொடரும் பகல் போல, அது என்னை தொடர்ந்து கொண்டே வருகிறது. நெடுஞ்சாலையில் விரைகையில், எத்தனை சீராக தெருவிளக்கு கடக்குமோ, அத்தனை சீரான இடைவெளியில், நான் அவனை சந்திக்கிறேன். என்னில் இன்னும் நான் கண்டறியாமல் விட்டிருக்கிற நான். அவனை மீண்டும் சந்திக்காமலே போனால், வாழ்க்கை ஒரு வேளை பூரணம் ஆகலாம்.
பூ

மனதை மயக்கும் வாசம் வீசும் பெண்ணின் பேரன்பு தான் ‘பூ’.
சா.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை திரையில் வாழ்ந்து பார்த்திருக்கிறார்கள்.
சின்னப்பிள்ளைகளின் கையெழுத்தில் பெயர்கள் காட்டப்படுகின்றன, சிலிர்க்க வைக்கும் பிண்ணனி இசையுடன். ஸ்ரீகாந்த தவிர எல்லாம் புதுமுகங்கள்!
நாயகி மாரியின் இன்றைய சந்தோஷமான வாழ்க்கையை கொஞ்சம் காட்டிவிட்டு, நினைவுகளில் மூழ்கி விடுகிறார்கள். ‘பருத்தி வீரன்’ நமக்கு பழக்கிய அதே போன்று சிறு வயது பாசத்தை காட்டி விட்டு, பொறுமையாக மாரியின் காதலை விளக்குகிறது படம். ஒவ்வொரு செங்கல்லாக கட்டபடுகிற சின்ன வீட்டை போல, அடி மேல் அடியாக வளர்கிறது மாரியின் காதலும், படமும். நாயகன் தங்கராசு பட்டணத்திலிருந்து வந்ததும், எதார்த்தமான திருப்பங்களுடன் பயணித்து, மனசைப் பிசையும் பெருமூச்சுடன் நிற்கிறது.
சசிக்கு தான் முதல் ஷொட்டு! நாவல்கள் திரைக்குள் திணிக்கும் முயற்சிகளே தமிழில் பிரபலமாகாத காலத்தில், சிறுகதையை தேர்ந்தெடுத்த துணிச்சலுக்கு சலாம்! (நல்ல திரைப்படங்களுக்கு, சற்றே பெரிய சிறுகதைகள் போதும் – சத்யஜித் ரே.)
மாரியின் காதலை செதுக்கு செதுக்கு என செதுக்கியிருக்கிறார்கள். வெகுளித்தனம் பொங்கி வழிகிற பெண்ணின் மனதில் அழுத்தமாக இருக்கும் காதலை, கள்ளிப்பழம், ஜோடிப் பனைமரம், செல்ஃபோன் என ஸ்பஷ்டமாக சொல்லியிருக்கிறார்கள். ‘தங்கராசுக்கு பொண்டாட்டியாகப் போகிறேன்’ என்று வெகுளியாக எழுந்து சொல்லும் சின்ன வயசு மாரியும், பின்னாளில் அப்படியே திரியும் பெரிய வயசு மாரியும், பிரம்மிப்பூட்டும் syncஇல் இருக்கிறார்கள். (வகுப்பில் பையன்கள் எல்லாம் ‘என்னவாகப் போறே?’ கேள்விக்கு தங்குதடையில்லாமல் வாயாட, சிறுமிகள் மருண்டு நிற்பது, செம சாட்டையடி!)
பாதிக்கு மேல் படம் மாரியுடனே நகர்வதால், ஒரு கட்டத்துக்கு மேல் லேசாக அலுப்பு தட்டுவது நிஜம். ஆனால், விடாமல் கவிதை சொல்லி கலங்கடிக்கிறார்கள்!
இது தான் சசியின் நிஜமான ‘ரோஜாக்கூட்டம்’! நாலாவது படத்தில் நல்ல நேர்த்தி கண்டிருக்கிறார். அசாத்தியமான தைரியம் கொண்டு அசத்தியிருக்கிறார்.
பார்வதி மேனன், என்னமாய் நடிக்கிறார்?! இந்தக் காட்சி, அந்தக் காட்சி என்று சொல்ல முடியாத வண்ணம், சின்னச் சின்ன நுணுக்கங்கள் பயின்று, ஒரு காட்சி விடாமல் முத்திரை பதிக்கிறார். அதிரடி ஆடைக்குறைப்பினால் ஹாலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறக்கத் துடிக்கும் தமிழ் ‘நடிகைகளுக்கு’ மத்தியில், அபாரமான உழைப்பை கொட்டியிருக்கிறார். மேக்கப் கண்டினியுட்டியை கவனித்திருக்கலாம். ஒரு கட்டத்தில் அவர் மீது காதலே வந்துவிடுகிறது! விருதுகளுக்கு மேலாக, மக்கள் மனசில் இடம் நிச்சயம் உண்டு!
பார்வதி மேனன் தான் படத்தின் பூ, வேர் எல்லாமே! பலே பொண்ணு!
ஸ்ரீகாந்த்துக்கு அடுத்த ஷொட்டு! ஹீரோவின் அனல் பறக்கும் எண்ட்ரிக்கே பாதி கதை டிஷ்கஷன் நடத்தும் காலத்தில், பாதி படத்துக்கு மேலே வரும் தைரியம், ரொம்ப புதுமை. ஆனாலும், நாலு வருஷ பட்டணப் படிப்பு இப்படியா கொஞ்சமும் மண் வாசணையில்லாமல் ஒரு ஆளை மாற்றிவிடும்? இப்படி கொஞ்சமும் ஒட்டாமல் நிற்கிறார்!
காமெடியை தனியாக வைக்காமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் டீக்கடைக்காரர் பல இடங்களில் சிரிக்கவைக்கிறார்.
துணை நடிகர்களை அசத்தலாக உலாவ விட்டது இன்னொரு பளிச். மாரியின் அம்மா, தங்கராசுவின் ‘பேனாக்காரர்’ அப்பா, டீக்கடைக்காரர், மாரியின் அண்ணா எனப் பல முகங்கள், யதார்த்தமாக மனசில் நிற்கிறார்கள். தீனிப்பண்டாரச் சீனி, இன்னும் அழகு. முதல் பாட்டில், மாரியுடன் வருகிற இனிகோ, களையான தமிழ் முகம். ஃபோர்மேன் பக்க நியாயம் எல்லாம் பேசிக் கேட்கும் போது, தமிழ் சினிமா தானா என்று ஆச்சரியமாக இருக்கிறது!
வன்முறை, எதிர்மறை எண்ணங்கள் எதுவும் இல்லாமல் மிக இயல்பாக இருக்கிறது படம். அதனாலயே, அதிகாரம் செய்கிற அலட்டல் மனைவி கொஞ்சம் நெருடுகிறார். ஆனாலும், அந்தக் காட்சி, கண்களில் குளம்!
புதுமுக இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் நிறையவே நம்பிக்கை தருகிறார். பிண்ணனி இசையும் ரொம்ப பொருத்தம். ‘ஆவாரம் பூ’ மெட்டை பிண்ணனி இசையாக கேட்கையிலெல்லாம், சிலிர்க்கிறது! ‘மாமன் எங்கிருக்காக’ பாட்டில் ஹரிணி பட்டையைக் கிளப்புகிறார்.
முத்தையாவின் காமிரா கனவுகளுக்கு நல்லத் தீனி. பாஸு, அந்த சோளக்கதிர் ஷாட்டு உலகத் தரம். அந்த கொய்யாக்காய் ஷாட், மோசமான ரசனை!
கிராமத்து படங்கள் என்றாலே சின்னவயசுக் காதல் என்று போனது கொஞ்சம் அலுப்பு என்றாலும், கடைசி ரீலில் திடுக்கிட வைத்து காவியம் எல்லாம் ஆக்காமல், சராசரி வாழ்க்கையாக சொன்னதில் வேறுபட்டு நிற்கிறது படம்.
இத்தனை அழகான இடத்தில் ‘இடைவேளையும்’, ‘வணக்கமும்’ வந்து ரொம்ப நாளாச்சு!
குறைகளை எல்லாம் சட்டை செய்யாமல், தாராளமாக கொண்டாடலாம். ‘பூ’, இந்த வருடத்தின் தமிழ் சினிமா!





கடவுள் 24 X 7
நல்லவர்களின் மரணத்திற்கு
கடவுள் அழுவார்
என்றறிவித்தவனின் தெருவில்
அதிகாலை மழையாகப்
பெய்ய வேண்டும்.
நூறு சதுர அடி அறையில்
கை மறதியாக வைக்கப்பட்ட
பத்து பைசாக்களின் மீது
பட்டப் பகலில்
விளக்கடித்து காட்ட வேண்டும்.
பரிதவித்து நிற்பவர்களுக்கு
தெய்வக்களை கொண்ட யாரோவாக
உதவி செய்ய வேண்டும்.
மயிரிழையில் உயிர் தப்பியவன் முன்
பிரகாசப் பேரொளியாக
அருள வேண்டும்.
கெடு முடிவதற்கு சற்று முன்னர்
நிறைய நிகழ்த்த வேண்டும்.
விழுந்து விழுந்து படிக்கப்பட்ட
முக்கிய கேள்வியாக
கேள்வித்தாளில் கறுப்பாகச் சிரிக்க வேண்டும்.
அதிக வேண்டுதலுக்கு உட்படுத்தபட்டிருக்கும்
பழுத்து தொங்கும் ஆப்பிள் பழத்தை
கிருபையின் மூலம்
கீழே வேறு விழ வைக்க வேண்டும்.
இத்தனைக்கும் நடுவில்
கவனிக்க முடிவதில்லை
பிரார்த்தனைகளுடன் மலையேறும் போது
கழுத்தில் மிதிபட்டு
இறக்கும் மக்களையும்
யாரோ தவற விட்ட பையை
எடுத்தோடி செல்லுகையில்
வெடித்துச் சிதறும் பிள்ளைகளையும்.