சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for நவம்பர் 2008

தேநீரில் சிநேகிதம் – 3

9 மறுமொழிகளுடன்

சிப் #1: போன வருடம் போலவே இந்த வருடமும், தீபாவளி விடுமுறைக்கு முதல் நாள் சென்னை அல்லோல கல்லோலபட்டது. பழைய பற்பசை ட்யூபை பிதுக்குவது போல, சென்னையின் வாயில்களில் வாகனங்கள் பிதுங்கின. அன்று பார்த்து தமிழக அரசின் மனிதச் சங்கிலியும் வானத்தையும் பூமியையும் இணைக்கும் மழைச்சங்கிலியும் கரம் கோர்க்க, சென்னைக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. “நான் ஊருக்கு போறேனே” என்று ஸ்மைலி ஸ்மைலியாக சிரித்து விட்டு போன ஜோ, இன்ச் இன்ச்சாக வேளச்சேரியில் நீந்திக்கொண்டிருப்பதாக அலைபேசியில் அலறினான். ஏழு ஐம்பதுக்கு கிளம்பிய என் அலுவலக பேருந்து, மெகா சீரியல் கதை போல நகரமாட்டேன் என்று அடம்பிடித்தது. வழியெங்கும் முகங்கள், முகங்கள், முகங்கள். சோகமான, பதற்றமான முகங்கள். புதுச்சேரி பேருந்து ஒன்றில் பெரியவர் ஒருவர் ‘இதற்க்கெல்லாம் காரணம் யார் தெரியுமா’ என்ற பாவத்தோடு யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். ஆற்காடு வீராசாமியாக இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. என் அலுவலக நண்பர் ஒருவர் எப்போதும் ‘உன்னை அடிக்கடி இங்கே பார்க்கிறே’ சிரிப்பு மட்டுமே சிரிப்பார். பேச மாட்டார். அன்று அவர் என்னிடம் ‘என்ன சார் இது’ என்று ஒரு வழியாக பேசிவிட்டார். ‘கோலங்கள்’ முடிந்ததும் அம்மா அழைத்து நிலவரம் கேட்டாள். அத்தனை களேபரத்திலும் அலுக்காமல் ஜல்லியடித்துக் கொண்டிருந்தது பண்பலைகள் மட்டுமே. பத்து பத்து நிமிட இடைவெளிகள் விட்டு, பாடல்களை வரிசைபடுத்தி விட்டு கண்ணியில் ஏற்றியிருந்த வானொலி நிலையம் அறிவிப்பாளர் எங்கோ மீன் பிடித்து கொண்டிருக்க ‘பப்பரப்பரப்பா’ என்று எதையோ இசைத்துக்கொண்டிருந்தது. வழியில் ஒருவர் மடிக்கணினியில் (க)சக்கரகட்டி படம் பார்த்துக் கொண்டிருந்தார். நிலைமை அவ்வள்வு மோசம். வெற்றிகரமாக வீட்டுக்கு போன போது மணி பதினொன்று. வரப் போகிற வருடங்களில் நமக்கு நாமே வைத்துக்கொள்கிற பெரும் வேட்டு – போக்குவரத்து நெரிசல்.

#2: இலங்கை பிரச்சினையில் நமக்கு எத்தனை சங்கடம். ஈழத்தமிழர்களை ஆதரித்தல் என்பது புலிகளை ஆதரித்தல் என்பதாகி விடுகிறது. புலிகளை எதிர்த்தல் தமிழர் நலனுக்கு எதிராதனதாகி விடுகிறது. அங்குள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னர், நாம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண வேண்டும். அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை. எத்தனை எத்தனை கிளைப் பிரச்சினைகள், நாடகங்கள்! எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக தமிழக மக்களை பிரதமருக்கு தந்தி அனுப்ப சொன்னது, மிகுந்த நகைப்பிற்கு உரியது. அது மின்வெட்டை மறக்க உதவாது ஐயா! இன்னும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம். நடிகர் விஜய் ‘சார்’ , தனது ரசிகர்கள் வைத்து தனியாக உண்ணாவிரதம் நடத்தியதோடு, பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளாராம். அதைக் கேட்ட நிறைய சிறுவர் சிறுமிகள் தந்தி அனுப்பியதாக நாளேடுகளில் புகைப்படங்கள் வந்திருந்ததை பார்த்த போது எனக்கு பீதி கிளம்பியது. நீங்க 2016 ஆங்ணா?

#3: தமிழ் அகராதியில் புதிய வார்த்தைகள் சேர்ப்பது எப்படி என்று தெரியவில்லை. நான் அவசரமாக ‘உள்குத்து’ என்ற வார்த்தையை சேர்க்க விரும்புகிறேன். நல்ல அர்த்தச் செறிவு இருக்கிறது அதில். பயன்படுத்துவதற்கு இலகுவான கவர்ச்சியான அம்சம் எதுவோ அதில் இருக்கிறது. இல்லையா? என்னுடன் இந்த வார்த்தை அதிகமாக தொடர்புபடுத்த படுகிறது. ‘உள்குத்து அரவிந்தன்’. எப்படி இருக்கிறது?

#4 – சமீப காலங்களில் நான் மிகவும் ரசித்த தலைப்பு செய்தி- Sachin Scales 12K, Sensex Dives Below 10K (Times of India, October 18). அந்தக் கட்டுரையில் வந்த ஒரு வாக்கியம்.- You may not know a thing about cricket, but you know about Sachin—and you may not know a thing about the stock market, but you know about the sensex.

#5: அமெரிக்க தேர்தல் உலகெங்கும் இருக்கிற ஊடகங்களில் ஏற்படுத்துகிற சலசலப்பு, அந்த நாடு உலகத்தின் மீது ஏற்படுத்தியிருக்கிற ஆதிக்கத்தையே ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்தியாவின் இந்தத் தலைமுறையினர் நம் தேசிய அரசியலை விட அந்த தேர்தலில் ஆர்வம் காட்டுகிறார்கள். என்ன தான் நம் அரசியல் சாக்கடை என்று சாக்கு சொன்னாலும், என்னை பொறுத்தவரையில் இது வெட்கக்கேடான விஷய்ம். அதுவும் நம் ஊடகங்கள் அடித்த கூத்து சொல்லி மாளாது. அடக்கப்பட்ட இனத்தவர் ஒருவர் பெற்ற மாபெரும் வெற்றி என்பதையும் தாண்டி, அமெரிக்காஆஆஆஆ என்று வாய் பிளக்கிற மனோபாவம் தவிர இது வேறெதுவும் இல்லை.

#6: நல்ல சினிமா விமர்சகர்கள் தமிழ்நாட்டில் இல்லாதது எனக்கு பெரும் குறையாக இருக்கிறது. இந்திய அளவில் நான் கவனிக்கிற ராஜீவ் மசந்த் (CNN-IBN), ராஜா சென் (ரீடிஃப்), பரத்வாஜ் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஆகியோரைப் போல தமிழகத்தில் சினிமாவை பற்றி பரவசமாக பேசுகிற அலசுகிற ஆள் இல்லவே இல்லை. ‘ஹாய்’ மதன் கொஞ்சம் ஆர்வமில்லாமல் தான் செய்துகொண்டிருந்தார். அவரையும் இப்போது காணோம். நியாயத் தராசை வைத்து சுஹாசினி செய்வதெல்லாம் சுத்த போங்கு. பத்திரிக்கைகளில் மிக மோசமான விமர்சனம் ஹிந்துவில் வருகிறது (மாலதி ரங்கராஜன்). விகடனின் விமர்சனம் மட்டுமே பல சமயங்களில் நம்பும்படியாக இருக்கிறது.

#7: எதற்காக காசு கொட்டி பிரபல நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் பண்ணுகிறார்களோ? ஏர்டெல்லின் டிஜிடல் டீ.வி விளமப்ரத்தில் எத்தனை பிரபலங்கள் வருகிறார்கள் என்று போட்டியே வைக்கலாம். அவர்களை விட குழந்தைகளும் மாடல்களும் கவனம் ஈர்க்கிறார்கள் (சயிஃப், ஷாருக், கரீனா அனைவரையும் தாண்டி ‘ஐ மிஸ் யூ ஸோ மச்’ விளம்பரத்தில் அந்த தோழி சின்ன பாவனையில் அசத்துகிறார்). தங்கப்பல் வேண்டி மண்ணில் புதைக்கிற தங்கச்சியும், சிட்டிகை போட முயலும் சுருட்டைமுடி சின்னப்பையனும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. வங்கிகள் மிகவும் புத்திசாலித்தனமாக விளம்பரங்களுக்கு ஏன் குழந்தைகளை போடுகிறார்கள் என்று யோசிக்கவும்.

#8: இந்த வார பரிசு மூட்டை – நிறைய சேர்ந்துவிட்டது ;)

1. நல்ல தரமான கோதுமையில் செய்யப்பட்ட அல்வா – ரஜினிக்கு – ரோபோ ரிலீஸ் ஆகும் வரை பிய்த்து பிய்த்து தின்ன
2. இப்படியும் அப்படியும் பல்டி அடிக்கிற குரங்கு, பிடித்து கொள்ள வசதியான கயிறுடன் – தமிழக மின் வாரியத் துறைக்கு – கட்டண உயர்வு, பின்னர் வீடுகளுக்கு ரத்து, அடுத்த நாள் நிறுவனங்களுக்கு ரத்து.
3. பழைய பீம்சிங் பட டி.வி.டிக்கள் நாலு – 1000 ஊழியர்களை அதிரடியாக அனுப்பி விட்டு, தூக்கம் வராமல் தவித்த ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல்
4. பாடல் டெடிகேட் – ‘அடிக்கிற கை தான் அணைக்கும்’ – உமா பாரதி

Written by aravind

நவம்பர் 11, 2008 இல் 4:10 மு.பகல்

எண்ணங்கள், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

நிழற்காலம்

2 மறுமொழிகளுடன்

 

வானம் பார்க்கக் கிடைத்த

மாலைப்பொழுதொன்றில்

வெண்ணாரைக் கூட்டம் ஒன்று

தூரத்தில் பறந்து

நிறைவு செய்கிறது,

முன்பொரு நாள்

கருப்பு பறவைகள் கூட்டம்

பரந்து விரிந்த தார்ச்சாலையில்

விழுந்து விருட்டென நகர்ந்த

காட்சியொன்றை

Written by aravind

நவம்பர் 5, 2008 இல் 5:42 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

ஏகன்

4 மறுமொழிகளுடன்

பில்லா வெற்றிக்குப் பிறகு என்ன பண்ணலாம் என்று தல யோசிக்கும் போது, ஐங்கரன் இண்டர்னேஷனல்ஸ் Mein Hoon Na என்று சொல்லியிருக்கிறார்கள். பார்த்து பார்த்து தயாரித்து, உள்நாடு வெளிநாடு என அத்தனை தியேட்டர்களையும் பிடித்து வெளியிட்டிருக்கும் தீபாவளி விருந்து.

தனுஷின் ‘பரட்டை’ படத்தில் இயக்குனர் ஆக வேண்டிய ராஜூ சுந்தரம் அங்கிருந்து கம்பி நீட்ட, இந்த படத்திற்கு அவரை அமுக்கி பிடித்திருக்கிறார்கள். ஒரிஜினலை இயக்கியது நடன இயக்குனர் என்பதாலோ என்னவோ?

தள்ளுபடியில் எதைக் கொடுத்தாலும் வாங்கி விடுவது போல, ஹிட்டானால் எந்தப் படத்தையும் ரீமேக் செய்திவிடுவார்கள் போல. படத்தின் கதை சுத்தி சுத்தி அடிக்கிறது.

அதாகப்பட்டது, சுமன் ஒரு அதி பயங்கர வில்லன். அப்படித்தான் இந்த படத்தில் எல்லாரும் நம்புகிறார்கள். அவருக்கு ஒரு அதி பயங்கர அடியாள், தேவன். அவர் போலீஸில் சிக்கி அப்ரூவர் ஆவதாக வாக்கு தருகிறார். ஆனால் போலீஸின் பாதுகாப்பு பல்லிளித்து விட, உயிருக்கு பயந்து கம்பி நீட்டுகிறார். போலீஸ் கமிஷ்னர் நாசர், ஒரு புத்திசாலித்தனமான ஒரு ‘மிஷன்’ தீட்டுகிறார். தேவனின் மகள் ஊட்டியில் படிக்கிறார், அவரை நெருங்கி நட்பு பிடித்து வைத்து கொண்டால் தேவனை பிடித்து விடலாம். அதற்காக தன் மகனான சி.பி.சி.ஐ.டி அஜித்தை அனுப்புகிறார். இந்த ‘மிஷனு’க்குள் நாசருக்கு ஒரு பெர்ஸனல் விஷணும் இருக்கிறது.

அதாகபட்டது, அஜித் யாரிடமும் பேச மாட்டேன்கிறார். பழக மாட்டேன்கிறார். அவர் கல்லூரி சூழலில் பழகினால் சரியாகிடுவார் என்பது நாசரின் ஐதீகம். அஜித் கல்லூரியில் படிக்காமலே போலீஸானரோ என்ன கர்மமோ. பழகிப் போட்டு வாங்க வேண்டிய மிஷணும் பெர்சனல் விஷணும் டெட்லாக் ஆக இருப்பது ஸ்கிரிப்ட்டின் ஒட்டை. அது சரி, கூரையே இல்லாத வீட்டில் வாசல் இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன?

இந்த களேபரத்தில் நாசரும் அஜித்தும் எதிர்பாராத ஃபேமலி ரேஷன் ட்விஸ்ட்டும் சேர்ந்துகொள்கிறது, நாமெல்லாம் தூங்கிய பிறகு.

அஜித் ஸ்டுடெண்டா என்று படத்தில் அத்தனை காரெக்டரும் ஷாக் ஆகிறார்கள். எனக்கு தொப்பை இருக்கு ஒத்துக்கறேன் என்கிறார். நான் தனிமை விரும்பி, பேச மாட்டேன், நான் அப்படித்தான் என்றெல்லாம் சொல்கிறார். ஜோடி நம்பர் ஒன்னில் கெஸ்ட் பெர்ஃபாமெண்ஸ் கொடுக்க வந்தவர் போல ஜாலியாக இருக்கிறார். என்ன தல?

மீண்டும் ஸ்டுடெண்டை காதலிக்கும் புரட்சி லெக்ட்சரர் வேஷம் நயன்தாராவிற்கு. ரொம்ப யோசித்து பொருத்தமாக “கெமிஸ்ட்ரி” லெக்ட்சரர் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் அவரோ, தன் நடை உடை பாவனைகளில் ‘இந்த படத்துல நான் லெக்ட்சரராமே? அப்படியா?’ என்று நம்மையே திரும்ப கேட்கிறார்! ஆனாலும், லெக்ட்சரர் ஆக நடித்த பாவத்திற்கு ஒரே ஒரு காட்சியில் ஆவது கை வைத்த ப்ளவுஸ் போட்டிருக்கலாம்!

அட்லீஸ்ட், அஜித்-நயன் காதலையாவது சுவாரஸ்யமாக சொல்லக்கூடாதா? கேரக்டரே டெவலப் ஆகவில்லை, அதற்குள் கஜாகிஸ்தானில் டூயட் ஆடுகிறார்கள்.

பியா-நவ்தீப் ஈஷிக்கொள்கிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், பிரிகிறார்கள், சேர்கிறார்கள். நமக்கு தான் சொரனை இல்லையோ என்னவோ, ஒண்ணும் ஃபீலே ஆக மாட்டேன் என்கிறது.

ஜெயராம், சத்யன், ஹனிஃபா இவர்கள் செய்வது காமெடியென்றால் மற்ற தமிழ் திரை காமெடியன்கள் எல்லாம் சேர்ந்து அவர்களின் மீது மான நஷ்ட வழக்கு போடலாம். தியேட்டரில் சீரியஸ் ஸீனாக பார்த்து பார்த்து சிரிக்கிறார்கள்.

மேற்சொன்ன காமெடியன்கள் லிஸ்ட்டில் சுமனை சேர்ப்பதா வேண்டாமா என்று ராஜு சுந்தரத்தை தான் கேட்க வேண்டும். இந்த படத்தில் அவர் கொல்வது அதிகம் அவருடைய அடியாட்களைத் தான். அதற்கு அவர் ஃபீல் வேறு பண்ணுகிறார். ஸ்ரீமன் பற்றி நாம் பேசாமல் இருப்பது தான் நல்லது. சுஹாசினியை நியாயத் தராசில் வைப்பதற்குள் காணோம்.

படத்தின் உச்ச கட்ட காமெடியைக் கேளுங்கள். காலேஜுக்கு போன அஜித் தேவனை தேடவே காணோம். க்ளைமாக்ஸ் வரை பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு, தேவனே காலேஜுக்கு வந்து, அஜித் யாரென்று தெரியாமல் அவரிடமே கைகுலக்குகிறார். அப்படியே அஜித் ஸ்லோ மோஷனில் அவர் கையில் விலங்கை மாட்டி கூட்டிச் செல்கிறாரே பார்க்கலாம்!

எடிட்டிங், காமிரா எல்லாம் மாய்ந்து மாய்ந்து செய்திருக்கிறார்கள். என்ன புண்ணியமோ? யுவனின் பாடல்களில் ஒன்றுக்கு மட்டும் ‘இது நல்லாயிருக்கோ’ என்று லேசாக சந்தேகம் வருகிறது.

க்ளைமாக்ஸ் ஃபைட்டில் சுமன் அஜித்தை குமுறு குமுறு என்று குமுறுகிறார். அப்போ தான் அஜித் திரும்ப அடிக்க மாட்டாரா என்று ஆடியன்ஸுக்கு பி.பி. ஏறுமாம். அவர்கள் தான் கோமாவுக்கு போய் ரொம்ப நேரம் ஆச்சே!

ராஜூ சுந்தரம் ஏதோ ஒரு புது உத்தியை கையாண்டிருக்கிறார். காட்சிக்கு காட்சிக்கு கதை ஓடத்தான் செய்கிறது. திரையில் ஆட்கள் பதறுகிறார்கள், சிதறுகிறார்கள், கதறுகிறார்கள். ஆனால் எல்லாமே பிரஸ்டீஜ் நான் ஸ்டிக் தவா போல ‘ஒட்டவே ஒட்டாத” மேஜிக்! இது நிஜமாகவே ஏகன் படமா, இல்லை அதன் லொள்ளு சபா வெர்ஷனா என்று ஸீனுக்கு ஸீன் சந்தேகம் வருகிறது.

க்ளைமாக்ஸ் சண்டை முடிந்ததும் நிலுவையில் இருக்கிற பிரச்சினைக்கு எல்லாம் நிதானமாக பஞ்சாயத்து பண்ணாமல் சட்டு புட்டென்று சுபம் போடுகிறார்கள். அதெல்லாம் ஏன் செய்யவில்லை என்று கேட்க நாமென்ன சேடிஸ்டா? விட்டால் போதும் என்று ஓட வேண்டியது தான்!

படத்தில் வருகிற கடைசி டயலாக் – ‘போய் ஃபீல் பண்ணு’. யாரு படம் பார்த்தவர்களா?

Written by aravind

நவம்பர் 2, 2008 இல் 1:59 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with