சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for நவம்பர் 2008

மும்பை – சில கேள்விகள்

3 மறுமொழிகளுடன்

1) லஷ்கர் இ தொய்பா தாஜ் ஹோட்டலை தாக்கக்கூடும் என செப்டம்பெர் 2008ல் RAW சொல்லியிருக்கிறது. நவம்பர் 18ம் தேதி அதே RAW கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையக் கூடும் என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவு ஏன், ‘சாட்டிலை ஃபோன்’ மூலம் நடைபெற்ற சந்தேகத்திற்கு இடமான உரையாடலை கேட்டதாகவும் சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் என்ன இண்டெலிஜெண்ஸ் தேவை? இது இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியரா? (நேற்றிரவு இந்திய கப்பற்படை இதை மறுத்துள்ளது, அதாவது RAW எதுவும் சொல்லவில்லை. எது உண்மை?)

2) இதற்கு முன் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது ராஜினாமா செய்யாத ஷிவ்ராஜ் பாட்டில் இப்போது செய்திருக்கிறார். அப்படியென்றால் இதற்கு முன் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஒரு நாட்டில் அனுமதிக்கக் கூடியவை என்று அர்த்தமா? இப்போது உயிர் செலவு அதிகம் என்பதால் இந்த ஞானோதயமா? இதற்கு முன் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற போதெல்லாம் அவர் அந்தப் பதவியில் தொடர அவரிடம் என்னத்த கண்டது அரசு? இப்போது அவரிடம் என்ன குறை என்று கண்டுகொண்டு விட்டது? எந்த அடிப்படையில் அவர் ஹோம் மினிஸ்டர் ஆக்கப்பட்டார்? எந்த அடிப்படையில் அவர் தொடர அனுமதிக்கப் பட்டார்? எந்த அடிப்படையில் இப்போது வெளியேற அனுமதிக்கப் படுகிறார்?

3) இந்திய பிரதமர் அவசரமாக நடத்தும் முதல் இரண்டு கூட்டங்களிலும் ஹோம் மினிஸ்ட்டரை அழைக்கவில்லை என்றால் அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஷிவ்ராஜ் பாட்டிலால் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதா? அவரோடு இனி நாங்கள் சேர மாட்டோம் என்பதா? துறையின் பொறுப்பில் இருப்பவர் மீது என்ன தான் வெறுப்பு இருந்தாலும், இது எத்தனை மோசமான விஷயம்? அவர் இருந்தும் இல்லாதது போல என்று அரசு நினைக்கிறதா?

4) வியாழக்கிழமை ‘இந்திய அரசுடன் நாங்கள் இருக்கிறோம்’ ‘மன்மோகன் சிங்குடன் ஜோடியாக மும்பை போகப் போகிறேன்’ என்றெல்லாம் சொன்ன அத்வானி அடுத்த நாளே, ‘இந்த அரசு மோசம்’ என்று எதிர்க்கட்சி பல்லவியைப் பாடுகிறார். முதலில், தீவிரவாதிகள் குஜராத் வழியாக வந்தார்கள் என்பதற்கு அவர்களின் கட்சி ஆட்சி என்ன சொல்கிறது? ஹேமந்த கர்கரே குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் தர முண்டியடித்துக் கொண்டு வந்த மோடி, இன்னும் ஏன் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. அவர் அரசு அதற்கு என்ன விசாரணை மேற்கொண்டிருக்கிறது? அது அவர் வேலையா? இல்லை இந்திய அரசு ஃப்ளைட் பிடித்து வந்து தான் விசாரிக்கவேண்டுமா?

5) ஆர் ஆர் பாட்டில், ‘பெரிய நகரங்களில் இது போன்ற ‘சின்னச் சின்ன’ விஷயங்கள் நடப்பது சகஜம்’ என்று சொல்லியிருக்கிறார். எவ்வளவு பேர் உயிரிழந்தால் அது சின்ன விஷயம்? எப்போது அது பெரிய விஷயம் ஆகும்? இன்னும் நாம் எத்தனை சின்னச் சின்ன சகஜங்களை எதிர்பார்க்கலாம்?

6) இந்தப் போரில் வீர மரணம் அடைந்த அத்தனை போலீஸ்காரர்களுக்கும் கண்ணியமான அஞ்சலி. அதே சமயம், இது போன்ற தொட்டதும் எதிராளியுடன் துப்பாக்கிச்சூடு சண்டையை துவக்குவது மோசமான உத்தி என்று இஸ்ரேலி அரசு குறிப்பிட்டுள்ளது. இந்திய போலீஸ் இந்த சூழ்நிலையை கையாண்ட விதத்தில் அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? (கொல்லப்பட்டவர்களில் இஸ்ரேலிகள் தான் அதிகம் டார்ச்சர் செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்)

7) நடப்பதை உடனுக்குடன் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற மீடியாவின் பொறுப்புணர்ச்சி பாராட்டுக்குரியதே. ஆனால், GPRS, சாட்டிலைட் ஃபோன் என்ற ரேஞ்சில் தொழில்நுட்ப பலம் பெற்றிருக்கும் தீவிரவாதிகளுக்கு, நீங்கள் காட்டுகிற காட்சிகளை பார்க்க எவ்வளவு நேரம் ஆகும்? அது புரியாமல், ‘போலீஸ் இப்போது மேலிருந்து உள்ளே இறங்கப் போகிறார்கள், வலது ஓர சுவரை உடைத்து உள்ளே போகிறார்கள்’ என்று டெரர் ரியாலிட்டி ஷோ நடத்தியது எந்த அளவு நியாயம்? புத்திசாலித்தனம்? தாஜ் ஒட்டலில் இருந்த தீவிரவாதிகள் தீர்த்துக்கட்ட பின்பு, உயிர் உள்ள வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் அங்கே தப தப என்று உள்ளே காமிராவுன் ஓடியது என்ன முட்டாள்தனம்? ‘இதோ பார் உடைந்த கண்ணாடி, இந்த ஸ்க்ரீன் துணியை பிடித்து எப்படி தொங்கி எப்படி காப்பாற்றினீர்கள்?’ என்பது எந்த சமயத்தில் தேவை எந்த சமயத்தில் தேவை இல்லை? இந்தியா டிவி எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டும் விதமாக, தாஜ் ஹோட்டலில் இருந்த தீவிரவாதியுடன் செல்ஃபோனில் பேசியதை வெளியிட்டு இருக்கிறது. எப்படி இதெல்லாம் சாத்தியம்?

8 – கைப்பற்ற தீவிரவாதிகளை சட்டப்படி நாம் கையாளுகிற முறையில் என்ன தடைகள் தட்டுப்பாடுகள் உள்ளன? பொடா போன்ற சட்டங்களை தங்களின் சொந்த லாபத்துக்கு பயன்பற்றி அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிய வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்?

9) ரஜினிகாந்த மஹாராஷ்ட்ராவிற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு சமூக அக்கறை சம்பந்தமாக பலமான ஆராய்ச்சி செய்து அறிவுப்பூர்வமான அறிக்கை விடும், ‘மும்பை மராட்டியருக்கே’ என்று கோஷமிடும் தாக்கரே வகையறாக்களும், நினைத்ததை நடத்திக் காட்டும் அவரகளது செயல் வீரர்களும், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகும் மும்பையை காக்க இது வரை என்ன செய்திருக்கிறார்கள்? NSG படையினரில் மராத்தியர் மராத்தியர் அல்லாதவர் என்று தாக்கரே வகையறாக்கள் வகைபடுத்துவார்களா? ஒரு பொது இடத்தில் வைத்து ஏன் அவர்களை இதை கேட்கக் கூடாது?

10) இதை இந்தியாவின் 9/11 என்று அழைப்பது சரியா? இது, எந்த தேசத்துடன் வம்பு வளர்க்காத, எந்த தேசத்தின் வளத்திற்கும் ஆசைப்படாத, எந்த நாட்டு பிரச்சினைகளிலும் மூக்கை நுழைக்காத ஒரு தேசம், காரணமின்றி தாக்கப்படுவதின் வலி. இதை எந்த ஒரு வலியுடனும் ஒப்பிட முடியாது!

உங்களிடம் என்னென்ன கேள்விகள் உள்ளது?

Written by aravind

நவம்பர் 30, 2008 இல் 3:53 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

செல்லுலாய்ட் கவிதைகள் – 8

4 மறுமொழிகளுடன்

படம் ஒரு நீண்ட மௌனத்தில் துவங்குகிறது. ரொமானியாவின் ஒரு பல்கலைகழக விடுதி அது. அறைத் தோழிகளான ஒட்டிலியாவும் கபீட்டாவும் நீண்டதொரு விவாதத்தை அப்போது தான் முடித்திருக்கிறார்கள். பார்வையில் தைரியம் கொப்பளிக்கிற ஒட்டிலியா; மருண்ட கபீட்டா; ஒட்டிலியா ‘சரி’ என்கிறாள். கபீட்டா நன்றி சொல்கிறாள்.

ஒட்டிலியா எழுந்து வெளியே சென்று அன்றைய பொழுதுக்கு தேவையான பொருட்களை வாங்குகிறாள். கிடைக்காத பொருட்களை மற்ற தோழியரிடம் கடன் வாங்குகிறாள். கள்ளச் சந்தை கொழித்து கிடக்கிறது. நிறைய பொருட்களுக்கு பஞ்சம். இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகளில் ஒருவனின் கடைசி ஆட்சிக்காலம் அது. 1980கள்.

குளித்து முடித்து விட்டு ஓட்டிலியா மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறாள், அவளுடைய காதலனை பார்க்க. கையில் சுத்தமாக காசு இல்லை. செய்யப் போகிற காரியத்திற்கு நிறைய காசு வேண்டும். எண்ணி கொடுத்து விட்டு காதலன் கேட்கிறான், ‘நிச்சயம் இதை செய்ய வேண்டுமா?’

ஒரு அறை தேவைப்படுகிறது. ஒரு இரவு கூட போதுமானது. முதலில் அந்த டாக்டரிடம் பேச வேண்டும். அறையை எங்கு பார்ப்பது என்று அவரே சொன்னாலும் சொல்வார். கொஞ்சம் பேரம் பேச வேண்டும். டாக்டரிடம் கபீட்டாவை பேச சொல்கிறாள். இடம் முடிவாகிறது. கொஞ்சம் கெடு பிடி இல்லாத ஒரு ஹோட்டல் அது. ஆனால் அங்கு அறை இல்லை. காசும் ரொம்ப அதிகம். ஒட்டிலீயாவாக ஒரு ஹோட்டலை முடிவு செய்கிறாள். வேறு வழி இல்லை.

ரிஷப்ஷனில் ஆயிரம் கேள்விகள். ‘அடையாள அட்டையை முதலில் கொடு’ – இது தான் எங்கும் முதல் வாசகம். அது மற்றவர் கையில் இருக்கிற வரைக்கும், ஒன்றும் செய்ய முடியாது. நம் விதி அவர்கள் கையில். வரப்போகிற தேர்வுக்கு இரவெல்லாம் படிக்கப் போவதாக சொல்கிறாள். விடுதியில் நல்ல சூழ்நிலை இல்லை, ப்ளீஸ். பொய் சொல்கிறாள். உண்மையைச் சொன்னால், சிறைக்கு தான் போக வேண்டும். தங்கப் போகிற இருவரின் அடையாள அட்டையையும் அடகு வைத்து விட்டு நகர்கிறாள்.

அடுத்து டாக்டரை அழைத்து வர வேண்டும். பேசி வைத்த இடத்துக்கு போய் காத்திருக்கிறாள். முப்பது வயது மதிக்கத்தக்கவன் ஒருவன் வந்து சேர்கிறான். அதிகம் பேசுபனாக இல்லை. காசு இருக்குல்ல? நம்பத்தகுந்தவன் தான், ஏற்கனவே இதை செய்த தோழியிடம் ரகசியமாக பெற்ற முகவரியில் மருத்துவம் செய்கிறவன்.

ஹோட்டலுக்கு வந்து சேர்கிறாள் கபீட்டா. டாக்டரும் ஒட்டிலியாவும் வருகிறார்கள். ரிஷப்ஷனில் டாக்டரின் அடையாள அட்டையை வாங்கி வைத்து கொண்டு அனுப்புகிறார்கள். அறைக்கு உள்ளே வந்ததும் டாக்டர் சீறுகிறான். ‘இந்த ஹோட்டலுக்கு ஏன் வந்தீர்கள்? நான் இதை செய்ய மாட்டேன்.’ இரு பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். கபீட்டாவை பார்த்ததும் டாக்டர் கேட்கிறான் – ‘எத்தனை மாசம்?’ கபீட்டா கலவரமுறுகிறாள். மூன்று மாதம் மேல் வளர்ந்த கருவை யாரும் கலைப்பதில்லை. அதுவும் சட்டப் புறம்பாக. கருக்கலைப்பு அங்கே தண்டனைக்குரியது. தயங்கி தயங்கி, ‘நான்கு மாதம்’ என்கிறாள். ஒட்டிலியாவுக்கே இந்த விஷயம் தெரியாது.

டாக்டர் மூட்டை கட்டி கொண்டு கிளம்புகிறான். ‘பொய் மேல் பொய் சொல்லியிருக்கிறீர்கள். நான்கு மாத கருவை கலைப்பது உயிருக்கு ஆபத்து. இவள் செத்துப் போனால் எனக்கு ஆபத்து, முடியாது’ கபீட்டா அழத்தொடங்குகிறாள். காலில் விழுகிறாள். கெஞ்சுகிறாள்.

காசு அதிகம் கேட்கிறான். இருவரிடம் இருந்த காசு எல்லாவற்றையும் போட்டு கொண்டு வந்தது பழைய காரியத்துக்கு. 4 மாத கருவென்றால் அதிகம் தா. காசு சத்தியமாக இல்லை. அப்படியென்றால், அவன் ஒட்டிலியாவை பார்க்கிறான்!

குறைந்த அவகாசத்தில் முடிவு செய்ய வேண்டும். அவன் ஒட்டிலியாவை பார்த்து இறுதியாக கேட்கிறான், வருகிறாயா, இல்லையா?

கழிவறையில் இருந்து வெளியே வருகிறார்கள் டாக்டரும் ஒட்டிலியாவும். டாக்டர் பரபரவென வேலை செய்கிறான். அந்தக் கருவை எப்படி வெளியே எடுப்பார்கள் என்று நான் சொல்லத் தயாராய் இல்லை!

டாக்டர் வேலையை முடித்துக் கொண்டு கிளம்புகிறான். ‘இன்று இரவு முழுதும் அசையாமல் அப்படியே இரு. நாளை காலை கரு வெளியே வந்து விடும்’

ஓட்டிலியாவின் காதலன் அவளை வீட்டுக்கு அழைத்திருக்கிறான். அவனுடைய அம்மாவின் பிறந்த நாள் பார்ட்டி. கபீட்டாவை ஹோட்டலில் விட்டு விட்டு செல்கிறாள். இது வரை அவளை ஒரு நாய்க்குட்டி போல பின் தொடந்து வந்த காமிரா, அப்படியே தொடர்ந்து செல்கிறது.

அந்த விருந்து காட்சி மிகவும் நீளமானது. பேச்சும் சிரிப்புமாக மற்றவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் நகர, ஒட்டிலியாவுக்கு கவனம் அங்கில்லை. உண்மையில் அப்படி ஒரு சூழலில் சிக்கியவர்களுக்கு மற்றவர்களின் சகஜமான பேச்சு எத்தனை எரிச்சலாக இருக்கும் என்று அழகாக விளங்கும். அந்தக் காட்சி உங்களுக்கு பிடித்தால், இந்தப் படமும் உங்களுக்கு பிடிக்கும்,

ஒட்டிலியா திரும்ப ஹோட்டலுக்கு போகிறாள். அறையில் அவளைக் காணவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. களையப்படவேண்டியவை, கழுவப்படவேண்டியவை என அத்தனையையும் கவனித்துவிட்டு, கீழே இருக்கிற ரெஸ்டாரெண்டுக்கு செல்கிறாள். கபீட்டா அமர்ந்திருக்கிற டேபிளில் அமர்கிறாள்.

ஒரு நீண்ட மௌனத்துடன் முடிகிறது படம்.

- * – * – * -

திரைப்பட ரீல் எண் ‘1’ என்று சொல்கிறது. காமிரா ஒரு காருக்குள் இருக்கிறது. ஓட்டுனருக்கு பக்கத்து ஸீட்டில் கண் வைத்திருக்கிறது. ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். ஓட்டுனர் யாரெனத் தெரியவில்லை. பெண் குரல் மட்டுமெ கேட்கிறது. என்ன கேள்விகள் கேட்டாலும் சிறுவன் சட்டை செய்யவில்லை. ‘ஸ்விம்மிங் க்ளாஸ் எப்படிப் போகிறது? அப்பா உனக்கு என்ன வாங்கித் தந்தார்? வெளியே எங்காவது போகலாமா? நம் வீட்டுக்கு போலாமா, அப்பா வீட்டுக்கு போலாமா?’ சிறுவன் எந்தக் கேள்வியையும் மதிக்க வில்லை. வேடிக்கை பார்க்கிறான். லா லா என்று பாடுகிறான். பெண் குரல் பொறுமையாக கேட்டுக் கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் ‘நான் உன் அம்மா’ என்று சொல்ல, சிறுவன் வெடிக்கிறான். ‘நீ அம்மாவா? நீ மொதல்லா ஒரு பொம்பளையா? லிப்ஸ்டிக் போடறது சாத்தான் குணம் தெரியுமா? நீ ஏன் கார் ஓட்டக் கத்துகிட்டே? ஏன் வெளியே சுத்தறே? நீ அப்பாவுக்கு சேவை செய்ய வந்தவன்னு மறந்துடுச்சா? உன்ன மாதிரி பெண்கள கொல்லனும்னு அப்பா சொல்லியிருககார்.” அம்மா குரல் பதற்றமடையாமல் பொறுமையாக விளக்குகிறது, தன் சுதந்திரத்தை பற்றி, தன் உரிமைகளைப் பற்றி. பத்தி நிமிட பேச்சு. சிறுவன் தொடர்ந்து கத்துகிறான். இறங்க வேண்டிய இடம் வந்தது, கதவை ஓங்கி அறைந்து விட்டு போகிறான், அந்தப் பையன் ஏழு வருடம் வளர்ந்த விஷச்செடி. நாளைய இரான் சமூகத்தின் ஆலமரம். வேறு எந்தப் படத்தின் முதல் காட்சியும் என்னை இப்படி அதிர்ச்சிக்குள்ளாகியது இல்லை!

காமிரா இப்போது அந்தப் பெண்ணை காட்டுகிறது. இதுவரை குரலில் இருந்து நான் கற்பனை செய்த உருவம். அழகான இயக்கம்!

தொடர்ந்து 2, 3 என ரீல்கள் வருகின்றன. பத்து காட்சிகள். எல்லாம் காருக்குள்ளேயே. நாயகி பார்க்கும் பெண்களுக்கெல்லாம் எல்லாம் லிஃப்ட் தருகிறாள். (கார் பயணத்தை வாழ்க்கை என்றும், லிஃப்ட் தரப்பட்டவர்கள் உறவுகள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). அபப்டி ஒரு பத்து பயணக்காட்சிகள் தான் படமே. ஒரு மூதாட்டி, காதலனால் கைவிடப்பட்ட பெண், நாயகியின் தங்கை, விலைமாது என கதாபாத்திரங்கள். நாயகியின் மகனான அந்தச் சிறுவன் மூன்று உரையாடல்களில் வருகிறான்.

அப்பாஸ் கியரோட்ஸ்மியின் படங்களில் கார் பயணமும், உரையாடலும் இன்றியமையாதவை. சினிமா விதிகள் எல்லாம் தூள் தூள் ஆக்கிற சுத்தியல் – அவர் இயக்கம். இந்தப் படத்தை அவர் எடுத்த விதம் ரொம்ப சுவாரஸ்யம். காருக்குள் இரு காமிராக்களை பொருத்தி விட்டு, காட்சியை விளக்கிவிட்டு, நடிகர்களை ‘கிளம்புங்க’ என்று அனுப்பிவிடுவார். கூட யாரும் கிடையாது. ஒரு மணி நேரம் நகரைச் சுற்றி விட்டு வருவார்கள். அதை எடுத்து எடிட் செய்த படம் இது!

அந்தச் சிறுவன் பிரமிக்க வைக்கிறான். அது நடிப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து பல காட்சிகளில், நாயகியின் காருக்கு வழி விடாமல் அடாவடித்தனம் செய்கிற ஆண் ஓட்டுனர்கள் – நல்ல படிமம்!

முந்தைய படம் சர்வாதிகார ஆட்சியின் கீழே பெண்களின் ஒரு போராட்டத்தை சொல்கிறது. பின்னதும் தான்!

Written by aravind

நவம்பர் 22, 2008 இல் 10:44 மு.பகல்

திரை, தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with

முதல் நாள் இன்று

2 மறுமொழிகளுடன்

rainy_day

சென்ற கோடைக்காலத்தின்
ஒரு பிற்பகலில்
பிரிந்தோம்.
தகித்து அலைந்து கொண்டிருந்த
நம் பிரிவு கண்டறிகிறது
தன் மற்றொரு முகத்தை
இந்த மழைக்காலத்தின்
முதல் நாளில்.

Written by aravind

நவம்பர் 19, 2008 இல் 5:19 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

வாரணம் ஆயிரம்

4 மறுமொழிகளுடன்

அப்டேட் – ஏத்தி ஏத்தி பாடலை எழுதியவர் நா.முத்துகுமார். தாமரை அல்ல!
———————————————————————————————
ஒருவனின் வாழ்விலிருந்து ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட கலர்ஃபுல் ஆல்பம்.

டைட்டில் கார்டு அசத்துகிறது. டிஜிடல் ஜாலத்தில் சுழலும் இசைத்தட்டும், பிண்ணனியில் அமெச்சூர் குரல்கள் பாடும் ‘உறவுகள் தொடர்கதை’ தொடங்கி 80களின் பாடல்களின் கதம்பமும் செம ஜில்.

ப்ளாஷ்பேக்கில் பயணிக்கிறது முழுப்படமும். அப்பாவுக்கு மகன் தன் மனக்குரலில் எழுதும் குரல் கடிதம் தான் படம். சிறு வயது தொடங்கி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்பாவின் அரவணப்பை நினைத்துப் பார்ப்பதாக நகர்கிறது படம்.

முதல் பாதி ஐந்து பாடல்களோடு ஜாலி ராக்கெட்டாக பின்னி பெடலெடுக்கிறது. ஒவ்வொரு பாடலையும் பாப் வீடியோ போல பார்த்து பார்த்து படமெடுத்திருக்கிறார்கள். 70களின் ஸ்பென்ஸர் ப்ளாஸாவாகட்டும், ‘நெஞ்சுக்குள் பெய்திடும்’ பாட்டின் செட் ஆகட்டும் எல்லாமே வார்ம் வெல்கம் சொல்கின்றன.

சூர்யாவுக்கு கிட்டதட்ட இது ஒரு மினி தசாவதாரம். 17 வயது தொடங்கி 70 வயது வரை பல கால கட்டங்களின் தோற்றம் கொள்வதோடு குறை சொல்ல முடியாத மாற்றமும் கொள்கிறார். 17வயது சூர்யாவாக அவர் ஆனது ஆச்சர்யம். அபூர்வ சகோதரர்கள் ‘ராஜா’ போல இருக்கிறார் என நினைக்கும் போதே, அந்த கெட்டப்பில் ஆடிப் பாடுகிறார். கமல் கட்டவுட் முன்னால் ஆடிப்பாடுவது அவரது இலக்கை காட்டுகிறது.

இளைஞர் சூர்யா தான் பெஸ்ட். இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச இன்ஹிபிஷன்களையும் களைந்து காதல் காட்சிகளில் சிக்ஸர் சிக்ஸர் ஆக அடிக்கிறார். பெண்கள் தியேட்டரிலேயே மினி ரசிகை மன்றம் வைக்கிறார்கள். வெளிநாட்டுக்கு படிக்க போவதாக சமீரா சொல்லும் போது சூர்யா அடிக்கிற கமெண்ட்டில் தியேட்டர் அதிருகிறது.

தோல்வியில் குணமும் மனமும் குழம்பிய சூர்யா, அடுத்த பெஸ்ட். மேஜர் சூர்யாவிற்கு ரொம்ப வேலை இல்லை. சிக்ஸ் பேக் சும்மா ஷோ.

சமீரா ரெட்டி ரொம்ப எல்லாம் லிப் சிங்க்கில் படுத்தாமல் பாஸாகிறார். சூர்யா அப்படி வழிகிற அளவுக்கு அம்மணி அழகில்லையோ என்று தோன்றுகிறது. மும்பை நாயகிகளில் லேட்டஸ்ட் குரல், சின்மயி – சூப்பர்.

திய்வாவிற்கு கொடுக்கப்பட்ட டையலாக்கில் பாதி ட்ரெயிலரிலேயே காட்டிவிட்டார்கள். இன்னும் நிறைய வேலை கொடுத்திருந்தாலும் செவ்வனே செய்திருப்பார்.

சிம்ரனின் ‘முன் தினம் பார்த்தேனே’ அவருக்கு தரப்பட்ட ஸ்பெஷல் கிஃப்ட். ‘சேவலு’க்கு பிறகு இதிலும் கண்ணுக்கு கீழே கறுப்பு மை! கொடுத்த வேலையை பொறுப்பாக பாந்தமாக செய்கிறார். நடிப்பில் அத்தனை நுணுக்கம். கடைசி காட்சியில் சூர்யா ‘எடுத்துடலாமா’ என்று கேட்கும் போது, சிம்ரனின் ரியாக்ஷன் டாப் க்ளாஸ்!

படத்தின் மிகப்பெரிய மைனஸ், அப்பா சூர்யாவின் பாத்திரப்படைப்பு. ‘டாடி, டாடி’ என்று வெறும் வார்த்தைகளால் கோட்டை கட்ட பார்த்திருக்கிறார்கள். (ஒரே ஒரு தடவையாவது ‘அப்பா’ என்று சொல்லியிருக்கலாம். அது சரி, இது கௌதம் படமாச்சே!). ஆழம் சரியாக தெரியாத பள்ளத்தில் குதிக்க சொன்ன கதையாக சூர்யாவும் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார். நடிப்பு ஸோ ஸோ!

REC ஹீரோயின், மெக்கானிக்கல் இஞ்னியரிங் ஹீரோ, மலையாள ஸ்டைல் கல்யாணம் போன்றவை எல்லாம் ‘இது ஆட்டோபயாகிராஃபி தான்’ என்று சொன்னாலும், அப்பா-மகன் உறவு இத்தனை சூப்பர்ஃபீஷியலாக சொன்னது ரொம்ப உறுத்துகிறது. உயிரே இல்லாத பல காட்சிகள் சரியான போகன் வில்லா!

படத்தின் இரண்டாம் பாதி நிறைய வகை. சிலது முன் பாதியை அழகாக காம்பிளிமெண்ட் செய்யும். சிலது முன் பாதியின் குறைகளை மறக்கச் செய்யும். சிலது, முன் பாதியின் அத்தனை ப்ளஸ்களையும் அப்படியே முழுங்கி ஏப்பம் விடும். இந்தப் படத்தின் இரண்டாம் பாதி அப்படியே விழுங்கி ஏப்பம் விடுகிறது, பெரிதாக. டோட்டல் வாஷ் அவுட். யார் யாரையோ சூர்யா காப்பாற்றுகிறார். நம்மை காப்பாற்றத்தான் ஆளில்லை.

தோல்வியினால் வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நல்ல விஷயத்திற்கு திருப்புங்கள் என்ற ஐடியா அழகு தான். ஆனால் அதற்காக யோசித்திருக்கிற காஷ்மீர் எபிஸோட் ரொம்ப டூ மச்!

பாடல்களை கேட்கும் போதெல்லாம் ஹாரிஸ்-கௌதம் நிஜமாகவே பிரிந்துவிட்டார்களா என்று அதிர்ச்சியாக இருக்கிறது. ஆக்ஷன் சேஸில் கடமும் மிருதங்கமும் வாசிப்பது ரொம்ப வித்தியாசம். தாமரைக்கு தனி பொக்கே.

ரத்னவேலு படத்தின் அழகான கண்கள். அப்படியே ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கிறது. இரண்டாம் பகுதியில் யாருமே வேலை செய்யவில்லை. எடிட்டர் உள்பட.

இயக்கம் ஏனோ பல இடங்களில் மந்தம். ஆஸ்பிட்டல் வாசலில் சூர்யாவும் அவர் யாரென்று தெரியாத சமீராவின் அப்பாவும் தனித்தனியாக அழுகிற காட்சியும், திவ்யா அறிமுகம் ஆகும் போது சூர்யா இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதும் (க்ளீஷே என்றாலும்) அழகு.

படத்துக்கு அழகாக தமிழில் தலைப்பு வைத்து விட்டு உள்ளே எக்கச்சக்க ஆங்கிலம். க்ளைமாக்ஸில் தலைப்பிற்கு சிம்ரன் சிறு குறிப்பு வரைவதற்குள் ஆடியன்ஸ் எஸ்கேப்.

வெறும் ஆல்பம் மட்டுமே!

StarStar

Written by aravind

நவம்பர் 18, 2008 இல் 4:36 மு.பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with

இன்ஸல்ட் இதிகாசங்கள்

ஒரு மறுமொழியுடன்

பூமியில என்ன மாதிரி பிறவிகள் பிறக்கறது ரொம்ப அபூர்வம். ரொம்ப ரேர். சிம்பு அடக்கமா இருக்கறது எவ்ளோ ரேரோ, அவ்ளோ ரேர். ஆனா, மக்கள் இந்த மாதிரி பிறவிகளயும் சில சமயம் அறியாமையால் இன்ஸல்ட் பண்ணிடறாங்க. சின்ன சின்னதா, பெருசு பெருசா. அறியாமை, வேற ஒண்ணும் இல்ல. அப்படி என் வாழ்க்கையில் நடந்து சில மறக்க முடியாத இன்ஸல்ட்ஸ், இங்கே இதோ. என் மாதிரி பெரிய மணுஷங்க வாழ்க்கைல நடக்கிறது எல்லாமே இதிகாசங்கள் தானே. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள கூட நீங்க அறியாம இருக்கலாம். இது நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய இன்ஸல்ட் இதிகாசங்கள். ரெடி ரைட்.

புள்ளதாச்சிய கொன்ன படுபாவி: <இன்ஸல்ட் லெவல் –ஹை>

ச்சீ ச்சீ. கேட்கவே எத்தன நாராசமா இருக்கு. நல்லா வளர்ந்த உங்களுக்கே இப்படி இருந்தா, ஒரு பிஞ்சு குழந்த, பத்து வயசு கூட இருக்காது, அது கிட்ட சொன்னா, அதோட மனசு எப்படி பாதிக்கும்? பச்ச மண்ணு, வீட்டு செல்லக் கண்ணா நான் வளர்ந்துட்டு இருந்த காலம் அது. எங்க ஊரு ரொம்ப சின்னது. எங்க தாத்தா தன்னொட ஒரே மகன், ஆறு பொண்ணுங்க, எல்லாரையும் வாத்தியாரு ஆக்கிட்டாரு. ஊரே மதிக்கிற வாத்தியார் குடும்பம். ரெண்டு ஆடு, மூணு மாடு தவிர அந்த ஊர்ல எல்லாருமே எங்க குடும்பத்தில யார் கிட்டயாவது படிச்சிருப்பாங்க. ஸோ, எனக்கு ராஜ மரியாதை தான். நான் அஞ்சாவது வரைக்கும் படிச்சது லோக்கல் ஸ்கூல்ல. ஓட்டு வீட்டுல, சின்னதா இருக்கும். அங்க இருந்த எல்லா வாத்தியாருங்களும் எங்க அம்மாவோட ஸ்டூடண்ஸ். செட்டிங் நல்ல புரிஞ்சுதா? கதைக்கு போலாமா?

வெயிட், நான் கொஞ்சம் சாஞ்சு உக்கார்றேன். மேல பாக்குறேன். (ப்ளாஷ்பேக் சொல்வது எப்படி). அது ஒரு மதியான நேரம். எவனும் தலை குப்புற தண்ணி தொட்டில விழாத, யாரும் மூக்குல பல்பம் போட்டுக்காத, ஒரு அன் – இவண்ட்ஃபுல் ஆஃப்டர்னூன். ஸ்கூல்ல நான் ஒரு சின்ன டெரர். டீச்சர் உள்ள வந்ததும், எழுந்து நின்னு கை கட்டி, ‘உங்க சாரி ரொம்ப நல்லா இருக்கு டீச்சர்’னு சொல்லி அதிர வைப்பேன். (எங்க அம்மா தினமும் ‘இந்த சாரி எபப்டி இருக்குனு கேப்பாங்க’. அந்த பழக்கத்துல சொன்னேன். வாட்ஸ் ராங்?). அப்படி ஒரு டெரருக்கு, ரொம்ப போர் அடிச்சுது. திரும்பி திரும்பி பாக்குறேன். தோ, Z உக்காந்துருக்கா. என்னோட ஃப்ரெண்ட். ‘ஹேய் Z, ஒரு விளையாட்டு விளையாடலாமா?’ ‘என்ன விளயாட்டு’ ‘ஆக்டிங் விளையாட்டு’ ‘அப்படின்னா’ ‘நான் ஒரு கத சொல்றேன், அதுல நம்ம நடிச்சு வளயாடலாம்’ ‘சரி சொல்லு’. ‘நான் ஒரு திருடன்’ ‘ம்’ ‘நீ வந்து ப்ரெக்னெண்ட்டா இருக்க’ <முழிக்கிறா> ‘நான் உன் வீட்டுக்கு திருட வரேன், நீ என்ன பாத்திடற, நான் உன்ன உருட்டுக்கட்டையால அடி அடினு அடிக்கிறேன்’

Z வாய் அப்படியே ஆரோகணம் மாதிரி மெதுவா தொறக்குது. ‘ஆ’. என்னவோ சொல்ல வர்ரா? என் பின்னால கை காட்டுறா. யாருன்னு பாத்தா, எங்க ஸ்கூல் ஆயா! என்ன ஒரு வில்லி லுக் விட்டுட்டு, நேரா ஹெட் மாஸ்டர் ரூமுக்கு போறா. அப்புறம் என்ன? ஒரே பரேடு தான். ‘ப்ரெக்னெண்ட்ணா என்ன?’ ‘அத பத்தி உனக்கு என்ன தெரியும்’? எத்தன தடவ சொல்றது, ‘சார், வயிறு பெரிசா இருக்கும்’னு? படிக்காதவன் ரஜினியே தோத்தார் போங்க. அப்புறம் எங்கம்மாவ வேற கூப்பிட்டு, சொல்லி.. என்ன? போதும். போதுமான அளவுக்கு இண்ஸல்ட் ஆயாச்சு. நெக்ஸ்ட் ஸ்டோரி!

வாக் அவுட் வாஞ்சிநாதன்: <இன்ஸல்ட் லெவல் – மீடியம்>

அது நான் காலேஜ் சேர்ந்த புதுசு. படிச்ச ரெண்டு ஸ்கூல்லயும் சூப்பர் ஸ்டார் நான் தான். சரி, இங்கயும் கூடிய விரைவுல எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிடலாம் நெனச்சிருந்தேன். ஃப்ர்ஸ்ட் செமஸ்டெர், இங்கிலிஷ் க்ளாஸ். அந்த மேடம்க்கு என்ன பிரச்சினையோ, தினம் எங்கள மூணு மேட்டர் கொண்டு வர சொல்வாங்க. ஒரு ரீடர், ரெண்டு நோட்புக். அன்னிக்கு நான் ஒண்ணுமே கொண்டு வரல. க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் சுருக்குன்னு எனக்கு உறைக்குது. சரின்னு, ஹாஸ்டலுக்கு கிளம்பறேன் எல்லாத்தையும் கொண்டு வர. வழியில் மேடம். ‘எங்க போற?’ ‘மேடம், ரீடர் கொண்டு வரல’ ‘பரவாயில்ல, உள்ள போ’ ‘இல்ல மேம், நான் எதுவுமே’ ‘அட உள்ள போப்பா’. ஓகே. ஐ வில் கோ.

உள்ள போனதும் ஸீனே மாறிப் போச்சு. காம்பஷிஷன் நோட்டெங்கேனு கேக்கறாங்க. நோ மேம். க்ராமர்? ஹி ஹி, நோ மேம். ஜஸ்ட் கெட் அவுட்.

அது தான் எங்க பரம்பரையில் கேட்ட முதல் கெட் அவுட். என் வாழ்க்கையில முதல் கெட் அவுட். ஐ வாஸ் ஹெல்ப்லெஸ், ஐ வாஸ் கார்னர்ட். சரின்னு விடு விடுன்னு நான் லைப்ரரி போயிட்டேன். அந்த மேடம் பாஷைல கெட் அவுட்னா ‘வெளில தொங்கு’னு அர்த்தம் போல. ஹூ நோஸ்? க்ளாஸ் நடத்தாம, பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ, வெளில எட்டி எட்டி பாத்து என்ன தேடு தேடுனு தேடறாங்க.

ஐம்பது நிமிஷம் ஆச்சு. நான் லைப்ரரிலேர்ந்து வரேன். அடுத்த க்ளாஸ் அட்டெண்ட் பண்ணும்ல. ஐ ஆம் சின்சியர் ஸ்டூண்ட் யு சீ. மேடம் க்ளாஸ்லேர்ந்து வராங்க. மேடம பாத்ததும், நான் ரொம்ப அப்பாவியா ‘என்ன மேம், க்ளாஸ்லாம் நல்லபடியா போச்சா’ <சிவகுமார் வாய்ஸ்>. மேடம், கொளித்தின சர வெடியா வெடிக்கிறாங்க. அழகழகான பெண்கள், ஓரக்கண் அட்டெண்டர்ஸ், பிரின்ஸிபல்னு சில பல ஜனங்க, எங்கள கடந்து போறாங்க. வெடிச்சு முடிஞ்சதும், மேம் கேக்க்றாங்க. ‘உங்க அம்மா என்ன பண்றாங்க’? ‘டீச்சர்’? ‘வாட்???? டீச்சர் பையனா நீ??? அடுத்த சர வெடி.

அதுக்கப்புறம் நான் அந்த க்ளாஸ்க்கு அவ்வளவா போறது இல்ல. பிரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தான் க்யூர்.

லைசன்ஸ் லகுடபாண்டித்தனம்
: <இன்ஸல்ட் லெவல் – ஹை>

என் பருவ வயதில், என் வலது கால் உடஞ்சுடுச்சு. ஸோ, அப்படி இப்படி தள்ளி போய், கடைசியா காலேஜ்ல தான் நான் ட்ரைவிங் சேந்தேன். கார் ஓட்ட கத்து கொடுத்தாங்க. டூ வீலர்க்கும் சேத்து தான் லைசென்ஸ். ஆனா என் மாஸ்டர் கிட்ட நான் எனக்கு பைக் ஓட்டத் தெரியாதுன்னு சொல்லல. ஏற்கனவே, கார் ஓட்டும் போது, ‘தோ சொர்க்கம்’னு ரெண்டு மூணு தடவ அவருக்கு காமிச்சிருக்கேன். சரி இத வேற சொல்லி பயமுறுத்தனுமான்னு சொல்லல. ஓ, தீஸ் வீக் ஹார்டட் பீப்பிள்.

கத்துக்கலாம் கத்துக்கலாம்னு காலம் தத்து பித்துனு ஓடிடுச்சு. இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக போல, லைசென்ஸ் டெஸ்ட் அன்னிக்கு காலைல தான் நான் முதன் முறையா பைக் ஓட்டினேன். சூழ்நில அப்படி. என் நண்பர்கள் எனக்காக விதம் விதமா பைக் கொண்டு வந்திருந்தாங்க. கியர் இருக்கிறது, கியர் இல்லாதது. பிரேக் இருக்கிறது, ப்ரேக் இல்லாதது. ஸோ ஆன். சரின்னு நானும் களத்துல இறங்கிட்டேன்.

டென்ஷனா ஓட்டி ஓட்டி பாத்துட்டு இருந்த ஜனங்க எல்லாம் என்ன பாக்க ஆரம்பிடுச்சு. அரை மணி நேரம். அஸ்டவுண்டிங் பெர்ஃபாமெண்ஸ். அரை மணி நேரத்துல, என்னால ரோட்டுல ஆரம்பிச்சு, ரோட்டுலய முடிக்கிற அளவுக்கு தான் ப்ராக்டீஸ் பண்ண முடிஞ்சது. ஹவ் வில் ஐ பாஸ்? அப்புறம் ரெண்டாவது தடவ அடிபட்ட சிங்கமா அசத்தி லைசென்ஸ் வாங்கினேன். இண்சல்ட் எண்டட் இன் எ இவண்ட்சுவல் விக்டரி.

பொட்டிக்கட பையன்: <இன்ஸல்ட் லெவல் – ஹை>

இது டேட்டஸ்ட். என் பஸ்ல வர ஆளு தான் அவரு. பேசினது இல்ல. சிரிச்சது கூட இல்ல. நான் பஸ்ல நான்-ரொம்ப-பேச-மாட்டேன் ஸீன் போடுவேன். அட்லீஸ்ட் வாழ்க்கையில் நான் கம்மியா பேசுவேன்னு நம்புற சில பேராவது இருக்க வேணாமா? அதையும் தாண்டி அவர் என்கிட்ட ஒரு கான்வெர்ஷேஷன் ஆரம்பிச்சிட்டாரு.

“சார், நான் உங்க எங்கயோ பாத்திருக்கேனே?’ – அவர்

“ஹி ஹி”

“இல்ல சார், நிஜமாவே’

‘ஒரே ஏரியா தானே, பாத்திருப்பீங்க’

‘இல்ல சார், சீரியஸா’

<அமைதி>

என்ன திரும்பி பாக்குறார். யோசிக்கிறார்.

என்ன திரும்பி பாக்குறார். யோசிக்கிறார்.

“சாஆஆஆஆஆஆஆர்’

‘ம்’

‘அந்த தெரு முனை பொட்டிக்கடை பையன் இருப்பானே. அவன மாதிரியே இருக்கீங்க. நீங்க தானே?’

வாட் நான்சென்ஸ், ஐ சே!

Written by aravind

நவம்பர் 13, 2008 இல் 4:49 பிற்பகல்

நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது

Tagged with