மரத்தடி
நகரத்து மரங்கள் காய்த்தனவா பூத்தனவா என்று கேட்க யாருமில்லை. வாகனங்கள் மிகுந்து விட்ட சாலைகளில் ஒரு சின்ன அதிர்ஷ்டத்தில் வேரூன்றி நிற்கின்றன. வேகமாய் பறக்கும் லாரிகள் ஒரு விரலை ஒடித்து கொண்டு போகும். உயர் அழுத்த மின்சாரத்தை கடத்தி செல்லும் தந்திகள் கிளைகளினூடே சரசரக்கும். ஜன்னல் வழியே கொஞ்சம் எட்டிப் பார்த்தால், கழுத்தில் கோடாலி விழும். அவைகளின் சின்ன சின்ன கண்ணீர் துளி போல, அதன் நிழலெங்கும் கிடக்கிறன காய்ந்த சருகுகள். போகிற போக்கில் யாரோ ஒருவர் கால்வாசி படிக்கப்போகிற டுடோரியல் விளம்பரத்தை கொஞ்சம் அசதிக்காக நள்ளிரவில் கழற்றி வைக்க முடியுமா என்ன? சில காக்கைகள் வந்தமருகிற கணங்களில் மரங்கள் தொலைந்து போன தங்களின் அடையாளத்தில் ஒன்றையாவது மீட்டெடுக்க முயல்கின்றன. மாலை வரை காத்திருந்து விட்டு உதிர்ந்து விடும் பூக்களின் மீது சக்கரம் ஏற்றிச் செல்லாமல் போக முடிவது எனக்கான சின்ன ஆறுதல்.
*****
இசையை விட நான் காதலிப்பது வேறெதுவுமில்லை. கவிதைகள் சிந்திப்பதை நிறுத்திவிடலாம். திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்திவிடலாம். புத்தகம் படிப்பதை நிறுத்திவிடலாம். இசையை மட்டும் என்னுள்ளே நிறுத்த முடியாது. இசை ஓவ்வொரு நாளுக்கும் ஒரு அடையாளத்தை தருகிறது. ஒவ்வொரு உணர்வையும் நான் இசையாகவே என் ரத்த நாளங்களில் உணர்கிறேன். ஒரு நாளை இசையால் திறந்து இசையோடு நிறைவு செய்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். வெறும் கேட்கிற அனுபவமாக மட்டும் இசை முடிந்துபோவதில்லை. ஒரு தனி அதிர்வென அது எப்போதும் எனக்குள்ளே உயிர்த்திருக்கிறது. பாதை குழம்பிய ஒரு இருட்டுக் குகையில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது, பேரொளியென வந்து என்னை முதல் முறையாகவும் க்டைசி முறையாகவும் மீட்டுத் தந்தது இளையராஜாவின் இசை. அதில் நான் உணர்வது கடவுளாகவும் இருக்கலாம்.
‘என்னை நினைவிருக்கிறதா’ என்று கேட்டு ஆர்க்குட்டில் செய்தி அனுப்பியிருந்தான் அவன். என்னை விட ஒரு வயது மூத்தவன். நான் படித்த இரு பள்ளிகளிலும் அவனும் படித்தான். ஊருக்கு வெளியே வந்த படித்த அந்த இரண்டாவது பள்ளியில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை மட்டுமே அணிந்துகொண்டோம். பள்ளி, ட்யூஷன், கிராமம், டவுன் போன்ற புள்ளிகளுக்கிடையில் வளைந்து நெளிந்த சென்ற வாழ்க்கையின் பாதைகளில் அங்கங்கே சந்தித்தோடு சரி. ஒரு நண்பனாக அவன் ஆகவும் இல்லை, ஆக்கவும் இல்லை. இன்று கடல் கடந்து சென்றிருக்கிறான். அவன் உயரத்தை கேலி செய்யும் விதமாக அவனுக்கு இருந்த பட்டப்பெயருக்கும், இன்று இணையத்தில் அவன் கொண்டிருக்கும் பட்டப்பெயருக்குமான இடைவெளிகளில் சிக்கித் தவித்தேன். நாங்கள் பேசிக்கொண்ட ஆங்கிலத்தில் எங்கள் கிராம வாசனயுமில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அபூர்வ சகோதரர்கள் படப் பாடலுக்கு அவன் அந்த மேடையில் என் முன்னே நின்று ஆடிக்கொண்டிருந்த போது, அவன் தலையில் இருந்த விழுந்த தொப்பி, என் கனவில் விழுந்தது.
*****
சும்மா போகிற போக்கில் ஒரு கவிதை.
ஜன்னல் காற்றோடு
உன் நினைவுகளை புரட்டியபடி
வண்டியில் சென்ற வழியெங்கும்
சிதறிக்கிடக்கிறது
காதலின் சின்னச் சின்னப்
புன்னகைகள்.
Lovely Aravind… Marathadi ninaivugal are very close to my heart. Walking along an empty road dotted with huge Gulmohar trees on either side, taking care not to stamp on the bright red flowers scattered like rubies on the road, forming a sort of disintegrated carpet… sigh… the closest i’ve come to heaven i think.. Same road at 7 in the evening would be another sight… the flowers would have been mutilated by vehicle tyres. Maram nondhu poi, kaatruku thalai asiaka kooda maradhuduchu nu lam yenaku thoni iruku… lot of memories.. thanks for bringing them back man!
Milinta
செப்டம்பர் 2, 2008 இல் 6:28 மு.பகல்
//
ஜன்னல் காற்றோடு
உன் நினைவுகளை புரட்டியபடி
வண்டியில் சென்ற வழியெங்கும்
சிதறிக்கிடக்கிறது
காதலின் சின்னச் சின்னப்
புன்னகைகள்.
//
அருமையான வரிகள். இன்னும் கொஞ்சம் செரிவு படுத்தினால் நல்ல கவிதையாகி விடும்.
இவான்
செப்டம்பர் 3, 2008 இல் 2:05 பிற்பகல்
Thanks Milinta. That was a verry sweet comment!!
நன்றி இவான்! மிக்க மகிழ்ச்சி!!
aravind
செப்டம்பர் 8, 2008 இல் 4:01 பிற்பகல்