Archive for செப்டம்பர் 2008
லட்சுமணின் கனவு

Indianostrum theatre குழுவினரைச் சேர்ந்த நடிகர்கள் சிலர், கூத்துப்பட்டறையின் உதவியுடன் காஞ்சிபுரம் அருகே இருக்கும் புரிசை தெருக்கூத்துப் பள்ளியில் சில நாட்கள் நடிப்பு பயில சென்ற போது, தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கூத்துக் கலையின் தற்போதைய நிலையையும் ஒரு சேர நாடகமாக சொல்கிற முயற்சி தான் தமிழ் நாடகம் – கம்- கூத்து ‘லட்சுமணின் கனவு’. (ஆங்கிலத்தில் ‘Lakshman’s dream, but tonight we are playing indrajit’) நுங்கம்பாக்கம் Alliance Frachaiseஇல் செப்டம்பர் 12, 13 தேதிகளிலும், கலாக்ஷேத்ராவில் செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெற்றது.
புரிசை நாடகப்பள்ளி என்ற பேனர் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மர பெஞ்சு. மொத்தம் ஐந்து மாணவர்கள். மூன்று ஆண்கள், இரு பெண்கள். ராவணனாக வேஷம் கட்டுகிற கோபாலை தவிர மற்ற அனைவரும் சுவாரஸ்யமாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது தான் வந்து அமர்ந்திருக்கும் நம்மை வரவேற்க அத்தனை இனிமையான பாடல்களை பாடுகிறார்கள். சின்ன சின்னதாக நடனம் வேறு. போட்டியும், கேலியுமாக ஒத்திகை நடந்துகொண்டிருக்கிறது. கோபால் மட்டும் இவர்களை பார்ப்பதாக காணோம். தரையையே கோபமாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒத்திகை செய்து ஓய்ந்து போகிறவர்கள் அவனைச் சீண்ட, ‘கூத்துக்கு முழுக்கு போடறேன்’ என்று குபுக்கென எழும்புகிற தீயென எழுந்து செல்கிறான்.
கூத்துக் கலைக்கு கிடைக்காத கவனமும் தெருக்கூத்து என்ற பெயரில் சினிமா கலப்பட கலை வடிவம் பெயர் பெற்றிருப்பதை அவன் கோபம் மூலம் நமக்கும் சொல்கிறார்கள். சண்டையும் சமாதானமுமாக நகர, ஆசான் வந்து விடுகிறார். அடங்கி ஒடுங்கி ஒத்திகை தொடர்கிறது. ஒத்திகை முடிந்த அன்று இரவு, ஆசான் இறப்பதாக விதி அமைய, அங்கு வருகிற எம தர்மனையும் லட்சுமனன் – இந்திரஜித் போரையும் சுவாரஸ்யமாக கலந்து சர்ரியல் முடிவுடன் நிறைவு பெறுகிறது நாடகம்.
இந்த மேடை நடிகர்கள் தான் எத்தனை திறமை வாய்ந்தவர்கள்! என்ன குரல்வளம்! எத்தனை பக்க வசனத்தை, எத்தனை பெரிய பெரிய பாடல்களை ஒரு இடம் கூட பிசகாமல் அத்தனை சுத்தமாக, தைரியமாக நடிக்கிறார்கள். அங்கங்கே சிலிர்க்க வைக்கிறார்கள். எந்த வித நடிப்பானாலும் அத்தனை ஆர்வத்துடன் நடிக்கிறார்கள். குரங்கென்றால் சொறிவதற்கும் குதிப்பதற்கும் கூச்சப்படுவதேயில்லை. அந்த ஐந்து பேருக்கும் தனித்தனியே கைகுலுக்கிவிட்டு வந்தேன்.
லட்சுமணனாக நடித்த Cordis Paldanu ஒரு குட்டி அதிசயம்! பையனுக்கு வயசு 20. இரண்டு மாதமாக தான் தமிழ் கற்கிறான். நடிப்பெனில் அத்தனை இஷ்டம். என்னமாய் நடிக்கிறான்! தமிழ் அத்தனை தெளிவு, அத்தனை சுத்தம். நாடகத்தின் ஹைலைட் அவன் என்றே சொல்லலாம். நாடகம் முடிந்ததும் ‘எங்கள் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட இத்தனை சுத்தமாக ஆர்வமாக தமிழ் பேசுவதில்லை’ என்று சொல்லிவிட்டு சலாம் போட்டுவிட்டு வந்தேன்! எல்லோரும் பகல் இரவு பார்க்காமல் வேலை செய்கிற மென்பொருள் வல்லுனர்களாம். சனி ஞாயிறில் மட்டும் உழைத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்!
ஆசானாக வருபவர், நிஜமாகவே கூத்துப் பள்ளியின் ஆசான் (புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான்!). அவரின் நடிப்பு கம்பீரமாக இருந்தாலும், கதையோடு ஒட்டாமல் அவரின் தனித்தன்மையை விளக்க எடுத்துக் கொண்ட நேரமும், அதை செய்த முறையும் சரியான கொட்டாவி!
ஐந்து மாணவர்களும் குரங்குகளாக நடிக்கிற கட்டமொன்றில், சஞ்சீவி இலையை உடனே எடுத்து வந்து அதன் சாறால் காயம் ஆற்ற வேண்டிய அவசியம். சஞ்சீவி மலை முழுக்க இலையைத் தேடியும் பயனில்லை. எது சஞ்சீவி இலையென்று தெரியவில்லை. நேரம் கடத்தாமல், சஞ்சீவி மலையை அப்படியே அடியோடு பெயர்த்துக்கொண்டு பாட்டு பாடிக் கொண்டே போகிற பிட், பரவசம்! நாடகத்துக்குள் நாடகமாக வருகிற ‘Kooththu in my blood’ ரசனை! ஒரு ஹோட்டல் செட்டப்பை தத்தகாரத்திலேயே நடத்திக் காட்டியது வெடிச்சிரிப்பு.
ஏகபட்ட விஷயங்களை ஒன்றரை மணி நேரத்தில் சொன்னது பிரச்சினையில்லை. ஆனால் கோர்வையாக சொல்லாதது சின்ன குறை. அதிகாயாவின் இறப்பிற்கு அவனின் அம்மா வைக்கிற சாவு ஓலத்தை திருத்தி திருத்தி அழுவது அலுப்பு!
சுமார் முப்பது பேர் இருந்தார்கள் அங்கே. நாடகம் முடிந்து இயக்குனர் குமார் பேச ஆரம்பித்த போது தான் தெரிந்தது, அதில் இருந்த 27 பேர் அவரின்/நடிகர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள். இரண்டு பேர் நிருபர்கள். மீதி ஒருவர் யார் – சாட்சாத் அடியேன் தான்! (இதுக்கெல்லாம் எனக்கு யாரும் விழா எடுக்க மாட்டீர்களா?)
இயக்குனர் பேசுகையில் ‘தியேட்டர் ஃபெஸ்டிவல்’ நடத்தும் அந்த முண்ணனி பத்திரிக்கை மீது தனக்கு இருக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்தக் கலையின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும், அதன் அழிவில் அவருக்கு எற்பட்ட வருத்தமும் நன்றாகத் தெரிந்தது. அது நாடகத்தில் இன்னும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். இருந்தாலும், தரமான நாடகம். வித்தியாசமான அனுபவம்.
அடுத்து நடைபெறும் இடங்கள் நாட்கள் குறித்து விபரம் அறிய indianostrum.theatre@gmail.com – க்கு மின்னஞ்சல் தட்டுங்கள்.
படங்கள் – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
வாரணம் ஆயிரம் (இசை)
அப்டேட் – ஏத்தி ஏத்தி பாடலை எழுதியவர் நா.முத்துகுமார். தாமரை அல்ல!
———————————————————————————————–
ஹாரிஸ் ரொம்ப காபி அடிக்கிறார் என்று பரவலான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நான் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. கௌதம் – ஹாரிஸ் – தாமரை கூட்டணியின் ரசிகன் நான். ஏழு பாட்டு என்பது சர்ப்ரைஸ். இசை விமர்சனம் செய்ய உன்னிடம் என்ன இருக்கு என்று கேட்டால், ரெண்டு காதுகளை தவிர வேறொன்றும் இல்லை!
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை (ஹரிஹரன்/ தேவன்/பிரசன்னா. )
கிட்டார் வாசிக்கும் நாயகன், முதல் முறை நாயகியைப் பார்த்ததும் வாசிக்கிற சொந்த காதல் ட்யூன்! சூர்யாவுக்கு இன்னொரு ந்யுயார்க் நகரம்! சலனம் அதிகமில்லாத சின்ன நீரோடைப் போல போகிறது பாட்டு. மென்மையான மெட்டில் சின்ன சின்ன வாத்தியங்கள என கலப்படமில்லாத மெலடி. பல்லவியில் திடீரென நமக்கு ‘சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ’ என்ற பாடத் தோன்றுகிறது. தாமரையின் வரிகள் ரொம்ப சுகம். (என்னோடு வா வீடு வரைக்கும் / என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்!) ‘காஞ்சனை’ போன்ற வார்த்தைப் பிரயோகம் எல்லாம் அவரால் தான் முடியும். இருந்தாலும் மயக்குவது ஹரிஹரன் தான். கொலுவில் எத்தனை பொம்மைகள் இருந்தாலும், நடு நாயகமாக கம்பீரமாக பெரிய பொம்மை வீற்றிருப்பது போல குரலில் அத்தனை கம்பீரம், குழைவு. அவருக்காகவே பாட்டு ஹிட்டு! தேவன் அங்கங்கே ஆ ஊ என்கிறார். Pick of the album!
முன்தினம் பார்த்தேனே: (நரேஷ் ஐயர் / ப்ரஷாந்தினி)
சூர்யா தலைவி சிம்ரனிடம் ப்ரபோஸ் செய்து பாட்டை துவக்கி வைக்கிறார். காதல் பாட்டு. ஏற்கனவே நமக்கு பழகிய ஆனால் சிக்கென்ற மெட்டு. ‘தோ தில் மில் ரஹேன் ஹை’ டைப்பில் கிறங்குகிறது மெட்டு. முதல் பி.ஜி.எம்மில் இந்த காதிலிருந்து அந்தக் காதுக்கும், அந்த காதிலிருந்து இந்தக் காதுக்கும் ஓடும் அந்த ஜல் ஜல் சுவாரஸ்யம். நரேஷ் ஐயர் கொஞ்சுகிறார். ப்ரஷாந்தினியின் குரல் புதுசாக இருக்கிறது. இரண்டாவது பி.ஜி.எம்.மிலும் சாக்ஸஃபோன் தான் உபயோகப்படுத்த வேண்டுமா? தாமரை மீண்டும் இதம் தருகிறார். (“சல்லடை கண்ணாக / நெஞ்சமும் புண்ணானதே” , “உயிர் ரெண்டும் உராயக் கண்டேன் நெருங்காமலே”) . காதல் என்றாலே ரகசியம் என்று இருக்கிற பரவலான கருத்தை மீறி, காதலன் காதலியைப் பார்த்து ‘இப்போது என்னோடு வந்தால் என்ன / ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன?’ என்று கேட்பது புதுசு. மூணு மாசம் தாரளமாக முணுமுணுக்கலாம்.
அடியே கொல்லுதே : (கிருஷ்/ஸ்ருதி கமல்ஹாசன்/பென்னி தயாள். )
ஆறேழு மாசத்துக்கு முன்னாலே லீக் ஆன பாட்டு. செமத்தியான கிட்டாரோடு செமையான பாட்டு. உற்சாகமான நடை போல பாடல் துள்ளுகிறது. அந்த கிட்டார் கொஞ்சம் இரைச்சலோ என்று அடிக்கடி சந்தேகம் வருகிறது. ஸ்ருதி கமல்ஹாசன் குரல் எல்லாப் பாடல்களுக்கும் பொருந்துமா என்று சந்தேகம். ஆனால் இந்த பாட்டுக்கு நன்றாகவே பொருந்துகிறது. பாடலை முடித்து வைக்கிற ஹம்மிங் செம ஜாலி. மீண்டும் தாமரை மெனக்கெட்டிருக்கிறார். பாட்டின் முதல் அடியே கொல்லுதே. (மழைக் காலத்தில் சரியும் / மண் தரைப் போலவே மனமும் / உனைக் கண்டதும் சரியக் கண்டேனே). பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட்.
அனல் மீது பனித்துளி: (சுதா ரகுநாதன்)
இந்த பாட்டு இந்த படத்தில் தானா என்று சி.டியை திருப்பி திருப்பி பார்க்க வைக்கிறது. கௌதம் எப்படி இந்த ட்யுனை எல்லாம் ஓகே செய்தார்? சோக பாட்டு என்று ரொம்ப சோர்வாக போட்டிருக்கிறார்கள். சோகத்தை மென்சுகமாக சொல்வது தானே ட்ரெண்ட்? என்னவோ போங்கள். தாமரை என்ன எழுதினாலும், எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். சுதா ரகுநாதனுக்கு ராசி இல்லை போலும். அவரின் (ஜனரஞ்சக) முதல் பாட்டும் காலி. அடுத்து இந்த பாட்டும் காலி. அம்மா சிம்ரன் கஷ்டப்பட்டு சூர்யாவை வளர்க்கும் போது போட்டுத் தொலைவார்கள் போல.
ஏத்தி ஏத்தி ஏத்தி : (பென்னி தயாள்/ நரேஷ் ஐயர்/ சோலார் சாய் )
ஆரம்ப விசிலே ‘மின்னலே’வை நினைவுபடுத்தி உற்சாகத்தை குறைக்கிறது. சூர்யாவிற்கு 17-18 வயசு இருக்கும் போது வர வேண்டிய பாட்டு. நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்ற துவங்குவது, முதல் தப்புகள் செய்வது போன்ற காட்சிகளுக்கு பின்னால் ஓடப் போகிற பாட்டு போல. மெட்டு ஒகே. ‘ராஜா நான் ராஜா/ இந்த பேட்டைக்கு நான் ராஜா’ என்று வரும் போது நல்ல துள்ளல். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை தாமரை வேறு வழியில்லாமல் தளர்த்தியிருக்கிறார். வரிகளை கவனித்தால் எல்லோரும் சொல்வது போல ‘Forrest Gump’ ரீமேக் தானோ என்று தோன்றுகிறது.
ஓம் ஷாந்தி ஓம்: (எஸ்.பி.சரண்/க்ளிண்டன்)
முதல் பாட்டின் ரீமிக்ஸ் என்றாலும், சில வரிகளை மட்டும் தான் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். சரண் அங்கங்கே அப்படியே அப்பா. சூர்யா இந்த பாட்டில் எந்த ஹீரோயினை தேடி விரைகிறார் என்று தெரியவில்லை. வரிகளில் ஒன்றும் புதுமையில்லை. ஓம் ஷாந்தி ஷாந்தி என்று எகிறும் போது மட்டும் ரசனை. மற்றபடி மெட்டு ஸோ ஸோ. மின்னல் போல பாட்டு முடிந்து போகிறது.
அவ என்ன என்ன: (கார்த்திக்/பிரசன்னா)
கௌதம் படத்தில் குத்துப் பாட்டா?? காதல் தோல்வி கானா! ஆனாலும் இரைச்சலில்லாமல் முடிந்தவரை மெலடியாகவே ஆக்கியிருக்கிறார்கள். சில தாளங்களில் ஹாரிஸ் தெரிகிறார். ‘அஞ்சல / வெத்தல / நெஞ்சுல’ என்ற மீட்டரில் தாமரை வரிகளை எழுதியிருக்கிறார். இரண்டாவது ஒபரா ஸ்டைல் பி.ஜி.எம் அவ்வளவாக பொருந்தவில்லை. பாட்டின் பெரும் பலம் கார்த்திக்! இந்தத் தலைமுறை பாடகர்களில் சிறந்தவர். கரெக்டான ஃபீல், உச்சரிப்பு என அனாயசமாக பாடியிருக்கிறார். அனுபல்லவியின் முதல் முடிந்ததும் ஒரு ஏக்க பெருமூச்சு விடுகிறாரே, செம ஜோர்!
‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ மட்டுமே ரொம்ப நாளைக்கு மனதில் பெய்யும். கூட்டணி பெரிதாக ஏமாற்றவில்லை தான்.
நாலு கவிதைகள்
சுத்தமாக எழுத வரவில்லை ஒரு வாரமாக. இனி எனக்கு எழுத வராது என்ற பயம் மீண்டும் நேற்றைய இரவின் தூக்கத்தை தின்று விட்டது. உடனடியாக பழச்சாறு அருந்தி முடிக்க வேண்டிய உண்ணாவிரதம் இது
ஏற்கனவே எழுதிய ஒரு கவிதையோடு புதிதாக மூன்றையும் தேற்றினேன்! பொறுத்தருள்க!
——————————————————————————
#1
திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டு
தொலைந்தவர்கள்
திரும்பிக் கொண்டே இருக்கிறார்கள்
நினைவினில்
தொலைவதாகக் சொல்லிவிட்டு
திரும்பியவர்கள்
தொலைந்தே போயிருந்தார்கள்
நிஜத்தினில்
#2 பொய்மைமெய்!
அது
பொய்யென நினைத்திருந்தேன்
போன நிமிடம் வரை
இக்கணம் தொடங்கி
காலத்தின் நீளமெல்லாம்
அது உண்மையாம்
இடைப்பட்ட நொடிகளில்
தொலைந்தே போயிருந்தோம்
அதுவும் நானும்
#3 சிகப்பு ஷோரூம் கார்.
இதுவரை பயணித்த தொலைவு
450 கி.மீ.
சிக்னல் இளைஞன்
சிறிது நேரம் பார்த்துவிட்டு
நகர்ந்தான்
இதுவரை பயணித்த தொலைவு
455 கி.மீ.
#4
இரவுகளிலெல்லாம்
திறந்த விழி கனவுகளுக்குள்
திணிக்க தொடங்கியிருந்தேன்
தூக்கங்களை
அடங்காதவை
கொஞ்சம் சிந்தி விடும்
அடுத்த பகலில்
கிரகணங்கள்
காலிங் பெல் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்ததில் சித்தி அவசர அவசரமாக உள்ளே வருவது தெரிந்தது. கதவைத் திறந்த அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டபடியே நான் இருந்த அறையை நோக்கி வந்தாள். பட்டுப் புடவை கட்டியிருந்தாள். வழக்கம் போல மிதமான அழகான அலங்காரம். முகத்தில் ஒரு வரியென புன்னகை. உள்ளே தலையை மட்டும் நீட்டி என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன். ‘வெளியே போலாமா’ என்று கேட்டாள். சரியென்று உடனே தலையாட்டினேன். சித்தி கேட்டு நான் மறுப்பது ரொம்பக் குறைவு. யாரும் மறுப்பது போன்ற விஷயங்களை சித்தி கேட்பது மிக மிகக் குறைவு.
“எங்கே சித்தி?”
சித்தி திரும்பி அம்மா இருக்கிறாளா என பார்த்து கொண்டாள். கொஞ்சம் தயங்கியது போலிருந்தாலும், தெளிவாகச் சொன்னாள்.
“இன்னிக்கு அவர் பொண்ணோட ரிஷெப்ஷென். மறந்துட்டியா?”
அவர் என்றால் சித்தப்பா. சித்தப்பாவின் இரண்டாவது தாரத்துப் பெண் லாவண்யாவுக்கு நாளை திருமணம். வழக்கம் போல கடைசி நேரத்தில் போவது என முடிவு செய்திருக்கிறாள் சித்தி. நான் வேகமாக தயாராகத் தொடங்கினேன். சித்தி அம்மாவை பார்க்க உள்ளே சென்றாள்.
சித்திக்கு வயது முப்பத்தைந்து இருக்கும். அம்மாவின் மூன்றாவது சகோதரி, கடைசி தங்கை. வங்கியில் வேலை. துரை சித்தப்பாவிற்கும் சித்திக்கும் எனக்கு ஆறு வயது இருக்கும் போது திருமணம் ஆகியது. மூன்று வருடங்களில் விவாகரத்து ஆகிவிட்டது. இரு தரப்பு சம்மதத்துடன்.
“அம்மாகிட்டே சொல்லிட்டேன்” – சித்தி வந்து நினைவுகளை கலைத்தாள்.
“ம்”. நான் தயாராகியிருந்தேன்.
“அந்த ப்ரௌன் ஷர்ட் போட்டுக்கோயேன்” – கொஞ்சலும் கெஞ்சலுமாக சொன்னாள்.
புன்னகைத்தபடி சட்டையை மாற்றி கொண்டு தயாரானேன். அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். அம்மா என்னைப் பார்த்த பார்வையில் “பாத்துக்கோ” என்ற செய்தி இருந்தது.
ஆட்டோ ஏறியதிலிருந்து நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சித்தியைப் பற்றிய யோசனைகளாகவே இருந்தது. அவளுக்கு பிள்ளைகள் இல்லை. அவள் என்னை தம்பியாகவோ மகனாகவோ தான் பார்த்தாள். அதில் எனக்கு நிறைய மகழ்ச்சியும் பெருமையும். அண்ணா, தங்கை, மற்ற பெரியப்பா சித்தப்பா பிள்ளைகளுக்கு கிடைக்காத விஷயம் அது. எனக்கு 22 வயது என்பது சித்தியுடன் இருக்கும் போது மறந்து போய்விடும்.
அந்த லாவண்யாவின் நினைப்பு வந்தது. துடுக்கத்தனம் கொஞ்சம் அதிகம். சித்தியை அவள் ரொம்ப விரும்பவில்லை. ரிஷப்ஷனில் எதுவும் சங்கடமாக நடக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். துரை சித்தப்பாவும் அவரின் இரண்டாவது தாரமும் சித்தியிடம் நல்ல முறையிலேயே நடந்து கொண்டார்கள். சித்தப்பாவின் மனைவி சித்தி வீட்டிற்கு மாதம் ஒரு முறை தவறாமல் வந்து செல்வார். அவருக்கு சூது வாது தெரியாது. அவரின் உறவினர்கள் சொல்வதையும் மீறி அவர் வந்து போகிறாரென நான் அறிந்திருந்தேன். சித்தப்பா அவ்வப்போது அவருடன் வருவார் என்று சித்தி சொல்லியிருக்கிறாள்.
மண்டபம் வந்துவிட்டது. வாசலலியே யாரோ சித்தியை அடையாளம் கண்டுகொண்டார்கள். ஒரு விதமான பதட்டமான மரியாதை கிடைத்தது. சித்தி திட்டமாக பேசிச் சிரித்து உள்ளே நகர்ந்தாள். நானும் பின் தொடர்ந்தேன். உள்ளே இடம் பார்த்து அமர்ந்தோம். சித்தப்பா எங்களைப் பார்த்துவிட்டு சித்தியை அழைத்துக் கொண்டு வந்து வரவேற்றார். சித்தப்பாவின் மனைவி கொஞ்ச நேரம் சித்தியின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
அவர்கள் போனதும் சித்தி பையிலிருந்து கிஃப்ட் பாக்கெட் ஒன்றை எடுத்தாள். காதருகே வந்து ‘தங்க ஜோடி மோதிரம்’ என்று கிசுகிசுத்தாள். இருவரும் மேடைக்கருகே சென்று வரிசையில் நின்றோம். லாவண்யா எங்களை தற்செயலாக கவனித்தாள். அதன் பிறகு அடிக்கடி தற்செயலாக எங்களைப் பார்த்தாள்.
நாங்கள் அருகே வந்ததும் லாவண்யா மாப்பிள்ளையிடம் ‘நான் சொன்னேன்ல’ என்று ஏதோ சொன்னாள். சட்டென இருவரும் சித்தியின் காலில் விழுந்து எழுந்தார்கள். சித்தி கண்கலங்கியது போல இருந்தது. புகைப்படம் எடுக்க எத்தனித்த போது லாவண்யா கை காண்பித்து நிறுத்தினாள். தேடித் தேடி சித்தப்பாவை கை காட்டி அழைத்தாள். ஐவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். முதல் புகைப்படம் எடுத்து முடித்ததும் ‘நீங்க நாலு பேரும் நில்லுங்க’ என்று சொல்லிவிட்டு நான் விலகிக் கொண்டேன்.
*****
சித்தியின் ஃப்ளாட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தோம். சித்தியின் முகம் வாட்டமாய் இருந்தது. அவள் எப்போதாவது இப்படி ஆவது வழக்கம். பூட்டைத் திறந்து உள்ளே சென்றோம். பால் கலக்கப் போவதாக சொல்லிவிட்டு சித்தி உள்ளே போனாள். நான் முகம் கழுவிக் கொள்ளச் சென்றேன். திரும்பி வருகையில் சித்தி டைனிங் டேபிளில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தாள். சமையலறைக்குள் சென்று பார்த்தால் பால் கலக்க முயன்றதற்கான அறிகுறி கூட இல்லை. வெளியே வந்து சித்தியைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டேன்.
‘கவிதை எழுதுறியா?’
‘ம்’
‘பால் கலக்கலயா?’
பாலா? என்பது போல பார்த்தாள். நான் எதுவும் சொல்லவில்லை. குனிந்து திரும்பவும் எழுதத் தொடங்கினாள். சின வினாடிகள் கழிந்தன.
‘ஓ, பால் கலக்கறேன்னு சொன்னேன் ல?’
‘ம்’
சித்தி பேனாவை மூடி வைத்து விட்டு உள்ளே போனாள். அவள் போனதும் நான் அந்த பெரிய டைரியை எடுத்துப் படித்தேன். வழக்கம் போல எனக்கு எதுவும் புரியவில்லை. சித்தி எனக்கு மட்டுமே அந்தக் கவிதைகளை படிக்கக் கொடுப்பாள். முடிந்த வரை சில வரிகளை மனனம் செய்து விஷயம் தெரிந்தவர்களை கேட்டுப் பார்த்தும் பலனில்லை. சித்தியைப் போலவை அவையும் கடினமாகவும் இருந்தன. சித்தப்பா எப்போதாவது அவர் மனைவியுடன் வருகையில் அவரிடம் அவற்றை படிக்கக் கொடுப்பாள் என்று சித்தி சொல்லியிருக்கிறாள்.
இரண்டு பால் கோப்பையோடு சித்தி வந்தாள். வலது கையில் இருப்பதை என் பக்கம் வைத்து விட்டு அமர்ந்தாள்.
“இன்னும் தூக்க மாத்திரை சாப்படறியா சித்தி?”
ஆமாம் என்று தலையசைத்தாள்.
“டாக்டர் நிறுத்தச் சொன்னதா அம்மா சொன்னாங்க?”
இல்லையாம். மீண்டும் தலையசைத்தாள்.
சித்திக்கு மனசு சரியில்லை என்பது புரிந்தது. மிகவும் சோர்ந்திருந்தாள்.
“எதப் பத்தி எழுதறே?”
கொஞ்சம் தாமதமாக சித்தி என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
“சாவப் பத்தி. தற்கொலைனு வெச்சுக்கோயேன்”
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கொஞ்சம் எச்சில் கூட்டி விழுங்கி கொண்டேன். ஏதும் பேசாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
“சந்தோசத்துல அப்படியே செத்துடலாம் போல இருக்குன்னு யாராச்சும் உங்கிட்ட சொல்லிருக்காங்களா அஷோக்? ஏன் அப்படி சொல்றாங்க? இதை விட அனுபவிக்க பெரிய சந்தோஷம் வாழ்க்கையில வந்துட முடியாதுன்னு தானே?”
“ம்”
“ரொம்ப மனக் கஷ்டத்துல இருக்கவங்களும் தற்கொலை செய்துக்கிறாங்க. அதுவும் ஒரு பேராசை தானே? எல்லாத்துலேர்ந்தும் விடுதலை.”
“ம்”
‘இப்போ நான் ரொம்பவும் சந்தோஷமாவும் இருக்கேன். ரொம்ப துக்கத்துலயும் இருக்கேன்”
“என்னாச்சு சித்தி?”
“எம் பொண்ணுக்கு கல்யாணாம். ஆனா, அவ என் பொண்ணு இல்ல?!”
சித்தி இப்படி குரல் உயர்த்தி நான் கேட்டதே இல்லை. யாரோ போல இருந்தாள். புருவங்களை சுருக்கியிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. உணர்ச்சியின் வசப்பட்டிருந்தாள்.
எனக்கு கண் கலங்கி விட்டது. “மனசக் குழப்பிக்காத சித்தி, ப்ளீஸ்”.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தாள். ஆசுவாசப்பட்டது போலவும் இருந்தாள். இல்லாதது போலவும் இருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு, “சரி, வா படுக்கலாம்” என்றாள். மொபைல் எடுத்து அம்மாவை அழைத்து சித்தியின் வீட்டிலேயே தூங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டு படுக்கப் போனேன். சித்தி வழக்கம் போல தரையில் படுத்துக்கொண்டாள். தூக்கம் வராமல் ரொம்ப நேரம் புரண்டோம்.
காலையில் எழுந்த போது சித்தி டைனிங் டேபிளில் கவிதை டையோடு அமர்ந்திருந்தாள். தூங்கி எழுந்ததும் அப்படியே எழுதத் தொடங்கியிருந்தாள் போல. என்னைப் பார்த்து இதமாக சிரித்தாள். பழைய சித்தியாக இருந்தாள். எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
“குட் மார்னிங். நேத்து நைட் என்னென்னவோ பேசிட்டே”
ஏதும் சொல்லாமல் புன்னகைத்தாள். அந்த பெரிய டைரியை எடுக்க முயன்ற போது ‘தரமாட்டேன்’ என்பது போல பிடித்து தன் பக்கம் இழுத்தாள். நான் பலமாக சிரித்தபடி பெரும் பலம் கொண்டு இழுத்து புதிய பக்கத்தில் எழுதியிருந்ததை படித்தேன்.
“ஓர் இரவு போதும்
எதிலிருந்தும்
என்னை மீட்டெடுக்க”
*****
ரிசர்ச்சுக்காக டெல்லி யுனிவர்சிட்டியில் அப்ளை செய்துவிட்டு காத்திருந்த காலம் அது. லைப்ரரியில் இருந்த போது தெரியாத நம்பரில் இருந்த அழைப்பு வந்தது. பேசியது துரை சித்தப்பா. என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்றும் கார்பரேஷன் மைதானத்திற்கு நாலு மணிக்கு வரச்சொன்னார்.
அவரிடம் நான் பேசி பல நாட்களாயிருந்தது. அவரிடம் நான் பேசியதே இல்லை என்று கூடத் தோன்றியது மைதானத்தில் காத்திருந்த போது அவர் அந்தக் கோடியில் இருந்து நடந்து வந்தார். கனமான சரீரம். லேசான முன் வழுக்கையும் தொப்பையும். சஃபாரி அணிந்திருந்தார். அவர் என்னை அடையும் போது காரணமில்லையென்றாலும் அவரை எப்போதுமே எனக்கு பிடித்திருந்ததை உணர்ந்தேன்.
வணக்கம் என்பது போல கை காண்பித்தார். எனக்கு திடீரென கூச்சமாயிருந்தது. கொஞ்ச நேரம் அமைதி. நாங்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்ச்சிற்குப் பின்னால் இருந்த மரம் ஒரு சருகை அவர் தொடையில் இட்டது. அது இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்ததை சற்று நேரம் பார்த்திருந்தார்.
“உங்க சித்தியை நினைச்சா கவலையா இருக்கு தம்பி” என்று தொடங்கினார். என் பக்கம் திரும்பாமல் நேரே பார்த்துகொண்டு பேசினார்.
“நான் அவளை ரொம்ப காதலிக்கிறேன். அவ கேட்டது எல்லாமே செஞ்சிருக்கேன். விவாகரத்துலேர்ந்து மறுகல்யாணம் வரைக்கும். என்னை விட உங்க சித்தியை யாரும் புரிஞ்சுக்க முடியாது. அவளோட வேலை பாக்குறவங்களும் சரி, நீங்க எல்லாரும் சரி, அவளோட ஒரு முகத்த தான் பாக்குறீங்க”
இதை நான் அறிந்தே இருந்தேன் என்று நினைத்தேன். சித்தி வலிய தன்னைச் சுற்றி ஒரு தனிமையை உருவாக்கியிருந்தாள். எங்களோடு வந்து விடும்படி அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ கேட்டும் சித்தி மறுத்துவிட்டாள். தாத்தா இருந்தவரை மறுகல்யாணமும் குழந்தை தத்தெடுப்புக்கும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்போது எல்லாம் தாமதமாகி விட்டது.
“நீன்னா அவளுக்கு கொள்ளை பிரியம்” என்று என்னை திரும்பிப் பார்த்தார். ஏதோ சொல்ல முற்பட்டவர் நிறுத்தி விட்டார்.
“நான் ரொம்ப தப்பு பண்ணிடேன்னோன்னு தோணுது. இப்ப எதுவுமே செய்ய முடியாம தவிக்கிறேன். உங்க அப்பா அம்மா கூடவே இருக்காங்கன்னு தெரியும். இருந்தாலும் நான் உன் மேல ரொம்ப நம்பிக்கையோட இருக்கேன். கடைசி வரைக்கும் நீ அவள நீ பாத்துக்கணும்”
“கண்டிப்பா” என்றேன். இன்னும் கொஞ்சம் குரல் உயர்த்திருக்கலாமென தோன்றியது.
கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தவர் கண் கலங்கியிருந்தார். “அவ ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்காப்பா”. கண்களில் பொல பொலவென கண்ணீர். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
“கற்பனையிலேயே வாழ்ந்துட்டு இருக்கா பா. கொஞ்சம் கவனிச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு விருட்டென கிளம்பிவிட்டார்.
எதுவும் புரியாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
*****
இரண்டு மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். சித்தப்பா சொன்னதில் நான் என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து யோசித்தே நாட்கள் கழிந்திருந்தன. டெல்லிக்கு கிளம்புவதற்கு முன் தினம் அம்மாவிடம் சொல்வது என்று முடிவு செய்தேன். மாடிக்கு அவளை அழைத்து சென்று சித்தப்பா சொன்னதையும் சித்தி அன்று பேசியதையும் வரி மாற்றாமல் சொன்னேன். அம்மா அழுதுவிடுவாள் போல கேட்டுக்கொண்டிருந்தாள்.
“என்ன பண்ணனும்மா? எனக்கு புரியல” என்றேன்.
“அஷோக், உங்கிட்டே ஒரு விஷயம் சொல்லாம விட்டுட்டேன்” ரொம்ப சிரமப்பட்டு சொன்னாள்.
“என்னது?”
“நீ இல்லாத சமயமா சித்தியோட பக்கத்து ஃளாட் பெரியவர் வந்து போனார்.”
நான் புரியாமல் பார்த்தேன்.
“துரை சித்தப்பாவோட வொய்ஃப் வந்துட்டு போற அன்னிக்கெல்லாம் நைட் முழுக்க பேச்சு சத்தம் கேக்குதாம், ரெண்டு மாசமா. இதுவரைக்கு ரெண்டு தடவ வந்துட்டு போய்ட்டார்”
“பேச்சு சத்தமா? சித்தி மட்டும் இருக்கும் போதா?”
அம்மா ஆமாமென தலையசைத்தாள். பெரிதாக அழத் தொடங்கி விட்டாள்.
“என்ன பண்றதுன்னே தெரியலப்பா. உங்கப்பா நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டு போகலாம்னு சொல்றார். என்னன்னு சொல்லி கூட்டிட்டு போறது?”
எனக்கு திக்கென்றிருந்தது.
“உன்ன வெச்சு தான் பேசலாம்னு இருந்தோம். ஏதாவது செய்யணும். அடுத்த வாரம் கண்டிப்பா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடுவோம். நீ கவலப்படாத” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு சித்தி வந்திருந்து நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தது ரொம்ப நாட்களுக்கு கனவில் வந்தது.
*****
விடுமுறை கிடைப்பது ரொம்பக் கடினமாக இருந்தது. அம்மா பேசியபோது சித்தியை டாக்டரிடம் அழைத்து செல்ல முடிந்ததென்றும் இன்னும் ஒரு முறை வரச் சொல்லியிருக்கிறார் என்றும் சொன்னாள். ஆனால் அதன் பின் சித்தி பிடி கொடுக்கவில்லை. சித்தியிடம் பேசியபோது அவள் எப்போதும் போல பேசினாள். நிறைய கவிதைகள் எழுதியிருப்பதாக குறிப்பிட்டாள்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு மூன்று நாள் விடுமுறையில் வந்திருந்த போது ஸ்டேஷனில் இருந்து நேரே சித்தி வீட்டிற்கு தான் சென்றேன். ரொம்பவும் இளைத்திருந்தாள். ஃபோனில் தெரிந்த உற்சாகம் குரலில் மட்டும் தான் இருந்தது.
வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பேச நேரம் கிடைத்தபோது அடுத்த வாரம் டாக்டரே சித்தி வீட்டுக்கு வரப்போவதாக சொன்னாள். சித்தப்பாவின் ஏற்பாடு என்று சொன்னாள்.
அடுத்த நாள் காலை அப்பா என்னை உலுக்கி எழுப்பினார். சித்தப்பாவின் மனைவி நேற்றிரவு இறந்துவிட்டாராம். ஹார்ட் அட்டாக். அவசரமாக நானும் அப்பாவும் கிளம்பினோம். சித்தி வரவில்லையென்று சொல்லிவிட்டதாக அம்மா சொன்னாள்.
அழுகை சத்தம் தெருமுனையை அடைந்திருந்தது. சித்தப்பா கல்லு போல அமர்ந்திருந்தார். கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம். நான் செருப்பு மாட்டிக்கொண்டிருக்கும் போது லாவண்யாவின் கணவர் வந்து சித்தப்பா என்னை அழைப்பதாக சொன்னார். அப்பா வெளியிலேயே காத்திருப்பதாக சொன்னார்.
சித்தப்பா என்னைப் பார்த்ததும் வா என்று சொன்னாலும் ஒலி எழும்பவில்லை. என் கையை மிகவும் இறுகப் பிடித்துக் கொண்டு எதோ சொல்ல முயல்வதும் தோற்பதுமாக இருந்தார். மிகுந்த சிரமத்துக்கிடையே தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் சித்தியை பத்திரமாக பார்த்துக்கொள் என்றும் சொன்னார்.
*****
நானும் அம்மாவும் அன்று முழுவதும் சித்தி வீட்டிலேயே கழித்தோம். சயந்திரம் அப்பாவும் வந்தார். சித்தி ரொம்ப தளர்ந்திருந்தார். சித்தப்பாவின் மனைவியைப் பற்றி ரொம்ப பிரியமாக பேசினாள். சித்தப்பா மற்றும் அவர் மனனவியின் வாழ்க்கையைப் பற்றி சித்திக்கு இவ்வளவு தெரியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இரவு வீட்டிற்கு சென்று சித்திக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தேன். சித்தி லாவண்யாவின் கல்யாணதன்று இரவு இருந்தது போல இருந்தாள். பால் குடித்து விட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கண்கள் சொக்க ஆரம்பித்துவிட்டன. எனக்கும் தூக்க மாத்திரை கலந்து விட்டாளோ என்று கேட்க நினைத்து முடியாமல் தூங்கிவிட்டேன்.
காலையில் எழுந்த போது சித்தி அதே இடத்தில் இருந்தாள். தெளிவாக இருந்தாள். கொஞ்சம் புன்னகைத்தாள். அவளாகவே அந்த டைரியை என்னிடம் தந்தாள். அன்றைய தேதியில் அதே பழைய வரிகளை எழுதியிருந்தாள்.
“ஓர் இரவு போதும்
எதிலிருந்தும்
என்னை மீட்டெடுக்க”
மனசு கொஞ்சம் லேசானது. காபி குடித்து விட்டு கிளம்பிவிட்டேன்.
*****
வீட்டிற்கு வந்து குளித்துக் கொண்டிருக்கையில் என்னை அழைத்தபடி பலமாக கதவை தட்டினாள். அவசரமாக துண்டை சுற்றிகொண்டு திறந்து பார்த்தேன். அம்மா “சித்தி சித்தி” என்று அரற்றினாள். அவள் முழுதாக சொல்லாதது கலக்கமாக இருந்தது. குலுங்கி குலுங்கி அழுதபடி அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டாள்.
சித்தி வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து விட்டது.
*****
ஆறேழு மாதங்களுக்குப் பிறகு அதே மைதானத்தில் சித்தபாவிற்காக காத்திருந்தேன். கையில் சித்தியின் கவிதை டைரி. சித்தியின் இறப்புக்குப் பின் டெல்லிக்கு கிளம்பிய போது அதையும் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். பல இரவுகள் அதை மீண்டும் மீண்டும் படித்தபடி கிடந்திருந்தேன். சித்தப்பா அது தனக்கு வேண்டுமென்று (அம்மா மூலமாக) கேட்டதனால் இப்போது வந்திருந்தேன்.
சித்தப்பா அப்படியே இருந்தார். முகத்தில் மட்டும் கொஞ்சம் சுருக்கங்கள். எதுவுமே பேசக் கூடாது என்று முடிவு செய்திருந்தது போல இருந்தார். அரை மணி நேரம் அந்த டைரியை புரட்டியபடி இருந்தார்.
‘இதை நான் எடுத்துக்கட்டுமா” என்றார்.
“ம்” என்று தலையசைத்தேன்.
“நல்லா படி தம்பி” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். முன்பை விட சோர்வான நடையில் ஒரு புள்ளியாக மறைந்துவிட்டார்.
அந்த நடையும், சித்தியின் கருகிய கால்களும், சில கவிதை வரிகளும் பொருத்தமில்லாத இடங்களில் கனவில் வந்துக்கொண்டேயிருக்கின்றன.
தேநீரில் சினேகிதம் – 2
Sip #1 – நமது நாட்டின் ஒரே பிரச்சினை அரசியல்வாதிகள் என்பது மீண்டும் நன்றாக புரிகிறது. பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரப் போகிறார்களாம். அது தான் தீவிரவாதத்தை தடுக்கிற ஒரே வழி என்று அவர்கள் நம்புவதே விசித்திரமாக இருக்கிறது. அப்படி நம்புகிறவர்கள் என்ன எழவிற்கு அதை வாபஸ் பெற்றார்கள்? இப்போது எதற்கு அதை வேறு வடிவில் கொண்டு வருவானேன்? எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து அதைப்பற்றி விவாதிக்கவாவது முடியுமா? ஜெயலலிதாவும் வைகோவும் கை கோர்த்து ‘பொடா சட்டத்தை கொண்டு வாருங்கள்’ என்று சொன்னால் எத்தனை வேடிக்கையாக இருக்கும்! எல்லாம் நம் தலையெழுத்து.
#2 – அலுவலக நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு போய்விட்டு திரும்புகையில் தாம்பரத்தில் ரயிலேறி இருந்தோம். என்னுடன் வந்தவர் வங்காளி. எனக்கு தெரிந்த வங்காளப் படங்கள்/நாவல்கள் குறித்து அவரிடம் பேச ஆவலாக இருந்தேன். உங்களிடன் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று பீடிகை போட்டு விட்டு, பேச ஆரம்பித்தேன். கிண்டி வந்திருந்தோம். ஒரு மாதிரியான குழப்பமான முகத்துடன் என்னை பார்த்து ‘நிறுத்து’ என்றார். என்னவென்று கேட்டேன். ‘நீ நிறைய கேள்விகள் கேட்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனால் எனக்கு பதில் சொல்கிற உணர்வே இல்லையே’ என்று சொன்னார். நான் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என்னைப் பார்த்து ‘நீ என்னை பதில் சொல்லவே விடவில்லை. ஒரு வார்த்தை சொன்னதும் அதை பிடுங்கி ஒரு கேள்வியாக திரும்ப எறிகிறாய்’ என்றாய். மறுபடி நான் ஒன்றும் சொல்லவில்லை. ரொம்ப அவருக்கு ஒரு விதமான வியப்பு முகத்தில் தேங்கி இருந்தது. பாவம். மீண்டும் அது போன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்த போது, ரயில் பெட்டி காலியாக இருந்த போதிலும், ரொம்ப தூரமாக போய் உட்கார்ந்து கொண்டார். விதமாக விதமாக படமெல்லாம் எடுத்தார். என் பக்கம் திரும்பவே காணோம். மனிதர்கள் ஆனாலும் ரொம்ப மோசம்.
#3 – தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் யாருக்கும் அறிவில்லை என்பதும் என்னுடைய உயரிய எண்ணம். (என் எண்ணங்களை நானே தாழ்மையானவை என்று எதற்காக சொல்லிக் கொள்ள வேண்டும்?) எதற்காக இந்த மதுஸ்ரீயை பாட வைக்கிறார்கள் என்று புரியவில்லை. அவருக்கு கமகம், கரகரப்பிரியா, கரகரப்பில்லாத பிரியா எல்லாம் நன்றாக வந்தால் என்ன? தமிழ் வரவில்லையே! வித்யாசாகருக்கே இப்போதெல்லாம் மெலடி ஒழுங்காக வருவதில்லை. அதையும் தாண்டி ஒரு மெட்டு சுமாராக வந்திருக்கிறதே, (ஜெயம்கொண்டான் – நான் வரைந்த வைத்த சூரியன்), அதை ஏன் மதுஸ்ரீ வாயில் கொடுத்து கெடுப்பானேன்? (சாம்பிள் – ******** உண்தன் கன்கல் தொட்டு தொட்டு தங்கசிருப்பம் எண்ட்ரு மாரியதே… முதல் வார்த்தை என்னவென்று தெரியவில்லை) ரஹ்மானை உதைக்க வேண்டும். சாதனா சர்கமும் இப்படித் தான் இருந்தார். இப்போது நன்றாக உச்சரிக்க ஆரம்பித்ததும் பாட்டே தருவதில்லை. யாரோ ஒருவர் ஒரு பேட்டியில் அவர்களுடையது மழலைத் தமிழ் என்று சிலாகித்து இருந்தார். அப்படி என்றால் உதித் நாராயணன், மதுஸ்ரீயை வைத்து ‘கன்மனிப் பூங்கா’ நடத்தித் தொலையுங்கள்.
#4 – தப தப என்று ஆயிரம் கைதிகளை அண்ணா பிறந்த நாள் அன்று விடுதலை செய்து கைதிகளையும் நம்மையும் திக்குமுக்காட செய்திருக்கிறது அரசு. தன்னிலை மறந்து ஒரு முறை தவறு செய்தவர்கள், நன்னிலை மறந்து பல முறை தவறு செய்தவர்கள், ஆண்கள், பெண்கள், வயசாளிகள் என சகலரும் சிறகடித்தனர். ஒரு தொண்ணூறு வயது தாத்தாவிற்கு போகவே இடமில்லையாம். நிறைய பேரை அவர்கள் குடும்பத்தினர் திரும்ப சேர்த்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் பாராட்டுகிறார்கள். நிறைய பேர் திட்டியிருக்கிறார்கள். சிலர் குற்றம் சொல்கிறார்கள். அண்ணாவை யாரும் திட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.
#5 – என் பெயர் எனக்கு பிடிக்கவில்லை என்று யாராவது புலம்பும் போதெல்லாம், என் அம்மாவின் பள்ளியில் இருந்த இரு பெண்கள் நினைவிற்கு வருவார்கள். அக்கா தங்கைகள். அவர்களின் அப்பா கம்யூனிசமோ ஷோஷலிசமோ, எதுவோ ஒன்று தலைக்கேறி பெண்களுக்கு முறையே ‘ சமுதாயம்’ , ‘பகுத்தறிவு’ எனப் பெயர் சூட்டிவிட்டார். பகுத்தறிவுற்கு அடிப்படை அறிவே இல்லையென்பது அவளின் விடைத்தாளை திருத்துகையில் எனக்கு புரியும். அவர்களின் வீட்டில் இரண்டு சமுதாயங்களையும் எண்ணி அடிக்கடி கவலையுற வேண்டியிருந்தது. தெருவில் போகிற போது எத்தனை பையன்கள் கிண்டல் செய்தார்களோ. முன்னவள் கை கொட்டி சிரித்தால், ‘சமுதாயம் கை கொட்டி சிரித்தது’ என்று தோன்றுமோ என்னவோ?
#6 – 1995ம் வருஷம் உலகம் அழியப் போவதாக யாரோ கிளப்பி விட, பள்ளியிலிருந்து கும்பலாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில் எங்களில் மிகவும் தைரியமான பையன் அவனுடைய அத்தனை புத்தகங்களையும் நோட்டுகளையும் கிழி கிழியெனக் கிழித்து காற்றில் பறக்க விட்டான் (ஒலகம் அழியப் போகுது டோய்!!). போன வாரம் அவனை நினைத்துக் கொண்டேன். Big Bang theoryஐ நோண்டிப் பார்க்க விரும்பிய சில விஞ்ஞானிகள் என்னவோ செய்தார்களாம் (எனக்கு கணிதம், புவியியல், அறிவியல், சரித்திரம் மட்டும் ஆகாது). அதனால் உலகம் அழியப் போகிறது என்று கிளப்பி விட்டார்கள். யோசித்து பார்த்தால் நாமெல்லாரும் அதற்காக ரகசியமான ஒரு பரபரப்புடன் குறுகுறுப்புடன் காத்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. எனக்கு ஜாவாவிலிருந்தும், மெகா சீரியலிலிருந்தும் உடனடி விடுதலை.
#7 – இந்த வார லிம்கா ரெகார்ட் – திருவாளர் அரவிந்தன். சாதனை? ஒரே வாரத்தில் ‘வாரணம் ஆயிரம்’ ட்ரெயிலர் பாடலை சில நூறு முறை போட்டு பார்த்துக் கேட்டது. (பெயர்கள் மாற்றப்படவில்லை. படிப்பவர்களின் நலனுக்காக உண்மையான ‘எத்தனை முறை’ என்பது மாற்றப்பட்டிருக்கிறது) (ஒரே காட்சியில் வந்தாலும் சிம்ரனின் கண்ணில் அத்தனை காதல், அத்தனை பரிவு!)
#8 – நான் கவனித்த இரண்டு போஸ்டர்கள் – RJ தீனா நூறுக்கும் மேற்பட்ட மணி நேரம் ரேடியோவில் தொடர்ச்சியாக ‘ஒளி’பரப்பியதாக பீத்திக்கொண்ட பிக் வானொலி போஸ்டர். (பிக் – தமிழனின் பெருமை (!!!)) ; சுஜாதா பெயர் போட்ட ரோபோ பட போஸ்டர்.
#9 – இந்த வார கேலிச் சித்திரக் காட்சி/ஆள் மாற்றம் – தமிழக மின்சாரத்துறை அமைச்சகம் டூ இந்திய உள்துறை அமைச்சகம். ஆற்காடு வீராசாமி டூ ஷிவ்ராஜ் பாட்டில்.
கடைசி சிப் – எங்கள் பேருந்தின் காதல் இளவரசியை நினைவிருக்கிறதா? அடுத்த கட்ட அதிரடியாக மாலைகளில் அவளுடைய ஆளும் எங்கள் பேருந்தில் வரத்தொடங்கியிருக்கிறார். சீ சீ. உங்களுக்காக தான் அவர்களை கவனிக்கிறேன்.