வோல்வர்
பெத்ரோ அல்மொதவார் ரகளையான இயக்குனர். ஸ்பெயினை தனியாளாக உலக சினிமா அரங்கில் அரங்கேற்றியவர். அதுவும் எப்படி ? – உடல் சிக்கல், மனச்சிக்கல், உறவுச்சிக்கல் என களேபரமான கதைக்களங்கள். ஆண்கள் பெண்களாக மாறுவது , பெண்கள் ஆண்களாக மாறியபின்னும் குழந்தை பெறுவது, கன்னிகாஸ்திரிகள் எய்ட்சால் பாதிக்கபடுவது, ஓரினச் சேர்க்கை பிரியர்கள் என நீங்கள் பார்த்திராத, பார்க்க விரும்பாத மாந்தர்கள் வரிசைக்கட்டி நின்று சிரிப்பர் – “உன்னால் எங்களை சகிக்க முடியவில்லை அல்லவா? இது எங்கள் ராஜ்ஜியம். வேண்டுமானால் பார், இல்லையென்றால் போ!” அவர்களை வைத்து அசாதாரணமான கதைகள் பின்னுவது அல்மொதவாருக்கு அல்வா தின்பது போல. அவர் படங்களிலேயே அதிர்ச்சிகள் அதிகம் தராத சின்னதான ஒரு கவிதை – வோல்வர்.
ரைமுண்டா, சோல் இருவரும் தனித்தனியாக வசிக்கிற அக்கா தங்கைகள். தங்களின் கிராம அடையாளங்களை துறந்துவிட்டு நகர வாழ்க்கைக்கு மாறி விட்டவர்கள். அம்மா அப்பா இருவரும் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு தீ விபத்தில் காலமாகி விட்டார்கள். ரைமுண்டாவுக்கு ஒரு மகள் – பவுல். வயது பதிமூன்று இருக்கும். கணவன் ஒரு உதவாக்கரை. தனி ஆளாக குடும்பத்தை நடத்தி வருகிறாள். சோலின் கணவனோ அவளை விட்டு ஓடி விட்டான். அழகு நிலையம் நடத்தி பிழைக்கிறாள்.
சொந்த ஊரில் உறவு என ஒரே ஒரு அத்தை மட்டுமே. நினைவு முற்றிலும் இழந்து, உடல் நிலை கெட்டு போய், சமைக்க முடியாமல் தனியாக செத்துக்கொண்டிருக்கிறாள். அவளை பார்க்க ரைமுண்டா, சோல், பவுல் எல்லோரும் போகிறார்கள். பார்த்தால், வீடு அத்தனை சுத்தம், சமையல் பிரமாதம் என் ஆச்சர்யம். அத்தை சொல்கிறாள் – “உங்கள் அம்மா இருக்க எனக்கு என்ன கஷ்டம்?” அம்மாவா? ஆவி வருகிறதா என்ன?
ஸ்பெயின் கிராமங்களில், இறந்தவர்கள் மீண்டு வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை உண்டு. (வோல்வர் என்றால் “திரும்பி வருதல்”) நீராசைகளுடன் இறப்பவர்கள் மீண்டும் ஆவியாக வருவார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி தான் ரைமுண்டாவின் அம்மாவும் வந்திருக்கிறாள் என ஊரில் ஒரே பேச்சு. ரைமுண்டாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பயந்த சுபாவமான சோல் உள்ளூர நிறையவே பயப்படுகிறாள். அத்தையை சீக்கிரம் தன்னோடு அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு ரைமுண்டா சோலையும் பவுலையும் அழைத்துக் கொண்டு திரும்புகிறாள்.
இங்கே வந்தால் கணவன் திரும்பவும் வேலையிலருந்து நீக்கப் பட்டுவிட்டான். அதைப்பற்றி அவனுக்கு கவலையும் இல்லை. சின்னபென்னை அவன் பார்க்கிற பார்வையும் சரியாக இல்லை. சே! என்ன வாழ்க்கை இது. ரைமுண்டா சலிப்பாக அடுத்த நாள் அலுவலிருந்து திரும்பி வந்தால்… சாலையில் பவுல் அழுதபடி நிற்கிறாள். என்ன என்று கேட்டால் ஒன்றும் சொல்வதாயில்லை. அவசர அவசரமாக அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றால் அங்கு ரத்த வெள்ளத்தில் கணவன். தவறாக நடக்க முயன்ற அப்பாவை கத்தியால் மகள் குத்திவிட்டாள். அவன் இதில் தவறேதும் இல்லை, ஏனென்றால் நீ என் மகள் இல்லை என்று வேறு குட்டையை குழப்பி விட்டு செத்து போகிறான். கொலை செய்துவிட்ட மகள் என அப்பா யாரென கேட்கிறாள். வீட்டில் பிணம் கிடக்கிறது. தொலைபேசி விடாமல் அடிக்கிறது. யாரென்று பார்த்தால் சோல் – ஊரில் அத்தை இறந்து விட்டாள். ரைமுண்டாவுக்கு மண்டை வெடிக்கிறது.
சோலை மட்டும் ஊருக்கு போக சொல்லிவிட்டு பிணத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள் ரைமுண்டாவும் பவுலும். சோலுக்கு ஏற்கனவை சாவு, பேய், ஆவி என்றால் பயம். அத்தையானாலும் ஆவி ஆவி தானே! பேருக்கு தலை காட்டி விட்டு ஒரே ஓட்டமாக காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து இறங்கினால், காரின் டிக்கியிலிருந்து ஒரு குரல் – “சோல் கதவைத் திற!” அம்மாவின் குரல் போலவே. கடவுளே! அம்மாவின் ஆவி அடுத்து இங்கு வந்து விட்டதா??
டிக்கியிலிருந்து அம்மா வருகிறாள். நான் ஆவி தான் பயப்படாதே என்று சொல்லிவிட்டு ஆடை மாற்றிக்கொள்கிறாள், அலங்காரம் செய்துகொள்கிறாள், சகஜமாக உலா வருகிறாள். சோல் ரைமுண்டாவுக்கு ஃபோன் செய்து சொல்லலாமா என்று யோசிக்கிறாள். ஆனால் அம்மா வேண்டாம் என்கிறாள். சின்ன வயதிலிருந்தே ரைமுண்டாவுக்கு அம்மாவுக்கும் அவ்வளவு நல்ல உறவில்லை. இப்போது தான் வந்திருப்பதே அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காகத் தான் என்று வேறு சொல்கிறாள்.
அம்மாவுக்கும் ரைமுண்டாவுக்கும் என்ன மனஸ்தாபம், எதற்கு அம்மா இப்போது மீண்டு வந்திருக்கிறாள், என்ன மன்னிப்பு, பவுலின் அப்பா யார்? ரைமுண்டாவின் கணவன் கொலைக்கும் இதற்குமெல்லாம் என்ன சம்பந்தம்? கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருதை தட்டிய அழகான திரைக்கதை!
ரைமுண்டாவாக வருகிற பெனிலோப் கிரஸ்ஸுக்கு அல்மொதவார் தான் காட் ஃபாதர். அவரை அறிமுகப்படுத்தி ஹாலிவுட் வரை அறியச் செய்தவர். அவரின் படத்தில் பெனிலோப் கோட்டை விடுவாரா? பொங்கி வழிகிற அழகும், புத்திசாலித்தனமும், சின்ன சின்ன நகாசுகள் கொண்ட ரம்மியமான நடிப்பும் என பெனிலோப் பிரமாதம்! அவரின் ரசிகர்கள் மொழி புரியாவிட்டாலும் தாராளமாக பார்க்கலாம்!
சோல், சின்னப் பெண் பவுல் எல்லாம் பிரமிக்க வைக்கிறார்கள். அம்மாவாக வருகிற காமேரன்
நடிப்பில் தாய்மை சூரிய ஒளி போல பிரகாசிக்கிறது. ரைமுண்டாவுக்கு தெரியாமல் அவளை பார்க்க அவர் சோலை அழைத்துக்கொண்டு வர, ரைமுண்டா சின்ன வயசில் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலை ஒரு சின்ன கூட்டத்தில் பாடி கொண்டிருக்க, அதை கேட்டு அம்மா கண்ணீர் பெருக தேம்பி தேம்பி அழுகிற காட்சி ஒரு சோறு பதம்.
கான் திரைப்பட விழாவில் முதல் முறையாக சிறந்த நடிகைக்கான விருதை – இந்த படத்தில் நடித்த நான்கு பிராதான பெண்களுக்கும் சேர்த்து கொடுத்தார்கள்!
குழந்தை பலாத்காரம், தாய்மை – இரண்டும் தான் படத்தின் பிரதான அம்சங்கள். முன்னது மனத்தை கனக்க வைக்கிற முறையில் சொல்லபட்டிருக்கிறது. பின்னது தொண்டை அடைக்கிற முறையில்!
சோலின் வீட்டில் அம்மா இருக்கிறாள் என ரைமுண்டாவுக்கு சந்தேகம் வலுப்பெற, திடீரென வீடெங்கும் தேட முற்பட, கட்டிலுக்கு கீழே ஒளிந்துகொண்டிருக்கிற அம்மாவை கண்டெடுக்கும் காட்சியில் இசை நடிப்பு இயக்கம் என முக்கனி சுவை. அதன் பிறகான ரைமுண்டா – அம்மா காட்சிகள் சிறப்பு!
அல்மொதவாரின் படங்கள் பெரும்பாலும் வண்ணக் களஞ்சியங்கள் தாம். கதாபாத்திரங்களின் உடைகள் தொடங்கி வீடுகள் வரை அதனையும் பிரமாதமான நிறங்களில் ஜொலிக்கும். இதிலும் அப்படியே. பெனிலோப் எக்ஸ்ட்ரா பிரகாசமாக ஜொலிப்பார்!
உலகப் புகழ் பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களின் இசை எப்போதுமே பிரமாதம் தான்.இதிலும் அப்படியே. பெனிலோப் பாடுகிற அந்த “வோல்வர்” பாடல் ஜில்.
பெண்களின் மேல் அல்மொதவாருக்கு எப்போதுமே மரியாதை அதிகம். (அவர் ஓரினச்சேர்க்கை பிரியர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்) இந்த படத்தில் பெண்களின் உலகம் அத்தனை அந்தரங்கமாக பரிமளிக்கும். அவர் படத்தில் பெண்கள் நம்பிக்கை உடையவர்களாக, சக்தி உடையர்களாக, அன்பு உடையவர்களாக என இதமானவர்கள்.இந்த படத்தில் முன்னெப்போதும் போல இல்லாமல், இன்னும் சற்று அதிகமாகவே. அல்மொதவாரின் படங்களில் ஒன்று ஒட்டு மொத்தமாக எல்லா கதாபாத்திரங்களும் பெண்களாக இருப்பர். இல்லை வெறும் ஆண்களாக இருப்பார். இரண்டு விதமான படங்களிலும் ஆச்சர்ய படவைக்கிற பக்குவமும் அசத்தலான கதைக்களங்களும் காட்டுகிற அவர், கொஞ்சம் இறங்கி வந்து எல்லாருக்கும் பிடிக்கிற புரிகிற மாதிரி எடுத்த படம் இது. ஆனால் இதை பார்த்து விட்டால் நீங்கள் அவரை விட மாட்டீர்கள் என்பது அவருக்கு தெரியாமலா போகும்!
நல்லதொரு விமர்சனம்! ஒரு வருடத்திற்கு முன் இதைப் பார்த்திருந்தேன். சிக்கலான, மனத்திற்குக் கனமான கதைக்குள் சிதைக்காமல் நகைச்சுவையையும் சேர்த்திருப்பது அருமை. Penelope Cruz படங்களில் வந்தால் அவரின் அழகைத்தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தெரியாது. அதையும் மீறி தன்னால் நடிக்கவும் முடியும் என்று காட்டியிருக்கிறார். இந்தப் படத்திற்காக இவர் Oscarற்கு தெரிவு செய்யப் பட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
bmmaran
ஆகஸ்ட் 3, 2008 இல் 2:18 பிற்பகல்
மாறன்,
நன்றி! இந்த படத்தை ரசித்த ஒருவரை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! அந்த ஆஸ்கர் தகவல் எனக்கு புதுசு! நன்றி!
Aravind
ஆகஸ்ட் 4, 2008 இல் 4:20 மு.பகல்