சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஆகஸ்ட் 2008

ஒலக நாயகன்

7 மறுமொழிகளுடன்

சரி. ஒத்துக்கறேன். நிலம மோசமாய்டுச்சு. லேசா பேட் ஸ்மெல் வருது. பாக்கறவங்க எல்லாரும் நல்லாத் தானே இருந்தேனு துக்கம் விசாரிக்கறாங்க.

அதுக்காக?? அதுக்காக?? அதுக்காக??

என் ஒலக சினிமா ஆர்வத்த விட்டுட முடியுமா??

காமராஜர் கூட தான் தெரு விளக்குல படிச்சார்! அதுக்காக??

சரி, காமராஜர் படிக்கவே இல்ல! ஸோ வாட்?????!

—————————————————————————————


நாலஞ்சு மாசம் முன்னாடி ஒரு வியாழக் கிழம மதியம். அக்கா வீட்டுல சாப்டுட்டு இருக்கேன். அவளுக்கு கல்யாணம் ஆன புதுசு.

அக்கா: (ரசம் ஊத்தறா) காலைல எங்கடா காணோம் உன்ன?

நான்: சத்யம் போயிருந்தேன்.

அக்கா: ஒ! நேத்தும் காலைல காணோம் உன்ன.

நான்: சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பர் போயிருந்தேன்.

அக்கா: தினம் படம் பாக்குறியா?

நான்: ம்

அக்கா: ஏன்டா இப்படி காசு வேஸ்ட் பண்ற?

நான்: இருநூறு ரூபா கொடுத்தா பாஸ் கொடுப்பான். பத்து நாள் படம் பாக்கலாம். ஃபுல் டே.

அக்கா: நிஜமாவா?

நான்: ம்.

அக்கா: எங்களுக்கும் ஒரு பாஸ் வாங்கித் தாயேண்டா. நானும் அவரும் போறோம்.

நான்: (அமைதி)

அக்கா: என்ன படம் பாத்தே?

நான்: (அமைதி)

அக்கா: (தயிர் தர மாடேங்கரா. கல்லுளி மங்கி.)

நான்: உனக்கு அந்த படம் எல்லாம் புரியாது புடிக்காது. தயிர் குடு.

அக்கா: ஒ! ஹிந்தி யா?

நான்: (தயிர அவ கைலேர்ந்து புடுங்கிக்கரேன்)

அக்கா: அவருக்கு ஹிந்தி புரியும்டா.

நான்: (அமைதி)

அக்கா: என் படம் சொல்லித் தொலையேண்டா!

நான்: நார்வீஜியன்.

அக்கா: வெஜிட்டேரியனா ??

நான்: ப்ச்! நார்வே நாட்டு படம்.

அக்கா: ஒ!

நான்: (அமைதி)

அக்கா: நேத்து?

நான்: ஹங்கேரி.

அக்கா: (அமைதி)

ரெண்டு மூணு நிமிஷம் நோ பேச்சு.

அக்கா: நீயே போ. கர்மம்.

—————————————————————————————


அவர் எங்களோட குடும்ப நண்பர். நல்லவர் வல்லவர். அடிக்கடி எனக்கு போன் பண்ணி மொக்க வாங்கறது அவரோட ஹாபி. அவர் எனக்கு எப்போ போன் பண்ணினாலும், ‘நான் படம் பாத்துட்டு இருந்தேன்” “இப்போ தான் ஒரு படம் பாத்து முடிச்சேன்” “படம் பாக்க போறேன்” அப்படிங்கற ரேஞ்சிலயே நான் பேசிட்டு இருந்ததால, எதோ என் சிஸ்டம்ல  சுப்ரமணியபுரம், சத்யம் னு ஒரு மினி பஜார் வெச்சிட்டு இருக்கேன்னு நினச்சிட்டாரு போல. ஒரு நாள் திடீர்னு போன் பண்ணி நான் உங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கேன், வந்து கொஞ்சம் படம் எடுத்துட்டு போகட்டுமான்னு கேட்டார். இல்லைங்க்னா, நான் ஒரு வேலையா வெளிய இருக்கேன், வீட்ல ஆள் இருக்காங்க, நீங்க போய் படம் எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போன் அலறுது. அவர் தான். மூச்சு வாங்குது. “என்னப்பா மூவிஸ் ட்ரைவ்ல ஒரே anti virus vault folder ஆ இருக்கு”??? “அப்படி இல்லங்க்னா, எல்லாம் படம் தான், என்ன லாங்குவேஜ் மட்டும் லைட்டா மாறும்னா” அப்படின்னு சொன்னேன். அதோட நிக்காம, என்னென்ன  லாங்குவேஜ், என்னென்ன படம், என்னென்ன மெசேஜ்னு ஒரு மினி லெக்ச்சர் கொடுத்துட்டு  இருக்கும் போதே, போன் கட் பண்ணிட்டார். இன்டீசன்ட் ஃபெல்லொ.

—————————————————————————————


நான் படம் பாக்கறதுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்னா மாற மாட்டேன். ஒரு நாள் நான் படம் பாக்க ஆரம்பிக்கும் போது, என் காலேஜ் மேட்ஸ் ரெண்டு பேரு விதி வசத்தால வந்து சேந்தாங்க. “Taste of cherry” னு ஒரு படம். மரியாதையா நீயும் பாருன்னு ஒரே அமுக்கு அமுக்கி போட்டாச்சு. அந்த படத்தோட கதை ரொம்ப ரொம்ப ஜிம்பிள். ஒரு ஆள் கார் ஓட்டறான். அஞ்சு நிமிஷம் போகுது. வழியல ஒருத்தன் நிக்கிறான். அவன் கிட்டே, ஒரு வேலை இருக்கு செய்யரியான்னு கேக்குறான். அவன் மாட்டேன்கிறான். திரும்ப ஒரு அஞ்சு நிமிஷம் கார் ஓட்டறான். திரும்ப ஒரு ஆள். திரும்ப அவன்ட்ட கேக்குறான். மாட்டேங்கிறான். திரும்ப அஞ்சு நிமிஷம். இப்படியே போகுது படம். பாதி படத்துல வந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் தூங்கிட்டான். இன்னொருத்தன் துடிக்கிறான். துள்றான். ரத்தம் கக்குகிறான். கழுத்துல கத்தி வெச்சு மவனே பாருடானு பாக்க வெச்சாச்சு. படம் சுமார் தான். ஆனா அவங்க ரெண்டு ஏனோ எங்கிட்ட அதுக்கப்புறம் பேசறதே இல்ல.

—————————————————————————————


நான் பாக்கப்போற / பாக்க விரும்புற / பாத்துட்ட சில ஒலக சினிமாக்கள். உங்களுக்கு நிச்சயமா டர்கிஷ் தெரியாது; அதனால சென்னை தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்கேன்.

வீக்கென்ட் ஃபிரியா  இருந்தா வாங்க.

—————————————————————————————


கொசுறு: ரஜினிய வம்புக்கிழுத்தா மாதிரி கமலையும் இழுத்திருப்பேன்னு நினைச்சீங்களா. ஹையோ ஹையோ. நான் தான் சாட்சாத் அந்த ஒலக நாயகன் :lol:

Written by aravind

ஆகஸ்ட் 28, 2008 இல் 5:07 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

ட்ராஃபிக் – சில குறிப்புகள்

4 மறுமொழிகளுடன்

தொலைக்காட்சியில் வருகிற ராமாயணத் தொடரின் பாடல்களுக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் டிப்ரசிங்காக இருப்பது சென்னை நகரின் ட்ராபிக் தான். அதை பற்றிய ஒரு சின்ன முயற்சி. போக்குவரத்து நெரிசலின் நான்கு விதமான அம்சங்களை நான்கு கவிதைகளில் படம் பிடிக்க முயற்சித்துள்ளேன்.

—————————

விட்டு விட்டு பொருந்தின
மெதுவாய் முன்னகரும் காரின்
பின் சீட்டு கண்ணாடியில்
மூக்கு அழுந்திய
அந்த கரடி பொம்மையின் கண்களும்
என் கண்களும்.
இரண்டுக்கும் இடையே
ஒரு வெற்றுப் பார்வையென
சிக்கித் திணறியது ட்ராஃபிக்.

*****

அவரவர் காதுக்கு பாயும்
அவரவர் இசை
அவரவர் காற்றலையில்
அவரவர் பேச்சு
பெருநகரமே கலக்கும்
ஒரு பேரூர்வல ட்ராஃபிக்கில்
தனித்தனியாக

*****

அசந்த நேரம் பார்த்து
என் பெப்சியை தட்டி பறித்தாள்
அழுக்கு உடையுடன்
பிச்சை கேட்டு
அடம் பிடித்த சிறுமி.
திடீரென கருணை முகமாக மாறி
மூளை குழம்பிய
அந்த கிழிந்த ஆடை பெண்ணுக்கு
பெப்சியை தந்தாள்.
எங்கிருந்தோ வந்த
அந்தச் சிறுமியின் அம்மா
சிறுமியையும் என்னையும் சேர்த்து
வையத் தொடங்கினாள்
காரின் கண்ணாடியை ஏற்றியும்
ஒரே டிராபிக் இரைச்சல்.
கண்ணாடியை முட்டியபடி
மூன்று பேரின் முகமும்.
பச்சை சிக்னலும்
ஆக்சிலரேட்டரும்  இல்லை
அந்த கொடுங்கனவில்.

*****

அவசரமாக சொல்லவேண்டியதை
அழைத்து சொல்லியாயிற்று
உன் கண்களை
நினைத்துப் பார்த்துக்
கொண்டுமாயிற்று.
உன் உள்ளங்கையின்
தண்மைக்கு காத்திருக்கும்
என் உள்ளங்கையின்
வெம்மை மட்டும் பெருகும்
இந்த ட்ராஃபிக் உஷ்ணத்தில்

Written by aravind

ஆகஸ்ட் 24, 2008 இல் 1:54 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

தேநீரில் சிநேகிதம் – 1

8 மறுமொழிகளுடன்

நானும் கொஞ்சம் செய்கிறேன் Random ramblings ;)

  • அலைபேசி காதலர்களுக்கு  ஒரு வரப்பிரசாதம் என நிறைய பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே அப்படி, நமக்கல்ல என்று நான் புரிந்து கொண்டேன். எங்கள் பேருந்தில் தினமும் ஏறுகிற போதே அந்தப் பெண் அலைபேசியில் பேசியபடியே தான் ஏறுவாள். பேருந்து அலுவலகம் போய் சேரும் வரை பேச்சு. அவள் பேச்சுகள் இரைச்சலில் பெரும்பாலும் கேட்காது என்றாலும் திடீரென பேருந்து கிரீச்சென நின்று விடும் பொழுதுகளில் “இன்னிக்காச்சும் வருவியா” என்று அவள் கெஞ்சலாக (அல்லது) கொஞ்சலாக சொல்வது எல்லோர் காதிலும் விழும். பெரும்பாலான நாட்களில் அவள் எனக்கு பின் சீட்டில் அமர்வதால், தமிழ் திரைப்பட ஊடல் கூடல் வசனங்களை பிச்சை எடுக்க வைத்து விடும் அவளின் உணர்ச்சிகரமான வசனங்கள் எனக்கு ரொம்பவே  கூச்சத்தை தருகின்றன.  ஓட்டுனர் வானொலியைத் திருகி என்னை காப்பாற்ற முயற்சித்தாலும், வெகுண்டெழுந்து அந்தப் பெண் வானொலியின் வாயை மூட சொல்லிவிட்டு வருவது அவள் காதலின் அசைக்க முடியாத வலிமை என்றே கருத வேண்டியிருக்கிறது. அவளுக்கு  பதிலுக்கு என்ன செய்வது என்று நான் யோசித்து வைத்திருக்கும் மூன்று விஷயங்கள். 1) அவள் தினமும் ஏறும் போது, “எங்கள் பேருந்தின் காதல் இளவரசியே வருக” என்று நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று கூவி கை தட்டி வரவேற்பது. 2) அவள் கொண்டிருக்கும் காதலை பற்றிய உருக்கமான கவிதை ஒன்றை தினமும் எழுதி கண்ணீர் மல்க பேருந்தில் வாசிப்பது 3) அவளைத் தவிர நடத்துனர் உள்ளிட்ட எல்லோரும் இறங்கி அலுவலகம் வரை பேருந்தை தள்ளிக் கொண்டே செல்வது.
  • மதிய சாப்பாடு தந்த மந்தம் காரணமாக ஒரு அன்பர் தன் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய ஒரு மின்னஞ்சலை தவறுதலாக ஆயிரம் பேர் உள்ள ஒரு distibution லிஸ்டுக்கு அனுப்பிவிட்டார். இரண்டே நிமிடத்தில் அரண்டு மிரண்டு “தவறுக்கு வருந்துகிறேன்” என்றும் ஒரு மின்னஞ்சலை தட்டி விட்டார். அதற்கு பிறகு அரை மணி நேரத்திற்கு நடந்த கூத்து சொல்லி மாளாது. “இது ஏன் எனக்கு வந்தது” என்று கேட்டு ஒரு அன்பர் ஆயிரம் பேருக்கும் ஒரு பதில் அனுப்பினார். “அதானே! எனக்கு ஏன் வந்தது” என்று பின்னாலேயே ஒரு ஐம்பது பதில்கள். “சரி எப்படியோ, எனக்கு அனுப்பாதே” – அடுத்து. பின்னலாயே ஒரு ஐம்பது “ஆமாம் எனக்கும் அனுப்பாதே”கள். திடீரென ஒருவர் “எல்லோரும் வாயை மூடுங்கள்”. வரிசையாக ஒரு நூறு வாயை மூடுங்கள். இப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாரோ ஒருவர் சொன்னது shift+del ஆகி  குப்பைக்கு போனது. எல்லோரும் அடங்குவதற்குள் ஐந்நூறு மின்னஞ்சல்கள் சேர்ந்தன. ஒரு பத்து நிமிடம் கழித்து, அதுவரை வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த ஒருவர் தற்செயலாக மானிட்டரை பார்த்து, ஸ்க்ரால் ஸ்க்ரால் என ஸ்க்ராலி முதல் மின்னஞ்சலை தேடிப் பிடித்து ‘இதை ஏன் எனக்கு அனுப்பினாய் என தெரிந்து கொள்ளலாமா” என்று கேட்டபோது நான் தலையில் நான்கு முறை அடித்துக் கொண்டேன். தவறுதலாக அந்த மின்னஞ்சலை தட்டி முடியில் தெறித்து ஓடிய அந்த அன்பருக்காக ஒரு பன்ச் கவிதை ;)
    சபிக்கப்பட்ட அந்த நாளை
    நானும் செய்து விட முடியுமா
    Shift + del?
  • தற்செயலாக சந்தித்த அந்த பழைய குறுகிய கால நண்பர் கிடைத்த ரெண்டு நிமிட இடைவேளையிலும் வேலூர் தங்க கோயிலைப் பற்றி சொல்லிவிட்டு போனார். திருப்பதியை மிஞ்சி விடும் என்பது அவரின் திடமான நம்பிக்கை. இப்போதே கூட்டம் கூரையை பிய்த்துக் கொண்டு போவதாக சொன்னார். இன்னும் கொஞ்ச நாளிலேயே இன்ன நாளில் அங்கு போனால் விசேஷம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் பக்தி கட்டுக்கு அடங்காமல் போய்விடும். ஹிமாச்சல் பிரதேச மலைக் கோவிலில் நடந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. எத்தனை குழந்தைகள்? எத்தனை தாய்மார்கள் “என்ன ஆனாலும் என கையை விட்டு விடாதே” என்று சொல்லியிருந்தார்களோ! நினைத்தாலே குலை நடுங்குகிறது.
  • ஒரு வழியாக “ஜானே தூ யா ஜானே னா” பார்த்துவிட்டேன். மலையாளத்தில் “நிறம்” என தொடங்கிய கதை, தெலுங்கு, தமிழ் எனத் தாவி இப்போது இந்திக்கு வந்திருக்கிறது. இது போன்று ஒரே கதை பல மொழிப் படங்களாக எப்படி மாறுகிறது என்பதை கவனிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மாநில மக்களின் சுவைக்கேற்ப கலவை மாறிக்கொண்டே இருக்கும். பொதுவாக எப்போதுமே நதிமூலப் படமே சிறப்பாக இருக்குமென சொல்வார்கள். ஆனால் இதில், ஹிந்திப் படமே சுவாரஸ்யமாக இருந்தது. கதையை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, ராஜ்புத் அப்பா, குதிரைச் சவாரி, பட்டாசாய் வெடிக்கும் இம்ரான் – ஜெனீலியா என படம் ஒட்டு மொத்தமாக கலர் மாறினாலும் ரசிக்கும்படி இருந்தது. ஒரு பிரமாதமான ப்ளஸ் துணை நடிகர்களை பிரமாதமாக பயன்படுத்தியது! (உப குறிப்பு – சில்ட்ரென் ஆஃப் ஹெவன் படத்தை “தாரே ஜாமீன் பார்” குழந்தை நட்சத்திரத்தை வைத்து ஹிந்தியில் எடுக்கப் போவதாக பிரியதர்ஷன் அறிவித்திருப்பது ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் கலவரத்தையும் தந்தது. )
  • தொலைக்காட்சி பார்ப்பது ரொம்ப குறைந்து விட்டாலும், ரிமோட் தந்த மின்னல் இடைவெளிகளில் என கவனத்தை ஈர்த்த விஷயங்கள் – அட்டாச்டு பாத்ரூம், டிடாச்ட் ஃபேமலி என வார்த்தை விளையாட்டுடன் பிரமாத உடல் மொழியில் எதோ பஜன் மேடையில் பேசும் அந்த மாமி, நிஜமாகவே ‘அபி’ அமெரிக்காவில் தான் இருக்கிறாள் என நம்மை நம்ப வைக்க “கோலங்கள்” மெகா சீரியலில் செய்த காமெடிகள், ஒரு திறமைத் தேர்வில் நிராகரிக்கப் பட்டு மீண்டும் வாய்ப்பு தந்தற்கு தேம்பி தேம்பி அழுதபடி நன்றி சொல்லும் அந்த பெண், விதம் விதமாக உணவை மறுத்து விட்டு ஓடும் ஜூனியர் ஹார்லிக்ஸ் குழந்தைகள்.
  • தங்க மகனாக தாயகம் திரும்பும் அபினவ் பிந்த்ராவிற்கு ஒரு ராயல் சல்யூட். சமத்துக் களையோடு அந்த பதக்கத்தை பிடித்தபடி நிற்கும் போது நமக்கே அத்தனை பூரிப்பு! அவர் மார்கெட் வேல்யு தோனிக்கு இணையானதாம். (அவரை எந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்? – Gold winner! ;) )அடுத்த  வருஷம் ஒரு அர்ஜுனா விருது, அப்புறம் ஒரு கேல் ரத்னாவோடு அவரை ஓரம் கட்டிவிடமாட்டார்கள் என்று நம்புவோமாக. அப்புறம் அவர் சோர்வடைந்து காணாமல் போய்விடுவார். நாற்பது வயதை தாண்டியதும் நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு மதிப்பில்லை என்று வெறுத்து “அபினவ் பிந்த்ரா பயிற்சி மையம்” துவங்கி புலம்பிக் கொண்டிருப்பார்.  இந்த வெற்றியை பற்றி பேசும் போது இலங்கைத் தொடரில் இந்தியா பெற்ற தோல்விக்கு மருந்து என்று சொன்னவர்களை பளாரென அறையலாம் என்று தோன்றியது.
  • நான் ரசித்த ஸ்டேட்மென்ட் – “உஸ்மான் சாலையையும் துரைசாமி சாலையையும் இணைக்கும் இந்த புதிய மேம்பாலம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக நிற்கிறது” – கலைஞர். “ஆடி மாத திருவிழாக்களின் காரணமாக பெண்கள் திரையரங்கிற்கு வரவில்லை. அது முடிந்ததும் கூட்டம் வரும்” – குசேலன் பட இயக்குனர் பி.வாசு.

Written by aravind

ஆகஸ்ட் 16, 2008 இல் 5:31 பிற்பகல்

எண்ணங்கள், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

கேள்வியென வளைந்து நிற்கும் பாம்புகள்

3 மறுமொழிகளுடன்

பழுத்த மரங்களை நோக்கி
எறியப்படும் கற்கள்
விழுந்து மறையும்
ஆற்றின் கரையில் அமர்ந்தபடி
நீ கேள்விகள் கேட்கத் துவங்கி இருந்தாய்

யாவும் உருவிழந்து மறையும்
அடர்ந்த பேரிருளென
பெருகத் துவங்கியது
என் மௌனம்

இரவு முழுதும்
புரண்டு புரண்டு
பெற்றெடுத்த கேள்விகள்
ஒருக்களித்து படுத்துக் கிடந்த
மௌனத்தின் முதுகில்
வெற்றொலியென  எதிரொலிக்கும்

தூண்டில் புழுக்கள் துடித்தாலும்
என் மீன்கள்
என் விருப்படியே சிக்கும்

பதில்கள் நிரம்பிய
என்னறையைச் சுற்றி அலையும்
கேள்வியென வளைந்து நிற்கும் பாம்புகள்
திகைத்து போகும்
என் மௌன மகுடியின் இசையில்

ஒரு மௌனத்தை
ஏற்றுக்கொள்ள மாட்டாயா
ஒரு மௌனத்தை போலவே?

Written by aravind

ஆகஸ்ட் 9, 2008 இல் 5:09 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

ரஜினிக்கு ஒரு கடிதம்

43 மறுமொழிகளுடன்

அன்புள்ள ரஜினிக்கு,

நான் உங்கள் ரசிகனல்ல. எதிரியுமல்ல.

எனக்கு மொழி வெறியெல்லாம் இல்லை. நான் துளு பேசுகிற மாநிலத்தில் பிறந்தால் துளுவே சிறந்த மொழி என்று சொல்லுவேன். அந்த அளவில் தான் மொழி வெறியை நான் பார்க்கிறேன். என்னை ஒரு நடுநிலையாளனாக உறுதிபடுத்திக்கொண்டே இதை எழுதுகிறேன்.

எல்லா பக்கங்களில் இருந்தும் அம்புகள் எய்யப்படுகின்றன. குசேலனுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும் செய்திகள் வருகின்றன. நீங்கள் வருத்தத்தில் இருப்பீர்களா மகிழ்ச்சியாக இருப்பீர்களா என்று என்னால் கணிக்க முடியவில்லை. சினிமாவில் நீங்கள் நல்லவராக வல்லவராக இருப்பதனால் நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் அப்படித்தான் என்று நம்புகிற முட்டாள் நானில்லை. உங்களை நெருங்கி பார்த்தவனுமில்லை.

என்னிடம் இருப்பவை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட  கேள்விகள் மட்டுமே.

நீங்கள் மன்னிப்பு கேட்டது தவறு என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லப்போவதில்லை. நீங்கள் சொன்னது என்ன, திருத்தியது என்ன, கடைசியில் என்ன தான் சொல்கிறீர்கள் என்று எதுவும் புரியவில்லை. நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் வியாபாரமாக்கப்படுகிற நாட்டில் இருந்து கொண்டு இன்னும் தெளிவாக பேச உங்களால்  முடியவில்லையென்பது மடத்தனமாக உள்ளது.

பொது இடத்தில் ஒருவரை உதைப்பேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசிய மறுநாள் அது தவறென்று உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த நாளும் தெரியவில்லை. இத்தனை நாளாய் தெரியவில்லை. இப்போது திடீரென தெரிந்திருக்கிறது. அந்த மன்னிப்புக்காக வைக்கப்பட்ட பணயம் உங்கள் படத்தின் ரிலீஸ்.

௮) நீங்கள் உண்மையாகவே அப்படி பேசியதற்கு வருந்தியிருக்கிறீர்கள்.
ஆ) உங்களுக்கு உங்கள் படம் ரிலீஸ் ஆக வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களுக்கு மேல் எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை. சாதாராண கணித விதிகளின் படி கூட இரண்டுக்கும் ஐம்பது – ஐம்பது வாய்ப்புள்ளது!

காரணம் ௮) வாக இருந்திருந்தால், மன்னிப்பு கேட்டுவிட்டு, என் படம் அப்படி ஒன்றும் ரிலீஸ் ஆக வேண்டியதில்லை என்று சொல்லி நீங்களே ரிலீசை நிறுத்தியிருக்கலாம். ஒரு மாநிலத்தில் வரப்போகிற வருமானம் உங்களுக்கு கால் தூசு. உங்கள் குருவான தயாரிப்பாளார் உங்களை எண்ணி பெருமைப்பட்டிருப்பார் – வேறு வழியில்லை அவருக்கு. ஏற்கனவே உங்கள் படம் ஓடாத போது விநியோகஸ்தர்களுக்கு பணம் தந்த வள்ளல் தானே நீங்கள்? நீங்களே உங்கள் தயாரிப்பாளர்களுக்கு பணம் தந்திருக்கலாம். அப்படியும் இல்லாமல் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சினிமா ரிலீஸ் இனி ஒரு ஆயுதம் ஆகி விடும். மிக்க நன்றி!

காரணம் ஆ) வாக இருப்பின் – அப்படி குசேலன் ரிலீஸ் ஆகி என்ன சாதிக்கப் போகிறது என்று யோசிக்கிறேன். இந்த காவியத்தை பார்க்காமல் கர்நாடக மக்கள் என்ன ஆகி விடுவார்களோ? நினைத்து பார்க்க சற்று பயமாகத் தான் இருக்கிறது.

மன்னிக்கவும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் சுயநலம் தான் தெரிகிறது.

இந்த பிரச்சினையின் வெற்றிக்கான அடையாளமாக இதை அவர்கள் மாற்றுகிற போது, நீங்களும் கூட சேர்ந்து கும்மி அடித்திருக்கிறீர்கள்.

ஒரு வேளை இது உங்கள் திரைப்படங்களில் வருகிற காட்சியாயிருந்தால் கே.எஸ்.ரவிக்குமார்களும் பி.வாசுக்களும் மோட்டுவளையை முட்டி முட்டி இப்படி ஒரு காட்சி வைத்திருப்பார் – மன்னிப்பு கேட்டவன் கோட்டைக்கு சென்று அடித்து துவம்சம் செய்து, “கண்ணா, நீ மன்னிச்சு தான் என் படம் ரிலீஸ் ஆகனும்னு கடியாது” என்று சொல்லியிருப்பீர். என்ன செய்வது, இது சினிமா இல்லையே?

நீங்கள் ஒரு மாபெரும் குழப்பவாதி. அதை குசேலன் படத்திலும் நிருபித்திருக்கிறீர்கள்.

“அரசியல் பற்றி ஏதோ ஒரு படத்தில் யாரோ எனக்காக எழுதிய வசனத்தை பேசினேன். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டால் எப்படி?” என்று அர்த்தம் வருமாறு ஒரு முத்தை உதிர்த்திருப்பதாக நண்பன் சொன்னான்.

கூடவே “இது எப்படி இருக்கு” என்று சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லையென்றான்.

அட! அட! என்னவொரு வியாக்கியானம்? அரசியல் சர்ச்சையில் நாங்களே உங்களை சிக்க வைத்தது போலவும், நீங்கள் அப்படி ஒரு ஆசையற்றவர் போலவும்……

ஐயா, தொடர்ந்து நான்கு படங்களிலாவது காமிராவுக்குள் உங்கள் முகத்தை நீட்டியபடி விஷ்க் விஷ்க் வசனம் பேசினீர். படத்திற்கு ஒரு அரசியல்வாதியையாவது அடக்கி வைத்தீர்கள். உங்கள் நாயகிகள் உங்களை ஈஷிக்கொண்டு “என்னமோ திட்டம் இருக்கு” என்று விரல் ஆட்டி பாடினார்கள். “படை” என்று உங்கள் ரசிகர்களை பாடல்களில் விளித்தீர். நேற்று அங்கே, இன்று இங்கே, நாளை என்று வானம் நோக்கி கை காட்டி சிரித்தீர். “ராஜ்ஜியமா இமயமா” என்று எங்களை படாத பாடு படுத்தினீர். உங்கள் கதாபாத்திரத்தின் ஜாதகம் சாதாரண ஜாதகம் வேறு அல்ல.

கமல் தசாவதாரத்தில் நம்பி, அபூர்வ சகோதர்களில் அப்பு, நாயகனில் நாயக்கர். ஆனால் நீங்கள் எல்லாப் படத்தில் ரஜினி தானே?? அப்படித் தானே உங்கள் கதாபாத்திரங்களும் உருவாக்கப் படுகிறது? அதனால் தானே நீங்கள் உங்கள் பெர்சனல் பஞ்சாயத்திற்கு உங்கள் படங்களை உபயோகப்படுத்தினீர்? நீங்கள் எது பேசினாலும் ரஜினியின் குரலாக தானே பார்க்கப்படுகிறது? பார்க்க வைத்தீர்கள்?

இப்போது எங்களையே திருப்பி கேட்கிறீர்களே – ஐயா நாங்கள் முட்டாள் இல்லை.

ஐயா, நீங்கள் உங்களை மட்டுமே மோசமாக முன்னிலைபடுத்துகிற ஒரு ஆள். நீங்கள் ஒருவர் தான் நல்லவர். ஊரில் உங்களை விட்டால் வீரமான ஒரு ஆண்மகன் இல்லை, நாட்டை காக்க வந்தவர் என்றெல்லாம் காட்டுவீர். நீங்கள் கடவுள் என்று சொல்லவில்லையே தைவர, நீங்கள் தான் எல்லாம் என்றீர்கள். இப்படி தங்களை  காட்டிக்கொண்டவர்கள் அடுத்த சென்ற இடம் அரசியல் என்று உங்களுக்கு தெரியும். தெரிந்தும் அதை தொடர்ந்து செய்ய நீங்கள் மீசை வைத்த குழந்தையா?

“நான் அரசியலுக்கு வந்தால் என்ன? வரவில்லையென்றால் என்ன? உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்” என்றும் திருவாய் மலந்து உளறி இருக்கிறீர்கள்.

இரண்டு தேர்தலில் நீங்கள் யாரையோ எதிர்பதற்காக உங்கள் ரசிகர் மன்றங்கள் நாயாக பேயாக உழைத்தார்களே, போகிற வருகிற கட்சியெல்லாம் உபயோகப்படுத்தி அவர்களை குப்பையாகினார்களே, அப்போது உங்கள் இமயமலை பயணத்திற்கு பூப்பறித்துக் கொண்டிருந்தீர்களா? அப்போது அவர்களின் வாழ்க்கை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களை எதிர்பார்க்க வைத்து விட்டு, இன்று அரசியல் உங்களுக்கு வராது என்று அமைதியாக இருக்கிறீர்.

அமைதியாக இருந்தால் கூட பராவாயில்லை, இப்படி அதியற்புதமாக பேசியிருக்கிறீர்கள். இது பொறுப்பின்மை மட்டுமல்ல, சந்தர்ப்பவாதமும் கயமைத்தனமும் கூட!

இதையெல்லாம் கூட நீங்கள் ஒரு படத்தில் நடிகர் அசோக்குமாருக்குள் ஒளிந்து கொண்டு தான் சொல்கிறீர்கள். அப்படியென்றால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா ஐயா? தமிழ் நாடு என் மூச்சு, ரசிகர்கள் ரத்தம், உயிர் கொடுப்பேன் என்றெல்லாம் சொன்னது ஐயா? அவையும் வசனம் தானா?

அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு நீங்கள் எங்கே பதில் சொல்லியிருக்கிறீர்? உங்கள் படத்தில்! அது என்ன என்ன என்று உங்கள் கடை நிலை ரசிகன் வரை கிடந்து தவித்து ஏகக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இதை தெரிந்துகொள்ள வேண்டும்! “இந்த படத்தில் நான் ஹீரோ அல்ல” என்று அறிவித்தது போல இதையெல்லாம் அறிவித்திருக்கலாமே!

உங்கள் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறலாம். ஒரு கொடியோடு நீங்கள் துவக்கிய உங்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் இதை கவனிக்க தவற மாட்டார்கள்.

“அரசியலுக்கு வர எண்ணினேன், ஆனால் அந்த என்ணத்தை கை விட்டுவிட்டேன்” என்று ரஜினியாக வந்து சொன்னால், உங்களுக்கு சல்யூட் வைக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்! அது உங்கள் கடமை!

வணக்கம்!

Written by aravind

ஆகஸ்ட் 6, 2008 இல் 5:30 பிற்பகல்

பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with