சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

விடை கொடு எங்கள் ஊரே!

17 மறுமொழிகளுடன்

நேரம் இத்தனை வேகமாக செல்கிறதே என்று நான் இத்தனை தவிப்புடன் பார்த்து வெகு நாட்களாயிற்று. அது ஒரு சனிக்கிழமை இரவு. மிகவும் முக்கியமான ஒரு இரவு. என் சொந்த ஊரில் நான் தங்கப் போகும் கடைசி இரவு. அடுத்த நாள் காலையில் நானும் அம்மாவும் கிளம்புவதாக இருந்தோம். எங்களுக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பரின் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இருபத்தியிரண்டு ஆண்டு பழக்கத்தின் நினைவுகள் உரையாடலின் தொடரை அவ்வபோது உடைத்தது. திடீர் திடீரென பிடித்தமான நினைவை ஒவ்வொருவரும் எடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வர முடியாத உரையாடல்.

என் குழந்தைப்பருவ நினைவுகள் என் கண் முன்னே அந்த அறையில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. ஒரு பழைய பாடலின் வார்த்தைகள் மறப்பது போல, சில நினைவுகள் முழுமையற்று இருந்தது. ஒருவரின் பெயரோ, இருந்த இடமோ எதுவோ மறந்து போயிருந்தது. அதிகாலையில் எழுந்து குழம்பிக்கொள்ளும் ஒரு கனவு போல என் குழந்தைப்பருவம் ஆகியிருந்தது. அதை கொஞ்சம் அதிர்ச்சியுடன் ஒப்புக்கொள்வதை விட என்ன நான் செய்துவிட முடியும்?

கொல்கத்தா நெடுஞ்சாலையிலிருந்து கிளை விட்டு பிரியும் ஒரு குறுகிய சாலையில் விரிந்திருக்கும் என் ஊர். அந்த சாலையில் ஊரை நோக்கி செல்லும் போதெல்லாம், வழியெங்கும் நிற்கும் புளிய மரங்களின் மீது குறிக்கபட்டிருக்கும் எண்களை சரிபார்த்தபடி செல்வேன். என்றுமே 345க்கு பிறகு 347 வந்ததில்லை தான். இருந்தும் இருபத்தியிரண்டு ஆண்டுகளாக நான் அதை செய்திருக்கிறேன். ஒரு எளிய உண்மையை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதபடுத்திக் கொண்டு புன்னகை செய்திருக்கிறேன். என் ஊரும் அப்படி பல உண்மைகளை எனக்குத் தந்திருந்தது.  நிம்மதி தருகிற உண்மைகளை. வாழ்கை தன் முன்னே வைத்திருந்த மிகப்பெரிய சவாலை என் அம்மா மெது மெதுவாக அந்த ஊரில் இருந்துபடி வென்றுகொண்டிருக்கிறாள் என்பது தான் அதில் மிகவும் அமைதியும் நிம்மதியும் தந்த உண்மை. எந்த பெரிய உதவியும் செய்ய நான் முடியாமல் அவளை அமைதியாக பார்த்துகொண்டிருந்த போது, அவள் பிறந்து வளர்ந்த ஊர் அவளுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை தந்துகொண்டிருக்கிறது என்பது  மிகவும் ஆறுதலாயிருக்கும். அந்த சமயங்களில் ஊரின் மீதான காதல் பலமடங்கு பெருகும்.

என்னுடைய நண்பர்கள் பலர் அந்த ஊரை வெறுத்திருக்கிறார்கள். அது அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிற ஒரு டவுன். ஆரவாரங்கள் அற்ற ஒரு இடம். சின்னச் சின்ன தேடல்களுடன் நிறைவாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு உலகத்தை அது தந்ததை ஏனோ அவர்கள் சிந்திக்க மறுத்தார்கள். இரண்டு கோயில்கள், இரண்டு திரையரங்குகள், ஒரு கடைதெரு என ஒரு எளிய அழகை கொண்டிருந்தது. இருக்கிற இடத்தில் போட முடிகிற ஒரு சின்ன கோலம் போல. எந்த ஒரு பெரிய மாற்றமும், வெகு நாட்கள் அதன் வாயிலில் காத்திருந்தே உள்ளே வரமுடியும். எந்த மாற்றத்தையும் அவசர அவசரமாக அடைகிற எந்த ஒரு அவஸ்தையையும் அது தந்ததில்லை. ஒரு எளிய மெல்லிசைக்கு எது எது தேவையோ அது அது போதும்.

நடந்தே எங்கும் சென்று வந்துகொண்டிருந்த நாட்களில் இரண்டு மூன்று தெருக்களில் ஊர் முடிந்து விட்டது. மிதிவண்டி வந்ததும் தான் முழு ஊரும் பழக்கப்பட்டது. அகலமான சாலைகள், குறுகிய சந்துகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டு கிடந்தன.  கணித கேள்விக்கு பல வழியில் விடை காணும் பரவசத்துடன், ஒரு இடத்திற்கு செல்ல பல வழிகளை மிதிவண்டியில் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுதுகளில் ஊரும் நானும் தனியே விளையாடிக்கொண்டிருந்தோம். அன்றும் அப்படி ஒரு மிதிவண்டியில் சுற்றி விட்டு வரவேண்டும் என்று தோன்றியது.

என் வீடு மாடியில் இருந்தது. மாடியின் பாதி எங்கள் வீடு. மற்றொரு பாதி அப்படியே இருந்தது. வீட்டில் இருந்து கால் எடுத்து வெளியே வைத்தால் மாடி. மாடி இருக்கிற வீடுகளுக்கெல்லாம் ஒரு துண்டு வானம் சொந்தம். இது எங்கள் வீட்டு முற்றம், எங்கள் வீட்டு திண்ணை என்று சொல்வது போல, எங்கள் வீட்டு வானம் என்று கூட சொல்லலாம்.  எங்களின் வானத்தை அங்கேயே விட்டுவிட்டு செல்லப் போகிறோம்.  கூடவே இனி காண முடியாத ஒரு மழையையும் வெயிலையும்.

தண்ணீரின் சுவை முதல் பறவைகளின் ஒலி வரை அனைத்தும் இனி ஊரையே நினைவுபடுத்தும். கவிதைகளில் இனி அதன் தெருக்கள் விரியும். கதைகளில் அதில் மழை பெய்யும். என் முதல் புத்தகத்தில் உன்னை அரங்கேற்றுகிறேன் என்ற உறுதியுடன் கிளம்பிவிட்டேன்.

ஒரு நண்பரையோ காதலியோ யாரையோ பிரிகையில் கொஞ்சம் கைப்பற்றிக்  கொள்ளலாம். ஒரு அணைப்பில் ஆறுதல் கொள்ளலாம். சொந்த  ஊரை விட்டு பிரிகையில் என்ன செய்வது, திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வதைத் தவிர?

Written by aravind

ஜூலை 13, 2008 இல் 2:26 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

17 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. //சொந்த ஊரை விட்டு பிரிகையில் என்ன செய்வது, திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வதைத் தவிர?…// மனதின் ஓரத்தில் எதோ அறியா வலி உண்டுபண்ணும் வார்த்தைகள்… Everyone has some deep memories about leaving the roots and relocating somewhere else.. i remember the tears i spilt reading Vairamuthu’s Kallikattu Ithikasam, and i could relate the central theme in both… Beautifully written..

    Vignesh

    ஜூலை 13, 2008 இல் 4:54 பிற்பகல்

  2. இருந்த‌ இட‌த்தை இழ‌க்கும் வ‌லி….ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ஊருச் ச‌த‌மில்லை;உற்றார் ச‌த‌மில்லை என்ற‌ ப‌ட்டின‌த்தாரின் பாட‌ல்தான் நினைவுக்கு வ‌ருகிற‌து

    bashakavithaigal

    ஜூலை 13, 2008 இல் 10:51 பிற்பகல்

  3. பெற்ற தாயையும், பிறந்த தாய் மண்ணையும் பிரியும் போது ஏற்படும் வலியினும் கொடியது இவ்வுலகில் வேறில்லை.

  4. “திடீர் திடீரென பிடித்தமான நினைவை ஒவ்வொருவரும் எடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வர முடியாத உரையாடல்.”

    “ஒரு பழைய பாடலின் வார்த்தைகள் மறப்பது போல, சில நினைவுகள் முழுமையற்று இருந்தது. ஒருவரின் பெயரோ, இருந்த இடமோ எதுவோ மறந்து போயிருந்தது. அதிகாலையில் எழுந்து குழம்பிக்கொள்ளும் ஒரு கனவு போல என் குழந்தைப்பருவம் ஆகியிருந்தது.”

    “என்றுமே 345க்கு பிறகு 347 வந்ததில்லை தான். இருந்தும் இருபத்தியிரண்டு ஆண்டுகளாக நான் அதை செய்திருக்கிறேன். ஒரு எளிய உண்மையை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதபடுத்திக் கொண்டு புன்னகை செய்திருக்கிறேன்.”

    “இருக்கிற இடத்தில் போட முடிகிற ஒரு சின்ன கோலம் போல.”

    “எந்த மாற்றத்தையும் அவசர அவசரமாக அடைகிற எந்த ஒரு அவஸ்தையையும் அது தந்ததில்லை. ஒரு எளிய மெல்லிசைக்கு எது எது தேவையோ அது அது போதும்.”

    “நடந்தே எங்கும் சென்று வந்துகொண்டிருந்த நாட்களில் இரண்டு மூன்று தெருக்களில் ஊர் முடிந்து விட்டது.”

    “மாடி இருக்கிற வீடுகளுக்கெல்லாம் ஒரு துண்டு வானம் சொந்தம். இது எங்கள் வீட்டு முற்றம், எங்கள் வீட்டு திண்ணை என்று சொல்வது போல, எங்கள் வீட்டு வானம் என்று கூட சொல்லலாம். எங்களின் வானத்தை அங்கேயே விட்டுவிட்டு செல்லப் போகிறோம்.”

    “ஒரு நண்பரையோ காதலியோ யாரையோ பிரிகையில் கொஞ்சம் கைப்பற்றிக் கொள்ளலாம். ஒரு அணைப்பில் ஆறுதல் கொள்ளலாம். சொந்த ஊரை விட்டு பிரிகையில் என்ன செய்வது, திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வதைத் தவிர? “

    M.Saravana Kumar

    ஜூலை 14, 2008 இல் 6:04 மு.பகல்

  5. நண்பரே.. உம் வயதென்ன??????

    ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் போல் இருக்கிறது உம் எழுத்து.. முன்னரே சொல்லியது போல் உம்மிடம் ஒரு மிக சிறந்த எழுத்து நடை இருக்கிறது..

    கலக்கலான பதிவு.. :)

    முடிந்தவரை.. ஏதேனும் போட்டிகளுக்கோ அல்லது பத்திரிக்கைகளுக்கோ இதை அனுப்புங்கள்..
    வாழ்த்துக்கள்.. :)

    M.Saravana Kumar

    ஜூலை 14, 2008 இல் 6:05 மு.பகல்

  6. மிகவும் ரசித்து படித்தேன்…
    :)
    கலக்கலான பதிவு..
    :) :):)

    M.Saravana Kumar

    ஜூலை 14, 2008 இல் 6:06 மு.பகல்

  7. http://www.blogstheme.com/themes/downloaded.html

    இங்கு நிறைய WORDPRESS TEMPLATES உள்ளன.. :)

    M.Saravana Kumar

    ஜூலை 14, 2008 இல் 6:11 மு.பகல்

  8. speechless!!!

    Milinta

    ஜூலை 14, 2008 இல் 9:05 மு.பகல்

  9. @Vignesh,

    Doode, well said. I am glad you were reminded of a master piece! Thanks for those kind words. :)

    aravind

    ஜூலை 14, 2008 இல் 3:21 பிற்பகல்

  10. @பாஷா,

    அனைத்து வலிகளுக்கும் நினைவே மருந்து இல்லையா? வருகைக்கும் பின்னூட்டத்திற்கும், மிக்க நன்றி அன்பரே!

    aravind

    ஜூலை 14, 2008 இல் 3:22 பிற்பகல்

  11. @செல்லப்பன்,

    அழகாக சொன்னீர்கள். தங்களின் உணர்வுகளுடன் கலக்க முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

    aravind

    ஜூலை 14, 2008 இல் 3:23 பிற்பகல்

  12. @சரவணா,

    அத்தனை வரிகளையும் குறிப்பிட்டமைக்கு கோடி நன்றிகள். தொடர்ந்து தாங்கள் தரும் ஊக்கம் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. :)

    ஹா ஹா ஹா! நல்ல சந்தேகம்! எனக்கு வயது இருபத்தியிரண்டரை. :)

    நீங்கள் சொல்லவருவது புரிகிறது. நிச்சயம் இந்த themeஐ மாற்றுகிறேன்! :D

    aravind

    ஜூலை 14, 2008 இல் 3:26 பிற்பகல்

  13. @Milinta,

    You made my day. I would take a bow! :)

    aravind

    ஜூலை 14, 2008 இல் 3:27 பிற்பகல்

  14. ஆனால் அறுபது வயது ஆண்டு அனுபவித்து எழுதியதை போலிருந்தது.. ;)
    ;)

    தீம் மாற்றியதற்கு வாழ்த்துக்கள்.. :)

    M.Saravana Kumar

    ஜூலை 14, 2008 இல் 6:10 பிற்பகல்

  15. அதுவா… போன ஜென்ம நியாபகமாக இருக்கலாம் ;)

    Aravindan

    ஜூலை 15, 2008 இல் 2:59 பிற்பகல்

  16. wow!!!!!!!!!!!Excellently written!

    Pavithra

    ஆகஸ்ட் 5, 2008 இல் 6:57 பிற்பகல்

  17. Thanks Pavithra! :D

    Aravind

    ஆகஸ்ட் 6, 2008 இல் 4:11 மு.பகல்


மறுமொழி இடுக