சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஜூலை 2008

தாரே ஜமீன் பர்

23 மறுமொழிகளுடன்

அமீர் கான் தமிழ்ல “தாரே ஸமீன் பர்” படத்த தயாரிக்கப் போறதா நியூஸ் வருது. இதுக்காக முண்ணனி இயக்குனர்கள் கிட்ட பேசறதுக்காக ஒரு மீட்டிங் வெக்கறாரு. அதுல ஷாருக் கான், சல்மான் கான், அவரோட நாய், ப்ளாக், இம்ரான் கான் எல்லார பத்தி பேசி முடிச்சுட்டு டைரக்டர்ஸ் எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால கதையோட ஒன் லைன் சொல்றாரு – “பையனுக்கு எழுத்தெல்லாம் ஆடுது” .உடனே டைட்டில் வெச்சு பிரமாதமா கதை பிடிக்கிறாங்க.

 

 

டிஸ்லெக்ஸியன் (ஷங்கர்):

விக்ரமோட தங்கச்சிக்கு டிஸ்லெக்ஸியா. ரெண்டு பேரும் ரிக் ஷால வரும் போது, தங்கச்சி எழுதின எழுத்து ஆடோ ஆடுனு ஆடி, ரிக் ஷாவும் ஆடி(க்ராஃபிக்ஸ் ப்ளீஸ்) கீழே விழுந்து ஷாக் அடிச்சு செத்து போயிடறா. விக்ரம் மனசுல ஒரே குஷ்டமப்பா. மல்டிபிள் பெர்ஸ்னாலிட்டி டிஸார்டர் மகுடி வாசிக்க, டிஸ்லெக்ஸியாவ புறக்கணிக்கவங்கள எல்லாம் லிஸ்ட் போட்டு கொல்றாரு. பக்கத்து வீட்டு சதாவோட லவ் வேற. “அய்யங்காரு வீட்டு அக்கண்ணா”னு ரெண்டு பேரும் பிரம்மாண்ட பிரம்மாண்ட “ஆ” “இ” “உ” வோட டூயட் எல்லாம் பாடி முடிக்க, டாக்டர் நாசர் விக்ரமுக்கு டிஸ்லெக்ஸியானு சொல்றாரு. டாக்டருக்கு படிக்கிற சதா “அப்படினா என்ன டாக்டர்? ஆவி மாதிரியா டாக்டர்?”னு கேட்டு பேட்டி எடுக்குறாங்க. கடைசில எல்லா கார்பரேஷன் பைப்லயும் தண்ணி வந்துடுது, பஸ்ல சில்லறை கரெக்டா கொடுக்கறாங்க, கவர்மெண்ட் ஆஃபீஸ்ல எல்லா செக்கும் பாஸ் ஆகுது. சுபம்.

 

அ ஆ (அநியாயத்துக்கு ஆடுது) (எஸ்.ஜே.சூர்யா):

குட்வில் க்ளாமர் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல நமீதா தான் ப்ரின்ஸிபல். மாளவிகா டீச்சர். மும்தாஜ் ஆயா. எஸ்.ஜே.சூர்யா பகல்ல சின்ன பையனா ஸ்கூல்ல படிக்கிறாரு. நைட்ல சிம்ரனோட டான்ஸ் ஆடறாரு. சின்ன பையனுக்கு டிஸ்லெக்ஸியா. ஆடுது ஆனா ஆடலனு ஒரே டார்ச்சர். அம்மா தேவயானி திக்கி திக்கி அழறாங்க. கடைசில ப்ரின்ஸிபல், டீச்சர், ஆயா எல்லாம் சேந்து பையனுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வெக்கறாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்ல? “தொட்டால் அ அலறும் தொடாமல் உ உறுமும்” பாட்டும், “காலையில் தினமும் கண் விழித்தால் எழுத்து ஆடும் சும்மா, அன்பென்றாலே அம்மா” பாட்டும் பயங்கர ஹிட் ஆகும்.

 

Calligraph (சேரன்):

இது செண்டிமெண்ட் ஆட்டம். சேரனோட அப்பா கஷ்டப்படறாரு. அம்மா கஷ்டபடறாங்க. அண்ணன் கஷ்டப்படறாரு. அக்கா கஷ்டப்படறாங்க. ஒரே கஷ்டம். நமக்கும் தான். சேரன் அழறாரு. பத்மபிரியா அழறாங்க. அப்பாவி அப்பா, அவருக்கு தான் டிஸ்லெக்ஸியா. பசங்கள கஷ்டப்பட்டு படிக்க வெச்சா அவங்க எழுதறத பாக்க முடியாம அப்பா துடிக்கிறாரு. “அவரவர் எழுத்தில் ஆயிரம் ஆயிரம் ஆட்டங்கள்” பாட்டு பேக்ரவுண்ட்ல பாட, சேரன் விதம் விதமா எழுதிகாட்டறாரு, ஆனா டிஸ்லெக்ஸியா பத்தி தெரியாம எல்லாரும் கஷ்டபடறாங்க. சாகறதுகுள்ள எப்படியாச்சும் பசங்களோட எழுத்த ஆடாம பாக்கணும்னு ஆசப்படறது தப்பா? கஷ்டபடறாங்க. அவ்ளோ தான். இன்னும் என்னும் வேணும்? கடைசில சேரன் அவங்க அப்பா பேர்ல “மாவட்ட டிஸ்லெக்சியா மறுவாழ்வு மையம்” துவக்கறாரு. 4 ½ ஹவர்ஸ் மூவி.

 

தாரே ‘ஜமீன்’ பர்: (கே.எஸ்.ரவிக்குமார்)

பரம்பரையிலயே யாருக்கும் இல்லாத எழுத்து ஆடற வியாதி சின்ன சரத்குமாருக்கு இருக்கிறது தெரிஞ்சதும் பொங்கி எழற விஜயகுமார் “ஊட்ட உட்டுபோட்டு ஒடற காதல் பண்ற பொண்ணும் பேப்பர உட்டு போட்டு ஆடற எழுத்த எழுதற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லனு” திட்டி ஆச்சியோட அவர ஊர விட்டு ஒதுக்கி வெச்சிட்டு ஹார்ட் அட்டாக் ல அம்பேல். விஜயகுமார் “எண்றா”னா 1,2,3 னு எண்ணிபுடற இன்னொரு அண்ணன் சரத்குமார், அந்த தீர்ப்ப அப்படியே கொடி பிடிக்க, ஆச்சி கோயில்ல குடத்தோட உருள்றாங்க, நெஞ்சுல அடிச்சுட்டு அழு அழுனு அழறாங்க. குஷ்பூ, மீனா எல்லாம் குடும்பஸ்திரியா கம்முனு இருக்காங்க. பொன்னம்பலம், தம்பி சரத்குமார் கிட்ட உன் பரம்பரையே ஆடற கூத்து பரம்பர தானேனு சொல்லிபுட, ஒரே சண்ட மண்ட. கடைசில எல்லாரும் ஒண்ணு சேந்தப்புறம் சுபம்.

 

உன்னிடத்தில் Penஐ கொடுத்தேன்: (விக்ரமன்)

ரோஜாக்கு டிஸ்லெக்ஸியா. அப்பா யாருன்னு அம்மா சாகும் போது தான் தெரியுது. சித்தி கொடும தாங்காம தவிக்கிறப்ப கார்த்திக் ஹெல்ப் பண்றாரு – ஒரு Pen வாங்கி கொடுக்குறாரு. அத கெட்டியா பிடிச்சு எழுதி எழுதி ஒரே பாட்டுல எல்லாம் சரியாய்டுது. நடுல அஜித் ஃபாரின்லேர்ந்து ஃபவுண்டைன் பென் வாங்கிட்டு வரசொன்னதுக்கே ஆறு மாசம் யோசிக்க (ஃபவுண்டென் பென்னே ஃப்வுண்டென் பென்னே பார்த்தாயா), பால்பாயிண்ட் பென்னா இருந்தாலும் பாந்தமா இருக்கும்னு கார்த்திக்கையே கல்யாணம் பண்ணிக்கிறதா ஏதோ ஒரு மேடையில அழுதுகிட்டே அறிவிக்கிறாங்க. விக்ரமன் ஸ்பெஷல் வியாக்கியானங்கள் ஏராளம் – “எழுத்துங்கறது எறும்பு மாதிரி இருந்தா நமக்கு மட்டும் தான் தெரியும். எருமை மாதிரி இருந்தா ஊருக்கே தெரியும்” “படிப்புங்கிறது பல்லு மாதிரி – தேக்க தேக்க தான் விளங்கும்”. தனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தால எஸ்.ஏ.ராஜ்குமார் பிண்ணனி இசையில தா’லா’ட்டுறாரு.

 

அமீர் கான் ஆர் யு ரெடி?

Written by aravind

ஜூலை 22, 2008 இல் 4:46 பிற்பகல்

திரை, நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

சூ கீ – சில குறிப்புகள்

16 மறுமொழிகளுடன்


உப்பரிகையில் நின்று
ஊரைப் பார்த்த
ராணிகளின் கிரீடங்கள்
ஒவ்வொன்றாக விழட்டும்
ஜன்னல் வழியே
நாட்டைப் பார்க்கும்
உன் காலடியில்

—————
மின்சாரம் துண்டிக்கப்பட்ட
உன் வீட்டில்*
ஒவ்வொரு இரவும்
மெழுவர்த்தி ஏற்றுகிறாய்
இருண்ட உன் தேசத்தில்
நீயே நிற்கிறாய்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்

—————
இறந்த கணவரின் உடலுக்கு
உன் பிரார்த்தனையை செலுத்தக் கூட
நாட்டை விட்டு வெளியேற
நீ மறுத்த அன்று
செத்துக்கொண்டிருந்த தேசம்
கொஞ்சம் பிழைத்தது

—————
தெய்வம்
நின்றுகொண்டிருக்கிறது
நின்றுகொண்டிருக்கிறது
நின்றுகொண்டிருக்கிறது
இன்னும் நின்றுகொண்டிருக்கிறது
ஒரு நாள் கொல்லும்
உன்னையே கூட

—————

நாலு படம் ஓடியதால்
ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால்
எங்கள் ஊரில் தரப்பட்ட
‘புரட்சி’ பட்டங்களை  அனுப்புகிறேன்
உன் வீட்டு கால்மிதியாக உதவும்

—————
தெய்வங்கள்
ஒரு அறைக்குள்
சிலையாய் இருந்தபடி
நம்பிக்கை தந்து
ஊரைக் காக்கும்
என்று சொல்பவரிடத்தில்
நீ ஒரு சின்ன புன்னகை செய்

—————
கி மு
கி பி
என்றால் சரித்தரம்
சூ கி
என்றாலும் கூட

——————————————————————————————–
இன்றுடன், 12 வருட வீட்டுச்சிறையையும்  தாண்டி தனது போராட்டத்தின் 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் சூ கீ.

——————————————————————————————–

* – சமீபத்தில் வீசிய நர்கீஸ் புயலில் சூ கீயின் வீட்டு மேல் கூரை பறந்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது.

Written by aravind

ஜூலை 20, 2008 இல் 5:20 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

விடை கொடு எங்கள் ஊரே!

17 மறுமொழிகளுடன்

நேரம் இத்தனை வேகமாக செல்கிறதே என்று நான் இத்தனை தவிப்புடன் பார்த்து வெகு நாட்களாயிற்று. அது ஒரு சனிக்கிழமை இரவு. மிகவும் முக்கியமான ஒரு இரவு. என் சொந்த ஊரில் நான் தங்கப் போகும் கடைசி இரவு. அடுத்த நாள் காலையில் நானும் அம்மாவும் கிளம்புவதாக இருந்தோம். எங்களுக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பரின் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இருபத்தியிரண்டு ஆண்டு பழக்கத்தின் நினைவுகள் உரையாடலின் தொடரை அவ்வபோது உடைத்தது. திடீர் திடீரென பிடித்தமான நினைவை ஒவ்வொருவரும் எடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வர முடியாத உரையாடல்.

என் குழந்தைப்பருவ நினைவுகள் என் கண் முன்னே அந்த அறையில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. ஒரு பழைய பாடலின் வார்த்தைகள் மறப்பது போல, சில நினைவுகள் முழுமையற்று இருந்தது. ஒருவரின் பெயரோ, இருந்த இடமோ எதுவோ மறந்து போயிருந்தது. அதிகாலையில் எழுந்து குழம்பிக்கொள்ளும் ஒரு கனவு போல என் குழந்தைப்பருவம் ஆகியிருந்தது. அதை கொஞ்சம் அதிர்ச்சியுடன் ஒப்புக்கொள்வதை விட என்ன நான் செய்துவிட முடியும்?

கொல்கத்தா நெடுஞ்சாலையிலிருந்து கிளை விட்டு பிரியும் ஒரு குறுகிய சாலையில் விரிந்திருக்கும் என் ஊர். அந்த சாலையில் ஊரை நோக்கி செல்லும் போதெல்லாம், வழியெங்கும் நிற்கும் புளிய மரங்களின் மீது குறிக்கபட்டிருக்கும் எண்களை சரிபார்த்தபடி செல்வேன். என்றுமே 345க்கு பிறகு 347 வந்ததில்லை தான். இருந்தும் இருபத்தியிரண்டு ஆண்டுகளாக நான் அதை செய்திருக்கிறேன். ஒரு எளிய உண்மையை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதபடுத்திக் கொண்டு புன்னகை செய்திருக்கிறேன். என் ஊரும் அப்படி பல உண்மைகளை எனக்குத் தந்திருந்தது.  நிம்மதி தருகிற உண்மைகளை. வாழ்கை தன் முன்னே வைத்திருந்த மிகப்பெரிய சவாலை என் அம்மா மெது மெதுவாக அந்த ஊரில் இருந்துபடி வென்றுகொண்டிருக்கிறாள் என்பது தான் அதில் மிகவும் அமைதியும் நிம்மதியும் தந்த உண்மை. எந்த பெரிய உதவியும் செய்ய நான் முடியாமல் அவளை அமைதியாக பார்த்துகொண்டிருந்த போது, அவள் பிறந்து வளர்ந்த ஊர் அவளுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை தந்துகொண்டிருக்கிறது என்பது  மிகவும் ஆறுதலாயிருக்கும். அந்த சமயங்களில் ஊரின் மீதான காதல் பலமடங்கு பெருகும்.

என்னுடைய நண்பர்கள் பலர் அந்த ஊரை வெறுத்திருக்கிறார்கள். அது அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிற ஒரு டவுன். ஆரவாரங்கள் அற்ற ஒரு இடம். சின்னச் சின்ன தேடல்களுடன் நிறைவாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு உலகத்தை அது தந்ததை ஏனோ அவர்கள் சிந்திக்க மறுத்தார்கள். இரண்டு கோயில்கள், இரண்டு திரையரங்குகள், ஒரு கடைதெரு என ஒரு எளிய அழகை கொண்டிருந்தது. இருக்கிற இடத்தில் போட முடிகிற ஒரு சின்ன கோலம் போல. எந்த ஒரு பெரிய மாற்றமும், வெகு நாட்கள் அதன் வாயிலில் காத்திருந்தே உள்ளே வரமுடியும். எந்த மாற்றத்தையும் அவசர அவசரமாக அடைகிற எந்த ஒரு அவஸ்தையையும் அது தந்ததில்லை. ஒரு எளிய மெல்லிசைக்கு எது எது தேவையோ அது அது போதும்.

நடந்தே எங்கும் சென்று வந்துகொண்டிருந்த நாட்களில் இரண்டு மூன்று தெருக்களில் ஊர் முடிந்து விட்டது. மிதிவண்டி வந்ததும் தான் முழு ஊரும் பழக்கப்பட்டது. அகலமான சாலைகள், குறுகிய சந்துகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டு கிடந்தன.  கணித கேள்விக்கு பல வழியில் விடை காணும் பரவசத்துடன், ஒரு இடத்திற்கு செல்ல பல வழிகளை மிதிவண்டியில் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுதுகளில் ஊரும் நானும் தனியே விளையாடிக்கொண்டிருந்தோம். அன்றும் அப்படி ஒரு மிதிவண்டியில் சுற்றி விட்டு வரவேண்டும் என்று தோன்றியது.

என் வீடு மாடியில் இருந்தது. மாடியின் பாதி எங்கள் வீடு. மற்றொரு பாதி அப்படியே இருந்தது. வீட்டில் இருந்து கால் எடுத்து வெளியே வைத்தால் மாடி. மாடி இருக்கிற வீடுகளுக்கெல்லாம் ஒரு துண்டு வானம் சொந்தம். இது எங்கள் வீட்டு முற்றம், எங்கள் வீட்டு திண்ணை என்று சொல்வது போல, எங்கள் வீட்டு வானம் என்று கூட சொல்லலாம்.  எங்களின் வானத்தை அங்கேயே விட்டுவிட்டு செல்லப் போகிறோம்.  கூடவே இனி காண முடியாத ஒரு மழையையும் வெயிலையும்.

தண்ணீரின் சுவை முதல் பறவைகளின் ஒலி வரை அனைத்தும் இனி ஊரையே நினைவுபடுத்தும். கவிதைகளில் இனி அதன் தெருக்கள் விரியும். கதைகளில் அதில் மழை பெய்யும். என் முதல் புத்தகத்தில் உன்னை அரங்கேற்றுகிறேன் என்ற உறுதியுடன் கிளம்பிவிட்டேன்.

ஒரு நண்பரையோ காதலியோ யாரையோ பிரிகையில் கொஞ்சம் கைப்பற்றிக்  கொள்ளலாம். ஒரு அணைப்பில் ஆறுதல் கொள்ளலாம். சொந்த  ஊரை விட்டு பிரிகையில் என்ன செய்வது, திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வதைத் தவிர?

Written by aravind

ஜூலை 13, 2008 இல் 2:26 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது