மரத்தடி
ஒரு திரைப்படத்தின் கதையை சொல்வதற்கு ஒவ்வொருவரும் ஒரு உத்தியை கையாள்கிறார்கள். சிலர் இரண்டு மணி நேர கதையை ஐந்து மணி நேரம் சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள். ஐந்து மணி நேரம் கழித்தும் திருப்தியடையாதவர்கள் பலர். சிலர் பாடல்கள் எங்கு வரும் என்று குறிப்பிடுவதில் கவனமாக இருப்பார்கள். பாடல்களை வழிகாட்டி மரம் போல பாவித்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலையும் அடையும் போது, சரியான பாதையில் செல்கிறோம் எனற ஒரு திருப்தி அவர்கள் முகத்தில் தெரியும். கதை சொல்லி முடிக்கும் போது நிச்சயம் ஒரு பாடல் விட்டு போயிருக்கும். மீண்டும் வந்த வழியே சென்று விட்டுப்போன பாடலை பொருத்துவார்கள். சிலர் வசனங்களை அதே தொனியில் சொல்லிக் காட்டுவர். பலருக்கு இரண்டு வரிகளுக்கு மேல் கதையை சொல்லத் தெரியாது. முக்கியமான காட்சியை விளக்குவதற்கு முன்னால் சிலர் நம்மை கவனப்படுத்துவார்கள். அந்தக் காட்சி கடந்ததும் அதில் என்ன அப்படி முக்கியமானது இருந்தது என்று நிச்சய்ம் தோன்றும். சிலர் முழுதாக சொல்லி முடித்ததும் அவர்கள் அந்த படத்தை பார்க்கவேயில்லையென நமக்கு தோன்றும்.
அலுவலகத்திற்கு என்னை தினமும் காரில் கொண்டு விடும் அன்பர் அன்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அவரின் புன்னகையில் ஒரு உரையாடலை அவர் தொடங்குவதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்தன. நேற்று இரவு அவர் ஒரு திரைப்படத்தை பார்த்திருக்கிறார். சுமார் நான்கு வருடங்கள் கழித்து திரையரங்கில் சென்று பார்த்திருக்கிறார். அதுவே அந்த உற்சாகத்திற்கு காரணம். நான் அப்படியா சந்தோஷம் புன்னகை ஒன்றை உதிர்த்தேன். அவரோ படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். கடைசிக் காட்சியில் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள் என்பதை முன்னுரையாகச் சொல்லிவிட்டு தொடங்கினார். நினைவுக்கு வருகிற எல்லாக் காட்சியையும் சொல்லிக்கொண்டே வந்தார். வரிசையில் சொல்ல வேண்டும் என்று அவருக்கு ஏனோ தோன்றவில்லை. தோன்றிய காட்சியை உடனே சொல்லாவிட்டால் அது மறந்து விடுமோ என்னவோ. அலுவலகம் அடைந்த போது அவர் சொல்லி முடித்துவிட்டாரா என்பதை அவரிடமே கேட்க விரும்பினேன். அவருக்கே தெரிந்திருக்காது என்று நினைத்து அந்த எண்ணத்தை நிராகரித்தேன். ஒரு முத்துமாலையை அறுத்தது போல அந்த திரைப்படத்தை அவர் என்னிடம் அறுத்திருந்தார். திரைப்படம் என்னைச் சுற்றி சிதறிக்கிடந்தது. கதவை திறந்து இறங்குகையில் மடியிலிருந்து விழுந்து சிதறியோடியது திரைப்படத்தின் பாடல் ஒன்று.
******************
“கடைசி பேருந்து” என்ற வார்த்தைப் பிரயோகமே நகரங்களில் இல்லையென தோன்றுகிறது. எங்கள் டவுனுக்கு சென்னையிலிருந்து வரும் கடைசி பேருந்துக்கு கோயில் தேர் போல ராஜ மரியாதை தரபட்டது. எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது கண்ணுக்குத்தெரியாமல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. எத்தனை சுவாரசியமான பேச்சையும் எட்டரை மணிக்கு துண்டித்தாக வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி நிற்க வேண்டும். சென்னை திருமணங்களிலிருந்து சாப்பிடாமலே பலர் அதை பிடிக்க ஓடி வந்துவிடுவர். அலுவலக ஊழியர்கள் அந்த பேருந்தில் ஒரு நண்பர் வட்டத்தையே உருவாக்கியிருப்பர். காய்கறிகள் விற்றுவிட்டு திரும்பி வரும் வயதான பாட்டிகளின் குடிசை வாயில்களிலே பேருந்து நின்று செல்லும். நடத்துனர் கொஞ்சம் பேச்சு சிரிப்புடன் பேருந்தை வழி நடத்திச் செல்வார். டிக்கெட் கிழித்தலில் இயந்திரத்தனம் குறைந்திருக்கும். நாள் முழுதும் ரகசியமாக ஊரைச் ஒன்றாக சுற்றி திரும்ப வரும் காதலர்கள் யாரையும் நான் அறியேன் என்ற பாவனையோடு தூரதூரமாக அமர்ந்து வந்துகொண்டிருப்பார்கள். அலைபேசிகள் இல்லாமல் அம்மாமார்களின் மனம் அல்லாடிக்கொண்டிருக்கும். இரவில் விழித்திருக்கும் கடவுள்களுக்கு அவர்களின் பிரார்த்தனை புளித்து போயிருக்கும். ஒரு தலைமுறையாகவே வீட்டின் பெண்கள் அதற்காக தினமும் காத்துக்கொண்டிருந்தார்கள், பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு.
******************
பாதி நிரம்பிய வாளியினுள் குழாயின் நீர் சொட்டும் ஒலியை விட இரவில் கேட்பதற்கான ரம்மியமான இசை வேறெதுவும் இல்லை. ஒரு ராணுவ ஒழுங்கை கொண்டது சொட்டுகளுக்கிடையேயான அந்த இடைவெளி. முடிவற்ற ஒரு பாடலைப் போல தொடர்ச்சியாக நீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது. ஏதோ நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிற வேளைகளில் அந்த ஓசை மிகச் சுலபமாக நினைவுகளுடன் கலந்து விடுகிறது. உறுத்தாமல் பக்க வாத்தியம் வாசிப்பது போல. வாளியில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அதே சின்ன அதிர்வு என் எண்ணவெளிகளில் ஏற்படுகிறது. திடீரென யாராவது குழாயின் வாயை அழுத்தி மூடிவிட்டு படுக்கிறார்கள். அவர்களுக்கு அது ஏதோ ஒரு விடுதலையை தந்துவிடுகிறது. அதன் பிறகு எனக்கு தான் உறக்கம் போய்விடுகிறது. சப்தப்பெருவெளி எங்கும் நீர் துளிகள் சொட்டிக்கொண்டே இருப்பது போன்று ஒரு பிரமை.
காற்று வீசும்………….
மீண்டுமொரு அழகான பதிவு.. அதிலும் கடைசி ஒன்று அருமை..
“ஏதோ நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிற வேளைகளில் அந்த ஓசை மிகச் சுலபமாக நினைவுகளுடன் கலந்து விடுகிறது. உறுத்தாமல் பக்க வாத்தியம் வாசிப்பது போல. “
MSK
மே 12, 2008 இல் 12:29 பிற்பகல்
முடிந்தால் இந்த கருமையான template – i மாற்றலாமே..
MSK
மே 12, 2008 இல் 12:31 பிற்பகல்
சரவணகுமார்,
நன்றி. கடைசி பகுதியை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்தேன்.
இந்த டெம்பலேட் மிகவும் பொருத்தமாக இருக்குமென நினைத்தேன். தவறாக கணக்கிட்டுவிட்டேனா??
அரவிந்தன்
மே 12, 2008 இல் 5:18 பிற்பகல்
தவறென்று ஏதுமில்லை.. உங்களுக்கு பிடித்த ஒன்று, எனக்கு பிடிக்காமலிருக்கலாம்..
கருமையான பக்கங்களின் வரிகளை சற்று உற்று நோக்கி படிக்க வேண்டியதாய் இருக்கிறது.. அதனால் தான் நண்பரே..
But, dont change if you like this template most..
MSK
மே 15, 2008 இல் 2:25 பிற்பகல்
@சரவணகுமார்,
எனக்கு புரிகிறது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு மாற்றுகிறேன். அதுவரை எனக்காக பொறுத்துக்கொள்ளவும்.
aravind
மே 18, 2008 இல் 1:18 பிற்பகல்