Archive for மே 2008
401 காதல் கவிதைகள்
பெயர்: 401 காதல் கவிதைகள் – குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்
எழுதியவர் : சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை
விலை: 150
பக்கங்கள்: 224 (என்னுடையதில் மட்டும் 209ல் இருந்து 224 வரையுள்ள பக்கங்கள் இரண்டு முறை அச்சிடப்பட்டுள்ளது
)
இனி நீங்கள் புத்தகத்தை பற்றி கேட்க விரும்பும் கேள்விகளும், என் பதில்களும்.
எதைப் பற்றி?
பெயரே விளக்குவது போல, எட்டுதொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையின் 401 பாடல்களுக்கும் எளிய தமிழ் கவிதை வடிவம் தந்திருக்கிறார். ஒவ்வொரு செய்யுளின் தலைப்பு ( தலைவன்/தலைவி/தோழி/கண்டோர்/செவிலித்தாய் கூற்று + திணை), அதை தொடர்ந்து செய்யுள், பிறகு தலைப்புடன் கூடிய ஒரு எளிய கவிதை, என ஒவ்வொரு செய்யுளுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. வள வள கதைகள் இல்லை.
என்ன கிடைக்கும் இந்த புத்தகத்தில்?
தரமான காதல் கவிதைகள், சில பிரமிக்க வைக்கும் உவமைகள், சில தமிழ் சொற்களின் வேறு அர்த்தங்கள் ( உதாரணம், காமம் – பொய்)
என்ன கிடைக்காது இந்த புத்தகத்தில்?
மா – பெரிய போன்ற வார்த்தைக்கு வார்த்தை பொருள் விளக்குதல்.
யாரெல்லாம் படிக்கலாம்?
தமிழ் ஆர்வமுடையவர்கள், சங்க இலக்கியத்தை விரும்புபவர்கள், “நேற்று நீ எங்கள் தெருவில் நடந்து போனதால் தானோ என்னவோ” போன்ற காதல் கவிதைகளை படித்து சலித்தவர்கள், சங்க இலக்கியம் – திணை – குறுந்தொகை பற்றி அறியாமல் போனாலும் நல்ல ரசனையுடைவர்கள்.
யாரெல்லாம் தவிர்க்கலாம்?
ஒரு சின்னக் கவிதையை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்பாதவர்கள், சீக்கிரம் முயற்சியை கைவிடுபவர்கள்
எப்படி படிக்கலாம்?
தினம் காலையில் ஒரு செய்யுள், இரவு தூங்குவதற்கு முன் ஒன்று அல்லது தோன்றுகிற போதெல்லாம். ஒரு நாள் தலைவன் கூற்றை மட்டும் படித்தபடி வரலாம். ஒரு நாள் பாலைத் திணை மட்டும். எளிய கவிதையை படித்து விட்டு மீண்டும் செய்யுளை படித்து பார்க்கலாம். என்னென்ன வார்த்தைக்கு எப்படி அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்று ஆராயலாம்.
என்ன விளங்கும்?
தமிழ் இலக்கியம் எத்தனை செழுமையானது என்பதும், அதை எவ்வளவு சுலபமாக மறந்துவிட்டோமென்பதும், இன்றைக்கு எழுதப்படும் அழகிய காதல் கவிதைகள் எல்லாமே குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பதும். ( அந்த காலத்தில் எல்லாம் பெண்களின் தோள்களும் மூங்கில் போல இருந்தது என்பதும்
)
என்ன விளங்காது?
சில கவிதைகள், பாடலில் வருகிற சில பூக்கள்.
அடிக்கடி புத்தகத்தில் வருவது?
ஆண்மானும் பெண்மானும் சேர்ந்து குட்டையில் நீர் பருகுவது, தலைவியின் பசலை நோய்
மிகப்பெரிய பலம்?
பிரமிக்க வைக்கிற நெகிழ வைக்கிற கவிதைகள், எத்தனை முறை வேண்டுமானாலாம் படிக்கலாம்.
மிகப்பெரிய பலவீனம்?
அது நம்மை பொறுத்தது. எனக்கு – போதிய தமிழறிவின்மை.
எப்படி உன்னை நம்புவது?
எனக்கு மிகவும் பிடித்த ஏராளமனவற்றில் கண்ணை மூடிக் கொண்டு தேர்ந்தெடுத்த ஒரு தலைவன், தலைவி மற்றும் தோழி கூற்று, இங்கே.
பெரிய வயல், ஒரே ஒரு ஏர்
அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்
சண்டையிடும் கண்கள்
கொண்ட காதலி
வெகு தூரத்தில் இருக்கிறாள்.
பசுமையான அகன்ற வயலிருந்தும்
ஒரே ஒரு ஏருள்ள உழவன்போல
அவசரத்தில் தவிக்கிறேன்
(பாலை – தலைவன் கூற்று, பாடல் 131 – ஒரேருழவனார்)
கழுத்துமணி சப்தம்:
துளித்துளியாகக் கண்ணீருடன்
நான் புலம்புவதைக் கேட்பவர்
வேறு யாரும் உளரோ?
மழைத்தூரலில் வாடைக்காற்று வீசும்
குளிர் காலத்தில்
ஈயின் தொந்தரவு தாங்காமல்
எருது தலையசைக்க
கழுத்துமணியின் சப்தம் கேட்கும்
நள்ளிரவில்!
(குறிஞ்சி – தலைவி கூற்று, பாடல் 86 – வெண்கொற்றன்)
எப்படி தப்புவார்?
பூமியைத் தோண்டிப் புகுந்துகொள்ள முடியாது
வானத்தில் ஏற முடியாது
கடல்மேல் நடந்து செல்ல முடியாது
நாடு நாடாக, ஊர் ஊராக
வீடு வீடாகத் தேடினால்
அகப்படாமல் தப்பிவிடுவார
உன் காதலர்?
(பாலை – தோழி கூற்று, பாடல் 130, வெள்ளிவீதியார்)
வங்குவது பற்றி இனி முடிவு செய்ய வேண்டியது நீங்கள்
தி லைஃப்ஸ் ஆஃப் அதர்ஸ்

2006ல் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ஜெர்மன் திரைப்படத்தை சென்னைக்கு கொண்டு வந்திருக்கும் பாரத்பாலா வெளியீட்டாளர்களுக்கு முதலில் ஒரு நன்றி!
Pre Credit sequence ஜெயிலில் நடக்கும் ஒரு விசாரணையையும் ஒரு வகுப்பில் நடக்கும் பாடத்தையையும் தாவித் தாவி காட்டுகிறது. விசாரணை, கம்யூனிச கிழக்கு ஜெர்மனியிலிருந்து குடியரசு மேற்கு ஜெர்மனிக்கு தப்பியவரின் அடுத்த வீட்டுக்காரரிடம். விசாரிப்பவரும் பாடம் எடுப்பவரும் ஒரே ஆள் – Wiesler, கிழக்கு ஜெர்மனியின் ரகசிய போலீஸ் “Stasi” அமைப்பில் கேப்டன். கடும் விசாரனைக்கு பெயர் போனவர். 40 மணி நேர விசாரணைக்கு பின்னர் உண்மையை எப்படி கக்கினான் என்பதை விளக்கிக்கொண்டிருக்கிறார், Stasiயில் சேரப்போகும் பயிற்சியாளர்களுக்கு. ஒரு மாணவன் இது மனிதாபினமற்ற செயல் என்று சொல்ல, எதிரிகளுக்கு மனிதாபிமானம் கிடையாது என்று சொல்லிவிட்டு, வகுப்பில் யார் யார் எங்கெங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்ற வரைபடத்தில் அவன் அமர்ந்திருக்கும் கட்டத்தில் ஒரு தப்புக்குறியை போட்டு வைக்கிறார்!
மொத்த படத்திற்கு பிரமாதமான ஒரு லீட்!
கம்யூனிச அரசின் கத்திரி, மக்கள் மனதில் முளைவிடும் சோஷலிச எண்ணங்களை முளையிலே வெட்டி எறிந்துகொண்டிருக்கிறது. அதற்கு உதவிக்கொண்டிருப்பது, Stasi. நாட்டில் யாருக்கும் அந்தரங்கம் கிடையாது. அப்படியொன்று இருக்க Stasi விடுவதில்லை. புரட்சி ஏற்படுத்த முயலும் கலைஞர்கள் / எழுத்தாளர்கள் / நடிகர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். மனரீதியான உளைச்சலுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் அவர்களின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.
அந்த சூழ்நிலையில் ஒரு பிரபல எழுத்தாளரின் மேடை நடிகை-காதலியை அபகரிக்க எண்ணும் ஒரு மந்திரி, Stasiயைப் பயன்படுத்த முயல்வதும், அதன் விளைவுகளும் தான், பொருத்தமான தலைப்புடன் வந்திருக்கிற “The Lives of others”.
எழுத்தாளர் அப்பார்ட்மெண்டின் கதவு தொடங்கி கழிப்பறை வரை மைக்குகள் வைத்து அதே அபார்ர்மெண்டின் மாடியில் அமர்ந்து இரவும் பகலுமாக ஷிஃப்டில் கண்காணித்து, எழுத்தாளரை ஏதாவது சிக்கலில் மாட்டி விட முயற்சிக்கிறார் Wiesler. நாள் போகப் போக அவர்களின் வாழ்க்கையோடு மிகவும் ஒன்றிப் போய்விடுகிறார். (ஒரு இரவில், எழுத்தாளரும் காதலியும் உறவு கொள்ளும் போது, அதைக் கேட்டு விட்டு அவரும் ஒரு விலை மாதுவைத் தேடிப் போகிற அளவுக்கு!). எழுத்தாளர் உண்மையிலே சில கம்யூனிச எதிர்ப்பு செயல்களை செய்யத் துவங்க, அதை மேலதிகாரியிடம் சொல்லாமல் மறைத்து அவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார் Wiesler. திருட்டு வர்த்தகத்தில் போதைக்கு அடிமையான எழுத்தாளரின் காதலி வேறு ஒரு பக்கம் எந்நேரமும் மந்திரியின் பக்கம் சாய்ந்து விடலாம் என்கிற சூழ்நிலை. யாருக்கு என்ன ஆகும்?
மெதுவாக படத்தின் உணர்வை நம்முள் வளரவிடும் முதல் பாதி கொஞ்சம் கோட்டை விட்டாலும், பின் பாதி செம வேட்டை!
காதலியின் கதாபாத்திரம் கனக் கச்சிதம். பிரமாதமான மேடை நடிகை – உண்மையான காதல் ஒரு பக்கம். போதை பழக்கம் ஒரு பக்கம். கலை ஆர்வம் ஒரு பக்கம். எது முக்கியம் என்று தெரியாமல் திணறுவது திக் திக். பொறுத்து பொறுத்து பொங்கி எழுகிற மந்திரி, காதலியை போதை வழக்கிலேயே சிறையிலடைக்க முயற்சிக்கிற கட்டத்தில் ஒரு கையில் காதலனின் உயிரும் இன்னொரு கையில் விடுதலையும் வைத்து நீட்டும் போது – மகிழ்ச்சியும் அழுகையுமாக அந்த நடிகை அசத்துகிறார்!
எழுத்தாளராக வருகிறவர் உறுத்தாமல் நடித்திருக்கிறார். எழுத்தாளரின் குருவாக வருகிற அந்த மூத்த கிழம் எழுத்தாளர் அத்தனை கம்பீரம்! யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்ற செருக்கு, ஓரிரு காட்சியில் வந்தாலும் பளிச்! அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட இரவில், அவர் பரிசாக தந்த இசைக்குறிப்பை பியானோவில் வாசிப்பது நல்ல டச்!
Stasi போலீசாரை வெட்கமற்றவர்கள் என்று காட்டிய விதம் நச்! யாராயிருந்தாலும் எவராயிருந்தாலும் அவர்களின் கொள்கை – To Know Everything! அதிகமாக பேசுகிற பொதுமக்கள் யாரையும் “உன் பெயர் என்ன?” என்று கேட்டு திகிலடிக்க வைக்கிற திமிரும், யாரை எங்கு தட்டினால் அடங்குவார்கள் என்பதில் காட்டுகிற புத்திசாலித்தனமும் படு கிளாஸ்! கேண்டீனில் சீனியர் Stasi கேப்டன் பக்கத்தில் அமர்ந்திருப்பது தெரியாமல் ஜூனியர் ஒருவர் அவரைப் பற்றி ஜோக் அடிக்கிற காட்சி செம ரகளை!
முகத்தின் தசைகள் ஒன்றையும் அசைக்காமல், எப்போதும் காரப் பார்வையுடன் கடமையே கண்ணாக வருகிற, லிஃப்டில் ஏறுகிற அந்த அழகு குழந்தையைக் கண்டு கூட சிரிக்காத இரும்பு மனிதன் Wiesler, எழுத்தாளருக்கு ஆதரவாக ஏன் மனம் மாறுகிறார் என்பதில் சுத்தமாக அழுத்தமேயில்லை. மேலே சொன்ன பியானோ இசைக்குறிப்பைக் ஒட்டுக் கேட்டு அவர் அழுவதெல்லாம் டூ மச்!
சுமாரான படங்களே கேமராவில் பின்னி பெடலெடுக்கிற காலத்தில் இந்த படத்தின் கேமரா, வெகு சாதாரணம். ஏற்கனவே சுமாரான எடிட்டிங்கில் இந்திய சென்ஸாரின் கத்திரி கண்ட இடத்தில் கை வைத்து கடுப்பேற்றியிருக்கிறது. இது ஆஸ்கர் தரம் என்று நம்புவது கொஞ்சம் கஷ்டமே!
கம்யூனிச அரசு வீழ்ந்ததும் அதுவரை தங்களைப் பற்றி Stasi எடுத்த குறிப்புகளை லைப்ரரி ரேஞ்சுக்கு மக்கள் வந்து படித்து விட்டுப் போவது சுவாரசியம். அதை வைத்து எழுத்தாளர் Wieslerஐ பற்றி அறிந்து கொண்டதும், அவர் என்ன செய்யப் போகிறார்? தன்னை பல கட்டங்களில் தனக்கே தெரியாமல் காப்பாற்றிய Wieslerக்கு அவர் என்ன செய்கிறார் என்பது – படத்தின் மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று.
ஏதாவது புரட்சி, அடக்குமுறை இத்யாதி போன்றவற்றை பற்றி எடுத்தாலே ஆஸ்கர் கிடைத்துவிடுமா என்ற எண்ணம் தோன்றுவது நிச்சயம்!
சென்னை பக்கம் கரை ஒதுங்கியிருக்கும் வெளிநாட்டுக் கப்பல்! ஒரு தடவை பார்க்கலாம்!
ரேட்டிங் : ![]()
![]()
![]()
![]()
![]()
சுடர்களின் நடனம்
மார்கோ அவ்வளவு சாதாரணமாக அழுபவன் அல்ல. ஒரு காதல் நிறைவேறாமல் போன பின்னும் அவன் அழவில்லை. லிடியாவைச் சந்தித்த சில நாட்களே ஆகிறது. அவள் காளைச் சண்டை வீராங்கனை. அபாயகரமான விதியுடன் கழிகிற ஒவ்வொரு நாளுடன் இருவருக்குள்ளான காதலும் பெருகுகிறது. நாளை பற்றியே நினைவே ஏதோ ஒரு பயத்தை தருகிறது. வீட்டில் பாம்பு புகுந்ததில் தொடங்கி எல்லாமே கெட்ட சகுணங்களாக தெரிகின்றன. ஒரு நல்ல நிலா இரவில் நண்பர்களுடன் அமர்ந்து அந்த கிட்டார் பாடகனின் பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் மார்கோவிற்கு அழுகை வருகிறது, காரணம் தெரியாமல். பாடல் நெடுக அவன் கண்ணீர் சிந்தியபடியே இருக்கிறான்.
சமீப காலங்களில் நான் மிகவும் ரசித்த பாடலும் காட்சியும் பெட்ரோ அல்மோதவாரின் “Talk to her“ல் வருகிறது. அத்தனை அழகான பாடல். அந்தப் பாடலின் ஸ்பானிஷ் வரிகளை பொழிபெயர்க்க முயற்சிக்க தோன்றவில்லை. அந்தக் காட்சிக்கான பாடல் என்னுள்ளேயே இருப்பதாக தோன்றியது. அந்த காட்சிக்காக நான் எழுதியது, இந்தப் பாடல்.
——————————————
காற்றின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கும்
ஒற்றைப் படகென
இந்தச் சுடரை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கைகள் நீளவில்லை ஏனோ தோன்றவில்லை
கண்ணில் நீருடன்
இந்தச் சுடரினை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
காற்றின் இசைப்படி
சுடர்களின் நடனம்
——————————————
உந்தன் கையினை இறுகப் பற்றிக்கொண்டேன்
முணுமுணுப்பிலே ஏதோ சொல்லிக்கொண்டேன்
எங்கோ தொலைவிலே கேட்ட அந்தப்பாடலின்
அடுத்த வரியை நானே எழுதிக்கொண்டேன்
துளி கண்ணீருடன் புன்னகைத்த
மற்றுமொரு பொழுதை
உன்னுடன் வாழ்ந்துகொண்டேன்
யாரின் விதிப்படி
நாளை நிகழும்
நீரின் விசைப்படியே
நதிகளும் நகரும்
——————————————–
அந்த இரவினில் கண்ட கெட்டக்கனவிலே
கைகள் நழுவிட நான் விட்டது என்ன?
வந்த வழியினில் திரும்ப சென்றுவிடவே
மீண்டும் தோன்றிட ஒரு காரணம் என்ன?
நீ கேள்வியுடன் சுண்டிவிட்ட
நாணயத்தின் விடையை
என்னுடனே வைத்துக்கொண்டேன்
யாரின் விதிப்படி
நாளை நிகழும்
காற்றின் இசைப்படியே
சுடர்களின் நடனம்
——————————————–
மரத்தடி
ஒரு திரைப்படத்தின் கதையை சொல்வதற்கு ஒவ்வொருவரும் ஒரு உத்தியை கையாள்கிறார்கள். சிலர் இரண்டு மணி நேர கதையை ஐந்து மணி நேரம் சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள். ஐந்து மணி நேரம் கழித்தும் திருப்தியடையாதவர்கள் பலர். சிலர் பாடல்கள் எங்கு வரும் என்று குறிப்பிடுவதில் கவனமாக இருப்பார்கள். பாடல்களை வழிகாட்டி மரம் போல பாவித்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலையும் அடையும் போது, சரியான பாதையில் செல்கிறோம் எனற ஒரு திருப்தி அவர்கள் முகத்தில் தெரியும். கதை சொல்லி முடிக்கும் போது நிச்சயம் ஒரு பாடல் விட்டு போயிருக்கும். மீண்டும் வந்த வழியே சென்று விட்டுப்போன பாடலை பொருத்துவார்கள். சிலர் வசனங்களை அதே தொனியில் சொல்லிக் காட்டுவர். பலருக்கு இரண்டு வரிகளுக்கு மேல் கதையை சொல்லத் தெரியாது. முக்கியமான காட்சியை விளக்குவதற்கு முன்னால் சிலர் நம்மை கவனப்படுத்துவார்கள். அந்தக் காட்சி கடந்ததும் அதில் என்ன அப்படி முக்கியமானது இருந்தது என்று நிச்சய்ம் தோன்றும். சிலர் முழுதாக சொல்லி முடித்ததும் அவர்கள் அந்த படத்தை பார்க்கவேயில்லையென நமக்கு தோன்றும்.
அலுவலகத்திற்கு என்னை தினமும் காரில் கொண்டு விடும் அன்பர் அன்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அவரின் புன்னகையில் ஒரு உரையாடலை அவர் தொடங்குவதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்தன. நேற்று இரவு அவர் ஒரு திரைப்படத்தை பார்த்திருக்கிறார். சுமார் நான்கு வருடங்கள் கழித்து திரையரங்கில் சென்று பார்த்திருக்கிறார். அதுவே அந்த உற்சாகத்திற்கு காரணம். நான் அப்படியா சந்தோஷம் புன்னகை ஒன்றை உதிர்த்தேன். அவரோ படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். கடைசிக் காட்சியில் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள் என்பதை முன்னுரையாகச் சொல்லிவிட்டு தொடங்கினார். நினைவுக்கு வருகிற எல்லாக் காட்சியையும் சொல்லிக்கொண்டே வந்தார். வரிசையில் சொல்ல வேண்டும் என்று அவருக்கு ஏனோ தோன்றவில்லை. தோன்றிய காட்சியை உடனே சொல்லாவிட்டால் அது மறந்து விடுமோ என்னவோ. அலுவலகம் அடைந்த போது அவர் சொல்லி முடித்துவிட்டாரா என்பதை அவரிடமே கேட்க விரும்பினேன். அவருக்கே தெரிந்திருக்காது என்று நினைத்து அந்த எண்ணத்தை நிராகரித்தேன். ஒரு முத்துமாலையை அறுத்தது போல அந்த திரைப்படத்தை அவர் என்னிடம் அறுத்திருந்தார். திரைப்படம் என்னைச் சுற்றி சிதறிக்கிடந்தது. கதவை திறந்து இறங்குகையில் மடியிலிருந்து விழுந்து சிதறியோடியது திரைப்படத்தின் பாடல் ஒன்று.
******************
“கடைசி பேருந்து” என்ற வார்த்தைப் பிரயோகமே நகரங்களில் இல்லையென தோன்றுகிறது. எங்கள் டவுனுக்கு சென்னையிலிருந்து வரும் கடைசி பேருந்துக்கு கோயில் தேர் போல ராஜ மரியாதை தரபட்டது. எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது கண்ணுக்குத்தெரியாமல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. எத்தனை சுவாரசியமான பேச்சையும் எட்டரை மணிக்கு துண்டித்தாக வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி நிற்க வேண்டும். சென்னை திருமணங்களிலிருந்து சாப்பிடாமலே பலர் அதை பிடிக்க ஓடி வந்துவிடுவர். அலுவலக ஊழியர்கள் அந்த பேருந்தில் ஒரு நண்பர் வட்டத்தையே உருவாக்கியிருப்பர். காய்கறிகள் விற்றுவிட்டு திரும்பி வரும் வயதான பாட்டிகளின் குடிசை வாயில்களிலே பேருந்து நின்று செல்லும். நடத்துனர் கொஞ்சம் பேச்சு சிரிப்புடன் பேருந்தை வழி நடத்திச் செல்வார். டிக்கெட் கிழித்தலில் இயந்திரத்தனம் குறைந்திருக்கும். நாள் முழுதும் ரகசியமாக ஊரைச் ஒன்றாக சுற்றி திரும்ப வரும் காதலர்கள் யாரையும் நான் அறியேன் என்ற பாவனையோடு தூரதூரமாக அமர்ந்து வந்துகொண்டிருப்பார்கள். அலைபேசிகள் இல்லாமல் அம்மாமார்களின் மனம் அல்லாடிக்கொண்டிருக்கும். இரவில் விழித்திருக்கும் கடவுள்களுக்கு அவர்களின் பிரார்த்தனை புளித்து போயிருக்கும். ஒரு தலைமுறையாகவே வீட்டின் பெண்கள் அதற்காக தினமும் காத்துக்கொண்டிருந்தார்கள், பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு.
******************
பாதி நிரம்பிய வாளியினுள் குழாயின் நீர் சொட்டும் ஒலியை விட இரவில் கேட்பதற்கான ரம்மியமான இசை வேறெதுவும் இல்லை. ஒரு ராணுவ ஒழுங்கை கொண்டது சொட்டுகளுக்கிடையேயான அந்த இடைவெளி. முடிவற்ற ஒரு பாடலைப் போல தொடர்ச்சியாக நீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது. ஏதோ நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிற வேளைகளில் அந்த ஓசை மிகச் சுலபமாக நினைவுகளுடன் கலந்து விடுகிறது. உறுத்தாமல் பக்க வாத்தியம் வாசிப்பது போல. வாளியில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அதே சின்ன அதிர்வு என் எண்ணவெளிகளில் ஏற்படுகிறது. திடீரென யாராவது குழாயின் வாயை அழுத்தி மூடிவிட்டு படுக்கிறார்கள். அவர்களுக்கு அது ஏதோ ஒரு விடுதலையை தந்துவிடுகிறது. அதன் பிறகு எனக்கு தான் உறக்கம் போய்விடுகிறது. சப்தப்பெருவெளி எங்கும் நீர் துளிகள் சொட்டிக்கொண்டே இருப்பது போன்று ஒரு பிரமை.
காற்று வீசும்………….
செல்லுலாய்ட் கவிதைகள் – 5

திரை முழுதும் இருள்.
“இது யாருடையது?”
பதில் இல்லை.
ஒரு டேப் ரெகார்டர் திறக்கப்படும் ஓசை. ஒரு கேஸட் ஓடத் துவங்குகிறது. ஒரு சிறுவனின் குரல் அதிலிருந்து ஒலிக்கிறது.
“இது என்னுடையது சார்”
தொடர்ந்து நான்கைந்து கேசட்டுகள். ஒவ்வொன்றும் இதே போன்று யாருடையது என்று அடையாளம் காணப்படுகிறது.
திரையில் ஒளி பரவுகிறது. அது பார்க்கும் திறனற்றவர்களுக்கான உறைவிடப்* பள்ளி.
அன்று பள்ளியின் கடைசி நாள். எல்லா மாணவர்களும் உற்சாகமாக கிளம்பத் தயாராகின்றனர். வீட்டிலிருந்து ஆட்கள் வந்து எல்லோரையும் அழைத்து செல்கிறார்கள். மிஞ்சிப் போவது பதினோரு வயது மொஹமத் மட்டுமே. அவனை அழைத்துப் போக அவன் அப்பா நெடு நேரமாக வரவில்லை.
எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம் என்று தெரியாமலே காத்திருக்கிறான். அவ்வப்போது அழுகிறான். ஒரு சின்னஞ்சிறு பறவையின் முனகல் சத்தம் கேட்கிறது. பிறந்து சில நாட்களே ஆன பறவை போல அதன் குரலில் ஒரு பலவீனம். மொஹமத் அந்த திசை நோக்கி செல்கிறான். மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் தரையில் அமர்ந்து கைகளால் தடவி தடவி அந்த பறவையைத் தேடுகிறான். மெதுவாக அதை கண்டுபிடித்து மரத்தில் மிகுந்த சிரமத்துடன் ஏறி அதன் கூட்டில் அதை பத்திரமாக சேர்க்கிறான். அவனை அவன் கூட்டுக்கு அழைத்து செல்ல அவன் அப்பா வருவாரா??
இரானின் மலைப்பிரதேச கிராமத்தில் வாழ்கிறது மொஹமத்தின் குடும்பம். அம்மா இறந்து போய் வருடங்கள் ஆகிறது. இரண்டு இளைய சகோதரிகள், ஒரு பாட்டி. அவனுடைய அப்பாவின் அம்மா. வெகு நேரத்திற்கு பிறகு அவனுடைய அப்பா அவனை அழைத்துச் செல்ல வருகிறார். தாமதமாக வந்ததற்கு பள்ளி நிர்வாகத்தினர் அவரை கண்டிக்கிறார்கள். அவனுடைய அப்பாவோ அவனை இங்கேயே வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார்!
விடுமுறை சமயங்களில் அவனை அங்கு வைத்துக் கொள்ள இயலாதென அவர்கள் மறுத்துவிட, விருப்பமின்றி அவனை அழைத்துச் செல்கிறார். பேருந்து பயணம் முடிந்து, குதிரையில் ஏறி மலை மேல் செல்கிறார்கள். வீடு வந்து விட்டதா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான் மொஹமத். ஒரு கட்டத்தில் வந்துவிட்டதாக அப்பா சொல்ல, பாட்டியின் பேரையும் தங்கைகளின் பேரையும் உரக்க கூவிக் கொண்டே வருகிறான். அத்தனை மகிழ்ச்சி. அந்த மூவரையும் அவன் சந்தித்து அவர்களை தொட்டு உணர்ந்து நெகிழ்கிறான்.
தங்கைகளின் பள்ளிக்கு ஒரு நாள் செல்கிறான். தன் ப்ரெய்லி புத்தகம் கொண்டு மற்றவர்களை விட வேகமாகவும் தெளிவாகவும் படிக்கிறான். பாட்டி தங்கைகளுடன் விளையாட்டு, துணிகளுக்கு சாயமேற்றுதல் என மகிழ்வாய் கழிகிறது நாட்கள்.
அவனுடைய அப்பாவிற்கு எதுவுமே பிடிக்கவில்லை!
மறு கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் அவருக்கு மொஹமெத் தேவையற்ற ஒரு சுமை. அந்த சுமையை எப்படி இறக்கி வைப்பது? அவனை தொடர்ந்து படிக்க வைக்க விருப்பமும் பணமுமில்லை. பாட்டிக்கோ மொஹமெத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்ள ஆசை.
ஒரு கட்டத்தில் அவனை அடுத்த ஊரில் இருக்கும் பார்க்கும் திறனற்ற தச்சனிடம் உதவியாளனாக அவனுடைய அப்பா சேர்த்துவிடுகிறார், பாட்டி இல்லாத சமயமாக பார்த்து. வீடு திரும்புகிற பாட்டி அதிர்ச்சியுறுகிறார். மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்க, அவரை தடுத்து மொஹமத்தின் அப்பா கெஞ்சுகிற காட்சி – அற்புதம். உச்சியிலுருந்து மழை கொட்டோ கொட்டென கொட்ட, தன்னுடைய நிலையை கோபமும் அழுகையுமாய் மொஹமத்தின் அப்பா விவரிக்கிறார். சிறு வயதிலிருந்து வறுமையும் துயரமும் நிறைந்த வாழ்க்கையை தனக்கென இதுவரை வாழவே இல்லையென வெடிக்கிறார்.
மொஹமெத்துக்கு என்ன ஆகும்?
Color of paradise – ஒரு fairy tale! காணக் காண திகட்டாத அழகான நிலப்பரப்பில், மலைப்பிரதேசக் குளுமையில், கற்பனைக்கெட்டாத அழகழகான இடங்களில் நம்மை பதைபதைக்க வைக்கிற ஒரு படம்.
மகனுக்கும் பேரனுக்கும் இடையே சிக்கிக் கொள்கிற அந்த பாட்டியின் நிலை பரிதாபம். கிட்டதட்ட அவரின் நிலைமைக்கு நாமும் வந்து விடுகிறோம். அந்த பாட்டி அத்தனை அநாயசமாக நடித்திருக்கிறார். யார் பக்கம் தான் இருக்க வேண்டுமென்று தெரியாமல் மனம் நொந்து செத்துப் போகிறார்!
மொஹமெத்தாக வருகிற சிறுவன் நிஜமாக மாற்றுத் திறன் கொண்டவன். அவனிடமிருந்து நடிப்பை சுலபமாக வாங்கியிருக்கிறார்கள்.
படத்தின் பல காட்சிகளில் படிமங்கள் நிறைந்து இருக்கின்றன. தான் செய்வது சரியா தவறா என்று தெரியாமல், மகனை மீண்டும் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு அப்பா வருகிற காட்சியில் ஒரு ஆமை கல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. ப்ரெய்லி முறையில் படிக்கத் தெரிந்த மொஹமெத் ஆற்றுப்படுகையின் கற்களில் கூட ஏதேதோ படிக்கிறான்.
மொஹமெத்தின் அப்பாவாக வருகிறவர் அசத்துகிறார். முதலில் இவரின் மேல் வெறுப்பு வந்தாலும், போகப் போக நாமும் அவரின் நிலையைக் கொஞ்சம் புரிந்துகொள்கிறோம்.
காட்டுப் பகுதியில் மகனும் அப்பாவும் செல்கிற சமயங்களில் எல்லாம் ஒரு ஓநாயின் குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஓநாய்க்கு மகனை இரையாக்கி விடலாமா என்ற அபாயகரமான எண்ணமும் அப்பாவிற்கு தோன்றுகிறது. ஓநாய் இருக்கிற திசையில் மொஹமெத் செல்ல அப்படியே விட்டுவிடலாமா அது சரியா என்று அப்பா பதைபதைக்கிறார். ஒவ்வொரு முறையும் ஓநாயின் குரல் கேட்கிற போது நமக்கு அடி வயிற்றில் பயம்!
ஓவ்வொரு காட்சியிலும் கவிதை சொல்ல வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்திருக்கிறார்கள். கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் வாளி கூட நிலவின் பிம்பத்தை மொண்டு வருகிறது.
இந்த படம் பார்த்து நாளானாலும் இன்னும் அந்த காட்சிகள் நினைவில் இருந்து கொண்டே இருக்கின்றன. அத்தனை துல்லியமான ஒளிப்பதிவு. முடுபனி மெதுவாக திரையை ஆக்கிரமிக்கிற காட்சி தொடங்கி, இறுதிக் காட்சியில் பாலம் உடைவது வரை, இந்தப் படத்தின் மொத்த வெற்றியில் ஒளிப்பதிவாளரின் பங்கு அசாத்தியம்.
விரல் நுனியில் நான் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று மொஹமெத் சொல்கிறான். எல்லாப் பொருட்களையும் விரல் நுனிகளால் தான் உணர்கிறான். ஒரு நாள் நான் கடவுளையும் உணர்வேன் என்று அழுதுக்கொண்டே மொஹமெத் சொல்கிறான். அதை வைத்து பின்னப்பட்டிருக்கும் அந்த கடைசிக் காட்சி, கச்சிதம்.
நினைவில் நிற்கிற ஓவியம்.
————————————————————
( உறைவிடப் பள்ளி – Residential school)