சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஏப்ரல் 2008

நடையெழுத்து

2 மறுமொழிகளுடன்

வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது மூக்கின் நுனியில் துளி நீலம் ஒட்டிக்கொண்டதாக ஒரு கவிதையில் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென அது எத்தனை பொய் என்று தோன்றியது. நான் வானத்தை அண்ணாந்து பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது. நிச்சயம் என் தவறு தான். பார்க்க எனக்கு நேரமில்லை என்று நான் புரிந்துகொண்டதை போல அச்சமூட்டும் மற்றொரு புரிதல் என் சமீப கால நினைவுகளில் இல்லை. கவிதையின் அடுத்த வரி வரவில்லை. எழுதிய அத்தனை வரிகளும் போலி என்று தோன்றியது. வானம் யாரும் யாரிடமிருந்து மறைத்து விட முடியாத ஒரு ரகசியம். அதையே என்னால் பார்த்து உணர்ந்து எழுத முடியவில்லை எனில், எங்கோ மலையடிவாரத்தில் பூக்களையும் இலைகளையும் இழுத்துச் செல்லும் நதியைப் பற்றி நான் எப்படி எழுதுவது?

நினைத்த மாத்திரத்தில் ஒரு நடை சென்று வர இயல்வது எத்தனை சுகமானது. விடுதியில் இருந்த போது, காலாற நடந்து செல்வது தினசரி பழக்கமாக இருந்தது. காலாற என்று ஏன் சொல்லுகிறார்களோ? மனதாற என்று தான் சொல்லவேண்டும். துவங்கும் போது நம் மனது இருக்கும் நிலையில் நிச்சயம் நடந்து முடிக்கையில் இருப்பதிலை. லேசாவதோ, கனமாவதோ – அது அதன் விருப்பம். அப்படி நடந்து செல்கிற போது நான் அதிகமாக அநிச்சையாக வானத்தை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். கடற்கரைக்கு அருகே அமந்திருந்த இடமாதலால், காற்றுக்கு பஞ்சமில்லை. தனியே நடந்து செல்லுதல் சாத்தியமே இல்லை. காற்றும் ஆகாயமமும் தொடர்ந்து வரும்.

தூக்கம் பிடிக்காத இரவுகளில், வலுக்கட்டாயமாக தூக்கத்தை வரவழைத்து தோற்று கொண்டிருக்கும் பொழுதுகளில் திடீரென தோன்றும் – வெளியில் இத்தனை பிரமாதமான சூழல் இருக்க ஏன் இத்தனை முட்டாள்தனம்? நிம்மதியாக எழுந்து நடக்கத் தொடங்குவேன். பிரமாதமான தார்ச் சாலை. எவ்வளவு தூரம் என்ற கணக்கு தெரியவில்லை. நடந்துகொண்டே இருக்கிறோம் என்ற அலுப்பு தட்டாத அளவுக்கு சின்ன தூரமே. இரு புறமெங்கிலும் அளவான புல்வெளி, அதன் பின்னர் சிற்சில மரங்களுடன் திறந்த வெட்டவெளி. நேராக நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. வானத்தை பார்த்தபடி நடக்கும் போது எத்தனை நேராக நடக்க முடியுமோ அத்தனை போதுமானது. சில நாட்கள் மனதில் ஏகபட்ட எண்ணங்கள் சிதறிக்கிடப்பது போல வானத்தில் நட்சத்திரங்கள் கிடக்கும். சில சமயங்களில் இரவு அடுக்களையின் வெறுமை. அம்மா சுத்தமாக துடைத்து வைத்தது போல.

காற்று பேச என்றுமே அலுத்துக்கொண்டதேயில்லை. மெதுவாக பேசிக்கொண்டேயிருக்கும். சில சமயங்களில் பாடக் கூடச் செய்யும். ஆகாயமும் காற்றும் ஒருவாக்கியிருந்த அந்த உலகத்தில் தாளம் தப்பி நான் அடி வைத்துக்கொண்டே நடக்கையில், நானும் அதிலொரு அங்கமாக விடுவேன். அந்த உலகிலிருந்து என்னை விலக்கிப் பார்த்துக்கொள்ள முடியாதபடி ஒரு மந்திரத்தை காற்றும் ஆகாயமும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தன. யார் யாரை வழிநடத்தி செல்கிறோம் என்ற கவலைகள் இன்றி நடக்கலாம்.

இரண்டு மூன்று மணியளவில் இப்படி ஒருவன் நடந்து வந்துகொண்டிருப்பது துவக்கத்தில் அங்கிருந்த இரவு காவலாளிகளுக்கு மிகுந்த அமைதியின்மையைத் தந்தது. தூரத்தில் என்னைப் பார்த்தவுடன் விசிலை ஊதியபடி யாரேனும் ஓடிவரத் துவங்குவர். அந்த சத்தம் கேட்டு மற்றொரு திசையிலிருந்து இன்னொருவரும் வருவார். அருகில் வந்ததும் யார் என்ன என்று கேட்டுவிட்டு முகத்தில் டார்ச் அடித்து பார்ப்பர். அந்த இரண்டு நொடிகளில் என் முகத்தை அவர்கள் எவ்வளவு நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. அடுத்த நாள் என் மூக்கு மட்டுமே நினைவிருந்தால், அதை வைத்து அவர் யாரிடமாவது ஒரு பேச்சைத் தொடங்கலாம். இன்ன மூக்குடன் ஒருவன் நேற்று பித்து பிடித்தது போல நள்ளிரவில் சுற்றிக்கொண்டிருந்தான் என்று சொல்லலாம். ஆனால் நாள் போகப் போக, அவர்களுக்கு நான் பழகிவிட்டேன். அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நாய்களைப் போல நானும் எந்தப் பிரச்சினையும் தர மாட்டாத பிராணி என்று நம்பினர். அவர்களுடைய உரையாடல்களில் மிகச் சிறிய காலமே நான் இருந்தேன்.

பின்னர் அவர்கள் என்னுடன் பேசத் தொடங்கி விட்டனர். அதிலும் ஒரு அன்பர், அவர் பணிக்கு வருகிற நாட்களில் என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கவே தொடங்கிவிட்டார். இத்தனைக்கும் நான் அந்த கணங்களில் பேசவே விரும்பாமல் இருப்பேன். மிக அளவான சொற்களையே பேசுவேன். அது அவருக்கு பேச்சை எளிதாக விட்டது என நினைக்கிறேன். அவர் விடாமல் பேசிக்கொண்டே இருப்பார். நாளாக நாளாக நான் வெறும் கண்ணாடி போல அவர் முன்னே நிற்கத் தொடங்கியிருந்தேன். அவருடைய பேச்சும் என்னுடைய அமைதியும் அவருக்கு பிடித்த உரையாடலாக மாறிக் கொண்டிருந்தது. எந்தக் கணத்தில் அந்த உரையாடலிருந்து விலகி நடப்பது என்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டியிருந்தது. இருவருக்கும் நிறைவாக உரையாடினோம் என்ற உணர்வு தோன்றுகிற சமயத்தில் தான் விலக வேண்டும்.

அந்த சின்னப் பிள்ளையார் கோயில் வந்ததும் திரும்ப வேண்டுமென்று அர்த்தம். நடை முடிந்ததாக அர்த்தமில்லை. திரும்பி நடக்க வேண்டும், அவ்வளவே. மனதார நடந்து செல்கிற போது திசையெல்லாம் தேவையில்லை. மீண்டும் அந்த அன்பரை கடந்து செல்லும் போது ஒரு புன்சிரிப்பை பகிர்ந்து கொள்கிற கட்டாயம் ஏதுமிருந்ததில்லை. அவர் என்னை அறியாதவர் போல அமர்ந்திருப்பார். திரும்பி வருகிறவன் வேறு யாரோ என்பது போல. நானும் அப்படியே கடந்து வந்துவிடுவேன்.

போகும் போது அண்ணாந்து பார்த்த வானம் திரும்பி வருகிற போது அதே போன்றே இருக்கும். எந்த வித்தியாசங்களும் இன்றி. முடிவற்ற ஒரு வீதியென இருந்த அதில் என் வாழ்நாளுக்கான இதமான நடையை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நான் நடந்துகொண்டிருந்தேன். அந்த சாலை தினமும் இரவில் நடத்திக் கொண்டிருந்த ஒரு நாடகத்தில் நானும் பங்குபெற்றுக்கொண்டிருந்தேன். காற்றின் இசைக்கு தலையாட்டுகிற ஒரு செடியைப் போலவே என்னை அந்த சாலை பாவித்துக்கொண்டிருந்தது. இப்போதைய இரவுகளிலும் நான் மேற்கொண்ட அதே நடையை யாரோ மேற்கொண்டபடியிருக்கிறார்கள், தப்பான தாளத்தில் காலடிகள் வைத்த படி.

Written by aravind

ஏப்ரல் 22, 2008 இல் 4:28 மு.பகல்

அபார்ட்மெண்ட் – சில குறிப்புகள்

5 மறுமொழிகளுடன்

நாளெல்லாம்
ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துவிட்டு
மாலைக்குள்     வாடிப் போகிறது
பகலில் ஆளில்லாத ஃப்ளாட்களின்
பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும்
சில குழந்தைகளும்

******

வாயில் முழுதும் செருப்புகள்
தொலைக்காட்சி இரையாமல் பார்த்துக்கொண்டோம்
அனாவசியமாக சிரிக்கவில்லை
கதவைத் திறக்கையிலெல்லாம்
என்ன பாவனை கொள்வது எனத் தவித்தோம்
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்
ஞாயிற்றுக்கிழமையில் இறந்து போன
பக்கத்து ஃப்ளாட்டு பெரியவர்
சாந்தி அடைந்து கொள்ளட்டும்

******

நான்கு நாட்கள்
கொடியில் கிடந்தும்
சோகமான பிசுபிசுப்பைத் தருகின்றன
சூரியனைப் பார்க்காமல்
உலர பயிற்றுவிக்கப்பட்ட
துணிமணிகள்

******

என் பூஜையறைக்கு
கீழேயும் மேலேயும்
கழிப்பறைகள் இருக்கலாம்
கான்க்ரீட் கடவுள்
காக்க காக்க

******

தனித்த பெரிய
சுதந்திரமான வீடுகளில்
குழந்தைகளின்
கண்ணாமூச்சி விளையாட்டு.
உயர்ந்த பெரிய
அப்பார்ட்மெண்ட்களில்
பெரியவர்களின்
கண்ணாமூச்சி விளையாட்டு.

Written by aravind

ஏப்ரல் 7, 2008 இல் 6:49 பிற்பகல்

மரத்தடி

without comments

கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் எனக்குள் ஏதேனும் ரகசியம் இருக்கிறதாவென பார்ப்பேன். ஏதேனும் ஒரு ரகசியத்தை எழுதி ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து கடலுக்குள் வீசுவது என் நினைவிற்கு வரும். அப்படி ஒரு எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை. எங்கேனும் படித்தேனா, யாராவது கதையின் தொடக்கமாக சொன்னார்களா என தெரியவில்லை. ரொம்ப காலமாக அந்த எண்ணம் என்னுடன் இருக்கிறது. முடிவில் அப்படி ஒரு ரகசியம் இல்லை என்று உணர்வேன். அதன் பின்னரும் தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருப்பேன். ஒரு வேளை இருந்திருந்தால், ஒரு வேளை அதை கடலில் வீசினால், ஒரு வேளை யாரேனும் படித்தால்.. என்று நூல் பிடித்து சென்று கொண்டேயிருப்பேன். உண்மையில் எனக்கு ரகசியம் இருப்பதும் இல்லாததும் ஒரு பிரச்சினை இல்லை. எனக்கு அந்த எண்ணம் பிடித்திருக்கிறது. அவ்வளவே. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது அதை எடுத்து பார்த்துக்கொள்கிறேன், மிகவும் பிடித்த பழைய புகைப்படத்தை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது போல.

******************

கல்லூரியில் விடுதியில் இருந்த ஒரு இரவு தூக்கம் வராமல் நானும் நண்பணும் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்து கதை பேச துவங்கினோம். நிலா வானத்தின் ஒரு ஓரமாக இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தது. பேச்சு சுவாரசியத்தில் நிலாவை நாங்கள் பொருட்படுத்தவில்லை. முழு நிலாவாக இருந்தும் கூட அது எங்களை சுவாரசியப்படுத்தவில்லை. பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்த நிலா முழுதும் சிவப்பாக மாறிவிட்டது. கருப்பு வானத்தில் அபத்திரமாக செக்கச்செவேலென முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சு மெதுமெதுவாக சுவாரசியம் குறைய குறைய நிலாவும் தேய்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் முழுதாக நாங்கள் மௌனமடைந்து விட்ட போது நிலாவைக் காணவில்லை. அடுத்த நாள் நாளிதழில் பார்த்து தெரிந்து கொண்டோம் முந்தைய நாள் சந்திர கிரகணம் என்று.

எதிர்பாராமல் சந்திர கிரகணம் பார்த்த காலமெல்லாம் போய் நிலாவையே நான் தற்செயலாக தான் இப்போதெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் எதிர்பாராத நாட்களில் பவுர்ணமி நிலவைக் காண்பதை நான் மிகவும் விரும்புகிறேன். போன வாரம் மாடி ரயிலில் பறந்து கொண்டிருந்தபோது சென்னை நகர அடுக்குமாடி குடியிருப்புகளிடையே ஒளிந்து ஒளிந்து கூடவே வந்தது பவுர்ணமி நிலா. ஒரு கட்டத்தில் ரயில் பாலம் திடுமென, நிலா என்னை பார்த்துக்கொண்டிருந்த திசையிலேயே திரும்ப, ரயில் கூவென அலறி ஓடியது, நிலாவை இடித்து முன்னேறியபடி.

******************

உவமைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. எழுதும் போது உவமைகள் நிறைத்து எழுதினால் சொல்ல வந்த வாக்கியங்கள் ஒவ்வொன்றும் காட்சியாக மாறிவிடுகிறது. புக்கர் பரிசு பெற்ற புத்தகங்களைப் படிக்கையில், பல விதமான உவமைகள் கிடைக்கின்றன. ஒருவரின் முகத்தை வர்ணிப்பதில் இருந்து, ஒரு நாற்காலி எப்படி சாய்வாக இருக்கின்றது என்பது வரை எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார்கள். “தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்” புத்தகத்தில் இருந்த விளக்கங்களை படிக்க பொறுமையில்லாமல் தெறித்து ஓடிய நண்பர்கள் ஏராளம். “மெமாயர்ஸ் ஆஃப் கீய்ஷா”வில் வருகிற சின்னப் பெண் சயூரிக்கு மலை மேல் மெதுவாக ஏறுகிற ரயில், புகையை வெளியேற்றுவது, ஒரு பாம்பு தன் சட்டையை உரிப்பது போல இருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒன்றில் ஆங்கிலம் சரளமாக பேசக் கூடிய பெண்ணும், சரளமாக பேச முடியாத ஆணும் உரையாடுகிறார்கள். அதை அவர், “அவளின் ஆங்கிலம் ஆறு போல ஓடியது. அவனோ இருட்டில் தட்டு தடுமாறி நடப்பவன் போல ஆங்கிலம் பேசினான்” என்று எழுதுகிறார். செய்வதற்கு ஒன்றுமில்லாமல் முழிக்கிற சமயங்களில் இது போன்று பல எழுதி வைக்கப் போகிறேன். புக்கர் பரிசு வாங்க உதவும்.

 

 

Written by aravind

ஏப்ரல் 3, 2008 இல் 4:26 மு.பகல்