மரத்தடி
நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவரத்து நெரிசலை பழிவாங்குவது போல கார்கள் பறக்கின்றன. கட்டுப்பாடென்பதில்லாமல் சீறிப் பாய்கின்றன. தடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல தார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிறோம். “உச்சிப் பொட்டு தெறிக்கிற” இசையுடன் ஒரு இரவு அப்படி சென்றுக் கொண்டிருக்கையில் கார் அழகான வளைவுகளில் அபாயகரமான திருப்பங்களையும் அபாயகரமான வளைவுகளில் அழகான திருப்பங்களையும் மேற்கொண்டபடி சென்றுகொண்டிருந்தது. அமைதியான சென்னை சந்துகளில் உறங்க ஆயத்தமான நாய்கள் பதறி சிதறி ஓடின. எதற்கும் நிற்பதாயில்லை என்ற வைராக்கியத்துடன் மிக வேகமாக திரும்புகையில் அதிர்ச்சியுற்று காரை கிரீச்சிடவைத்து அதிர வைத்தாள் ஒரு பெண். பித்து பிடித்தவள். நடு ரோட்டில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். “சாவி எங்கே? சாவி எங்கே?” என்று எங்களைப் பார்த்து கத்துகிறாள். தொலைவில் சில ஆண்கள் கவனித்தபடி நின்றுக்கொண்டிருந்தனர். யார் அவள், எந்த சாவியை வெகு காலமாக தேடுகிறாள், நாங்கள் கடந்த பின் அவள் நிலை என்ன?
இது போன்ற ஊர் உறங்குகிற வேளையில் ஊர்தியில் வெறி கொண்டு பறக்கிற நேரங்களில் நான் பார்த்த மேலும் இரண்டு வித்தியாசமான காட்சிகள் – கோட்டூர்புர குறுக்கு சந்தில் நாங்கள் திரும்ப எத்தனித்த போது ஒரு புதரில் இருந்து மான் ஒன்று எட்டிப் பார்த்தது; நீல் மெட்டாலிக்கா ஒவ்வொரு தெரு முக்கிலும் வைத்திருக்கும் சக்கரம் பொருந்திய குப்பைத்தொட்டியில் சிறுவன் ஒருவனை ஏற்றி நான்கு சிறுவர்கள் ஊர்வலமாக தள்ளிக்கொண்டு சென்றது.
மஞ்சள் பூக்களின் மேல் எனக்கு என்ன ஈர்ப்பு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சிறுமழையில் எழுதிய ஒரு கவிதையில் அவை பூத்திருந்தன. அதை படித்து விட்டு தோழி ஒருவர் கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய ஒரு கவிதையிலும் அவை வந்திருந்ததை நினைவு படுத்தினார். போன வாரம் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிதையிலும் அவை நான் சொல்வதை மதிக்காமல் மறுபடி பூத்தன. யோசித்து பார்த்தால் கவிதை யோசிக்கிற பொழுதெல்லாம் சில காட்சிகள் தவறாமல் என் மனது காட்சிப்படுத்திக்கொள்கிறது. அதிலே மஞ்சள் பூக்களும் உண்டு. ஆனால் அவை மரத்தில் இருப்பதேயில்லை. எப்போதும் எங்கேயாவது சிதறி விழுந்தோ, விழுந்துக்கொண்டோ இருக்கின்றன. ரயில் நிலையம் பற்றி எழுதத் தொடங்கினால் ப்ளாட்ஃபார பெஞ்சில் சிதறிக் கிடக்கினறன. உளவியல் காரணங்கள் ஏதேனும் இருக்குமா என்று யோசிக்க சுவாரசியமாக தான் இருக்கின்றது. ஆனால் யோசித்து முடித்த பின் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை பூர்வ ஜென்மம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதேனும் இருக்கலாம். மஞ்சள் பூக்களை அலட்சியப்படுத்தியதால் அடுத்த ஜென்மத்தில் அதைப் பற்றி கவிதை எழுதிக் குவிப்பதாக ஒரு சாபம் இருக்கலாமோ என்னவோ.
அழகான மஞ்சள் பூக்கள் பதிவு
MSK
ஏப்ரல் 30, 2008 இல் 7:26 பிற்பகல்
சரவணகுமார்,
நன்றி நண்பரே
aravind
மே 1, 2008 இல் 11:42 மு.பகல்